Skip to content
Home » அக்னி சாட்சி

அக்னி சாட்சி

அத்தியாயம் : 8

ர்ஜூனின் அருகில் நிற்கப் பிடிக்காமல் விலகிச் செல்ல முயன்று, அவன் கைப்பிடியால் நின்று விட்ட ஆராதனா, கோபத்துடன் அவனை உறுத்து விழித்தாள். அவன் கண்டு கொள்ளாமல், “நான் பேசிட்டு இருக்கறப்போ நீயாகப் போனால் என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

அவள் கடுகடுவென முகத்தை வைத்தபடி, அவன் பிடியிலிருந்து தனது கையை விடுவிக்க முயன்றாள்.

“எதுக்கு இத்தனை கோபம்? வெறும் கையைத் தானே பிடிச்சிருக்கேன். ஏதோ கட்டிப் பிடிச்ச மாதிரியில்ல நடந்துக்கறே?”

அவள் சீற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவனிடமிருந்து கையை விடுவிப்பதிலேயே இருந்தாள். அவளை ஒற்றைப் பிடியில் அடக்கி, “என்கிட்டே இருந்து எப்பவுமே உன்னால திமிற முடியாது. நானாக விட்டாதான் உண்டு.” என்றவன், அவனது கைப்பிடியின் இறுக்கத்தை லேசாகத் தளர்த்தினான்.

“ஒருத்தர் தன்னைப் பற்றி சொல்றப்போ, பக்கத்துல நின்னு கேட்டுட்டு இருப்பவர், பதில் சொல்வது தான் நாகரீகம். பதில் சொல்லாம உதாச்சீனப்படுத்திட்டு போறவங்க பெயர் என்னன்னு, உனக்கே தெரியும்னு நினைக்கிறேன்” என்றான்.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க, அந்த நேரம் அவர்களுக்குச் சற்று தொலைவில் உள்ள குளத்தில் குளிப்பதற்கு வந்திருந்த பெரியவர் ஒருவர், அவனைப் பார்த்ததும் சத்தமாக அழைத்தார். அவனும் மனைவியை விட்டு விலகி அங்கு நோக்கிச் சென்று விட, அவளும் விறுவிறுவென நடந்து வீட்டிற்குள் போய் விட்டாள்.

சமையலறையில் நின்று கொண்டிருந்த வினோதினி, அவளின் வேக நடையையும், மூச்சின் வேகத்தையும், சிவந்து இருந்த முகத்தையும் கண்டு மனம் வருந்தினாள்.

என்ன தான் தகப்பன் மோசமானவனாக இருந்தாலும் அதற்காக இப்படியா தொட்டு தாலிகட்டிய கணவனிடம் நடந்து கொள்வது? அர்ஜூனை போல் ஒருவன் கிடைக்க புண்ணியம் அல்லவா செய்திருக்க வேண்டும்? என்று நினைத்தாள்.

அவன் புன்னகையுடன் வருவதைக் கண்டு, காஃபி கோப்பையைக் கொடுத்து விட்டு, அவனது முகத்தையே உற்று நோக்கினாள்.

அதைப் பெற்றுக் கொண்டவன், சிரித்த முகத்துடன் அருந்தியவாறு, “என்னா ஒரு கோபம் தெரியுமா? விட்டா பார்வையாலேயே எரிச்சிடுவா உங்க தங்கை!!” என்றான்.

அவள் பதில் கூறாமல் இருந்ததும், “நான் அவ்வளவு பேசியும் எதிர்த்துப் பேசாம இருந்துட்டு வாயைத் திறக்கவும், நம்ம பெரிய நாடான் கூப்பிட்டார். நல்லவேளை, காலையிலேயே ஒரு வாக்குவாதத்திலிருந்து தப்பிச்சிட்டேன்” என்று உரைத்துச் சிரித்தவனைப் பார்த்து, உச்சுக் கொட்டினாள்.

“அண்ணி! தொட்டவுடன் ஒட்டிக் கொள்ளும் வாழ்க்கையை விட, சிறு தொடுகை, பார்வை, பாசமான பேச்சுக்காக ஏங்கும் வாழ்க்கை வித்தியாசமானது. சின்ன வயசுல இருந்து இதுவரை காதல்னு எந்தப் பொண்ணுங்க பின்னாடியும் சுத்தியது இல்ல. அதை இப்போ உங்க தங்கை செய்ய வைக்கிறா …

முரட்டுக் குதிரையின் மீதேறி சவாரி செய்வதும், வீறு கொண்ட எருவை அடக்குவதும், அந்தக் காலத்திலிருந்து இப்ப வரை வீரம் பொருந்திய ஆண் மகன்கள் செய்கிற வீர விளையாட்டுகளில் ஒண்ணு! அதுபோல இந்த அடங்காத ஜல்லிக்கட்டு காளையையும், என்மீதான அன்பால் அடக்கி, மூக்கணாங்கயிறு எனும் நேசத்தையும் அவள் மனதில் புகுத்தி, இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளாகவும், எனக்கு ஏத்தவளாகவும் மாத்துவேன். நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க” என்றான்.

அவள் புன்னகையோடு, “உன் நம்பிக்கை வீண் போகாம இருக்க ஆண்டவனை வேண்டிக்கிறேன்” என்றாள் கன்னத்தில் போட்டபடி

அவளது மனதைப் புரிந்து கொண்டு, “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அது நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்க்கயிலே’ன்னு கேட்டதில்லை? அப்படிதான் என் மனைவியும் ரொம்ப பாவம்!! அம்மாவுக்கும், அக்காவுக்கும் நேர்ந்தது மாதிரி தனக்கும் வந்துடுமோன்னு பயப்படுறா.

ஆனால், நான் எல்லா ஆண்களும் தவறானவர்கள் கிடையாதுன்னு நிரூபிச்சிட்டு, அவள் மனசுல உள்ள கெட்ட எண்ணங்களை எல்லாம், சிறு கசடாக மாற்றி வெளியேற்றப் போறேன். அவள் மனசுல சூழ்ந்திருக்கும் கவலைகள் எல்லாம் முழுவதுமா அவளை விட்டுப் போயி, மனசு மாறி வந்து என்னை ஏத்துக்கும் நாளுக்காகக் காத்திருப்பேன்” என்றான்.

அவளுக்குக் கண் கலங்கி விட்டது. இப்படி ஒருவன் கிடைக்க அவள் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தாளோ? என்று நினைத்து நெகிழ்ந்து போனாள்.

அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, வேலைக்குப் போக நேரமாகி விட்டதை அறிவுறுத்த, “உனக்குக் கல்யாணமாகி வெறும் ரெண்டு நாள் தான் ஆகுது அர்ஜூன். இந்த நேரத்திலயாவது வீட்டுல இருந்து ஓய்வெடுத்து, உடம்பைப் பார்த்துக்கறதை விட்டு, எதுக்காக வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கே? கொஞ்ச நாளைக்கு உங்க அண்ணா பார்த்துக்க மாட்டாரா? ஆராதனாவும் ஏதாவது நினைச்சிக்க மாட்டாளா? அவளைக் கூப்பிட்டு வெளியே போயி சந்தோஷமா இருக்கலாமே …” என்றாள் வினோதினி.

அவனுக்கும் ஆசைதான். ஆனால், அவன் மனைவி அழைத்ததும் வர வேண்டாமா?

“என்னப்பா யோசனை? அவளையும் கூப்பிட்டு வந்து சாப்பிட்டு, கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வா. அவளுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் இல்லயா?”

வினோதினி மீண்டும் மீண்டும் சொன்னதும், புன்னகையுடன் மனைவியைக் காண வந்தான்.

படுக்கையில் கவிழ்ந்து கிடந்து அழுதபடி இருந்தவளைப் பார்த்தவன் உள்ளம் பாகாக உருகியது. வாஞ்சையுடன் அவள் கூந்தலை வருடியவாறு, “இப்போ என்ன நடந்துடுச்சுன்னு அழுதுட்டு இருக்கே? நான் எதுவும் தப்பா சொல்லலையே?” என்று கனிவு சொட்டும் குரலில் வினவினான்.

அவள் அவனது கைகளைத் தட்டி விட்டு, எழுந்து சென்று ஜன்னலோரம் நின்று தேம்பினாள்.

“ஆராதனா, உன்னைப் பார்க்கறப்போ எல்லாம் சின்னக் குழந்தையின் ஞாபகம் தான் எனக்கு வருது. அவங்களும் உன்னை மாதிரிதான் எதுக்கு அடம் பிடிக்கிறோம்? ஏன் இப்படி அழுதுட்டு இருக்கோம்? எதனால் யார் கிட்டேயும் பேசாம விலகி இருக்கோம்னு தெரியாமலேயே செய்வாங்க. நீயும் அவங்களைப் போலவே நடந்துக்கறே” என்று உதடுகள் விரிய கூறினான்.

அவள் கண்ணீரைத் துடைத்தபடி உதட்டைக் கடித்து அழுகையை அடக்கினாள்.

“உன்னைப் பொண்ணு பார்க்க வந்தப்பவும், கல்யாணத்து அன்னைக்கு ராத்திரியும், உன் பேச்சைக் கேட்டு நானும் ரொம்ப வீம்புகாரியா இருப்பேன்னு நினைச்சேன். நீயானால், பச்சைக் குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்கறியே…” என்றான். அது அவளைக் கிண்டலடிப்பது போலிருக்க, திரும்பி அவனை முறைத்தாள்.

“எனக்கு இந்த வீட்டுல இருக்கவோ, யார் முகத்திலும் முழிக்கவோ, பேசவோ பிடிக்கல. என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுங்க”

அவன் உள்ளுக்குள் சிரித்தான்.

“விடவா கட்டிக்கிட்டு வந்திருக்கேன்? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும்.”

அவள் வீம்பாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.

“புதுசா ஒருத்தரை பார்த்ததும் எல்லோராலும் உடனே பேசிப் பழகிட முடியாது. நாளாக நாளாக சரியாகப் போகும். இதுக்கு ஏன் அம்மா வீட்டுக்குப் போகணும்னு நினைக்கிறே? வா சாப்பிட்டு வெளியே போயிட்டு வரலாம். உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தர்றேன்”

“நான் என்ன கேட்டாலும் மறுக்காம வாங்கி தருவீங்களா?””கேளேன்! அப்புறம் தெரியும் உன் கணவனின் அருமையை … ” அவன் விரிந்த புன்னகையுடன் கூறியதும். “அப்போ, நான் விவகாரத்து கேட்டா மறுப்பு சொல்லாம வாங்கிக் கொடுத்துடுவீங்களா?” என்று கேட்டாள்.தன் பேச்சை வைத்து தன்னையே மடக்க முயல்கிறாளே என்று நினைத்தாலும், மனைவியின் வார்த்தையால் அவன் உள்ளம் லேசாக அதிரவே செய்தது.

“நீ என் உயிரைக் கேட்டாலும் தருவேனே தவிர, இந்த வீட்டை விட்டோ, என்னைப் பிரிஞ்சு போகவே நான் அனுமதிக்க மாட்டேன்”

“ஓ! அனுப்ப மாட்டீங்களா? உங்க வாயாலேயே என்னை ‘வெளியே போடி! உனக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லன்னு சொல்ல வச்சிட்டா?'”

அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.

“ஆராதனா! இனியொரு தரம் இப்படி பேசாதே! வா, சாப்பிட போகலாம்” தனது மன உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தபடி அவன் கூறியும், அவள் அசையாமல் நின்றாள்.

“நமக்குக் கல்யாணமாகி மூணு நாள் ஆகுது. இன்னும் என் மனைவி கையால் நான் பச்சை தண்ணீர் கூட வாங்கிக் குடிச்சது இல்ல. இருந்தும், உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கூடாதுன்னு முடிவுல தான் இருக்கேன். அதுக்காக, நீ செய்வதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கவும் மாட்டேன்!!” என்றான்.

அவள் ஒரு நிமிடம் தடுமாறினாள்.

“ஒரு திருமண வாழ்க்கை நல்லவிதமா ஆவதும், இல்லாம அழிஞ்சு போவதும் அவங்க குடும்பத்துல உள்ளவர்களால் மட்டுமல்ல, ஒத்த மனம் இல்லாத தம்பதியராலும் கூட நிகழும். கணவன் சொல்வதைக் கேட்டு நடப்பது பெண்ணடிமை, அவர்களின் முழு சுதந்திரம் பறிக்கப்படுவதா நீ நினைச்சா, அந்த ஆணின் மனம் எத்தனை வேதனைப்படும். சதா சர்வ காலமும் ஏட்டிக்குப் போட்டியா பேசிட்டு, அவனது அன்பை புரிஞ்சுக்காம தூக்கி எறிஞ்சு நடந்து, தன் வீட்டை மட்டுமே உயர்வாகப் பேசித் தூற்றுவதும், அவன் பேச்சு செவியில் ஏறாமல் இருப்பது போல் நடப்பதும் ஒரு இனிய இல்லறம் தடைபட்டு, அவர்களுக்கிடையில் மௌனம் திரைபோல் ஆட்சி செய்யும். அதை எத்தனை நாள் ஒரு ஆணால் ஏத்துக்க முடியும்?” என்று கேட்டான்.

“பெண்ணடிமையை பற்றி பேசுபவர் முதலில் அவர்களின் மனதையும் சரியா வச்சுக்கணும்” என்றதும், அவள் சலிப்பாக உணர்ந்தாள்.

“நான் தான் உங்களைப் பிடிக்கலன்னு சொல்றேனே… பிறகும், எதுக்கு தேவையில்லாம ஏதேதோ பேசித் தொந்தரவு செய்யணும்? அப்படி பிடிக்காதவளோடு சேர்ந்து வாழணும்னு என்ன அவசியம்? இந்தச் சமையல்காரரை, படிப்பறிவு இல்லாதவரை எந்தப் பெண்ணுமே கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா?”

அவன் யார்? எப்படிப்பட்ட குணமுடையவன்? என்ன வேலை பார்க்கிறான்? யாருடன் எல்லாம் தொடர்பில் உள்ளான்? எதனால் அவளைத் திருமணம் செய்ய நேர்ந்தது? என்று எதுவுமே தெரியாமல், கிண்டலும் நையாண்டியும் கலந்து கேட்டாள்.

அவனது விழிகளில் ஏதோ ஒன்று வந்து போனது. அவளோ, எதையும் கண்டு கொள்ளாமல், “நான் உங்களைக் கல்யாணம் செய்வதா கண்டிஷன் போட்டப்பவே வேலைக்குப் போவதா சொல்லி இருந்தேன். முழு நேரமும் இதே அறையில் அடைஞ்சு கிடைக்க மூச்சு முட்டுது. முன்பு பார்த்த வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்”

அவள் உச்சரித்த வார்த்தைகள், அவனிடம் அனுமதி கேட்பது போல் இருக்கவில்லை. தெரிந்து கொள் என்று தகவல் கூறுவது போல் இருந்தது.

அவனது தொண்டைக்குள் எதுவோ புகுந்து அடைத்தது. சட்டெனப் பேச விடாமல் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது.

“இத்தனை நேரமா பேசியும் உனக்கு எதுவுமே புரியலயா? இல்ல, புரிஞ்சும் புரியாதவளைப் போல இருக்கறியா? ஒருவேளை நான் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு உன்மேல கோபப்பட்டு, நீ சொன்ன மாதிரி செய்வதுக்குன்னு இருந்தா, நான் செவிடனா இருப்பதில் தப்பில்லை. ஆனால், என்னைக்காவது ஒரு நாள் இப்ப நீ பேசிய வார்த்தையின் வீரியத்தை நினைச்சு நிச்சயமா வருத்தப்படுவே!” என்றான்.

அவள் அலட்சியமாக உதட்டை நெளித்தாள். அதற்கு மேலும் அங்கு நிற்க மனமின்றி, உண்ணாமலே வெளியேறிச் சென்று விட்டான் அர்ஜூன்.

ர்த்தி விருப்பம் இல்லாமல் நாத்தனார் வீட்டிற்குச் செல்வதற்கு, தேவையான உடைகளைப் பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அவள் மனம் நடந்த நிகழ்வுகளை மறக்க முடியாமல் அல்லலுற்றது. பொதுவாக வெளியிடங்களில் வசித்து வருபவர்கள் இட நெருக்கடி, போக்குவரத்து, நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், வெளியே செல்லாமல் வீட்டிற்கு உள்ளேயே சத்தம் இல்லாமல் இருந்து பழகிய மனிதர்கள், பக்கத்தில் இருப்பவர் பேசும் வார்த்தையில் உள்ள மெல்லிய ஓசை என்று பலதையும் பார்த்தாலும், ஒரே ஊர், மொழியைச் சார்ந்தவர்கள் நட்புடன் பழகுவது வழக்கம்! காவலரின் மகளான அவள் சிறு வயது முதலே ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி வளர்ந்து வந்திருந்தாள்.

அந்த ஊரிலேயே மதிப்பும் மரியாதையும், செல்வ செழிப்பும் நிறைந்து காணப்பட்ட, கோடீஸ்வரன் இராமநாதனின் மூத்த மகளான சுகந்தாவும், அவரது அத்தையின் மகன் கந்தவேலுவும் வசதி வாய்ப்பில் மிகுந்து காணப்பட்டாலும் இன்றளவும், எல்லோரிடமும் நல்ல விதமாகப் பேசிப் பழகுபவர்கள். அப்படிப்பட்ட பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததாலோ என்னவோ, அவளும் தன்னை அதுபோலவே வைத்துக் கொண்டாள்.

பிறந்த முதல் அப்பாவுடன் வெளியிடங்களில் வசித்து வந்தவளை, அவளது ஐந்தாவது வயதில் முதலாம் வகுப்பில் சேர்க்கும் விதமாகவும், சொத்துகளை நிர்வகித்துப் புதியதாக வீடு அமைத்து அங்கேயே குடிபுகும் எண்ணத்திலும், தனது குடும்பத்தை ஊருக்கு அழைத்து வந்து விட்டார் கந்தவேலு. அவளும் சொந்தவூருக்கு வந்த பிறகே, ஊர் மக்கள், உறவினர்கள், கிராமப்புற வாழ்க்கை என்று பலதையும் பார்த்துத் தெரிந்து கொண்டாள். அன்று முதல் ஏழை, பணக்காரன் என்ற பாகுபடின்றி அனைவரிடமும் பேசிப் பழகினாள்.

அப்பாவின் வயல்களிலும், தோப்பிலும், வீடு கட்டுவதற்கான வேலையிலும் ஈடுபட்ட உறவினர்கள், பணியாட்கள் எல்லோரிடமும் மரியாதையாகவே பேசினாள். அவர்களும் ‘காவலரின் மகள். பெரிய வீட்டுப் பிள்ளை!’ என்ற மரியாதையை அவளுக்குக் கொடுக்க, அந்த இடத்தில் கர்வத்தை கொடுத்துத் தன்னை உயர்வாகக் காட்டாமல், புன்னகையுடன் வலம் வந்தாள். எங்கேயேனும் அவர்களைப் பார்க்க நேர்ந்தாலும், அவர்களின் பணி, ஜாதி, எளிய வாழ்க்கையைப் பற்றி எண்ணி பார்க்காமல், மரியாதை தன்னையுடன் நடந்து கொண்டாள்.

அப்படிப்பட்டவளுக்கு, திருமணத்திற்கு முன்பு இருந்த சுதந்திரம் அவளை விட்டு முழுவதுமாகப் பறி போனது. அவளது நடத்தை, பேச்சு, சிரிப்பது, அமர்வது, அடுத்த நபர்கள், உறவினரிடம் நட்புடன் பழகுவது அத்தனைக்கும் நாகரீகம் பார்த்தார்கள் அவளின் நாத்தனாரும், மாமியாரும்!! அவள் எப்படிப்பட்ட வீட்டில் பிறந்து வளர்ந்தவள் என்பதை மறந்து, அதையே குறையாகவும் கூறினார்கள்.

வேறு ஜாதியை சார்ந்த மனிதர்களிடம் அக்கா, தங்கையாகப் பேசினால் கூட வீட்டில் சண்டையும், சச்சரவும் ஏற்படும். தன்னை ஒத்த வயதுடைய பெண்கள் “ஆர்த்தி எப்படி இருக்கே?” என்றால் முகத்தைச் சுளித்தார்கள்.

“உன் புருஷன் அவளை விட எத்தனை வயது மூத்தவன்? அவனைப் பார்த்து ‘அண்ணா’ன்னு கூப்பிட்டு, உன்னைப் பெயர் சொல்லி ஒருமையில் அழைக்கிறப்போ நீ எதுக்கு அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடாம ‘அக்கா’ன்னு கூப்பிடுறே? வேற ஜாதிக்காரியை எதுக்கு முறை சொல்லிக் கூப்பிடுறே? அவள் வீட்டுக்குப் போயி எதுக்கு பேசுறே? உன்னை மாதிரியே தான் உன் பிள்ளைகளையும் வளர்த்து வச்சிருக்கே” எனப் புகார்களை அடுக்கினார் அவளது மாமியார்!

அத்துடன் மகள் வீட்டிற்குச் சென்று, தன்னை நியாயவாதியாகக் காண்பித்து, அவளை மோசமானவளாக எண்ண செய்யும் விதமாகப் பேசினார். வீட்டில் நடக்கும் அத்தனையும் ஒன்று விடாமல் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவரை நல்லவர் போலவும், ஆர்த்தியை ஒன்றுமே தெரியாத தத்தியை போலவும் சித்தரித்தார்.

அதனாலே அவர்களும், ‘நாகரீகமா நடக்க தெரியல ; டீசன்டா பேசத் தெரியல. வெளியிடத்தில் இருந்தும் மரியாதையா பழகத் தெரியல ; யாரிடம் எப்படி பழகணும்னு வரைமுறை தெரியல? இவள் எல்லாம் காலேஜில போயி என்னத்தை படிச்சாளோ?’ என்று தூற்றினார்கள்.

அவளுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் இருக்கும். சிறு வயது முதல் பார்த்துப் பழகியவர்களை எப்படி மரியாதை குறைவாகப் பேசுவது என்று! இவரது சத்தம், பேச்சுக்களை கேட்டு அண்டை வீட்டார் அவரைத் தாழ்வாகப் பேசி மதிப்பிட்டதுடன், ஆர்த்தியிடம் அதிகமாகப் பேசுவதையும், அவள் வீட்டிற்குப் போவதையும் நிறுத்திவிட்டனர்.

ஆர்த்திக்கு அத்தனை கடுப்பாக இருக்கும். கணவன், நாத்தனார் என்று யாரிடம் கூறினாலும் அவர்களின் முன்பு, அவளது பேச்சு எடுபடாமல் போய்விடும்.

கொஞ்சம் அதிகப்படியான வேலையால் உடனடியாக அடுத்த தொடரை பதிவிட முடியவில்லை. முயன்றவரை தொடர்கதையை விரைவில் முடித்து விடப் பார்க்கிறேன்.

தொடர்கதைக்கான அடுத்த பதிவு இதோ … https://praveenathangarajnovels.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-9/

9 thoughts on “அக்னி சாட்சி”

  1. Kalidevi

    Aaradhana ella aambalainga mari illa arjun konjamathu purinjikoma neeum padichava velaiku pora konjam yosichi pakalam avlo onum purinjika mudiyathavala nee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *