Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 1

அதிகாலையில் உதயமாகி உலகுக்கே உயிர் கொடுக்கும் செங்கதிரோன், தனது பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு ஓய்வெடுக்கச் சென்றிருக்க, அண்ணனின் பளீரென்ற தோற்றத்திற்கு முன்பு ஈடுகொடுக்க முடியாமல், அத்தனை நேரமாக மறைந்திருந்த தம்பியவன், கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து விடுபட்டு வெளியேறி, பூமி பரப்பில் படிந்துள்ள வெம்மையை தணிக்கும் விதமாக, குளுமையையும், வெண்ணிற ஒளிகளையும், இதமான இளந்தென்றலையும் அனுப்பி, அனைவரையும் சாந்தப்படுத்திக் கொண்டிருந்தது. நேரம் ஏழு மணி கடந்தும் இன்னும் வேலைக்குச் சென்ற மகளைக் காணாமல், அவளது வரவை எதிர்பார்த்து இருந்தார் சுகந்தா! நாயகி ஆராதனாவின் தாயார்!!

தன் அருகில் நிற்பது, தனது தாய் வயது பெண்மணி என்று தெரிந்தும், அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும், கேடு கெட்ட மாக்கள் நிறைந்த இச்சமுதாயத்தில், வயதுப் பெண்ணை வெளியே அனுப்பி விட்டு, அவள் வீடு வந்து சேரும் வரை, நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு காத்திருக்கும் சூழ்நிலைதான், இன்றைய காலத்தில் நிலவுகிறது!

அக்காவாக, தங்கையாக, மகளாக, தாயாக, பார்க்க வேண்டிய பெண்ணினத்தின் மீது, பாசப் பார்வையைக் காண்பிப்பதற்கு மாறாக, காமப் பார்வையுடன் அலையும் வெறி பிடித்த காமுகர்கள் உள்ள நம் நாட்டில், பகல் பொழுதில் ஒரு பெண் சுதந்திரமாக வெளியே சென்று விட்டு வர முடியாத நிலையில், இருள் பரவப் போகும் நேரத்திலும் மகளைக் காணாததால், அவரது பார்வை வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயுமாக அலைந்தது. அதைவிட அவள் வந்ததும் சொல்லப் போகும் விசயம் வேறு, அவரைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியது.

அவரை வெகுநேரம் காக்க வைக்காமல், வீட்டிற்கு முன் பகுதியில் உள்ள பேருந்தில் வந்து இறங்கினாள் ஆராதனா!

மகளின் தலை தெரிந்ததும் பெற்றவள் மனம் நிம்மதியாக உணர்ந்தது.

அதைப் பார்த்துக்கொண்டே வந்து, “எத்தனை நாள் சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு முடிவோடு தான் இருக்கறீங்களா? ஏன் இப்படி நித்தமும் நான் வேலைக்குப் போயிட்டு, வீட்டுக்கு வருமுன் இத்தனை டென்சனா இருக்கீங்க? வழக்கமான பஸ், அதே பஸ் நிறுத்தம், நேரம் கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம். வேறு எங்குப் போயிடப் போறேன் நான்?” சிறு அதட்டலுடன் அவள் கேட்க, அவரது முகம் புன்னகையை உதிர்த்தது.

“கொலைப்பசி, விட்டா உங்களையே கடிச்சு தின்னுருவேன். சீக்கிரமா சாப்பாட்டை எடுத்து வையுங்க” அவரின் பதிலையும் எதிர்பாராமல் அவள் வேகமாகச் சென்று விட, அவரும் சமையலறையில் நுழைந்து நெத்திலி மீன் குழம்புடன், செம்பா அரிசியில் செய்யப்பட்ட சாதத்தை எடுத்துச் சில்வர் தட்டில் வைத்தார்.

எம்.எஸ்.சி வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்து விட்டு, தற்சமயம் படிப்பு சம்மந்தமான அலுவலகம் ஒன்றிற்கு, சில மாதங்களாகப் பணிபுரியச் சென்று வருகிறாள் ஆராதனா. அவளது மெல்லிய உடல்வாகிற்குப் பொருத்தமான உடையைத் தேர்வு செய்யாமல், எப்போதும் தளர்ந்த, நீளமான சுடிதாரை மட்டுமே அணிகிறாள். கூந்தலை விரித்து விட்டு, லேசான ஒப்பனையுடன் பணிக்குச் சென்று வருகிறாள். அதுவே அவளை அழகானவளாகக் காட்டும். என்றேனும் புடவை அணிந்தால் அவளது தாயின் முகம் மலர்ந்து போய் விடும்.

“ஆயிரம் துணியை உடுத்தாலும், புடவை தான் பெண்ணுக்கு அழகு!” என்பார் சுகந்தா.

“அதே அழகுதான் பல நேரங்களில் ஆபத்தாகவும் மாறிடுது. இந்தக் காலத்துல யாரும் அதிகமா புடவை உடுப்பதில்லை. சுடிதார் தான் பாதுகாப்பு. பயணத்திற்கும் உகந்தது!” என்று எதிர்வாதம் புரிவாள். 

ஆனால், அவர் உள்ளம் கல்லூரி நாட்களில் மகளிடம் காணப்பட்ட சுறுசுறுப்பும், புன்னகையும், குறும்புத்தனமும், விசேஷ நாட்களில் இருக்கிற குதூகலமும், புடவையைக் கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன்பு நின்று நேரம் பார்க்காமல் அலங்கரித்துப் போவதும் ஞாபகத்திற்கு வந்தது. ‘அப்படி இருந்தவள் இப்போது எப்படி ஆகி விட்டாள்?’ என்று வருந்தியது.

சற்று நேரத்தில் இரவு ஆடையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்து, தொலைக்காட்சியைப் பார்த்தபடி இருக்கும் மகளைப் பார்த்தவர், வேகமாக உணவை எடுத்து வந்து கொடுத்தார். அவளும் உணவின் ருசியைப் பார்க்காமல் உண்டுவிட்டு எழுந்து செல்ல, அதைப் பார்த்திருந்த சுகந்தாவின் கண் கலங்கியது.

அவளது அப்பா அவர்களுடன் இருக்கும்போது, எப்படிப்பட்ட உணவு வகைகளை உண்டு வந்து, இப்போது கிடைப்பதை உண்டு பழகி விட்டாளே என்று கவலைப்பட்டார்.

கந்தவேலுவிற்கு ஒரு மகன் இரண்டு மகள் இருந்தாலும், இளைய மகள் ஆராதனாவின் மீதுதான் அதிகப்படியான பாசம் உள்ளது. எவ்வளவு தின்பண்டங்களை வாங்கி வந்து கொடுத்தாலும் அவள் திருப்தியடையாமல், தனியாக வாங்கி வந்து கொடுக்கும் சிறிய அளவிலே நிறைவாக உணர்வாள். பூ, பண்டம் எதுவாக இருந்தாலும், அம்மா, அக்காவை விடக் குறைவாக இருந்து விட்டால், “அவங்களை விட எனக்குக் கொஞ்சமா தான் இருக்கு” என்று முகத்தை இறக்கி வைத்துக் கொள்வாள். சிறு வயதில் அவளுக்கு எதுவுமே தெரியாத பருவத்தில் அப்படி நடந்து கொள்வதால், அவரும் இளைய மகளுக்கு அவள் விருப்பம் அறிந்து செயல்படுவார். அப்படி அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த அப்பாவால் தான், பின்னாளில் தங்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட போகிறது என்று, அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை!!

உண்ட தட்டுடன் அவள் எழுந்து செல்ல, மகள் வந்ததும் எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கம், அவரை இயல்பாக இருக்க விடாமல் செய்தது.

துவாலையில் முகத்தைத் துடைத்தபடி அங்கு வந்த ஆராதனா, மீண்டும் தொலைக்காட்சியில் கண்களை ஓட விட்டாள்.

சுகந்தா, “ஆரா உன்கிட்டே ஒரு முக்கியமான விசயமா பேசணும்” என்று மெதுவாகக் கூறியதும், அவள் “சொல்லுங்க அம்மா!” என்றாள்.

“அது… என்று தயங்கியவர், உன்னைப் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து, ஞாயிற்றுக்கிழமை வர்றாங்களாம்”

அவள் சடாரென நிமிர்ந்து பார்த்தாள். முகம் கோபத்தில் கொந்தளித்தது. “இந்தப் பேச்சை எடுக்க வேணாம்னு எத்தனை நாள் சொன்னாலும் கேட்பதில்லயா? கல்யாணம் பண்ணிட்டு போயி என்ன சாதிச்சிட போறேன்? நம்ம வீட்டுல இல்லாதது அங்கே என்ன கிடைச்சிட போகுது? ஏற்கனவே கட்டிக்கிட்டு வந்தவங்களும், இங்கே இருந்து கட்டிக்கிட்டுப் போனவங்களும் ரொம்ப நல்லா குளுகுளூன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் நானும் அதே வாழ்க்கையை அனுபவிக்கணுமா?”

மகள் எதற்காக அப்படி பேசுகிறாள் என்று தெரிந்ததால், அவரது கண்கள் கலங்கி விட்டன.

“ஒரு ஆண் தப்பு செஞ்சா, ஊர்ல உள்ள எல்லா ஆண்களும் செய்வாங்கன்னு அர்த்தமில்ல”

“ஒரு ஆண் மட்டும் இல்ல! நான் பார்த்துப் பழகியதில் முக்காலும், அப்படிதான்!!” அவள் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு கூறியதும், “எங்க அப்பா, தம்பிங்க, தங்கை கணவருங்க எல்லாம் நல்லவங்க இல்லயா? இப்படியா, அவங்க தொட்டுத் தாலிகட்டிய மனைவியை விட்டு, வேறு பெண்ணோடு போயிட்டாங்க? உடம்பு முழுக்க அழுக்கு இரத்தம், சுயநலம் பிடித்த தான் தோன்றித்தனமான குணமுடையவர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரியாமல் மிருகத்தைப் போல், காணும் பெண்களிடம் எல்லாம் காமத்துடன் அணுக எண்ணுபவர்கள், குடும்பத்து மீதான பாசத்தையும் உதறித் தள்ளிவிட்டு, வெறும் உடல் சுகத்தை மட்டுமே பெரிதாக எண்ணி, அத்தனை நாள் வளர்த்த பெற்றவர்கள், இரத்தமும் சதையுமாக வளர்ந்த உடன்பிறப்புகளை விட்டு, தன்னை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பி வருகின்ற மனைவியை மறந்து போயிடுறாங்க. அதுக்காக இந்த உலகத்துல உள்ள யாருமே கல்யாணம் செஞ்சிக்காமலா இருக்காங்க? நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றே?” என்று குமுறினார்.

அவள் அமைதியாக இருப்பது போல காட்டிக் கொண்டு, “எனக்கு யாரையும் கல்யாணம் செய்யும் அபிப்ராயம் இல்ல. உங்களுக்குத் துணையா கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடறேன்” என்று சொன்னதும், அவர் அழுது விட்டார்.

ஆராதனா அதற்கு மேலும், அங்கிருந்து பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், எழுந்து சென்று விட்டாள்.

சுகந்தா, வாய் விட்டுக் கதறியழ முடியாமல் இருந்தார். அவரது அழுகை சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து விட்டால், பிறகு ஒன்றும் இல்லாத விசயத்தையும் காது, மூக்கு வைத்துப் பேசிப் பெரியதாக்கி விடுவார்கள். பக்கத்து ஊரில் உள்ள மகள் ஆர்த்தியிடம் சென்று, எதையாவது சொல்லி வம்பு இழுப்பார்கள். அதிலும், அவளது மாமியார் அறிந்தால் போதும். அதையே நீட்டி முழங்க!

விழிகள் இரண்டும் கண்ணீரை உகுத்தன. அவர் உள்ளம் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் துடித்தது. தனக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலையாகி விட்டது என்று தன்னைப் படைத்தவரிடம் கேட்டார்… கேட்கிறார்… கேட்டுக் கொண்டே இருக்கிறார்!! ஆனால், அவரது கேள்விக்கான பதில், குரங்கு கையில் கிடைத்த பூமாலைக்கும், நன்றாகக் கசக்கிப் பிழிந்த மலரின் நிலையையும் தான் எடுத்துரைக்கிறது. தரையில் விழுந்து நொறுங்கி விட்ட கண்ணாடி ஜாடியை, எப்படி மறுபடியும் அதேபோலக் கொண்டு வர முடியாதோ? அப்படிதான் ஒரு சிலரின் வாழ்க்கையும்!

இதற்கு விதி என்று சாயம் பூசுபவர்கள், தவறு செய்த ஆணை சில நாட்களுக்குப் பிறகு, எதுவும் கூறாமல் விட்டு விட்டு, நாளாக நாளாக நட்புடன் நடந்து கொள்கின்றனர். அவர்கள் வீட்டிற்குச் சென்று ஒட்டி உறவாடுகின்றனர். தங்களது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, குடும்ப சகிதம் வர அழைப்பு விடுக்கின்றனர். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட பெண், ஆயுசுக்கும் அல்லல்பட நேர்கிறது. அவளது ராசியையும், நடத்தையையும் குறை கூறி, உறவினரிடம், நண்பரிடம், அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நட்புடன் பழகினால் கூட, அவள்மீது களங்கத்தை சுமத்த காத்து இருக்கிறது.

தாயின் அழுகுரல் செவியைத் துளைத்தது. அவளது உள்ளமும் நடந்ததை மறக்க முடியாமல் அவதிப்பட்டது. எத்தனை நாட்கள் இப்படியே மறுத்துக் கூறி அவரைக் கண்ணீர் விட வைப்பது என்று வருந்தினாலும், உடனடியாகத் தன்னைப் பெற்றவளின் ஆசையை நிறைவேற்ற விடாமல், பட்ட காயங்கள் அவளை வலிக்க வைத்தது. ‘சூடு கண்ட பூனை மறுபடியும் பால் பாத்திரத்தைச் சீண்டாது’ என்பது போல, ஆண்களால் அவள் பட்ட துயரங்கள், அதிலிருந்து மீள முடியாமல் செய்தது. ‘கல்யாணம் செய்துகொள். வருபவன் உன்னைப் பூவைப் போலத் தாங்குவான். பொன்னால் அலங்கரித்து விதவிதமான உடைகளை வாங்கி தருவான். மார்பில் போட்டுத் தாலாட்டுவான். தங்க தட்டில் உண்ணச் செய்வான்’ என்று கூறி, திருமணமும் செய்து வைத்து விடுகிறார்கள்.

அங்குச் சென்ற பிறகுதான் தெரிகிறது. சென்ற இடம் எப்படிப்பட்டது என்று! நேரம் கடந்து சென்றது. தாயின் கண்ணீரும், ஏக்கமும் அதிகரித்தது. அவரை அப்படியே விட்டு விட மனமின்றி அருகில் சென்று பார்த்தாள்.

“அம்மா, சாப்பிட வாங்க!”

அவர் பதில் கூறாமல் இருந்ததும், “எனக்குத் தான் விருப்பம் இல்லன்னு சொல்றேனே! பிறகும் எதுக்கு அதைப் பற்றி பேசிப் பேசி, பிரச்சனையை வர வைக்கப் பார்க்கணும். அப்படியே, விட்டுடலாமே?” அவள் கசப்பாகக் கேட்டதும், அவர் முந்தானையை வாயில் வைத்து விம்மினார்.

அவள் தானே உணவை எடுத்து வந்து, அவரை உண்ணச் செய்தாள்.

அப்பா கந்தவேலு, அக்கா ஆர்த்தி, அண்ணன் மதிவாணன் பற்றி சற்று நேரம் பேசிவிட்டு, தனது ஆர்வமின்மையை தெளிவாக எடுத்துச் சொன்னாள். அப்படியும் அவர் கேட்காமல் இருக்கவே, “சரி உங்க விருப்பப்படியே செய்றேன். ஆனால், என் கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா மட்டும்தான், நான் அவரைக் கட்டிக்குவேன். இல்ல, இந்தக் கல்யாணமும் இப்போதைக்கு இல்ல!” அவள் அத்துடன் சென்று விட, அவர் உள்ளம் மகள் என்ன கண்டிஷன் போடப் போகிறாளோ என்று அஞ்சியது!

ஞாயிறன்று மாலை நேரம் பெண் பார்க்கும் படலம் நடந்தது.

மாப்பிள்ளை அர்ஜூனின் உடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும், அவர்களின் மனைவிமார்களும், குழந்தையுடன், அவனது தங்கை அஸ்மிதாவும் வந்து இருந்தனர். அவர்களின் பெற்றோர் மகனுக்குப் பார்க்க வந்திருக்கும் பெண்ணை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்க, எந்தவித முகப்பூச்சும் இல்லாமல், வீட்டில் எப்போதும் இருப்பது போலவே அவள் வந்து அனைவரையும் வணங்கி விட்டு, அக்கா ஆர்த்தியிடமிருந்து காஃபி கோப்பையைப் பெற்று, ஹாலில் அமர்ந்து இருப்பவர்களுக்குக் கொடுத்தாள்.

மறந்தும் அவள் அர்ஜூனை நிமிர்ந்து பார்க்கவில்லை. உதட்டில் அரும்பிய புன்னகையுடன் அவன் அவளையே பார்த்திருக்க, காஃபி கோப்பையைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்து விட்டாள் ஆராதனா.

அவளது நடவடிக்கையை அவன் உள்ளூர ரசித்தபடி, கையிலிருந்த நுரை நிரம்பிய காஃபியை உதட்டருகே கொண்டு சென்று ருசி பார்த்தான்.

அவனது பெற்றோருக்கு மகனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியே போதுமானதாக இருக்க, அவர்களின் திருமணத்தை நடத்துவது குறித்து, ஊருக்குச் சென்றதும் கலந்து ஆலோசித்து விட்டு, தகவல் கூறுவதாகச் சொன்னார்கள். சுகந்தாவும் சந்தோசமாகத் தலையை ஆட்டினார்.

மருமகனின் அழகும், கம்பீரமும், தோற்றமும் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால், பொண்ணுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று தெரியாமல் தடுமாறிய அர்ஜூன், அதை எப்படி கேட்பது என்று தயங்கினான்.

அதைப் புரிந்து கொண்டு, அவனது பெரிய அண்ணி வினோதினி, அவன் செவியருகே சென்று கிசுகிசுக்க, அவனும் புன்னகையுடன் தலையசைத்தான்.

“மாப்பிள்ளைக்குப் பொண்ணு கிட்டே ஏதே கேட்கணுமாம். கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டும்” என்று கூறியதும், அவர்கள் அனைவரும் ஏற்று தலையசைக்க, சுகந்தா மட்டும் படபடப்புடன் காணப்பட்டார்.

‘மகள் ஏதாவது சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடுவாளோ’ என்ற பயம், அவர் மனதை சூழ்ந்து கொண்டு வாட்டியது.

அவள் இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கு இருந்த எல்லோரையும் வெளியே போகச் சொல்லி விட்டு, அவனை மட்டும் உள்ளே போகச் சொன்னார்கள். கதவில் தொங்கிய திரைச்சீலை அவர்கள் இருவரையும் மறைத்துக் கொள்ள, திரும்பிப் பாராமல் நின்ற மங்கையவளை, உச்சி முதல் பாதம்வரை வருடியவனது கண்கள், அவள் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டது. ஆனால், அவள்தான் திரும்புகிறவளாகத் தெரியவில்லை.

“எக்ஸ்கியூஸ் மீ!”

அவனது அழைப்பில் அதற்கு மேலும் தெரியாதது போல் காட்டிக் கொள்ள முடியாமல் மெதுவாகத் திரும்பினாள்.

கால் பகுதியிலிருந்து மார்பு வரை சென்ற அவளது கண்கள், அதற்கு மேல் செல்வதற்கு துணிவின்றி விலகிக் கொண்டது.

அவன் சிரிப்பினூடு, “இந்தச் சட்டையும், பேன்ட்டும் குழித்துறையில் உள்ள ஜவுளி கடையில் எடுத்தது. நல்லா இருக்கா?” என்று கேட்க, அவள் புரியாமல் திரும்பிப் பார்த்தாள்.

இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டன. அர்ஜூனின் பார்வை வீச்சு தாளாமல், அவள் பார்வையை மாற்றிக் கொள்ள, “இல்ல, நான் போட்டுருக்கும் டிரெஸ்ஸை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது. ஒருவேளை, உங்களுக்கு இந்தக் காலத்து பொண்ணுங்க போல டேஸ்ட்னு நினைச்சு சொன்னேன். நீங்களும் இப்படிப் போட்டா சூப்பரா இருப்பீங்க!” என்று குறும்பாகக் கூறினான்.

அவள் முறைத்தபடி திரும்பி விட, “இந்த முறைப்பும், அமைதியும் கூட அழகாகத்தான் இருக்கு. யாரோ என்கிட்டே பொண்ணு ரொம்ப வாயாடி. துடுதுடுன்னு எப்பவும் பேசிட்டே இருப்பான்னு சொன்னதை நம்பி, நானும் உங்களைத் தப்பா நினைச்சிட்டேன். இப்ப இருக்கற மாதிரியே நம்ம கல்யாணத்துக்குப் பிறகும் இருந்தா, எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்” அவனது கூற்றைக் கேட்டு உதட்டைக் கடித்த ஆராதனா, அவனிடம் தான் பேச வேண்டியதை மறந்து விட்டாள்.

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குல்ல?”

அவனது எதிர்பார்ப்பான பதிலில், “இல்லன்னு சொன்னா, இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவீங்களா?” என்று துடுக்குத்தனத்துடன் அவள் கேட்டதும், “காரணம் சரியா இருந்தா யோசிக்கலாம்” என்றான் அவன்.

“ம்ம்… காரணம்! நீங்க ரொம்ப பேசுறீங்க. சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிச்ச கலர்ல இருக்கீங்க. சிகரெட், மது எந்தப் பழக்கமும் இல்லாத பச்சைப் பிள்ளையா தெரிகிறீங்க. நெற்றியில் சந்தனம், மேல் நோக்கிய வாரிய கேசம், நூற்று அம்பது கிலோ உடம்போடு பெரிய ஆளா தெரிகிறீங்க. இப்பவே இப்படி வண்ணமா இருப்பவர், இன்னும் நாளாக நாளாகப் பூசணிக்காய் மாதிரி வீங்கிப் போயிடுவீங்க. உங்களை எனக்குப் பிடிக்கல!” அவள் நேரடியாகவே கூறியதும், அவன் உதட்டைக் கடித்து சிரிப்பை மென்றான்.

“அப்ப எப்படி இருக்கணும்?”

“கருகருன்னு கருந்திராட்சை நிறத்தில், வேட்டி, சட்டை அணிஞ்சிட்டு, கம்பீரமா, கணீர்னு பேசிட்டு அசல் கிராமத்தான் மாதிரி இருக்கணும். இந்த மாடர்ன் மேன் எனக்கு வேணாம்! உங்களுக்கு ஏத்த மாதிரியான, நல்ல அழகான பெண்ணைப் பார்த்துக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க!”

அவனுக்குச் சிரிப்பை அடக்கச் சிரமமாக இருந்தது. ஆராதனா இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம், புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் பொலிவான தோற்றத்துடன், கண்ணைக் கவரும் விதமாகவும் தெரிந்தாள்.

நேருக்கு நேராக அவனைப் பார்த்து ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. நீ இப்படி இருக்கிறாய்’ என்று கூறியதுடன், கிண்டலாகப் பேசிய அவளது வார்த்தைகள், அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“அவ்வளவு தானா? இன்னும் ஏதாவது இருக்கா?” அவளிடம் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது போலும், அவனும் விடாமல் வாயாடினான்.

“நான் யாரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும், கல்யாணத்துக்குப் பிறகும் வேலைக்குப் போவேன். அதுல வருகிற சம்பாத்தியத்தை என் குடும்பத்துக்குக் கொடுப்பேன். எங்க அம்மா, அக்காவுக்குத் தேவையான அத்தனையும் செஞ்சு கொடுத்து, அவங்களையும் பத்திரமா பார்த்துக்குவேன். எனக்குத் தோணும் நேரம், எங்க அம்மாவைப் பார்க்க வருவேன். அவங்களோடு எத்தனை நாளானாலும் தங்குவேன். குறிப்பா, குழந்தை பெத்துக்க மாட்டேன். இதுக்கு சம்மதிச்சா மட்டும்தான் கல்யாணம் பண்ண சம்மதிப்பேன்” என்றாள் ஆராதனா. பதில் கூறாமல் அவளையே பார்த்து நின்றான் அர்ஜூன்!!

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்…

அடுத்த அத்தியாயத்திற்கான லிங் இதோ… https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3/

16 thoughts on “அக்னி சாட்சி”

 1. Avatar

  அவங்க அப்பா என்ன செஞ்சாரு!!??… இவளுக்கு ஏன் ஆண்கள் மேல கோவம்!??… குழந்தை ஏன் வேணாம்??… இன்ட்ரஸ்டிங்!!..

 2. CRVS 2797

  அட… இம்புட்டு பேசிட்டு, குழந்தை பெத்துக்க மாட்டேனுட்டாளே ஏன்?
  ஒருவேளை, அவங்கப்பன்காரன் செஞ்ச வேலையை இவனும் செய்திடுவானோன்னு பயப்படுறாளோ…???

 3. Avatar

  நல்ல ஆரம்பம்.

  மாப்பிள்ளை – பெண் பார்க்கும் படலத்தில் ஆராதனா முதலில் அமைதியாக இருந்தாலும், போகப் போக சிறு பட்டாசாக வெடித்தது நன்றாக இருந்தது. அர்ஜூன் என்ன சொல்லுவான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *