Skip to content
Home » அக்னி சாட்சி ஃப்ரீ பைனல்

அக்னி சாட்சி ஃப்ரீ பைனல்

அத்தியாயம் : 20

எதிர்பார்ப்பு இல்லாமல் தனது துணையின் மீது காட்டுகிற அன்புதான், அவர்களை உயிர்ப்புடன் நடமாட வைத்து, எண்ணம் போல் வாழ்க்கையை அமைக்கச் செய்கிறது என்பது ஆராதனாவின் விசயத்தில் மிகவும் சரியாக உள்ளது.

அர்ஜூன் அவளிடம் காட்டிய அன்பு, அவள் உள்ளம் முழுவதும் நிறைந்து இருக்க, சந்தோஷ் எனும் மனிதன் அவனது தூய அன்பின் முன்பு காணாமல் போயிருந்தான்.

சந்தோஷ்!! ஆராதனா கல்லூரியில் முதலாம் வருடம் படிக்கும்போது அறிமுகமாகிய பணக்கார வாலிபன். துறுதுறுப்பாகவும், குறும்புத்தனமாகவும் பேசி வாயடிக்கும் அவளது நடவடிக்கையில் கவரப்பட்டு அவள் வசமாகியவன்.

அவள் பின்னே அலைந்து, காதலை சொல்லி அவளைத் தன் வசப்படுத்தியவன்.

சந்தோஷின் அழகும், சிரிப்பும், பேச்சும் அவளையும் வெகுவாகக் கவர்ந்ததால், அவனை மனதார விரும்பினாள் ஆராதனா. ஆனால், அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து போகும் என்று அவள் நினைக்கவில்லை.

அவன் தன்னிடம் பேசியது காதல் வார்த்தைகள் அல்ல. நண்பர்கள் மூலமாக எழுதி உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள். தன்னை எப்படியாவது அவனது காதல் வலையில் விழ வைக்க, நடிக்க வைத்த நாடகம் என்பது தோழிகள் சிலரால் தெரிய வந்தது.

அதற்குப் பிறகான நாட்கள் அவள் அவனைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தாள். தனது நிலையை அவனது தேவைக்குப் பயன்படுத்த முயல்வதாக எண்ணி கோபம் கொண்டாள். அவன் வலிய வந்து பேசியும் அவள் பேச மறுக்க, இருவருக்கும் இடையில் மோதல் உருவாகியது.

அவள் அவனை அநாகரீகமான வார்த்தையால் தாக்கிப் பேசியதில், அவனது தன்மானம் சீண்டி விடப்பட்டது.

“உன்னைப் பார்த்துப் பேசிய இத்தனை நாளில், உன் மீதான அன்பை எத்தனை எத்தனை வழிகளில் தெரியப்படுத்தினேன். நீயானால் அடுத்தவங்க சொன்னாங்கன்னு என்னையே சந்தேகப்படுறியே… என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? என் தகுதிக்கு நான் பார்த்து சிரிச்சாலே எத்தனைப் பொண்ணுங்க என்கிட்டே பழக தயாரா இருக்காங்க தெரியுமா? இருந்தும், யாரையாவது தப்பான நோக்கத்தில் இதுவரை பார்த்திருக்கேனா?” என்று கேட்டவன்,

“இந்த காலேஜ்ல என் பள்ளிகால நண்பர்கள் சிலர் படிச்சிட்டு இருப்பதால், அவர்களைப் பார்க்க வந்தப்போ தான் உன்னையும் முதன் முதலா பார்த்தேன். தாவணியில் நீ இருக்கும் அழகு, உனது நாணம், பிறரிடம் பேசிப் பழகும் குணம், புன்னகை என்னையும் வெகுவாகக் கவர்ந்ததால் உன்கிட்டே பேசிப் பழக ஆசைப்பட்டேன். இது என் நண்பர்களுக்கும் தெரியும். அவங்க யாராவது எதையாவது பேசியதை நீ தப்பா புரிஞ்சிருக்கலாம். நான் சொன்னா கேளு!” என்று பக்குவமாக எடுத்துரைத்தும் அவள் கேட்க மறுத்து, தனது தோழிகள் கூறியது சரியாக தான் உள்ளது என்று அங்கிருந்து செல்ல முயன்றாள்.

இத்தனை தெளிவாக சொன்ன பிறகும் புரிந்து கொள்ளாமல் போகிறாளே என்று ஆதங்கத்துடன் அவளது கைப்பற்றி நிறுத்தினான் சந்தோஷ். அவள் ‘இளங்கன்று பயமாறியது’ எனும் வார்த்தைக்கு ஏற்ப, அவன் கையை தட்டி விட்டு, கன்னத்தில் அறைந்து விட்டாள்.

சந்தோஷ் உண்மையாக அவளை நேசிக்காமல் இருந்தால், அப்போதே அந்த இடத்தில் இருந்து போயிப்பான். ஆனால், அவள் மீது கொண்ட நேசத்தை இழக்க மனம் வராமல், அத்தனை தெளிவாக நடந்தவற்றை எடுத்துச் சொன்னான். சிறு வயது, ஏற்கனவே தாய்க்கு நேர்ந்த அனுபவம், அரசல் புரசலாக செவியில் விழும் செய்திகள், அவனது மிரட்டல் எல்லாம் சேர்ந்து அவள் கண்ணை மறைத்து விட்டன. அவன் கூறிய எதையுமே அவள் ஏற்க மறுத்ததும், அவனுக்கும் கோபம் கிளர்ந்தது.

“இத்தனை உண்மையா இருந்த என்னை, அடுத்தவங்க பேச்சைக் கேட்டு சந்தேகத்துடன் விட்டுப் போவது போல தான், உங்க அம்மாவும் செஞ்சதால் உங்க அப்பாவும் அவரை விட்டுப் போயிருப்பார்.” என்று தாக்கிப் பேசினான்.

ஒரு தவறும் செய்யாத தாயை அவன் அங்ஙனம் பேசியதும், அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.

காதலிக்கும் பெண்ணிடமும், கட்டிய மனைவியிடமும் தனது ஆணாதிக்கத்தை செலுத்தி அடக்க முயலுபவன், எப்படி ஒரு குடும்பத்தை வழிநடத்த போதுமான தகுதியைப் பெறுகிறான்? தன் தாய் தகப்பனை நல்லவன் என்று நினைத்து, தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைத்து, இன்று தீராத துயரத்தில் மூழ்குவது போதாதென, தனது வாழ்க்கையையும் அழிக்க வந்து விட்டதாகக் குற்றம் சுமத்தினாள்.

அவனும், “ஆமாண்டி, உன் அழகு, பேச்சைப் பார்த்துத் தான் ஆசைப்பட்டேன். இப்போ உன்னால என்ன செய்ய முடியும்? நீ இப்படிப்பட்ட வீட்டுல பிறந்தவள்னு தெரிஞ்சும், வெறும் டைம் பாஸுக்கு பழகாம உண்மையா விரும்பியது தப்புதான். ஆனால், உன்னையும், உன் வீட்டைப் பற்றியும் அறிந்து கொள்ளும் யாராவது மனசார உன்னைக் கல்யாணம் செய்ய ஆசைப்படுவார்களா? கொத்தனாரோ, விவசாயியோ, சமையல் வேலை பார்ப்பவனோ, பாவம் பார்த்துக் கட்டுனா தான் உண்டு. என்னையா அறைஞ்சே உனக்கு பதிலுக்கு தராம விடமாட்டேன்!” என்று எச்சரித்து சென்று விட்டான்.

அவனது பேச்சால் பலமாக காயப்பட்ட அவள் உள்ளம், அதன் பிறகு படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தியது. மறுபடியும் தான் இருக்கும் பக்கமாக அவன் வந்தாலோ, அவனைப் பற்றிய பேச்சு எழுந்தாலோ, பைக் சத்தம் கேட்டாலோ கூட அந்தப் பக்கம் போகாமல் இருந்து கொண்டாள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவனை அஸ்மிதாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக அவள் எதிர்பார்க்கவில்லை. அதிலும், அவனது பார்வையும், சிரிப்பும் நிமிடத்திற்கு நிமிடம் அவளது நிம்மதியைப் பறித்தது. அன்று சொல்லி விட்டுச் சென்றது போல, தவறாக நடந்து தனது வாழ்க்கையை அழித்து விடக் கூடாதே என்ற பயப்பட்டாள்.

கணவன் மீதான நம்பிக்கையில் அவனிடம் முழுவதையும் சொல்லிவிட நினைத்தும், வாய் திறக்க அச்சமாக இருந்தது. அதேநேரம், சொல்லாமல் அவனை ஏமாற்றுவதாகக் குற்றவுணர்வும் அவளைப் பாடாகப் படுத்தியது.

என்று சந்தோஷை பற்றிய பேச்சு வீட்டில் உலா வரத் தொடங்கியதோ, அன்று முதல் அவளது நிம்மதி பறி போனது. இதில் அஸ்மிதாவை மணந்து இதே வீட்டிற்கு மருமகனாக வந்து விட்டால், நித்தமும் அவனை எதிர்கொண்டு எப்படி வாழ முடியும்? என்று கண்ணீர் வடித்தாள்.

ன்று வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருப்பதையும், ஆராதனா மட்டுமே வீட்டில் இருப்பதையும் தெரிந்து கொண்டு, அவளைச் சந்திக்க முடிவு செய்தான் சந்தோஷ். ஏற்கனவே ஒருசில நேரம் முயற்சித்தும் முடியாமல் போனதால், இன்று எப்படியாவது பேசிவிடும் எண்ணத்தில் புறப்பட்டு விட்டான்.

அன்றைய தினம் அர்ஜூனின் குடும்பக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், ஆராதனாவை தவிர மீத அனைவரும் காலையிலேயே அங்குச் சென்று விட்டனர். மாதவிடாய் முடிவுறும் சமயமாக இருந்ததால் அவள் எங்கேயும் போகாமல் வீட்டில் இருந்தாள். அவளது உதவிக்கு வீட்டு பணியாள் ஒருவரை அமர்த்தி விட்டுச் சென்றிருந்தான் அர்ஜூன்.

வாயில் கதவைத் தவிர மீத அனைத்தும் பூட்டி வைக்கப்பட்டு இருந்தது. அவளது உதவிக்கு வீட்டு பணியாள் ஒருவரை அமர்த்தி விட்டுச் சென்றிருந்தான் அர்ஜூன்.

காரை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே வந்த சந்தோஷ், யாரையும் காணாமல் தேடிப் பார்த்தபடி இருக்க, அவனது காலடி ஓசையில் அங்கு வந்து பார்த்து அதிர்ந்து போனாள் ஆராதனா.

அவனது பார்வை அவளை விட்டு இம்மியளவும் விலகாமல் இருந்தது. அவள் நடுக்கத்தை மறைத்தபடி, “வீட்டுல யாரும் இல்லை. எதுவா இருந்தாலும் அப்புறமா வந்து பேசுங்க” என்று கூறினாள்.

அவன், “நான் அவங்க யாரையும் பார்க்க வரல. உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கேன்” என்ற பதிலால் அவள் இதயத் துடிப்பை அதிகப்படுத்தினான்.

“எப்போதும் குறும்புத்தனமா சிரித்துப் பேசித் தாவணியில் என்னை மதி மயக்கிய சின்னப் பெண்ணா, இப்போ நடை உடை பாவனையில் அப்படியே மாறிப் போயிருப்பது?” என்று ஆச்சர்யமாகக் கேட்பது போல நடித்து விட்டு, “நானும் கூட இன்னும் என் ஞாபகத்துல கல்யாணம் செஞ்சுக்காம இருப்பே! உன்னையே கட்டிக்கிட்டு வந்து, அன்றைய பேச்சுக்குப் பதிலடி தரணும்னு நினைச்சிட்டு இருந்தேனே?” என்று கூறியதும், அவளது மேனியெங்கும் அதிர்ந்து போனது.

“ஆராதனா! இந்தப் பெயரை மட்டுமல்ல ஆளையும் கூட முதன் முதலில் ரசித்தவன் நான் மட்டும்தான்! அன்னைக்கு நீ செஞ்ச காரியத்தால் உன்னை விட்டு விலகிப் போகும் விதமாகிடுச்சு. ஆனாலும், நீ பேசிய வார்த்தையையும், அடியையும் நான் எப்பவுமே மறக்கல” என்று சிரித்தபடி கூறினான்.

அவள் நடுக்கத்துடன் நின்றாள். வீட்டில் உள்ள யாரேனும் வந்து விடக் கூடாதே என்று அச்சமாகவும் இருந்தது.

“உன்னைப் பார்த்த நாளிலிருந்து நானும் எத்தனையோ முறை முயற்சி பண்ணிட்டு இருக்கேன். நீயோ என் முகத்தைப் பார்ப்பதே பாவம் என்பது போல் நடந்துக்கறே! இப்ப உன்னைத் தவிர வேறு யாரும் இல்லைன்னு தெரிஞ்சுட்டு தான் தைரியமா வந்திருக்கேன்” என்றான்

அவள் தொண்டையில் பயப்பந்து சுழல, மிடறு விழுங்கியபடி நின்றாள்.

“ஒரு ஆணை கை நீட்டி அடிக்கறப்போ, இதை எல்லாம் நீ யோசித்து இருக்கணும்.” என்றான்.

அவளது கண்கள் மிரட்சியுடன் பார்த்தன. அதைக் கண்ட அவனது கால்கள், அவளை நோக்கி நகர்ந்தன. அவள் பின்னோக்கிச் சென்று சுவரில் மோதினாள்.

அவனது கண்கள் விடாமல் அவளைப் பார்த்தன.

“எ… என்னை, என்னை ஏதாவது செஞ்சுட்டு இங்கே இருந்து தப்பிடலாம்னு நினைக்க வேணாம். என் கணவர் உங்களைச் சும்மா விடமாட்டார்” என்று திணறியபடி கூறினாள் ஆராதனா.

“உன் கணவருக்குத் தெரிஞ்சா என்னை என்ன செய்வார்? என்று நாடியைப் பற்றித் தேய்த்தவன், என்னை ஏதாவது செஞ்சா அவர் தங்கையோட வாழ்க்கை அழிஞ்சு போயிடும்னு அவருக்குத் தெரியாதா?” என்று வினவினான்.

“உன்னை மாதிரிப்பட்ட பாவியைக் கல்யாணம் செய்வதுக்கு, இந்தக் கல்யாணம் நடக்காமல் இருப்பதுதான் நல்லது. பூவில் உள்ள தேனைத் தேடி அலையும் வண்டுபோல, விதவிதமான பெண்களிடம் பழகும் உன்னைப் போன்ற பாவிகளைச் சும்மா விடுவதே தப்பு!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் உரைத்தாள்.

அவன் மறுபடியும் சிரித்தபடி, “அப்போ நான் மோசமானவன்னு முடிவே பண்ணிட்டியா?” என்று கேட்டான். அவள் அலட்சியமாக முகத்தை திருப்பியதும், “என் தங்கை விசாலியிடமும், அவள் கணவரிடமும் சொல்லிக் கொடுத்து உன்னை அவமதிக்க எனக்கு எத்தனை நேரமாகும்? இருந்தும், எதுவுமே செய்யாம இருக்கிறேனே எதுக்குன்னு தெரியலயா?” என்று கேட்டதும், அவள் திகைப்புடன் பார்த்தாள்.

“இத்தனை நாளும் கல்யாணம் பண்ணாம இருந்தவ, திருமணமாகி புருஷன் வீட்டுக்கு வந்த பிறகு, யாரோடும் பேசாம விலகி இருந்து, என்னைப் பார்க்கும் போதெல்லாம் பயப்பட்டு நடுங்கி, என் பேச்சை எடுத்தாலே முகம் மாறி நிம்மதியை தொலைச்சி, கையில வெடியைக் கொளுத்தி, கண்ணீர் விட்டு நிம்மதி இல்லாம இருக்கறியே, ஒருவேளை நீ இன்னும் என்னை மறக்கலயா? இத்தனை நாளும் என்னை நினைச்சிட்டு தான் இருந்தியா? நான் வராததால் அர்ஜூன் அத்தானைக் கட்டிக்கிட்டியா?” என்று கேட்டான்.

அவனுக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது? என்று நினைத்தபடி அவள் இருக்க, “எங்க அப்பாவோட தம்பி மகள் விசாலி என்பதால், அவளோட நாத்தனார் அஸ்மிதாவை எனக்குக் கட்டி வைக்க வீட்டுல பிரியப்பட்டாங்க. எனக்கு இந்தக் கல்யாண பேச்சுல விருப்பமில்லாம இருந்தாலும், இப்ப அவளைப் பண்ணிக்கலாம்னு தோணுது…” என்று இழுத்தான்.

அவள் விரல்களை அழுத்தமாகப் பற்றியபடி, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று பார்த்தாள்.

“அவளைக் கட்டிக்கிட்டா, அன்னைக்கு ஒரு ஆண்பிள்ளைன்னு கூடப் பார்க்காம என்னைக் கை நீட்டி அடிச்சு, அவமதிச்சிட்டு போன உன்னையும் பழிவாங்கலாம். என் பெற்றோர் ஆசையை நிறைவேற்றிய திருப்தியும் கிடைக்கும்” என்றான்.

அத்தனை நேரம் அவன் என்ன சொல்ல வருகிறானோ என்று பதற்றத்தில் நின்றவளின் முகம், அடுத்த கணம் மாறி விட்டது.

“எப்பவும் எதிரிக்கு முன்னாடி வாழ்ந்து காட்டினால் தானே சிறப்பு. இல்லன்னா, ஆணா பிறந்து என்ன பயன்?” என்று இயம்பியதும், “அப்படின்னா, இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்லாம, வீட்டுல உள்ளவர்களுக்காகச் சம்மதிச்சிருக்கீங்க. சரி தானே?” என்றாள் ஆராதனா.

அவன், “அப்கோர்ஸ்!” என்று கூறியபடி சிகரெட்டை பற்ற வைத்து உதட்டில் பொருத்தினான்.

“மிஸ்டர். சந்தோஷ்! நீங்க முன்னே மாதிரி இல்லாம இப்ப திருந்தி இருப்பீங்க, அஸ்மிதாவுக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருந்து, என்னால அவள் வாழ்க்கைக்கு ஒரு துன்பம் வந்துட கூடாதுன்னு பயத்துல, இத்தனை நாளும் வாயை மூடிக்கிட்டு இருந்தேன். இனிமேல் அப்படி இருக்கும் அவசியமில்லைன்னு சொல்லிட்டீங்க என்றவள்,

நீங்க உண்மையிலேயே என்னை விரும்பி இருந்தா, உங்க சொல் பேச்சு கேட்டு நடந்து, உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாகி இருப்பேன். ஆனால், நீங்க வெறும் நேரப் போக்கிற்குப் பழகி, என் மனசையும் காயப்படுத்தி நோகச்சிட்டீங்க. ஏற்கனவே, எங்க அப்பாவால் சிறு வயது முதல் பல அவமானங்களைச் சந்திச்சு, நிறைய கஷ்டப்பட்ட என்னை மறுபடியும் தலை நிமிர்ந்து நடக்க விடாம பண்ணிட்டீங்க.

அன்னைக்கு நீங்க பேசிய வார்த்தையின் வீரியத்தை அவ்வளவு சுலபமா என்னால் கடந்து வர முடியல. இனிமேலும் யாரும் என்னை அந்த மாதிரி எண்ணத்துல பார்க்க கூடாதுன்னு என்னோட நடையிலும், பழக்க வழக்கத்திலும் நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்தேன். எங்க அக்கா, அம்மாவுக்கு தேவையானதை செஞ்சு கொடுத்துட்டு, கடைசிவரை அவர்களுக்காக வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்” என்ற ஆராதனா,

“பெண் என்றால் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதுவதுக்கு படைக்கப்பட்டவர்களா? அவர்களுக்கென தனி உணர்வுகளே கிடையாதா? அப்பா சரி இல்லாம இருந்தா, அவருக்குப் பிறந்த பிள்ளைகள் நல்ல விதமா வாழணும்னு ஆசைப்படக் கூடாதா?” என்று கேட்டாள்.

அவன் சிகரெட் புகையை உள்ளிழுத்து, வளையம் போல் வெளியே விட்டான்.

“எல்லா பெற்றோரின் மனசுல இருக்கும் ஒரே ஆசை. அவங்க பெத்து வளர்க்கும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நல்ல முறையில் அமையணும் என்பது தான். அதையே எங்க அம்மாவும், அவருக்குப் பிறந்த நாங்களும் எதிர்பார்ப்பதில் தப்பேதும் இல்லயே?

ஒரு பெண்ணைக் காதலித்து அவளையே மணந்து கொள்வதா வாக்கு கொடுத்து, மணந்த பிறகு உணர்ச்சிப் பெருக்கில் அவளுக்குத் துரோகம் செய்வதும், அவளைக் கண்ணீர் விட வைப்பதும் எந்த வகையில் நியாயம்? இதே உங்க அம்மா, உடன் பிறந்தவர்களுக்கு நடந்தா உங்களால் ஏற்க முடியுமா?” என்று கோபமாகக் கேட்டாள்.

அவன் சிரித்தபடியே கேட்டு இருந்தான்.

“அன்னைக்கு உங்களை விரும்பி, உங்க பேச்சால் காயப்பட்டு, அடுக்கடுக்கா ஏற்பட்ட பிரச்சனையில் சிக்கி, கல்யாணம் பண்ணிக்காம இருந்து எங்க அம்மாவால் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிச்சேன். என் கணவரும், இந்த வீட்டுல உள்ளவர்களும் என்மேல காட்டிய அன்பை புரிஞ்சுக்காம நடந்து, பெரிய தப்பு செஞ்சுட்டேன்…” என்று விசும்பினாள்.

பின்னர், கண்ணீரைத் துடைத்தபடி, “என் கணவர் ரொம்ப நல்லவர்! தங்கமான மனசுக்காரர்!! என்மேல உயிரையே வச்சிருப்பவர். திருமணமான இத்தனை நாளில் என் மனசு கோணும் விதமா நடந்துக்காதவர், அவர் ஆசைப்படியே மீத நாட்களையும் கழிக்கணும்னு நினைச்சிட்டு இருந்த என் முன்னே ஏன் வந்தீங்க? எதனால் நித்தம் நித்தம் கண்ணு முன்னாடியே நடமாடி நிம்மதியை பறிக்கிறீங்க? உங்களைப் பார்த்ததுல இருந்து, என்னால சந்தோஷமா இருக்க முடியல” என்று அடிபட்ட மானைப் போலக் கதறினாள்.

அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

“ஒவ்வொரு கல்யாணமான புருஷனும் நியாயமா தன் மனைவியிடம் எதிர்பார்ப்பது அவளது அன்பான பேச்சையும், அக்கறையான கவனிப்பையும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, கூடிக் குதூகலமா வாழ்வதையும் தான். ஆனால், என் கணவர் என்னைக் கட்டிய நாள் முதல், என் கடினமான வார்த்தையால் காயப்பட்டதை தவிர எதையுமே அனுபவிக்கல…

அப்படிப்பட்டவருக்கு, மனைவியா இருக்கும் தகுதியும் எனக்கு இல்ல. சந்தோஷ் உங்களை நான் மனசார விரும்பியதா நினைச்சது உண்டு. ஆனால், என்னைக்கு உங்களைப் பற்றி தப்பா தெரிய வந்ததோ, அதிலிருந்து உங்களை நினைச்சு கூடப் பார்த்தது இல்ல. சின்ன வயசுல உங்க மேல ஏற்பட்ட ஈர்ப்பை நான் காதலா நினைச்சதா பலமுறை எண்ணியதுண்டு. இனிமேல், அதைப் பற்றிய பேச்சு அவசியமில்லை. என் மனசுல என்னோட கணவர் மட்டும்தான் இருக்கார். அவர் இடத்தை என்னால வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. நீங்க மரியாதையா இந்த வீட்டை விட்டுப் போயிடுங்க!” என்று உறுதியாகக் கூறினாள்.

அவன் எழுந்து வந்து அவள் முகத்தையே பார்த்தான்.

“நான் இந்த வீட்டுக்கு வராம இருந்தா நீ உன் கணவரோடு சேர்ந்து சந்தோஷமா இருப்பியா? என்னைப் பற்றி நினைச்சு உன் வாழ்க்கையை அழிச்சுக்க மாட்டியே?” என்று இறுதியாகக் கேட்டான்.

“ஒரு போதும் இல்ல. நீங்க மட்டும் வராம இருந்தா நான் அவரோடு எப்பவோ சேர்ந்து வாழ ஆரம்பிச்சு இருப்பேன். உங்களால் தான் முடியல” என்று வெம்பியவள்,

“என்மேல உள்ள கோபத்துல அஸ்மிதா வாழ்க்கையை அழிச்சிடாதீங்க. அவள் பாவம்! ஒரு தவறும் செய்யாதவள். உங்களைக் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கறேன். பழையதை மறந்து வேறு யாரையாவது கட்டிக்கிட்டு மனைவி, குடும்பமா நீங்களும் நல்லா இருங்க. என்னையும் என் குடும்பத்தோடு வாழ விடுங்க” என்று கை குவித்து கேட்டுக் கொண்டாள்.

அவன் பதில் கூறாமல் அவளையே பார்த்தான்.

அவள் முகத்தில் தெரிந்த சோகத்தையும், கணவன் மீதான பாசத்தையும், குடும்பத்து மீதான மரியாதையையும், தன்மீது அவளுக்கு இருப்பது வெறும் பயம் என்பதையும் அறிந்து கொண்டு, ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் வெளியேறிச் சென்று விட்டான். ஆனால், அவன் வீட்டிற்கு வந்திருப்பதை செல்வராசு மூலம் தெரிந்து கொண்ட அர்ஜூன், அங்கு வந்து மனைவியின் வாய் வழியாக அனைத்தையும் அறிந்து சிலையென நின்றான்.

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்….

இறுதி அத்தியாயத்திற்கான லிங் இதோ… https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

9 thoughts on “அக்னி சாட்சி ஃப்ரீ பைனல்”

 1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

 2. Kalidevi

  Wow superb aaradhana ellathaium therinjitu thairiyama pesita avan kitta un manasula iruntha alutham ellam poidum ipo ivana ninachitu ivanuku bayanthuta nee ippadi iruntha itha arjun kitta solli iruntha avan sari pani irupane epovo ipovum unakaga kandipa sari panuvan arjun

 3. CRVS 2797

  அச்சோ..! ஆனாலும் அர்ஜூன் ரொம்ப நல்லவன்.
  மனைவியை உண்மையாவே நேசிப்பவன். உண்மை தெரிஞ்சதால, அவன் ஆராதனாவை கை விட மாட்டான்னு தான் தோணுது.

  1. Avatar

   எனது கதைகள் பொதுவாக மற்ற எழுத்தாளர்களை விட மாறுபட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுவது. அதற்கான உங்களது கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *