Skip to content
Home » அன்பென்ற மழையிலே-7

அன்பென்ற மழையிலே-7

எழிலரசியின் திருமணம் முடியவும் கிளம்புவதை போல், பிற்பகல் மூன்று மணிக்கு விமான டிக்கெட் எடுத்திருந்தான் அன்புக்கரசன். ஏனெனில் எழிலரசி புகுந்த வீட்டுக்கு கிளம்புவதை தன்னால் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. தேவையில்லாத கவலை வந்து தன்னை சூழ்ந்துக் கொள்ளும். இவ்விடத்தை விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்ப நினைத்தான்.

முதல் நாள் டிக்கெட் போட்டவுடன், இந்திராணியம்மாளிடமும் சொல்லியிருந்தான். “ஒரு பொழுது நிண்டுட்டு போவேன், கல்யாண பரபரப்புல உனக்கு ஒண்ணுமே செஞ்சு போடலை.” என வருந்த, 

“எல்லா நேரமும் உன் கையாலதானே சாப்பிட்டேன். போதும். வேலை கிடைக்குமா, மூணு நாள் விட்டுட்டு வந்ததே பெருசு” என்றான். 

“அது தான் பார்க்குறேனே, ரெண்டு பெரும் மாத்தி, மாத்தி போன்ல பேசிகிட்டு, கம்ப்யூட்டர் பொட்டியிலையும் ஏதோ செய்யிறீங்க. சரி, போயிட்டு காலகாலத்துல, இந்த புள்ளை வீட்டுல பேசி, முறையா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற வழியை பாரு. இப்படி கல்யாணம் ஆகாமல்  ஒண்ணா சுத்திகிட்டு திரியறது எல்லாம் நல்லா இல்லை” என்றார். 

“அம்மா, முதல் முதல்ல அவளை இங்க தான் கூட்டிட்டு வந்துருக்கேன். நீ என்னமோ ப்ரீத்தியை கூட்டிகிட்டு நான் ஊர் ஊரா சுத்துற மாதிரி பேசுற” கடிய, 

“இல்லை ராசா, அப்படி ஒரு பேச்சு வந்துடக்கூடாதேன்னு தான் சொன்னேன். எனக்கு என் மவனை பத்தி தெரியாதா” என்றவர், ப்ரீத்தியையும் கன்னம் வழித்து  கொஞ்சி, “சீக்கிரம் முறையா என் மருமவளா வந்து சேரு . எனக்கும் பேரபுள்ளையை கொஞ்சனுமுண்டு  ஆச இருக்காதா “ எனவும்,

எழிலரசி தொண்டையை செரும, “என்னாத்தா “ என்றார். 

“யாரோ, பாஷை தெரியாத புள்ளைகிட்ட என்னனு பேசி பழகுறது. அவனுக்கு பிடிச்சா சரி தான். எங்குட்டு வேணாலும் போயி கல்யாணம் கட்டிக்கிட்டும். என் அண்ணனுக்குப் பொங்கிப் போட்டுட்டு, சொச்ச காலத்தை ஓட்டிடுவேன். என் பேச்சை  கேட்காதவன் என் மகனே இல்லை, அது இதுண்டு சொன்னாங்க” என சமயம் பார்த்து கோர்த்து விட, அத்தையம்மா முறைத்தார். 

“ ஏத்தா, ஆத்தமாட்டாமல் பேசுற பேச்சை எல்லாம் இப்படியா போட்டுக் கொடுப்பாக. இம்புட்டு பாசக்காரப்புள்ளை மருமகளா வருமுண்டு தெரியாமல், ஒரு வார்த்தை சொல்லிடுச்சு. நீரடிச்சு நீர் விலகுமா?” அழகர் தங்கைக்கு சப்பை கட்ட 

“ தங்கச்சியை விட்டுக் கொடுப்பிங்கலாக்கும்” என்றாள் எழில்.

“ எதுக்கு விட்டுக் கொடுக்கனும். எங்கண்ணேன் எல்லாரையும் அரவணைச்சு போற மனஷரு, அது மாதிரி என் மவனும் இருக்கனும்னு நினைச்சேன். வேற்று மொழிக் கார பொண்ணை கட்டுனா அப்படியே போயிடுவாங்கிற பயம் தான்” என்றார். 

“ எங்கம்மா பேச்சை கேட்கலையினா தான மகன் இல்லைனு சொன்னாங்க. நான் தான் அவங்க சொல்ற மாதிரி சீக்கிரம் பீரிதியை கல்யாணம் பண்ணிக்குவேன் இல்லை. அப்ப அவங்க மகன் தானே “ அன்பு வம்பு பேச, 

“க்யா போல்தே ஹை யார், முஜே சமஜ்  நஹி ஆத்தி.” ப்ரீத்தி சொல்ல, அவளுக்கு புளி போட்டு விளக்கினர். 

இந்திராணியின் பயத்தை அறிந்தவள்,அவர் கையை பிடித்துக் கொண்டு “மம்மிஜி, நான் எங்கம்மாவை பார்த்த ஞாபகமே இல்லை. நீங்க எழிலுக்கு செய்யறது பார்க்கும் போது இப்படி ஒரு புவாஜி கூட நமக்கு இல்லையேன்னு பீலிங்கா இருக்கு. நீங்க எனக்கு மாமியாரா என் கூடவே வந்துடுங்க. நான்உங்களுக்கு சேவை பண்றேன். எனக்கு உங்க அன்பு மட்டும் எனக்கு போதும்” என அவள் ஹிந்தியில் சொல்ல, அன்பு மொழி பெயர்த்தான். 

அதிலும் கடைசியாக, 

“ எனக்கு உங்க அன்பு மட்டும் போதும்” என சின்னச் சிரிப்போடு அழுத்திச் சொல்ல, எழில் கோனை வலித்தாள்.

உருகி போன இந்திராணியம்மாள் ப்ரீத்தியிடம், “உனக்கு அம்மாளாவும், மாமியாளாவும் நானே இருப்பேன். கவலை படாதே” என சமாதானம் சொல்லி இருந்தார். 

இதோ அதை நினைத்த படி ப்ரீத்தியும், எழிலை கல்யாண கோலத்தில் பார்த்த நிறைவுடன் அன்புவும் மதுரை விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

முன்னதாக இன்று காலையில் மணமகளை மண்டபத்தில் இறக்கி விட்டு காரை பார்க் செய்த போது, எழிலை பற்றி தறி கெட்டு ஓடிய சிந்தனையோடு பதட்டமாக கோவிலுக்கு வந்த அன்புவை கெட்டி மேளச் சத்தமே வரவேற்றது. 

வாய் வழியாக “ உஃப்” என காற்றை வெளியிட்டவனுக்கு கலவையான உணர்வுகளே வெளிப்பட்டன.

எழிலரசி கணவனோடு மாலையும் கழுத்துமாக, புது மஞ்சள் தாலி கழுத்தில் தொங்க, தலை கவிழ்ந்து நின்றாள். கந்தவேலு மீசையை முறுக்கிக் கொண்டு மாப்பிள்ளை முறுக்கோடு நின்றான். எழிலின் அண்ணன்கள் நாகு, தாமு இருவரும் தந்தை தங்கையும்  கரை ஏறிவிட்டார் என நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஏனெனில் அவரவர் குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடாக இருக்க, தங்கையின் பொறுப்பை ஏற்க அவர்கள் நிதிநிலை இடம் கொடுக்கவில்லை. 

நாத்தியின் கல்யாண செலவு தங்களுக்கு இல்லாததனால் தான், மருமகள்கள் இந்த கல்யாணத்தில் இவ்வளவு ஈடுபாட்டோடு கலந்து கொண்டனர். 

கலையரசிக்கும் , தள்ளி போய்க் கொண்டே இருந்த தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்த திருப்தி. 

இரண்டு பக்க உறவினர்களும் மணமக்களை சூழ்ந்திருந்தனர்.

எழில்  கூடவே துணையாய் நின்ற ப்ரீத்தி, கூட்டம் நெருக்கவும், நாத்தனார் முடிச்சு நான் தான் போடுவேன் என போட்டிப் போட்ட கோகிலாவுக்கும், மற்றொருத்திக்கும் இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு ஒதுங்கி வெளியே வந்து விட்டாள். 

 தூண் அருகில் கையை கட்டிக் கொண்டு நின்ற 

அன்புவை தேடி வந்தவள், 

வியர்த்து விறுவிறுத்து நின்றவனை பார்த்து, “ ஹேய் ஏகே. க்யா ஹுவா” என தன் டம்பப்பையை திறந்து, டிஸ்யுவை எடுத்து அவன் முகத்தை துடைத்தாள். 

“ ஐ யம் ஓகே” என அவளை தடுக்க, “ என்னாச்சு” என்றாள்.

“ கார் ஓன் கிலோ மீட்டர் தாண்டி பார்க் பண்ணிட்டு, வேகமா வந்தேன். அது தான்” என்றான்.

“ ஓகே யார். இங்க ஏன் ஷாதியை ஜல்தி பண்றாங்க. எழிலை நிற்க கூட விடலை. டென்ஷனா ஷாதி பண்றாங்க” என குறைப் பட்டாள்.

“ இங்க வந்து மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்ன. இப்ப ஓகே வா” அவன் கேட்க, 

“ ம்மமிஜி பாப்பாஜி எல்லாரும் இங்க இருக்காங்களேன்னு கேட்டேன். இப்படின்னா வேண்டாம்.  பஞ்சாபி ஷாதி, படா மஜாவா இருக்கும். நல்லா என்ஜாய் பண்ணலாம்” என பேசிக் கொண்டு இருக்க, 

“ அடுத்து உங்க கல்யாணம் தானே. சரியான ஆளைத் தான் பிடிச்சிருக்க, நடத்து நடத்து” என்று விட்டுச் சென்றனர்.

பொண்ணு மாப்பிள்ளை அம்மனை வணங்கி, மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வேடிக்கை பாரத்த இவர்களுக்கு, ஆட்டை வெட்ட கொண்டு போகும் கசாப்பு கடக்காரன் போல், எழிலை அழைத்துச் சென்ற கந்த வேலு தோன்றினான்.

இந்திராணி , அழகர் கையைப் பிடித்துக் கொண்டு “ நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்ட சந்தோஷம் அண்ணேன்” என கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தார். 

“ ஆமாத்தா, மரகதம் இந்த புள்ளையை விட்டு போயிடுச்சேண்டு பயந்து நிண்டேன். நீ இருக்க தைரியத்தில தான்” என மேலும் பேச முடியாமல் உணர்ச்சி வயப்பட்டார்.

“ அத்தாச்சி இல்லாத குறையை தீர்க்க, எழிலுக்கு பிரசவம் முதற் கொண்டு, தாய்க்கு தாயா நிண்டு நான் பார்க்கிறேன். நீங்க விசனப் படாதீங்க” எனவும், “ ஆமத்தா” என துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு முன்னே நடந்தார். 

மணி பதினொன்றை தாண்டி இருக்க, “ அம்மா இப்படியே கிளம்புறோம்” அன்பு சொல்ல, 

“ப்ளேனு மதியானம் தான் சொன்னியே” என வினவினார். 

“ இரண்டு மணி நேரம் முன்னாடி அங்க இருக்கனும்” என்றான்.

“ சரி தான். சாப்பிட்டு மாமகிட்ட சொல்லிட்டு போ. ஆத்தா நீயும் வா” என இருவரையும் அழைத்துச் சென்றார். 

“ மறு வீட்டு பலகாரம், ஒரு பையில எடுத்து வச்சிருக்கேன். அதை மறக்காமல் எடுத்துட்டு போங்க” என ப்ரீத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவளும் இந்திராணி கையை பற்றியபடி, “ ஷாதி முடியவும். நீங்க என் கூட தான் வந்து இருக்கனும். இல்லைனா உங்க பையனை விட்டுட்டு நான் இங்க வந்துடுவேன்” எனவும், 

“ நல்லாத் தான் போ. அவன் கூட குடும்பம் நடத்து, அது போதும்” என்றபடி மண்டபத்துக்கு வந்திருந்தனர். 

“ அண்ணேன், அன்பு கிளம்புறானாம்” அழகரிடம் சொல்ல 

“ நல்லா இருக்கே. சாப்பாடு போட்டுருவோம். இரண்டு பேரும் எழிலு மாப்பிள்ளை யோட போட்டோ பிடிச்சிட்டு சாப்பிட்டு போகலாம் வாங்க” என இருவரையும் இழுத்துச் சென்றார். 

போகும் போதும், “ மாமா பணம் எதுவும் தேவைப் படுமா. சொல்லுங்க. என்னால ஆனதை செய்யிறேன்” என்றான்.

“ அட நீ ஒருததன், இப்பத் தான் தொழிலு ஆரம்பிச்சு இருக்க. அதில நல்லா வந்து, நிறைய காசு பணம் சம்பாரிச்சு, மிதமிஞ்சி இருக்கும் போது கொண்டுவா. மாமன் வாங்கிகிறேன்” என அவனை தோளோடு அணைத்துக் கொண்டவர், 

“ என் பெருமை சாமி நீ” என கண்கலங்க, “ எனக்கு சாமியே நீங்க தான் மாமா” என கட்டிக் கொண்டான். 

“ மாமன் மகளை கட்டிக்க முடியலையிண்டு, மாமனை கட்டிக்கிறியாக்கும்.” உறவினர் ஒருவர் கேலி செய்ய, 

“ வா சாமி, சாப்பிடுங்க இரண்டு பேரும். நேரமாகப் போகுது” என

பந்தியில் அமர வைத்து, சாப்பாடு கொண்டா, ஸ்வீட்டு வை என கவனித்தார். 

“ ஏப்பா கடைசி பொண்ணு கல்யாணம் கடலை உருண்டை போடலையா” என ஒருவர் கேட்க 

“ இன்னும் எங்க வீட்டில விசேஷம் இருக்குல்ல. அன்பு கல்யாணத்துக்கு போடுவோம்.” என்றார்.

சாப்பிட்டு, எழிலிடம் சொல்லிக் கொள்ளலாம் என மேடையை நோக்க, உறவினர் கூட்டம் அதிகமிருந்தது. தூரத்திலிருந்தே எழிலை அழைத்து கையை ஆட்டிவிட்டு, இருவரும் கிளம்புறோம் எனசெய்கை செய்ய, மேடையிலிருந்தே கண்ணீர் மல்க விடைக் கொடுத்தாள். 

அன்பு சட்டென திரும்பி மாமன் மகன்களிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான். 

இடைப்பட்ட நேரத்தில் ஓட்டுனர் அவனிடமிருந்து சாவியை வாங்கி காரை எடுத்து வந்திருந்தார். 

வீட்டுக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறினர். அன்புவுக்கு மனம் பாரமாகவே இருந்தது. அவன் முகத்தை பார்த்த ப்ரீத்தி, “க்யா ரே ஏகே. உனக்கு எழில் மேல இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொல்லிட்ட. குண்டலி சேரலை. அவளுக்கு ஷாதியும் ஆகிடுச்சு. ஔர் க்யா. சோடோ யார்” என தேற்ற, 

“ எனக்கு தெரியலை ப்ரியு. அவள் 

கண்ணீர் என்னை என்னமோ பண்ணுது. மாமாவும் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கார். ஏதோ நடக்கப் போகுதுன்னு என் உள்ளுணர்வு சொல்லுது. அந்த ஃபீலிங்கை  எனக்குத் தாங்கவே முடியலை. என்னை அறியாமல் ப்ரேக் ஆகி அழுதுடுவேனோன்னு பயம்மா இருக்கு” என அவன் கண்ணை இருக்க மூடித் திறக்க, கட்டிலில் அமர்ந்திருந்தவனை தோளோடு அணைத்துக் கொண்டு, 

“ ஸ்பீக் அவுட். உன் மனசுல இருக்கிறது எல்லாம் வெளியே கொட்டிடு. ஃபைவ் இயர்ஸா உன்னை பார்த்துட்டு இருக்கேன். இன்னைக்கு நீ ரொம்ப எமோஷனலா இருக்க.  எழில் ஸே ப்யார் கர்தா ஹை தோ, ஏன் இன்னொருதனுக்கு தூக்கி கொடுத்த?” என கேட்டவள் கண்களிலும் நீர் வடிந்தது.

 “ இது பாசம் தான். ஆனால் நீ நினைக்கிற மாதிரி லவ் இல்லை.” அவன் புரிய வைக்க முயற்சி செய்ய, 

“ யூ ஆர் கன்ஃப்யூசிங் ஏகே. எழிலுக்கு ஷாதி ஆகிடீச்சு. வேற யாராவது உன்னை இப்படி பார்த்தா, தப்பா நினைப்பாங்க. ஹம் சலேங்கே. ஏர் போர்ட்ல்  மே வெயிட் கரேங்கே. கெட் ரெடி. நானும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்” என அவனையும் கிளப்பி இதோ, விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். 

ஏர் போர்ட் அருகே நெருங்கிய நேரம், அன்புகரசனின் போன் சிணுங்கியது. அம்மாவாக இருக்கும் என எடுத்துப் பார்க்க, எழிலரசியின் போனிலிருந்து அழைப்பு. சட்டென எடுத்தவன், 

“ ஹலோ எழில். இஸ் இட் எவரிதிங்க் ஃபைன்” என்றான்.

“ குடியே முழுகிப் போச்சு அத்தான், அப்பா.. அப்பா” என அவள் தேம்பி அழ, அவனின் சகலமும் ஆட்டம் கண்டது. 

“ ஏய் மாமாக்கு என்னடி, சொல்லிட்டு அழுதுத் தொலை “ என ரௌத்ரமாக கத்த, ப்ரீத்தி, “ க்யா. ஏகே” என நடுங்கும் அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

எழிலரசியாலும் பேச முடியவில்லை. கலையரசி கணவன் வாங்கி விவரம் சொல்ல, 

“ இதோ வர்றேன். எந்த ஹாஸ்பிடல்” என் வினவ, 

“ சார்” என ட்ரைவர் வண்டியை நிறுத்தி இருந்தார். 

“ அண்ணா, இந்தா “ என போனை ப்ரீத்தியிடம் கொடுத்துவிட்டு அவன் முகத்தில் அடித்துக் கொண்டு அழ, ப்ரீத்தி போனை ட்ரைவரிடம் கொடுத்துவிட்டு, 

“ பாப்பாஜிக்கு ஒன்னும் ஆகாது ஏகே” என கண்ணீரோடு அவனை கட்டியணைத்து ஆறுதல் சொல்ல, ஓட்டுனர் வண்டியை போனில் சொன்ன மருத்துவமனையை நோக்கி செலுத்தியிருந்தார் .

4 thoughts on “அன்பென்ற மழையிலே-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *