Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 17

மதிய உணவு நேரம் கணவனையும் அழைத்து வந்து உண்ண வைத்து, மாடியில் உள்ள அறையில் ஓய்வெடுக்க கூறினாள் ஆராதனா. உடல் நலமில்லாததால் சில நாளாகத் தனது தொழில் பக்கம் கவனத்தை விட்டு இருந்தவன், இப்போது அங்குப் போக முடியாவிட்டாலும் இங்கிருந்து பார்த்துக் கொண்டான்.

ஆர்த்தியின் மகன்கள் இருவரும் ‘சித்தி!!’ என்று அழைத்தபடி ஓடி வந்து அவளைக் கட்டிக் கொள்ள, இருவரையும் தூக்கி முத்தமிட்டாள். அவர்கள் உண்டு முடித்ததும் தாங்கள் வாங்கி வந்த அனைத்தையும் இருவருக்கும் கொடுத்தாள்.

“உன் ஆளைப் பார்த்ததும் இப்படி ஒடுறியே… இந்த வீட்டுல இருக்கற என்கிட்டே ஒரு வார்த்தையாவது பேசுறியா? வா என் மகன் வரட்டும்” என்றார் செண்பகம்.

பெரியவன் அருணுக்கு அவரைப் பிடிக்காது எனும்போது எங்கிருந்து அவருக்குப் பதில் கொடுப்பான். இளையவன் மட்டுமே அவரிடம் சென்று பேசுவான். அருகில் அமருவான். அதனால் தானோ என்னவோ, அருணை திட்டினாலும் அடித்தாலும் அவர் கண்டு கொள்வதில்லை.

துப்பாக்கி, பட்டாஸ், புத்தாடை, இனிப்பு வகைகள், அவர்களுக்குப் பிடித்த தின்பண்டம் என்று பலதையும் பார்த்தவர்கள் அன்று முழுவதும் துள்ளாட்டம் போட்டார்கள்.

இரவு நேரம் வீட்டிற்குச் செல்லலாம் என்றும் அவர்கள் விட மறுத்ததால், அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

பிள்ளைகள் இருவரும் அப்பா, பாட்டி, அத்தையென நால்வரின் மூலம் நடந்த பிரச்சனைகள், அம்மாவின் அழுகையை எடுத்துரைக்க, அக்காவை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை அவளால்!

இதில் சுகந்தா ஏன் செண்பகத்திடம் பேசாமல் இருந்தார் என்பதற்கான பதில் அவளைத் திகைக்கவும் வைத்தது.

மறுநாள் பிள்ளைகள் இருவரிடமும் தீபாவளிக்கு தங்கள் வீட்டிற்கு அம்மா அப்பாவுடன் வர வேண்டும் என்று சொல்லிவிட்டு, அம்மாவையும், அக்காவையும் அழைக்கும் போது, அவர்கள் இருவரும் வர மறுத்துவிட்டார்கள்.

“வருணுக்கு பிறந்தநாள் வருவதோடு, அவங்க அப்பாவும் தீபாவளிக்கு வருவதா சொல்லி இருக்காங்க. இந்த நேரம் என்னால எப்படி வர முடியும்?” என்றாள் ஆர்த்தி.

“சரி, நான் அத்தான் கிட்ட பேசி உங்க எல்லாரையும் கூப்பிட்டு வரச் சொல்றேன்” என்று விடைபெற்றாள் ஆராதனா.

சுகந்தா மகன் மதிவாணனின் மனைவிக்கு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் இருக்கலாம் என்பதாலும், ஆராதனா பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் குழித்துறையில் வந்து அதிக நாட்கள் இருக்க முடியாது என்பதாலும் தீபாவளிக்கு வர முயற்சிப்பதாகக் கூறினார்.

பெரிய மகளின் வாழ்க்கையில் நடந்ததை மறக்காமல் எடுத்துரைத்தவர், நாத்தனார் வீட்டு நிகழ்ச்சிக்குப் போன இடத்தில் அவளையும், பிள்ளைகளையும் அவர்கள் குறைவாக பேசியதையும், வீட்டிற்குப் பின்புறமாக விளையாடிய சிறுவர்களை மாதவனிடம் சொல்லிக் கொடுத்து அடிக்க வைத்ததாகவும், மாமியார், நாத்தனார் பேச்சைக் கேட்டு அவன் அவர்களைத் திட்டியதாகவும் அந்தக் கோபத்தில் ஆர்த்தி கணவன், மாமியாரிடம் பேசாமல் இருந்தாகவும், அவர் கேட்டால் மட்டுமே பதிலுரைப்பதாகவும் சொன்னார்.

இளைய மகளின் திருமணத்திற்கான விருந்துச் சாதனங்களைக் கொடுக்க வந்தவர், மகள் குளியலை முடித்து அறையில் உடை மாற்றிக் கொண்டு இருந்ததால், அங்குச் சென்று பேசியபடி இருந்தார்.

ஆனால், அறைக்குள் பேச்சுச் சத்தம் கேட்டதால் வந்து பார்த்த மாமியார். உள்ளே இருவரும் தனியாக அமர்ந்து குசுகுசுவென ரகசியமாகப் பேசியதாகவும், அவரைக் கண்டும் காணாதது போல் நடந்து கொண்டதாகவும் கூறிவிட்டு, அர்ஜூனைப் பற்றி உயர்வாகப் பேசியது பிடிக்காமல், “உங்களுக்கு இருக்கும் சொத்து வசதி எல்லாம் எங்க கால் தூசிக்கு சமம். என் மகன்தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்து” என்று அவமதிப்பாகக் கூறிவிட்டு, மகளையும், பேரக்குழந்தைகளையும் குறைவாகப் பேசியதை, சுகந்தாவால் கேட்டுக் கொண்டு இருக்க முடியவில்லை.

வீட்டிற்குச் சென்றவரால் நிம்மதியாக இருக்க முடியாமல் போக, கோபம், விரக்தி, அழுகையில் இருந்த மகளைப் பார்க்க இரண்டே நாளில் அவர் மறுபடியும் வந்த இடத்தில், ‘எதற்காகச் சும்மா சும்மா வீட்டுக்கு வருகிறா? மகன் என்னை நம்பி விட்டுப் போயிருக்கான். இங்கே ஏதாவது நடந்தா நான்தான் பதில் சொல்லியாகணும். நல்லா பேசிட்டு இருந்தவ கிட்டே இல்லாததை சொல்லிக் கெடுத்து, குடும்பத்துல பிரச்சனையை வரப் பார்க்கிறா. மருமகளும், பிள்ளைகளும் பேசல. என் மகன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் எல்லாம் எப்படி செலவாகுதுன்னு எனக்குத் தெரியும்? அவன் மாசம் தோறும் பணம் அனுப்பியும், இவள் எதுக்கு கண்டவங்க கிட்டே வாங்கிக் கேட்கிறா? என்று …’ தேவை இல்லாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, தாயார் அங்கு வந்து அவமானப்படுவதை தாங்க முடியாமல், ‘மருமகன் இல்லாத நேரம் இனிமேல் இந்த வீட்டுக்கு வர வேணாம். எங்களுக்கு எதுவுமே நீங்க வாங்கி தர வேணாம்’ என்றாள் ஆர்த்தி.

அவசரப்பட்டு மகளின் வாழ்க்கையை தானே அழித்து விட்டோமே என்று நெஞ்சம் விம்மியவர், மருமகன் மட்டும் நல்லவனாக இருந்தால் போதாது. அவனது குடும்பமும் நல்லவர்களாக இருக்க வேண்டும். இல்லை, இப்படி தான் அவதிப்பட நேரும் என்று அனுபவகப் பூர்வமாக உணர்ந்து கொண்டு, செண்பகத்திடம் பேசாமலேயே வந்து விட்டார்.

பெற்ற மகளை மாமியார் தொடர்ந்து துன்புறுத்த, யாரால் அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள முடியும்? அவர் உள்ளம் மகளின் வாழ்க்கையை நினைத்துக் கலங்காதா? மகளை மாமியார் இப்படி நடத்துவதைக் கண் கூடாகவே பார்த்த சுகந்தா, தனது தங்கைகளிடம், மகனிடம் கூறி வருத்தப்பட்டால் அவர்கள் இவரை மதிப்பாரா? இல்லை எங்கேயேனும் பார்த்தாலும் மரியாதையாகத் தான் நடந்து கொள்வார்களா? செய்வதெல்லாம் தவறு. இதில் மரியாதையும், பேச்சும் கிடைக்கவில்லையென மகன், மகளிடம் சொல்லிக் கொடுத்துப் பிரச்சனையைப் பெருசு படுத்துகிறார்.

நடந்த அனைத்தையும் அறிந்த ஆராதனாவிடம், “அக்காவுக்குக் கிடைச்சிருக்கும் வாழ்க்கையை நம்மால் சரி பண்ண முடியுமா தெரியல. அவள் மனம் நொறுங்கிய கண்ணாடியைப் போல் ஆகிடுச்சு. நீயாவது உன் கணவர், குடுபத்துடன் சந்தோஷமா இரு” என்று கேட்டுக் கொண்டார்.

அவளும் சம்மதமாகத் தலையசைத்து, மறுநாள் அம்மாவின் உடன் பிறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டு, சரியாக நாலாவது நாள் குழித்துறைக்குப் பயணமானாள்.

ஒவ்வொருவர் வாழ்வில் ஏற்படும் அசம்பாவிதங்கள் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகிறது. அப்படிதான் அக்கா, தங்கையின் வாழ்க்கையிலும் நிகழ்ந்து வருகிறது.

அர்ஜூன் அவளிடம் முன்பு காட்டிய பாசம் அவள் கண்ணில் விழ மறுக்க, இப்போது புதியவனாகக் காட்சியளித்தான். அவனிடம் சாதாரணமாகப் பேசிச் சிரித்தவளால் இன்னும் கூடச் சமரசமாகச் செல்ல முடியவில்லை. தன்னை அறியாத ஒரு பயம் அவள் மனதில் எழுவதை அவளால் தடுக்கவும் முடியவில்லை. அது தெரிந்ததால் தான் அவளது கணவனும், மனைவியின் மனதை முழுவதுமாக மாற்றி விடும் எண்ணத்தில் இருக்கிறான்.

வீட்டு முன் பகுதியில் கார் வந்து நின்றதும், அண்ணிகள் இருவரும், தாயும் அவர்களை வரவேற்க அனைவரிடமும் புன்னகையுடன் பேசி மகிழ்ந்த ஆராதனா, அடுத்த நிமிடம் கன்றுக் குட்டியைக் காண ஓடி இருந்தாள். அவளைப் பற்றி ஏற்கனவே தெரிந்ததால் அவர்களும் சிரித்தபடி, பேசிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் இளவரசுவின் முகம் மட்டும் அமைதியுடன் காணப்பட்டது. மூன்று நாட்களாகவே தம்பி வேலை பார்க்கும் இடத்திற்கு வரவும் இல்லை. அவன் எங்குச் சென்றான் என்ற தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அவனது புல்லட்டை வீட்டிலும், அவன் வேலை பார்க்கும் இடத்திலும் காண முடியவில்லை. அப்படியானால் அவனுக்கு என்ன ஆனது? தங்களுக்குத் தெரியாமல் அவன் எதை மறைக்கிறான் என்று அதிலேயே மூழ்கி இருந்தவனுக்கு, தம்பி விபத்தில் சிக்கி எழ முடியாமல் இருந்து, அதனாலே வீட்டிலும் அவ்வாறு இருந்து இருக்கிறான் என்று தெரிய வந்தது.

வீட்டிற்கு வந்தவன் மன வேதனை தாளாமல் மனைவியிடம் கூறியதுடன், அப்படி ஆகும் அளவிற்கு என்ன நடந்தது? கணவன் மனைவிக்கு இடையே ஏதாவது பிரச்சனை உள்ளதா? தம்பியிடம் அவள் நல்ல விதமாக நடந்து கொள்கிறாளா? என்று சந்தேகத்துடன் பல கேள்விகளை எழுப்பினான்.

முன்பெல்லாம் எதையும் ஒழிவு மறைவின்றி பேசும் அர்ஜூன், இது விசயமாக அவளிடம் ஒன்றுமே கூறியதில்லை. அதற்காக அவனைக் குற்றம் சொல்லவும் முடியாது. மூன்று நாட்களாக வீட்டில் இல்லாமல், வந்த நேரத்திலிருந்து அறையில் தூங்கிக் கொண்டு இருப்பவனிடம் அப்படியென்ன பேசி விட முடியும்? அவன் சொல்வதை தானே நம்ப முடியும்?

இப்போது கணவன் கூறுவதைக் கேட்கும்போது அவர்களுக்கிடையில் ஏதாவது பிரச்சனையாகி இருக்குமோ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

இளவரசு, “நீதான் தம்பியிடம் நல்லா பேசுவியே, அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு முறை, பிரச்சனைகளைப் பற்றி அவன் உன்கிட்டே எதுவுமே சொல்வது இல்லயா? எதனால் மூணு நாள் வீட்டுக்கு வராம இருந்தான்? வந்த பிறகும் கீழே வராம ஏன் அவனோட அறையிலேயே இருந்தான்னு உனக்கு எதுவுமே தெரியாதா?” என்று கேட்டான்.

அவள் “தெரியாது” என்று கூறியதும், “உனக்கு எப்படி தெரியாம இருக்கும்? அவன் உன்கிட்டே சொல்லாம எதுவும் செய்யமாட்டானே? அப்படின்னா, கொழுந்தனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு, தாலி கட்டிய கணவனிடம் மறைக்கவா பார்க்கறே? அவன் வரட்டும் உனக்கு இருக்கு” என்று கோபமாகக் கூறியவன், மனைவியின் வார்த்தைகளை ஏற்க மறுத்தான்.

“கல்யாணத்துக்கு முன்னே எப்படி இருந்தாலும் இப்ப அவங்க நல்லா தானே இருக்காங்க. தம்பியை அவள் எவ்வளவு அக்கறையா கவனிச்சிக்கிட்டான்னு நீங்களும் தானே பார்த்தீங்க? பிறகும், ஏன் பழையதை கிளறி விட்டுப் பிரச்சனையைப் பெருசு படுத்தணும்? அர்ஜூன் மூணு நாள் வராததோடு அவனோட அறையிலிருந்து, ஆராதனா தானே முழு நேரமும் அவனைக் கவனிச்சிக்கிட்டா. அவளுக்கு முன்பு என்னால எப்படி ரகசியமா பேசவும், கேட்கவும் முடியும்? சொன்னா புரிஞ்சுக்காம இருக்கீங்களே…” என்று விசனப்பட்டாள்.

“அப்படின்னா, ஆரம்பத்துல இருந்து அவர்களுக்கிடையில் நடந்தது உனக்குத் தெரிஞ்சும், தெரியாதது போல் இருந்திருக்கே… இது மட்டும் தானா இல்லை இன்னும் எதை எல்லாம் எனக்குத் தெரியாம மறைச்சு வச்சிருக்கே?” என்று சீறினான்.

வினோதினி எப்படி சொல்லியும் அவன் கேட்க மறுக்கவும், “ஆரம்பத்துல அவர்களுக்கிடையில் சரியில்லாம இருந்தாலும், இப்ப நல்லா இருப்பதா தம்பி சொன்னார். இந்த நேரத்துல நீங்க ஏதாவது சொல்லிப் பிரச்சனையை பெருசு ஆக்கிடாதீங்க” என்று தவிப்புடன் கூறினாள்.

“அவன் எப்படிப்பட்ட ஆளு? எத்தனை எத்தனை வசதியான இடத்திலிருந்து சம்மந்தம் வந்துட்டு இருந்ததுன்னு உனக்குத் தெரியாதா? இந்தப் பொண்ணை பார்த்துத் தேர்வு செஞ்சது நீதானே? அதுக்காகவா அவளுக்காகச் சப்போர்ட் பண்ணி பேசுறே? தம்பிக்கும் அவளுக்கும் நிச்சயம் முடிஞ்ச பிறகு, எத்தனை பேர் அவங்க வீட்டைப் பற்றி தப்பு தப்பா சொன்னாங்க. அவனும் நீயும் யார் பேச்சையும் கேட்காம இருந்து, அவளையே இந்த வீட்டுக்கு மருமகளாகவும் கொண்டு வந்தீங்க. அப்படிப்பட்ட வீட்டுல பிறந்தவளுக்கு நம்ம தம்பியைப் பிடிக்கலயா?” என்று வெகுண்டு போய் கேட்டான்.

“உங்க கிட்டே யாரோ தப்பா சொல்லித் தந்திருங்காங்க. ஆராதனா ரொம்ப நல்ல பொண்ணு. அவசரப்படாம நடந்துக்கோங்க. அந்தப் பொண்ணு விபரீதமா ஏதாவது முடிவுக்கு வந்துட்டா, நம்ம தம்பியோட வாழ்க்கையே அழிஞ்சு போயிடும்” என்ற வார்த்தையால் அப்போதைக்கு கணவனைத் தடுத்து நிறுத்தினாள். ஆனாலும், அவன் உள்ளம் தம்பியை நினைத்து வேதனைப்பட்டது. ஆரம்பத்திலே தன்னிடம் சொல்லாமல் மறைத்த மனைவியின் மீது கோபமாக வந்தது. அன்று முதல் மனைவியிடம் அதிகமாகப் பேசுவதை தவிர்த்தான். அவள் ஏதாவது கேட்டாலும் உறுமலாகவே பதிலளித்தான்.

இப்போது, தம்பி முகத்தைப் பார்க்கும்போது அதில் தெரிந்த மகிழ்ச்சியும், அவனது மனைவியிடம் தெரிந்த மாற்றமும், அவனை வாய் திறக்க விடாமல் செய்தது.

ன்றிலிருந்து இரண்டாவது நாள் அஸ்மிதாவை பெண் பார்க்க வருவதாக வீட்டில் தகவல் கூறினான் விசாகன். மாப்பிள்ளை யார், படிப்பு, வீடென்று பலதையும் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள் மற்ற அனைவரும். ஆராதனா வினோதினி, விசாலியுடன் இணைந்து கொண்டு வீட்டு வேலைகளில் கவனத்தை செலுத்தி வந்தாள்.

பகல் பொழுதுகளில் சமையலில் உதவினாள். மாலை நேரம் வினோதினியின் மகன்களின் அருகில் அமர்ந்து படிப்புச் சொல்லிக் கொடுத்தாள். கணவன் வந்த பிறகு அவனுக்குத் தேவையானதை செய்து கொடுத்து, அவன் மனம் கோணாமல் நடந்து கொண்டாள்.

அண்ணன், அண்ணிக்கு இடையே நடந்த பிரச்சனையை அவன் அறியா விட்டாலும், அவர்கள் இருவரும் முன்பு போல இல்லாமல் இருப்பதையும், அண்ணியின் வாடிய முகத்தையும் கண்டு அது விசயமாக விசாரித்து, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனையையும் தெரிந்து கொண்டான்.

“மறைக்கணும்னு எதுவும் இல்ல அண்ணி. மூணு நாளா என்னால சுயமா இருக்க முடியாதப்போ எப்படி தெரியப்படுத்துவது? ஆராதனா மேலயும் தவறு இல்ல. நான்தான் அவசரப்பட்டுட்டேன். பாவம், அவள் நான் அப்படி நடந்துகிட்டதையும் மறந்து, எனக்குத் தேவையான அத்தனையும் செஞ்சு தந்து பாசமா பார்த்துக்கறா. இப்படி அவள் கவனிப்பதைப் பார்க்கறப்போ, அதுக்காக எத்தனை நேரம் வேணுமானாலும் அடிபடலாம்”

வினோதினி அதிர்ச்சியுடன் விழிகளை விரித்ததும் அவன் சத்தமாகச் சிரித்தான்.

“இப்ப, அவள் முன்னே மாதிரி இல்ல” என்ற அர்ஜூன் தனக்கு அடிப்பட்ட பிறகு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான். அவள் அமைதியாகக் கேட்டு இருந்தாள்.

“நான் இது விசயமா அண்ணனிடம் பேசுறேன். நீங்க எதையும் நினைச்சு வருத்தப்படாதீங்க” என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, தங்களைப் பார்த்தும் பாராமுகத்துடன் இருக்கும் பெரிய அண்ணனைச் சமாதானப்படுத்தும் பொருட்டு, அவனது காரிலேறி அமர்ந்தான்.

இளவரசு மனைவியிடம் பேசாமல் வந்து தம்பியைப் பார்த்ததும், “நீயும் என்னோடு வர்றியா? உன் வேலையைப் பார்க்கப் போகலயா?” என்று கேட்டான்.

அவன் “போகணும். வாங்க பேசிட்டுப் போகலாம்” என்று உரைத்து, ஓட்டுநரைச் சற்று நேரம் பொறுத்து வருமாறு கூறி விட்டு, அவன் மனதை உறுத்தும் விசயத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தான்.

அவனது உள்ளம் துடித்தது. கைகள் தம்பியின் தோளையும், முதுகையும் வருடிப் பார்த்தன.

“இப்ப உனக்கு ஒண்ணுமில்லயே… வாயேன் ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வரலாம்”

அண்ணனின் அன்பில் அவன் உள்ளம் சிலிர்த்தது.

“எனக்கு ஒண்ணுமில்ல அண்ணா. உங்க கொழுந்தியா என்னை நல்ல விதமா பார்த்துக்கறா. நீங்க இதைப் பெருசுபடுத்தாம இருங்க”

“இப்படி அடிப்பட்டு விழுந்தா தான் புருஷனோட அருமை அவளுக்குத் தெரியுமா? என் தம்பி தங்க கம்பியாக்கும்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறியதும், “அது உங்களுக்குத் தெரியும். அவளுக்குத் தெரியாது இல்லயா?” என்று கேட்டான்.

அவன் உம்மென அமர்ந்திருக்க, “அவள் என் மனைவி அண்ணா. என்னை நம்பி வந்தவள். வீட்டுல ஏற்பட்ட பிரச்சனைகளில் மூழ்கித் தனக்கென எதையும் அனுபவிக்காம பயத்துல திருமணம் செய்ய மறுத்தவள். கொஞ்சம் கொஞ்சமா தான் அவளை மாத்த முடியும். நீங்க இதை விடுங்க. நான் பார்த்துக்கறேன். அண்ணி ரொம்ப நல்லவங்க! என்மேல உள்ள கோபத்தை அவரிடம் காட்டாதீங்க” என்றான்.

“நீ வர்றதுக்குள்ளே இதையும் சொல்லித் தந்துட்டாளா?” அவன் வீம்புடன் கேட்டதும் சிரித்து விட்டான் அர்ஜூன்.

“அண்ணி சொல்லாட்டாலும் எனக்குத் தெரியும். நீங்க தான் எப்பவும் எங்களை ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பீங்களே, இப்ப பார்த்தும் பார்க்காதது போலிருப்பதும், அண்ணி கிட்டே முறைப்பதும், கோபப்படுவதையும் பார்த்ததால், நானே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்”

“ம்ம்… அதை விடு. இப்போ உங்களுக்கு இடையில் எல்லாம் சரியாகிடுச்சா?”

“முக்கால் கிணறு தாண்டிட்டேன். இன்னும் கால்தான் பாக்கி இருக்கு. அதை நான் பார்த்துக்கறேன்” என்றதும், தம்பியை அணைத்தான் இளவரசு.

“சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டது நீயும் கூடத்தான். கண்டிப்பா, ஆண்டவன் உன்னை நல்லாக்கி வைப்பார்!” என்று ஆசிர்வதித்தான்.

அண்ணன் மனம் மாறியதில் அவன் உள்ளமும் நெகிழ்ந்து போனது.

வீட்டில் அனைத்தும் தயாராக இருக்க, ஒரு நல்ல நாளில் மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்தனர்.

மாப்பிள்ளை சந்தோஷை பார்த்த அனைவருக்கும் பிடித்திருக்க, அவனது கண்கள் அங்கும் இங்குமாக அலைந்து எதையோ தேடிக்கொண்டு இருந்தன.

பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு மூத்த மருமகள்கள் இருவரும் வந்து கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னே ஆராதனா!

கூடத்தில் அமர்ந்திருந்த அனைவரையும் பார்த்துக் கை குவித்து வணங்கிய அஸ்மிதா, விசாலியின் கையிலிருந்த காஃபி கோப்பைகள் நிறைந்த டிரேயை வாங்கினாள்.

“மாப்பிள்ளை அவர்தான், நல்லா பார்த்துக்கோ” என்ற விசாகனின் குரலில் சிரிப்பொலி எழுந்தது. அவளும் புன்னகையுடன் அவனைப் பார்த்து விட்டு டிரேயை நீட்டினாள்.

மாப்பிள்ளை யாரனெ தெரிந்து கொள்ள லோசாக தலையை சரித்துப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாள் ஆராதனா. அவனது பார்வையும் அவளிடம் தான் இருந்தது. உதடுகளில் கேலி புன்னகையும் படர்ந்தன.

வந்திருந்த அனைவருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. திருமணம் செய்வது குறித்துப் பேச்சு நடந்தது. அவர்களின் முன்பு இயல்பாக இருக்க முடியாமல் அவள் தடுமாறினாள்.

இளவரசு அனைவரிடமும் தனது மனைவி, குடும்பத்தை அறிமுகப்படுத்தினான். ஆராதனாவிற்கு உடனே அங்கிருந்து சென்று விட வேண்டும் போலிருந்தது. ஒரு நிமிடம் அந்த முகத்தைப் பார்க்கவே அவளால் முடியவில்லை. இதில் எப்படி இதே வீட்டிற்கு மருமகனாக வந்த பிறகு பார்க்க முடியும்?

தன் மன உணர்வுகளை அடக்கப் போராடியவள், வினோதினியின் பின்புறமாகச் சென்று மறைந்து கொண்டாள். சந்தோஷின் கண்கள் விசமத்துடன் அவளைப் பார்த்தன.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும், சந்தோஷின் வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறிச் செல்ல, அஸ்மிதாவின் திருமண விசயமான பேச்சு நடந்தது. அங்கு இருக்கப் பிடிக்காமல் வந்து கன்றுக்குட்டியை கட்டிக் கொண்டவளின் கண்கள், தனது விதியை நினைத்துக் கண்ணீர் வடித்தது.

அர்ஜூன் மனைவியிடம் சொல்லி விட்டு வெளியே செல்ல அவளைத் தேடி வந்தான். அவள் இருக்கும் தோற்றம் அவன் உதட்டில் புன்னகையை மலரச் செய்தது.

“என்ன தனு, இன்னும் உங்க கொஞ்சிப் பேசுவது முடிவுக்கு வரலயா? உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்கறப்போ எனக்குப் பொறாமையா இருக்கு. உன் அணைப்பில் இருப்பது நானாக இருக்க கூடாதான்னு?” என்று கூறியதும், அவள் அவசரமாகக் கண்ணீரைத் துடைத்தாள்.

“எனக்கு வெளியே போகணும். எழுந்து வர்றியா?”

அவள் கலங்கிய கண்களை அவனிடம் காட்டாமல் குனிந்து கொள்ள, அவள் நிற்கும் நிலையைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தான்.

“அவசரப்பட்டு உன் சம்மதம் இல்லாம தொட மாட்டேன்னு சொன்னது தப்பா போயிடுச்சு. இன்னும் எத்தனை நாளைக்கு காத்து இருக்கணுமோ? தெரியல” அவன் பெருமூச்சு விட்டபடி கூறியதும், அவள் உதட்டைக் கடித்து தன்னை அடக்கினாள்.

“தனுமா!! வெளியே போயிட்டு வர நேரமாகும்டா. நீ நேரத்துக்கு சாப்பிட்டு ஓய்வெடு. சரியா?”

அவள் நிமிர்ந்து பார்த்தாள். கணவனின் அழைப்பில் மனதிற்குள் ஏதோ ஒன்று புதியதாக முளை விட்டது. சிறு முறுவலுடன் தலையசைத்தாள்.

“இப்படி தலையசைப்பது எப்போதாவது மட்டும்தான் இருக்கணுமே தவிர, எப்பவும் இருக்க கூடாது”

உதடுகளில் மலர்ந்த புன்னகையுடன், “சரிங்க” என்றதும், அவன் சிரித்தபடி சென்று விட்டான்.

போகும் கணவனைப் பார்த்து நின்றவளின் உள்ளம், யார் என்ன சொன்னாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், தன் கணவன் தனக்காக இருக்கிறான் என்று உறுதியாக நம்பியது.

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்…

தொடருக்கான அடுத்த பதிவு இதோ: https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-18/

8 thoughts on “அக்னி சாட்சி”

  1. Pingback: அக்னி சாட்சி 16 - Praveena Thangaraj Novels

  2. CRVS2797

    அட… இந்த சந்தோஷ் பார்வையே சரியில்லையே.
    இவன் என்ன செய்யப் போறானோ தெரியலையே..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *