Skip to content
Home » அன்பென்ற மழையிலே-8

அன்பென்ற மழையிலே-8

மழை-8

அன்புவும், ப்ரீத்தியும் கிளம்பி வந்த பிறகு திருமண மண்டபத்தில் நடந்த களேபரத்தில் அழகருக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்திருக்க,

சோழவந்தானில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை சுவாச கருவியின் உதவியோடு மதுரையைக் காக்கும் அரசியின் பெயரில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலென்சில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

துன்பம் வரும் வேளையில் , நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நினைவு வரும், எழிலரசிக்கு அது போல் தான் அன்புவின் நினைவு வந்தது. மூன்று மணிக்குத் தான் விமானம் என நினைவில் வர, அப்பாவின் நிலையைக் கண்டு, தங்களைப் போலவே அவருக்காகத் துடிக்கும் மற்றொரு ஜீவன் என, எழிலரசி அவனுக்கு போன் அடித்து விட்டாள்.

ஒரு ரிங் சென்றவுடனேயே எடுத்த அன்பு, “ஹலோ எழில். இஸ் இட் எவரிதிங்க் ஃபைன்” எனக் கேட்க, இங்கே எது தான் ஃபைன். ஒரு மணி நேரம் முன்பிருந்த எல்லாம் சுகமே என்ற நிலை முற்றிலும் உருக்குலைந்து மொத்தமாக அவள் குடியும், அதோடு சேர்த்து அப்பாவின் உயிரும் அல்லவா மூழ்கிக் கொண்டிருக்கிறது. கண் முன்னே அழகர், அவள் அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதைச் சகிக்க முடியாமல், அவர் இல்லை எனில் என்னாகும் என்ற மறைமுகமான கேள்வியே பெரும் அச்சத்தைத் தர,

“எல்லாம் குடி முழுகி போச்சு அத்தான் , அப்பா, அப்பா” என் திக்கியவளுக்கு , ஹார்ட் அட்டாக் எனச் சொல்லவும் வாய் வரவில்லை .

அப்பா, என்றவுடன் அவனுக்கு அடிவரை ஆட்டம் கண்டது. தாயினும் சிறந்த தாய்மாமன், ஏற்கனவே அவன் உள்ளுணர்வு எதோ விபரீதம் ஆகப் போகிறது என அலறிக் கொண்டிருக்க, அதை மெய்ப்பிப்பது போல் அவரை பேச்சில் இழுக்க, நொடி நேரம் வீண் போவதும் பொறுக்க முடியாத வேகம்,

“ஏய் மாமாக்கு என்னடி, சொல்லிட்டு அழுதுத் தொலை” என்றான் ரௌத்திரமாக.

“நெஞ்சை பிடிச்சிட்டு விழுந்துட்டாரு அத்தான், ஹார்ட் அட்டாக்.” எனக் கதறலோடு சொல்ல,

“என்னடி சொல்ற, எப்ப. இப்ப எப்படி இருக்காரு, எங்க இருக்கார். யார் கூட இருக்கீங்க” என்ற அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கேவலே பதிலாக வர, அவனுக்குப் பதட்டம் கூடியது. எழிலை ஒருமையில் திட்டினான். எதுவும் அவளுக்கு உரைக்கவில்லை. ஆம்புலன்ஸில், எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த கலையரசி கணவன், போனை வாங்கி, மதுரைக்கு விரைந்து கொண்டிருப்பதைச் சொன்னான்.

அவன் சொன்னதைத் திருப்பி சொல்லக் கூட முடியாமல், ப்ரீத்தியிடம் போனை கொடுத்து விட, மூன்று நாட்களாக அவர்கள் கூடவே இருந்த ஓட்டுநர்,

“அவங்க வரும் முன்னாடி நம்ம போயிடலாம் சார். ஐயாவுக்கு ஒன்னும் ஆகாது” எனச் சமாதானம் சொல்லி வண்டியை நேரே செலுத்தினார்.

அழகரைச் சுமந்து வரும் வாகனம் முன்னே விமான நிலையத்திலிருந்து ரிங் ரோடு வழியாக அன்புவும் ப்ரீத்தியும் அந்த மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.

மூன்று நாட்களாக, மகளைப் போல் பாசம் காட்டியவர், கிளம்பும் முன் கூட வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்து அனுப்பியவர், ஒரு மணி நேரம் முன் ஓடி, ஆடி வேலை செய்த மனிதனுக்கு மாரடைப்பு என்பதை ப்ரீத்தியாலும் நம்ப முடியவில்லை. பெற்றவர்களை இழந்த துயரம் அவளுக்கும் தெரியுமே. எழிலின் திருமணத்தன்றே இப்படி நடந்திருக்க வேண்டாம் என அவள் சிந்தை ஓடியது. அன்புவுக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர், இப்போதும் அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், கேட்டு இருந்தால், எழிலரசியைத் திருமணம் செய்து கொண்டு இருந்திருப்பான். ப்ரீத்தியைத் திரும்பியும் பார்த்திருக்க மாட்டான். அந்த அளவு அன்புவின் வாழ்வில் அவர் முக்கியமானவர், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். இந்த அரை மணி நேரம் கோல்டன் ஹவர்ஸ். அதைச் சமயோசிதமாக உபயோகிக்க வேண்டும்.

“ ஏகே, உங்க விட்டிலையே நீ தான் படிச்சவன்.” என அவனைத் தேற்ற ஆரம்பிக்க,

“ என் படிப்பே மாமா போட்ட பிச்சை தான். அப்பவே சொன்னேன் பார்த்தியா. என் இன்ட்யூஷன் பொய் சொல்லாது. நான் எங்கப்பாவை பார்த்ததில்ல ப்ரியு. ஆனால் அந்த குறை தெரியாமல் என் மாமா வளர்த்தார். திருவிழால தோள்ல் உட்கார வச்சு சாமியைக் காட்டுவார். அவர் வழியா தான் இந்த உலகத்தையே பார்த்தேன். மேரேஜ் டென்சன்ல ஹார்ட் அட்டாக்கா, ஓ காட். ஆம்புலன்ஸ்ல வந்துட்டு இருக்கோம்னு அரசி பேசுறா. எனக்கு ஒன்னுமே புரியலை. அம்மா எங்கேனு தெரியலையே” அன்பு புலம்பிக் கொண்டே வர,

“டஃப் சிசுவேஷன்ல நீ தான் தைரியமா நின்னு எல்லாத்தையும் பார்க்கனும். இந்த ஹாஸ்பிடல்ல தெரிஞ்சவங்க யாரு இருக்கா. அதை முதல்ல யோசி” என அவனைத் தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தி நிதானத்துக்குக் கொண்டு வந்தாள்.

“ ஸ்கூல்ல படிச்சவங்க “ என யோசித்து, “ நரேன், மெடிசன் படிச்சான்” என போனடிக்க,

“ நான் சென்னையில இருக்கேன். பிரண்டு மதுரையில் இருக்கார். நானும் பேசுறேன். நீ அவரை கான்ட்டேக்ட் பண்ணிக்கோ. ரொம்ப பேனிக் ஆகாத. கையை காலை ஆட்டிட்டு இருந்தாலே போதும், காப்பாத்திடுவோம். அங்க எல்லா வசதியும் இருக்கு” என மருத்துவர் நண்பன் நம்பிக்கை தந்தான்.

அன்புவும், ப்ரீத்தியும் மருத்துவமனையை அடைந்து, அந்த மருத்துவரை நேரில் சந்தித்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, ஸ்ட்ரெக்சரோடு ரெடியாக வாசலில் காத்திருந்தான். ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு அழகரைச் சுமந்து வர, சிறு பையனைப் போல் கண்ணீர் விட்டுக் கதறினான்.

கலையரசி அவள் கணவன், எழிலரசி மட்டுமே ஆம்பலன்சில் வர, நாகு, தாமுவை காணவில்லை. அதைப் பற்றிய சிந்தனையும் அவனுக்கு இல்லை.

மகள்கள் இருவரும் மருமகனும் இறங்கி வழி விட்டு நிற்க, மருத்துவமனை ஊழியர்கள் அழகரை ஸ்ட்ரச்சரோடு தூக்கிக் கொண்டு, எமர்ஜென்ஸி வார்டை நோக்கி ஓடினர். மகள்கள் இருவரும், அன்புவும் அவர் பின்னே ஓட, மருத்துவமனை பார்மாலிட்டிகளை பார்க்க, கலையரசி கணவன் ப்ரீத்தியோடு நின்றான்.

“ பணம் எவ்வளவு கட்டனும்” என அவன் பில்லை பார்க்க,

“ யூ டோன்ட் ஒரி பையா. ஏகே கார்டு இருக்கு. பே பண்ணிடலாம்” என ப்ரீத்தி, அந்த மருத்துவரோடு பேசி ஆவணங்களைப் பூர்த்தி செய்து, முன்பணத்தைக் கட்டினாள்.

அழகரின் ஸ்ட்ரெச்சர் கூடவே அன்பு ஓட ,அவன் பின்னோடு எழிலும் ஓட, கலையரசி சற்றே பின்தங்கி வந்தாள்.

“மாமா, மாமா” அன்பு குரல் கொடுக்க, சிரமப்பட்டு முழித்தவர்,

“ அன்பு, என் மகளைப் பார்த்துக்கப்பா” என அவன் கையை பிடிக்க,

“நான் பார்த்துக்கறேன் மாமா, உங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்றான்.

வெற்று புன்னகை சிந்தியவர், மகளைப் பார்த்து கண்ணீர் விட, “ எனக்கு ஒன்னும் இல்லைப்பா. நடந்ததில உங்க தப்பு எதுவுமே இல்லை. நான் நல்லா இருப்பேன். நீங்க நல்ல படியா பொழைச்சு வாங்க. உங்களைத் தவிர இந்த உலகத்தில எனக்குன்னு யாரும் இல்லை. நமக்கு வேற ஒருத்தரும் வேண்டாம். எனக்காக எந்திருச்சு வந்துருங்கப்பா” என அவர் மனதில் பதிய வைக்க முயற்சி செய்ய, அவளுக்கும் அதிர்ச்சி என்றே நினைத்திருந்தான்.

“ உணர்ச்சி வசப்பட வைக்காதம்மா” என மருத்துவமனை ஊழியர்கள் அழகரை உள்ளே அழைத்துச் செல்ல, மருத்துவர், “வி வில் டேக் கேர். தைரியமா இருங்க”என உள்ளே சென்றார்.

அப்போது தான் அன்பு அவளைப் பார்த்தான். மணக்கோலம் கலைந்து அலங்கோலமாக நின்றாள்.

“அரசி, எப்படி இப்படி ஆச்சு” கண்ணீரோடு கேட்க,

“ எல்லாம் அந்த ராட்சனலா வந்தது. பணப் பிசாசு, அப்பாவை சாச்சுபுட்டான் அத்தான்” என மடிந்து அப்படியே கீழே விழப் போக,

“ அரசி” என்றபடி அவளைத் தூக்கினான்.

“ எல்லாம் என்னால வந்தது. எங்கப்பாவுக்கு மகளா, நான் பிறக்காமலே இருந்திருக்கலாம். அவருக்கு எமனா வந்த இந்த கல்யாணத்தை நான் கேட்டேனா” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழ,

“ என்னடி சொல்ற, எழிலரசி” என அவளை தனக்கு நேராக நிறுத்தி கோபத்துடன் கேட்க, நடந்ததைச் சொல்ல, அதன் பிறகே அவளை ஊன்றி கவனித்து, தலையில் அடித்துக் கொண்டான்.

ஒருபுறம் கந்தவேலை உயிரோடு புதைக்கும் வெறியும், தன்னோடு வளர்ந்த மாமன் மகள் நின்ற கையறு நிலையும் அவனை உலுக்கியது. அவள் கதறல் அவன் நெஞ்சை அடைக்க, அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்.

“ அந்த பேப்பயலுக்கு என் கையாளத் தான் சாவு” என உடல் முறுக்கேற, தான் படித்த படிப்பும், நாகரீகமும் மறந்து , ஊர் பக்க வசைச் சொற்களை உதிர்த்து, அருகிலிருந்த சுவற்றில் கையை குத்தி தன் ஆத்திரத்தைக் காட்ட,

“ ஏகே” என வந்து ப்ரீத்தி அவன் கையை பற்றினாள். அவனின் இடது கையை அணைப்பிலிருந்த எழில் அவன் மார்பிலேயே மயங்கி இருந்தாள்.

ப்ரீத்தி தான் அவளையும் கவனித்து, “ ஏகே அவளைப் பிடி. தூக்கிட்டு வா” என முன்னே சென்றாள்.

“ இவளுக்கு என்ன ஆச்சு” அழுகையோடு கேட்ட கலையரசியை, அவள் கணவனோடு ஐசியு அறையின் முன் நிறுத்தி விட்டு, எழிலரசியை மற்றொரு மெடிக்கல் அறையில் தூக்கிச் சென்று படுக்க வைத்தனர்.

அவள் சேலையைச் சீர் படுத்தி விட்ட ப்ரீத்தி, “ என்னாச்சு” என வினவ,

“எல்லாம் அந்த மாப்பிள்ளை நாயால வந்தது. டௌரி பிரச்சினை .அதுனால தான் மாமாக்கு அட்டாக் வந்திருக்கு” என ரௌத்திரமானான்.

“ வாட், ரப்பிஷ். ” என்ற ப்ரீத்திக்கு எழிலின் நிலை, பெரிய தாக்கத்தைத் தந்தது. “ தூ, பாப்பாஜீக்கு பாஸ் ஜாவ். நான் எழிலை பார்த்துக்குறேன். இட் மஸ் பீ எ ஷாக்” என்றாள்.

எழிலைப் பரிசோதித்த மருத்துவரும் அதையே சொல்ல, ப்ரீத்தியைத் துணைக்கு நிற்கச் சொல்லி விட்டு, அன்புவை அறையை விட்டு வெளியேற்றினர்.

“ பார்த்துக்குங்க. எங்க மாமாவை பார்த்திட்டு வந்துடுறேன்” என அழகர் இருக்குமிடம் விரைந்தான்.

சிசியூ விலிருந்து சரியாக வெளியே வந்த மருத்துவர், “ மிஸ்டர் அழகருக்கு ஹார்ட்ல ப்ளாக் இருக்கு, செடேசன் கொடுத்துருக்கோம். உடனே ஆன்ஜியோ பண்ணுனும். பார்மாலிடீஸ் முடிச்சிடுங்க” என்று சொல்ல,

“ பயப்பட ஒன்னும் இல்லையே.” பயத்தோடே கேட்டான்.

“ ஹோப் ஃபார் த பெஸ்ட். வயசானவர் ட்ரீட்மெண்டை தாங்கணும். நல்லதாவே நினைப்போம்.” என உள்ளே செல்ல, அன்பு தலையைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

“ என்ன அன்பு இப்படி சொல்லிட்டு போறாரு.” என்ற கலை,

“ எம்புட்டு செலவாகும். அண்ணனை வரச் சொல்றேன்” என்றாள்.

“ செலவைப் பத்தி கவலைப் பட வேண்டாம். மாமா நல்லபடியா திரும்பி வரனும்னு சாமியை கும்பிட்டுக்குவோம்” என்றவன், மருத்துவ மணை ஊழியரோடு அறுவைசிகிச்சைக்காகக் கையெழுத்து இடச் சென்றான்.

“ அட்வான்ஸ் கட்டிடுங்க சார்” எனச் சாதாரணமாக ஒரு தொகையைச் சொல்ல, கலையரசிக்கு மயக்கம் போடாத குறை.

அன்பு, “ க்ரடிட் கார்டு அக்சப்டட் தானே” எனக் கேட்டு பணத்தைச் செலுத்திக் கொண்டு இருக்க, “ஐயா, சாமி, என்னை பெத்த ராசா, மகராசா உங்களுக்கு இந்த நிலைமையா” என ஒப்பாரி வைத்தபடி, நாகு, அவன் மனைவியோடு வந்த இந்திராணி மகனைப் பார்க்கவும், அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.

அவர் சொல்ல, சொல்ல அழகர் பெத்த மக்கள் அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்.

“ மாமா, எங்கைய்யா ராசா” எனக் கேட்க,

“ ஆப்பரேஷன் தியேட்டர்ல. ஒப்பாரி வைக்காம. மாமா நல்லபடியா வரனும்னு சாமியைக் கும்பிடுமா” மகன் கடுமையாகச் சொல்ல,

அவன் சொல்லே வேத வாக்காக , “ மாரியாத்தா, காளியாத்தா, மீனாட்சி ஆத்தா. என் அண்ணன் உசுரை காப்பாத்தி கொடு “ என வேண்ட ஆரம்பித்தார்.

ஆப்பரேசன் நடக்கும் வரை, எல்லோரும் வேண்டுதலோடும், வேதனையோடும் நின்றனர். எழிலரசி, மயக்கம் தெளிந்து எழிலின் கைப்பிடியில் சோர்வாக நடந்து வர, உடன் பிறந்தவர்களுக்கு அவளின் நிலையைப் பார்க்கவும், தான் ஆடத்தாலும் சதையாடும் என்பார்கள்.

“சின்ன குட்டியை அப்பா, உருகி உருகி வளர்த்தார், இவை கல்யாணத்தை முடுச்சிட்டா நிம்மதியா கண்ணை மூடுவேண்டு சொல்லுவாரு. நிம்மதியும் போச்சு, கண்ணையும் மூடிடுவாரு போல இருக்கே” எனக் கலையரசி கண்ணீர் விட,

காரிடாரில் சேரில் அமர்ந்திருந்த இந்திராணி “ வாயை கழுவுடி, என் அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது. கல்லு குண்டு கணக்கா என் கண்ணை நிறைக்க, திரும்பி வரும்” என்றார்.

“உங்க வாக்கு பொன்னாகட்டும் அத்தை. எனக்கு அப்பா மட்டும் போதும்.” என எழிலரசி ஓடி வந்து அவர் மடியில் படுத்து அழ,

“நீ எங்கேயும் போக வேண்டாம் ஆத்தா. இனி ஒரு பயலை நம்பி உன்னை அனுப்ப மாட்டேன். கன்னி கழியாமண்டாலும் எங்களோடவே இரு. அந்த எடுபட்ட பய வீட்டுக்குப் போக வேண்டாம். அவனெல்லாம் நல்லா இருப்பானா.

அய்யனார் கணக்கா, அசையாமல் நிற்கிற என் அண்ணையே சாச்சு புட்டானே. அவன் கொல்லையில் போக. “ என ஆரம்பித்து கந்தவேலுவுக்கு சாபம் கொடுக்க, அவனை அடித்து நொறுக்கும் ஆத்திரம் வந்தது அன்புக்கரசனுக்கு.

அழகருக்கு மாரடைப்பு வரும் அளவிற்குக் கல்யாண வீட்டில் நடந்தது என்ன. அழகுக்கோலம் கொண்டிருந்த எழில் அலங்கோலமாக இருக்கக் காரணம் என்ன?

மழை வரும்…

4 thoughts on “அன்பென்ற மழையிலே-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *