Skip to content
Home » அக்னி சாட்சி 16

அக்னி சாட்சி 16

அத்தியாயம் : 16

சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் அமர்ந்து வெளியேயும், அருகில் அமர்ந்திருந்த கணவனையும் பார்த்தபடி வந்தாள் ஆராதனா.

திருமணமாகிய பிறகு இரண்டு முறை அம்மாவின் வீட்டிற்குச் செல்லும் போதும், அவரைக் காணப் போகும் மகிழ்ச்சியை தவிர, வேறு எதுவும் அவளிடம் இருக்கவில்லை. இப்போது, கணவனின் மனதைப் புரிந்து கொண்டதாலா? தனது அப்பாவைப் போன்றவன் அவனில்லை என்பதாலா? விபத்தில் அடிப்பட்டு அவனது காயத்திற்குக் காரணமான தன்னை, எதிரியாக பாவிக்காமல் நேசமுகத்துடன் பழகுவதாலா? இத்தனை வசதிகள் இருந்தும், எளிமையுடன் நடந்து கொள்வதாலா தெரியவில்லை. அவளுக்குத் தன் கணவனுடன் இருப்பது பிடித்துள்ளது. அவன் அருகில் இருப்பதை அவளால் வெறுக்கத் தோன்றவில்லை.

இருக்கையில் சாய்ந்திருந்தான் அர்ஜூன். கையில் இன்றைய தினசரி வீற்றிருந்தது. தன்னை அடிக்கடி பார்க்கும் மனைவிக்கு, ஒற்றை முறுவலை பதிலாக அளித்து, “எனக்கு ஒண்ணுமில்ல. நீ ரிலாக்ஸா இரு” என்று கூறினான்.

அவளுக்கு அது மட்டுமே போதுமானதாக இருக்க, சிறு தலையசைப்புடன் திரும்பிக் கொண்டாள்.

மகளும், மருமகனும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள் என்பதால், அவர்களை ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருந்தார் சுகந்தா.

வீட்டு வாசலில் வந்து நின்ற காரிலிருந்து, கணவன் இறங்கி வெளியே வரும்வரை காத்திருந்து, பேக்கையும் எடுத்துக் கொண்டு அவனுக்கு இணையாக நடந்து வந்தாள் ஆராதனா.

வீட்டின் முன்பகுதியில் உள்ள ஆறு முழுவதும் நீராகப் பாய்ந்து ஓடியது. சிறு வயது சம்பவங்கள் கண்ணில் வந்து போனது. உதடுகளில் மலர்ந்த புன்னகையுடன் சுகந்தாவை பார்த்தவள், பேக்கை கீழே வைத்து விட்டு அவரை அணைத்தாள்.

மகளின் முகத்தில் இருந்த புன்னகையும், மலர்ச்சியும் அவரைப் பரவசப்படுத்தியது. இருவரிடமும் நலம் விசாரித்துவிட்டு வீட்டிற்குள் அழைத்து வந்து அமர வைத்தார். மருமகனிடம் அவன் வீட்டில் உள்ளவர்களைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டு, அவர்கள் உண்பதற்கு தேவையானவற்றை எடுத்து வரச் சென்றார்.

ஆராதனா அம்மாவின் தோளைக் கட்டிக்கொண்டு, ஆர்த்தி மற்றும் அவளது பிள்ளைகளைப் பற்றி வினவியதும், அவருக்குத் திக்கென்றது. மூத்த மகளைப் பற்றி இவளிடம் எதுவும் கூறக் கூடாது என்று நினைத்தவர், இதுவரை எதுவுமே சொல்லாமல் இருந்து வந்தார். இன்று திடீரென வந்ததுடன் அவளைப் பற்றி விசாரிக்கவும், அவருக்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது.

“அத்தான், அவங்க அக்கா வீட்டு பங்சன் முடிஞ்சதும் கிளம்பிட்டார். பிள்ளைங்க ரெண்டு பேரும் பள்ளிக்குப் போயிட்டு இருக்காங்க. ‘சித்தி சித்தி’ன்னு உன்னைப் பற்றியே தினமும் பேசுவாங்களாம். ‘சித்தியை பார்க்கப் போகலாம்’னு ஆர்த்தி கிட்டே கேட்டுட்டே இருப்பார்களாம்” என்றார்.

உடனே “அத்தான் இல்லாம அக்கா மட்டும் தனியா தானே இருப்பாங்க. அவங்களை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லவா? நாலு நாள் நம்மோடு தங்கிட்டுப் போகட்டுமே, எனக்கும் அவங்க மூணு பேரோட ஞாபகமா இருக்கு” அவளது ஆர்வமான குரலில் அவருக்கு நா திக்கியது.

அவர்கள் மூவருடன் சேர்ந்து விட்டால், இப்போது இருக்கும் ஆராதனாவை காண்பது அரிது. அதற்காக அவர்களைப் பார்க்காதே, பேசாதே என்றெல்லாம் சொல்ல முடியாது. அதேநேரம், அதையே நினைத்து அவளது வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல் இருக்கும் விதமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்து, “நீ இப்பத்தானே வந்திருக்கே? முதல்ல டிரெஸ்ஸை மாத்தி சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து, மருமகனோடு போயிட்டு வா!” என்றார்.

தனியாகச் சந்தித்தால் தானே வம்பு. அவள் கணவரும் கூடவே இருந்தால், அவர் முன்பு குடும்ப விவகாத்தை விலாவரியாகப் பேச முடியாது என்று நினைத்தார். ஆனால், மகளின் மாமியாரின் குணத்தை மறந்துவிட்டார் சுகந்தா!

அம்மாவிடம் அனுமதி கிடைத்ததும் அறைக்குச் சென்று படுக்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு, அக்காவிற்கு அழைப்பு விடுத்து நிறைய நேரம் பேசினாள். அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளையும், உதட்டில் நிலைத்திருந்த புன்னகையையும் பார்த்தபடியே, அருகில் சென்று அமர்ந்தான் அர்ஜூன்.

இருவரும் பேசுவது அவனது செவியிலும் விழுந்து, உதட்டில் புன்னகையை மலரச் செய்தது. இத்தனை புன்முகத்துடன் இருப்பவளா? அங்கு வந்து போலியாக நாடகமாடினாள்? இனிமேல் அவளை இங்கு இருப்பது போலவே அங்கேயும் இருக்கும் விதமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அக்காவிடம் பேசிவிட்டு திரும்பியவள், பேச்சு சுவராஸ்யத்தில் அருகிலிருந்த கணவனைப் பார்க்காமல் திடீரெனக் கண்டதும் வேகமாக எழ முயல, அத்தனை நேரமாக அவளை ரசித்தபடி இருந்தவன், “எதுக்கு இவ்வளவு அவசரம்? நான்தானே இருக்கேன்” என்று அமர வைத்தான்.

அவள் முறுவலித்தபடி அவனைப் பார்க்க, “அப்போ அக்காவையும், அம்மாவையும் பார்த்தா மட்டும்தான் இந்தப் புன்னகையும், சந்தோஷமும் வரும். மற்ற நேரத்தில் காணாம போயிடும். அப்படித்தானே? ம்ம்…” என்று கேட்டதும், அவள் புன்சிரிப்புடன் “நீங்களும் கூடத்தான்… ” என்று பதிலளித்தாள்.

“நானா?” அவன் கேட்டபடி கட்டிலில் கால்நீட்டி அமர, ஆராதனா அவன் வசதியாக இருப்பதற்கு ஏற்ற வகையில், முதுகிற்கு பின்புறம் தலையணையை வைத்துக் கொடுத்தாள்.

அவளையும் தன் அருகில் அமரச் செய்து, “உன்னைப் பெண் பார்க்க வந்தப்பவே, நல்லா பேசியதா எனக்கு ஞாபகம். நீ தொட்டா சிணுங்கியா இருந்தால் நான் என்ன செய்வதாம்?” என்று வலது புருவத்தை உயர்த்தினான்.

அவளுக்குத் தன்னை அவன் பெண் பார்க்க வந்த அன்று நடந்து கொண்ட முறை கண்ணில் வந்து போனது. இதழ்களும் புன்னகையால் மிளிர்ந்தன.

“ஆராதனா! உன்கிட்டே பேசணும்னு நானும் பல வழிகளில் முயற்சி செஞ்சும் முடியாம, உன்னோட விலகலும், கோபமும் என்னைத் தள்ளி நிறுத்தியது. இனிமேலும், முன்னே மாதிரி தயங்கவும், தள்ளி இருக்கவும் அவசியம் வராதுன்னு நினைக்கிறேன்?” என்று வினவியதும், அவள் ‘இல்லை’ என்று பதிலுரைத்தாள்.

“நல்லது” என்றவன் கண்களை மூடிக் கொள்ள, “உடம்புக்கு கஷ்டமா இருக்கா? சாப்பிட ஏதாவது எடுத்து வரவா?” என்று பரிவுடன் வினவினாள் அவன் மனைவி.

“கொஞ்சம் டயர்டா இருக்குதே தவிர, வேறு எதுவும் இல்ல என்று உரைத்து, என்மீது உனக்கு இருக்கும் அக்கறையைவிட, பல மடங்கு எனக்கும் உண்டு. கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கணவனான என் பேச்சையும் கேட்டுப் பார். நீ இழந்ததை விட நூறு மடங்கு திரும்பவும் கிடைக்கும்” என்றான்.

மறுபடியும் கண்களில் நீர் முட்டியது ஆராதனாவிற்கு. இத்தனை நல்லவனை போய் கஷ்டப்படுத்தி விட்டோமே என்று!

அவனைச் சற்று நேரம் படுத்து ஓய்வெடுக்க கூறியும், அவன் மறுத்து விட, அவனது கை விரல்களையும், தோள் பகுதியையும் இதமாக அழுத்தி விட்டாள். அவனுக்கு அது சுகமாக இருக்கவும், கால் விரல் முதல் கழுத்து வரை வலி தெரியாமல் இருக்க மெதுவாகப் பிடித்து விட்டாள். அவன் மறுத்துக் கூறாமல் கவிழ்ந்து படுத்ததும், முதுகு, தோள் பகுதிகளையும் இதமாகப் பிடித்தும், வருடியும் விட்டாள்.

மனைவியின் மென்மையான ஒற்றடத்தில் அவன் உறங்கி விட, தன் அருகில் துயில் கொள்ளும் கணவனைப் பார்த்தவளின் உதடுகள், தன்னையும் மீறித் துடித்தன.

இரண்டு மணிக்கு அவனை எழச் செய்து உணவை எடுத்து வந்து உண்ண வைத்தாள். அவளும் தாயுடன் சேர்ந்து உணவை முடித்து விட்டு, அக்கா பிள்ளைகளுக்குத் தேவையான சாதனங்களை வாங்குவதற்கு மாலையில் வெளியே செல்வது குறித்துப் பேசினாள்.

அவர் அர்ஜூனுடன் சென்று வரக் கூறியதும், கணவனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவனை எப்படி அழைத்துச் செல்வதெனத் தயங்கினாள் ஆராதனா.

அவனிடம் அது விசயமாகப் பேசும்போது, அவள் தனது கருத்தை எடுத்துரைக்க, “எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லாதான் இருக்கேன். நாம ரெண்டு பேருமா சேர்ந்து போயிட்டு வந்துடலாம்” என்றான் அர்ஜூன்.

அப்படியும் அவள் தயங்குவதைக் கண்டு, “என்னோடு வருவதில் உனக்கு விருப்பமில்லயா? இன்னும் இந்தச் சமையல்காரனோடு போவதுக்கு கஷ்டமா தான் இருக்கா?” என்று கேட்டான்.

கண்களில் மளுக்கெனக் கண்ணீர் எட்டிப் பார்க்க, தனது செயலால் அவன் எந்த அளவிற்குக் காயப்பட்டு இருக்கிறான் என்று மனதிற்குள்ளேயே மறுகினாள் ஆராதனா.

அவன் சிரித்துக் கொண்டே, “நொடிக்கு நொடி மாறிப் போகும் இந்த வதனம், எப்பவும் புன்னகையோடு இருக்கணும்னு நானும் ஆசைப்படுறேன். ஒருவேளை எனது பேச்சு, நடவடிக்கை அதை மாற்றுவதா இருந்தா, இந்த அர்ஜூன் வாய் திறக்கவே மாட்டான்” என்று சொன்னதும், அவள் அழுகையை அடக்க முடியாமல் திணறிப் போனாள்.

‘என்ன மனிதன் இவன்? என்மீது இவனுக்குக் கோபமே வராதா?’ எனப் பரிதவிப்புடன் எண்ணினாள்.

“ஆராதனா! நீ சும்மா சும்மா அழுவது எனக்குப் பிடிக்கல. தப்பு செய்யாதவங்க இந்த உலகத்துலேயே யாரும் இல்ல. அப்படி செய்கிற தவறை நினைத்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறப்போ கொடுக்காம அலட்சியப்படுத்துவதும், மேலும் பிரச்சனை வரும் விதமா நடப்பதும் மனிதாபிமானமற்ற செயல். என் மனைவியின் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். அவள் வாய் திறந்து கேட்டுதான் செய்யணும்னு அவசியமில்லை. அந்த வீட்டுல இருந்தா பகல் நேரத்தில் உன்னோடு பேசிப் பழக வாய்ப்பு குறைவு. இப்ப உடம்புக்கும் சரியில்லாம இருப்பதால், உன்னோடு சேர்ந்திருக்கும் ஆசையில, நாலு நாள் நின்னுட்டு போகலாம்னு வந்திருக்கேன். இதுவே நிரந்தரமும் இல்ல. அதுக்காக, உன்னைச் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க செய்யவோ, பிரிஞ்சு இருக்கவோ என்னால முடியாது. நீ எங்கே கூப்பிட்டாலும் நான் வருவேன்”

அவன் அத்துடன் முடித்து விட, அவனது நல்ல குணம் நிமிடத்திற்கு நிமிடம் அவளைக் கவர தவறவில்லை. நீ ஏன் முதலிலேயே என் வாழ்க்கையில் வராமல் போனாய் என்று உள்ளுக்குள் கதறினாள். கண்ணீரை அடக்கியபடி அவன் அருகிலேயே படுத்து விட, இருவரின் மேனி உரசலும், அவனது அன்பான வார்த்தைகளும் அவளுக்கு அத்தனை இதத்தையும், பாதுகாப்பையும் வழங்கியது.

தன்னை ஒட்டிப் படுத்திருப்பவளைக் கண்டு சிரித்தவன், தானும் சரியாகப் படுத்துக் கொண்டான்.

மாலையில் இருவரும் அவர்களது வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அம்மா, அக்கா அவளது மகன்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு, பூ, பழம், தின்பண்டகளுடன் காரிலேறி அமர்ந்தவளை, ஒரு ஜோடி கண்கள் வெறித்துப் பார்த்தன.

ஆராதனாவை அழைத்துச் சென்று உணவகத்தில் அமர்ந்துகொண்டு, சூடான மசால் தோசையை அவன் வரச் செய்ய, தங்கள் முன்பு இருக்கும் தட்டை விடவும் இரண்டு மடங்கு பெரிய அளவில் இருப்பதை, அவள் வியந்து நோக்கினாள்.

“இதென்ன பெருசு. நம்ம ஹோட்டல்ல வந்து சாப்பிட்டுப் பாரு தெரியும்” என்றதும், அன்று இளவரசுவின் உணவகத்தில் உண்டு வந்த ஞாபகம் கண்ணில் வந்து போனது. ‘அப்படி ஒண்ணும் பெருசா தெரியலயே…’ என்று மனதில் நினைத்தாலும் வாய் திறக்கவில்லை அவள்!

அவன் உணவை உண்பதற்கு சிரமப்படுவானோ என்று அவள் நினைத்திருக்க, “என்னையே பார்த்துட்டு இருக்காம சாப்பிடு. ஒரு தோசை பாதி வயிற்றையும் நிரம்பிடும்” என்றான் தகவலாக.

புன்னகையுடன் அவள் உண்ண, அவனும் அவளுக்குத் தேவையானதை கொண்டு வரச் சொல்லிக் கவனித்தான்.

“நம்ம ஹோட்டல்ல சாப்பிடுவதை விட, சுவை மட்டமா தான் இருக்கு” என்று அவன் எழுந்து செல்ல, அவளுக்கு ஒன்றுமே புரியாத நிலை. கணவனிடம் கேட்டுத் தெளிவு படுத்தவும் பயமாக இருந்தது. பேசாமல் கை சுத்தம் செய்து விட்டு, அவனுடன் வெளியே வந்து நின்றாள்.

சிறிதளவு பெருஞ்சீரகத்தை அவள் கையில் கொடுத்து, வாயிலிட்டு மெல்லுமாறு கூறியதும், வீட்டு சமையலில் பயன்படுத்துவதை எதற்காக உண்ணச் சொல்கிறான் என்று நினைத்தபடி பார்த்தாள்.

“பெரிய ரெஸ்டாரண்ட் எல்லாத்திலும் சோம்பு வச்சிருப்பது வழக்கம். சைவ, அசைவ உணவை முடித்து வெளியேறுபவர்கள் நறுமணம் நிறைந்த சோம்புவை வாயிலிட்டு மெல்வதால், அவர்களின் வாயிலிருந்து வேறு எந்த வாசனையும் வருவதை தடுப்பதுடன், உண்ட உணவையும் விரைவில் ஜீரணமாக்கிடும்” என்றான்.

அவள் தலையசைத்தபடி இன்னும் தனக்குத் தெரியாமல் என்னவெல்லாம் இருக்கிறதோ என்று நினைத்துக் கணவனைத் தொடர்ந்தாள்.

தலை நிறைய வீற்றிருந்த மல்லிகை மொட்டுகளிலிருந்து வெளியேறிய வாசனையும், அருகில் இருந்த மனைவியின் அன்பான வார்த்தையும், அடக்கமான நடைமுறையும் அவன் மனதைப் பறித்தது. 

“இந்த மல்லிகைப் பூவை ஒரு நாள் வெறும் பூவாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு இப்பதான் அதன் அருமையும், எதுக்கு கல்யாணமானவங்க அதிகமா பயன்படுத்துறாங்க என்பதுக்கான காரணமும், மல்லிகைக்கு மயங்கும் மன்னவர்களை பற்றியும் தெரியுது” என்று நகைத்தான்.

அவள் வெட்கத்துடன் குனிந்து கொள்ள, மனைவியின் கூந்தலில் தொங்கிக் கொண்டிருந்த நீளமான பூவை எடுத்து, அவளது முன்பக்க தோள் மீது தொங்க விட்டான். வீடு வந்து சேரும் வரை  அவனது நகைப்பும், கிண்டலான பேச்சும் அவளை அவன் ஞாபகத்தில் உழலச் செய்தது.

ஆனால், அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்திருந்து அலட்சியமாக உதட்டைச் சுழித்தான் சந்தோஷ்!!

வீட்டிற்கு வந்ததும் அம்மாவிற்கு வாங்கியதை அவரிடம் கொடுத்து விட்டு, அக்காவிற்கு வாங்கி வந்ததையும் காண்பித்தாள் ஆராதனா. மகளின் பாசம் பெற்றவள் மனதை நிறைத்தது.

“நாளைக்கு நாம மூணு பேருமா சேர்ந்து போயிட்டு வந்துடலாம்மா. அக்கா பிள்ளைகள் மதியம் வீட்டுக்கு வந்துடுவாங்க இல்லயா?” என்று கேட்டதும், இதே அன்பு குறையாமல் அவர்கள் கடைசிவரை இருக்க வேண்டுமென எண்ணிய தாய் உள்ளம், மருமகனின் முகத்தில் தெரிந்த புன்னகையையும், மகளிடம் காணப்பட்ட மாற்றத்தையும் கண்டு, மறுபடியும் தவறான நபரைத் தேர்வு செய்யவில்லை என்று இறைவனுக்கு நன்றியுரைத்தது.

றுநாள் காலை பதினொரு மணியளவில் மூவரும் உடை மாற்றி விட்டுக் காரில் அமர்ந்தனர். ஏற்கனவே அவர்கள் வருவதை தெரிவித்து இருந்ததால், ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள நபர் மூலம், சமையல் செய்யப் போதுமான அனைத்தையும் வாங்கி வரச் செய்திருந்தாள்.

பிள்ளைகள் இருவரும் சித்தி வருகிறாள் என்றதும் பள்ளிக்குச் செல்ல மறுக்க, பள்ளி முடிந்து வரும் வரை அவர்கள் இருப்பார்கள் என்று கூறி சமாதனப்படுத்தி அனுப்பும் முன்பு ஒரு வழியாகி விட்டாள்.

அக்காவின் வீட்டு வாசலின் முன்பு இறங்கிய ஆராதனா, கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டு இருக்கும் கணவனைத் தொந்தரவு செய்ய மனமின்றி, தொலைக்காட்சியில் ஒலித்த திரைப்பட பாடலைக் கேட்டபடி, உதட்டில் பூத்த புன்னகையுடன், சுவரில் இருந்த அழைப்பு மணியின் சுவிட்சை தேய்த்தாள்.

அடுத்த நிமிடம் “யாரது?” என்ற கேள்வியுடன் வந்த செண்பகத்தின் முகம், வெளியே நின்றவர்களைப் பார்த்ததும் மாறியது.

“வாங்க!” என்று கடமைக்கு அழைத்தாரா? வேறு வழியற்று அழைத்து அமர வைத்தாரா தெரியவில்லை.

அவரிடம் பேசவே மனம் இல்லாமல் இருக்கும் ஆராதனா, மரியாதைக்காக அக்காவின் மாமியாரிடம் நலம் விசாரித்தாள்.

 அவர் “ஏதோ இருக்கேன். போயிடணும்னு நினைச்சா மட்டும் ஆண்டவன் கொண்டு போகவா போறான். அடுத்தவங்க பேசுவதையும், கேட்பதையும் சகிச்சுட்டு இருக்கணும்னு அனுப்பி விட்டுருக்கான். எல்லாம் என் தலையெழுத்து!” என்று வெறுப்புடன் கூறியதும், அவளுக்கு ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது.

சுகந்தா அவரது பக்கமே பார்வையைத் திருப்பாமல், மகள் ஆர்த்தியை தேடி கண்களை அலைய விட, எப்போதும் செண்பகத்திடம் நன்றாகப் பேசும் அம்மா, ஏன் இப்படி இருக்கிறார்? என்று தெரியாமல் இருந்தாள் ஆராதனா.

அவரிடம் தனக்கு என்ன பேச்சு என்று நினைத்து, “ஆர்த்தி, உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று கேட்டபடி மகளைத் தேடி சென்ற சுகந்தாவின் நடவடிக்கைகளை, புரியாமல் பார்த்து இருந்தாள் ஆராதனா.

‘தனக்குத் தெரியாமல் இங்கு என்ன நடக்கிறது?’ என்று யோசனையில் அவள் இருக்க, தன்னிடம் ஒரு வார்த்தைப் பேசாமல், யாரோ ஒருத்தியிடம் நடந்து கொள்வது போல் அவர் இருக்கவும், செண்பகம், “பெரிய வசதியான இடத்துல இருந்து சம்மந்தம் கிடைச்சதும் உங்க அம்மாவுக்குக் கண்ணு தெரியல. கல்யாணமாகி வந்த நாளுல இருந்து உங்க அக்காவை என் மகளைப் போலவே பார்த்துக்கிட்டேன். அவங்களோ என்னை மரியாதை இல்லாம நடத்துறாங்க. என் மகன் கிட்டே சொன்னா, யாரையும் இந்த நடை வாசலை மிதிக்க விடமாட்டான். அப்படிப்பட்ட என்னை மரியாதை இல்லாம நடத்துறா உன் அக்கா. உன் அம்மா அவளை எங்களை விட்டுப் பிரிக்கப் பார்க்கறாங்க. நீயாவது உன் புருஷன் வீட்டோடு சேர்ந்து ஒழுக்கமா இரு” என்று அறிவுரை கூறினார்.

அவளுக்கு அங்கு நடப்பவை யாவும் புரிய மறுத்தன. தங்கையை நோக்கி வந்த ஆர்த்தி அவளைக் கட்டிக் கொள்ள, இருவரும் பேசியபடி வெளியே வந்து அர்ஜூன் நிற்கும் இடத்திற்குச் சென்றார்கள்.

முக்கியமான விசயமாகக் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவன், ஆர்த்தியிடம் நலம் விசாரித்து விட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தான்.

தங்கையையும், அம்மாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவள், அவர்களிடம் சிரித்து பேசியபடி இருக்க, “அவளோட ஆளைப் பார்த்ததும் கண்ணு தெரியாம இருக்கா. வீட்டுல மாமியாருன்னு ஒருத்தி இருந்தும் அவகிட்டே மரியாதைக்கு ஒரு வார்த்தை, ‘இன்னைக்கு வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்க. என்ன சமையல் செய்யணும்? கடையில ஏதாவது வாங்கணுமா?’ன்னு கேட்காம, தன் விருப்பத்துக்கு நடந்துக்கிறா. எனக்குத் தெரிஞ்சா நான் யாரையும் இங்கே வரக் கூடாதுன்னா சொல்லிடுவேன்?”  என்று நல்லவரைப் போல நாடகமாடினார்.

ஆராதனா அவரது பேச்சைக் கேட்டபடி என்ன விசயம் என்று தெரிந்து விடும் முனைப்பில் அங்கு வர, “பிள்ளைகளை ஒழுங்கா வளர்க்கத் தெரியாம வளர்த்துட்டு, அதைப் பற்றி பேசினா ரோஷத்துல முகத்தை இறக்கி வச்சிட்டு இருக்கா. அதுக கிட்டே பேசலாம்னா என் பக்கத்துலயே வர விடுவது கிடையாது. நான் ஏதாவது கேட்டாலும் வாய் திறப்பது இல்ல. மூணு பேரும் சேர்ந்து பேசுறாங்க, சாப்பிடுறாங்க, அறைக்குள்ளே பூட்டிக்கிட்டு தூங்குறாங்க. நான் ஒருத்தி இருப்பதையும் கண்டுக்கிறது இல்ல.

என் மகனுக்கு எவ்வளவு பெரிய வசதியான இடத்துல இருந்து சம்மந்தம் பார்த்தோம். அவனோ இவளைத் தான் கட்டிப்பேன்னு ஒத்தக் காலுல நின்னு அடம்பிடிச்சு கட்டிக்கிட்டான். இப்ப, ஏண்டா இவளைக் கட்டிக்கிட்டோம்னு நினைச்சு வருத்தப்படுத்துற அளவுக்கு நடந்துக்கிறா. என்னை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க இவள் கொடுத்து வச்சிருக்கணும் …” என்று பெருமையுடன் பிதற்றினார்.

அவரது பேச்சைக் கேட்ட ஆராதனாவிற்கு அக்காவை நினைத்துப் பாவமாக இருந்தது. திருமணமாகி வந்த முதல் தனது மாமியார், மாமனாரிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் இருந்தவளிடம், அவர்கள் எத்தனை தன்மையாக நடந்து கொண்டார்கள். யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் பாசமாகப் பார்த்து வந்தார்கள். சுகந்தாவை பற்றி எத்தனை அக்கறையுடன் பேசினார்கள்? தீபாவளிக்கு இவ்வளவு சாதனம் வாங்கி வந்தும் முகம் சுழிக்காமல் இருக்கிறான் அர்ஜூன். அப்படிப்பட்ட மனிதர்களுடன் பழகிக் கொண்டு, செண்பகத்தை பார்க்கும்போது, ‘இவரெல்லாம் என்ன மனுஷி?’ என்று நினைக்க தோன்றியது.

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள் ….

தொடருக்கான அடுத்த பதிவு இதோ :https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-17/

8 thoughts on “அக்னி சாட்சி 16”

  1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

  2. CRVS2797

    ஒருவகையில் ஆராதனா ரொம்ப, ரொம்ப கொடுத்துவைச்சவ புருசன், புகுந்த வீடு எல்லாத்துலேயும். இப்பவாவது அது புரிஞ்சா சரி தான்.

  3. Kalidevi

    Nallavangala kamichikiranga pa vanthavanga kitta ava kittaye amma va pathi akka pathi Kora solromnu illama sollitu ivangala mari mamiyar kedaikanuma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *