Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 9

நாகரீகம் என்பது என்ன? வருடக்கணக்காகப் பழகிய நட்புகளையும், உறவினர்களையும், தெரிந்தவர்களையும் விலக்கி நிறுத்திவிட்டு தன்னை உயர்வானவராகக் கருவதா? உடை, நடை, பாவனை, பேச்சுக்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதா? அதுவும் இல்லா விட்டால் பணக்காரியைப் போல பகட்டாக உடை அணிந்து, யார் வந்து நட்பு பாரட்டினாலும், தெரிந்தவர், உறவினர்களின் கேள்விக்குப் பதிலாகச் சிறு முறுவலையும், லேசான தலையசைப்பையும், உதட்டளவில் லேசாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளுமா?

அவர்கள் என்ன சொன்னாலும் ஆர்த்தி கண்டு கொள்வதே இல்லை. ‘திட்டுனா திட்டு; குறையாகப் பேசினால் பேசு. எனக்கென்ன?’ என்பது போன்ற அவளது நடவடிக்கையில் அவளது புகுந்தகம் அதிருப்தியை உணர்ந்தது.

அத்துடன், அவளது இரு மகன்களும் கூட அவளைப் போலவே எல்லோரிடமும் பேசிப் பழகினார்கள். அனைவரின் வீட்டிற்கும் சென்றார்கள். ஆனால், சிறு பிள்ளைகளுக்கு உரித்தான விளையாட்டு குணம் அவர்களிடமும் அதிகமாகவே இருந்தது.

போட்டதை உண்டு அமைதியாக இருக்கும் பிள்ளைகளும் உள்ளனர். அதே, விளையாட்டுத்தனம், குறும்புத்தனமான நடவடிக்கை, சொல்வதை கேட்டு சரி என்றாலும், அடுத்த நிமிடம் முன்பு போல மாறி ஓடி விளையாடி, சேட்டைகள் பல புரியும் பிள்ளைகளும் இருக்கின்றனர். அதில் இரண்டாம் வகை ஆர்த்தியின் பிள்ளைகள்.

மூத்தவன் அம்மாவின் உயிர் என்றால், இளையவன் அப்பாவின் உயிர். மாதவன் மகனை மடியில் தூக்கிப் போட்டுக் கொஞ்சுவான். மூத்தவன் தாயை விட்டு நகரவே மாட்டான். அப்படிப்பட்ட பிள்ளைகள் சிறு வயதில் எதையாவது தட்டிப் போட்டு விடும், கீழே இருக்கும் சாதனங்களைக் கண்டதும் அதை நோக்கி ஓடிச் செல்லும். ஒருவரை ஒருவர் அடித்துச் சண்டையிடும். அவள் இப்படி செய்யக் கூடாது என்றாலும் சரி சரியெனத் தலையாட்டுபவர்கள், மறுபடியும் அதையே தான் செய்வார்கள். அருணின் முகவடிவு கணவனையும், அவளையும் கலந்து காணப்படும்.

மகனை மார்பில் சாய்த்து உறங்க வைப்பதும், பாசத்தால் குளிப்பாட்டுவதுமாகப் பார்த்துக் கொண்டவளுக்கு, அவன் பிறந்த அடுத்த வருடமே வருணும் பிறந்து விட, இருபத்தி ரெண்டு வயதிற்குள் இரு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள் ஆர்த்தி! வீடு, பிள்ளைகள் என்று இருந்தவள் முன்பு, சேட்டைகள் செய்த மகன் அருணை, மாதவனிடம் அடிக்கச் சொன்னது அவளது மாமியார் செண்பகம்!!

“ஆம்பிள்ளை பிள்ளைய சின்ன வயசுலயே, அடிச்சு வளர்த்தா தான் அவன் ஒழுங்கா வருவான். இல்ல சொல் பேச்சு கேட்காமலேயே வளர்ந்து வரும்” என்று கூறி, துடைப்பத்தில் உள்ள தென்னங்கீற்றை எடுத்து மகனிடம் கொடுத்து, “அவனோட முட்டுக்கு கீழே அடி” என்றார்.

“இந்தச் சின்னப் பிள்ளையை அடிக்கச் சொல்றீங்களே! இப்போ அவனுக்கு என்ன தெரியும்?”

மாமியாரை ஆர்த்தி எதிர்த்துக் கேட்டதும், உடனே கையிலிருந்ததை கீழே போட்டு விட்டு, “அதுக்கு ஏன் முகத்தை இறக்கிட்டு இருக்கே. உன் மகனை அடிச்சா தேய்ஞ்சுடுவானா?” என்று முகத்தை நொடித்தவர், அன்று முதல் மூத்தப் பேரனையும், மருமகளையும் காண்பவர் எல்லோரிடமும் குறையாகப் பேசினார்.

“என் மகன் அந்தப் பிள்ளைகளை அடிச்சு ஒழுங்கா வளர்க்கப் பார்க்கறான். இவள் பாசத்தைக் கொடுத்து அவங்களைக் கெடுக்கிறா … அதுக அப்படி ஓடுது. இப்படி சாடுது. வீட்டுல உள்ள சாதனத்தை எல்லாம் தட்டிப் போட்டு உடைக்குது. இவள் ஏன் எதுக்குன்னு கேட்கிறதே இல்லை. கண்டிக்கும் என் மகனையும் எதுவுமே செய்ய விடாம இருக்கா…” என்று வார்த்தையால் தாழித்தார்.

அவரது மகள்களும் திருமணமாகி வந்த புதிதில் ஆர்த்தியிடம் நல்ல விதமாக நடந்து விட்டு, அதன்பிறகே தாய், தம்பியுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மாறிவிட்டனர். “டீசன்டா நடக்கத் தெரியல. ரோட்டோரம் உள்ளதை விட மோசமா பிள்ளைகள் வளர்ந்திருக்கு” என்று வீட்டிலும், சாலையில் வேறு நபர்கள் முன்பும் கூறியதுடன், சொல்லச் சொல்லக் கேட்காத பிள்ளைகளைப் போட்டு அடித்தாள் ஆர்த்தி. மாதவனும் அவனது கோபத்தை இரு பிள்ளைகளிடமும் காட்ட, ஒரு பாவமும் செய்யாத பச்சைக் குழந்தைகள், அறியாத பருவத்திலேயே அவர்களால் தண்டிக்கப்பட்டார்கள். 

எத்தனை எத்தனை ஆசைகள், இனிய எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்து வந்த ஆர்த்தியின் கனவுகள் உடைந்து சிதறியது. நிம்மதி பறி போனது. அவர்களுக்குப் பிறந்ததால் பிள்ளைகளும் துயரத்தை அனுபவித்தனர். மாமியார் மீதான மரியாதை, பாசம் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டுச் சென்று, அந்த வீட்டில் இருந்தாலே அவளால் இயல்பாகக் கூட இருக்க முடியாத நிலைமை உருவாகியது.

 அன்று முதல் மாமியார், நாத்தனார்கள், அவளது கணவன் என நால்வரும் இருக்கும் இடத்தில் இருக்கவும், அவர்கள் வீட்டிற்குப் போக நேர்ந்தாலும் அவளுக்குப் பயமாகி விடும். முகத்தில் ஒருவித இறுக்கம், சோகம் தன்னை அறியாமல் வந்து ஒட்டி விடும்.

அவர்களது வீட்டிற்குச் செல்வதற்கு முன், பிள்ளைகளிடம் சொல்லிச் சொல்லியே அழைத்துச் சென்று, அவர்களது அடாவடித்தனம் நிரம்பிய நடவடிக்கையால் பிள்ளைகளுடன் சேர்ந்து அவளும் அவமானப்படுவாள்.

இப்போதும், காலையில் போகலாம் என்றும் கேட்காமல் அவன் அழைத்துக் கொண்டு செல்கிறான். சென்ற பிறகு, மாதவனின் குணமும் அடியோடு மாறிவிடும் என்னதான் செய்வது என்று தடுமாறினாள்.

செண்பகத்தையும், மனைவி, பிள்ளைகளையும் ஆட்டோவில் அனுப்பி விட்டு, கடையில் செய்யக் கொடுக்கப்பட்ட முறுக்குகளுடன், அரிசியும் வாங்கி விட்டு அவன் வருவதாக இருந்தது.

“எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டு, அவனது உடைகளையும் அதற்குள் வைத்தான்.

அவள் முகம் பொலிவிழந்து இருந்தது. விருந்து வீட்டிற்குச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி சிறிதளவும் அவளிடம் காணப்பட வில்லை.

சற்று நேரத்தில் ஆட்டோ வந்தது. அவளும் மகன்களுடன் ஏறி அமர்ந்தாள்.

நாத்தனாரின் வீட்டிற்கு முன்பு வந்து இறங்கியதும், அங்கு இருந்தவர்களைப் பார்த்து லேசாக உதறியது. கை விரல்கள் தன்னையும் மீறி மகனைப் பற்றியது. அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

அவள் உள்ளம், ‘இந்தப் பாவியின் வயிற்றில் ஏன் பிறந்தாய்? வேறு எங்கேயாவது பிறந்து நல்ல விதமா வளர்ந்திருக்க கூடாதா?’ என்று ஏக்கமாக எண்ணியது. கண்களும் கலங்கி விட்டன.

காலையில் வெளியே சென்ற அர்ஜூன், இரவு ஒன்பது மணிக்குப் பிறகே வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கண்கள் மனைவியைத் தேடினாலும், அவள் பேசிய கனமான வார்த்தைகள் அவன் மனதை நெருடியது. அவளை எப்படியாவது சரி செய்து விடலாம் என்றுதான் அவனும் பார்க்கிறான். அவளோ, புரிந்து கொள்ளாமல் நடந்து அவன் மனதை வருத்துவதிலேயே இருக்கிறாள்.

வினோதினியும் அவள் கணவரும் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு, இருவரின் அருகிலும் சென்றான்.

“வேலை கொஞ்சம் அதிகமா இருந்தது அண்ணா. எல்லாம் பார்த்து முடிச்சிட்டு வரத் தாமதம் ஆகிடுச்சு”

திருமணமாகிய பிறகும் கேட்காமல் பதிலுரைக்கும் தம்பியைக் கண்டவருக்குப் பெருமிதமாக இருந்தது.

“வேலை முக்கியம்தான். அதைவிட குடும்பம் ரொம்பவே முக்கியம். உன் மனைவி உன்னைப் பற்றி என்ன நினைப்பா? போ, போயி சாப்பிட்டு ஓய்வெடு. நாளைக்கு விருந்துக்குப் போவதோடு மூணு நாள் அங்கேயே தங்கிட்டு வா!”

“முணு நாளா?” என்றதும் அவன் முழித்தான்.

இங்கே என்றால் தனது குடும்பத்துடன் பேசி மகிழ்வான். அங்கு எப்படி? அதுவும் மூன்று நாள் என்று திகைப்புடன் எண்ணினான்.

வினோதினிக்கு அவனைக் காணும்போது பாவமாக இருந்தது. திருமணமான புதிதில் ஒவ்வொருவரும் எத்தனை மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இவனோ, ‘மனைவியுடன் சென்று தங்கி வா’ என்று கூறியும், பதிலறியா சிறுவனைப் போல முழித்துக் கொண்டு இருக்கிறானே… இப்படியொரு நல்லவனுக்கு ஏன் ஆண்டவர் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும்?’ என்று மனம் வருந்தினாள்.

காலையில் வாடிய முகத்துடன் உண்ணவும் மறுத்து, அவன் போகும் போதே தெரிந்தது, அவள் ஏதோ கடுமையாகப் பேசி விட்டாள் என்று! மனதில் தோன்றியதைக் கேட்டு, மேலும் அவனைச் சங்கடப்படுத்த மனமின்றி அமைதியாகவே இருந்தாள்.

அவன் சென்று வெகுநேரம் ஆகியும், ஆராதனா அறையை விட்டு வெளியே வராமலேயே இருந்ததும், தானாகச் சென்று அழைத்தாள்.

அவள், “பசிக்கல” என்றதோடு வாயை மூடிக்கொள்ள, அவளுக்குரிய உணவை எடுத்து வந்து அறையில் உள்ள மேஜையின் மீது வைத்துவிட்டுச் சென்றாள். மதிய நேரமும் அது போலவே செய்து விட்டு, காலையில் வைத்துச் சென்ற தட்டுக்களை எடுத்துச் செல்லும்போது தான், அவள் காலையிலிருந்து உண்ணாமல் இருப்பது தெரிந்தது. 

மதிய நேரமாவது உண்டு விடட்டும் என்று எண்ணியவளின் உள்ளம், நல்ல மனம் படைத்த பெண்களுக்கு, அதற்கேற்ப மணவாழ்க்கை அமைவதில்லை. நல்ல குணம் படைத்த ஆண்களுக்கு அதற்கு ஏற்றார் போல் மனைவிகளும் வாய்ப்பதில்லை. அரிதாக ஒருசில தம்பதிகள் மட்டுமே, ஒத்த குணத்துடன் காணப்படுகிறார்கள். இவளும் மோசமானவள் இல்லை, இருந்தும் இத்தனைக் கடுமையும் தேவையில்லை.

“அண்ணி! பசிக்குது. சாப்பிட எடுத்து வையுங்க”

இளவரசு புரியாமல் பார்த்திருக்க, “அண்ணா, நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்கள? அண்ணி வீட்டு வேலைகள் எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்டான்.

“ஆச்சுப்பா”

“ம்… அப்போ, எடுத்து வையுங்க. நான் கை கழுவிட்டு வர்றேன்” என்றவனை மறித்து, “உனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சுன்னு மறந்து, முன்னே மாதிரி உன் அண்ணி கிட்டேயே கேட்டுட்டு இருக்கறியே? உன் மனைவி உனக்காகக் காத்திருப்பான்னு மறந்துட்டியா?” என்றான் இளவரசு.

அவன் புன்னகையூடு, “எங்க அண்ணி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. கல்யாணமாகி வந்ததுல இருந்து, இந்த வீட்டுல உள்ள யார் கிட்டேயுமே அவங்க பாரபட்சமா நடந்தது இல்ல. பிறகு, புதுசா வந்திருக்கும் அவகிட்டே மட்டும் நடந்துப்பாங்களா?” என்று கேட்டான்.

அவன் சிலிர்ப்புடன் தலையசைத்தான்.

“நான் சொல்லாமலேயே என் அண்ணி செஞ்சிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். ஒருவேளை அவள் சாப்பிடாம இருந்திருந்தா, நான் சாப்பாடு எடுத்து வைக்கச் சொன்னதும், ‘ஆராதனாவும் இன்னும் சாப்பிடல. அவளையும் கூப்பிட்டு வா அர்ஜூன்’னு சொல்லி இருப்பாங்க” என்றான்.

இருவரின் புரிதலையும் நினைத்து அவன் மனதிற்குள் சிலாகிக்க, கை கழுவ வீட்டிற்குப் பின்புறமாகச் சென்றவனை அவள் மறித்தாள். காலையிலே அவளது கடுமையான சொல்லால் பாதிக்கப்பட்டுச் சென்றவன், இப்போதும் வீட்டிற்குப் பின்பக்கமாகச் சென்ற ஆராதனாவால் மறுபடியும் மனவருத்தத்திற்கு உள்ளாகி விடக்கூடாதேயென!

அவன் வலது புருவத்தை உயர்த்தி என்னவென்று ரகசியமாக விசாரிக்க, அவளது கண்கள் படபடப்புடன் வெளியே பாய்ந்தன. அவனும் பார்த்து விட்டுத் தன்னையும் மீறி அரும்பிய புன்னகையுடன், அங்கு நோக்கிச் சென்றான்.

அவள் பெருமூச்சு விட்டாள். இருவரின் சம்பாஷணைகளையும் கவனித்து வந்த இளவரசுவின் வலது கை விரல், மனைவியின் செவியைத் திருகியது.

அவள் முகத்தைச் சுருக்கியதும், “இங்கே என்னடி நடக்குது?” என்று கேட்டான்.

“காலையில இருந்து பசுமாடு, கண்ணுக் குட்டி, கோழி, நாய், பூனை வீட்டுல உள்ள எல்லாருமே நடந்தாங்க. இப்ப எல்லாம் ஓய்வெடுக்க போயாச்சு” என்று குறும்பாகச் சொல்லிவிட்டு, கணவனின் கையை விலக்கிவிட்டு, செவியைத் தேய்த்து விட்டாள்.

“உன்னை என்ன செய்தால் தகும்?” என்று முறைத்தவன், “தம்பிக்கும் அந்தப் பொண்ணுக்கும் இடையில் ஒண்ணும் பிரச்சனை இல்லையே? நல்ல விதமா தானே இருக்காங்க”

திடீரென அப்படி கேட்டதும், கணவனின் முகத்தைப் பார்த்து விட்டு, “ஏன் இப்படி கேட்கறீங்க? அவன் தான் பொண்டாட்டி தனியா நிற்பதைப் பார்த்ததும் சாடி ஓடுறானே அப்பவே தெரியல” என்று கேட்டு, அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றாள்.

“அது தெரியாம என்ன?” என்றவன், “வினோ, இப்போ நம்ம தம்பிக்குக் கல்யாணமாகிடுச்சு. இனிமேல், அவனைக் கவனிக்கும் பொறுப்பை அவன் மனைவியைப் பார்த்துக்கச் சொல்லு. இல்ல, நாளைக்கு ஒருநாள் அவளும், மத்தவங்களும் உன்னைத் தான் குறைவா பேசுவாங்க” என்று அறிவுறுத்தினான்.

அவளுக்குப் புரியாமல் என்ன? ஆனால், அதற்குரியவளுக்கு அல்லவா தெரிய வேண்டும்?

“அவள் யாருகிட்டேயும் சிரிச்ச முகமா பேசி நான் பார்க்கல. உன்கிட்டேயாவது நல்ல விதமா நடந்துக்கிறாளா?” என்று கேட்டு, “கல்யாணமான புதுசுல எல்லாரும் உடனே பழகிட மாட்டாங்க. சிலர் கூச்ச ஸ்வாபம் உள்ளவர்களா இருப்பாங்க. சிலர் அளவுக்கு அதிகமா பேசாதவர்களா இருப்பாங்க. இன்னும் சிலர், வெட்கம், பயம், வீட்டைப் பற்றிய நினைவுகள், புது இடத்தில் உள்ள அறியாத மனிதர்களிடம் எப்படி பழகுவதென்ற தயக்கத்தால் அமைதியா இருப்பாங்க. மனிதனுக்கு மனிதன் குணம் வித்தியாசமானது இல்லயா? போகப் போக எல்லாம் சரியாகிடும்” என்ற மனைவியின் பதிலில்  தலையாட்டினான்.

“நீ சொன்னா சரியா தான் இருக்கும். எதுக்கும், வீட்டுல தனியா இருக்கறப்போ அவகிட்டே நம்ம வீட்டு நடைமுறைகளையும், ஆட்களையும் பற்றி புரியும் விதமா எடுத்துச் சொல்லி, அவளைப் பயப்படாம இருக்க வை. நம்ம தம்பியைப் பற்றியும் பெருமிதமா பேசி, அவள் மனசுல இருக்கும் பயத்தையும் துரத்தி விடு. அவன் நல்லா இருந்தால் நாமளும் நிம்மதியா இருக்கலாம் என்றவன், சின்னஞ் சிறுசுக கொஞ்ச நேரம் பேசிட்டு வந்து சாப்பிடுவாங்க. நீ அவனுக்கு வேண்டியதை டேபிளில் எடுத்து வச்சிட்டு வா. நாம அவங்களுக்குத் தொந்தரவா இருக்க வேணாம்” என்றான்.

கணவனின் மனதைப் புரிந்து கொண்டு, அவளும் அது போலவே செய்து விட்டு, கூடத்திற்கு சென்று விட்டாள்.

வெளியே, மனதிற்கு சரி இல்லாமல் இருந்ததால், வானில் தோன்றி பளபளவென ஜொலித்த பௌர்ணமி நிலவையும் ரசிக்கத் தோன்றாமல், வெறுப்பும் சலிப்பும் மேலிட நடந்தவளை நோக்கி, சத்தமின்றி மெதுவாகக் காலடிகளை தூக்கி வைத்தான் அர்ஜூன்.

தனிமையும், இருள் சூழ்ந்த பகுதியும், யாருமில்லாத நேரமும், மனதில் ஏதேதோ எண்ணங்களும் ஓடிக் கொண்டிருக்க, திடீரென்று தன் பின்னே வந்து தோளில் கை வைத்து “ஆராதனா!” என்ற குரலில் பயந்துபோய் விட்டாள்.

படபடவென அடித்துக் கொண்ட மார்பை பற்றியபடி, அவள் மெதுவாகத் திரும்பிப் பார்க்க, அவன் சத்தமாகச் சிரித்து விட்டான்.

அவள் கோபம், ஆத்திரம், பயம், அழுகையென அனைத்தும் கலந்த கலவையாக உதடு துடிக்க நின்றிருக்க, “பேய், பிசாசு ஏதாவது வந்துருச்சுன்னு பயந்துட்டியா?” என்று கிண்டலடித்தான்.

அவள் புன்னகையுடன் நின்ற கணவனைத் தள்ளி விட்டாள். நீண்ட மூச்சுக்களை எடுத்து விட்டுத் தன்னை இயல்பான நிலைக்குக் கொண்டு வர முயன்றும் முடியாமல், வீட்டிற்குள் சென்று விட முயன்றாள்.

அங்கு அண்ணனும், அண்ணியும் இருப்பதை மனதில் கொண்டு, அவளது கைப்பற்றி நிறுத்தினான் அர்ஜூன்.

அவள் கோபமாகப் பார்த்ததும், “வீட்டுக்குள்ளே பெரியவங்க இருக்காங்க. கொஞ்சம் அடக்கமா நடந்துக்கோ!” என்று அறிவுரை கூறினான்.

அவள் கேட்காதது போல் செல்ல முயலவும், “உன்னைத் தொட்டுத் தாலி கட்டியதால் நான் மட்டும்தான் உனது கோபம், வெறுப்பு, மகிழ்ச்சி எல்லாத்தையும் பொறுத்துப் போவேன். அதுக்காக, என் வீட்டுல உள்ளவர்களிடமும் அப்படியே நடக்க முயன்றால், அதைப் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என்றான்.

அவள் ஏதோ சொல்ல வந்து வாயை மூடிக்கொண்டாள்.

“அண்ணாவும், அண்ணியும் நாளைக்கு உன்னை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டு போகச் சொல்லி இருக்காங்க. அங்கே போகணும்னு ஆசையிருந்தா அமைதியா வா! வீம்பு பண்ணினா இன்னைக்குக் காலையில் போன மாதிரி போயிடுவேன். உன்னாலும் இந்த வீட்டை விட்டு எங்கேயுமே போக முடியாம ஆகிடும்” என்று எச்சரித்தான்.

அவள் சற்று நிதானித்தாள்.

“வா!”

அவன் முன்னே நடக்க, அவள் அமைதியாக வந்து அருகில் நின்றாள். அங்கு, அண்ணியை காணாததும் அவன் அழைத்தான்.

இளவரசு, “அம்மா பிள்ளைன்னு சொல்லித் தான் கேள்விப்பட்டு இருக்கேன். இவன் அண்ணிப் பிள்ளையா இருக்கான்” என்று கேலி செய்தான்.

வினோதினி முறுவலித்தபடி எழுந்து செல்ல, அவனும் கூடவே வந்து அமர்ந்தான். அவர்களுடன் விசாகனும் வந்து அமர, சாப்பாட்டு அறையே கலகலத்தது. உணவை முடித்தும் அவன் அறைக்குப் போகாமல், கூடத்தில் கால் நீட்டித் தரையில் அமர்ந்து விட, அவள் உதட்டைக் கடித்தபடி நின்றாள். அருகில் வந்து மகனின் கால் விரல்களை இதமாகப் பிடித்து விட்டார் அவன் அம்மா. அவன் தடுத்தும் கேட்காமல் மகனிடம் பேசியபடி இருந்தார்.

விருப்பமற்று அனைத்தையும் பார்த்திருந்த ஆராதனா, நாளைக்குச் சென்றால் சில நாட்களுக்கு இங்கு வரக் கூடாது எனத் திட்டமிட்டாள்.

மாமியார் அவளை அருகில் அமர வைத்துப் பேசினார். “வீடு, இடமெல்லாம் பிடிச்சிருக்கா? அம்மா, அக்காவிடம் பேசினாயா?” என்று விசாரித்தார்.

அவள் வாய் திறக்காமல் தலையை மட்டுமே அசைத்தாள். “ரொம்பவும் அடக்கம், அமைதி நிறைஞ்ச பெண். அர்ஜூன் கொடுத்து வச்சவன்” என்று நெற்றி வழித்துச் சொடுக்கினார்.

அர்ஜூன் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள, அவள் முறைத்துப் பார்த்தாள்.

“நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு, ரெண்டு நாள் தங்கிட்டு வாம்மா. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உங்க அம்மாவையும் நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு வருவதா சொல்லிடு. பாவம் அவங்க! உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு, உங்க அண்ணனும் வெளியூரில் இருப்பதால், தனியாகவே இருந்து கஷ்டப்படுறாங்க” என்றார்.

அவள் தலை குனிந்த நிலையில் இருந்தாள்.

கண்கள் கலங்கி விட்டன. உதடுகள் துடித்தன. நாசியில் நீர் கோர்த்து, தொண்டை அடைத்தது.

“பொம்பிளைப் பிள்ளைகளைப் பெத்தாலே இப்படிதான். அவர்களுக்குக் கல்யாணமாகி கணவன் வீட்டுக்குப் போனபிறகு, கண்ணீரும், கம்பலையுமா இருந்து கஷ்டப்படணும். ஆனால், எனக்கு அஸ்மிதா மட்டும் மகள் இல்ல. அவளோடு சேர்ந்து என் மருமகளுங்க மூணு பேருமே எனக்கு மகள்தான்!!” என்றார்.

அர்ஜூன் அம்மாவை நினைத்துப் பெருமிதப்பட, அஸ்மிதா, “அப்போ எனக்குக் கல்யாணமாகி நான் போனபிறகு என்னை நினைச்சு வருத்தப்பட மாட்டீங்களா?” என்று முகத்தைத் தூக்கி வைத்தபடி கேட்டாள்.

உடனே, “இல்லயே… நாங்க எல்லாரும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்போம்.” என்று அர்ஜூன் இடைபுகுந்தான்.

அவள் அண்ணனை அடிக்க முயல, அவன் எழுந்து ஓட, என்று ஒரே கலாட்டாவாக இருந்தது. அனைத்தையும் பார்த்துக் கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்தபடி இருந்த ஆராதனாவிடம், “அண்ணனும், தங்கையும் எப்பவும் இப்படி தான். ஆனாலும், அவள் மேல மூணு பேரும் உசுரையே வச்சிருக்காங்க. அவளுக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போவாங்க. அது போலத்தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள்களும் ரொம்ப தங்கமான குணம் உடையவர்கள். நீயும் அது மாதிரி ஒரு நல்ல குணவதியா நடந்துக்கணும். இந்த வீட்டையும் உன் வீடாக நினைச்சு, இங்குள்ள மனிதர்களிடமும் பாரபட்சமின்றி பழகணும். உனக்கு என்ன தேவைப்பட்டாலும் தயங்காம வாய் திறந்து கேட்கணும்! உடனேயே செஞ்சு கொடுக்க நாங்க இத்தனை பேர் இருக்கோம்” என்று புன்னகையுடன் கூறி முடித்ததும், அவளது கண்ணீர் கட்டுமீறிப் பாய்ந்தது. அவர்கள் முன்பு இருக்க முடியாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.

அவள் அழுகிறாள் என்று தெரிந்ததும் அர்ஜூன் தானும் அவளைத் தொடர்ந்து சென்று, மனைவியைப் பின்புறமாக அணைத்து இதமாக வருடிக் கொடுத்தான்.

தொடர்கதைக்கான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

தொடர்கதைக்கான அடுத்த பதிவு இதோ…https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-10/

9 thoughts on “அக்னி சாட்சி”

 1. Pingback: அக்னி சாட்சி - Praveena Thangaraj Novels

 2. Kalidevi

  Intha mari oru family kedaika koduthu vaikanum aàradhana nee unga amma akka life ninachi nee un nalla life keduthukatha konjam palagi patha thana therium avanga ellam eppadi patavanganu

 3. Avatar

  அடி லூசுப் பொண்ணே…! இந்த மாதிரி ஒரு கணவனும், குடும்பமும் கிடைக்க ஆராதனா ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்.. ஆனா, இவ இப்படி மூஞ்சை தூக்கி வைச்சுட்டே, எங்கே இதெல்லாம் தொலைச்சிடப் போறாளோ தெரியலையே…???
  😯😯😯

 4. Avatar

  பழைய நினைப்பிலேயே உழன்று, நிகழ்காலத்தில் அவளுக்கு கிடைத்த வாழ்க்கையை அவளே உணராமல் இருக்கிறாள் ஆராதனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *