Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 14

உடையைக் கூட மாற்றாமல் சுளித்த புருவங்களுடன் படுத்து இருந்தான் அர்ஜூன். மாடிப் படியேறி வந்தது அவன் கால்வலியை அதிகப்படுத்தியது. வலது கையை மார்பின் மீது வைத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தான்.

கணவன் உறங்கி விட்டதை தெரிந்து கொண்டு, மெல்லிய நீலநிற வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்தாள் ஆராதனா.

அவனது வாடிய முகத்தைக் கண்டதும், கண்களில் நீர் அரும்பியது. தன்னால் தான் அவன் இப்படி இருக்கிறான் என்று தெரியவும் ‘குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுத்தது’

வழக்கமாக எழும் நேரம் எழுந்து தயாராகி கீழே வந்தாள். வினோதினி அவளிடம் அர்ஜூனை பற்றி விசாரிக்க, அவன் உறங்குவதாகக் கூறினாள் ஆராதனா.

அவன் அப்படியே தூங்கி ஓய்வெடுக்கட்டும். எழுந்தால் உடனே வேலை வேலை என்று வெளியே சென்றிடுவான் என்றதுடன் காலைச் சமையலில் மூழ்கி விட, இளவரசு மனைவியின் மூலம் தம்பி வந்திருப்பதை அறிந்ததும், “அவன் தூங்கி முழிக்கும் வரை யாரும் எழுப்ப வேணாம். மதியம் ஆட்டுக்கால் சூப்பு வச்சு கொடுங்க. ஆட்டுக் கறியை சமைத்துக் கொடுத்து, அவன் உடம்மை தெம்பாக்கி விடுங்க. நான் சாயந்திரம் வந்து அவனைப் பார்க்கிறேன்” என்றான்.

ஆராதனாவின் அருகில் சென்று, “ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும். இல்லன்னா, அவன் இப்படி போகமாட்டான். இனிமேல், இப்படி போகாம நான் பார்த்துக்கறேன். நீ எதையும் நினைச்சு கவலைப்படாம அவனோடு சந்தோஷமா இரு” என்றான்.

அவளுக்கு நாசி விடைத்து, கண்களில் நீர் தழும்பியது.

“தம்பி எழுந்ததும் சாப்பாடு கொடுத்துப் பார்த்துக்கம்மா. அவன் வெளியே போறேன்னு சொன்னா, உடனே எனக்குத் தகவல் தருவதா சொல்லு! அதையும் மீறி வெளிய போகணும்னு அடம்பிடிச்சா, கதவைப் பூட்டி உள்ளேயே அடைச்சு வை. நான் வந்து பேசுறேன்” என்றான்.

தம்பியின் மீதான அவனது பாசம் புரிந்தது. இப்படிப்பட்டவனை தவறாகப் பேசி விட்டாேமே என்று கண் கலங்க தலையசைத்து, விசாலியின் மகனைத் தூக்கியபடி அங்கிருந்து சென்று விட்டாள்.

அவளது கண்ணீரையும், வாடிய முகத்தையும் பார்த்த இளவரசு, “பாவம்! ரொம்ப நல்ல பொண்ணு. மூணு நாளா தம்பி வராத பிறகும், நாம சொன்னதைக் கேட்டுட்டு எத்தனைப் பொறுமையா இருந்தா. இதே வேறு ஒருத்தரா இருந்திருந்தா, சமாளிக்க முடிஞ்சு இருக்காது. நான் சாப்பிட்டு கிளம்புறேன். நீ வேலை எல்லாம் முடிஞ்சதும் அவகிட்டே சாப்பாட்டை கொடுத்து அனுப்பு. நாளைக்குத் தம்பியை அவளோடு சேர்ந்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிடலாம். ஒரு நாலு நாள் பொண்டாட்டியோடு சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்” என்றான்.

வினோதினி சரியெனத் தலையசைத்து, வேலையில் மூழ்கி விட, அவர்களின் பேச்சைக் கேட்டுக் கண்ணீர் வடித்தாள் ஆராதனா.

கணவன் அயர்ந்த உறக்கத்தில் இருக்க, அவனை விட்டு உண்ணவும் மனம் வரவில்லை. அவனுக்காக மாடிக்குக் கொண்டு சென்ற உணவுகள் உண்ணாமல் அப்படியே இருந்தன. அழைக்க அழைக்க அவன் அசையாமல் இருப்பதால், என்ன செய்வதெனத் தெரியவில்லை அவளுக்கு.

பதினொன்றரை மணியளவில் சூடான உணவு தயாராகிக் கொண்டு இருந்தது. அர்ஜூனை எழுப்பி விடச் சொன்னாள் வினோதினி.

ஆராதனா மறுபடியும் கணவனை எழ வைக்க முயல, அவனோ எழாமலே இருந்தான். அருகில் சென்று காலை அசைத்தும், தோளை உலுக்கியும் எழாமல் இருக்க, அவனது வலது கையைப் பற்றி இழுத்தாள்.

அவன் ‘ஸ்…ஆ!’ என முனகியபடி, வேகமாக அவளிடமிருந்த தனது கையை விடுவித்துக் கொண்டு, முகம் சுணங்க தடவிக் கொடுத்தான்.

அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ‘கையைத் தானே பிடிச்சேன். அதுக்கு இவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என்று நினைத்து, “என்னங்க நேரமாகுது எழும்புங்க” என்று மெதுவாகக் கூறினாள்.

அவன் பதில் கூறாமல் மறுபடியும் உறக்கத்தை தொடர்வதைக் கண்டு, தண்ணீரை எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து, மறுபடியும் தோளில் கை வைத்து லேசாக அசைத்தாள்.

“வீட்டுக்கு வந்த நேரத்திலிருந்து தூங்கிட்டு இருக்கீங்க. இப்போ எழும்பல, பெரிய அத்தானுக்கு ஃபோன் பண்ணி சொல்லிக் கொடுத்துடுவேன்” என்று மிரட்டினாள்.

அவன் லேசாக அசைந்து, தன் அருகில் நிற்கும் மனைவியைப் பார்த்தான்.

“ஒண்ணு வீட்டுல இருக்கறது இல்ல. இருந்தா ஒரே தூங்கு மூஞ்சி. எழுந்து வாங்க! நேரம் பன்னிரெண்டு ஆகுது” என்றாள்.

அவளது அதட்டலையும், மிரட்டலையும் பார்த்தவனுக்கு எழவே மனமின்றி போக, விழிகள் மட்டும் அவள் மீதே படிந்து இருந்தன. அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது.

“காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாம இருக்கீங்களே எழுந்து தயராகி வாங்க. வினோதினி அக்கா சமையல் ரெடி பண்ணிட்டு இருக்காங்க. அத்தை உங்களைப் பார்க்கணும்னு ஆசையோடு காத்து இருக்காங்க”

அவளது ‘அத்தை, அக்கா’ என்ற வார்த்தையில் அதிசயமாக நோக்கியவன், வாய் திறக்காமல் இருந்ததும், “நீங்க வேலை விசயமா வெளியூருக்குப் போயிருப்பதா சொன்னதை, வீட்டுல உள்ளவங்க வேணும்னா நம்பலாம். நான் நம்ப மாட்டேன்! அன்னைக்கு கடுமையா பேசிய கோபத்துல தானே மூணு நாளா வீட்டுக்கு வராமலேயே இருந்தீங்க? இனிமேல் உங்களை நான் எதுவுமே சொல்லமாட்டேன். நீங்க எப்பவும் போலவே இருங்க” என்று கூறி, கண்ணீரைத் துடைத்தாள்.

அவன் அசையாமல் மனைவியின் முகத்தைப் பார்த்திருக்க, அவனது தோள் பற்றித் தூக்கி விட முயன்றாள். அவன் தானே எழுதுவதாகக் கூறினான்.

மெதுவாகச் சரிந்து எழுந்து சுவர் மீது சாய்ந்து அமர்ந்தவன், நீண்ட மூச்சுக்களை எடுத்து விட்டான். அவள் அவனது லுங்கி, டவ்வலை எடுத்து வந்து நீட்டினாள்.

சட்டைப் பொத்தானைக் கழற்ற முடியாமல் அவளிடம், “செல்வராசுவை வரச் சொல்லு!” என்றான்.

திடீரென அவனை எதற்காக வரச் சொல்கிறான் என்று தெரியாமல் பார்த்தவளிடம், “போ, நான் சொன்னேன்னு அவனை வரச் சொல்லு!” என்று மீண்டும் கூறினான்.

தலையசைத்தபடி கீழே வந்தவள், வீட்டிற்குப் பின்புறமாகச் சென்று அவனைத் தேடி விட்டுக் காணாததும், வினோதினியிடம் விசாரித்து அவன் வீட்டிற்குச் சென்றிருப்பதை அறிந்து கொண்டு, கணவனைக் காண வந்தாள்.

சுவரில் சாய்ந்து விழிகளை மூடி இருந்தவனைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது.

“செல்வராசு வீட்டுக்குப் போயிருக்காராம். உங்களுக்கு ஏதாவது வேணும்னா எங்கிட்டே சொல்லுங்க. நான் செஞ்சு தர்றேன்” என்றாள் ஆராதனா.

அவன் மறுப்பு தெரிவித்தபடி வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, மெதுவாக எழுந்து குளியலறையை நோக்கி நடந்தான். அவளுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவனுக்கு உடல்நிலை சரியில்லையா? அல்லது உதவிக்கு யாரையேனும் தேடுகிறானா? என்று யோசித்தபடி, “நான் உங்க அண்ணியையோ, அம்மாவையோ வரச் சொல்லவா?” என்று கேட்டாள்.

அவன் திரும்பிப் பார்த்ததும், “இல்ல, எதையோ சொல்ல நினைச்சும் முடியாம போறீங்களே… ஒருவேளை உதவிக்கு வேறு யாரும் தேவைப்படுறாங்களான்னு தெரிஞ்சுக்க கேட்டேன். கீழே போயி அவங்களை வரச் சொல்லவா” என்று சாதாரணமாகத் தான் கேட்டாள். அது அவனுள் வலியை ஏற்படுத்தியது.

என் மீதுதான் உனக்குப் பாசமோ, நம்பிக்கையோ இல்லாமல் வெறும் படுக்கைக்கு மட்டும் தானே எதிர்பார்ப்பாய். அதனால் தான் கேட்கிறேன் என்பது போலிருந்தது அந்த வார்த்தைகள்.

அந்த நேரம் செல்வராசு வந்து விடவும், அவள் அவர்களுக்கிடையில் தொந்தரவாக இருக்க மனமற்று விலகி நின்றாள்.

மனைவியை ஒரு முறை பார்த்தவன், “நீ கீழே போயி சாப்பாடு ரெடியாகிட்டா எடுத்துட்டு வா!” எனக் கூறி அவளை அனுப்பி விட்டு, செல்வராசுவிடம் பால் விற்பனை பற்றி பேசியபடி தனது சட்டைப் பொத்தானையும், பேன்ட்டில் உள்ள பெல்ட்டையும் விலக்கி விடக் கூறியவன், அவனைப் போகச் செல்லி விட்டு, குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தமாக்கி விட்டு, மெல்ல மெல்ல நடந்து வந்தான்.

அவனுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை என்று நினைத்து செல்வராசு அறை வாசலில் நிற்கவும், “நீ இன்னும் போகாமலா இருக்கே?” என்று கேட்டு, அவனது பதிலையும் பெற்றுக் கொண்டு, “எனக்கு ஒண்ணுமில்ல நீ போ” என அனுப்பி வைத்தான் அர்ஜூன்.

ஆராதனா மேலே வந்து, “அத்தைக்கு உங்களைப் பார்க்கணுமாம். உங்களைக் கூப்பிட்டுக் கீழே வரச் சொன்னாங்க.” என்றாள்.

அவன், கீழே சென்றால் மறுபடியும் மேலே ஏறி வர வேண்டுமே என்று எண்ணியபடி இருக்க, “உங்களைப் பார்க்காம மூணு நாளா வீட்டுல யாருமே சரியா இல்லை. சதா உங்க ஞாபகமா தான் இருந்தாங்க. நீங்க கீழே போயி அவங்களைப் பார்த்துப் பேசிட்டு சாப்பிடலாமே” என்றாள்.

அவன் முகம் அவளைப் பார்த்தது. அவள் தலை குனிந்து நின்றிருக்க, “நான் சாயந்திரம் கீழே போறேன். நீ இப்போ சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா” என்று உரைத்து, சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

அவன் முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு நேரமும், எதையோ சொல்ல வந்து முடியாமல் தடுமாறினாள் ஆராதனா.

கீழே சென்று அவன் கூறியதைச் சொல்லி விட்டு, அவனுக்குத் தேவையான உணவை எடுத்து வர முயல, மகனைப் பார்க்கும் ஆசையில் அவனுக்குத் தேவையான உணவுகளை எடுத்துத் தட்டில் வைத்தவர், மருமகளையும் அழைத்துக் கொண்டு நடந்தார்.

“என்னப்பா, உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” என்று கேட்டபடி வந்த பாக்கியலட்சுமி, மகன் அருகில் சென்று அவன் நாடியைப் பற்றினார்.

அவன் சிரித்த முகமாக “இல்லம்மா, வேலை விசயமா அலைஞ்சது உடம்பெல்லாம் அசதியா இருக்குது. சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து, பிறகு கீழே வரலாம்னு நினைச்சேன்” என்றான்.

அவர் மகனிடம் பேசியபடி அவனுக்கு உணவை எடுத்துப் பரிமாற, அதைப் பார்த்தபடி நின்றாள் ஆராதனா. அவரது செயல்களைப் பார்க்கும்போது தனது தாய் சுகந்தாவின் ஞாபகமாக இருந்தது. அவரைப் பார்த்து ஐந்து நாட்கள் ஆகப்போகிறது. எப்படி இருக்கிறாரோ? நேரத்திற்குச் சமையல் செய்து உண்டாரோ இல்லையோ? அக்கா ஆர்த்தி, பிள்ளைகள், அவரது கணவர் பற்றிய நினைவில் கண்களில் நீர் துளிர்த்தன.

அவர்களுக்குப் பின்னால் வந்த வினோதினி, அர்ஜூனிடம் பேச்சுக் கொடுத்தபடி இருக்க, தன்னைப் பார்த்துச் சிரித்த ராகுலை வாங்கியவள், விசாலியையும் உள்ளே அழைத்து அமர வைத்தாள்.

மூன்று நாளாக அவனைக் காணாததால், அவர்கள் அனைவரும் வீட்டில் நடந்ததையும், ஆராதனா அவனைத் தேடியது, சரியாக உண்ணாதது, இளவரசு கூறியது என அனைத்தையும் சொல்ல, அவன் கண்கள் மனைவியிடம் சென்றன. அவளது கண்ணீரைப் பார்த்ததும் அன்றைய பேச்சு ஞாபகத்திற்கு வந்தது.

உணவு பரிமாறியதையும், பேசியதையும் அவள் கூறிய விதம் அவன் மனதை சங்கடப்படுத்தியது. இப்போதும் அதை நினைத்துத் தான் இப்படி நிற்கிறாளோ என நினைத்தான்.

அர்ஜூன் உண்டு முடித்ததும் தட்டுக்களை எடுத்தபடி அனைவரும் வெளியேறி செல்ல, தானும் அவர்களைத் தொடர்ந்தாள் ஆராதனா.

மூன்று நாள்களாகச் சரியாக உண்ணாததும், கணவனைப் பற்றிய தகவலை அறியாததும் அவள் மனதைக் கலங்க செய்ய, இன்றைய அவனது வரவும், பேச்சும் அத்தனை இதமாக இருந்தது.

பெண்கள் அனைவரும் பேசியபடி உணவை முடித்தனர்.

ஆராதனாவை மேல போகச் சொன்னவர்கள் ஓய்வெடுக்க சென்றனர். அவள், கட்டிலில் சாய்ந்து கண்மூடி இருந்தவனை பார்த்தபடி கதவைத் தாழிட்டாள்.

உணவை முடித்து மாத்திரையை உண்டவன், மறுபடியும் உறக்கத்திற்கு சென்றிருக்க, அது தெரியாமல் அவனருகில் படுத்திருந்தாள் ஆராதனா.

மாலை ஆறு மணியளவில் கதவைத் தட்டும் ஓசையில் எழுந்து சென்று பார்த்தாள். இளவரசு தம்பியைக் காணும் ஆவலில் நின்றிருந்தான்.

அவனை உள்ளே போகச் சொல்லி விட்டுக் கீழே வந்து விட்டாள் ஆராதனா.

விசாகனும், அவனும் உறங்கிக் கொண்டிருந்த தம்பியை எழச் செய்து, சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தொழில், வியாபாரம், தீபாவளி பண்டிகை குறித்துப் பேசினார்கள்.

அவர்கள் மூவருக்கும், இளவரசுவின் பிள்ளைகள் இருவருக்கும் காஃபி எடுத்து வந்து கொடுத்து விட்டு, அவர்களிடையே உள்ள பாசத்தை நினைத்து, தன் வீட்டிலும் இப்படிதானே நடந்து கொள்வோம். ஆர்த்தி, குழந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று நலம் விசாரிப்போம். அவள் பிள்ளைகளைத் தூக்கி அணைத்து விசாரிப்போம். அவரவர் ஆட்கள் என்பது சும்மா இல்லை என்று எண்ண செய்தது.

இளவரசு, “அர்ஜூன், இனி ஒரு வாரம் எங்கேயும் போகாம உன் மனைவியோடு சேர்ந்து இரு. ஏற்கனவே, அவளை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போவதா சொல்லி ஏமத்திட்டே! பாவம் அவள். உன்னைக் காணாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. இனி அவளை விட்டு எங்கேயும் போகாம இருந்து, பத்திரமா பார்த்துக்கோ! இன்னைக்கு ஒரு நாளும் நல்லா ஓய்வெடுத்துட்டு, நாளைக்கு காலையில போயிட்டு தீபாவளிக்கு முன்னாடி அத்தையையும் கையோடு கூப்பிட்டு வந்திருங்க! அவங்க அக்கா வீடும் பக்கத்துல தானே இருக்கு. அவர்களையும் தலை தீபாவளி கொண்டாட வரச் சொல்லு!” என்றான்.

அவன் புன்னகையுடன் ஏற்று தலையசைக்க, காஃபியை அருந்தி முடித்தவர்கள் பால்கனியில் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பேசினார்கள்.

இரவு உணவு நேரமும் அதை விட்டு எழாமல் இருக்கவும், அவர்களுக்கிடையில் உள்ள பாசம் எத்தனை ஆழமானது என்று புரிந்தது.

மாமனார், மாமியார் மகனிடம் காட்டிய அன்பு, அக்கறையில் உள்ளம் நெகிழ்ந்தது. எத்தனைப் பேறு பெற்றேனோ தெரியலயே… இதை எல்லாம் நேரில் காண்பதற்கு என்று உள்ளம் நெகிழ்ந்தாள்.

விசாலியின் மகன் அவள் கையில் அமர்ந்து அங்கேயும், இங்கேயுமாகப் பார்த்திருக்க, இப்படியொரு அழகான குழந்தை செல்வத்தை வேண்டாம் என்று வெறுக்கும் அளவுக்குத் தன்னை தள்ளி விட்ட பெற்றவரை நினைத்ததும் மனம் கசந்தது.

அவன் அம்மாவைப் பார்த்ததும், “ங்கா…” என்று அழைக்க, அதைக் கேட்டுக் கண் கலங்கியது அவளுக்கு.

மகனை வாங்கி முத்தமிட்ட விசாலி, “நீயும் சீக்கிரமா ஒண்ணு பெத்துக்கோ. உன்னையும், குட்டிப் பாப்பாவையும் பார்த்துக்க நாங்க நிறைய பேர் இருக்கோம்” என்றாள்.

அவள் முகம் சிவக்க குனிந்து கொள்ள “நிஜமாத்தான் சொல்றேன் என்றவள், தனது திருமணத்திற்குப் பிறகு நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறியதும், ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் இருந்தவளுக்கு, அது அதிகமானதே தவிர குறையவில்லை.

“நான் இந்த வீட்டுக்கு வந்து ஒண்ணரை வருஷம் தான் ஆகுது. ஆனாலும், பல வருஷமா இதே வீட்டுல வாழ்ந்தது போல தோணும். இந்த வீட்டுல உள்ள எல்லாரும் அத்தனைப் பாசமா இருப்பாங்க. அம்மா இல்லாம அப்பா, அண்ணனுடன் வளர்ந்து வந்த நான், என் கணவரை விரும்பிக் கட்டிக்கிட்டு வந்த பிறகுதான் ரொம்ப சந்தோஷமா உணர்ந்தேன். படிப்பை முடித்து அப்பாவோட அலுவலகத்திலேயே வேலை பார்த்துட்டு இருந்து, குழந்தை ராகுல் வயித்துல உருவாகி வாந்தி, வேலை, வீடுன்னு ரொம்பவும் கஷ்டப்பட்டேன். எங்க அப்பா என்னைத் தன்னோடவே வச்சுக்க பார்த்தார். என் கணவர் ‘வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்து ஓய்வெடு’ன்னு சொன்னார். எம்.பி.ஏ படிச்சிட்டு சும்மாவே வீட்டுல அடைஞ்சு கிடக்க பிடிக்காம, தொடர்ந்து வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.

வினோதினி அக்கா வீட்டையும் பார்த்துட்டு, எனக்குத் தேவையானதும் செஞ்சு கொடுத்து, என்னை அவங்க கூடப் பிறந்த சகோதரியாகவே நடத்தினாங்க. என் கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்காட்டியும், அவர் எப்பவுமே அதைக் குறையா நினைச்சது இல்ல…

எனக்கு வளைகாப்பு நடத்தி ஒன்பது மாசத்துல வீட்டுக்குக் கூப்பிட்டுப் போனாங்க. அத்தனை நாள்களும் வேலை, வீடுன்னு மாறி மாறி ஓடிட்டு இருந்த எனக்கு, அதுக்கு பிறகுதான் பலதும் புரிஞ்சது. அண்ணன், அண்ணி, அப்பாவோடு இருந்தும் இந்த வீட்டுல இருக்கற மாதிரி இல்லாம, ஏதோ பறிபோனது போலிருந்தது. பிறந்த முதல் அதே வீட்டுல வருஷக் கணக்கா வாழ்ந்திருந்தும், நம்ம வீட்டுல இருக்கற மாதிரி இருக்க முடியல.

எப்போதுடா மறுபடியும் நம்ம வீட்டுக்கு வந்துட மாட்டோமான்னு ஏக்கமா இருந்தது. மகன் பிறந்து ஒரு மாதம் வரை கஷ்டப்பட்டு பல்லைக் கடிச்சி அங்கே இருந்துட்டு, அவங்க யார் பேச்சையும் கேட்காம ஓடி வந்துட்டேன். என் கணவர், ‘குழந்தையை பார்த்துட்டு வீட்டுலயே சந்தோஷமா இரு. உனக்குத் தேவையானதை நான் செஞ்சு தர்றேன்’னு சொன்னதிலிருந்து, நானும் எங்க அப்பா கிட்டே பேசினேன். இப்ப அவனுக்கு ஆறு மாசம் ஆகப் போகுது, இன்னும் நான் வேலைக்குப் போகல.

அத்தை மாமாவின் பாசம், அக்கா அத்தானின் அக்கறையான பேச்சு, அஸ்மிதா, பிள்ளைகளின் கலகலப்பு என்னையும் சந்தோஷப்பட வச்சது. ‘அண்ணி’ என்கிற வார்த்தையை மீறி உன் கணவர் எப்பவும் பேசியதில்லை. நீ இந்த வீட்டுல இருக்கறப்பவே வேலை, வேலைன்னு இப்படி ஓடுகிறவரு, இதுக்கு முன்னாடி எப்படி இருந்திருப்பார்னு யோசித்துப் பாரு? என்றவள்,

குடும்பத்துக்கு வருகிற மூத்த மருமகள் பொறுப்பு உணர்ந்து, குணவதியா நடந்துக்கிட்டா அவங்களுக்கு பிறகு வருபவர்களும், குடும்ப பொறுப்பு உடையவரா தன்னை மாத்திக்குவாங்கன்னு அக்காவைப் பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீயும், இன்னும் கொஞ்சம் நாளில் எல்லாத்தையும் புரிஞ்சுப்பே. உனக்குக் கணவரா கிடைச்சிருப்பவரும் ரொம்ப நல்லவர். காலம் பூரா உன்னைக் கண் கலங்காம பார்த்துக்குவார்” என்று கூறியதும், திருமணமாகி வந்த இத்தனை நாளில் தன் வீட்டைப் பற்றி மட்டுமே நினைத்தவளுக்கு, அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி பாசத்தைக் காட்டவும், கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது என்று தெளிவாகப் புரிந்தது.

“நீ நாளைக்குப் போயிட்டு சீக்கிரமா வந்துடு. நீங்க ரெண்டு பேருமே இல்லாம வீடு வீடா இருக்காது” என்றவளிடம் என்ன கூறுவது என்றே தெரியவில்லை. வாழ்க்கை என்றால் என்ன? கணவன் மனைவி, குடும்பத்து நபரிடம் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி அல்லவா, புரியும் விதமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள் விசாலி!!

இரவு அவள் போகும் போதும் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். கணவன் முகத்தைப் பார்த்தபடி இங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் அசை போட்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அம்மா, அக்காவிற்கு கிடைத்திருப்பவர்களை விடவும் இவர்கள் நல்லவர்களாகத் தெரிந்தார்கள். இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும், பிறர் மனம் புண்படும் படியாக நடக்க கூடாது என்று முடிவு செய்தாள் ஆராதனா!!

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்…

தொடருக்கான அடுத்தப் பதிவு இதோ:https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-15/

7 thoughts on “அக்னி சாட்சி”

 1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

 2. Kalidevi

  Ippadi varama iruntha tha nee pesuviya itha munnadiye pesi iruntha ethuku ipo ivlo kastam arjun ipo veliya velaiku tha poitu vanthana illa vera panitu vanthu irukana therila

 3. CRVS2797

  அப்பாடி..! இப்பத்தான் இவளுக்கு புருசன் வீட்டு ஆளுங்களையே புரிய ஆரம்பிச்சிருக்கு.
  இத்தனை நாளா, எடுத்தேன்
  கவிழ்த்தேன்னே நடந்திட்டு இருந்தா.. இப்பவாவது உறவுகளோட அருமையை உணர ஆரம்பிச்சு இருக்கிறாளே…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *