Skip to content
Home » கானல் பொய்கை 9

கானல் பொய்கை 9

பிரியம்வதாவின் முன்னே தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அடுத்து இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் பாலா.

கடந்த இரண்டு கவுன்சலிங்குகளில் பாரதி சொன்ன விவரங்களை வைத்து அவளுக்கு இருக்கும் மனநல பாதிப்பு ‘கட்டாய பாலியல் நடத்தை கோளாறு எனப்படும் Compulsive Sexual Behaviour Disorder’ என்று குறிப்பிட்டார் பிரியம்வதா.

“அளவுக்கதிகமா செக்ஸ் ரிலேட்டட் கண்டெண்ட்ஸை பாக்குறது, படிக்குறது, சின்ன வயசுல நடந்த செக்சுவல் அப்யூசால உண்டானா ட்ராமா, சில நோய்களுக்குச் சாப்பிடுற மருந்து இது எல்லாமே இந்த டிஸ்சார்டருக்குக் காரணம்னு மெடிக்கல் சயின்ஸ் சொல்லுது… பாரதியோட விசயத்துல அவ எழுதணும்ங்கிற வெறில பாத்த பார்ன் வீடியோசும், அவ எழுதுன எக்ஸ்ட்ரீம் அடல்ட் ரொமான்ஸ் கதைகளும் இந்தப் பிரச்சனைக்குக் காரணமா இருக்கலாம்ங்கிறது என்னோட ஒபீனியன்” என்றார்.

“இருக்கலாம் மீன்ஸ்? அதுதானே காரணம் மேடம்?” மனைவியை வெறித்தபடி பிரியவம்தாவிடம் வினவினான் பாலா.

“அப்பிடி உறுதியா சொல்லிட முடியாது பாலா… மனசு சம்பந்தப்பட்ட நிறைய கோளாறுகளுக்கு இதுதான் காரணம்னு நம்மளால திட்டவட்டமா காரணத்தைக் கண்டுபிடிச்சிட முடியாது… பாரதி ஃபில் அப் பண்ணி குடுத்த ஃபார்ம் வச்சு பாக்குறப்ப மேல சொன்ன காரணங்கள் எல்லாமே அடிபட்டு போயிடுது… அவ பாத்த வீடியோஸ் அண்ட் எழுதுன கதைகள் மட்டும் தான் காரணம்ங்கிற இடத்துல மிச்சம் இருக்கு”

பாலா தலையைப் பிடித்துக்கொண்டான்.

“இதுக்கு என்ன தான் தீர்வு மேடம்?”

சலித்தக் குரலில் அவன் கேட்கவும் பிரியம்வதாவின் முகம் மாறியது. அவர் அவனையும் முகம் கலங்க அமர்ந்திருந்த பாரதியையும் மாறி மாறி பார்த்தார்.

எதுவோ தவறாகத் தோன்றியது அவருக்கு.

“பாரதிக்குத் தெரபி ஆரம்பிக்கணும்… கூடவே அவளுக்குச் சில மெடிசின்சும் ப்ரிஸ்க்ரைப் பண்ணுறேன்… இதெல்லாம் தொடர்ந்து எடுத்துக்கிட்டா ஷீ வில் ஓவர்கம் திஸ் டிஸ்சார்டர் அண்ட் பிகம் நார்மல்”

“தென்?” பாலா புருவங்கள் சுருக்கி கேட்ட விதத்தில் பிரியம்வதா வாயடைத்துப்போனார்.

அவன் கேட்ட தொனியே மனைவிக்கு இருக்கும் மனநலபாதிப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைப் புரியவைத்துவிட்டது அவருக்கு.

வழக்கம் போல பாலியல் ரீதியான மனப்பிரச்சனை என்றதும் பாலா என்ற ஆண்மகன் அதை பாரதியின் நடத்தையோடு சேர்த்து வைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டான் என்பது புரிந்ததும் பிரியம்வதா அவனிடம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“உங்க ஒய்ப் ஆல்ரெடி உங்களுக்குத் தகுதியில்லாத மனைவிங்கிற குற்றவுணர்ச்சில இருக்காங்க மிஸ்டர் பாலா… அதோட விளைவா தற்கொலை வரைக்கும் போனாங்கங்கிறதை மறந்துட்டிங்களா? அவங்க செஞ்சது தப்பு, அது அவங்களுக்கும் தெரியுது… அந்தத் தப்பால வந்த பாதிப்பை வாழ்நாள் முழுக்க தூக்கிச் சுமக்குற மனவலிமை அவங்களுக்கு இல்ல… என்ன தான் தெரபி, மருந்துனு குடுத்தாலும் ஒரு கணவனா உங்களோட ஆதரவு இல்லனா ஷீ வில் ப்ரேக்… ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் த சிச்சுவேசன்”

“இப்ப நான் என்ன பண்ணனும் மேடம்? என் நிலமைய நீங்க புரிஞ்சிக்கங்க ஃபர்ஸ்ட்… என் பொண்டாட்டிக்கு வந்திருக்குறது தலைவலி, காய்ச்சல் மாதிரி நோய்னா என்னால அதை ஈஸியா கடந்துட முடியும்… ஆனா இவளுக்கு இருக்குறது செக்ஸ் ரிலேட்டட் டிஸ்சார்டர்… இதை எப்பிடி நான் சாதாரணமா எடுத்துக்க முடியும்? பொண்ணுங்களுக்குனு சில ஒழுக்க விழுமியங்கள் இருக்கு மேடம்.. அதை மீறி நடக்குறவங்களை ஒழுக்கங்கெட்ட பொண்ணுனு தான் சொல்லுவாங்க எங்க ஊர்கள்ல… நான் அந்த மாதிரி சூழ்நிலைல வளர்ந்தவன்… எனக்கு இவளோட டிஸ்சார்டரை ஜஸ்ட் லைக் தட்னு எடுத்துட்டுப் போற அளவுக்குப் பெரிய மனசு இல்ல… உண்மைய சொல்லப் போனா எனக்கு இவளைப் பாக்கவே அருவருப்பா இருக்கு… என்னால இவ கூட அன்னியோன்யமா வாழ முடியும்னு தோணல மேடம்”

கை நீட்டி அவன் சொன்ன விதத்தில் பாரதி உடைந்து போவாள் என்று பிரியம்வதா எண்ணியிருக்க அவளோ தலையுயர்த்தி வேதனையோடு முறுவலித்தாள்.

இந்தப் பேச்சு எனக்குப் பழகிவிட்டது என்றன கண்ணீரில் மிதந்த அவளது கருவிழிகள்.

“நீங்க கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணுங்க பாலா”

பிரியம்வதா சொன்னதும் விருட்டென எழுந்து வெளியேறிவிட்டான் அவன்.

அவன் போனதும் “பாரதி என்ன நடக்குது உங்களுக்குள்ள?” என்று விசாரித்தார் அவர்.

பாரதி கண்ணீரை விழுங்கிக்கொண்டாள்.

“இப்ப பேசுனார்ல… நீங்க கேட்ட கேள்விக்கான சாம்பிள் அது” சுருக்கமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வேதனை முறுவல் இதழில் நெளிய அவரை நோக்கினாள்.

பிரியம்வதா நெற்றியைச் சுருக்கி யோசித்தார்.

“முதல்ல உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற இந்த மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங்கை சரி பண்ணணும்… அப்புறம் தான் உனக்காக ட்ரீட்மெண்டை நான் ஆரம்பிக்க முடியும்… பட் பாலா அதுக்கு கோ-ஆப்ரேட் பண்ணுவார்னு எனக்குத் தோணல… வாட்ஸ் யுவர் டிசிசன்?”

“எனக்கு எந்த ட்ரீட்மெண்டும் வேண்டாம் மேடம்… நான் இப்பிடியே இருந்துடுறேன்” என்றாள் நைந்த குரலில்.

பிரியம்வதாவுக்குக் கோபம் வந்துவிட்டது.

“ஆர் யூ க்ரேசி? உன்னோட ப்ராப்ளம் கொஞ்சம் க்ரிட்டிக்கலானது பாரதி… இது விளையாட்டா தோணுதா உனக்கும் உன் ஹஸ்பெண்டுக்கும்? ஆல்ரெடி சூசைட் வரைக்கும் நீ போயிருக்க.. உன் ஹஸ்பெண்டுக்குத் தான் பிரச்சனையோட தீவிரம் புரியலனா உனக்குமா?”

“எனக்குப் புரியுது மேடம்… இந்தப் பிரச்சனை சரியாகனும்னு நானும் ஆசைப்பட்டேன்… என் புருசனோட சேர்ந்து சந்தோசமா வாழணும்னு நினைச்சுத் தான் கவுன்சலிங் வந்தேன்… எப்ப அவருக்கே என் மேல அருவருப்பு வந்துச்சோ அப்பவே எனக்கும் இந்தக் கவுன்சலிங்கால எந்த யூஸும் இல்லனு புரிஞ்சிடுச்சு… என்னோட பிரச்சனை சரியானாலும் அவர் என்னை பாக்குற பார்வை மாறப்போறதில்ல மேடம்… அப்புறம் எதுக்கு இதெல்லாம்?”

விட்டேற்றியாகப் பேசியவளை அவர் வற்புறுத்தவில்லை. பிரியம்வதாவுக்கு இப்போதும் பாலாவின்மீது நம்பிக்கை இருந்தது. அவனுக்குப் பாரதியின் பிரச்சனை ஏதோ ஒருவிதத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்க வேண்டும். எனவே தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று எண்ணினார்.

கிளம்பும் தருவாயில் பாலாவிடம் “எப்ப பாரதியோட மனசு மாறுதோ அப்ப அவங்களை தாராளமா என் கிட்ட தெரபிக்கு அழைச்சிட்டு வரலாம் பாலா” என்று சொல்லித் தான் அனுப்பி வைத்தார்.

பாலாவுக்கு மனைவி இனி சிகிச்சை வேண்டாமென மறுத்தது எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

ஏற்கெனவே அவளது மனவியல் பிரச்சனை உண்டாக்கிய ஏமாற்றம் வேறு! கடுகடுவென காரைக் கிளப்பியவன் வீட்டுக்கு வந்ததும் வெடிக்கத் தொடங்கினான்.

“இப்ப எதுக்கு டாக்டர் கிட்ட ட்ரீட்மெண்ட் வேண்டாம்னு சொன்ன? என்ன ஆட்டிட்டியூட் காட்டுறியா?”

பாரதி சுவரைப் பார்த்தபடியே “ஆட்டிட்டியூட் காட்டி என்ன ஆகப்போகுது? இப்ப ட்ரீட்மெண்ட் பண்ணி என்னோட பிரச்சனை சரியான மட்டும் நீங்க என்னை அருவருப்பு படாம ஏத்துக்கப்போறிங்களா என்ன? நான் ஒழுக்கமில்லாதவனு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுற நீங்க அதுக்கு அப்புறம் மாறவா போறிங்க?” என்று கேட்க

“அதை பத்தி உனக்கு என்ன கவலை? இப்பிடி ஒரு பிரச்சனை இருக்குறதை மறைச்சு என்னைக் கல்யாணம் பண்ணுனப்ப இனிச்சுதுல்ல… இப்ப நான் அதைச் சொல்லிக் காட்டுனா வலிக்குதா?” என்று மீண்டும் கேட்டு அவளைக் காயப்படுத்தினான் பாலா.

பாரதி கண்ணீர் நிரம்பிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.

“உங்களை ஏமாத்திட்டேன்னு தோணுச்சுனா தயவுபண்ணி நம்ம ரெண்டு பேருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லனு என்னை வெட்டிவிட்டுட்டு இன்னொரு ஒழுக்கமான பொண்ணைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க… இப்பிடி பேசி பேசி என்னைக் கொல்லாதிங்க… நான் செஞ்சது தப்பு தான்… என் மனசு தறிகெட்டுத் தப்பு பண்ணிட்டேன்… அதுக்கான தண்டனையா நம்ம கல்யாண வாழ்க்கை முறிவை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்… தினமும் நீங்க கத்தி நான் அழுது எதுக்காக நம்ம வாழ்க்கைய நரகமாக்கிக்கணும்?”

மடமடவென கண்ணீரும் கம்பலையுமாகக் கொட்டித் தீர்த்துவிட்டுப் பால்கனிக்கு ஓடிவிட்டாள் பாரதி.

அவள் சொன்ன திருமண வாழ்க்கை முறிவு என்ற வார்த்தையில் அதிர்ந்து போய் நின்றான் பாலா. எவ்வளவு எளிதில் இன்னொரு திருமணம் செய்து கொள் என்று சொல்லிவிட்டாள்! திருமணம், முறிவு, மறுமணம் எல்லாம் இவளுக்கு விளையாட்டாக உள்ளது போல!

கடுப்பு மேலிட பால்கனியை நோக்கி காலடி எடுத்துவைக்கப் போனவன் ஏதோ தோன்றவும் தங்களது அறைக்குள் போய் முடங்கிக்கொண்டான்.

பாரதியோ பால்கனியின் நின்று அழுது தீர்த்தாள். தனது பிரச்சனைக்குத் தீர்வே கிடையாது என்று தெரிந்துபோனது அவளுக்கு. தீர்வு கிட்டினாலும் பிரயோஜனமில்லை என்பதுவும் புரிந்து போனது.

தன்னை வெறுக்கும் அருவருக்கும் கணவனோடு வாழ்நாளைக் கழித்தால் மட்டும் என்னவாகிவிடப்போகிறது? அழுகையின் முடிவில் பிரிவே வழியென்று தோன்றியது பாரதிக்கு.

அவர்கள் வாழ்ந்த ஐம்பத்து மூன்று நாட்களில் அழுதாலும் கதறினாலும் பாலாவின் அன்பு அவளுக்குக் கிடைத்த நாற்பத்தாறு நாட்கள் இனி திரும்பபோவதில்லை.

ஒரே வீட்டில் இருவரும் இருந்து நரகத்தில் உழல்வது போன்று வாழ்க்கையைக் கழிப்பதால் யாருக்கு என்ன இலாபம்? எனவே பிரிவே சரியெனத் தோன்றிவிட்டது அவளுக்கு.

அன்றிரவு அவள் சமைத்ததை பாலா சாப்பிடவில்லை. வெளியே போய் சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்குள் வந்தவன் மனைவி அவளது உடைகளைப் பெட்டியில் எடுத்து வைப்பதை மௌனமாகப் பார்த்தபடி குளியலறைகுள் புகுந்துகொண்டான்.

அவள் பெரிய சூட்கேஸ்கள் இரண்டு, ஒரு லக்கேஜ் பேக்கில் அவளது உடைகள், திருமணத்திற்காக போட்ட நகைகளை எடுத்துவைத்துவிட்டு பாலா என்ற ஒருவன் அந்த அறையில் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் வெளியேறினாள்.

சமையலறையில் அவள் எதையோ உருட்டும் சத்தம் கேட்டது.

வேலையை முடித்துவிட்டு அவள் வரட்டுமென காத்திருந்தான் பாலா. பாரதியும் சாப்பிட்டுவிட்டு அறைக்குள் வந்தவள் கணவன் இன்னும் உறங்காமல் இருக்கவும் தயக்கத்தோடு படுக்கையின் அடுத்தப் பக்கத்தில் அமர்ந்தாள்.

பாலா தனது பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு “இப்ப எதுக்கு லக்கேஜை எடுத்து வச்சிருக்க நீ?” என்று கேட்க

“நான் எங்க வீட்டுக்கே போயிடுறேன்” என்றவள் அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு படுத்துவிட்டாள்.

எவ்வளவு திமிர் இவளுக்கு என பற்களைக் கடித்தான் அவன்.

படுக்கையைச் சுற்றி அவள் முன்னே வந்து நின்றான்.

கண் மூடிக் கிடந்தவளிடம் “தூங்குற மாதிரி நடிக்காதடி… இப்ப எதுக்கு ஊருக்குப் போகணும்னு துடிக்குற? ஆல்ரெடி உன்னால நான் மனக்கஷ்டத்துல இருக்கேன்… இப்ப ஊருல போய் என் மானத்தைக் கப்பலேத்தணுமா?” என்று அவன் கத்தவும் பாரதியின் மொபைலுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

தொடுதிரையில் ‘அம்மா காலிங்’ என்று வரவும் பாலாவின் குரல் அடங்கியது. பாரதியும் மொபைலைக் காதுக்குக் கொடுத்தபடி அறையிலிருந்து வெளியேறினாள்.

முன்பெல்லாம் அவளது மொபைலுக்கு அழைப்பு வந்தால் அவன் முன்னே பேசுவதே வழக்கம். உறவில் உண்டான விலகல் வெளிப்படைத்தன்மையையும் பாதித்துவிட்டது.

பாலாவுக்கு அவளை ஊருக்கு அனுப்ப விருப்பமில்லை. அதே நேரம் அவளது பிரச்சனைக்கான காரணத்தை ஒதுக்கிவிட்டு முன்பு போல பாரதியோடு அன்னியோன்யமாக வாழவும் பிடிக்கவில்லை. இரண்டுங்கெட்டான் மனநிலையில் அவன் இருக்க அவனது மனைவியோ பால்கனியில் நின்று அவளது அன்னையிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள்.

“சொல்லும்மா”

“இந்நேரத்துல கால் பண்ணிட்டேன்… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையேடி?”

“ஏன்மா திடீர்னு கால் பண்ணி பிரச்சனை இல்லையேனு கேக்குற? உனக்கு என்னாச்சு?”

மறுமுனையில் மனோகரி தயங்கி தயங்கி என்ன விவரமென கூறினார்.

“சம்பந்தியம்மாவ நேத்து அம்மன் கோவில்ல வச்சு பாத்தேன்… உனக்கும் மருமகனுக்கும் எதுவும் பிரச்சனை இருக்குமோனு அவங்க குழம்பிப் போயிருக்காங்க… அங்க எல்லாம் நல்லபடியா தானே போகுதுடி?”

இல்லை என்பதற்கு அடையாளமாக அவளது அறையில் பெட்டி படுக்கை கட்டிவைக்கப்பட்டிருந்ததே! அன்னையிடம் சகஜமாகப் பொய் சொல்ல இன்னுமே பாரதி பழகவில்லையே!

“இ… இங்க ஒன்னும் பிரச்சனை இல்லைம்மா… அவர் என்னை நல்லா பாத்துக்குறார்… அத்தை அன்னைக்குக் கால் பண்ணுனப்ப நான் தூங்கிட்டிருந்தேன்… திடீர்னு கால் வந்ததும் குரல் டல்லா இருந்துச்சு போல… அதனால அத்தை என்னவோ ஏதோனு பயந்துட்டாங்க… வேற ஒன்னுமில்லம்மா”

“என் வயித்துல பாலை வார்த்த பாரதி… சம்பந்தியம்மா கண் கலங்குனதும் நான் பயந்தே போயிட்டேன்டி… மாப்ளை தங்கமானவரு தான்… ஆனா ஊருக்கண்ணுனு ஒன்னு இருக்குதே… அது பூராவும் இப்ப உன் மேல தான் பாரதி… உங்க மகளுக்கா இவ்ளோ வசதியான இடத்துல சம்பந்தம் கிடைச்சுதுனு சொல்லி சொல்லி வயிறெரியுறாங்க… உங்கப்பாவோட முதலாளி குடும்பத்துல நம்ம சம்பந்தம் பண்ணுனது நம்ம சொந்தக்காரங்க நிறைய பேருக்கு பொறாமைடி… பணக்காரப்பசங்களுக்கு நிறைய கெட்டப்பழக்கம் இருக்கும், கஷ்டப்பட்ட குடும்பத்துல பொண்ணு எடுத்தா அவன் என்ன ஆட்டம் போட்டாலும் பொண்டாட்டி வாயைத் திறந்து கேக்கமாட்டானு தான் நம்ம வீட்டுல சம்பந்தம் பண்ணுனாங்களாம்… இதை சொன்னது உன் பெரியம்மாக்காரி… அவ  மகளுக்கு இன்னும் வரன் குதிரலங்கிற பொறாமைல உன்னைச் சபிக்காத குறையா என் கிட்டவே பேசுறா… இவங்க யாரோட வாயும் பலிச்சிடக்கூடாதுனு நான் பதறிபோய்க் கெடக்கேன் பாரதி… பொம்பளைக்குப் புருசன் வீடு தான் நிரந்தரம்… என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு நல்லபடியா வாழணும் பாரதி”

“சரிம்மா… நீ உன் உடம்பைக் கவனிச்சிக்க… அப்பாவையும் பத்திரமா பாத்துக்க… நைட் ரொம்ப நேரம் முழிச்சு பேச வேண்டாம்… நாளைக்கு அவர் வேலைக்குப் போனதும் நான் கால் பண்ணுறேன்… நான் நீ அத்தை மூனு பேரும் ஜாலியா பேசலாம்”

அன்னையிடம் சந்தோசமாக இருப்பது போலப் பொய் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்குத் திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போன்ற பிரமை.

ஒரு பக்கம் தேளாய் கொட்டும் கணவன்! இன்னொரு பக்கமோ ஊரார் வாய்க்கு அஞ்சும் பிறந்தவீட்டினர்! எங்கே போவாள் அவள்? திருமணம் ஆகிவிட்டால் பெண்ணுக்குப் பிறந்தகமும் சொந்தமில்லை, புகுந்த வீடும் உரிமையானதில்லை என்ற நிதர்சனம் புரிய பால்கனியிலேயே அமர்ந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள் பாரதி.

8 thoughts on “கானல் பொய்கை 9”

  1. CRVS 2797

    புருசனே சொந்தமில்லைன்னு சொன்ன பிறகு…
    வேற என்ன இருக்கப் போகுது..???

  2. Fellik

    பாலா கொஞ்சம் மனம் இறங்கி வரலாம். அது என்னவோ உண்மை தான். கல்யாணம் ஆன பிறந்த வீடும் இல்லை புகுந்த வீடும் இல்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *