Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 6

காலையிலிருந்து அவனை நிமிர்ந்து பார்க்காமலும், கடமைக்கு அலங்கரித்து, ஒப்புக்குப் புன்னகைத்து, போலியாக வேடமிட்டு, எப்படி எல்லாமோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த ஆராதனாவிற்கு, நேரமாக ஆக அழுத்தம் அதிகரித்தது. “இவள் தான் நம்ம அர்ஜூன் பொண்டாட்டி” “ஆமாம். பொண்ணு ஏன் எப்பவும் அமைதியாகவே இருக்கு. இவள் எப்பவும் இப்படி தான் இருப்பாளா? இல்ல, கல்யாணமான பயத்துல இருக்காளா? நம்ம அர்ஜூன் மாதிரி ஒருத்தன் கிடைக்க கொடுத்தல்லவா வச்சிருக்கணும்?” என்று ஒரு சிலர் கிசுகிசுத்தும், அவள் முகம் எந்த விதமான உணர்வுகளையும் பிரதிபலிக்க வில்லை.

எப்போதடா இந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்து, காலையிலிருந்து அணிந்திருக்கும் நகைகள், பட்டுப்புடவை, பூவைக் கழற்றி எறிந்து விட்டு, லேசான இரவு ஆடையை அணியலாம் என்றிருந்தது.

ஒரு வழியாக அனைத்தும் முடிந்து, அவசரமாக உடைகளையும் கழைந்தால், உடனேயே முதல் இரவுக்கும் அலங்கரித்து, “அர்ஜூன் ரொம்ப நல்ல பையன்! அவன் மனசு கோணாம நடந்து, கூடிய சீக்கிரம் இந்தக் குடும்பத்து வாரிசைப் பெத்துக் கொடும்மா” என்று சொல்லி, மறுபடியும் அனுப்பி வைத்து விட்டார்கள். அதிலும், அந்தப் பக்கமாகக் கேட்ட ஒருசில வார்த்தைகள், அவளைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியது.

அவன் மனைவியாக இருப்பதே பிடிக்காத நிலையில், இரவுக்கு எப்படி அவளால் தயாராக முடியும்? அவர்களை எதிர்க்கவும் முடியாமல், மனதில் இருப்பதை வெளியே கொட்டவும் முடியாமல் திணறி, அவன் அறைக்குள் நுழைந்ததும், அங்கு இருந்த தோற்றத்தைக் கண்டு, ‘ஏன் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தோம்?’ என்று கோபத்தின் உச்சிக்குப் போய் விட்டாள்.

கோபமும், ஆத்திரமும், வெறுப்பும் மட்டுமே நிலைத்திருக்க, வேறு எதைப் பற்றியும் யோசிக்கும் மனநிலை அவளிடம் இருக்கவில்லை. அவளையே பார்த்துக் கொண்டு உள்ளே வந்த அர்ஜூன் புன்னகைத்தான்.

தன்னைத் திரும்பிப் பாராமல் நிற்கும், அவளது நடவடிக்கையில் முகம் மலர உதட்டை அசைத்தான்.

“அந்த ஆகாயத்தில் இருக்கும் மூன்றாம் பிறையுடன் சண்டையிட ஆசையா? இல்லை, உன் அருகில் நிற்கும் கணவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க நாணமா?”

அவள் முகம் இறுக நின்று கொள்ள, “ஆராதனா! இத்தனை நேரமாக அந்த வானமகளையும், அதன் வாரிசாகிய நிலா மகனையும், அவர்களின் காவலர்களாகிய நட்டத்திர கூட்டங்களையும் ரசித்து விட்டால், திரும்பி, உன் கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பதையும் கேட்கலாமே?” என்று சொன்னதும், ‘ஏன்டா இவனைக் கட்டிக்கிட்டோம்?’ என்று தலையில் அடித்துக் கொள்ள தோன்றியது அவளுக்கு!

“உன்னைப் பெண் பார்க்க வந்தப்பவே, உன்கிட்டே பேசணும்னு நான் ரொம்பவும் ஆசைப்பட்டேன். அப்ப நீ அதுக்கான சந்தர்ப்பத்தை எனக்குத் தரல. இப்ப பேசுவதைக் கேட்பதில் உனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லயே?”

‘பெரிய நடிகர் திலகம்னு நினைப்பு! அப்படியே வார்த்தையில் மயக்கப் பார்க்கிறார்’ அவள் கடுப்புடன் எண்ணியிருக்க, “உனக்குப் பிடிக்காத எதுவும் இந்த வீட்டுல நடக்காது. உன் விருப்பத்தையும் மீறி நானும் நடந்துக்க மாட்டேன். நீயும் அவங்களோடு பேசிப் பழகிச் சந்தோஷமா இருக்கலாம்” என்றான்.

அவள் ‘எனக்கு யாரிடமும் பேசிப் பழகும் அவசியமில்லை. உன் பேச்சையே கேட்க முடியாம தவிப்பவளா, உன் வீட்டார் பேச்சைக் கேட்டு இன்புறப் போகிறேன்? ஏற்கனவே கேட்டது போதாது’ என்று வெறுப்புடன் நினைத்திருக்க, “கமலம் தன் காதலனைப் பார்த்ததும் நாணிச் சிவக்குமாம். அதே, அந்த நாணமும், தனது பெண்மையை உணரச் செய்வதும், அவனிடம் மட்டும்தானாம்! அதுபோலத் தான் பெண்களும், என்னதான் பகலில் வாயடித்து, கிண்டலாகப் பேசினாலும், இரவின் தனிமையில், யாருமற்ற நேரத்தில், தன்னவனைப் பார்த்ததும் வெட்கித் தலை குனிந்து, மருதாணி பூசாமலேயே முகம் சிவந்து, பேச்சற்றுப் போய் விடுவார்களாம்… உண்மைதானா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டபடி அருகில் செல்ல, அவளது மேனியெங்கும் தன்னிச்சையாக அதிர்ந்தது. விரல்கள் ஜன்னல் கம்பியை அழுத்தமாகப் பற்றிக் கொள்ள, கண்கள் சினத்தையும் விடாமல் தக்க வைத்தது.

அவன் புன்சிரிப்புடன் மேலும் நெருங்கிச் சென்று, மனைவியின் தோளில் கை வைத்து, அவளது விழிகளில் தெரிந்த தணலில் அசையாமல் நின்று விட்டான்.

அவளது முறைப்பும், முகத்தில் தெரிந்த கோபமும் அவனைப் புருவம் உயரச் செய்தது. ‘என்ன ஆயிற்று இவளுக்கு? ஏன் இப்படி இருக்கிறாள்? யாராவது ஏதாவது கூறி விட்டார்களா?’ என்று யோசனையுடன் நோக்கினான்.

“ஏன், ஆராதனா இப்படி இருக்கே? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?”

அக்கறையுடன் கேட்டபடி அவள் அருகில் சென்று நெற்றியில் கை வைக்கப் போக, “வேண்டாம். என்னைத் தொட வேண்டாம்!” என்று அடிக்குரலில் சீறினாள் அவள்.

“ஏன்? மனைவியைக் கணவன் தொடுவது குற்றமா?”

“மனைவி? கண்டிஷனுக்கு கட்டுப்பட்டு வந்தா, உடனே மனைவின்னு முத்திரை பதித்து விடுவதா?” அவளது கேள்வியில் அவன் புரியாமல் பார்த்தான்.

“எங்க அம்மாவுக்காக மட்டும்தான், அந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கு சம்மதம்னு சொன்னேன். உங்களுக்கு என்னைப் பிடிக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டு, என் மனசுல இருப்பதையும் தெரியப்படுத்துனேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி, ‘எனக்கு இதுல விருப்பமில்ல. எப்படியாவது கல்யாணத்தை நிறுத்துங்க’ன்னு கேட்டுக்கிட்டேன். பிறகும், எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணனும்? நான்தான் எனக்கு உங்களைப் பிடிக்கல. என்னை விட்டுட்டு, வேறு யாரையாவது கட்டிக்கிட்டு போயிடுங்கன்னு சொன்னேனே…” என்று கொதிப்புடன் வினவினாள்.

அவன் பதில் கூறாமல் நின்றதும், “எங்க அம்மாவோட கண்ணீரையும், ஏக்கத்தையும் பார்க்க முடியாம தான், நீங்க கட்டுன தாலியை வாங்கினேனே தவிர, உங்க அழகு, வசதியால் கவரப்பட்டு, இந்த வீட்டோட வாரிசைச் சுமந்து, உங்க குலத்தை வளரச் செய்யவோ, உங்களுக்கு அடிமைப்பட்டு, காலமெல்லாம் சேவகம் செய்யவோ இல்ல!” என்று சீற்றமாகக் கூறினாள்.

அவன் அமைதியாக நின்று அவள் பேச்சைக் கேட்டிருக்க, “இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில், எந்தவொரு ஆண் மீதும் பாசத்தைக் காட்டவோ, அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழவோ கூடாது. கடைசிவரை கல்யாணம் செய்யாமலேயே இருக்கணும்னு நினைச்சிருந்த என்னை, கூண்டுக்கிளியா மாத்தி உங்களுக்கு அடிமைப்படுத்த பார்க்கறீங்களா? இல்ல, நீங்க தொட்டுட்டு தூர வீசி எறியும் எச்சில் இலையாக மாறி, ஓரமா கிடந்து உங்களையே நினைச்சு கண்ணீர் வடிச்சிட்டு இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்களா?”

“… “

“விருப்பம் இல்லாத பெண்ணைக் கட்டாயமா திருமணப் பந்தத்தில் புகுத்தி, உங்க தேவைக்குப் பயன்படுத்தி, காரியம் முடிஞ்சதும் வீசி எறிஞ்சிட்டு புதுசா தேடுவதும், வீட்டுல உள்ளவங்க பேச்சைக் கேட்டு அடிச்சுக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்வதும், தன் பேச்சைக் கேட்காம இருந்தா, அவளுக்குத் தப்பான பெயரையும் ஏற்படுத்தி, பிறர் முன் தலை நிமிர்ந்து நடக்க விடாம செய்யும், கேடுகெட்ட ஆண்கள் நிறைந்த இச்சமுதாயத்தில், பெண்கள் மானமாக வாழவும், தங்கள் விருப்பம்போல நடந்துக்கவும், எத்தனைப் போராட வேண்டியது இருக்கு!! அப்படியென்ன பெண்ணினம் உங்களுக்குப் பாவம் செஞ்சதுன்னு இப்படி கொடுமை படுத்துறீங்க?” என்று ஆவேசமாகக் கேட்டாள்.

அவன் பதில் கூற வேண்டாம் என்ற எண்ணத்தில் நின்றிருந்தான் போலும், அவளும் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமின்றி, “அப்படியொரு வாழ்க்கையை என்னால எப்பவுமே வாழ முடியாது. தனித்து வாழ்ந்தாலும் கண்ணியமா, நேர்மையா இருப்பேனே தவிர, யாருக்கும் அடிமைப்பட்டு, கோழையா கண்ணீர் வடிச்சிட்டு இருக்க மாட்டேன். அந்த எண்ணத்தில் என்னை மணந்திருந்தா, இப்பவே எனக்கு விவகாரத்து கொடுத்திருங்க” என்றாள்.

அவளது பேச்சில் கோபத்திற்கு மாறாக ஆற்றாமையும், கவலையும், ஏக்கமும், வெறுப்பும், ஆண்களால் அடைந்த பாதிப்புகளும் மட்டுமே தெரிந்திருக்க, நீண்ட மூச்சை எடுத்து விட்டபடி, “தராம இருந்தா என்ன செய்வே?” என்று கேட்டான் அர்ஜூன்.

அவள் கடுமையாக முறைத்துக் கொண்டு நின்றதும், “வாக்கு மாறி நடப்பது எப்பவும் எனக்குப் பிடிக்காது. உன்னைப் பெண் பார்க்க வந்தப்போ, உன்னோட கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்டா, நீயும் என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிப்பதா சொல்லிட்டு, மாத்திப் பேசி ஏமாத்தப் பார்த்தா, நான் உன்னைச் சும்மா விட்டுருவேனா?” அவன் கிண்டலாகக் கேட்டான்.

“நீங்க மட்டும் என்னை ஏமாத்தலயா?”

“நானா? நான் இதுவரை உன்னைத் தொடக் கூட இல்லயே…”

அவனது நகைப்பும், பரிகாசமான பேச்சும் அவளுக்குக் கோபத்தை அதிகப்படுத்த, “வெறும் பன்னிரெண்டு படிச்சிட்டு உங்க அண்ணனோட ஹோட்டல்ல உதவியாளா இருப்பதோடு, உங்க ரெண்டு கடைக்கும் தேவையான உதவிகளையும் செஞ்சிட்டு, மார்கெட்டிங் வேலையைப் பார்த்துட்டு இருக்கும் கிராமத்தான் நீங்கன்னு சொல்லவே இல்லயே?”

அவனது முகத்தில் லேசாகத் திடுக்கிடல் வந்து போனது.

“நீங்க சொல்லாம இருந்தா எனக்குத் தெரியாதா? நான் எம்.எஸ்சி கோல்ட் மெடலிஸ்ட்! காலேஜில் முதலிடத்தில் வெற்றி பெற்று, வெளிநாட்டுல கிடைச்ச நல்ல வேலையைக் கூட எங்க அம்மா, அக்காவுக்காக வேணாம்னு சொல்லிட்டு, சொற்ப சம்பளத்தில் வேலை பார்க்கச் சம்மதிச்சவ. உங்களுக்கும் எனக்கும் எந்த வகையில் சம்மந்தம் இருக்குன்னு, என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்க? கண்டிஷன் போட்டா வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாதா? என்னால எப்படி படிப்பறிவில்லாத உங்களோடு சேர்ந்து வாழ முடியும்?” என்று படபடவெனப் பொறிந்து தள்ளினாள்.

அவன் சத்தமாகச் சிரித்தான்.

பயங்கரமான புத்திசாலியாகத் தான் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டே, “பொண்ணு பார்க்க வந்தப்போ உன்கிட்டே இது விசயமா மனம் விட்டுப் பேசி, உனக்குச் சம்மதமா இருந்தா மட்டும்தான், நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனால், நீ என்னை வாய் திறக்க விடாம செஞ்சதோடு, நான் யாரு, எப்படிப்பட்ட குணமுடையவன்னு தெரியாமலேயே, என்கிட்டே கண்டிஷன் போட்டு வசமா மாட்டிக்கிட்டே! இனிமேலும், அதுபற்றிய பேச்சு அவசியமில்லை. இப்ப நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு” என்று முடித்து விட்டான்.

அவளுக்குத் தன்மீதே கோபம் கோபமாக வந்தது. அன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்றதும், சுகந்தாவிடம் மாப்பிள்ளையைப் பற்றி தீர விசாரிக்காமல் போனதற்கும், அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல், முந்திரிக் கொட்டையை மாதிரி வாயை விட்ட தனது முட்டாள்தனத்தை நினைத்தும், தன்னையே நொந்து கொண்டாள்.

“ஆராதனா, நீ இப்ப என் மனைவி! உன்னை நல்ல விதமா வச்சு நடத்துவது என் கடமை. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னாலும், இந்த வீட்டில் உள்ள மனிதர்களாலும் உனக்குப் பாதிப்பு ஏற்படாது. உன் அம்மா வீட்டில் இருந்ததை விடவும் பாதுகாப்பாகவும், பாசமாகவும் இருக்கலாம்” என்றான்.

‘அம்மா வீடு’ என்றதும் அவளுக்குச் சுகந்தா மற்றும் ஆர்த்தியின் ஞாபகம் வந்தது. இருவரும் எப்படி இருக்கிறார்களோ? திருமணத்திற்கு யாரிடம் கடன் பெற்று, எங்ஙனம் கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்களோ? அத்தானுக்கு இரண்டு லட்ச ரூபாய் லோன் எடுத்தப் பணம் வேறு கொடுக்க வேண்டும். அம்மாவும் தனக்குத் தெரியாமல், யாரிடமெல்லாம் வாங்கி இருக்கிறார்களோ? என்று தவிப்புடன் எண்ணினாள்.

மனைவியின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அதில் ஓடும் உணர்வுகளைப் படிப்பதற்கு சிரமமாக இருந்தது. எதையோ நினைத்துத் தன்னை வருத்திக் கொள்கிறாள். அன்பாகப் பேச முயலும் தன்னையும், வாய் திறக்க விடாமல் செய்கிறாள். இத்தனை நாட்களாகத் தொடர்ந்து கஷ்டங்களையும், கவலைகளையும் மட்டுமே அனுபவித்து வருகிறாள். இனி வரும் நாளில், அவளே தன்னைக் கோபப்படும் விதமாக நடந்து கொண்டாலும், உணர்ச்சிவசப்படாமல் இருப்பது தான் எதிர்கால வாழ்விற்கு நல்லது என்று மனதிற்குள் நினைத்து, “ஆராதனா! உங்க அம்மாவுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லும் நீ, என்கிட்டே இருந்து விவகாரத்து வாங்கிட்டு போயிட்டா மட்டும், அவங்க சந்தோஷமாகவா இருப்பாங்க? அவங்க படுகிற வேதனை, கண்ணீரைப் பார்த்துட்டு உன்னாலேயும் நிம்மதியா இருக்க முடியுமா?” என்று கேட்டான்.

சுகந்தாவின் ஞாபகத்தில் அவளுக்குக் கண் கலங்கியது. அவனும் புரிந்து கொண்டு, “காலையிலிருந்து ஒரே அலைச்சலாகவும், சரியாக உண்ணாத சோர்வாகவும், வரவேற்பு சமயம் ரொம்ப நேரமா நின்னது கஷ்டமாகவும் இருக்கும். இதுக்கு மேலும் விவாதம் பண்ணாம தூங்கி ஓய்வெடு. நான் உன்னை விட்டு எங்கேயும் போயிட மாட்டேன். நம்ம விசயத்தைப் பற்றி மெதுவா பேசிக்கலாம். நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு முதல் விருந்துக்குப் போகணும்” என்றான்.

அம்மா வீட்டிற்குப் போக வேண்டும் என்றது ஓரளவு நிம்மதியைக் கொடுத்தாலும், அவனுடன் ஒரே அறையில் இருக்கும் போது தன்னை எதுவும் செய்து விடக்கூடாது என்ற எண்ணம், சிறு உறுத்தலாகத் தோன்றியது. தனது வீட்டில் உள்ள தன்னுடைய அறையைப் பூட்டி விட்டுத் தான் அவள் உறங்குவதும், உடை மாற்றுவதும் வழக்கம்! இங்கு எப்படி அவன் முன்பு என்று நினைத்ததும் சற்று திணறியது.

“இதே அறையில் தான் நானும் இருப்பேன். உனக்கு இதைத் தந்துட்டு வேறு அறைக்குப் போவதோ, உன்னை வேறு அறைக்கு அனுப்புவதோ நடக்காத விசயம். பொறுத்துப் போவதும், விட்டுக் கொடுப்பதும் பல நேரங்களில் உனக்கு நன்மையைப் பயக்கும்!”

தான் சொல்லாமலேயே எப்படி சரியாகப் பதிலுரைக்கிறான்? என்று அவள் பார்த்திருக்க, அவளது பேச்சுக்களையும், பார்வைகளையும் கண்டு கொள்ளாமல், படுக்கையின் அருகில் சென்று, அதன் மீதிருந்த பூக்களையும் உதறிவிட்டு, கட்டிலின் ஒரு ஓரமாக அவன் படுத்து, மறுபக்கம் அவளையும் படுத்துக் கொள்ள சொல்லி, கண்களையும் மூடிக் கொண்டான்.

வேறு வழி இல்லாமல் அருகிலிருந்த குளியலறைக்குள் புகுந்து உடைகளை மாற்றி விட்டு, வேறு உடையை அணிந்தபடி நகைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, தானும் படுத்தாள் ஆராதனா.

அவளை எப்படி முழுவதுமாக மாற்றி, தன் மீதான பாசத்தை உணரச் செய்வதென்ற யோசனையில் இருந்தான் அர்ஜூன்!

காலை நேரம் கண்களைத் திறந்த அர்ஜூன், கவிழ்ந்து கிடந்து உறங்கும் மனைவியைப் பார்த்துச் சிரித்தபடி எழுந்து செல்ல, அவளோ இரவு நெடு நேரமாக உறக்கம் இல்லாமல் தவித்து, அதன் பிறகே நித்திரை வசப்பட்டதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

அவன் உடையை அணிந்து விட்டு, கீழே வருவதைக் கண்ட வினோதினி, புன்னகையுடன் அவனை எதிர்கொண்டு, ஆராதனாவை பற்றி விசாரித்தாள்.

“மேடம், ராத்திரி ரொம்ப நேரமா தூங்கி இருக்க மாட்டாங்கல்ல! பிறகு, எப்படி காலையிலே எழுந்து வர முடியும்?” என்று கேட்டு அவளைப் புருவம் உயரச் செய்தான்.

“என்ன சொல்றே? ஆராதனா உன்கிட்டே நல்ல விதமா நடந்துக்கிட்டாளா? என்னால நம்ப முடியலயே…”

அவள் ஆச்சர்யமாக நோக்கியதும், “அவசரப்பட வேணாம் அண்ணி! ராத்திரி என்கிட்டே வார்த்தை யுத்தம் நடத்தியதில் சோர்ந்து போயி, ‘இந்தக் கிராமத்தானோடு எப்படி இருக்கப் போறோமோ?’ன்னு டென்சனில், உறங்காம இருந்திருப்பான்னு சொன்னேன்” என்று நகைத்தான்.

“என்ன சொல்றே அர்ஜூன்? அவள் ஏதாவது கோபமா பேசிட்டாளா?” அவள் தயக்கத்துடன் கேட்பதை உணர்ந்து, “அவள் எப்படி பேசினாலும் எனக்கு வருத்தமில்ல. ஏன்னா, அவள் ஒண்ணும் என்னைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சுக்கலயே அண்ணி?” என்று சாதாரணமாகவே கூறினான்.

உண்மைதான். ஆனாலும், திருமணமான பிறகும், அவன் அப்படிக் கூறுவதைக் கேட்கும்போது, ஒரு மாதிரியாகவும் இருந்தது.

“நீ எதுவும் அவள் மனசு சங்கடப்படுற மாதிரி நடந்துக்கலயே…”

“இல்ல அண்ணி. நீங்க என்னைத் தாராளமா நம்பலாம். உங்க தங்கையை நான் எதுவுமே சொல்லலை… சொல்லவும் மாட்டேன்!”

அவள் நிம்மதியாக உணர்ந்தாள். தன்மீது இத்தனைப் பாசத்துடன் அவள் நடந்து கொள்ளவும், அவனுக்குப் பெற்ற தாயிடம் ஏற்படும் மரியாதையும், உடன் பிறந்தவளிடம் காணப்படும் அன்பும் தோன்றியது. ‘அண்ணன் கொடுத்து வைத்தவர்!’ என்று நினைத்தபடி “கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன் அண்ணி!” எனச் சென்று விட்டான்.

சுகந்தா வீட்டில் திருமண விருந்திற்கான வேலைகள் மளமளவென நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆர்த்தி மகன்கள் இருவரையும் சுத்தப்படுத்தி, வேறு உடை அணிய வைத்து, கணவனையும் அவர்களையும் கவனித்துக் கொள்ள, சுகந்தா காலை உணவைத் தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார்.

அவரது இரண்டு தங்கைகளின் குடும்பமும் அங்கேயே நின்றிருக்க, மற்றவர்கள் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றனர்.

மாதவன் “விருந்து முடிஞ்சு எல்லாரும் கிளம்பியதும், நாமும் வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டான்.

திருமணம் முடிந்த மறுநாளே எப்படிப் போவது என்று நினைத்து, “ரெண்டு நாள் நின்னுட்டு போகலாமா?” அவள் தயக்கத்துடன் கேட்டுக் கொண்டே, கணவனின் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து, “இல்ல, கல்யாண விருந்து, வீட்டு வேலைகள்னு நிறைய இருக்குமே! அதை அம்மா மட்டும் தானே பார்க்கணும்” என்று தயங்கியபடி கூறினாள்.

“ஆர்த்தி, ரெண்டாவது அக்கா வீட்டுல விசேஷம் இருப்பதையும், நாம அங்கே போகணும் என்பதையும் மறந்துட்டியா?” என்றான் மாதவன்.

‘ஓ! நிஜமாகவே மறந்து விட்டது. அதை எப்படி வாய் திறந்து சொல்ல முடியும்?’ அமைதி தான் பல நேரங்களில் நம்மைக் காக்கும் அருமருந்தாகி விடுகிறது. அவளும் அது போலவே ஆகிவிட, அவன் மீண்டும் கேட்டதும்,

“ம்ம்… பங்சன் அன்னைக்கு காலையில போனால் போதாதா? நீங்க வேணும்னா போயிட்டு வாங்களேன்” என்று உரைத்தாள்.

“அவளுக்கு நகை எதுவும் வாங்க வேணாமா? தாய் மாமன் சும்மா போக முடியாதுல்ல?”

இப்போது புரிந்தது அவளுக்கு. ஆராதனாவின் திருமணத்திற்கு தம்பி வருவதை அறிந்து, அந்த விடுமுறையில் தனது மகளின் புப்புனித நீராட்டு விழாவையும் வைத்திருந்தாள் இளைய நாத்தனார்! இங்கு வந்து நின்று அனைத்தும் செய்தாகி விட்டது. இனி அங்கும் சென்று, தாய்மாமனாக முன்னின்று செய்யும் காரியங்கள் இருக்கின்றன.

பட்டுப்புடவை நாலாயிரத்து ஐநூருக்கு அவர்களின் விருப்பத்தில் எடுத்தாகி விட்டது. இனி தங்க வளையல் ஒரு பவுனுக்கு குறையாமல் வாங்க வேண்டும். அத்துடன் வீட்டுச் செலவு, மாதவனுக்கு போகும்போது கொண்டு செல்ல, தங்களுக்குத் தந்து விட்டுச் செல்வதற்கும் வேண்டும்.

மாத சம்பளம் வாங்குபவர் வீட்டில் எல்லாம் இதே நிலைமை தான்! அங்குக் கிடைக்கும் ஊதியத்திற்கு ஏற்ப அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டும். விசேஷ நிகழ்ச்சிகளுக்கு, நகை, உடை எடுப்பதற்கு செலவாகும் பணத்தையும், நாளாக நாளாகச் சமன்படுத்த வேண்டும். மிக முக்கியமான விசயங்களுக்கும், உடனடி தேவைகளுக்கும் நகையை அடமானமாக வைத்துச் செலவு செய்து, பிறகு மெதுவாக மீட்டெடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பிடித்தம் போகக் கிடைக்கும் பணத்தில் அவர்களுக்கும், குடும்பத்திற்கும் அனுப்பி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது லோன் வேறு போட்டு இருப்பதால், மாதா மாதம் குறிப்பிட்ட அளவு பிடித்தம் போக, மீத பணம் கையில் கிடைக்கும். ஏற்கனவே கிடைக்கும் பணம் போதாது எனும் நிலையில், இப்போது என்ன செய்ய முடியும்? அதற்காகச் செய்ய வேண்டிய கடமைகளையும் அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா?

“நான் என்ன செய்யணும்? நகை ஏதாவது அடமானமா தரணுமா?”

கணவனின் மனதைக் குடைவது பணப்பிரச்சனையாக இருக்குமோ என்று அவள் கேட்க, “ஆமாம் ஆர்த்தி. நான் ரெண்டு மாசத்துல திருப்பித் தந்துடறேன்” என்றான் மாதவன்.

அவள் மறுப்பேதும் கூறாமல், எவ்வளவு பணம் பெறுவதற்கு வேண்டும் என்று கேட்டு விழிகளை விரித்தாலும், அவன் கேட்டதைக் கொடுக்கவும் தயங்கவில்லை.

“நீ பிள்ளைகளைப் பார்த்துக்கோ! நான் போயிட்டு சீக்கிரமா வந்துடறேன்”

“விருந்துக்கு இப்ப எல்லாரும் வருவாங்க.”

“ம்ம்… எனக்கு இப்ப போனால் தான் மதிய நேரத்துக்குள் முடியும். சனி, ஞாயிறு திறக்காம இருந்தா கஷ்டம் இல்லயா?”

“ஆமாம். நீங்க போயிட்டு வாங்க!”

அவன் உணவை முடித்து வெளியேறிச் செல்ல, ஆராதனா தன் கணவன் குடும்பத்துடன் அங்கு வந்து சேர்ந்தாள்.

தொடர்கதைக்கான மறக்காமல் பதிவு செய்யுங்கள் …

தொடருக்கான அடுத்த பாகம் இதோ…https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-8/

9 thoughts on “அக்னி சாட்சி”

 1. Avatar

  முதல் மாப்பிள்ளையை நல்லவரா கெட்டவரா nnu தான் கேட்கணும். யாராவது ஏதாவது சொன்னால், மனைவி, அவள் குடும்பத்தை காய வேண்டியது மற்றபடி அக்கறை இருக்கு..

  அர்ஜுன் ஆராதனா இருவரும் எப்படி கொண்டு செல்ல போகிறார்கள் வாழ்க்கையை? அவளின் கடந்த காலம் அவளை பாதிக்கிறது.

  1. Avatar

   ஆமாம். மாப்பிள்ளையை பற்றி கேட்டு தெரிஞ்சுக்காம, கல்யாணத்துக்குப் பிறகு வருத்தப்பட்டு பலனில்ல.

   மிக்க நன்றி

 2. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *