Skip to content
Home » அக்னி சாட்சி எபிலாக் : 22

அக்னி சாட்சி எபிலாக் : 22

எபிலாக் : 22

மாதவனிடம் வேலை விசயமாகப் பேசிய ஆராதனா, “நீங்க ரொம்ப நல்லவர்னு நம்பி தான் அம்மா அக்காவை உங்களுக்குக் கட்டி வச்சாங்க அத்தான். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது உங்க பொறுப்பு! என் அக்கா கண்ணீர் விட்டுப் பார்க்க நான் விரும்பல. அவங்களும், பிள்ளைகளும் இதுவரை பட்ட கஷ்டம் போதும். என் கணவர் வீட்டுல இருந்து நான் வந்து பதினைந்து நாள் ஆகுது. நான் அவங்களை வரச் சொல்லிட்டு கிளம்புறேன். சும்மா சும்மா மாமியார் வீட்டைக் குறை சொல்லி, உங்களை நியாயவாதியா காட்டிக்காம, உண்மையிலேயே அதுபோல இருக்க முயற்சி பண்ணுங்க.

அப்பாவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரியும் அவசியமில்ல. அது ஊரறிஞ்ச விசயம். அதை நினைச்சு வெட்கப்படவோ, வேதனைப்பட்டு ஆக வேண்டியதும் இல்ல. அப்பாவைத் தாண்டியும் நம்ம வாழ்க்கை இருக்கு. எங்க அக்கா ரொம்ப நல்லவங்க. நீங்க அவங்களை நல்லபடியா பார்த்துக்கோங்க. உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் செஞ்சு தர, நான் தயாராகவே இருக்கேன். ஆனால், என் கணவரும் அவர் வீட்டுல உள்ளவர்களும் அறிஞ்சா, உங்களைப் பற்றி என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பாருங்க?” என்றவள், தனது கணவனின் உழைப்பு, நேர்மை, தன் மீதான பாசம், திருமணத்திற்கு செய்த உதவிகள், வீட்டில் உள்ளவர்களின் சிறப்பியல்புகள் என்று சகலத்தையும் சொன்னதும், அவன் வாய் திறக்க முடியாமல் ஆகி விட்டது.

“என் கணவர் நல்லவர். அவரோட மனைவியா இருக்க நான் புண்ணியம் செஞ்சிருக்கணும்.’னு எப்பவும் சொல்லிட்டு இருந்த என் அக்கா, இப்போ சில நாளா ‘என்ன பாவம் செஞ்சேன்னு இப்படிப்பட்ட வாழ்க்கையை ஆண்டவன் எனக்குத் தந்தார்னு தெரியல. இதைவிட என் உயிரையே எடுத்திருக்கலாம்…’ன்னு கதறுறாங்க. அவங்களுக்கு ஏதாவது ஆனால் பிள்ளைகளோட எதிர்காலம், உங்க வாழ்க்கையைப் பற்றி நினைச்சுப் பாருங்க” என்றாள்.

அவன் வாயடைத்துப் போனான்.

“எங்க அக்காவைப் பற்றி நான் சொல்வதை விட, உங்க மனைவியைப் பற்றி நீங்க அதிகமாகவே தெரிஞ்சு இருப்பீங்க. அப்படிப்பட்டவங்க அடுத்தவங்க பேச்சுக்கு முக்கியத்துவம் தரலாமா? யாரை எந்த இடத்துல வச்சு நடத்தணும்? யாரோடு கடைசி வரை வாழப்போறோம்? இன்னைக்கு கூடச் சேர்ந்து ஜால்ரா போடுறவங்க, நாளைக்கு அவங்களுக்குன்னு வர்றப்போ, உங்களை எந்த இடத்தில் வைப்பாங்க? பிள்ளைகள் இருவரின் எதிர்காலம்னு பார்க்கவும், தெரியவும் நிறைய இருக்கு அத்தான்! எதையும் போட்டுக் குழப்பிக்காம, அக்காவைக் கூப்பிட்டுப் போயி, நல்ல விதமா குடும்பம் நடத்துங்க” என்று சொல்லி ஐந்து சவரன் நகை, புதியதாக வாங்கிய அத்தனையும் அவன் பொறுப்பில் ஒப்படைத்து, மறுநாளே கணவனை வரச் சொல்லிக் கிளம்பி விட்டாள்.

குழித்துறையில் உள்ள கணவனின் வீட்டிற்குச் சென்றால், சந்தோஷ் விசயமாக என்ன பேசுவார்களோ என்ற பதைபதைப்பு இருந்தாலும், அவள் அதைப் பெரிதுபடுத்தாமல் இருந்து கொண்டாள்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு வந்தவளைப் பார்த்த வீட்டார் அனைவரும் இன்முகமாக வரவேற்று, ஆர்த்தியை பற்றி நலம் விசாரித்தனர். சற்று நேரம் அவர்கள் அருகில் அமர்ந்து நடந்ததைக் கூறி விட்டுத் தனது அறைக்கு வந்தாள் ஆராதனா.

மனைவியிடம் மனம் விட்டுப் பேசி, அவளுடன் இணைந்து வாழும் நாளிற்காகக் காத்திருந்த அர்ஜூன், என்று சந்தோஷின் மூலமாக நடந்த விசயத்தை அறிந்தானோ, அன்று முதல் நிம்மதியற்று காணப்பட்டான். மனைவியின் அன்பான வார்த்தையோ, தொடுகையோ அவன் மனதில் எள்ளவும் நுழையவில்லை.

அது விசயமாக அவளிடம் பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. தங்கையின் திருமணம் நின்று போன வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், நடக்காது என்பதைப் பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை.

அந்த நேரம் ஆர்த்திக்கு உடல் நலமில்லை என்று மனைவியும் ஊருக்குச் சென்று விட்டதால், அதையே காரணமாக வைத்து, அவள் மனம் மாறச் சற்று அவகாசம் அளித்தான். விசாலியின் மூலம் சந்தோஷ் வெளியூருக்குச் செல்வதை அறிந்து, அவர்களுடன் தானும் பார்க்கச் சென்றான்.

விசாகன், விசாலியிடம் திருமண விசயத்திற்காக மன்னிப்பை வேண்டியவன், ‘அஸ்மிதாவுக்கு மிக விரைவில் நல்ல வாழ்க்கை அமையும்’ என்று கூறியதுடன், அர்ஜூன் அருகில் சென்று அவனது கையைப் பற்றினான்.

“அவசரமா போக வேண்டியதாகிடுச்சு. இனி திரும்ப வர நாளாகும். உங்க மிஸஸ் கிட்டே சொல்லிடுங்க” என்றான்.

அர்ஜூன் அவள் ஊருக்குச் சென்று இருப்பதாகவும், வந்ததும் கண்டிப்பாகக் கூறுவதாகவும் சொன்னவுடன், அவன் கண்களில் அவளை முதன் முதலாகப் பார்த்ததில் இருந்து தற்சமயம் நடந்தது வரை வந்து போனது.

அன்று தன் வார்த்தையைக் கேட்காமல் அறைந்த கோபத்தில் கடுமையாகப் பேசி விட்டாலும், அவளை மறக்க முடியாமல் மறுபடியும் தேடி வந்தான். அவள் அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்க்கவும், சில நாட்கள் பின்னாடியே அலைந்து பார்த்து விட்டு, அவள் தன்னை விட்டுப் பிரிய காரணமான நண்பர்களிடம் பேச மனமற்று, அங்குப் போவதையும் நிறுத்தி விட்டான். அவளைப் பார்க்கும் ஆசை வரும்போது உடனே கிளம்பி வந்து, எங்கேயாவது நின்று அவளை ரசித்தபடி சென்று விடுவான். அவளது பீ.எஸ்சி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்யலாம் என்று நினைத்தான். அவள் மேலும் படிக்கச் செல்வது தெரிந்ததும், அவள் படிப்பை முடிக்கட்டும், தானும் தனது வேலையில் ஓரளவுக்கு முன்னேறி வரலாம் என்று நினைத்து, வேலை விசயமாகக் கனடாவிற்குச் சென்றான்.

அங்கிருந்து வந்த பிறகே, அவளுக்குத் திருமணம் நடந்தது தெரிய வந்தது. மனமுடைந்து போனான். அப்போது தான் அவளைக் கணவனுடன் கண்டு, அவள் மணந்திருப்பது யாரை என்று தெரிந்து கொண்டு, தங்கை விசாலியிடம் அவளைப் பற்றி விசாரித்து, தன்னால் தான் அவள் அப்படி இருப்பதாக எண்ணி, அவளைச் சந்திக்க அஸ்மிதாவை மணக்கப் போகும் மாப்பிள்ளையாக வந்தான். அவளிடம் பேசிவிட முயன்றும் முடியாமல், கடைசியில் தன்னை மோசமானவனாகக் காண்பித்து, அவளுக்குத் தன்மீது இருக்கும் பயத்தையும் துடைத்து எறிந்தான்.

வேலை விசயத்தைக் காரணமாக்கி திருமணத்தையும் நிறுத்தியவன், போவதற்கு முன்பாகக் கடைசியாக ஒருமுறை அவளைப் பார்த்து விடும் ஆசையில், தங்கை விசாலியின் மூலம் விசாரித்து விட்டு, அவள் இருக்கும் மருத்துவமனைக்கு வந்தான். அவளது குடும்பத்து மீதான பாசத்தையும், அக்கறையையும் தூரமாக நின்று பார்த்தவன், ‘இந்த ஜென்மத்துல உன்னோடு சேர்ந்து வாழும் பாக்கியம் எனக்கு இல்ல. அடுத்த ஜென்மத்துல உனக்குப் பிடிச்சவனா பிறந்து காத்திருப்பேன். அதுவரை காதல், கல்யாணம் எனும் பேச்சுக்கு, என் வாழ்க்கையில் இடமில்லை’ என்று மனதிற்குள் உரைத்துச் சென்று விட்டான்.

ஊருக்கும், உலகிற்கும் தான் அவள் அர்ஜூன் மனைவி. அவனைப் பொருத்தவரை அவனது காதலி. அவன் மனதில் அழியாமல் நிலைத்திருப்பவள். அவளை யாருக்காகவும் மறக்கும் அவசியம் அவனுக்கு இல்லை. அங்கிருந்து சென்றவன் யாருடைய பேச்சையும் கேட்காமல் புறப்பட்டு விட்டான்.

இப்போது அவளை நினைத்ததும் கண் கலங்கி நாசி விடைத்தது. அர்ஜூன் அவனை அணைத்து தட்டிக் கொடுத்தான். அவனது சீரற்ற மூச்சும், இதயத் துடிப்பின் வேகமும் அவன் மனதை எடுத்துரைக்க, “நீங்களும் சீக்கிரமா வந்து கல்யாணம் செஞ்சுக்கணும். நானும் என் மனைவியும் கண்டிப்பா உங்க திருமணத்துக்கு வருவோம்” என்று சொன்னதும், அவன் தன்னை அடக்க வெகுவாகப் பாடுபட்டான்.

கண்ணீரை அவன் பார்க்காமல் துடைத்து விட்டுச் சிரிப்பால் அதை மறைத்து, “யூ ஆர் ஸோ லக்கி! ஆண்டவன் உங்க ரெண்டு பேரையும் நல்லாக்கி வைக்கட்டும்” என்று வாழ்த்தி விட்டு, “நான் மறுபடியும் ஊருக்கு வர்றப்போ உங்க வீட்டுக்கு வரலாமா?” எனத் தயங்கியபடி கேட்டான்.

அர்ஜூனுக்கு அவன் எதற்காகக் கேட்கிறான் என்று புரியாமல் இல்லை. ஆகவே, “அது உங்க தங்கையின் வீடு. நீங்க எப்பவும் வரலாம். உங்க குடும்பத்தோடு வந்து தங்கலாம்” என்று அனுமதி அளித்தான்.

அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சிரித்தவன், அனைவரிடமும் விடைபெற்று விமானத்தை நோக்கி நடந்தான். அப்போது, தன்னை அறியாமல் திரும்பிப் பார்த்தான். ஆராதனா ஊரில் இருக்கிறாள் என்பது அதன் பிறகே மண்டையில் உரைக்க, பின்னந்தலையில் தட்டியபடி வேகமாக நடந்து சென்றான்.

அந்த நிகழ்விலிருந்து அவ்வளவு சீக்கிரம் கடந்து வர முடியவில்லை அவனால். மனைவியின் மீது அவன் கொண்டிருக்கும் நேசத்தில், கால் பகுதியாவது தான் வைத்திருப்போமா என்று நினைத்தவனுக்கு இல்லை என்றே தோன்றியது.

ஆராதனாவை பார்த்துச் சில மாதங்களான தனக்கே, அவளை விட்டு விலகி இருக்க முடியவில்லை எனும்போது, இருவரும் விரும்பி, ஒருவருக்கு ஒருவர் ஆசைப்பட்டு, அவளைப் பிரிய நேர்ந்து, அதை மறக்க முடியாமல், கிட்டத்தட்ட ஐந்து வருடமாக அவளையே நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறான். தான் மட்டும் அவளை மணக்காமல் இருந்தால், நிச்சயம் அவனுக்கு அவள் கிடைத்து இருப்பாள் என்று மறக்க முயன்றும் முடியாமல், மனம் அதிலேயே கிடந்து உழன்றது. அவனது ஏக்கமான பார்வையும், பேச்சும், கண்ணீரும் அவள் மேலுள்ள உண்மையான நேசத்தை வெளிப்படுத்தியது.

அவன் சென்று விட்டான். ஆனால், அதிலிருந்து மீள முடியாமல் இருந்தது அர்ஜூன் மட்டும்தான்!! அந்தச் சம்பவத்தை அவ்வளவு எளிதாக அவனால் கடந்து வர முடியவில்லை. அதனால் தான், வேலையை இழுத்துப் போட்டுச் செய்து, தன்னை ஓரளவு சமன் செய்து விட முயற்சிக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் மனைவியின் ஞாபகம் விடாமல் அலைமோதும். அவளிடம் சிரித்துப் பேசிய வார்த்தைகளும், அவளது கனிவான உபசரணையும், அவளது நாணமும், முதன் முதலாகத் தொட முயன்று ஏற்பட்ட விபத்தும், தனது உணவகத்தில் அவளிடம் நடந்து கொண்ட விதமும், கண் முன்பு வந்து நின்று அவள்மீதான ஏக்கத்தை அதிகப்படுத்தும். அவள் எப்போது வருவாள் என்று தவிப்பாக இருந்தாலும், அனைத்தையும் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டான்.

ஆராதனா அறையைச் சுற்றிலும் பார்த்தபடி இருக்க, கதவைத் தாழிட்டு வந்த அர்ஜூன் மனைவியை இறுகத் தழுவினான். கணவனின் அணைப்பில் இருந்த அழுத்தத்தில், அவன் தன்னை எந்த அளவிற்குத் தேடி இருக்கிறான் என்று புரிந்து கொண்டு, அவளும் முழுமனதாக அவனுடன் ஒன்றினாள்.

அதற்கு மேலும் பிரிவு என்பது தங்களுக்கு இடையே வேண்டாம் என்று நினைத்து, “நாளைக்கு காலையிலே வெளியே போகணும். நீ உனக்குத் தேவையானதை ரெடி பண்ணிடு” சிறு தகவலாய் கூறியவன் பார்த்த பார்வையில், அவளுக்கு விசயம் புரிந்து போனது. முகமும் செந்தாமரையாக மலர்ந்து மணம் வீசியது. அதை முகர்ந்து பார்த்தவன், பின்பு தன் ஆசைதீர ருசி பார்த்தான்.

கோவா கடற்கரையில் மனைவியுடன் ஓடி விளையாடிய அர்ஜூன், அவளை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு சுற்றினான்.

அவள் அவனைக் கட்டிக் கொண்டதும் நாசியோடு நாசி வைத்துத் தேய்த்தான். அவளது இதழ்களை ருசித்தான். நிழலில் அமர்ந்து கொண்டு, அவளைத் தன் மார்பின் மீது சாய்த்தான்.

கணவனிடம் மனம் விட்டுப் பேச எண்ணிய ஆராதனா, தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள். அவன் பொறுமையாகக் கேட்டபடி, “சந்தோஷ் தப்பானவரா இருப்பாருன்னு உன்னால நம்ப முடியுதா?” என்று வினவியதும், அவள் “இல்லை” என்று பதிலளித்தாள்.

“பிறகும் எதுக்கு அத்தனை கடுமையா நடந்துக்கிட்டே?”

“அவர் என்னை மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கணும். பழசை நினைச்சு தன் வாழ்க்கையை அழிச்சிட கூடாதுன்னு…”

அவன் புரியாமல் பார்த்ததும், “விசாலி அக்கா, சந்தோஷ் பற்றி நிறைய பேசினாங்க. அப்பதான் அவர் என்னை உண்மையா விரும்பியது தெரிய வந்தது. என்னால தான் அவர் இத்தனை வருஷமா கல்யாணம் செய்யாம இருந்து, முதன் முறையா அஸ்மிதாவை கல்யாணம் செய்யச் சம்மதம் சொன்னதும் தெரிய வந்தது.

அஸ்மிதாவை பிடிச்சு கல்யாணம் செய்யும் நேரத்தில், என்னால எந்தப் பிரச்சனையும் வந்துட கூடாது. பழைய சம்பவத்தை மனசுல வச்சிட்டு, என் வாழ்க்கையையும் அழிச்சிட கூடாதுன்னு பயத்துல, அவரைப் பார்த்தாலே நிம்மதி இழந்து தவிச்சேன். உண்மையிலேயே அவர் அஸ்மிதாவை கட்டிக்க சம்மதிச்சு இருந்தா, என் கணவரின் மீதான பாசத்தில் நானும் ஒரு ஓரமா ஒதுங்கி இருந்து இருப்பேன். ஆனால், அவர் என்னைப் பழி வாங்க அஸ்மிதாவை மணக்கச் சம்மதிச்சதா சொன்னதும், அந்தக் கல்யாணம் நடக்காம இருப்பதுதான் சரின்னு பட்டது” என்றாள்.

“தனுக்குட்டி!! நீ ஆயிரம் சொன்னாலும், என்னால அவரைத் தப்பா நினைக்க முடியாது. ஒரு ஆண் மனதில் நேசத்தைப் புகுத்தி அவரோடு பேசிப் பழகி, பிறரின் வார்த்தையில் நீ அவரை அவமதிப்பா பேசியதோடு, அறைஞ்சிட்டும் போயிட்டே! இதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டாங்க. அப்படியும், அவர் உன்னை எதுவுமே செய்யல. நீ அன்னைக்கு உன் மனசுல இருப்பதை எல்லாம் சொல்லியும், அவர் அதை நினைச்சு சந்தோஷப்படவோ, கிண்டலடிக்கவோ இல்ல. உன் மனசுல இருக்கும் முழுசையும் தெரிஞ்சுட்டு தான் விலகிப் போனார். அதுவும், நீ இனிமேல் அவரைப் பார்த்துப் பயப்படாம, துணிச்சலா நடைபோடுவேன்னு தெரிஞ்சுக்கிட்டு… அது மட்டுமல்ல தனு, உன் படிப்பு முடிஞ்சதும் உன்னையே கல்யாணம் செய்யும் எண்ணத்துல கூட அவர் இருந்திருக்கலாம். அது தெரியாம நான்தான் உங்களுக்கிடையில் வந்துட்டேன்.” என்றான் அர்ஜூன்.

அவள் உடனே “அவர் வந்து பெண் கேட்டு இருந்தாலும், நான் அவரைக் கல்யாணம் செய்யச் சம்மதிச்சிருக்க மாட்டேன்” என்று வீம்புடன் கூறினாள்.

அர்ஜூன், “என்னாலேயே உன்னைக் கட்டிக்க முடிகிறப்போ அவரால் முடியாதா? உன் சம்மதம் கிடைக்காம இருந்தாலும் பரவாயில்லன்னு, தூக்கிட்டுப் போயாவது கட்டி இருப்பாரு. உன்னால அந்த ஆன்ட்டி ஹீரோவிடமிருந்து ஒரு நாளும் தப்பியிருக்க முடியாது என்றவன், நீயும் அவருக்கு ஏத்த ஆன்ட்டி ஹீரோயின் தான்” என்று சத்தமாக நகைத்தான்.

அவள் கணவனை முறைத்தாலும், அவனது கிண்டலை உணர்ந்து மீசையைப் பிடித்து இழுத்தாள்.

அவன் வேண்டுமென்றே கத்தியதும், “சின்ன வயசுல அறியாத பருவத்தில் ஆசைப்படுவது போலதான் நானும்! விஜய், அஜித், விக்ரம், மாதவனோட வாலிய வயதில் உள்ள படத்தைப் பார்த்து, அவங்க மேல பிரியப்படாத யாரையாவது சொல்ல முடியுமா? அவர்களைப் போலவே தனக்கு கணவரா வருபவரும், இப்படி இருக்கணும்னு ஆசைப்படுவதில் தப்பு இல்லயே?

அப்படிதான் அவரும், வசதிக்கு ஏற்ப உடை நடைன்னு இருந்தார். நல்லா பேசிச் சிரிச்சதால் நானும் அந்த வயதுக்குரிய குறுகுறுப்பில் அப்படி நடந்துட்டேன். ஆனால், என் மனசு பூராவும் நீங்கதான் இருக்கீங்க. உங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் என்னால் நினைக்க முடியாது” என்று கணவனின் மார்பில் சாய்ந்தாள்.

அவன் மனைவியின் கூந்தலை வருடியபடி, இவள் அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருந்ததால் தான், இத்தனை சுலபமாக எடுத்துக் கொள்கிறாள். ஆனால், அவன்!!

“தனுமா!! மனிதனா பிறந்தா எல்லாரும் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். அதே உணர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதுதான் தவறு! சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு மனிதனை நல்லவராகவும், கெட்டவராகவும் காட்டுது. அன்னைக்கு அவர் பேச்சைக் கேட்டு அடிச்சிட்டு விலகி வந்ததை விட, உன்கிட்டே அப்படி சொன்னவர்களை நாலு கொடுத்து இருந்தா, உனக்கு உடனே உண்மைகள் தெரிய வந்திருக்கும். நீயும் உன் வாழ்க்கையில் அத்தனை சோகம், வெறுப்புன்னு வாழ்ந்திருக்கும் அவசியம் ஏற்பட்டு இருக்காது” என்று கூறிய கணவனின் உதட்டை மூடினாள்.

“இனி இதைப் பற்றிய பேச்சு நமக்கு இடையே வேண்டாம். அவரை விசாலி அக்காவின் அண்ணனா மட்டுமே நினைச்சுப் பேசலாம்” என்று சொன்னதும், புரிந்து கொண்டு அவன் தலையசைத்தான்.

“அப்படின்னா, இனிமேல் சந்தோஷைப் பார்த்தா பயப்படமாட்டியா?”

“இல்ல”

“அவர் கல்யாணத்துக்கு அண்ணி வழி உறவினரா வருவதுக்கு, உனக்குச் சம்மதம் தானே?”

“நீங்க இருக்கறப்போ எனக்கு என்ன பயம்? உங்களோடு எங்கு வேணும்னாலும் வருவேன்”

மனைவியின் தன் மீதான நம்பிக்கையில் அவன் உள்ளம் சிலிர்த்தது.

“நீ இவ்வளவு தூரம் சொல்வதால் நானும் இத்தோடு இந்தப் பேச்சுக்குச் சுபம் போடுறேன். ஆனாலும், அவருக்கு நான் நன்றி சொல்லியாகணும். தெரியுமா?” என்று குறும்பாக வினவினான்.

“அவருக்கா? ஏனாம்?” என்று கணவனின் கழுத்தைக் கட்டியபடி அவள் கேட்டாள்.

“ஏன்னா, அவர் உன்னை விட்டுப் போகாம இருந்து, நீயும் அவரை உண்மையாகவே விரும்பி இருந்தா, நம்ம கல்யாணம் நடந்து, இந்த வாயாடி எனக்கும் கிடைச்சிருக்க மாட்டால்ல? அதுக்கு தான்” என்று நகைத்தான்.

அவளும் சிரித்தபடி, “என்மேல உங்களுக்குக் கோபம் இல்லயா? இப்படி எல்லாம் நடந்திருக்குன்னு தெரிஞ்சும், உங்களால் எப்படி சாதாரணமா எடுத்துக்க முடிஞ்சது?” என்று கேட்டாள்.

“உன்னைப் பார்த்த இத்தனை நாளில் உன்னோட குணம், நடத்தை எல்லாம் என்னைக் கவர்ந்தது போல், அவரையும் கவர்ந்து இருப்பதில் வியப்பேதும் இல்லயே… நீ ஆசைப்பட்ட மாதிரி அவரும் ஆசைப்படுவதில் தப்பு என்ன இருக்கு? ஆக… “

“ஆக… “

அவன் சத்தமாகச் சிரித்தபடி, “மறப்போம் மன்னிப்போம். நான் உன்னோடு சேர்ந்து சந்தோஷமா இருப்பது போல, சந்தோஷூம் விரைவில் திருமண பந்தத்தில் இணைஞ்சு நல்லா இருக்கட்டும்” என்றான்.

கணவனின் புன்னகையில் மனதின் பாரங்கள் மறைந்து போக, “ஓ… பேஷாக!” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆராதனா.

ஒன்றை பலதாக்கி அவளைத் தன்னை விட்டு நகராமலும், தன் நினைவுகளைத் தவிர வேறு எதுவும் அண்ட விடாமலும் பார்த்துக் கொண்டான் அவளது ஆருயிர் கணவன் அர்ஜூன்!!

சில வருடங்களுக்குப் பிறகு,

ஆர்த்தியின் மாமியார் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவர்கள் வெளியிடத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்பட்டாலும், கணவனின் மனம் வருந்தக் கூடாது என்று அவளும், மனைவிக்காக அவனும் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். அவன் குடும்பத்தில் நடக்கும் அத்தனைக்கும் மாமியாக முன் நின்று அவள் நடத்தி வந்தாள். யார் என்ன சொன்னால் என்ன? எப்படி இருந்தால் என்ன? தனது நடவடிக்கையில் எந்தவித மாற்றமுமின்றி காணப்பட்டாள்.

அவனது அக்கா இருவரும் இன்னும் திருந்தாமல் இருந்து, தேவை இல்லாமல் பேசி, மாதவனின் அதிரடியில் மிரண்டு போய் வாயை மூடி விட்டார்கள். தம்பியிடம் மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்ற அளவில் மட்டுமே பேச முடிந்ததில், ஆர்த்தி இத்தனை வருடமாக அனுபவித்த கஷ்டங்களுக்குச் சாமரம் வீசுவது போல இப்போதைய வாழ்க்கை அமைந்தது. அனுசரிப்பும், விட்டுக் கொடுப்பும் தான் வாழ்க்கையைப் பலப்படுத்துகிறது. சண்டையும், கோபமும் நமது குணத்தை மாற்றி மூர்க்கத்தனத்தை குடியேற வைக்கிறது. இதைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் ஏற்படும் எத்தனைப் பெரிய கஷ்டங்களையும் தூசாக நினைத்து, உதறித் தள்ளி விட்டு முன்னேறிச் செல்லலாம்.

ஆராதனாவிற்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவள் தனது குடும்ப சூழ்நிலை, சந்தோஷ் விசயம் அனைத்தும் தெரிந்த பிறகும், உயிர் நேசத்தைக் கொட்டிய கணவனின் மீது உயிரையே வைத்திருந்தாள். குடும்பம், கணவன், பிள்ளைகள், தனது உடன் பிறப்புகள், தாய் என்று அவளது வாழ்க்கையும் நிம்மதியாகச் சென்றது. மதிவாணனும் இரண்டாவதாகப் பிறந்த மகளுக்குப் பிறகு அடியோடு மாறி விட்டான்.

ஆனால், தண்டிக்கப்பட்டது ஆராதனாவின் அப்பா கந்தவேலு மட்டும்தான்!! எந்தப் பெண்ணுக்காக அக்னி சாட்சியாகத் தொட்டுத் தாலி கட்டிய மனைவி, பெற்றெடுத்த பிள்ளைகளை விட்டுச் சென்றாரோ, அவள் அவரை விட்டு இறைவனடி சேர்ந்திருந்தாள்.

அவள் இறந்த வருத்தத்தில் அங்குச் சென்று கடைசி காரியத்தில் கலந்து கொண்ட அவரது உடன்பிறப்புகள், தம்பியுடன் சேர்ந்து கண்ணீர் விட்டு அழுததுடன், அவரது கடைசி காலத்தைக் கருத்தில் கொண்டு, மூத்த மனைவியுடன் சேர்த்து வைக்கத் திட்டமிட்டார்கள்.

சுகந்தா, அவரது விருப்பப்படி தானே இத்தனை வருடமும் வாழ்ந்து வந்தார். மீத நாள்களும் அவரது குடும்பத்துடன் இருந்து விட்டுப் போகட்டும். தனக்கு மூன்று பிள்ளைகளும், உடன் பிறந்தவர்களும் மட்டுமே போதும் என்று சொல்லி விட்டார்.

அதனால் அவரது உடன் பிறப்புகள் பேசாமல் முகத்தைத் திருப்பியும் கூட, அவர் கண்டு கொள்ளவில்லை. ஆர்த்தியும், சுகந்தாவின் உடன் பிறப்புகளும் இது விசயமாகப் பேசிப் பார்த்தும் கேட்க மறுத்து விட்டார். மகள்கள் அழைத்தாலும் அவர்களின் வீட்டிற்கு எப்போதாவது சென்று வருபவர், யாருக்கும் பாரமின்றி கணவர் கட்டிய வீட்டிலேயே, தனது இறுதி காலத்தை முடித்து விட ஆசைப்பட்டார்.

இரு மனைவிகள் இருந்தும் இப்போது யாருமற்று, திருமணம் செய்து கொடுத்த மகளின் ஆதரவில், அவரது வீட்டில் வசித்து வந்த கந்தவேலு, தண்ணீர் எடுத்துத் தரவும், கீழே விழுந்தால் ஓடி வந்து உடனே தூக்குவதற்கு கூட ஆள் இல்லாமல், தனிமையின் பிடியில் அகப்பட்டுத் துயரப்பட்டார்.

இளமையின் வேகத்தில், உணர்ச்சிகளின் பிடிகளில் அகப்பட்டு, சுயசம்பாத்தியம் இருக்கும் திமிரில், யாருடைய பேச்சையும் கேட்காமல், குடும்பத்தை உதறி விட்டுச் செல்லும் இம்மாதிரியான நபர்கள், அங்ஙனம் தவறு செய்யும் முன் ஒரு நிமிடம் அதே இடத்தில் உங்களது உடன் பிறந்தவளையும், பெற்ற தாயையும் நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் எப்படி உங்கள் மனம் துடிக்குமோ, அப்படித்தான் உங்களை நம்பி வாழ வந்திருக்கும் பெண்ணிற்கும் இருக்கும் என்பதையும் உணரத் தவறாதீர்கள்.

மனித வாழ்க்கை அன்பை வாரிக் கொடுத்துப் பெறுவதில் உள்ளதே தவிர, வீராப்பான வார்த்தைகளைக் கொட்டுவதற்கும், வேற்று மனிதர்களைத் தேடிச் செல்வதற்கும் அல்ல! அதைப் புரிந்து கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்பவர்கள், கந்தவேலுவை போலவே தங்களது கடைசி காலத்தில் அவதிப்பட நேர்வதுடன், காலதேவனின் கணக்கு அதற்குரிய நாளில் சரியான தண்டகளையும் பெற்றுத் தரும் என்பதையும் மறக்க வேண்டாம்!!

     ***சுபம்***

அன்பான வாசக நண்பர்களே, அருமை எழுத்தாள தோழமைகளே, இதுவொரு நிஜமும் கற்பனையும் கலைந்த புனைவு. வாசித்து விட்டு தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்.

இதுவரை தொடர்கதையின் அத்தியாயங்களை தொடர்ந்து வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்🙏🙏🙏

10 thoughts on “அக்னி சாட்சி எபிலாக் : 22”

 1. Pingback: அக்னி சாட்சி இறுதி அத்தியாயம் : 21 - Praveena Thangaraj Novels

 2. Kalidevi

  Aaradhana bayanthathukum oru karanam iruku santhosh apadi nadanthukittathukum oru karanam iruku aaradhana athu vayasu la vantha matram nu purinji kitta aana santhosh unamaiya virumbi irukan ipo virumbinavalikaga thurama poran ava nalla irukanumnu rendu per ninaipum crt than. Ithula arjun alaga wife ah purinjikittan ella unami therinji entha purushan ipovum ippadi paaatha kamipan athuku oru kodupanai venum. Intha kandha velu mari aalungalum irukanga athukaga ellarum apdiye iruka matanga athuku undana punishment kedachiduchi. Niraiva iruku ending . Congratulations

  1. Avatar

   ரொம்ப ரொம்ப சந்தோசம் சகோதரி.

   உங்களது ஒவ்வொரு அத்தியாயத்திற்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ள கருத்துகளுக்கும், விமர்சன பதிவிற்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

 3. CRVS 2797

  பாவம் சந்தோஷ்..! சரியான புரிதல் இல்லாததால், அவனோட காதல் கானலாயிடிச்சு.

  1. Avatar

   மிக்க மகிழ்ச்சி

   தங்களின் அழகான கருத்துப் பகிர்விற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  1. Avatar

   ஒவ்வொரு அத்தியாயத்திற்கு கீழேயும் தனித் தனியாக கருத்துப் பரிமாறியதற்கும், தொடர்கதையை வாசித்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *