Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 3

ண்ணியின் முகத்தில் படிந்த அதிர்ச்சி ரேகைகளைக் கவனித்து விட்டு, “அவளை உங்களுக்குப் பிடிச்சிருக்கா அண்ணி?” என்று கேட்டான் அர்ஜூன்.

விழிகளைத் தட்டி மீண்டவள், “ம்ம்… எனக்குப் பிடிச்சு எதுவும் ஆகப்போவது இல்ல. உனக்குப் பிடிச்சிருக்கா? நீ அவளைக் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறியா?” என்று கேட்டாள்.

“பார்த்ததும் பிடிச்சதால் தான், அவகிட்டே பேசுற ஆசையில் போனேன். அவளோ முகத்துக்கு நேரா ‘என்னைப் பிடிக்கல’ன்னு சொன்னதோடு, இப்படியும் சொல்லிட்டா”

என்ன சொல்வதென்ற தடுமாற்றம், அவளை வாய் திறக்க விடாமல் செய்தது.

“இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கே?”

“அண்ணி, எனக்கு அவளை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!! இத்தனை தூரம் குறும்பாகவும், கிண்டலாகவும், கோபமாகவும் பேசிட்டு, ‘என் கண்டிஷன் இதுதான், உனக்குச் சம்மதம்னா கட்டு. இல்லன்னா போ’ன்னு சொன்னா பாருங்க, அப்பவே, நான் அவளைக் கட்டுறதா முடிவு பண்ணிட்டேன்”

“அவசரப்படாதே! அவள் எதுக்காக அப்படி சொன்னான்னு தெரியாம, நீயாகவே ஒரு முடிவுக்கு வந்துட்டு, நாளைக்கு சிக்கலில் மாட்டாதே” அவள் அவசரமாகக் குறுக்கிட்டதும், “இல்ல அண்ணி, அவள் மனசுல ஏதோ ஒரு கஷ்டம், நிம்மதி கேடு. ஏதாவது பாதிப்பினால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். அதுல இருந்து மீள முடியாம தப்பியோட, இப்படி போலியா வேடமிடலாம். ஆனால், நான் அவளைக் கட்டிக்கிட்டு வந்து பழைய மாதிரி மீட்டெடுப்பேன்”

அவனது உறுதி அவளை அசைத்தது.

“அர்ஜூன்!”

“ஆமாம் அண்ணி, எனக்கு நீங்க எல்லாரும் பொண்ணு பார்க்க வர்றப்போ, ‘நான் வரமாட்டேன். நீங்களா பார்த்து முடியுங்க’ன்னு சொன்னேன். நீங்களும் கேட்காம, ‘பொண்ணுக்கும் மாப்பிள்ளையைப் பார்க்க ஆசையா இருக்கும். கண்டிப்பா நீயும் வரணும்’னு பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணி கூப்பிட்டுப் போயிட்டீங்க. அதைப் பார்த்துட்டு அவள், ‘இந்த மாடன் மேன் எனக்கு வேணாம். நான் கிராமத்தானை தான் கட்டிக்க ஆசைப்படுறேன்’னு சொன்னா. கேட்டதும் சிலிர்த்துடுச்சு… ஏன்னா, அவள் ஆசைப்பட்ட மாதிரி நானும் கிராமத்தான் தானே?”

அவன் சிரித்தபடி கேட்க, அவள் புரியாமல் தலையை மட்டுமே ஆட்டினாள்.

“சுவத்துக்கு வெள்ளை அடிச்ச மாதிரி இருக்கும் உன் கலர் எனக்குப் பிடிக்கல. ‘கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு’ன்னு மாளவிகா மாதிரி சொல்றா. அதுபோல, நானும்… நாள்பூரா வேலைப் பார்த்துட்டு, அந்த அடுப்படியிலிருந்து வர்றப்போ அப்படித்தானே இருப்பேன்”

அவனது சிரிப்பும், கிண்டலான பேச்சும் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமா? என்றுதான் தெரியவில்லை.

“அர்ஜூன் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே! இப்ப நீ அவள் மேல உள்ள பிடித்தத்தில் கல்யாணம் பண்ண சம்மதிக்கலாம். ஆனால், அது நடைமுறையில் அத்தனை சுலபமில்ல…”

அவன் புரியாமல் பார்த்திருக்க, “உங்க கல்யாணத்துக்குப் பிறகு, உன்னால் அவளை விட்டு, எத்தனை நாள் விலகி இருக்க முடியும்? கல்யாணமாகி ரெண்டு மாசம் ஆவதுக்கு உள்ளேயே ‘புதுமருமகள் ஏதாவது விசேஷமா இருக்காளா? சும்மா இருக்காளா?ன்னு நம்ம வீட்டிலும், வெளியே உள்ள உறவுக்காரங்களும், நண்பர்களும் கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. அவங்களுக்கு உன்னால என்ன பதில் சொல்ல முடியும்? அதே கொஞ்ச நாளுன்னா கூட, ஏதாவது காரணம் சொல்லி சமாளிக்கலாம். தொடர்ந்து அப்படியே இருக்க முடியுமா? வருடங்கள் தாண்டியும் ஒரு பெண், குழந்தை பெறாம இருந்தா, அவளுக்கு இந்தச் சமூகத்தில் என்ன பெயர்? அந்த ஆணோட மனநிலை என்ன ஆகும்னு நினைச்சுப் பார்க்க மாட்டியா? உனக்கும் நாளடைவில் ஆசை வந்தா என்னப் பண்ணுவே?” என்று தவிப்புடன் வினவினார்.

“அண்ணி! நீங்களே இவ்வளவு தூரம் யோசிக்கறப்போ, நான் மட்டும் சும்மா இருப்பேனா? நீங்க சொல்றது தெரியாத அளவுக்கு அவளும் ஒண்ணும் முட்டாள் இல்லயே? இத்தனை தூரம் பேசுறான்னா, நிச்சயம் அவள் மனசுல ஏதோ பயங்கரமான வலி, காயம் ஏற்பட்டு இருக்கும்னு மனசுக்குத் தோணுது. அது என்னன்னு தெரிஞ்சிட்டு அதைத் துடைக்கும் மருந்தா நான் இருப்பேன். நான் அவள் மேல வச்சிருக்கும் உண்மையான பாசத்தை உணர வச்சு, அவளை முழுசா மாத்திடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு!” அவன் உறுதியாகக் கூறியதும், அவள் அமைதியாக இருந்தாள்.

“நீங்க அண்ணா கிட்டே சொல்லி ஒரு நாள் அவங்க வீட்டுக்குப் போயி, கல்யாண விசயமா நம்ம எல்லாரோட சம்மதத்தையும் சொல்லிட்டு, முகூர்த்ததுக்கு நாள் குறிக்கும் விசயமா பேசிட்டு, அவங்க வீட்டு நிலவரத்தையும் தெரிஞ்சிட்டு வாங்க. ஒருவேளை ஆராதனா எதனால் அப்படி பேசினான்னு அவங்க மூலமா தெரிய வருமா பார்க்கலாம்?” என்றான்.

அவரும் ‘சரி’ என்று பெருமூச்செறிய, தன்னைப் பார்த்ததும் அமைதியாக இருக்கும் இருவரையும் பார்த்தபடி அங்கு வந்த இளவரசு, “என்ன கொழுந்தனும், அண்ணியும் ரொம்ப நேரமா எதையோ பற்றி, தீவிரமா பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

“ம்ம் … பசுமாட்டுக்குப் போட மாட்டுப் புண்ணாக்கு, தீவனம் எல்லாம் தீர்ந்து போச்சு. நாளைக்கு மறக்காம வாங்கிட்டு வரச் சொன்னேன்”

அர்ஜூன், அண்ணியின் கிண்டலை உணர்ந்து சிரிப்பை அடக்க, “அவன் இதையெல்லாம் எப்ப வாங்கிட்டு வந்தான்னு சொல்லிட்டு இருக்கே?” என்று சந்தேகத்துடன் கேட்டான் இளவரசு.

“நான் உங்ககிட்டே தான் வாங்கிட்டு வரச் சொன்னேன்” அவள் கணவனைப் பார்த்து திருப்பிக் கூறியதும், இருவரும் சிரித்து விட்டார்கள்.

“சரியான குறும்புக்காரி! வா, தம்பிக்குக் கல்யாணம் ஆகட்டும். அவளை விட்டே உங்க ரெண்டு பேரையும் துரத்தி அடிக்கிறேன். எப்ப பாரு ரகசியமா பேசிப் பேசி, மண்டைய காய விடுவதே உங்களுக்கு வேலையா போச்சு” என்றான் இளவரசு.

அண்ணியும், கொழுந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும், “புருஷன்காரன் வந்து என்னன்னு கேட்டா, புண்ணாக்காம் புண்ணாக்கு … இருக்குடி உனக்கு” என்று அவன் கடுகடுத்தான்.

வினோதினி, “பார்த்தியா உங்க அண்ணனுக்குப் பொறாமையை? நாம பேசியதை சொல்லாததால், புதுசா வரப் போகும் கொழுந்தியாவை சப்போர்ட் பிடிச்சிட்டு, கட்டுன பொண்டாட்டியை வீட்டை விட்டுத் துரத்தப் போறாராம்” என்று முறைத்தபடி கூறினாள்.

அண்ணன், அண்ணியின் செல்லச் சண்டையை ரசித்தபடி, அவன் உணவை உண்டு முடித்தான். அவனது திருமணம், பேசி முடிக்கப் போவது பற்றிய பேச்சு நடந்தது. வினோதினி ‘பெண் வீட்டிற்கு நேரில் சென்று, நாமே திருமண விசயமாகப் பேசிவிட்டு வரலாம்’ என்றாள். அவனும் சரியென ஏற்றுக் கொண்டான்.

ராதனா வேலைக்குச் சென்று விட, சுகந்தா மட்டுமே வீட்டில் இருக்க, அங்கு வந்த கணவனும் மனைவியும் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது அவர்களின் குடும்பம், வாரிசுகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு, திருமண விசயமாகப் பேசினார்கள்.

சுகந்தா, “எங்க தம்பி வீட்டுலயும், தங்கைக்கும் தகவல் சொல்லிட்டோம். அவங்க மாப்பிள்ளையை நேர்ல பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறாங்க” என்றார்.

அவர்கள் இருவரும் தலையசைக்க, அவரிடம் தனிமையில் பேசும் பொருட்டு, ‘பாத்ரூம் போகணும்’ என்று வெளியே வந்து, வீட்டையும் சுற்றிப் பார்க்க ஆசைப்படுவதாகப் பொய்யுரைத்து, சுகந்தாவின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை அறிய முயன்றாள் வினோதினி. அவர் முதலில் தயங்கினாலும், மறைக்கும் விசயமல்ல என்பதால், அனைத்தையும் ஒன்று விடாமல் கொட்டி விட்டார்.

அவரது வாழ்க்கையில் இத்தனை அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று, நினைத்தும் பார்த்திராமல் வாயடைத்துப் போனாள் வினோதினி. அவர் அழுது கொண்டே, “எங்க அப்பா என்னை மனசார என் கணவர் கையில பிடிச்சுக் கொடுக்கல. என் கல்யாணத்துல அவருக்கு விருப்பமும் இல்ல. விதி என்னை இப்படி கண்ணீர் விட வச்சிருச்சு. என் மகள் ஆர்த்திக்கு நான்தான் கல்யாணம் பண்ணி வச்சிருந்தேன். என் கணவரைப் போல அவனும் அரசாங்க அதிகாரி. ஒத்தைக்கு ஒருத்தன்; ஆளும் அழகு. ‘என் மகளைப் பிடிச்சிருக்கு, நான் அவளைக் கட்டிக்க ஆசைப்படுறேன்’னு என் மகன் கிட்டே சொல்லி விட்டான். நானும், அவன் குணவாளன், என் மகளைக் கண்ணு கலங்காம வச்சு பார்த்துக்குவான்னு நம்பிக்கையில், என் கணவரின் பேச்சையும் கேட்காம, யார் கிட்டேயும் அவனைப் பற்றி விசாரிக்காம, அவன் மேல உள்ள நம்பிக்கையில் கட்டி வச்சேன். அவன் கிட்டே இதே ஊர்ல உள்ளவங்க, தப்பு தப்பா சொல்லிக் கொடுத்து, அவங்க கல்யாணத்தையும் நிறுத்தப் பார்த்தாங்க. அவன் யாரோட பேச்சையும் கேட்காம, என் மகளைக் கட்டிக்கிட்டு நல்லா தான் பார்த்துக்கிட்டான். என்கிட்டேயும், ஆராதனாவிடமும் பாசமா இருப்பான். இரண்டு குழந்தை பிறந்த பிறகு என் மகனுக்கும் அவனுக்கும் சரிப்படல. மகன் மேல உள்ள கோபத்துல ரெண்டு வருஷத்துக்கு மேலா, என் மகளையும் வீட்டுக்கு விடாம வச்சிருந்தான். நான்தான் அவளைப் பார்க்கப் போவேன் வருவேன்… கணவன் திட்டுவதையும், கோபப்படுவதையும் பார்த்து, அவன் குடும்பமும் அப்படியே ஆகிடுச்சு. அவன் முன்னே அவனோட அக்கா அவளை சத்தம் போட்டாலும், எங்க வீட்டை அவமதிப்பா பேசினாலும், அவன் எதிர்த்துக் கேட்க மாட்டான்.

கல்யாணமான புதுசுல கணவனோடு வெளியூரில் இருந்தவ, இப்ப கொஞ்ச நாளா வீட்டுல வந்திருக்கா. அந்த நேரத்துல இருந்து ஒரே பிரச்சனையும், கஷ்டமும்! என்னைப் பார்த்தாலே ‘எதுக்கும்மா என்னை இந்த ஆளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்க? இதைவிட விசத்தைத் தந்து கொன்னுருக்கலாமே’ன்னு கதறுறா. பிள்ளைங்க ரெண்டும் பாவம்! அவள் அழுறதைப் பார்த்து அழுறாங்க. அந்த வீட்டுக்குப் போயி நாலு வார்த்தைப் பேசினா கூட, மாமியார் முன்னாடி இருந்து தான் பேச முடியுது. அவங்க அப்படியே கேட்டுட்டு போயி, மகளிடம் போட்டுக் கொடுக்கிறாங்க… மகளுக, தம்பியாருக்கு ஃபோன்லயும், நேர்ல பார்த்ததும் நடந்த எல்லாத்தையும் அப்படியே சொல்லிடுறாங்க… அவன் என் மகளைத் திட்டி எடுக்கிறான். தனியா நின்னு பேசுவதைக் கண்டாலும், ‘இந்த வீட்டுல எத்தனைப் பேர் இருக்காங்கன்னு, ஒதுங்கி நின்னு பேசுறீங்க? நான் கேட்டுருவேன்னா அங்கே போயி இருக்கீங்க?ன்னு கேட்டு நிம்மதியை பறிச்சிடுவாங்க…

மகள் கிட்டே நிம்மதியா நாலு வார்த்தைப் பேச முடியல. எங்க வீட்டிலும் வந்து அவள் நிம்மதியா தங்குறது இல்ல. ஏண்டா, அவசரப்பட்டு கட்டிக் கொடுத்தோமோன்னு நினைச்சு ஏங்குற அளவுக்கு செய்றாங்க. அவள் வீட்டுக்குப் போற எங்க பக்கத்து ஆளுங்க முன்னாடியே எங்களையும், ஆர்த்தியையும், பிள்ளைகளையும் குறை சொல்லிப் பேசுறாங்க. அவங்க என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கறதே கிடையாது. பச்சைப் பிள்ளைங்க பக்கத்து வீட்டுக்குப் போனாலும், விளையாடினாலும், ஓடினாலும் காண விடாம ஆக்குறாங்க. நல்லவங்கன்னு நினைச்சு கட்டிக் கொடுத்து, இப்ப எம்மகளோட வாழ்க்கையே நாசமா போச்சு. அவங்க அப்பா, எல்லார் கிட்டேயும் ‘என்னால தான் என் மகள் வாழ்க்கை அழிஞ்சிடுச்சு. அவளுக்கு வேறு இடத்துல நல்ல படிச்ச வசதியான மாப்பிள்ளைப் பார்த்து வச்சிருந்தேன். இவள் தான் என் பேச்சையும் மீறி நடந்து, அவளை இப்படி ஆக்கி வச்சிருக்கா’ன்னு பழியைப் போடுறாரு. இதெல்லாம் பார்த்துக் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன ஆராதனாவை, கஷ்டப்பட்டு சம்மதிக்க வைக்கும் முன், நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்” என்று கூறினார்.

இங்கு வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறிப் போக, அவரது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் வினோதினி. “என் கணவரோட குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். எங்க மாமியாரும் மாமனாரும் என்னை அவங்க மகள் மாதிரித்தான் நடத்துறாங்க. அர்ஜூன் ரொம்ப நல்ல பையன். என்னோடு பிறந்தவனை விட அதிகப்பாசத்தைக் கொட்டுவான். அவனுக்கு ஆராதனாவை ரொம்ப பிடிச்சிருக்கு. கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு முகூர்த்த தேதி குறிச்சிடலாம். அவளைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்” என்று ஆறுதலாகக் கூறித் தேற்றினாள்.

அத்தனை நேரமாக மனதில் இருந்த பாரம் விலகியது போல அவரது முகம் மலர்ந்தது. “இந்த ஊருல எங்களுக்கு ஆகாதவங்க நிறைய பேர் உண்டு. வக்கிரம் பிடிச்சவங்க, ஏற்கனவே வெளியூரிலிருந்து வந்த சில வரன்களையும், விசாரித்தவரிடம் தப்பு தப்பா சொல்லிக் கொடுத்து, அமைய விடாம செஞ்சிட்டாங்க. இந்தக் கல்யாணமாவது எப்படியாவது அவளுக்கு நடக்கணும். என் மகள் இனிமேலாவது நல்ல பாதுகாப்பான இடத்துல குடியேறணும்” என்று கேட்டுக் கொண்டார்.

கணவனைப் பிரிந்து தனியாக இருக்கும் பெண்ணையும், அவளது மகளையும் காமப் பார்வை பார்க்கும் ஆண்களும், அவளை அடுத்த நபருடன் இணைத்துத் தவறாகச் சித்தரிக்கும் ஊர் மக்களும், உறவினர்களும், நிஜத்தை சரிவர உணராமல் அவர்கள்மீது பழியை சுமத்தி, சமூகத்தில் பிறர் முன்பு தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் செய்கின்றனர். அதை அறிகின்ற கணவனின் வழி உறவினர்கள், அவன் தான் நல்லவன், இவளால் தான் அவன் போய்விட்டான் என்பது போன்ற, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும் பரவவிட்டு, செய்யாத பாவத்திற்குத் தண்டனையும் அனுபவிக்கச் செய்து, அவனோடு பேசி மகிழ்கின்றனர். அவன் மனைவி மற்றும் பிள்ளைகளை எப்போதாவது பார்த்தாலும், கடமைக்கு மட்டுமே பேசுகின்றனர்.

மருமகளின் கணவன், சித்தி மகன் எனும் உறவு முறையில் இருந்து கொண்டு, உதவும் நோக்குடன் செயல்பட்டாலும், அவனுடன் இணைத்துப் பேசித் தீராத களங்கத்தை சுமத்துகின்றனர். அத்தனையும் தாண்டி அந்தப் பெண்கள் வாழ்ந்து வரவும், சாதித்துக் காட்டவும் எத்தனைப் போராட வேண்டி உள்ளது?

இத்தனைக்கும் அவர்களைக் குறை கூறுவது ஒன்றும் காந்தியோ, இயேசு நாதரின் வழி வந்தவரோ கிடையாது. சாக்கடையில் ஊறித் திளைத்த பிசாசுகள்! அந்தப் பெண்ணைச் சீரழிக்க முடியாத கோபத்தில், சேற்றை வாரி இறைக்கும் வஞ்சினம் பிடித்த கொடியவர்கள்!! கணவன் இல்லாமல் தனியாக இருப்பவள் அழிந்து போய் விடுவாள் என்று நினைத்து, அவளது நிமிர்வான நடை, நேர்மையான குணத்தையும் கண்டு பொறுக்க முடியாத எச்சில் இலைகள்!!

இவர்களது பேச்சுக்களை செவிசாய்க்காமல் நல்லவன் ஒருவன் வந்து, அவளை மணந்து கொள்வது என்பது அத்திக்காய் பூத்தது போல் அதிசயப்படத்தக்கது. அப்படி கிடைக்கும் வாழ்கையிலும், புற்றீசல் போலப் புகுந்து பிரச்சனைகளை உருவாக்கி, அந்தப் பெண்களைக் கதறடிக்கப் பார்க்கின்றனர். இன்றைக்கு உங்களது செயல்களுக்குப் பதிலடி இல்லை என்று எண்ணுபவருக்கு, காலம் தக்க சன்மானம் அளிக்கக் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ள தவற வேண்டாம்!!

சுகந்தாவிடம் விடைபெற்றுக் கணவனும் மனைவியும் காரிலேறி அமர, அவரது கண்களில் ஒருவித பய உணர்வு வந்து போனது.

இரவு நேரம் உண்ண அமர்ந்த அர்ஜூன் அண்ணியிடம், ‘ஆராதனாவை பார்த்தீர்களா? அவள் ஏதேனும் கூறினாளா? அவளைப் பற்றி ஏதாவது தெரிய வந்ததா?’ என்று விசாரித்தான்.

“முதல்ல நீ சாப்பிடு”

“இருக்கட்டும். சொல்லுங்க! போன இடத்துல என்ன நடந்ததுன்னு தெரியாம, இன்னைக்கு புள்ளா ஒரே டென்சனா போச்சு”

வாஞ்சையுடன் அவனைப் பார்த்து, நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் வினோதினி.

“அப்ப நான் சந்தேகப்பட்டது சரியாகத் தான் இருக்கு. இதுக்கு மேலும் தாமதிக்காம, உடனே அப்பாகிட்டே கல்யாண விசயமா பேசிடலாம்” என்றான். அவளும் ஒப்புதலாகத் தலையசைத்தாள்.

“இது நமக்குள்ளே இருக்கட்டும் அண்ணி! வேறு யாருக்கும் தெரிய வேணாம். எப்படியும் ஆராதனாவின் அப்பா அவங்களை விட்டுப் போனது தெரியத்தான் செய்யும். வேற எதுவும் தெரியாம பார்த்துக்கலாம். மீறியும் தெரிஞ்சா கண்டுக்காம இருந்துக்கலாம். “

“ஆமாப்பா”

“ம்ம்… அண்ணனுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“இல்ல, நான் எதுவும் சொல்லலை”

“தெரிய வேண்டாம். தெரியாம இருப்பதும் ஒரு வகையில் நல்லது தான்.”

அவன் உணவை முடித்துவிட்டு, எழுந்து சென்று தமையனிடம் பேசினான். தகப்பனாரை பார்த்து நிச்சய தேதி குறிக்கும் விசயமாகக் கலந்து உரையாடினான். மறுநாள் இளவரசுவும், தேவநாயகமும் ஜோதிடரைப் பார்த்து விட்டு வந்தார்கள்.

ஆராதனாவின் தாயாரிடம் விசயத்தைத் தெரியப்படுத்தி, அவரது பெரிய மகள் வீட்டிற்குச் சென்று தகவலளித்து, மருமகனையும் வர வைக்கக் கூறினார்கள்.

ஒரு நல்ல மண்டபத்தில் வைத்துத் திருமணம் நிச்சயம் செய்து விடத் திட்டமிட்டார்கள். இரு வீட்டிலும் நெருங்கிய உறவினர்கள், வேண்டப்பட்ட அனைவரிடமும் கூறி, நிச்சயம் செய்வதற்கு ஆவன செய்யப்பட்டது.

ராதனாவின் திருமண நிச்சயத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஆர்த்தியின் கணவன் ஊருக்கு வந்து சேர்ந்தான். கணவனை நேரில் பார்த்து மகிழ்ந்த அவள் உள்ளம், தங்கையின் பெண் பார்க்கும் விசயத்திற்கு சென்று வந்ததை அறிந்தால், எங்கே தனது கடுமையை காட்டி விடுவானோ என்ற பயத்தில் இருந்தது.

அவன் எதுவும் கேட்காமல், இரவு நேரம் தரையில் இரு மகன்களுடன் படுத்திருந்தவளைப் பார்த்து, “மேல வா!” என்று அழைத்து, அச்சத்துடன் வந்தவளை முழுவதுமாக ஆக்கிரமித்தான். அவன் வந்திருப்பதை அறிந்த உடன்பிறப்புகள் இருவரும், மறுநாளே பார்க்க வந்தார்கள்.

“அவன் என்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கானோ, அத்தனையும் எடுத்துட்டு வா!” என்று உத்தரவிட்டார் அவளது மாமியார்.

அவளும் அத்தனையும் கொண்டு வந்து, முக்காலியில் வைத்து விட்டுச் சென்று விட, அவர்கள் எடுத்துப் போக மிச்சம் மட்டுமே அங்குக் கிடந்தது. அவள் அந்தப் பக்கமே போகாமல் இருந்து கொண்டாள்.

நிச்சய நிகழ்ச்சிக்கென புத்தாடை எடுக்கச் செல்லும்போது, அக்காவையும் அழைத்தாள் ஆராதனா. அவள் கணவனிடம் விசயத்தைக் கூறி அவனையும் தங்களுடன் வருமாறு அழைத்தாள்.

ஆனால், மதிய நேரம் அருந்திய மதுவின் தாக்கத்தில் இருந்த ஆர்த்தியின் கணவன், “நீ போயிட்டு வா! நான் வரல” என்றான். அவள் எத்தனை முறை கூப்பிட்டும் வர மறுத்து, மூவரையும் போகச் சொல்லி விட்டு, படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

ஆட்டோவில் அம்மா வீட்டிற்குச் சென்ற ஆர்த்தி, அங்கிருந்து புத்தாடை எடுக்கச் சென்று விட்டு வந்து, கணவன் வீட்டிற்குப் புறப்பட்டாள். “நம்ம வீட்டுலயே நில்லு ஆர்த்தி! நாளைக்குப் போகலாம்” என்றும் கேட்காமல் சென்றவள், வீட்டில் யாரும் இல்லாமல் வெளியே நின்றுவிட்டு, பக்கத்து வீட்டில் நள்ளிரவு 12:00 மணிவரை காத்திருந்தாள். கையில் இருந்த சாதாரண கைப்பேசியில் அவனுக்குத் தொடர்ந்து அழைப்பு விட, அது சுவிட்ச் ஆஃப் என்று மட்டுமே வந்தது. அதற்கு மேலும் அங்கேயே இருக்க முடியாமல், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உதவியுடன், தாய் வீட்டிற்கு வந்து விசயத்தைக் கூறிவிட்டு, மறுநாள் மாலையில் அங்குச் சென்றாள்.

படுக்கையறையில் இருந்தவன் அவளைப் பார்த்து, “யாரை கேட்டு உன் வீட்டுக்குப் போனே? எதுக்கு இப்ப இங்கே வந்திருக்கே? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உன் தங்கையைப் பெண் பார்க்க வந்தப்போ, என்கிட்டே எதுக்கு போகலன்னு பொய் சொன்னே? உன் விருப்பத்துக்கு நடந்துக்கவா, உன்னை நான் கட்டிக்கிட்டு வந்திருக்கேன்?” என்று கேட்டு அடித்தான். “வீட்டை விட்டு வெளியே போ!” என அறையை விட்டுத் தள்ளி விட்டான். அவள் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தான்.

அவனது சத்தமும், அவளது அழுகுரலும், பிள்ளைகளின் அழுகையும் வீட்டைச் சுற்றிலும் எதிரொலித்தது. இத்தனைக்கும் அவளது மாமியார் அத்தனையும் பார்த்துக்கொண்டே அசையாமல் இருந்தார்!

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்…

தொடர்கதைக்கான அடுத்த பதிவு இதோ… https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-5/

11 thoughts on “அக்னி சாட்சி”

 1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

 2. CRVS 2797

  அட கூறுகெட்ட கருவாப்பய மக்கா…! இப்படிக் கூடவா அராஜகம் பண்ணுவே. உன்னை தூக்கி அடுப்புல போட..!

 3. Kalidevi

  Ippadium kodumai panrangala pondati oruthi iruntha avalum manushi thana unga amma akka thangai mari apdi adimaiya irukanuma ena kaluthula oru thali katita

  1. Avatar

   நீங்கள் கூறுவது 100% உண்மை. ஆனால், அவர்கள் அப்படி எண்ண வேண்டாமா?

   இது கதை என்பதையும் தாண்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நிஜமாக நடந்திருந்தால், அவள் மனம் எத்தனை வேதனைப்பட்டு இருக்கும். செய்வதையும் செய்து விட்டு எந்த வித கூச்சமும் இல்லாமல் தானே, அவளது கணவன் வீட்டார் இருந்து இருக்கிறார்கள்.

   மிக்க நன்றி

 4. Avatar

  இவனை எல்லாம் நல்லா வச்சு வெளுக்கனும்!!… குடிகார நாய்!!… அர்ஜூன், அண்ணி சூப்பர்!!… சீக்கிரம் ஆர்த்தியும் சந்தோஷமா இருக்கனும்!!…

 5. Avatar

  அர்ஜுன் சூப்பர். வினோதினி வாழும் குடும்பமும் இருக்கிறது தான் ஆனால் பெரும்பாலான வீட்டில் வேறு நிலைமை என்பதையும் உணர் வேண்டும் போல!
  கல்யாணம் செய்து கொண்டு வந்தால், அவள் ஒன்றும் அடிமை அல்லவே.. அவளுக்கும் ஒரு மனம் இருக்கிறது என்பதை வாழ சென்ற வீட்டின் பெண்களும் புரிந்தும் புரியாதது போல இருப்பது தான் கொடுமை. ஆண்களை சரியாக சமுதாயத்தில் வளர்த்தால் பெண்களால் நிம்மதியாக இருக்க முடியும். நான் ஆண் என்று திமிரில் ஆணாதிக்க சமுதாயமாக மாற்றி, அவன் என்ன செய்தாலும் அது சரியே என்று மிதப்பு, பெரிய சீர்கேட்டையே விளைவிக்கும்.

  1. Avatar

   உண்மைதான்.

   ஆனால், நல்ல முறையில் வளர்ந்து வருகின்ற ஆணும், சேருவார் உடன் சேர்ந்து கெட்டுப் போகிறார்கள் என்பது தான் இப்போது உள்ள புதுநியதி.

   மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *