11
“ரோகிணி, எனக்கு இந்த அரண்மனையை சுற்றி காண்பியேன்”
“என்ன…….?”
“ஏன்? என்ன நான் தப்பா கேட்டது மாதிரி இப்போ இப்படி அதிர்ச்சி ஆயிட்டே. நீ பிறந்து
வளர்ந்த இந்த அரண்மணையை சுற்றி காட்டுன்னு கேக்கிறேன்.”
அவனை தீர்க்கமாக பார்த்தாள். அந்த கண்களில் உண்மை இருந்தது. தெரிந்து கொள்ளும் ஆர்வம்
இருந்தது. பத்து வருடங்களாக அவளே பார்த்திட இயலாத அரண்மனை இந்த அரண்மனை.
நினைவுகள் பழைய சிந்தனையில் மனம் மயங்கியது.பெற்றோர் இருந்த போது பட்டாம்பூச்சியாக
சிறகடித்து பறந்த இடம் தான். பத்து வயது வரை சுற்றி சுற்றி ஓடிவிளையாடிய இடமும்
கூட.வயது வந்த பின்னும் கூட ஓடி விளையாட விட்டாலும் நடமாடி கொண்டேனும் இருந்த பகுதி
தான்.
ஆனால்………
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தன்னுடைய அறையும் நந்தவனமும் மட்டுமே இந்த பெரிய
அரண்மனையில் தன்னுடையதாகி போனது. இதில் இவனை கூட்டி கொண்டு சுற்றி
காண்பிப்பதாமே. தானே மறந்து போன இடங்கள்.இவனிடம் எப்படி சொல்லுவது?
சொன்னாலும் நம்புவானா? வேண்டாம். வேண்டாம் சொல்ல வேண்டாம்.. இவனுடன் போய்
தான் பார்ப்போமே.
அவளுக்குமே, பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தில், அவளுக்கு மட்டுமே சொந்தமான இந்த
அரண்மணையை மீண்டும் ஒருமுறை காண தற்செயலாக கிடைத்த வாய்ப்பை நழுவ விட
விருப்பம் இல்லை. அவளை அறியாமலே ஆவலினால் அவளுக்குள் ஒரு பரபரப்பு தொற்றி
கொண்டது.
முதலில்,
மாடிப்படி ஏறி வலது புறம் கோடியில் இருந்தது அவளுடைய பெற்றோர் அறை. கதவை
திறந்ததும் அறையின் வலது கோடியில் சாளரத்தின் அருகில் மிக பிருமாண்டமான கட்டில்
மெத்தை விரித்து வைக்க பட்டிருந்தது. அறை மிகவும் சுத்தமாக இருந்தது. ஆனால் அறைக்குள்
வந்ததுமே அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பக்கத்தில் ஒரு சின்ன கட்டில் இருந்தது.
ரோகிணி போய் அந்த சின்ன கட்டிலில் உட்கார்து தலையணையில் தலை சாய்த்து கண்கள் மூடி
படுத்தாள்.
“இது தான் உன் கட்டிலா ரோகிணி?” குரலில் ஒரு சின்ன சிரிப்பு இருந்தது.
“ஆம்” புன்னகையோடு பதில் சொன்னவள் சட்டென்று எழுந்தாள்.
“வாருங்கள் போவோம்.”
“இது என் பெற்றோர் அறை என்று அவ்வளவு ஆவலாக வந்தே. அதுக்குள்ள எழுந்துட்டே. இரு
போலாம்”
“இல்லை. இப்போ இந்த அறையை வேறு யாரோ பயன்படுத்துகிறார்கள்”
“எப்படி,……….. எப்படி சொல்றே?”
“அப்படி தான். இந்த அறையில் என் பெற்றோர் வாசம் இல்லை”
“நீ இந்த அறைக்கு வந்து எத்தனை நாட்களாகி இருக்கும்?”
“நாட்களா?………….வருடங்கள்.”
“ஏன் இத்தனை வருடங்களாக வரவில்லை”?
“வர அனுமதிக்கப் படவில்லை.”
“அதான் ஏன்? என்ன காரணம்?”
“பெற்றோரை இழந்து பழைய இடங்கள், பழைய மனிதர்கள் இவைகள் எனக்கு ஏக்கத்தை
கொடுக்கும் என்று காரணம் சொல்லப்பட்டது”
“உண்மையிலேயே உனக்கு அப்படி ஏக்கமாக இருந்ததா?”
“இல்லை, உண்மையில் பார்க்க போனால் பழைய நினைவுகள் மட்டுமே அப்போது எனக்கு மிக
பெரிய ஆறுதலாக இருந்தது. எத்தனை நாட்கள் எத்தனை இரவுகள் நான் இந்த அப்பா அம்மா
கட்டிலில் படுத்து அழுது கொண்டே தூங்கி இருக்கிறேன்’
என்னவோ பத்து வயது சிறுமியாக அவளை தான் கஷ்டப்பட விட்டு விட்டதாக அவனுக்கு ஒரு
குற்ற உணர்வு ஏற்பட்டது. அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து தலை வருடி ஆறுதல்
சொல்ல வேண்டும் என்று துடித்து எழுந்த கரங்களை அடக்கி கொள்வது அவனுக்கு பெரும்
சிரமமாக இருந்தது.
“உண்மையை சொல்லி, நான் இங்கு தான் இருப்பேன் என்று மறுத்திருக்கலாமே?”
“மறுத்திருக்க மாட்டேன் என்றா நினைத்தீர்கள்?”
அவள், அவனை நிமிர்ந்து பார்த்த கண்களின் பளபளப்பில் அவன் தன் பார்வையை தாழ்த்தி
கொண்டான்.
அங்கிருந்து அப்படியே கீழே செல்வதற்கு ஒரு படிக்கட்டு இருந்தது. அதன் வழியாக கீழே வந்தால்
வடக்கு மூலையில் ஒரு பெரிய கூடம் இருந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அது ஒரு வாசகசாலை. நடுவிலே ஒரு பெரிய மேஜை போடப் பட்டிருந்தது. சுற்றி நாற்காலிகளும்
இருந்தது. அதில் ஒன்று, சிறிய அளவிலான சிம்மாசனம் போன்று மெத்தை வைத்து
தைக்கப்பட்டிருந்தது. அதன் முன்னே சிறிய பாதம்தாங்கியும் இருந்தது. படிப்பதற்கும்
எழுதுவதற்கும் தேவையான சகல உபகரணங்களும் இருந்தது.
அவள் நேராக போய் அந்த விஷேசித்த நாற்காலியின் தலை பகுதியை வருடி கொண்டு நின்றாள்.
கண்கள் எங்கோ தொலைவில் பார்த்து கொண்டிருந்தது.
“ரோகிணி, இது உன் தந்தை பயன்படுத்தும் நாற்காலியா?”
இவனுக்கு எப்படி நாம் சொல்லாமலே எல்லாம் தெரிகிறது என்று ஆச்சரியப்பட்டு கொண்டே
அவனை பார்த்து ஆம் என்று தலையை ஆட்டினாள்.
“இத்தனை புத்தகங்கள், இத்தனை படிப்பு எல்லாம் இருந்தும் உங்க அப்பாவிற்கு உன்னை ஏன்
படிக்க வைக்க தோணவில்லை?’
“அப்பா இருந்த போது பாடம், நாட்டியம், நடனம் எல்லாம் கற்றேன். ஓவியம் அப்பாவே எனக்கு
கற்று கொடுத்தார்கள். அவ்வளவு ஏன்? அம்மா கூட சமையலறையில் அழைத்து சென்று சமைக்க
காய்கறி நறுக்க என்று கற்று கொடுத்தார்கள்.”
“சமையலா….அதுவும் இந்நாட்டின் இளவரசிக்கு……?”
“ஏன் அதில் என்ன தப்பு?” என்று ஆக்ரோசமாக கேட்டவள்,, அவன் கண்களில் தென்பட்ட
குறும்பை கண்டு, மெலிதாக சிரித்து கொண்டே பதில் சொன்னாள்.
“அப்பாவும் கூட இப்படி தான் கேட்டார்கள். ஆனால் அம்மா தான் இளவரசியாக இருந்தாலும்
நாளை ஒரு வீட்டில் வாழ போகும் பெண். சமையல் கண்டிப்பாக கற்று கொள்ள வேண்டும். நான்
கூட இங்கே சமைப்பதில்லை தான். ஆனால் உங்கள் இருவருக்கும் தேவையானதை தகுந்தார்
போல் செய்ய சொல்ல முடிகிறது அல்லவா என்றார்கள்.”
“சரி. அப்படி சகலகலா வல்லவளாக எல்லா வித்தைகளையும் கற்று கொண்டவள் ஏன்
ஆசிரியர்களை அடிப்பதும் கடிப்பதுமாக கல்வியை பாழாக்கி கொண்டாய்”
“அப்படி என்று உங்களுக்கு சொல்லப்பட்டது”
“அப்படி என்றால் உண்மை அதுவல்ல, அப்படி தானே?”
அவள் நிமிர்ந்து அவன் கண்களுக்குள் பார்த்தாள். இன்னுமா உனக்கு புரியவில்லை என்று
கேட்டது அந்த கண்கள். அவனுக்கு ஆச்சரியமேற்படவில்லை. நான் எதிர்பார்த்தது தான் என்பது
போல அவனும் அவளை பதிலுக்கு கண்களுக்குள் ஊடுருவி பார்த்தான்.
அப்படியே வெளியே வந்து கூடத்திற்கு வந்தார்கள். ரோகிணி கூடத்தை அப்போது தான் முதன்
முதலாக பார்ப்பது போல நீண்ட நேரம் பார்த்து கொண்டிருந்தாள். விஜயனுக்கு கூட தெரிந்த
இடம் தான் இது. ஆனால் ரோகிணி தான் புதிதாக பார்ப்பது போல பார்த்து கொண்டிருந்தாள்.
கூடத்தில் பலவகையான பலநாட்டு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. மேலே
கூரையிலுருந்து அலங்கார விளக்குகள் தொங்கி கொண்டிருந்தது.
மன்னர் பாஸ்கரின் மூதாதையர்கள் ஓவியங்களும், ராஜா பாஸ்கர் ராணி பாக்கியலட்சுமியின்
ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தது..
பெற்றோரின் படத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தவள் அதன் கீழிருந்த மேஜையின் மீது
சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள்.
முதன் முதலில் அவளை புகை படிந்த ஓவியமாக நினைத்தது நினைவுக்கு வந்தது விஜயனுக்கு,
இப்போது இந்த ஓவியத்தில் காணப்பட்ட அவள் தாயை விட பேரழகியாக இருந்தாள்.
அவள் மேசையிலிருந்து நகர்ந்து அதன் அருகிலேயே கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
பக்கத்தில் கிடந்த நாற்காலியில் அவனும் வந்து அமர்ந்து கொண்டான்.
அவள் ஏதோ தூரத்தில் தெரிந்த காட்சியை விவரிப்பதை போல சொன்னாள்.
“இந்த இடத்தில் தான் அன்றைக்கு என் அம்மாவும் சுந்தரம் பெரியப்பா வீட்டு பெரியம்மா
ரங்கநாயகியும் உட்கார்ந்திருந்தார்கள். நானும் அமுதாவும் இந்த மேஜையில் சாய்ந்து வேடிக்கை
பார்த்து கொண்டு நின்றிருந்தோம்.
வெள்ளைகார துரை துரைசானியம்மா இன்னும் நம்ம ஊர் பெரிய ஆளுங்க நிறைய பேர்
நடனமாடி கொண்டிருந்தார்கள். ஏதோ விருந்து போலும். எல்லா விளக்குகளும்
பொருத்தப்பட்டிருந்தது. இந்திரலோகம் போல இருந்தது. அப்பாவும் ஏதோ துரையம்மாவை
பிடித்து கொண்டு மெல்ல நடனமாடி கொண்டிருந்தார்.
அப்போது,
ஒரு துரை கையில் கண்ணாடி கிண்ணத்தில் என்னவோ பருகி கொண்டு வந்தவன் அம்மாவிடம்
வந்து என்னவோ கேட்டான். அம்மா பதில் சொல்லலை. பேசாமல் இருந்தார்கள். அவன் மேலே
மேலே என்னவோ கேட்டு கொண்டே இருந்தான். திடீரென்று அவன் அம்மாவை கையை பிடித்து
இழுக்க தொடங்கி விட்டான். பெரியம்மா தான் அவனை பிடித்து தள்ள பார்த்தார்கள். இரண்டு
பேராலும் முடியலை.
அப்பா அதை அங்கேயிருந்து பார்த்து கொண்டிருந்தவர் விரைந்து வந்து அவனை ஒரு அறை
கன்னத்தில் விட்டார்கள். கூட்டமே சட்டென்று அமைதியாயிற்று. எல்லோரும் வந்து சூழ்ந்து
கொண்டார்கள்.யாரும் ஒன்றும் பேசவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவன் அம்மாவின் முன்
மண்டியிட்டு கையை கூப்பி என்னவோ சொன்னான். பின் கூட்டம் அமைதியாக கலைந்து
போயிற்று.
இரவு அம்மா அழுதார்கள்.
“என்னால் உங்கள் சந்தோசம் கெட்டு போயிற்று”
“நீ தான் என் சந்தோசம் பாக்கியம்”
“என்னாலே தேவையில்லாமல் நீங்கள் அவர்களை பகைத்து கொள்ளும்படி ஆயிற்று”
“எனக்கு நீ மட்டும் தான் முக்கியம். அதற்காக நான் யாரை வேண்டுமானாலும் பகைப்பேன்”
அம்மா மேலும் அழுதார்கள். மூக்கை உறிஞ்சும் சப்தம் கேட்டது. அழுகின்ற பாக்கியத்தை தன்
நெஞ்சுடன் சேர்த்து அணைத்தவர் சொன்னார்.
“பாக்கியம் நீ என் சொத்து. உன்னையே காப்பாற்ற த முடியலேன்னா என்னாலே இந்த நாட்டை
எப்படி காப்பாற்ற முடியும்?” என்று.
அதை கேட்ட விஜயன் உரத்து சிந்தித்தான்.
“எவ்வளவு உண்மை, உன்னையே என்னாலே காப்பாற்ற முடியவில்லை என்றால் என்னாலே
இந்த நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்?”
அதை கேட்டதும் அவளுக்குமே அவன் தோளில் சாய்ந்து கொள்ளும் பேரவா ஏற்பட்டது.
தன்னை சுதாரித்து கொண்டாள். எண்ணங்களின் தாக்குதலில் இருந்து மீண்டவளாக சட்டென்று
எழுந்து வராந்தாவின் இடது கோடியில் நடந்தாள். எதிரே முட்டு சுவர் தான் இருந்தது இங்கே
எங்கே போகிறாள்? அந்த சுவரில் ஒரு ஓவியம் இருந்தது. அதை தூக்கி அதன் கீழ் இருந்த விசையை திருகினாள்.
சுவரில் ஒரு பிளவு ஏற்பட்டது. கீழே படிக்கட்டு ஓடியது. இருட்டாக இருந்தது. அவன் முன்னே
அதனுள் இறங்கினான். அவள் அவனை பின் தொடர்ந்தாள். படி கீழ் நோக்கி இறங்கி திரும்பி
சட்டென்று சமதரை தட்டுபட்டது. முன் சென்ற விஜயனின் தோளில் முட்டி கீழே விழப்போனவளை சட்டென்று தன் இரு கரங்களிலும் தாங்கி நெஞ்சோடு சேர்த்து பிடித்தான். அவன்
கைகளுக்குள் அப்படியே எவ்வளவு நேரம் இருந்தாளோ, ஒரு நிமிடமா, ஒரு நாழிகையா அல்லது
ஒரு யுகம் தானா………… சட்டென்று சுயநினைவுக்கு வந்து தன்னை விடுவித்து கொண்டாள்.
மேலே சாளரத்தின் வழியாக காற்றும் வெளிச்சமும் வந்தது. இரு அறைகள் தென்பட்டது.
இரும்பில் கிராதி போட்டிருந்தது. ஒரு அறையின் முன் வந்தவள் நின்றாள். அவனை பார்த்தாள்.
அந்த கண்களில் ஒரு சவால் இருந்தது.
“நான் சொல்லாமலே ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக சொன்னீர்களே இது என்னவென்று
சொல்லுங்கள் பார்ப்போம்?”
அவன் அவளை நெருங்கி நின்று அவளை தன்புறம் திருப்பி தன்னோடு சேர்த்து அணைத்து
மென்மையாக நெற்றியில் முத்தமிட்டு அவள் காதுக்குள் மெல்ல கேட்டான்,
“இது தான் நீ அடிக்கடி ஓடி போய் விடுவதாக சொல்லப்படும் காடா?”
இதையும் மிக சரியாக தான் சொன்னான். அந்த உண்மையின் வீச்சில் அவள் கண்கள் தாரை
தாரையாக கண்ணீர் சிந்தியது. இந்த அறையில் தான் அடைபட்டு கிடக்க வேண்டிய
தருணங்களையும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும் நினைத்து உடல் தூக்கிவாரிபோட்டது.
அவன் மீண்டும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்க அணைத்து கொண்டான். அவள் இன்னும்
அதிகமாக அவன் நெஞ்சு கூட்டுக்குள் ஒடுங்கி கொண்டாள். அவள் உடல் நீண்ட நேரம் குலுங்கிகொண்டிருந்தது.
தன்னை யறியாமல் தன் கண்களின் கடைகோடியில் வழிந்த கண்ணீரை துடைத்து கொள்ளமுயலவில்லை அவன். அவளை அணைத்தால் போல மெல்ல படியேறி மேலே வந்தவனுக்கு தான்
இன்னும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை ஒருமுறை மனதிற்குள் வரிசை படுத்திகொண்டான். அதை தொடர்ந்து தான் மேற் கொள்ள வேண்டிய காரியங்களை மனதிற்குள் சிந்தித்து கொண்டான்.
அண்ணாந்து அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவள் அவன் எதையோ யோசிப்பதை கண்டு
அமைதியாக இருந்தாள். அவள் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டாள். இனி தன்னை
தக்க வைத்து கொள்வதும் அரவணைத்து பாதுக்காத்து கொள்வதும் அவன் பொறுப்பு.
நிம்மதியாக அவனுடன் இணைந்து நடந்தாள் ரோகிணி.
தொடரும்
ஷியாமளா கோபு
Super… Yar antha sathikaravangala erupanga🤔🤔