Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 10

ஆராதனாவின் மனம் ஆற்றாமையில் துயர்வுற, அழுது கொண்டிருந்தவளால் உடனடியாக அதிலிருந்து மீள முடியவில்லை. மனைவியின் கண்ணீர், ஏக்கத்தை உணர்ந்து அவளை அணைத்து வருடிக் கொடுத்தவன், அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரச் சிரமப்பட்டான்.

அவள் தேம்பி தேம்பி அழுவதைப் பார்க்க முடியாமல், மனைவியை மார்புற தழுவி இயல்பிற்கு கொண்டு வர முயன்றான். அவள் சற்று நேரத்திற்குப் பிறகு ஓரளவு சரியாகியதும், கணவனின் இறுகிய அணைப்பில் இருப்பதை உணர்ந்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவனை விட்டு விலக முயன்றாள். அவன் விடாமல் இறுக்கத்தையும், வருடலையும் தொடரவும், அவனை விட்டுச் செல்வதிலேயே இருந்தாள்.

“ஏன் இப்படி உன்னைப் போட்டுக் கஷ்டப்படுத்துறே? உன்கிட்டே எல்லாரும் நல்ல விதமா தானே நடந்துக்கிறாங்க” என்றான்.

 அவள், அவனது பிடியிலிருந்து விலகிச் செல்வதிலேயே இருக்கவும், “ஆராதனா! நான் உன்னை எதுவும் செஞ்சுடல. பிறகும், ஏன் இப்படி நடந்துக்கறே? நாளைக்குக் காலையில உங்க வீட்டுக்குப் போகணும். எதையும் போட்டு உழப்பாம நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என்றான்.

 அந்த வார்த்தைகள் மட்டுமே அவளின் மனதில் பதிந்ததே தவிர, அவனது அக்கறையான நடவடிக்கையோ, பேச்சுக்களோ அவள் செவியை எட்டவில்லை. அர்ஜூன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமல், அவள் அவனை விட்டு விலகிப் படுக்கையறைக்குள் சென்று, படுக்கையில் சுருண்டு கொண்டாள். அவளைப் பின் தொடர்ந்து வந்து அவளையே பார்த்தவன், மனைவியின் மனநிலையை முழுவதுமாகச் சரி செய்வதற்கு, ஆவன செய்ய முடிவு செய்தான்.

ஆராதனா விழிகளை மூடிக்கொண்டு படுத்தாலும், அவள் உள்ளம் நடந்த எதையுமே மறக்க முடியாமல் அவதியுற்றது. பெற்ற தாய்க்காகத் திருமணம் செய்தது, இப்போது அவளைப் பெரும் துயரத்தில் மாட்டி விட்டது.

அன்றே திருமணம் செய்யமாட்டேன் என்று அவரிடம் உறுதியாகக் கூறி இருக்க வேண்டுமோ? என்று அவள் உள்ளம் படபடத்தது. காரண காரணமற்று அடிக்கடி கண்களில் வடிகின்ற கண்ணீர், அவளைக் கோழையாகக் காட்டியது.

எப்போதடா விடியும் என்று கொட்ட கொட்ட முழித்துக் கிடந்தவள், பொழுது விடிந்து விட்டதை அறிந்து, அதிகாலையிலேயே எழுந்து குளியலை முடித்து, தாய் வீட்டிற்குச் செல்லத் தயாராகி விட்டாள்.

மனைவியின் கண்ணீரையும், ஏக்கமான மனதையும் கண்ட அர்ஜூன், அம்மா பாக்கியலட்சுமி கூறிய ஒருசில வார்த்தைகளையே தாங்க முடியாமல் அழுகிறாள் என்றால், அவள் உள்ளம் எத்தனைப் பலவீனப்பட்டு இருக்கும் என்று அவளுக்காக வருந்தினான்.

அவளை ஒரேயடியாக அதிலிருந்து மீட்டெடுப்பது கஷ்டம் ஆயினும், கொஞ்சம் கொஞ்சமாக அவளைச் சரி செய்யலாம் என்று திட்டமிட்டான். மெதுவாகச் சரிந்து அவள் அருகில் சென்று மூடிய விழிகளையும், வாடிப் போயிருந்த முகத்தையும் பார்த்தான். பார்த்ததும் அவன் உள்ளம் துடித்தது. அதை அப்படியே, தன் மார்பில் பொத்திக் கொள்ள பேராவலாக இருந்தது.

அவளை நினைத்தபடியே படுத்திருந்தவன், ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, வெளியே கேட்ட சத்தத்தில் லேசாகக் கண்களைத் திறந்தான். கொட்டிலில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாடுகளின் சத்தமும், பேச்சுக் குரலும் செவியில் மோதியது

அருகில் படுத்திருந்த மனைவியைக் காணாமல், அங்கு வெற்றிடமாக இருப்பதைக் கண்டு, அவள் எழுந்து கீழே சென்று விட்டதாக எண்ணினான். தானும் எழுந்து சென்று ஜன்னல் புறமாக நோட்டமிட்டான்.

ஆராதனா, கன்றுகளின் அருகில் நின்று தடவிக் கொடுத்தபடி இருப்பதும், வெகுநாள் பழகியது போல அது அவளை ஒட்டிக் கொண்டு நின்ற விதமும் பார்க்க, கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

வீட்டில் நபர்கள் நிறைய பேர் இருப்பதாலும், ஹோட்டலுக்கும் தேவையான சுத்தமான கெட்டித் தன்மை நிறைந்த பாலை பயன்படுத்தும் பொருட்டும், பத்து பெரிய பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பராமரித்துக் காலை மாலை இரு நேரமும் பாலை வீட்டிற்கும், பணி புரியும் இடத்திற்குக் கொண்டு வரவும் தனியாக இருவரையும் நியமித்து இருக்கிறான் அர்ஜூன்.

அவனும் எழுந்து குளியலறைக்குள் சென்று விட்டு, இடுப்பில் லுங்கியை சரியாகக் கட்டிக் கொண்டு, கையில் பல் துலக்கும் தூரிகை, கழுத்தைச் சுற்றி தொங்கிய வெண்ணிற துவாலை, கையில்லாத பனியனுடன், மார்பில் கிடந்த நீளமான சங்கிலியுடன் கீழே சென்றான்.

பால் கறந்து கொண்டிருந்தவன், அவனைப் பார்த்ததும் பேச்சு கொடுக்க, அவனும் பதிலளித்தபடி இருந்தான். மகனின் பார்வை மனைவியின் மீது இருப்பதையும், அவள் பால் கறப்பதையே உன்னிப்பாகக் கவனித்து இருப்பதையும் கண்டு, இதழ்கள் மலரப் புன்னகைத்து பால் கறந்து முடிந்ததும், அதைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்குச் செல்ல முயன்றார் பாக்கியலட்சுமி. ஆனால், அவனோ அம்மாவை நிற்க வைத்து, பசுமாடுகளைப் பராமரிப்பவனிடம் கொண்டு போக உத்தரவிட்டான்.

“வயசான காலத்துல எதையும் செய்யாம சும்மா இருங்கன்னா கேட்கிறது இல்லயா?” எனவும், அவர் சிரித்தார்.

ஆராதனா, அத்தனை நேரமாகக் கணவனைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்தாள். 

தொலைக்காட்சியில் கிராமப் பகுதிகளைக் களமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் வருகிற நாயகனின் எளிய தோற்றம், குணாதிசயம், பேச்சுக்கள், நடைமுறைகளைப் பார்த்துப் பல முறை ரசித்து இருந்தவளின் கண்ணுக்கு, அர்ஜூனும் அப்படியே தெரிந்தான் போலும்!

அவனது கண்கள், தான் பார்ப்பதைக் கவனித்து விடாமல் அவள் நோக்க, ஓரக்கண்ணால் அவளைப் போல் அல்லாமல், நேரடியாகவே மனைவியைப் பார்த்தவனின், உதடுகள் குறுநகை புரிந்தன.

அத்தனை நேரமாக மேலும் மூவர் நின்றதால், தைரியமாக அங்கு நின்றவள், தனியாக அவன் முன்பு நிற்க முடியாமல், தானும் சென்று விட முயற்சிக்க, அவனது கிண்டல் கலந்த பேச்சும், குறும்பு கலந்த வாயாடலும், அவளை அடுத்த அடியை எடுக்க விடாமல் செய்தது.

“இன்னைக்கு என்ன காலையிலேயே கண்ணு குட்டி ரொம்பவும் குஷியா இருக்காங்க?”

அது அவனைப் பார்த்து, “ம்மா…” என்றதும், “ஓ! உங்க அம்மாவைப் பார்த்த குஷியா?” என்று கேட்டான்.

அது அதனுடைய அம்மாவின் முகத்தைப் பார்த்தது. பால் பாத்திரத்தை வீட்டிற்குள் வைத்தவன், வெளியே வந்து கன்றுகளைப் பிடித்துத் தனியாகக் கட்ட முயன்றான். அது மறுபடியும் சத்தமிட்டது.

“ஏய் செல்வராசு! கொஞ்ச நேரம் குட்டிகளை அதுக அம்மா கிட்டேயும் விடு. நமக்குத் தேவையானதை எடுத்துட்டே இல்ல? வயிறார பசியாறட்டும்”

“அப்புறம் மொத்த பாலையும் குடிச்சிட்டா, சாயந்திரம் கறக்க அளவு குறைஞ்சுடுமே?”

அவன் தலையாட்டிக் கொண்டே, “முதல்ல கொஞ்ச நேரம் பசியாற விடு. நாளைக்கு தாயை விட்டுப் பிரிச்ச பாவம் நமக்கு வேணாம். குறைவா இருந்தாலும் அட்ஜெட்ஸ் பண்ணிக்கலாம்” என்று கூறியதும், ஆராதனாவின் பார்வை அவனிடம் சென்றது.

“சரிங்கய்யா” என்றவன், தனது வேலையைப் பார்க்கச் சென்று விட, “ஏய் கண்ணுக்குட்டி!! அம்மாவையும், மகளையும் பிரிச்சு வச்ச பாவம் எனக்கு வேணாம். முழு நேரமும் அவர்களோடு இருக்க முடியாட்டாலும், கொஞ்ச நேரமாவது சந்தோஷமா இரு!” என்றான்.

அவன் தன்னைத் தான் கூறுகிறான் என்று தெரியவும், முகத்தைத் திருப்பிக் கொண்டு, வீட்டை நோக்கி நடந்தாள் ஆராதனா.

“பார்த்துப் பார்த்துச் சுளுக்கிடப் போகுது. பிறகு நான்தான் வந்து அந்த இடத்துல உள்ள சுளுக்கை எடுத்து விடணும்”

அவள் திரும்பிப் பார்த்து அழகு காட்டினாள்.

வினோதினியைப் பார்த்தவன், “அண்ணி! ராத்திரியெல்லாம் சரியா தூக்கமில்லாம கண்ணெல்லாம் எரியுது. ஒரே பக்கமா படுத்ததில் முகுது வலிக்குது. அம்மா எங்கே இருக்காங்க. கண்ணுகுட்டி அது அம்மாவோட சந்தோஷமா இருக்கற மாதிரி, நானும் என் அம்மாவோடு கொஞ்ச நேரம் இருக்கேன்” என்றான்.

 வினோதினி புரியாமல் பார்த்துவிட்டு, ஆராதனாவின் முறைப்பைக் கண்டு அவளைத் தான் சொல்லுகிறான் என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்தாள்.

 “அம்மா! இந்த முதுகுப் பக்கமும், தோளையும் கொஞ்சம் சரி பண்ணி விடுங்க”

 பாக்கியலட்சுமி வந்து நின்று, “உனக்குத் தான் இப்போ கல்யாணமாகி பொண்டாட்டி வந்தாச்சுல்ல. இனிமேல் எதுவா இருந்தாலும் அவகிட்டே கேளு! சின்னப் பிள்ளை மாதிரி ‘அம்மா, அம்மா’ன்னு ஏலம் போடாதே” என்றார்.

“அப்போ, பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, உங்ககிட்டே எதுவுமே கேட்க கூடாதா?”

“ம்ம்… அவகிட்டே கேட்டு வாங்கி சாப்பிட்டு, அக்கறையோடு உன்னைப் பார்த்துக்கவும், நீ அவளை அன்பாகவும், பத்திரமாகவும் பார்த்துக்கவும், ஒருத்தருக்கு ஒருத்தர் இணை பிரியாம சந்தோஷமா இருக்கணும்னு தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கு. பொண்டாட்டின்னு ஒருத்தி உரிமையோடு வந்த பிறகும், அடுத்தவங்க கிட்டே கேட்டு செஞ்சு கொடுப்பதுக்கு இல்ல…” என்றவர், 

பெரிய மருமகளைப் பார்த்து, “அவங்க ரெண்டு பேரும் விருந்துக்கு போயிட்டு வந்ததும், அவனைக் கவனிக்கும் முழு பொறுப்பையும் அவன் பொண்டாட்டியே பார்க்கட்டும். நீங்க யாரும் அவங்களுக்கு எதுவும் செஞ்சு கொடுக்காதீங்க” என்றார்.

வினோதினி முறுவலித்தபடி “டபுள் ஓகே அத்தை!!” என்றாள்.

அவனது பார்வை மனைவியிடம் சென்றது. அவள் புடவையின் முந்தானையை திருகியபடி இருந்தாள்.

 “நேரமாகுது, சீக்கிரம் ஆராதனாவையும் கூப்பிட்டு அவங்க வீட்டுக்குக் கிளம்பு! பாவம், அவள் முகம் நேத்தே வாடிப் போயிற்று” என்றார்.

 அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க திராணியில்லாமல், தலை குனிந்து நின்றாள் அவனது மனையாள்.

 “நம்ம வீட்டுப் பழக்கம் அவளுக்குத் தெரியாது. அம்மா, அக்கான்னு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து வந்தவள் அவள்! இனி நீதான் எல்லாமுமா இருந்து அவளைப் பார்த்துக்கணும்” என்று மகனிடம் எடுத்துக் கூறினார்.

தாயின் பெருந்தன்மையை நினைத்து புன்னகைத்தவன், அவரது பேச்சுக்களை கேட்டும் நிமிர்ந்து பார்க்காமல் இருக்கும் மனைவியை பார்த்து, அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.

வினோதினியிடம் பெற்றுக் கொண்ட காஃபி கோப்பையுடன், அன்றைய தினசரியில் மூழ்கி இருந்தவனிடம்,  இளவரசு வந்து வேலை விசயமாகப் பேசிவிட்டு சென்றான்.

 அவள் கணவன் புறப்படாமல் ஒரே இடத்தில் இருப்பதைக் கண்டு முறைத்தாள்; முனகினாள்; மனதிற்குள் திட்டினாள்.

அவன் கேளாதது போலிருந்து, அண்ணியின் அழைப்பில் எழுந்து சென்று தயராகி வந்தான்.

திருமண விருந்திற்குச் செல்வதற்கு முன், மனைவியுடன் சேர்ந்து பெற்றோரிடம் ஆசி பெற்றவன், தங்களது கடையில் உள்ள சாதனங்களில் சிலவற்றையும் காரில் ஏற்றிக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்றான்.

இன்னும் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக வீட்டிற்குப் போகப் போகும் மகிழ்ச்சி ஆராதனாவிடம் காணப்பட்டது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்து வேகமாக வீசிய தென்றல் காற்றை சுகமாக உள்வாங்கினாள். ஆனால், அங்குச் சென்ற பிறகோ…

சுகந்தா மகள் வருவதாகக் கூறியதால், வீட்டு வேலைகளில் மூழ்கி இருக்க, அவளும் புன்முகமாக வந்து சேர்ந்தாள்.

நேற்று முதல் சோகச்சித்திரம் போல் இருந்தவள் இப்போது, முகம் மலர காணப்பட்டாள். தாயிடம் சற்று நேரம் பேசிவிட்டு, தமக்கையை பற்றியும் விசாரித்தாள்.

மருமகனிடம் சிறிது நேரம் பேசியவர், அவர்களைத் தனியாக விட்டுச் சென்று விட, அவனைக் கவனிக்கும் முழுபொறுப்பும் ஆராதனாவின் வசம் ஆகியது.

 அவளது அம்மா, மகளின் சிணுங்கல், முறைப்பு, மறுப்பு எதையும் கண்டு கொள்ளாமல், மருமகன் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளுமாறு துரத்தி விட்டார்.

அதையும் மீறி வந்தால், “மருமகனுக்கு ஜூஸை கொண்டு கொடு. பெட்டியில் இருக்கும் அச்சு முறுக்கு, அதிரசத்தையும் எடுத்துக் கொடு! அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கவனி.

 நீ இங்கேயே இருந்தா அவர்கிட்டே யார் பேசி வாங்கி இருப்பது? உன் அக்கா, எப்படி தன் கணவரிடம் நடந்துக்கிறான்னு பார்த்திருக்கே இல்ல, நீ மட்டும் ஏன் இப்படி மக்கு மாதிரி இருக்கே?” என்றார்.

“அந்த டிவி சனியனை பார்த்துட்டு உம்முனு இருக்காம, அதை ஆஃப் பண்ணி போட்டுட்டு, அவர்கிட்டே பேசிட்டு இருக்க முடியாதா?” என்று துரத்தினார். 

“அங்கே வீடு புள்ளா மனுஷங்களும், அவரோட வேலையும் இருப்பதால், பகல் நேரத்துல அவர் பக்கத்துலயே போக முடியாது. இங்கே யார் உங்களுக்குத் தொந்தரவு தருவது போல இருக்காங்கன்னு, தனியா உட்கார்ந்து இருக்கே? இப்படி தான் அங்கேயும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருப்பியா?” என்று மிரட்டி துரத்தி விட்டார்.

அவள் உதட்டைப் பிதுக்கியபடி, “ம்மா… என்னைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லயா? உங்களைப் பார்க்கணும். அக்கா கிட்டே பேசணும்னு நான் ஆசையோடு வந்தா, இப்படி துரத்தி விடுறீங்களே…” என்று குறைபட்டாள்.

 அவளது பேச்சை சட்டை செய்யாமல் அவர் இருக்க, “இதெல்லாம் ரொம்ப தப்பு. அக்கா வந்ததும் சொல்லிக் கொடுத்துருவேன்” என்று பதிலுக்கு மிரட்டினாள்.

‘அக்கா’ என்றதும் அவர் உள்ளத்தில் ஒரு வலி வந்து போனது. மாமியார், நாத்தனார், கணவரிடம் மாட்டிக் கொண்டு அவள் எப்படி அவதிப்படுகிறாளோ? சிறு பிள்ளைகளை என்ன சொன்னார்களோ? என்று அவர்களுக்காக மனம் வருந்தினார். 

இருப்பினும், அவள் ஆராதனா வந்திருப்பதை அறிந்தால், இங்கு வந்து நாத்தனார் வீட்டில் நடப்பதை சொல்ல, இவளோ காலில் சலங்கை கட்டாத குறையாக ஆடத் துவங்கி விடுவாள். அதனால்  இவளிடம் இனிமேல் எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று நினைத்தார்.

 அம்மாவை முறைத்தபடி அவள் அர்ஜூனுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்ல, சோஃபாவில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தவன், இருவரின் பேச்சுக்களையும் கேட்டு சிரித்தபடி இருந்தான்.

மதிய நேரம் மகளையும், அவள் கணவன் அருகில் அமர வைத்து, இருவரையும் வயிறார உண்ணச் செய்தார். உண்டு முடித்ததும் அவளது அறைக்கு அழைத்துச் சென்று சற்று நேரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்.

அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், முன்புற வாசலை ஒட்டிய அறையில் தானும் உணவை முடித்துவிட்டு வந்து படுத்துக் கொண்டார்.

ஆராதனாவின் அறைக்குள் நுழைந்த அர்ஜூன், அறையின் தோற்றத்தையும், உள்ளே காணப்பட்ட படுக்கையையும் பார்த்தபடி நின்றான்.

அந்த அறை அவன் வீட்டில் உள்ள அறையை விடவும் அளவில் சிறியதாக இருந்தது. படுக்கையும் சிறியதாகவே காணப்பட்டது. அதில் படுத்தால் இருவரின் மேனியும் ஒருவர் மீது மற்றொருவர் உரசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். அல்லது, தரையில் தான் படுக்க வேண்டும் என்று நினைத்தவன், சிறு முறுவலுடன் சட்டையை மாற்றி விட்டுப் படுக்கையில் சென்று சாய்ந்தான்.

அவனுக்குப் பின்னாடியே வந்து, தரையில் கோரைப் பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள் ஆராதனா.

அன்று முழுவதும் அங்கேயே இருந்தவன், மறுநாள் அவளது வீட்டிற்குச் சற்று தொலைவில் உள்ள ஆலயத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்து சினிமா பார்க்கப் போனார்கள். மாலை உணவை ஹோட்டலில் முடித்துவிட்டு, இரவு நேரம் வீட்டிற்கு வந்தார்கள்.

மறுநாள், அண்ணன் மட்டுமே அதிகப்படியான வேலைப் பளுவில் மூழ்கி இருப்பதால், குழித்துறைக்குச் செல்லத் தயாரானான் அர்ஜூன். ஆராதனாவிற்கு அவனுடன் செல்வதற்கு மனமே இல்லை. வரும்போது மாமியார் சொன்ன வார்த்தைகள் அவள் மண்டையைக் குடைந்தன. அங்குதான் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று இங்கு ஓடி வந்தால், அவளது தாயாரோ ‘மருமகன், மருமகன்’ என்று அவளது நிம்மதியை பறிக்கிறார்.

மீண்டும் அங்குச் சென்றால் அவனைப் பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பும் தனக்கு வந்து விடுமோ எனப் பயந்து, இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவதாகச் சொன்னாள்.

அவள் அம்மா, “அப்படி கல்யாணமான உடனே, கணவரை விட்டுத் தனியா இருக்கணும்னு நினைக்கக் கூடாது. எப்போ வந்தாலும் மருமகனோடு சேர்ந்து வரணும். தங்கணும். அவரோடவே கிளம்பி போகணும். அதுதான், ஒரு நல்ல மனைவிக்கு அடையாளம்!” என்று மருமகனுடன் அனுப்பி வைத்து விட்டார்.

அவள் அழகு காட்டியபடி நடக்க, ‘இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருக்காளே… கல்யாணத்துக்கு முன்னாடி தான் புரிஞ்சுக்காம இருந்தா. இப்பவும் அப்படியே வா இருப்பாங்க? இப்படியொரு தங்கமான குணமுடைய மாப்பிள்ளை அவளுக்குக் கிடைக்க கொடுத்தல்லவா வைத்திருக்க வேண்டும்?’ என்று எண்ணினார்.

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் …

தொடருக்கான அடுத்த பதிவு இதோ…https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-11/

8 thoughts on “அக்னி சாட்சி”

  1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

  2. CRVS2797

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைங்கிற மாதிரி, நல்ல புருசன் கிடைச்சா, அவன் அருமையை புரிஞ்சிக்காம போட்டு மிதிப்பாங்க. அதே அடிக்கிற, மிதிக்கிற புருசன் கிடைச்சா, வாயை மூடிட்டு ஒரு ஓரமா விழுந்து கிடப்பாங்க இவளுங்க எல்லாம்.
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *