Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 7

வீட்டிற்குள் நுழைந்த ஆராதனா, தன்னைப் பார்த்ததும் சித்தி என்று அழைத்த இரு சிறுவர்களையும் அப்படியே தூக்கிக் கொள்ள, “சித்தி எங்க போனீங்க? உங்களைக் காணாம அம்மாவும், மாமம்மாவும் அழுதாங்க. நானும் தம்பியும் உங்களைத் தேடினோம்” என்றான் அருண்.

அவள் புன்னகையுடன் வீட்டிற்குள் தூக்கிச் சென்று முத்தமிட, “இனி சொல்லாம எங்கேயும் போகக் கூடாது” என்று கண்டிஷன் போடுவதைக் கண்டு, அருகில் இருந்தவர்கள் அவர்களின் பாசத்தை உணர்ந்து சிரித்தனர்.

ஆர்த்தியும், சுகந்தாவும் அவர்களை வரவேற்று அமர வைத்தார்கள். மகள் முகத்தில் தெரிந்த புன்னகையும், மகிழ்ச்சியும் தாயவளை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது அக்கா மகனின் பேச்சைக் கேட்டதால் என்று அவருக்குத் தெரியவில்லை.

அர்ஜூன் அனைத்தையும் பார்த்துப் புன்சிரிப்புடன் அமர்ந்திருக்க, அவனைக் கண்டு கொள்ளாமல் தாயிடமும், தமக்கையிடமும் பேசியபடி இருந்தாள் ஆராதனா.

மதிய நேரம் பிரியாணியும், இறைச்சியும் செய்யப்பட்டு அனைவருக்கும் முதல் திருமண விருந்து பரிமாறப்பட்டது. உணவை முடித்ததும் வேண்டா வெறுப்பாக, தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டாள் ஆராதனா.

அப்போது பைக்கிலிருந்து வேகமாக வந்த மாதவன், அர்ஜூன் அருகில் சென்று பேசினான். ஆராதனாவிடமும் நலம் விசாரித்து, தங்களின் வீட்டிற்கும் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மனைவி ஆர்த்தியின் அருகில் சென்று முறுவலித்தான்.

கணவனின் புன்னகை அவளுக்கும் புன்முறுவலை தோற்றுவிக்க, மகன்களைத் தாயிடம் விட்டு விட்டு, அவனுடன் இணைந்து வீட்டிற்குள் சென்றாள்.

அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்திருந்த ஆராதனாவிற்கு, அக்காவை நினைத்து வியப்பாகவும், அத்தானின் நடவடிக்கைகள் நம்ப இயலாமலும் இருந்தன.

அத்தான் அத்தனை பேசி அடித்து அவமதித்தும், அவளால் எப்படி அவர் சொல்வதற்கு எல்லாம் தலையசைக்க முடிகிறது? கோபம், அழுகை, வெறுப்பு, ஏக்கமாகப் பேசும் வார்த்தைகள், அவளை விட்டு எங்ஙனம் மறைந்து போகிறது? அவர் சிரித்ததும் சிரிக்கிறாள். கோபப்பட்டதும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறாள். சத்தமிட்டதும் எதிர்த்துப் பேசுகிறாள். சண்டையிட்டதும் பேசாமல் கண்ணீர் வடிக்கிறாள். ஏன் இப்படி மாறி விட்டாள்? அம்மாவும் இப்படித்தானே இருந்தார். தானும் இப்படிதான் வாழ வேண்டுமோ என்று நினைத்ததும், கண்கள் தானாக அருகில் இருந்தவனை நோக்கிச் செல்ல, அவனும் அவளைத் தான் அத்தனை நேரமாகப் பார்த்து இருந்தான்.

‘கணவன், மனைவி என்றால் அப்படி தான் இருப்பார்கள். நீயும் போகப் போக எல்லாவற்றையும் தெரிந்து கொள்வாய்’ என்றான் பார்வையிலேயே அர்ஜூன்!

அவள் பேசாமல் பார்வையை மாற்றிக் கொள்ள, மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த மாதவன், அவர்கள் கிளம்புவதை அறிந்ததும், வெளியே வந்து அவர்களை அனுப்பி வைத்தான்.

பிள்ளைகள் இருவரையும், கணவனையும் உண்ணச் செய்து, போன விசயமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தாயிடம் சற்று நேரம் பேசிவிட்டு வந்தாள் ஆர்த்தி.

வீட்டிற்குள் நுழைந்த ஆராதனாவின் மனம் வெறுமையை உணர்ந்தது. ‘சித்தி’ என்று அழைத்துத் தன் பின்னேயே சுற்றும் அக்காவின் மகன்கள், ‘ஆரா’ என்றழைத்து அன்பை செலுத்தும் தாய் சுகந்தா. ‘ஆராதனா’ எனப் பாசத்தைப் பொழியும், அக்கா ஆர்த்தியின் ஞாபகத்தில் மனம் கனத்தது.

என்னதான் கணவன் வீட்டில் அத்தனை பேர் இருந்தும், யாரிடமும் சிறு ஒட்டுதலின்றி, கண்காணாத தேசத்திற்கு வந்தது போல் இருந்தது. இதில், வினோதினியின் பரிவான பேச்சுக்களோ, மாமியாரின் மென்மையான வார்த்தைகளோ, சிறு பிள்ளைகளின் கீச்சுக் குரலோ செவியில் நுழையவில்லை.

கீழே நின்று அவர்களின் பேச்சுக்களைக் கேட்க விரும்பாமல், நேராக மாடியில் உள்ள அறைக்குச் சென்று நகைகள், புடவையை மாற்றி விட்டுக் கட்டிலில் சரிந்தாள். சில நிமிடங்களாக எதேதோ எண்ணங்களில் மூழ்கி, நேற்றிரவு சரியாக உறக்கமின்மையால் தூக்கத்திற்குச் சென்றாள்.

அண்ணன், அண்ணியிடம் பேசிவிட்டு மேலே வந்த அர்ஜூன், மனைவியைப் பார்த்தான்.

காலையில் எழுந்த நேரம் முதல் யாரிடமும் ஒரு வார்த்தைப் பேசாமலும், சின்னதாக ஒரு முறுவல் கூட உதிர்க்காமலும், யாரோ ஒருத்தியைப் போல இருக்கிறாள்.

இவர்கள் எல்லோரும் அவளுடனே இறுதி வரை துணையாக வரப்போகிறவர்கள், அவர்களுடன் தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் சிறிதுமின்றி, பாராமுகத்துடன் நடந்து கொள்கிறாள். கட்டிய கணவனான தன்னிடம் நடப்பதற்கும், அவர்களிடம் நடந்து கொள்வதற்கும் வித்தியாசம் இல்லயா? இதை எப்போது இவள் புரிந்து கொள்ளப் போகிறாள்? எங்ஙனம் இவளை மனமாற்றம் செய்வது? என்று யோசனையில் மூழ்கினான்.

மாலை தாண்டியும் எழாமல் அவள் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, இரவு நேரம் வீட்டிற்கு வந்த அர்ஜூன், அண்ணன் அருகில் சென்று பேசிக்கொண்டு இருந்தான்.

அப்போது, வினோதினி அவனைப் பார்த்துக் கண்காட்ட, அருகில் சென்று என்னவென்று விசாரித்து, உடனே மாடிக்குச் சென்று கதவைத் திறந்து பார்த்தான்.

இருள் சூழ்ந்து காணப்பட்ட அறைக்குள் புகுந்து, சுவரிலிருந்த சுவிட்சை தேய்க்க, அடித்துப் போட்டார் போல அயர்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியைக் கண்டு, திகைப்புடன் நோக்கினான்.

‘மதியம் மூன்று முப்பது மணியளவில் படுத்தவள், ஏழு மணியாகப் போவதும் தெரியாமல் உறங்கிக் கொண்டு இருக்கிறாளே! உடம்பிற்கு எதுவும் செய்கிறதோ?’ என்று பதற்றத்துடன் அருகில் சென்று, அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க, அது சாதாரணமாகவே இருந்தது.

அவனிடம் ஒரு நிம்மதியான மூச்சு வெளிப்பட்டது.

அவளின் தோளில் கை வைத்து மெதுவாக உலுக்கினான். “ஆராதனா நேரமாகுது. கண்ணைத் திறந்து பாரு” என்று அவள் கன்னத்தையும் தட்டினான்.

அவள் மறுபடியும் சரிந்து படுத்துக் கொண்டதும், புன்னகையுடன் அவளை மறுபடியும் அழைத்து, இருட்டி விட்டதையும், நேரம் ஏழு மணியாகப் போவதையும் அறிவுறுத்த, அவளது விழிகள் லேசாகத் திறந்தன. அருகில் தெரிந்த கணவனின் முகத்தையே பார்த்து விட்டு, அவனது பேச்சுக் குரலில் சடாரென விலகி எழுந்தாள்.

‘ஷ்ஷட்… என்ன பண்ணி வச்சிருக்கே? அவர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்?’ மனதிற்குள் நினைத்த அடுத்த நிமிடம், வலது கை விரல்கள் நெற்றியை நீவி விட, அவனோ மென்னகையுடன் படுக்கையில் அமர்ந்தான்.

“எதுக்கு இத்தனை டென்சன்? நான் ஒண்ணும் வேறு யாரோ இல்லயே… நேரமாகுது. போயி சுத்தமாகி புடவை அணிஞ்சிட்டு வா! கீழே எல்லாரும் நமக்காகக் காத்திருக்காங்க”

அவள் புரியாமல் பார்த்திருக்க, “என்ன அப்படி பார்க்கறே? நம்ம மதியம் வந்ததும் நீ படுத்துத் தூங்கிட்டே! நானும் வெளியே போயிட்டு இப்ப தான் வீட்டுக்கு வந்தேன். நல்ல தூக்கத்துல இருக்கும் உன்னை எப்படி எழச் செய்து, தொந்தரவு பண்ணுவதுன்னு தயக்கத்தில், அண்ணியும் இங்க வராம இருந்துட்டாங்க. இப்ப நீ வந்துட்டா நாம ரெண்டு பேருமா சேர்ந்து கீழே போகலாம்” அவன் தெளிவாகக் கூறிய பிறகே அவளுக்குப் புரிந்தது.

வீட்டில் முழு நேரமும் இரவு ஆடையில் இருப்பதால், இங்கும் புடவையை மாற்றி விட்டு, அதேபோல படுத்து உறங்கி விட்டாள். இப்போது கீழே போக வேண்டும். கணவனின் இரு அண்ணனின் குடும்பம், மாமனார் மாமியார் இருக்க, இத்துடன் வர வேண்டாம் என்று நாசூக்காகத் தெரியப்படுத்துகிறான் அவள் கணவன்!

அவள் எழுந்து உடைகளையும் எடுத்துக்கொண்டு, குளியலறையை நோக்கி நடக்க, “ஆராதனா! இது நம்மளோட அறை. இங்க நீ எப்படி நடந்துக்கிட்டாலும், நான் எதுவும் சொல்லமாட்டேன். இதைத் தாண்டி வெளியே வந்துட்டா, நீ இந்த வீட்டு மருமகள். உன்னைப் போல இன்னும் ரெண்டு பேர் குடும்பமும், மாமியார் மாமனார் இருப்பதையும் மறந்துடாதே!” என்று எடுத்துரைத்தான்.

அவள் பதில் கூறாமல் அறைக்குள் புகுந்து கதவடைக்க, அவனும் தனது வேலையில் மூழ்கிப் போனான்.

இரவு உணவு நேரம் அனைவரும் சிரித்துப் பேசியபடி இருந்ததில், அந்தச் சாப்பாட்டு அறையே கலகலப்பால் நிறைந்தது. அவளது விழிகள் தன்னையும் மீறி வியப்பில் ஆழ்ந்தது.

தன் வீட்டில் தாயும் அவளும் மட்டுமே இருக்க, எப்போதும் அமைதியும், தொலைக்காட்சியின் சத்தமும் தான் மற்றொருவராக இருந்து அவர்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும் செய்யும். அப்படிப்பட்டவர்களுக்கு, ஆராதனாவின் வரவும், பிள்ளைகளின் பேச்சும், அத்தனை இதமாக இருக்கும். ஆனால், இங்குக் கணவன் வீட்டில் உள்ளவர்களின் பழக்கவழக்கம் விசித்திரமாகத் தெரிந்தது.

கூட்டுக்குடும்பம் என்றால் இப்படிதான் இருக்கும் போலும் என்று எண்ணினாள்.

உணவை முடித்த அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, அவளும் ஒரு ஓரமாக அமர்ந்து, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இத்தனை நேரம் உறங்கி விட்டு வந்ததைப் பற்றியோ, அவளது அமைதியான தோற்றத்தைப் பற்றியோ, யாருமே ஒரு வார்த்தைக் கூறாமல் இருப்பதைக் காணும்போது, வித்தியாசமான மனிதர்களாகத் தெரிந்தார்கள்.

அறியாத இடமாக இருந்ததால், வெளியே சென்று சற்று நேரம் உலாவவும் பயமாக இருந்தது. அவர்களில் யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்லவும் தயக்கமாக இருந்தது. அத்தனை பேர் முன்பு திடீரென எழுந்து செல்வதும், மரியாதை குறைவாகத் தோன்றியதால், அசையாமல் அப்படியே இருந்து விட்டாள்.

அவனது விழிகள் அடிக்கடி அவளைப் பார்த்து விட்டு மீண்டன. அவளது சாந்தமான முகமும், வசீகரிக்கும் அழகும், அங்கேயும் இங்கேயுமாக அலைந்து செல்லும் கயல் விழிகளும், மாம்பழத் துண்டுகளை இணைத்து வைத்தது போன்ற, உதட்டில் அடிக்கடி ஏற்படும் சுழிப்பும், அவள் மீது ஒருவித பரிவையும், பாசத்தையும் உண்டு பண்ணியது. ஆராதனா அப்படியே இருந்து பழகுவது தான் நல்லது என்று நினைத்து, வாய் திறக்காமல் இருந்து கொண்டான் அர்ஜூன்.

பத்து மணிக்கு அறைக்குள் சென்று மறுபடியும் கட்டிலில் சரிய, மாலை நேரம் அதிக நேரம் உறங்கியது, அவளது உறக்கத்தைப் பறித்தது. ஆனால் அவனோ, பகல் முழுவதும் அலைந்து கொண்டு இருந்ததால், படுத்ததும் உறங்கி விட்டான்.

மாதவன், மகன்கள் இருவரையும் மாமியாரிடம் விட்டு விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு, பைக்கில் பயணம் செய்தான். நேராக கடையின் முன்பு சென்று நிறுத்தியதும் கீழே இறங்கிய ஆர்த்தி, அங்கு அமர்ந்திருந்த நாத்தனார் இருவரையும் பார்த்துப் புரியாமல் விழித்தாள்.

“வா ஆர்த்தி!”

அவளது பார்வை அக்காமார்களின் மீதிருப்பதைக் கண்டு, “உள்ளே வந்து பார்! உனக்கே புரியும்” என்றபடி அழைத்துச் சென்றான்.

தம்பியைப் பார்த்தவர்களின் உதடுகள் காதுவரை நீண்டன. “வா தம்பி உட்கார்! நாங்களும் இப்பதான் வந்து சேர்ந்தோம்” நாத்தனார்களிடம் நலம் விசாரித்து விட்டு, நாற்காலியில் அமர்ந்தாள் ஆர்த்தி.

அவர்கள் முன்பு வெள்ளையும், நீலமும் கலந்த வெண்ணிற கற்களால் வடிவமைக்கப்பட்ட கல்நெக்லஸ் இருப்பதைக் கண்டு, மகளுக்காகப் புதியதாக எடுக்கிறார்கள் போலும் என்று நினைத்தாள்.

“இதைத் தான் வாங்கப் போறோம் ஆர்த்தி. அன்னைக்கு ஒரு நாள் வந்தப்போ, இதைப் பார்த்ததும் எங்களுக்குப் பிடிச்சிருந்தது. தம்பிகிட்டே சொன்னதும், ‘உங்களுக்குப் பிடிச்சா வாங்கிடலாம்’னு சொன்னான். கடையில கேட்டதுக்கு ‘அது மாடலுக்காக வச்சிருப்பது. உங்களுக்கு வேணும்னா புதுசா செஞ்சு தர்றோம்’னு சொன்னதால், இன்னைக்குப் பார்த்துப் பணத்தையும் கொடுத்து, வாங்கிட்டுப் போக வந்திருக்கோம்” என்று இரண்டாவது நாத்தனாரிடமிருந்து விளக்கம் வந்தது.

அப்படியானால், கடமைக்குத் தான் அழைத்து வந்து இருக்கிறானா? இதற்கு அழைக்காமலேயே இருக்கலாமே என்ற எண்ணம், அவள் அடி மனதில் உருவாகி, சுருக்கென வலியை ஏற்படுத்தியது.

அடுத்து வெள்ளி கொலுசும், பெரிய நாத்தனார் தனக்கு விருப்பமாக வளையலும் வாங்கிக்கொண்டு, ஃபேன்ஸி சாதனம் முதல் அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கியதும், அவர்களுடன் உணவகத்திற்குச் சென்று உணவையும் முடித்துவிட்டு, மறுபடியும் கிளம்பி வீட்டிற்கு வந்தாள்.

திட்டமிட்டு நடத்திக் கொண்டு, போலியாகத் தன்னிடம் வேடமிடுகிறார்கள். தம்பி தாங்கள் சொன்னால் எதையும் மறுக்கமாட்டான். இவளிடம் எதற்குச் சொல்ல வேண்டும்? வா என்றால் வருவது தான் அவளது வேலை என்று நினைத்து, கடமைக்குத் தன்னை அழைத்து இருக்கிறார்கள். அதற்கு இவரும் உடந்தை! கணவனே மனைவியை மதித்து நடத்தா விட்டால், அவன் உடன்பிறப்புகள் எங்கே இருந்து அவளை மரியாதையுடன் நடத்துவார்கள்? ‘உன்னைக் கண்டு ஆகும் அவசியம் எங்களுக்கு இல்ல. எங்க தம்பியே எல்லாவற்றையும் பார்த்துக்குவான். உன்னைக் கட்டியதே தெண்டம். இதுல ஆலோசனை வேறா?’ எனும் விதமாக அவர்கள் நடந்து கொள்ளும் முறை, ஏற்கனவே அவர்கள் மீதிருந்த வெறுப்பையும், பிடித்தம் இன்மையையும் அதிகப்படுத்தியது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் கணவனிடம் சொல்லி விட்டாள். காலையில் தானே பங்சன் அப்ப போனால் போதும் என்று! ஆனால், அவனோ முந்தைய நாள் இரவு நேரம் சென்று தங்கி விட்டு, மறுநாள் வரப் பார்க்கலாம் என்று பதிலுரைக்க, அவனை எதிர்க்க முடியாமல் அமைதியானாள் ஆர்த்தி.

இதற்கு மேலும் பேசினால் வாக்குவாதம் நீளும். அவனை எதிர்த்துப் பேசுவதாகவும், தனது விருப்பம் போல் நடந்து கொள்வதாகவும், அவனை மதிக்க வில்லை; அவன் வார்த்தைகளைச் செவிசாய்க்க வில்லை என்று கூறி மல்லுக்கு நிற்பான். பிறகு, அத்தனை நாட்களும் இருந்த இலகுத்தன்மை மாறிவிடும். நிம்மதி பறிபோய் வெறுப்பும், கண்ணீரும் கலந்து காணப்படும். அதனால், மனதில் இருப்பதை வெளிக்காட்டாமல் மறைத்து, வாயை மூடிக் கொண்டாள்.

“நான் வீட்டுக்குப் போயிட்டு வர்றேன். நீ பிள்ளைகளைப் பார்த்துக்கோ!” அவள் அழைத்தும் வீட்டிற்குள் வராமல், பைக்கில் சென்று விட்டான் மாதவன்.

அவள் கண்ணீரை அடக்கியபடி தாயையும், மகன்களையும் தேடிச் சென்றாள்.

காலையில் கண் விழித்த அர்ஜூன், அருகில் மனைவியைக் காணாததும், ‘பரவாயில்லை குடும்ப பொறுப்பு வந்து விட்டது’ என்று எண்ணி புன்னகை புரிந்தான். காலைக் கடன்களை முடித்துக் கீழே வந்து, கூடத்திலும் சமையலறையிலும் அவளைக் காணாமல் அண்ணியிடம் விசாரிக்க, அவர் வீட்டிற்குப் பின்புறமாக கை காட்டினார்.

“அங்கே போயிருக்காளா?”

“ஆமாம்”

“உங்க கிட்டே பேசினாளா அண்ணி?”

அவள் மறுப்பாகத் தலையசைத்ததும், சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

“அர்ஜூன்! அவளுக்குக் கொஞ்சம் டைம் கொடு. புது இடம், வீட்டு நபர்களைப் பற்றிய ஏக்கம் மறைய நாளாகலாம்” என்றாள் வினோதினி.

அவன் பேசாமல் வெளியே வந்து அவளைத் தேட, அவளோ மாட்டுக் கொட்டகையில் உள்ள கன்று குட்டியைப் பார்த்தபடி இருந்தாள்.

அது தன் தாயின் மடியில் பால் அருந்தும் அழகையும், தத்தித் தத்தி ஓடும் விதத்தையும் பார்த்து, தனது வீட்டு ஞாபகத்தில் கண் கலங்கினாள்.

அப்போது வந்த அர்ஜூன், “இங்க தனியா உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கே? சாப்டியா?” என்று இயம்பியதும், அவள் அவசரமாக விழிகளைத் துடைத்து, அங்கிருந்து எழுந்து செல்ல முனைய, “கொஞ்சம் பொறு” என்று அவளை நிறுத்தினான்.

அவள் திரும்பிப் பார்க்காமல் இருந்ததும், “வா! கொஞ்ச நேரம் அந்தப் பக்கமா போயிட்டு வரலாம்” என்று அழைத்தான்.

வீட்டிற்குப் போகவும் பிடிக்கவில்லை. அவனுடன் நடந்து செல்லவும் விருப்பமில்லை. வேறு வழியின்றி நடந்தாள் ஆராதனா.

வீட்டிற்குப் பின்னால் சற்று தொலைவுக்கு வந்ததும், அங்கிருந்த குளம், வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டே நடந்தவளிடம், தங்களுக்குச் சொந்தமான விளைநிலங்களையும், அவற்றில் பயிரிடப்படுவதையும் கூறினான்.

அவள் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதைக் கண்டு, “நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலயா?” என்று கேட்டான்.

அவள் பதில் கூற மனமற்று நின்றிருக்க, “ஆராதனா! படிப்பும், வேலையும் மட்டுமே ஒரு மனிதனை எடை போடாது. அவரவர் நடந்து கொள்ளும் முறையும், பழக்க வழக்கமும், குணமும் தான் அவர்களை உயிர்ப்புடன் வாழ வைக்கும்” என்றான்.

அவள் விருப்பமற்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க, அது தெரியாமல் “எங்க பெற்றோருக்கு மூணு ஆண்கள். என் தங்கை ஒருத்தின்னு நாங்க நாலு பேர் அவங்களுக்குப் பிள்ளையா பிறந்தோம். எங்களை அவங்க அதட்டவோ, அதிகாரம் பண்ணவோ செய்யாம, அன்பினால் தான் பலதையும் புரிய வச்சாங்க. அதிலும் என் பெரிய அண்ணன் இளவரசு மெய்யாலுமே இளவரசர்தான்! அப்படிப்பட்ட குணம். அவர் மனைவி எத்தனைப் பொருத்தமான தேர்வுன்னு, நானே பலமுறை வியந்து போயிருக்கேன். அவங்களோட ஆணும், பெண்ணுமான ரெண்டு வாரிசுகளும் ‘சித்தப்பா, சித்தப்பா’ன்னு உசுரையே விட்டுருவாங்க.

அடுத்த அண்ணன் விசாகன் படிக்கிற காலத்திலேயே ஒரு பெண்ணை விரும்பியதால், அவங்க கல்யாணத்தை எந்தவித தடையும் இல்லாம எங்க அப்பாவும், பெரிய அண்ணாவும் நடத்தி வச்சாங்க. அவங்க மனைவி வைசாலி. பெயர் பொருத்தம் மாதிரி அவங்க மனப் பொருத்தமும் இருக்கும். படிச்சவங்க, வசதியான வீட்டைச் சார்ந்தவங்க, அதுக்குத் தக்க பகட்டாவும் நடந்துப்பாங்க. அவங்களுக்கும் ஒரு பையன் இருக்கான்.

என் ஒரே தங்கை அஸ்மிதா! இப்ப கல்லூரியில் பீ.ஈ. மூணாவது வருஷம் படிச்சிட்டு இருக்கா. வீட்டுல எத்தனையோ சம்மந்தம் பார்த்தும், படிப்பு முடியாம யாரையும் ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா” என்றவன் தங்கையின் ஞாபகத்தில் சிரித்தான்.

“அவங்களோடு பிறந்த நான். படிப்பை விட சிறு வயதிலேயே உழைப்பு, பெரிய அண்ணனுடன் சேர்ந்து நிர்வாகம் பண்ணுவது, அதைச் சந்தைப்படுத்துவது, கடை வியாபாரத்துல மும்முரமா ஈடுபடுவது, புதுசா பெரிய ஹோட்டல் கட்டணும்னு கனவில் மூழ்கி, அதைச் செயல்படுத்தும் எண்ணத்தில் இருந்ததால், இந்தக் கிராமத்தை விட்டு வெளியூருக்குப் போயி படிக்கணும். வேறு ஆளுகிட்டே வேலைப் பார்க்கணும்னு நினைக்கல.

சொந்தமா வீட்டுல எத்தனையோ வேலைகள் இருக்கு. அதையெல்லாம் விட்டு, விசாகன் அண்ணன் மாதிரி அரசாங்க வேலைக்குப் போகணும்னு நான் ஆசைப்படல” என்று கூறினான்.

அவள், அதற்கு எனக்கு என்ன? எனும் விதமாக நின்றிருக்க, “பட்டப்படிப்பை விட, கேள்வி ஞானம் பெருசுன்னு நீ அறிஞ்சது இல்லயா? எங்க அண்ணி, நீ இப்படியே இருக்க கூடாதுன்னு அடம்பிடிச்சு படிக்க வைக்க ஏற்பாடு பண்ணினாங்க. ஆனால், புத்தகத்தைப் புரட்டவே நேரம் இல்லாம இருப்பவனால், எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்? ஆனாலும், அண்ணியோட பிடிவாதத்தால் பார்க்கும் தொழிலுக்கு ஏற்ற வகையில் படிக்கிறேன். வேறு எதுவும் வேணாம்னு சண்டை போட்டு அதோடு போராடினேன்” என்று கூறிச் சிரித்தான்.

அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்காமல் மனம் முழுவதும் கசந்தது. அதற்கு மேலும் நின்று அவன் பேச்சைக் கேட்க மனமற்று விலகி நடக்க, அவனது கை விரல்கள் விடாமல் அவளைப் பற்றி நிறுத்தியது.

தொடர்கதைக்கான கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்… அடுத்த யூடி இன்னும் நான்கு நாட்களில் பதிவிடுகிறேன். கொஞ்சம் திடீரென வேலை வந்து விட்டது.

அடுத்த பதிவிற்கான லிங் இதோ…https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A/

6 thoughts on “அக்னி சாட்சி”

 1. Avatar

  அர்ஜுன் கொஞ்ச கொஞ்சமாக அவளை மாற்ற நினைக்கிறான். ஆனால் விரைவில் நடக்குமா?

  ஆர்த்தி வாழ்க்கை என்ன சொல்வது என்றே தெரியவில்லை… எதிர்பார்ப்பில்லாமல் வாழ வேண்டும் போல.. இவர் இப்படி தான் என்று தெரிந்தாலும், மனம் அதன் ஆசையை விடாது நிற்பதும் இயல்பு தானே

 2. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

 3. CRVS 2797

  அய்யே…! இவ ரொம்ப தான் அலட்டிக்கிறாளோ. அவன் அத்தனை பெரிய வீட்டுல இருந்து வந்தும், கொஞ்சம் கூட பந்தா காட்டாம இருக்கான். இவ என்னடான்னா ரொம்பத்தான் அலட்டிக்கிறா.

 4. Kalidevi

  Arjun ivlo pesuran konjam kathu koduthu keluma Yen intha pidivatham ellam aambalaingalum ore mari iruka matanga arjun nalla space kodukuran unaku athula konjama ethu vazhnthu paru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *