Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 11

வீட்டு வாசலில் காரை நிறுத்திய அர்ஜூன், பணியாளை அழைத்து ஆராதனாவின் சாதனங்களையும், மாமியார் வீட்டில் கொடுத்து விட்டதையும் வீட்டிற்குள் கொண்டு போகச் சொல்லி விட்டு, அண்ணியிடம் தகவல் தெரிவித்து உடனே அங்கிருந்து சென்று விட்டான்.

ஆராதனா முகம் வாடக் கூடத்தில் நின்றிருக்க, மாமியாரும், வினோதினியும் அருகில் சென்று அவளது வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டதுடன், அவள் சுகந்தாவை நினைத்து அப்படி இருப்பதாக எண்ணிக் கொண்டார்கள்.

இரவு பத்தரை மணிக்குப் பிறகு வீட்டிற்கு வந்த அர்ஜூன், அண்ணியிடம் பேசிவிட்டு மனைவியைக் காணச் சென்றான். அவள் உறக்கத்திலும் முகம் வாட இருப்பதைக் கண்டு, வாஞ்சையுடன் கூந்தலை கோதி விட்டான்.

‘பாவம்! எப்பவும், சோகம் வழியும் முகத்தோடும், கவலையோடும் இருக்கா. வேலைகள் அதிகப்படியா இருப்பதால், அவளோடு நேரத்தைச் செலவிடவும் முடியல. வீட்டில் உள்ளவர்களோடும் பேசினாளோ என்னவோ?’ என்று நினைத்தபடி, உடைமாற்றி விட்டுக் கீழே சென்று உணவை முடித்து வந்து, அவள் முகத்தைப் பார்த்தபடியே உறங்கிப் போனான்.

என்றும் காலையில் ஆறு மணிக்கு முன்பாகத் தூங்கி எழுந்து விடும் ஆராதனா, திருமணமாகி கணவன் வீட்டிற்கு வந்தபிறகும் அதே வழக்கத்தைக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் ஒன்பது மணிவரைக்கும் வீட்டில் இருப்பதால், அவன் முன்பு குளித்து உடைமாற்ற சிரமமாக இருக்கும் என்பதால், அவன் தூங்கி எழுவதற்கு முன்பு புறப்பட்டுக் கீழே சென்று விடுவாள். இன்றும் அதுபோல குளியலறையிலிருந்து வெளியே வந்தவள், ஈரக் கூந்தலை துவாலையில் துடைத்தபடி, புடவை முந்தானையை மொத்தமாக மேலே போட்டுக் கொண்டு நடந்து வந்தாள்.

கதவைத் திறக்கும் சத்தத்தில் லேசாகக் கண்களைத் திறந்த அர்ஜூன், மனைவியைப் பார்த்ததும் அசையாமல் கிடந்தான்.

ஆராதனா அவனை ஒருமுறை பார்த்து விட்டுப் புடவையைச் சரி செய்தாள். கூந்தலை உலற விட்டுக் கிளிப்பிற்குள் அடக்கி, கீழே விரித்து விட்டாள். லேசான ஒப்பனையுடன் அர்ஜூன் எழுவதற்கு முன்பு கீழே போகத் தயாராகியவள், அவன் உறங்காமல் தன்னையே பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்ணாடி வழியாகப் பார்த்ததும், இத்தனை நேரமாகத் தூங்காமலா இருந்தான்? என்று திகைப்புடன் நோக்கினாள். இன்று மட்டுமா? தினமும் இப்படித்தானா? என்ற கேள்விக்கான பதில் அவளிடம் இல்லாவிட்டாலும், அவனது பார்வையின் வீரியமும், உதட்டில் உறைந்த புன்னகையும் அவளைத் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

கணவனின் விழிகளைப் பார்த்திருந்த மை விழியாள், அவன் தன்னைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே எழுவதைக் கண்டு, அவசரமாகக் கீழ் நோக்கி ஓடி விட்டாள்.

மனைவியின் நடவடிக்கையில் சிரித்துக் கொண்டே எழுந்த அர்ஜூன், தானும் சுத்தமாகி விட்டுக் கீழே வந்தான். அண்ணனிடம் தீபாவளி வரப் போகும் நேரம் என்பதால், பணியாளர்களுக்குக் கொடுக்கக்கூடிய சலுகைகள், வரவுச் செலவு, வியாபார விசயமாகப் பேசிக்கொண்டு இருந்தான்.

ஆராதனாவிடம் அவனுக்குக் காஃபியை கொடுத்து அனுப்பினாள் வினோதினி.

அவள் தயங்கியதும், “வேலை அதிகமா இருப்பதால் அவனால் இன்னும் சில நாளுக்கு வீட்டுல இருக்க முடியாது. அதையும் மீறி இருக்கறப்போ, அவனோடு இருந்து அன்பா கவனிச்சுக்கோ” என்றாள்.

‘என்ன பெரிய வேலை? சாதாரண ஹோட்டலில் உள்ள எடுபிடி வேலை. அதைப் பார்க்கத்தான் அவரோட அண்ணன் இருக்காரே… அவரின் ரெண்டாவது அண்ணனும், அண்ணியும் எப்படி இருக்காங்க? இவங்களோ பட்டிக்காட்டான் மாதிரியில்ல நடந்துக்கிறாங்க?’ என மனதிற்குள் நினைத்து, அவளிடம் பெற்றுக் கொண்ட காஃபி கோப்பையுடன் நடந்தாள்.

மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். பேச்சு அண்ணனிடம் இருந்தாலும், உதட்டில் இருந்த காஃபி அதைத் தயாரித்தது அண்ணி என்று கூறியது. பிள்ளைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார் செய்வதற்கு சென்ற வினோதினி, அவளிடம் யாராவது ஏதாவது கேட்டால் பார்த்துக் கொள்ளவும் வலியுறுத்தினாள்.

அஸ்மிதா கல்லூரிக்கு நேரமாகியதாலும், அர்ஜூன் வேலைக்குச் செல்லும் முன் உணவருந்தவும் வந்து அமர்ந்தான்.

“அண்ணி!!” என்ற சத்தத்தில், வினோதினியின் குரல் மட்டுமே பதிலாக ஒலித்தது. பாக்கியலட்சுமி உணவை எடுத்து அவர்கள் இருவருக்குமாகக் கொடுக்கச் சொன்னதும், ஆராதனா அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடந்தாள். ஆனாலும், அவள் உள்ளம் தன்னைப் பார்த்தும் ‘நேரமாகுது. சாப்பாட்டை எடுத்து வா’ என்று கூறாமல், யாரோ போல விலக்கி நிறுத்தி விட்டு அண்ணியை தானே அழைக்கிறான். பிறகு எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.

அவன் உணவை முடித்ததும் மனைவியிடம் பேச முயல, அவள் நிமிர்ந்து பார்க்காமல் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வெளியே சென்று விட்டாள்.

அவளது முகவாட்டத்தை அளவெடுத்தபடி, “ஏன் இப்படி இருக்கே? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” என்று கேட்டான்.

அவள் உம்மென முகத்தை வைத்தபடி இருந்ததும், அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

அது சாதாரணமாக இருப்பதைக் கண்டு, “ஆராதனா! கொஞ்சம் வேலை அதிகமா இருந்ததால் சீக்கிரமா வீட்டுக்கு வர முடியல. இன்னைக்கு முடிந்தவரை சீக்கிரம் வரப் பார்க்கறேன்” என்று உரைத்து, அவள் நாடியைப் பற்றி உயர்த்தினான்.

அவள் இரு கண்களையும் பார்த்தபடி, “இன்னும் ரெண்டு நாளில் வேலை விசயமா உங்க ஊருக்குப் பக்கமா போக வேண்டி வரும். அன்னைக்கு நீயும் புறப்பட்டு இருந்தா, அத்தை வீட்டுல கொண்டு விட்டுட்டு வர்றேன். நாலு நாள் அங்கேயே நின்னுட்டு வா!” என்றான்.

அவளது விழிகள் அசையாமல் கணவனைப் பார்த்தன. அவன் ‘ஆமாம்; பொய்யுரைக்கவில்லை’ என்பது போல கண்மூடித் திறந்தான்.

தொண்டையில் ஏதோ அடைத்தது.

“ஆராதனா! நீ என்கிட்டே பேசுறியோ இல்லையோ, வீட்டுல உள்ளவங்க மனசு கோணாம நடந்துக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அண்ணிங்க ரெண்டு பேரும் ஜவுளி எடுக்கக் கிளம்பியதும் நீயும் அவங்களோடு போயி உனக்கும், அத்தைக்கும், அண்ணி வீட்டுக்கும் தேவையானதை வாங்கிட்டு வந்துடு.” என்று சொல்லி, தனது ஏ.டி.எம். கார்ட்டை அவள் கையில் வைத்தான்.

“என்னால வர முடியாம போனாலும், நீ உனக்குப் பிடிச்சதா பார்த்து நல்ல விலையில் எடுத்துக்கோ! பணத்தைப் பற்றி பார்க்காதே. நான் ராத்திரி வந்து பார்க்கறேன்” என்றான்.

அவளால் வாய் திறக்க முடியவில்லை. பசை போட்டு ஒட்டியது போல மூடிக் கொண்டது. கண்களும் விடாமல் அவனையே நோக்கியது.

மனைவியின் பஞ்சு போன்ற கன்னத்தைப் பற்றிக் கொண்டு, “என்கிட்டே ஏதாவது சொல்லவோ, கேட்கவோ ஆசைப்படுறியா?” என்று கேட்டு, அவளது இல்லை என்ற பதிலைப் பெற்றுக் கொண்டவன், “அன்னைக்கு ஒரு நாள் ‘இதே அமைதியோடு கல்யாணத்துக்குப் பிறகு இருந்தா ரொம்ப நல்லது’ன்னு சொன்னதை, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கிறேன்” என்று குறும்பாக நகைத்தான்.

அவள் முகம் சிவக்க குனிந்து கொள்ள, மனைவியை அள்ளி அணைக்கும் ஆசையை அடக்கியபடி வீட்டிற்குள் வந்து, அம்மா, அண்ணியிடம் கூறியவன் காரிலேறி அமர்ந்தான்.

போகும் அவனையே பார்த்து இருந்தவளின் கண்கள் கலங்கி விட்டன. இத்தனை அக்கறையுடன் பேசுபவன், உண்மையாகவே நல்லவனாக இருப்பானா? இல்லை, தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்து விட்டு, மற்ற பெண்களைத் தேடி அலைபவனாகவும், வீட்டு நபர்கள் பேச்சைக் கேட்டுக் கொடுமை படுத்துபவனாகவும் இருப்பானா? எனத் தடுமாற்றமாக இருந்தது.

வினோதினி வந்தாள். “அர்ஜூன், உன்னையும் எங்களோடு கூப்பிட்டுப் போகச் சொல்லி இருக்கான். நீ சாப்பிட்டதும் தயாராகி வா! நேரமா போனால் தான் பிள்ளைங்க பள்ளியிலிருந்து வருவதுக்கு முன்னே வர முடியும்”

மதிய சமையல் எதுவுமே செய்யாமல் எப்படி போவதென அவள் முழிக்க, “அத்தை, மாமாவுக்குத் தேவையானது காலையிலே செஞ்சு முடிஞ்சுது. நீ வா!” என்றாள்.

அவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான உடைகளை எடுத்து வரத் தாமதம் ஆகும் என்பதால், காலையிலே வேகமாக வேலைகளை முடித்திருப்பது தெரிந்ததும், அவளுக்கு மனதை உறுத்தியது.

அன்று தாய் வீட்டிற்கு கிளம்பும்போது, மாமியார் கூறினார். ஆனால், அவரது பேச்சைச் செவி சாய்க்காமல் நடந்தது எத்தனை பெரிய தவறு என்று நினைத்ததும், ஒரு மாதிரி இருந்தது.

விசாலி கைக்குழந்தையை கூடக் கணவனிடம் விட்டு வீட்டு, வேலைகளில் மூழ்கி இருக்கிறாள். அப்படி இருக்க தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என மனம் வெதும்பினாள்.

ஆண்கள், பிள்ளைகள் அனைவரும் வெளியேறியதும் உணவை முடித்தவர்கள், பதினொரு மணியளவில் புறப்பட்டனர். அஸ்மிதா நேராக ஜவுளி கடைக்கு வந்து விடுவதாகக் கூறியதால், மற்ற அனைவரும் புறப்பட்டனர்.

அவளது சொந்தவூரான கோணத்திலும் இது போன்ற ஜவுளிக்கடைகள் நிறைய காணப்படுவதால், இங்கு எப்படிப்பட்ட உடைகள் வைக்கப்பட்டு உள்ளன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கும் இருந்தது.

பட்டுப்புடவை பிரிவிற்குச் சென்று தங்களுக்குப் பிடித்த விதமான உடைகளை அவர்கள் தேர்வு செய்ய, விசாலியின் மகனை வைத்துக் கொண்டு சுற்றிலும் பார்த்தபடி நின்றாள் ஆராதனா.

நீலம், பிங்க், வாடா, மெரூன், ஆரஞ்சு, மெஜந்தா… எனப் பல நிறங்களில் பட்டுப்புடவைகள் ஜொலித்தன. ஆனால், அவளுக்கு மெஜந்தா நிறத்தில் பச்சை நிற ஜரிகை வேய்ந்த புடவை மீதுதான் கண்ணாக இருந்தது. உதடுகளும் புன்னகையுடன் அப்புடவையை இடை விடாமல் ரசித்தன.

அதே புடவையைத் தனக்குத் தேர்வு செய்தாள். அம்மா, அக்கா, பிள்ளைகளுக்கும் வாங்கி விட்டு, கணவனுக்கு மட்டும் வாங்காமல் எப்படி போவதெனத் தடுமாறினாள்.

ஆண்கள் பகுதியில் நின்று விசாலி தன் கணவனுக்குத் தேர்வு செய்ய, அழகிய சாம்பல் நிறச் சட்டை ஆராதனாவின் கண்ணைக் கவர்ந்தது. அதையும், பிஸ்கட் நிறச் சட்டையையும் எடுத்து வந்து தனது உடையுடன் வைத்தாள். பேன்ட் அளவு பார்த்து வந்திருந்தாலும் சரியாக இருக்குமா என்று தெரியாமல், கருப்பு, சாம்பல் நிறத்தில் உள்ள ஜீன்ஸ் பேன்ட்டையும் எடுத்துக் கொண்டு, அளவு சரியாக இல்லாவிட்டால் மாற்ற வருவதாகவும் கூறினாள்.

விசாலியும், வினோதினியும் அவளைத் திரும்பிப் பார்க்காமல் தங்களுக்குத் தேவையானவற்றை தேர்வு செய்வதிலேயே இருக்க, அஸ்மிதாவும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

இருவரும் நாத்தனாருக்கு பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்வதையும், அவளது ரசனையை அறிந்து எடுப்பதையும் பார்த்து வியந்து போனாள்.

மாமியார், மாமனார், வீட்டில் பணிபுரியும் வேலைக்காரப் பெண் என்று அனைவருக்கும் வாங்கியதும், உணவருந்த சென்றார்கள்.

சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள உணவகத்திற்குள் சென்று அமர்ந்த பிறகே அது, இளவரசு நிர்வகித்து வருவது என்று தெரிய வந்தது. உடனே படாரென நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் சுற்று முற்றும் துழாவின. உணவகத்தின் தோற்றமும், இருக்கைகளையும் பார்க்கும்போது, பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இந்த உணவகத்தைப் பற்றியா அன்று சொன்னார்கள்? இதிலா அவனும் அண்ணனுடன் இணைந்து பணிபுரிகிறான்? இதற்கான வர்த்தகம், வியாபார ரீதியில் உதவுவதற்காகவா பெருமையடித்தான்? அத்தனை நேரம் புன்னகையுடன் இருந்தவளுக்கு ஏதோ ஒன்று எழுந்து, அவள் மனதைக் குடைந்தது. திருமணமாகி ஒரு வாரம் ஆகிவிட்டது எனினும், இன்னும் கூட அவனிடம் இயல்பாகப் பேசியிராதவளால், இதை எப்படி கேட்பது? என்றும் குழம்பியது.

அன்று ஏதோ சொல்ல முயன்றான். கேட்காமல் போனது பெரும் பிழையாகி விட்டது என்று தன்னையே கடிந்தாள்.

அனைவரும் உண்டு கொண்டிருக்க, அவளது எண்ணமோ கணவன் அர்ஜூனிடமே இருந்தது. விசாலியின் மகன் அவளைப் பார்த்துச் சிரித்தான். ‘அவசரப்படாதே சித்தி! இப்படி யோசித்து உன்னைக் குழப்புவதை விட, சித்தப்பாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை’ என்றானோ?

பதிலுக்கு முறுவலித்து, தானும் வேகமாக உணவை முடித்து அவர்களுடன் எழுந்து சென்றாள். வினோதினி கணவனின் அருகில் சென்று ஏதோ பேசினாள். அவன் புன்னகைத்தபடி பதிலுரைத்து அவர்களை அனுப்பி வைத்தான்.

ஆராதனா தானும் வீட்டிற்குச் செல்வதற்கு காரிலேறி அமர்ந்தாள். உண்மை நிலவரம் தெரியாமல் தலை வலித்தது. அதை மேலும் அதிகமாக்கும் பொருட்டு, மீண்டும் வாகனம் நின்றது. மற்றவர்கள் பேசியபடி இருக்க, வினோதினி மட்டுமே சாலையில் நடந்து சென்றாள்.

ஆராதனா காற்றாட வெளியே வந்து நின்று பார்த்தாள்.

ஒரு பெரிய கொட்டகை போன்ற அமைப்பும், அதன் மீது ஆஸ்பெட்டாஸ் போட்டு இருப்பதும் கண்ணில் விழுந்தது. வினோதினி அங்கு எதற்காகச் செல்கிறாள் என்று பார்த்தபடியே நின்று, ஏதோ ஒரு உந்துதலில் அவளும் சென்று, திடீரெனக் கேட்ட கணவனின் குரலில் அப்படியே நின்று விட்டாள்.

அவன் இங்கு எப்படி வந்தான்? வேலை வேலை என்று ஒரு நேரமும் வீட்டில் இருக்காமல் சதா ஓய்வற்று சுழலுபவன், இந்த இடத்தில் என்ன செய்கிறான்? மனம் பதைபதைத்தது. மெதுவாக எட்டிப்பார்த்துக் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

தீபாவளி வருவதற்கு முன்பு இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதால், அர்ஜூன் பணியாட்களில் ஒருவராகத் தானும் நின்று, அங்கு நடப்பதை கவனித்தான்.

மூன்று அடுப்பும் அதன் மீது பெரிய சட்டிகளும், அதன் உள்ளே பாதிக்கு மேலாக நிரம்பிய எண்ணையும், தகதகவென எரியும் விறகு கட்டைகளும் காணப்பட்டது. அவன் அதற்கு முன்பு நின்று ஏதோ செய்து கொண்டு இருந்தான். சுற்றிலும் பேச்சு சத்தமும், வேலை செய்யும் மும்முரமும் அவர்களிடம் காணப்பட்டது.

திருமணம் எனும் ஆசை இல்லாமல் இருந்ததால், கனவுகள் என்று எதையுமே வளர்த்துக் கொள்ளாமல் இருந்தவளுக்கு, கல்லூரி நாளில் நடந்த சம்பவம் கண்ணில் வந்து போனது. விழிகள் இரண்டும் சிவந்து விட்டன. அன்று கூறியது போலவே நடந்து விட்டதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கண்டிசன் எனும் பெயரில் தன் தலையில் தானே சேற்றை வாரி இறைத்து விட்டதாக எண்ணி மனதிற்குள் கதறினாள். உதடுகள் துடிக்க விழிகளில் வடிந்த நீருடன் அங்கு நிற்க முடியாமல் நடந்தவள், அவர்கள் பார்த்து விடாமல் முகத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டுக் காரிலேறி அமர்ந்தாள்.

வினோதினி வந்ததும் வாகனம் கிளம்பியது. கட்டிய மனைவி காரில் இருக்கிறாள் என்று தெரிந்தும் கூட வந்து எட்டிப் பார்க்காத அளவிற்கு, அப்படியென்ன கலெக்டர் வேலையா பார்க்கிறான்? சாதாரண பணியாள் அதுவும் அவனது கடைக்கு விற்பனை செய்யப்படும் தின் பண்டங்களை உற்பத்தி செய்யும் இடம். ஒரே ஒரு நிமிடம் வந்து பேசிவிட்டு போக முடியாத அளவிற்கு வேலை!! என்று நினைத்தவளின் உதடுகளில் ஒருவித இறுக்கம் குடிகொண்டது.

வீடு வந்து சேர்ந்தது. தான் வாங்கிய அனைத்தையும் கப்போர்ட்டில் வைத்து விட்டு, அவனது கார்ட்டை மேஜை அறையில் வைத்து விட்டுக் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

இயலாமையும், வாழ்வில் தோற்று விட்டது போன்ற எண்ணமும் கரைபுரண்டு ஓட, கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கண்ணீர் வடித்தாள். அவளது நினைவுகள் எங்கெங்கோ சென்றன. தான் நினைத்தது போன்று எதுவுமே நடக்காத விரக்தி அவளது நிம்மதியையும், சந்தோசத்தையும் பறித்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று விம்மினாள்; விசும்பினாள்; கண்ணீர் கடலில் மூழ்கித் தத்தளித்தாள். இறுதியில், உறக்கத்தை தழுவினாள்.

காலை முதல் ஏற்பட்ட அலைச்சலுடன், மன உளைச்சலும் சேர்ந்து கொள்ள அடித்துப் போட்டது போல உறங்கினாள்.

நேரம், இரவு ஏழு கடந்திருந்தது. செவியில் குழந்தை ராகுலின் அழுகுரல் கேட்டது. லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். விசாலியின் மகன் என்று தெரிந்ததும் எழுந்து குளியலறைக்குள் புகுந்து, சுத்தமாகி விட்டுக் கீழே வந்தாள்.

வினோதினியின் பிள்ளைகள் இருவரும் படித்துக் கொண்டு இருந்தார்கள். அருகில் அஸ்மிதா! அவர்களைப் பார்த்தபடி சோஃபாவில் சென்று அமர்ந்தாள். காஃபி வாசனை அருகில் வந்ததும் நிமிர்ந்து பார்க்க, வினோதினி சிரித்த முகமாகத் தெரிந்தாள்.

“கண்ணுல தூசு விழுந்ததால் கஷ்டமா இருக்குன்னு சொன்னியே, இப்ப பரவாயில்லயா?”

திடீரென இப்படி கேட்டதும் புரியாமல் பார்த்துப் பிறகே, “ஆமாம். இப்போ பரவாயில்லை” என்று தலையை உருட்டினாள்.

கணவனை அப்படியொரு தோற்றத்தில் பார்த்துக் கண்ணீர் விட்டவள், அதை அடக்க முயன்றும் முடியாமல் அவர்களிடம் மாட்டிக் கொள்ள, சாலையோரம் நின்றபோது வீசிய காற்றில் தூசுக்கள் கண்ணில் விழுந்து, உறுத்துவதாகக் கூறிய ஞாபகம் வந்தது.

“பசிக்குமே, சாப்பாடு எடுத்துட்டு வரவா?”

“இல்லை, வேண்டாம்”

“ம்ம்… மதியம் ஹோட்டல்ல சாப்பிட்டது நல்லா இருந்தது இல்லயா? நாம வெளியே போகணும் என்றதும் உன் பெரிய அத்தான் எல்லாரையும் அங்கே வர வச்சிட்டார். திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும், கணவனின் உழைப்பில் சாப்பிடறப்போ ஏற்படும் அலாதி சுகம் வேறு எதுவுமே இல்ல. அதிலும், அவங்களும், உன் கணவரின் உழைப்பும் தான் அந்த ஹோட்டலை இத்தனை வருஷமா நடக்க உதவியது. இல்ல, எப்பவோ மூடப்பட்டு இருக்கும்”

அவள் என்ன கூறுகிறாள் என்று புரியாமல் நோக்கினாள் ஆராதனா.

தொழில் போட்டியாளர்கள் திடீரெனப் புதியதாக வருபவர்களை வளர விடாமல் செய்வது, அவர்களை விடவும் தங்களைப் பன்மடங்கு பலம் உடையவராகக் காட்டிக் கொள்வது, ஏதாவது காரணத்தை முன்னிட்டு மட்டும் தட்டுவது, அவர்களிடம் பணிபுரிபவர்களுக்கு சலுகைகள் அதிகமாக வழங்குவது, எதிர்தரப்பு நபருக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்துவது என்று இருப்பதால், பலரின் தொழில்கள் விரைவில் நலிந்து போய் முடங்கி விடுகின்றன.

அண்ணனும், அப்பாவும் கஷ்டப்படுவதைப் பார்த்து இளம் வயதில் துடிப்புடன் களம் இறங்கியதால், இன்று இந்த நிலைமையில் இருப்பதாகக் கூறியவர், அர்ஜூனால் தான் இப்படியொரு வாழ்க்கை வாழ முடிகிறது. அவன் முன்பு யாருடைய பேச்சும் எடுபடாமல் போய் விடும் என்றார்.

அவள் திகைப்புடன் ஆச்சர்யமும் கலந்து காணப்பட்டாள்.

“உன் கணவனைச் சாதாரணமா எடை போடாதே! இந்த வீட்டில் உள்ள அத்தனை பேரில் அவன் தான் கடுமையான உழைப்பாளி. நாணயஸ்தன். சொன்ன வாக்குக்குக் கட்டுப்பட்டு நடப்பவன். அவனைக் கட்டிக்கிட்டே நீ எந்தக் குறையும் இல்லாம இருப்பே” என்றாள்.

ஆராதனாவின் மனதிற்குள் ஏதோ நெருடியது. இருந்தும் வாய் திறக்காமல் இருந்து கொண்டாள்.

மாமியார் வந்து அவளது உடைகளைப் பற்றிக் கேட்க, அவளும் அடக்கமாகவே பதிலளித்தாள்.

வேலைகள் அனைத்தும் முடிந்து, எட்டு மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தவன், அண்ணன் பிள்ளைகள் கேட்டதை கொடுத்ததுடன் அவர்களின் உடைகளையும் பார்த்து விட்டு, “எங்க அண்ணியின் தேர்வு எப்பவுமே சோடை போகாது” என்றான்.

விழிகள் மனைவியின் மீது படிந்து விலகின.

விசாலி மற்றும் வினோதினி இருவரும் தாங்கள் வாங்கிய அனைத்தையும் கூடத்தில் கொண்டு வந்து பரப்ப, ஒவ்வொன்றாகப் பார்த்தவன் மனைவியின் முகத்தை ஏறிட்டான்.

காலையில் பணிக்குச் செல்லும் முன்பு, ஏ.டி.எம் கார்ட்டை அவளிடம் கொடுத்து அனுப்பியும், அதிலிருந்து எதுவுமே வாங்கப்படாதது அவனை வாய் திறக்க விடாமல் செய்தது. தன்மீது இத்தனை வெறுப்பா? என்று எண்ணியவன் அமைதியாக அவளையே பார்த்தான். 

ஆனால், அவள் அவனைத் தனது கணவனாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், எப்படி அவன் பணத்தை தனக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் செலவு செய்வது என்ற எண்ணத்திலும், அவர்களுக்கு எடுத்ததை எப்படி அனைவர் முன்பும் காட்டுவதென்ற தவிப்பிலும் அமைதியாக நின்றாள்.

அப்படிப்பட்டவள், ‘கணவன்’ என்ற உறவு முறை இல்லாமல் வேறு யாராக நினைத்து, அத்தனை துணிகளையும் தனது பணத்தில் அவனுக்காக எடுத்து வந்தாள்? கணவன் இல்லை என்றால் அவன் யார்? எதற்காக அவன் வீட்டிலேயே தங்கி, அவனுடன் ஒரே அறையில், ஒரே படுக்கையில் தூங்குகிறாள் என்பதையும் உணரத் தவறினாள். விரைவில் இவை யாவும் உணரும் நாள் வரும்போது அவளது மனநிலை என்னவாக இருக்கும்?

அப்போது பாக்கியலட்சுமி மகனிடம், “அர்ஜூன்! தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்குப் போயிட்டு வா!” என்றார்.

அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.

“இந்த முறை நம்ம வீட்டுல தான் எல்லாருக்கும் தீபாவளி கொண்டாட்டம். வேறு எங்கேயும் போவதா இல்லை” என்று கூறியதும், அவளது விழிகளில் ஒருவிதமான உணர்வு வந்து போனது.

தொடர்தைக்கான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

தொடர்கதைக்கான அடுத்த பதிவு இதோ …https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-12/

7 thoughts on “அக்னி சாட்சி”

  1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

  2. Kalidevi

    Vai vitu pesina thana ena panran ena vela pakuran eppadi pattavanu therium pesamale iruntha konjam purinjika paruma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *