16
“நிவி.”
“ம்..”
“பசிக்கிது நிவி”
புரண்டு படுத்தவள் கண்களை சுருக்கி தலையணைக்கு கீழ் இருந்த கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தாள். காலை எட்டு முப்பது. நிமிர்ந்து பார்த்தவள் அத்தனை நேரமும் அவள் புரள்வதையும் நேரம் பார்ப்பதையும் பார்த்து கொண்டிருந்த அருளை பார்த்தாள்.
“என்ன.?”
“பசிக்கிது” சிணுங்கினான்.
“பசித்தால் ஏதாவது சாப்பிடு. என்னை ஏன் எழுப்பறே?”
“சாப்பிட ஒன்னும் இல்லையே”
“பிரிட்ஜில் மாவு இருக்கும். தோசை போட்டு சாப்பிடு.”
“நிவி, எனக்கு தோசை போட தெரியாது”
“ச்சை, உன்னோட பெரிய தொல்லையா போச்சு.” சொன்னவள் கட்டிலை விட்டு கீழ் இறங்கி கலைந்திருந்த தலைமுடியை அள்ளி எடுத்து முடிந்து கொண்டு முனகினாள்.
“ஞாயிற்றுக்கிழமை கிழமை ஆச்சே, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் விடுதா பாரு சடை” முகம் கழுவி அடுப்படிக்கு வந்து தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி தோசை போட்டு அவனுக்கு கொடுத்தாள்.
ஒன்று, இரண்டு, மூன்று ,.எட்டு.
“போதுமா?”
அடைக்க அடைக்க சாப்பிட்டவன் புரைக்கேற தலையை தட்டி கொண்டே இடது கையால் இன்னும் இரண்டு என்று சைகை செய்தான். இருமல் காதை பிளந்தது.
“மெல்ல, மெல்ல, ஏன் இப்படி அடசிக்கிரே. தோசை எங்கே ஓடி விட போவுது?”
அவளை பார்த்து கொண்டே அவள் எடுத்து நீட்டிய தண்ணீர் சொம்பை வாங்கி குடித்தான் அருள்.
“இவ்வளவு பசியோடு ஏன் இருக்கணும். பிஸ்கட் எடுத்து தின்றுக்கலாம் இல்லே?”
“காலையில் எழுந்ததும் காப்பி குடித்திருந்தால் இவ்வளவு பசி இருந்திருக்காது”
“குடிச்சிருக்க வேண்டியது தானே?”
“பால் இல்லை”
“நான் ரெகுலரா காப்பி குடிக்க மாட்டேன். உனக்கு வேணும்னா நீ பால் வாங்கி வைத்து கொள்”
“பால் இருந்தாலும் எனக்கு காப்பி போட தெரியாது”
“போட தெரியாதா?”
“அடுப்பே பற்ற வைக்க தெரியாது.”
“பேஷ், பேஷ். உனக்கு தண்ட சோறு போடுவது மட்டுமல்லாமல் அதை வேளாவேளைக்கு செய்தும் போடணுமோ?”
“என்ன நிவி, இப்படி பேசறே?”
“ஓஹோ, பட்டிக்காட்டு மைனருக்கு உண்மையை சொன்னால் கோபம் வேறு வருதா?”
“எங்கள் வீட்டில் நான் அடுப்படிக்கு போனதில்லை.”
“உன் வீட்டில் இருப்பது அடுப்படி. நீ போக தேவை இல்லை. ஆனால் இங்கிருப்பது கிச்சன். அதனால் உனக்கு தேவையானதை நீயே தான் செய்து சாப்பிடனும்”
“எங்கள் வீட்டில் எங்க அம்மா தான் செய்வாங்க”
“அப்படியா, ஒன்னு பண்ணுவோமா?”
ஏதோ ஆலோசனை சொல்ல போகிறாள் போலும் என்று நினைத்து அவளையே மிகவும் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தான் அருள்.
“உங்க அம்மாவிடமே போய் இருந்து கொள்” அவள் குரலில் எரிச்சலும் தீர்மானமும் இருந்தது.
அவன் அழ மாட்டாத குறையாக முணுமுணுத்தான்.“என்ன நிவி”
“என்ன, என்ன நிவி. உண்மையை தான் சொல்றேன். போய் உன் அம்மாவிடம் இருந்து கொள். இன்னும் ஒரு இருபது கிலோ கூடலாம்”
“நான் எடையை குறைக்க போறேன்”
“யாரு… நீ? இது பத்தாவது தோசை.”
இடுப்பில் இடது கையை வைத்தவாறு வலது கரத்தில் தோசை கரண்டியை பிடித்து கொண்டு அவனை பார்த்து முகத்தை சுளித்து கொண்டு சொன்னாள்.“ஏய் நடக்கறதை பேசு”
“ஏய், ஏய் ன்னு கூப்பிடாதே நிவி.”
“அப்புறம் எப்படி கூப்பிடணுமாம்.?”
“கொஞ்சம் மரியாதையா கூப்பிடலாம் இல்லையா”
“மரியாதையா? உனக்கா?”
“கணவன்னு..”
“ம். அப்புறம் .”
அவளுடைய எகத்தாளத்தினால் பேச்சை நிறுத்தி அவளை பரிதாபமாக பார்த்தவனை கண்டு இன்னும் பரியாசம் கூடி
“அன்பே..ஆருயிரே, ஓ.கே.வா?”
அமைதியாக இருந்தவனை இன்னும் வம்புக்கிழுக்கும் நோக்கில், ஆள்காட்டி விரலால் மூக்கின் ஒரு துவாரத்தை மூடி “ஹே பிராண நாதா.”
என்று நாடகபாணியில் கூவி, “இது சரியாக இருக்குமா?” என்று அவனிடமே சிரிக்காமல் ஆலோசனை கேட்டாள்.
அவன் பதிலேதும் பேசாமல் தலையை குனிந்து கொண்டிருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கம் போயிற்றே என்ற எரிச்சலில் அவனருகில் போய் குனிந்து இருந்த அவன் தலையை ஒற்றை விரலால் உயர்த்தி மேலும் பரியாசம் செய்ய போனவள் அவன் கண்களில் கண்ணீரை கண்டதும் சற்றே பின் வாங்கினாள்.
“ஏய், இப்போ நான் என்ன சொல்லி விட்டேன் என்று இப்படி கண்களில் கண்ணீருடன் நிற்பாய்?”
அவன் பதிலேதும் சொல்லாமல் கண்ணீரை தன் பனியனின் கையில் துடைத்து விட்டு மெல்லிய குரலில் சொன்னான். “கணவன் என்பதற்காக இல்லாவிட்டாலும் உன்னை விட வயதில் பெரியவன் என்பதற்கேனும் கொஞ்சம் மரியாதையாக அழைக்கலாம்”
“அது உண்மை தான்”
உடனே ஒப்பு கொண்டவள் சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
‘ம். எப்படி அழைப்பது?”
உரக்க அவள் யோசிப்பதை கண்ட அருள் அவசர அவசரமாக சொன்னான்.
“உன் ரூம் மேட்டை அழைப்பதை போலவேனும் பெயர் சொல்லி அழை”
அது அவளுக்கும் சரி என்றே பட்டது.
நிவிக்குமே அருளை கண்டால் தனக்கேன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்பது புரியவில்லை. ஒருவேளை தான் ஒரு பெண்ணியம் பேசும் பெண்ணியவாதியா? தனக்கு ஆண்கள் என்றாலே பிடிப்பதில்லையா?
அப்படி இல்லையே. தன்னுடைய ஹாஸ்டல் வாட்ச்மேன் முதல் யாரையுமே, குறிப்பாக எந்த ஆணையுமே தான் என்றுமே மரியாதை குறைவாக நடத்தியது இல்லையே. பின் ஏன் இவனை இப்படி எல்லாம் அவமானப்படுத்துகிறாள்?
ஹார்மோன் பிரச்சினையா? எந்த ஆணை கண்டாலும் தனக்குள் எத்தகைய ரசாயன மாற்றமும் ஏற்படுவதில்லையே. திருமணத்திற்கு என்று எத்தனை வரங்களின் போட்டோ அனுப்பி இருப்பார்கள் வீட்டிலிருந்து. யாரையுமே பிடித்தது இல்லையே.
அப்படியும் சொல்வதற்கு இல்லையே. தன்னுடன் பணியாற்றும் ராம் மனோகரை கண்டால் மனதிற்குள் எப்போதுமே சின்னதாக சில்லென்று ஒரு பனி பெய்யுமே. இத்தனைக்கும் அவன் சமீபத்தில் தான் வேலையில் சேர்ந்திருந்தான்.
ஒருவேளை ராம் மனோகர் உயரமாக சிவப்பாக கண்களில் எந்நேரமும் குறும்பும் பேச்சில் ஒரு தன்மையும் ஆங்கிலத்தில் நல்ல ஸ்டைலும் உயர்ந்த நடையுடை பாவனைகளும் கொண்டிருப்பதனால் அது தன்னுள் அத்தகைய சிலிர்ப்பை உண்டாக்குகிறதோ?
அல்லது அவனுடைய லண்டன் எம்பியே தன்னை அப்படி எண்ண வைக்கிறதோ?
தன்னை அறியாமல் அருளை ராமுடன் ஒப்பிட்டு பார்த்து, தான் மிகவும் ஏமாந்து விட்டோம் என்று சுயபச்சாதாபம் ஆகிறதா?
திருமணத்திற்கு பிறகும் இத்தகைய மனோபாவம் தவறு என்ற மன உறுத்தல், அதன் பின் தொடர்ச்சியாக அருள் மேல் கோபமாக வெளிப்படுகிறதோ?
அவளுக்கு அவளையே அடையாளம் காண முடியவில்லை. அவளுடைய பிரச்சினையின் ஆணிவேரை பிடிக்க முடியவில்லை.
இது எங்கே போய் முடிய போகிறதோ?
Enga poi mudiuthunu papom
💜💜💜💜
Nice😍