8
கூடத்தை விட்டு வெளியே வந்த விஜயன் திவானிடம் சொன்னான். “ரோகிணியை கூப்பிடுங்கள்.
உணவருந்தலாம்.” என்று.
“அது, அது வந்து………..” இழுத்து தயங்கி நின்றார்.
“ஏன்? என்ன விஷயம்?”
“இல்லை இளவரசே, ரோகிணி தேவியார் தற்சமயம் இங்கே இல்லை”
“அப்படி என்றால்?”
“வழக்கம் போல தான்” துரைசாமியைப் பார்த்து கீழுதட்டை பிதுக்கி மெல்ல முணுமுணுத்தார்
“காட்டுக்கு ஓடி போய்ட்டார்”
“என்னது………..?” துரைசாமி
“என்ன காட்டுக்கு ஓடி போயட்டாளா?”
“ஆம்” மென்று முழுங்கி சொன்னார்.
“அடிக்கடி இப்படி தான் காட்டுக்கு ஓடி போய்டுவாளா?”
இளவரசியை, ரோகிணி தேவியார் என்றோ இளவரசி என்றோ குறிப்பிடாமல் ஏக வசனத்தில்
குறிப்பிடுவதின் மூலம் தன்னை அறியாமலே விஜயன் தனக்கு ரோகிணியிடம் ஏற்பட்டிருக்கும்
உரிமையையும் நெருக்கத்தையும் நிலைநாட்டிக் கொண்டான்.
இதை துரைசாமியும் திவானுமே கவனிக்க தான் செய்தார்கள்.
“அடிக்கடி போகமாட்டார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிடிக்காதது நடந்தால் இப்படி தான்
செய்வார்கள்.”
“அதாவது தன் எதிர்ப்பை இப்படி காட்டுக்கு ஓடி போவதன் மூலம் நமக்கு தெரிய படுத்துகிறாள்.
அப்படி தானே”
“அப்படி தான்”
“இப்போ இங்கே அவளுக்கு பிடிக்காதது என்ன நடந்து விட்டது?”
“அது…”
“சும்மா சொல்லுங்கள் திவான் அவர்களே”
“இப்போ நீங்கள் அவர்களை திருமணம் செய்வது தான் அவர்களுக்கு பிடிக்காத விஷயம்”
“ஓஹோ, இதற்கு முன்பு இது மாதிரி எப்போவெல்லாம் போயிருக்கா?”
“ஒவ்வொரு வாட்டியும் யாரேனும் பெண் பார்க்க வந்து சென்றாலே இப்படி தான்”
“ஆக, திருமணம் என்பது தான் எதிர்ப்புக்கு உரிய விஷயம்”
“அது……ஆம்”
“ஓஹோ,………! சின்ன வயசில் எப்படி?”
“சின்ன வயதில் இருந்தே அப்படி தான்”
இப்போது துரைசாமி குறுக்கிட்டு சொன்னார். “இளவரசே, சிறு வயதில் கல்வி கற்பிக்க
ஆசிரியர்கள் வந்தால் அவர்களை கடிப்பதும் பிராண்டுவதும் என்று ஒரே அடம் தான்”
“சிறு பெண், தாய் தந்தையரை இழந்திருக்கிறாள். நாமும் கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று
அவரிடம் அனுசரணையாக நடந்து கொண்டால் நாளாவட்டத்தில் அவரை கட்டுக்குள் வைப்பது
மிகவும் கடினமாக போய்விட்டது”
“அப்படி என்றால் ரோகிணிக்கு கல்வி கற்பிக்கவில்லையா?” ஆச்சர்யமாக கேட்டான்.
“கற்க மறுத்து விட்டார்”
“இங்கே இருந்து காடு எவ்வளவு தொலைவு?”
“நம் கோட்டையை சுற்றி மலைகளும் காடுகளும் தான். மேற்கு வாயிலை தாண்டினால் ஐந்து கல்
தொலைவில் தான் உள்ளது காடு.”
“அவள் காட்டுக்கு ஓடி போய்விட்டாள் என்று சர்வ சாதரணமாக சொல்கிறீர்களே, அவளை தேட
வேண்டாமா?”
அமைதியாக இருந்தார் திவான
“மேலும் அவள் காட்டுக்கு தான் போய் இருப்பாள் என்று எப்படி அவ்வளவு நிச்சயமாக
சொல்றீங்க?”
“முதன் முதலில் தேவியார் காணாமல் போன போது எங்கே என்று நாடு நகரம் எல்லாம்
தேடினோம் . கடைசியில் காட்டில் தான் கண்டு பிடித்தோம். அதிலிருந்து எப்போது காணமல்
போனாலும் காட்டுக்கு தான் தேடி போவோம். ஆனால் நாம் தேடி வருவது தெரிந்தால்
அங்கிருந்து காட்டுக்கு உள்ளே அடர்ந்த பகுதிக்குள் ஓடி விடுவார். நாம் தேடி போகவில்லை
என்றால் ஒன்றிரண்டு நாளில் திரும்பி விடுவார். இப்போதும் நாம் தேடி போனோம் என்றால்
அவர் திரும்பி வருவதற்கு நாள் ஆகும்”
“ஓஹோ அப்படி ஒரு சங்கடம் இருக்கிறதா? அதற்காக அவளை தேடாமல் எப்படி அப்படியே விட
முடியும்?”
வேறு என்ன செய்வது என்பது போன்று கையாலாகாத பார்வை ஒன்றை திவான் விஜயனையும்
துரைசாமியையும் பார்த்து வீசினார். ஒரு நிமிடம் யோசித்து நின்றவன் திவானிடம் சொன்னான்
“நாம் கொஞ்சம் வீரர்களை அழைத்து கொண்டு தேடி போவோம்”
“வீரர்கள் வேண்டாம் இளவரசே, நாமிருவரும் மட்டும் போவோம்”
“ஏன் அப்படி?”
“இளவரசே, தேவியார் தற்சமயம் அரண்மனையில் இல்லை என்பதும் நாம் அவர்களை தேடி
காட்டுக்கு போய் இருக்கிறோம் என்பதும் யாருக்கேனும் தெரிய வந்தால் நாம் தேவியாரை தேடி
செல்லுமுன் ஆபத்து அவர்களை தேடி சென்று விடும்.”
என்ன ஒரு இக்காட்டான சூழ்நிலை…..!.. திவான் அனாவசியமாக பயப்படுவது போல
தோன்றினாலும் ஒருவேளை நூறில் ஒரு வாய்ப்பாக அவளுக்கு ஏதேனும் நேரிட்டால் அது நமக்கு
வினையாகி விடும். பெருமூச்செறிந்தான்.
“அப்படியே ஆகட்டும், நாம் இருவரும் மட்டும் தேடி செல்வோம் வாருங்கள்”
“மன்னிக்க வேண்டும் இளவரசே, இப்போது இரவாக இருக்கிறது. விடிந்தும் விடியாமலும் கிளம்பி
விடலாம்.”
“அப்படியே செய்யுங்கள் இளவரசே” அதுவரை இவர்கள் பேசுவதை கவனித்து வந்த துரைசாமியும்
அதையே வலியுறுத்தினார். நினைத்ததை முடிக்க கிளம்பிய வேகம் தடைப்பட்ட சோர்வில் அதற்கு
அரை மனதுடன் ஒப்பினான்.
காலையில் இருவரும் கிளம்ப தயாராகி கூடத்தில் வந்து நின்றார்கள். அப்போது ரோகிணியை
கவனித்து கொள்ளும் அவளுடைய அந்தரங்க பணியாளான சுந்தரி வேகமாக சற்றே ஓடினாற்
போல விரைந்து அவர்களிடம் வந்தாள்
“யஜமான், இளவரசி வந்து விட்டார்கள்”
“என்ன வந்து விட்டாளா?” ஆச்சர்யமாக கேட்டான் விஜயன்.
“வந்து விட்டார்களா…ம். “ ஆசுவாசபட்டு கொண்டார் திவான்.
“சரி. நான் போய் அவளை பார்த்து வருகிறேன்.”
சுந்தரியுடன் படியில் ஏறி போனான். ரோகிணியின் அறை அலங்கோலமாக இருந்தது. மெத்தை
தரையில் வீசி எறியப்பட்டிருந்தது. ஜன்னல்கள் மூடி இருந்ததால் அறையில் வெளிச்சமோ
காற்றோ இல்லை. ஒரு மாதிரியான துர் நாற்றம் எடுத்தது.
ரோகிணி ஒரு நாற்காலியின் மேல் குந்தி அமர்ந்திருந்தாள். தலையும் உடையும் கண்றாவியாக
இருந்தது. ஒரு நாட்டின் இளவரசி தான் என்ற நினைப்பே சுத்தமாக இல்லை. கைகால்களில்
கீறல்களும் காயங்களும் இருந்தது. உள்ளே மூண்ட சினத்தை அடக்கி கொண்டு சுந்தரியிடம்
கேட்டான்,
“உன் பெயர் என்ன?”
“சுந்தரி”
“ரோகிணியை நீ தான் கவனித்து கொள்வதா?”
“ஆம்”
“எத்தனை வருடங்களாக?”
“இந்த ஏழு வருசமாக தான்”
“அதாவது இவளது பெற்றோர் இறந்த பிறகு”
“ஆம்”
“அதற்கு முன்பு?”
“முத்தம்மா பார்த்து கொண்டார்கள்”
“இப்போ அவள் எங்கே?”
“சமையல் கட்டில் வேலை பார்க்கிறாள்.”
“அவளை எதற்கு மாற்றியது?”
“அந்தம்மா கொஞ்சம் வயசாளி. அவங்களாலே ராணியை பாத்துக்க கஷ்டம்”
“ஒ, அப்போ நீ நல்லா பாத்துப்பேன்னு தான் உன்னை இங்கே விட்டிருக்கு. அப்படி தானே?”
“ஆ,,,,, ஆமாம்”
“நீ நல்லா கவனிச்சிக்கறே. அப்படி தானே”
“ஆ,,,,ஆமாம்”
“அப்படியா, எங்கே ஒரு நிமிஷம் இளவரசியை நல்லா பாரு.”
சுந்தரி தன்னை அறியாமல் அந்த குரலுக்கு கட்டுப்பட்டு ரோகிணியை திரும்பி பார்த்தாள்..
“நீ நன்றாக உடை உடுத்தி அலங்காரமாக இருக்கிறாயே, இந்த பெண்ணை ஏன் இப்படி
வைத்திருக்கிறாய்?”
“அது,,,,, யஜமான் அவங்க காட்டுக்கு ஓடி போய்ட்டாங்க. அதான் ……..”
“உன் பார்வையில் இருக்கும் இந்த சின்ன பெண் உனக்கு தெரியாமல் எப்படி காட்டுக்கு ஓடி
போய் விடுவாள்.”
“அது,,,,,, அப்படி தான் யஜமான் எப்படியோ என் கண்ணுக்கு தப்பிட்டு ஓடிடறாங்க”
“அப்ப, உன்னாலே இந்த சின்ன பெண்ணை சமாளிக்க முடியலை.?”
சம்பாஷனை போகும் போக்கில் இவன் தன்னை குற்றபடுத்துகிறான் என்பது புரியாமலே அவள்
பதில் சொன்னாள்.“ஆமாம் யஜமான் ரொம்ப கஷ்டம் தான்”
“அப்போ இத்தனை வருசமா நீ இவளை சரியா கவனிக்க முடியலை”
பேசாமல் இருந்தாள்.
“இத்தனை வருஷம் நீ உன் வேலையை சரியா செய்யலேன்னு நீயே ஒத்துகிட்டே. இதுக்கு என்ன
தண்டனை தெரியுமா?”
அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“சொல்லு தெரியுமா?,…… தெரியாதா?
“சிறையில போடுவாங்களா?” மெல்ல தயங்கி கேட்டாள்.
“சரியா சொன்னே. சிறையில தான் போடணும். அதிலும் இளவரசியையே இந்த லட்சணத்தில்
வைத்திருக்கிறே. அவங்களை சரியா பாதுகாக்காமல் காட்டுக்கு ஓடி போக விட்டுருக்கே. பாரு
நல்லா பாரு. எப்படி மெலிஞ்சி சரியா சாப்பிடாத மாதிரி, தலையும் உடையும் எப்படி இருக்கு ன்னு
பாரு. அதனாலே உனக்கு தண்டனை பாதாள சிறை தான்.”
இவன் பேசுவதை கேட்டு சுந்தரி ஆடி போனாள். நாற்காலியில் குந்தி இருந்த ரோகிணி காலை
இறக்கி தரையில் வைத்து நன்றாக உட்கார்ந்தாள்.
அவள் பார்வையில் இருந்த திட்டிவிடம் மறைந்திருந்தது. மெல்லிய ஒரு குழப்பம் இருந்தது.
“சுந்தரி உனக்கு ஒரு நாழிகை அவகாசம் தரேன். அதற்குள் ரோகிணியை சரி செய்து நன்றாக
தயார் செய்து கீழே உணவு கூடத்திற்கு கூட்டி வா”
உணவு கூடத்தில் மூவரும் உட்கார்ந்திருந்து பேசி கொண்டிருந்தார்கள். மாடி படியை பார்த்தார்
போல உட்கார்ந்திருந்த விஜயன் ஒரு நிமிடம் பேச்சை அப்படியே நிறுத்தி விட்டான். அவன்
பேச்சு நின்றதும் அவன் பார்வை சென்ற திசையில் இருவரும் பார்த்தார்கள்.
ரோகிணி படியில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
என்ன ஒரு உயரம். விஜயனுக்கு கழுத்தளவில் வருவாள். நீண்ட கரங்கள். மெலிந்த உடல்வாகாக
இருந்தாலும் அதில் ஒரு நிமிர்வு இருந்தது. தாழம்பூ நிறம். சுருட்டை முடி இடுப்பிற்கு கீழ்
நீண்டிருந்தது. நன்றாக தலை குளித்திருந்ததால் முடி பறந்து கொண்டிருந்தது. நீண்ட பாவாடை
படியில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.
பாவாடை காலில் தட்டி விடாதவாறு இரு கரத்தாலும் இருபுறமும் பற்றிப் பிடித்து சற்றே தூக்கிப்
பிடித்தவாறு படியில் மெல்ல மெல்ல கவனமாக இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
இப்போதும் மாடிப்படி முடியும் அந்த இடம் வெளிச்சம் சரிவர இல்லாமல் தான் இருந்தது.
விஜயன் தலையை உயர்த்தி அண்ணாந்து எதிரே பார்த்தான். ஜன்னல் உள்ளே வரும்
வெளிச்சத்தை வரவிடாமல் மூடி இருந்தது.
“யாரங்கே, அந்த ஜன்னலை நன்றாக திறந்து விடு”
வெளிச்சம் நன்றாக பரவியது. இப்போது நல்ல வெளிச்சத்தில் அவளை கவனிக்க முடிந்தது.
சற்றே தெளிவில்லாத புகை படிந்த ஓவியமாக இருந்தாள். ஏனோ கூடத்தில் மாட்டப்பட்டிருந்த
அவள் தாயை நினைவு படுத்தினாள். என்ன இருந்தாலும் ராஜ வம்சம் அல்லவா. அவளுடைய
பேரழகில் ஒரு நிமிடம் மூச்சு விட மறந்து தன்னை மறந்து லீலாவதியை மறந்து நின்றான்
விஜயன்.
இதோ இந்த நிமிடம் தான் நிஜம். இவளுக்காக தான் நான் பிறவி எடுத்திருக்கிறேன் என்ற ஒரு
மாயை உண்டாயிற்று விஜயனுக்கு.
அவள் அவர்கள் அமர்ந்திருந்த மேசை அருகே வந்த போது அமர்ந்திருந்த மூன்று ஆண்களும்
தங்களையறியாமல் எழுந்து நின்றார்கள். மேஜையின் கோடியில் அவள் அமர்ந்ததும் மற்றவர்கள்
அமர்ந்தார்கள். சுந்தரி அருகில் நின்று கொண்டிருந்தாள்.
“இவளை சிறுவயதில் கவனித்து கொண்ட முத்தம்மாவை வரச்சொல்” சுந்தரியிடம் சொன்னான்..
சுந்தரி உடனே போகாமல் திவானைப் பார்த்தாள். அவர் ஒப்புதலாக தலையை அசைக்கவும்
உள்ளே சென்றாள் முத்தம்மாவை அழைக்க.
முத்தம்மாள் தூரத்தில் வரும் போதே ரோகிணியை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து
கொண்டு பறந்து வந்தாள்.
சுந்தரி சொன்னது போல முத்தம்மாள் வயதானவளாக இல்லை. நடுத்தர வயது இருக்கும்.
உழைத்து உரமேறிய உடல். மாநிறம். கொண்டையை தூக்கி சொருகி இருந்தாள். அழைத்ததும்
அப்படியே போட்டது போட்ட மேனிக்கு ஓடி வந்திருப்பாள் போல. சட்டை வியர்வையில்
நனைந்திருந்தது.
“ராணி, என் சின்னராணி, என் ராஜாத்தி உங்களை பாப்போமான்னு இந்த உசிரை கைல
பிடிசிகிட்டு இருந்தேனே, அந்த ஐயனாரப்பன் என்னை கைவிடலை தாயி”
ரோகிணியை இரண்டு கையாளும் ஆர தழுவி நெட்டி முறித்து இடுப்போடு சேர்த்து அணைத்து
படாதபாடு பட்டாள். ரொம்ப நாள் யஜமானியை பிரிந்து இருந்த நாய்குட்டி யஜமானியை
கண்டதும் பரிதவிக்குமே அதுபோல் இருந்தது அவளுடைய ஆர்ப்பாட்டம். ரோகிணியும் தன்
கைகளால் அவளை அணைத்து பிடித்திருந்தாள். அந்த காட்சி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது
அங்கிருந்தோருக்கு.
துரைசாமியும் திவானும் இங்கே வழக்கமாக இருப்பவர்கள். புதிதாக வந்திருக்கும் இவர் யாரோ?
ஆனால் இவர் வந்த இன்று தான் தன்னை ரோகிணியிடம் அழைத்திருக்கிறார்கள் என்றால் இவர்
முக்கியமானவராகத் தான் இருக்க வேண்டும் என்று நொடியில் சூழ்நிலையைப் புரிந்து
கொண்டவளாக விஜயனைப் பார்த்து சொன்னாள். “யஜமான், சின்னராணிக்கு மேலுக்கு ரொம்ப
சூடா இருக்கு. காய்ச்சல் இருக்கும் போல தெரியுது” என்று ரோகிணியின் நெற்றியை கழுத்தை
மாறி மாறி தொட்டு பார்த்தாள்.
அவள் நம்பியது வீண் போகவில்லை. விஜயன் திவானிடம் வைத்தியரை அழைக்க
கட்டளையிட்டான். திவானும் உடனே பணிந்தார். வைத்தியர் வரவழைக்க பட்டார். வைத்தியர்
அவளை நன்றாக பரிசோத்தித்து விட்டு காயத்திற்கு களிம்பும் காய்ச்சலுக்கு குளிகையும்
கொடுத்தார்.
“வைத்தியரே நீங்களே அருகில் இருந்து இளவரசியை பார்த்து கொள்ள வேண்டும்.”
“சுந்தரி நீ இனிமேல் சமையல்கட்டில் வேலைக்கு போ. இனி நீ இளவரசிக்கு தேவையில்லை.”
சுந்தரி திவான் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். போ என்பது போல அவர் ஜாடை காட்டவும் வேறு
வழி இன்றி முனகி கொண்டே சென்றாள்.
“முத்தம்மா நீ எப்போதும் தேவியாருடனே இருக்க வேண்டும்”.
“யஜமான், அதை விட வேறு என்ன வேணும் எனக்கு! அதுக்கு தானே காத்து கெடக்கிறேன்.”
ரோகிணியை மீண்டும் நெருங்கி நின்றாள். பெட்டைக்கோழி தன் குஞ்சை அடைக்காப்பது போல.
“திவான் அவர்களே, இனி தேவியார் எப்போதும் காட்டிற்கு ஓடி போகாமல் இளவரசியாருக்கு
காவலை பலப்படுத்துங்கள்”
ரோகிணி திவானை ஓரக்கண்ணால் பார்த்தாள். திவானின் கண்களில் என்ன கண்டாளோ
சட்டென்று தன் கண்களை தாழ்த்தி கொண்டாள்.
எல்லோருக்கும் மளமள வென்று கட்டளைகளை பிறப்பித்தான் விஜயன். அப்போது ரோகிணி
விஜயனை நிமிர்ந்து நேருக்கு நேர் ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த பார்வையின் பொருள் விளங்கவில்லை விஜயனுக்கு.
ஆனால்….! ஆனால் நிச்சயம் அதில் வெறுப்பு இல்லை
ஆனால் என்ன பார்வை அது?
தன்னிடம் என்ன சொல்ல விளைந்தது அந்த பார்வை? எத்தனயோ புதிர்களில் இதுவும் ஒன்று.
காலம் தான் இதற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் விஜயன்.
இந்த இடத்தில் ஒன்றை ஒப்பத் தான் வேண்டியிருந்தது விஜயனுக்கு. தன் அரண்மனையில்
இளவரசர்களில் ஒருவனாக மரியாதை செலுத்தப்பட்டிருக்கிரானேத் தவிர குமரனுக்கு இருக்கும்
முக்கியத்துவம் என்றும் தனக்கு இருந்ததில்லை. தந்தையும் குமரனும் தான் கட்டளையிடும்
அதிகாரம் பெற்றிருந்தார்கள். தவிர தான் யாருக்கும் அவ்வளவாக கட்டளையிட்டதும் இல்லை.
இங்கே அப்படியில்லை. இது தன் சொந்த இடம் போன்ற எண்ணத்தைக் கொடுத்திருப்பது
உண்மை தான். அதனால் இங்கே தான் செயல்பட வேண்டியது முக்கியம் என்று உணர்ந்தான்
விஜயன்.
தொடரும்
ஷியாமளா கோபு
Interesting 👍