Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 5

ர்ஜூன் திருமண நிச்சயம் முடிந்த மகிழ்ச்சியில் இருந்தான். இன்னும் ஒன்றரை மாதத்தில் அவனது திருமணம் நடத்துவதற்கு, முகூர்த்த தேதி குறிக்கப்பட்டு இருந்ததால், திருமண மண்டபத்திற்கு தேதி கொடுப்பது முதல் அனைத்தையும், அண்ணன் இருவருடன் இணைந்து செய்தான். இரவு நேரம் கைப்பேசியில் உள்ள ஆராதனாவுடன் சேர்ந்து எடுத்தப் புகைப்படத்தை ரசித்து, தன்னந்தனிமையில் பேசி மகிழ்ந்தான்.

பெண் பார்க்கச் சென்றபோது வீம்பாக, குறும்பாக, கிண்டலாகப் பேசினாலும், அவளது உதடும், முகமும் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்த தவறவில்லை. ஆனால், திருமண நிச்சயத்தின்போது, அவள் முகம் களை இழந்து காட்சியளித்தது.

ஆர்த்தி கணவன் அருகில் புன்னகையுடன் பேசிச் சிரித்தாலும் கூட, ஆராதனாவிடமிருந்து எதையும் காண முடியவில்லை. விருப்பமில்லாத திருமண பந்தத்தில் மூழ்கப் போவதால், எப்படி அவனுடனான நாட்களைக் கடத்தப் போகிறோம் என்ற அச்சமா? குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற பயமா? இத்தனை நாட்களாக அப்பாவால் இந்த ஊரில் பட்ட அவமானத்தை, புதியதாக வரப் போகும் இடத்திலும் அனுபவிக்க வேண்டுமே என்ற பதற்றமா? திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நினைத்து, அம்மாவுக்காகச் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகியதால் ஏற்பட்ட வேதனையா? என்பதை அவள் தான் கூற வேண்டும்!

அர்ஜூனின் முகத்தில் அடிக்கடி புன்னகை வந்து போனது. திருமணம் என்பது ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும், மிகவும் முக்கியமான ஒன்று! அதிலும், ஆடவனுக்கு அன்று முதல் ‘குடும்பத்தலைவன்’ எனும் கூடுதல் பொறுப்பு வந்து சேர்கிறது. மனைவி, குழந்தைகள், குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் கடமையும், வீட்டில் நடக்கும் எந்தவொரு காரியத்தையும், முன்னின்று நடத்தும் வல்லமை பெற்றவனாகவும் திகழச் செய்கிறது.

அத்தனை நாளைய தனிமைகள் அகன்று, கோபம், வெறுப்பு, கொஞ்சல், இன்பம், துன்பம், கூடல், ஊடல் அனைத்தையும் மனைவியாக வருபவளிடம் காட்டி பேரின்ப கடலில் மூழ்க வைக்கிறது. ஆனால், அர்ஜூனுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்று தான் தெரியவில்லை. ஏனெனில் அவனுடன் வாழப் போகிறவள் மனதிலும், முகத்திலும் எந்தவொரு சலனமும் இல்லாமல், துடைத்து வைத்தது போல் அல்லவா இருக்கிறது?

அதேநேரம், ‘வேண்டாம்’ என்ற பெண்ணை, வலிய வந்து கல்யாணம் செய்யப் போவது அவன் தான் எனும்போது, அவளது மனமாற்றத்திற்காக நிறைய போராடவும், விட்டுக் கொடுக்கவும், இழக்கவும் நேரலாம். அப்படி கடினப்பட்டு கிடைக்கின்ற வெற்றிக்கு நிகராக வேறு எதுவும் இல்லாததால், எதையும் நினைத்து மனதை வருத்தாமல், வருவதை எதிர்கொள்ளத் தயாரானான்.

ஆர்த்தி கணவனின் வீட்டிற்குச் சென்று, பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவளது தாய் வீட்டில், வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆராதனா கூறினாள். மாதவனின் கோபம் மனைவியின் மீது இல்லை என்றாலும், அவள் அண்ணன் செய்ததை மறக்க முடியாமல் அவ்வப்போது கடுகடுத்தான். திருமணத்திற்கு முன்பு வருவதாகக் கூறி, தினமும் இரவு நேரம் அவளிடம் பேசி மகிழ்ந்தான்.

ஆராதனாவிற்கு முகூர்த்தப் புடவை எடுக்க, மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைத்தும் அவள் வரமறுத்து விட, அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் சென்று, அவளுக்குத் தேவையான அனைத்தும் வாங்கி வந்தான். திருமணப் பத்திரிகை பெண் வீட்டிற்கு வைப்பதற்கும், அவளது இரவிக்கை தைக்க அளவு வாங்குவதற்கும் அண்ணி கிளம்புவதை அறிந்து, தானும் அவருடன் சென்று வரலாம் என்று நினைத்து, அண்ணன் புறப்பட்டுச் சென்றதால், மறுநாள் ஆராதனாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வீட்டில் யாரும் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருந்தது.

அழைப்பு மணியை ஒலிக்க விட்டு, மாமியார் வந்ததும் புன்னகையுடன் நலம் விசாரித்தான்.

வாயெல்லாம் பல்லாகிப் போக, “வாங்க தம்பி! உள்ளே வாங்க!” என்று அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தார் சுகந்தா.

அவனது கண்கள், தன்னவளைக் காணும் ஆவலில் அங்கும் இங்குமாக அலைய, “அவள் வீட்டுல இல்ல. வேலைக்குப் போயிருக்கா… ” என்று தயங்கியபடி கூறினார்.

அவன் தலையசைத்தபடி அவரையும் அமர வைத்து, அவரது பிள்ளைகளைக் குறித்துக் கேட்டு அறிந்து கொண்டு, “அத்தை! ஆராதனா, இனியும் வேலைக்குப் போகும் அவசியமில்ல. அவளை வீட்டுல இருந்து நேரத்துக்குச் சாப்பிட்டு, உடம்பைப் பார்த்துக்க சொல்லுங்க. உங்களுக்குத் தேவையானதை நான் செஞ்சு தர்றேன்” என்றான்.

சுகந்தா, “நானும் அந்த வேலையை விட்டு நின்னுடுன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்காம, அவள் தான் போயிட்டு இருக்கா” என்று ஒருவித மனசஞ்சலத்துடன் கூறினார்.

திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்க, அவள் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாமல் இருப்பது, பெற்றவளின் மனதை வருத்தியது. மகளிடம் எத்தனை முறையோ பேசியும், அவளிடம் காணப்பட்ட அமைதியும், இறுக்கமும் அவரைப் பரிதவிப்பிற்கு உள்ளாக்கியது. எங்கே ‘எனக்குக் கல்யாணம் வேண்டாம்’ என்று கூறிவிடுவாளோ எனும் கிலி, அவரை நிம்மதி இழக்கச் செய்தது.

ஆராதனாவின் அப்பா அவர்களை விட்டுச் சென்று வருடங்கள் பலவாகி விட்டாலும், பிள்ளைகள் அவர் மீது காட்டிய பாசம், ஆர்த்தியின் திருமணத்தின் போது விற்கப்பட்ட சொத்துக்களை கையெழுத்திட அவர் வந்தது, அப்பாவாக முன் நின்று திருமணத்தை நடத்தி விட்டுச் சென்றது… உறவினர்களின் திருமண விசேஷங்களுக்கு அடிக்கடி வந்து செல்வது… தனது குடும்பத்தில் நடக்கும் திருமண வைபோகங்களுக்கு அக்காவின் கணவனாக முன்னிறுத்தப்படுவது, என்று அவர் நடந்து கொண்டதால், கைவிட்டுப் போன பொருளைப் பற்றிக் கண்ணீர் விட்டு பலன் இல்லை என்பதை உணர்ந்து, எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார் சுகந்தா.

இப்போது, அடுத்த மகளுக்கு மாதவனை விடவும் வசதியான இடம் கிடைத்திருக்க, வரதட்சணையும் அதிமாகவே செய்ய வேண்டியது இருந்தது. ஆர்த்தியின் திருமண நேரத்தில் சொத்து விலை சரிவாக இருந்து, இப்போது கொஞ்சம் அதிகரித்து உள்ளது. ஆயினும், சாலையோரம் உள்ள நல்ல இடங்கள் ஏற்கனவே விற்கப்பட்டதாலும், விற்பனைக்கு உள்ளாக்கப்படும் இடத்திலும் கூட, அதிகமாகப் பணம் பெற முடியாது என்பதாலும், மகளின் திருமணத்தை எங்ஙனம் நடத்துவது என்று அவர் திகைத்தார்.

நாளும் நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. கல்யாண செலவு, நகை… சீதனம் என்று செய்வதற்கும் நிறைய இருக்கிறது. வீட்டுத் தலைவன் பொறுப்பற்றவனாக இருந்தால், இப்படி தான் எப்போதுமே பிரச்சனைகள் ஏற்பட்டு, இன்னல்களைச் சந்திக்க நேர்கிறது. அவர் மட்டும் சுகந்தாவுடன் இருந்திருந்தால், இப்போதைய அவர்களின் நிலைமை வேறு!

மாதவன், மனைவியின் மூலமாக விசயத்தை அறிந்து, இரண்டு லட்ச ரூபாய் லோன் எடுத்துக் கொடுத்தான். திருமணத் தேவைகளுக்கு நகைகளை வங்கியில் வைத்துப் பயன்படுத்த அனுமதியளித்தான். ஆனால், அதை வாங்கினால் மகள் திருமணத்தன்று எதுவும் இல்லாமல் இருப்பதுடன், உடனடியாக மீட்டெடுப்பதும் இயலாத காரியம். ஏற்கனவே, நகையால் தான் பிரச்சனை ஆரம்பமாகியது என்பதால், வாய் திறக்க முடியாமல் இருந்தார் சுகந்தா.

மாமியாரிடம் காணப்பட்ட அமைதிக்கு காரணம், என்னவாக இருக்கும் என்பதை யூகித்து, அர்ஜூன் அது விசயமாகக் கேட்க, வீட்டிற்கு மருமகனாக வரப் போகும் அவனிடம், அதைச் சொல்லவும் அவருக்கு அவமானமாக இருந்தது. அவன், “நானும் உங்களுக்கு ஒரு மகன் மாதிரிதான். எதையும் மறைக்கணும்னு நினைக்காம, சொல்லுங்க அத்தை!” என்று கேட்டதும், அவரும் சொத்து விற்கும் விசயமாகக் கூறினார்.

“அதெல்லாம் எதுவும் வேணாம் அத்தை! எதுக்கு சும்மா இருக்கும் விளைநிலங்களை, விற்பனை செய்யப் பார்க்கணும்? வேறு ஏதாவது செய்யலாம்” என்று உரைத்து, தன்னருகில் இருந்த பேக்கில் உள்ள ஒரு கவரை எடுத்து, அவர் கையில் வைத்தான்.

“வினோதினி அண்ணி, உங்க வீட்டு நிலவரம் குறித்து முன்னமே என்கிட்டே சொல்லிட்டாங்க. ஆர்த்தி அண்ணியின் கல்யாண நேரத்தில் பட்ட கஷ்டத்தைப் போல இப்பவும் பட வேணாம். உங்களுக்குத் தேவையான பணமும், நகையும் இதுல இருக்கு. நிலத்தை விற்கவும், கடனாக யார்கிட்டேயும் வாங்கவும், ஆர்த்தி அண்ணி நகையை அடமானமாக வைக்கவும் வேணாம்” என்றான்.

சிலிர்த்துப் போய் விட்டார் அவர். கைகள் நடுங்கி விட்டன.

அவன் புன்னகையுடன், “பத்திரமா வச்சுக்கோங்க அத்தை. எங்க வீட்டுல இல்லாத எதுவும் இல்ல. என் மனைவியா வருகிறவள் கொண்டு வந்து தான், வீடு நிறையணும்னு அவசியமும் இல்ல. என் சம்பாத்தியம் எல்லாம் அவளுக்குத் தான். நீங்க பண விசயமா யாராவது கேட்டா, ஆராதனா பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுக்கிறேன்னு மட்டும் சொல்லிடுங்க. மத்தபடி எதுவும் சொல்ல வேணாம்”

அவர் கண் கலங்கத் தலையசைத்தார்.

“நேத்து அண்ணாவும், அண்ணியும் வந்தப்போ, ஆர்த்தி அண்ணி வீட்டுல யாரும் இல்லாம, பத்திரிகையை ஜன்னல் பக்கமா வச்சிட்டு வந்ததா சொன்னாங்க. அவங்க அது விசயமா ஏதாவது பேசினாங்களா?”

“ஆமாம்! அவள் பிள்ளைங்க ஸ்கூலுக்கு மீட்டிங்கில் கலந்துக்கப் போய் இருந்தாளாம். மாமியார் மகள் வீட்டுக்குப் போயிருக்காங்க போல… நான் கேட்டதும் எனக்குத் தெரியாது. தேடிப் பார்க்கறேன்னு சொன்னா”

“ஓ! அப்படியா?” என்று கேட்டபடி, அவன் எழுந்து நின்றான். “நான் இதுவரை அவங்க வீட்டுக்குப் போனதுல்ல. வாங்களேன், நாமளே நேர்ல பார்த்துப் பத்திரிகையும் கொடுத்துட்டு வரலாம்” என்று அவரையும் அழைக்க, அவருக்கு மலைப்பு கூடியது.

மறுக்கத் தோன்றாமல் தயாராகி, பக்கத்து ஊரில் உள்ள மாதவனின் இல்லத்தை வந்து அடைந்தார்கள்.

சாலையிலிருந்து சற்று தொலைவில் அமைக்கப்பட்ட, இரண்டு மாடி வீட்டிற்கு முன்பு வந்து காரை நிறுத்தியவன், பூக்களின் வாசத்தையும், செடிகள் வைத்திருக்கும் அழகையும், சுற்றிலும் தெரிந்த பசுமையையும் ரசித்தபடி நடந்தான்.

“ஆர்த்தி!!” என்ற சுகந்தாவின் அழைப்பில் விரைந்து வந்து, இருவரையும் பார்த்து ஆச்சர்யமாக நோக்கினாள்.

அர்ஜூனை கண்டு சிநேகத்துடன் முறுவலித்தாள்.

“வாங்க!”

அவன் உள்ளே சென்று அமர்ந்ததும், சூடாக காஃபி தயாரித்து, நொறுக்குத் தீனியுடன், சுத்தம் செய்து நறுக்கி வைக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகளையும் அருகில் வைத்தாள்.

அவன் மாதவன், இரு மகன்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

சுகந்தா, அவளது மாமியாரை காணாமல் விசாரித்து, அருகில் உள்ள தங்கையின் வீட்டிற்குச் சென்றிருப்பதை அறிந்து அமைதியாக இருந்தார்.

அர்ஜூன் திருமணப் பத்திரிகையை அவளிடம் கொடுத்து விட்டு, ‘கல்யாணத்திற்கு வர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டு, பிள்ளைகளுக்கு வாங்கி வந்திருந்த இனிப்பு வகைகளையும், அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றான்.

நாட்கள் வேகமாகச் சென்று அவர்கள் திருமணத்திற்கு இன்னும், ஒரு வாரம் மட்டுமே இருந்தது. இரு வீட்டிலும் திருமண வேலைகள் மளமளவென நடந்து வருகின்றன. மாதவன் விடுமுறைக்கு வந்து மனைவி, பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தும் வாங்கிக் கொடுத்ததுடன், அவளுக்குப் பிடித்தமான உடையையும் தனக்கென தேர்வு செய்து எடுத்தான். ஆராதனாவின் திருமணத்திற்கு நகை வாங்கி விட்டு, அவளுக்குக் கொடுக்கக்கூடிய திருமண விருந்திற்கான சாதனங்களுடன், மாமியாரின் வீட்டிற்கும் அழைத்து வந்தான்.

ஆர்த்தி முகமெல்லாம் புன்னகையுடன் பவனி வர, மாமியாரிடம் திருமண ஏற்பாடுகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவர்களுடன் தங்கி இருந்தான் மாதவன்.

திருமணத்திற்கு முந்தைய நாள் ஆராதனாவின் முகம் பதற்றத்தை அப்பியது போல் இருந்தது. ஆர்த்தி எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அவளால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

“இங்கே பாரு, எதையும் போட்டுக் குழப்பிக்காம சந்தோஷமா இரு. அப்பா மாதிரி எல்லா ஆண்களும் மோசமானவங்க கிடையாது. என் கணவர் அவங்க வீட்டாரின் பேச்சைக் கேட்டு, என்மேல கோபத்தைக் காட்டினாலும், இன்னைக்கு வரை என்னைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் தப்பான நோக்கத்தில் பார்த்தது இல்ல. என் முகவாட்டத்தைக் கூடத் தாங்காம, வலிய வந்து பேசிப் பாசமா தான் பார்த்துக்கறார். நீயும், உன் மனசுல இருப்பதை எல்லாம் துடைச்சு எறிஞ்சிட்டு, உன் கணவர் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமா இருக்க முயற்சிப் பண்ணு!” என்றாள்.

அவள் பதில் கூறாமல் விழிநீரை துடைத்ததும், “கடலில் அலை ஓய்ந்து நீ பார்த்து இருக்கறியா? இல்ல தானே, அப்படி தான் வாழ்க்கையும்! இன்பமும், துன்பமும் கலந்து வந்து நம்மைத் திக்கு முக்காடவும், சோகத்தில் மூழ்கடிக்கவும் செய்யும். எப்பவும் இன்பமே கிடைச்சிட்டு இருந்தா கஷ்டம், கவலை, கடினமான உழைப்பின் பலன், அருமைகளை பற்றித் தெரியாம, அப்படிப்பட்டவங்க முன் ஏளனமாகவும், அவங்களைப் பார்த்து எக்காளமிடவும் தோணும். அதே துன்பத்தை மட்டுமே தந்தா வாழ்க்கையில் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டு, நம்ம படைப்பு மீதே கோபமும், நல்லா இருப்பவரைப் பார்த்துப் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் ஏற்படும்.

இந்த மனித வாழ்க்கை யாருக்கும் அடிமைப்பட்டு வாழ்வதற்கு இல்ல. அன்பைக் கொடுத்துப் பெறுவதில் மட்டும்தான் இருக்கு. அதைக் கொடுக்க மறுத்து வெறுப்பை திணிக்கும் இடத்திலும், அளவுக்கு மீறிய ஆசைகளாலும், கண்ணியமில்லாத வாழ்க்கையினாலும், ஒழுக்கமற்ற நெறி முறையினாலும், விருப்பற்ற கணவன் மனைவியின் தாம்பத்தியத்தாலும், ஒரு இனிய இல்லறம் சிதைக்கப்பட்டு, சந்தேகம் எனும் இராட்சதன் மூலம், பிரச்சனை எனும் கொடிய அரக்கனை புகுத்தி, பிரிவினை என்ற மாபாதகத்தை உருவாக்கி, அவர்களை அடியோடு சாய்க்கிறது. அதுக்குப் பிறகான அவர்களது வாழ்க்கையில், நிம்மதி இழந்து, சந்தோஷத்தைத் தொலைத்து, பிறரின் பார்வையில் கேள்விக்குறியா மாறி, அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, தீராத களங்கத்தை சுமந்து கவலையுடன் போகுது!

ஆராதனா, உங்க அத்தான் என்னை விரும்பிக் கட்டிக்கிட்டு, என்மேல ஒரு தூசு படாம பார்த்துக்கிட்டார். அண்ணனால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிறகே, அவரோட கடுமையும், கோபமும் முதன் முறையா என்னைத் தாக்கியது. அப்புறம், என் தலையெழுத்தே மாறிடுச்சு. இப்ப அவர் கோபமும், பாசமுமா மாறி மாறி இருந்தாலும், என் கண்ணீர், விலகல், பாராமுகத்தை தாங்கமாட்டார். இதுதான் வாழ்க்கை! நிதர்சனம். கல்யாணம் பண்ணினா முழு நேரமும் சந்தோஷ கடலில் மூழ்கி இருப்போம். கண்ணை மூடிக்கிட்டு வானத்தில் மிதப்போம்னு சொல்லமாட்டேன். எது வந்தாலும் ஏற்கப் பழகும் தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கணும்.

இது தெரியாம நானும் கூட அடிக்கடி ஏற்பட்ட சண்டை, மன உளைச்சல், நிம்மதி கேட்டால் சூசைடு பண்ணிக்க பார்த்தேன். அதை அறிஞ்ச அம்மா, “இறப்பு எதுக்கும் தீர்வாகாது. உன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை மட்டும்தான் பாதிக்கும். உன் கணவர், இன்னும் கொஞ்ச நாளில் உன்னை மறந்துட்டு, வேறு பெண்ணை மணந்துட்டு போயிடுவார். உங்களால் பாதிக்கப்படுவது பச்சை குழந்தைங்க மட்டும்தான். உன்னை மாதிரி நானும் நினைச்சிருந்தா, இன்னைக்கு உங்க நிலைமையைப் பற்றி யோசித்து பாரு! உங்க அப்பாவின் விருப்பத்தையும் மீறி, உன் கணவர் மேலுள்ள நம்பிக்கையில் கல்யாணம் செஞ்சு கொடுத்தேன். ஆனால், இப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கல. இனிமேலும், இப்படியொரு தவறான முடிவுக்கு வராதே!”ன்னு வருத்தப்பட்டு சொன்னாங்க. அவங்களால் சொல்ல மட்டும்தான் முடியும். அப்படியொரு முடிவுக்கு வரத் தூண்டியவர்களை எதுவும் பண்ண முடியாது.

நம்ம அம்மா பாவம்!! ஏற்கனவே, அப்பாவால் நிம்மதியை இழந்தாங்க. அடுத்து அண்ணன், நான் … உன்னாலும் இழக்க வேணாம்னு தான், இத்தனை தடவை சொல்றேன். நடந்த எதையும் மாத்த முடியாது. நடக்கப் போவதையும் தவிர்க்க முடியாது. நீ தான் உன் மனசுல தெளிவையும், நிதானத்தையும் கொண்டு வரணும். இப்ப தூங்கி ஓய்வெடு. மனசுக்கும், உடம்புக்கும் அதுதான் நல்லது!” என்று தெளிவாகவும் அவள் புரியும் விதமாகவும் கூறினாள்.

மனதிற்குள் சீறி எழும் உணர்வுகளை அடக்க முடியாமல் தவித்து, தமக்கையின் அறிவுரையில் நிதானத்திற்கு வர முடியாமல் திணறி, அமைதியாக இருப்பது போல காட்டிக் கொண்டாள் ஆராதனா.

“காலையில் நேரமா எழும்பணும். சீக்கிரமா தூங்கு! அத்தானும், பிள்ளைகளும் என்ன பண்றாங்க தெரியல. அவங்களையும் பார்க்கப் போகணும்” என்றாள்.

தங்கையின் மனதை உறுத்துவது குடும்ப விவகாரம் என்று தெரிந்ததால், அவள் அப்படியெல்லாம் பேசினாள். ஆனால், பேசாமடந்தை வாய் திறந்தால் அல்லவே தெரிவதற்கு!!

தங்கையை உறங்க வைத்துக் கணவனும், மகன்களும் படுத்திருக்கும் அறைக்கு வந்து, மூவரையும் பார்த்தாள் ஆர்த்தி. அவர்கள் உறங்கி விட்டதாக நினைத்துக் கோரைப் பாயில் சென்று சுருண்டு கொள்ள, அடுத்த நிமிடம் அவனும் கட்டிலிலிருந்து இறங்கி வந்து, மனைவியின் அருகில் படுத்துக் கொண்டான்.

“நீங்க இன்னும் தூங்கலயா?”

“இல்ல, தூக்கம் வரல. நீ வராம உன் தங்கையோடு இருந்துடுவியோன்னு நினைச்சேன்”

“அவளைப் படுக்க வச்சிட்டு தான் வந்திருக்கேன். அம்மா அவளுக்குத் துணையா இருக்காங்க”

“ம்ம்…”

“காலையில நேரமா எழும்பணும். பிள்ளைகளைத் தனியா எங்கேயும் விட்டுடாம நீங்க தான் பார்த்துக்கணும்.”

“சரி, நீயும் தூங்கு!”

காலை நேரம், மூகூர்த்ததிற்கு செல்ல அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க, அர்ஜூன் பட்டு வேட்டியும் சட்டையும் அணிந்து, லேசான ஒப்பனையுடன் கீழே வந்தான். அண்ணன்கள் இருவரும் அவனைப் போல உடை அணிந்து, அவன் அருகில் வந்து நிற்க, பெற்றாேர் மற்றும் இரு அண்ணனிடமும் ஆசி பெற்று, குடும்ப சகிதம் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.

மதிவாணன் மூலம் சம்பிரதாய சடங்குகள் ஆரம்பிக்க, ஆர்த்தி மணமகனுக்கு ஆரத்தி கரைத்து இன்முகத்துடன் வரவேற்றாள். அவளது கணவன் மாதவன் புன்னகையுடன் கைக்குலுக்கி, நட்புடன் பேசி விட்டு, அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தான்.

சரியாக அரை மணி நேரத்தில் விருப்பம் இல்லா விட்டாலும், அர்ஜூனின் மனைவியாகி இருந்தாள் ஆராதனா! அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம், அவள் விரல்களைப் பற்றியவனுக்கு தெரிந்தது. அத்தனை தைரியசாலியாகப் பேசிவிட்டு, இப்படி பயப்படுகிறாளே என்று உள்ளுக்குள் சிரித்தான்.

மதிய நேரம் மணமக்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாலை நேரம் வரவேற்பு நடைபெற்றது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து விருந்து முடித்துச் சென்று விட்டனர். அர்ஜூனின் அறை முழுவதும் வாசனை திரவியங்களும், மலர்களின் வாசனையும் நிறைந்திருக்க, அவர்களின் வரவை எதிர்பார்த்து படுக்கையறை ஜொலித்தது.

விழிகளில் அனல் தெறிக்க, கோபத்தை அடக்க முடியாமல் திணறிய ஆராதனா, அவன் அறைக்குள் நுழைந்து ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி இருக்க, அவளுக்குப் பின்னால் வந்து கதவைத் தாழிட்டான் அர்ஜூன்!!

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்…

தொடருக்கான இனி வரும் பாகம் :https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-7/?mibextid=NOb6eG

10 thoughts on “அக்னி சாட்சி”

  1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

  2. Kalidevi

    Aduthu ena pana poralo aaradhana arjun kitta eppadi nadanthuka pora avan avala purinji tha mrg panikittan ellama irukanumnu

  3. Avatar

    ஆராதனா நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவளை மணந்தாலும், அர்ஜுன் அன்றிருக்கும் மனநிலையை மாற்றுவானா அல்லது ஆராதனா முந்திக் கொண்டு கடும் சொல் உரைப்பாளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *