மழை-9
அன்று முற்பகலில் எழிலரசியும், கந்தவேலும் மணமக்களாக மேடையில் நின்று நன்பர்கள், உறவினர் என ஒவ்வொரு குழுவினருடனும் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர். நீண்ட வரிசை காத்திருந்தது, அதனாலேயே அன்புவும், ப்ரீத்தியும் தூரத்திலிருந்தே சொல்லிக் கொண்டு கிளம்பினர்.
எழிலரசிக்கு எங்கோ சிக்கிக் கொண்டது போல் ஓர் உணர்வு. அருகில் இருப்பவன் தாலிக் கட்டும் போது மட்டுமே அவளைத் தொட்டான். மற்றபடி, புது மணமகனாக அவளைப் பார்ப்பதோ, கையைத் தொடுவது, தோளை உரசுவது என எந்த ஆர்வமும் இல்லை. ஆட்கள் வருவோர், போவோரை கவனித்து அவர்கள் செய்யும் மொய்யை கணக்கு செய்து கொண்டிருந்தான்.
ஊர் பக்க பழக்கமாக, வெற்றிலை பாக்கில் பணம் வைத்து ஆசிர்வாதம் செய்த பணமும் அவன் பாக்கெட்டுக்கு தான் சென்று கொண்டிருந்தது.
எழிலுக்கு கொடுத்த பணத்தை யாரிடம் கொடுப்பது என அவள் யோசித்த போது, “இங்கே கொண்டா” என வாங்கிக் கொண்டான்.
அதை கவனித்த கோகிலா, கேலி பேசுவது போல் வந்து நின்று, அதன் பின் மணப்பெண்ணுக்கு வந்த பணத்தை பிடுங்காத குறையாக எழிலிடமிருந்து வாங்கிக் கொண்டாள். அக்கா, தம்பியின் இந்த அற்ப தனத்தில் அசூசை அடைந்திருந்தவளுக்கு, அன்பு அருகில் கூட வராமல் கிளம்பியது பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது.
அவன் பார்த்த பொழுது, ‘போறேல்ல போ. அவ்வளவு தான். இனி இது தான் என் தலையெழுத்து’ என்ற பார்வையை பார்த்தாள்.
ஜாதகம், ஜோசியம் அவளால் அவன் உயிருக்கு ஆபத்து என்ற பின் எப்படி தன் மனதில் உள்ளதைச் சொல்வாள். பள்ளி பருவத்திலேயே மாமன் மகள் என சொல்லிக் கொள்ள பிடிக்காதவன், அவனுக்கு சமமாக ஈடு கொடுக்க, மேல் தட்டு ஆங்கிலத்தை முயன்று கற்றுக் கொண்டவள். என்ன பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியாது.
பறுந்து தான் ஆக முடியாது, எனில் வீட்டை சுற்றும் பெட்டையாகக் கூட இருக்கமுடியாமல், பெண்பிள்ளை என்பதற்காகவே அடுத்தவனுக்கு தூக்கி கொடுக்கின்றனர்.
அப்பாவின் வயதையும், வசதியையும், மன நிம்மதியையும் யோசித்தே இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாள்.எத்தனை கல்யாண தரகரகள், ஜோசியக்காரர்கள், பரிகாரம், பெண்பார்க்கும் படலம் , அடுத்தவர் பேச்சு என ஓடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்தவே , அவள் ஜாதகத்துக்கு பொருந்திய வரனாக வந்து வாய்த்த கந்தவேலுவுக்கு கழுத்தை நீட்டிவிட்டாள்.
தாலிக்கட்டி இரண்டு மணி நேரம் ஆகியும் அவளை திரும்பியும் பார்க்காத கணவனை நினைத்து, இப்போது பயம் வந்திருந்தது. அன்று அன்பு, ப்ரீத்தியிடம் கந்தவேலு சொன்னதாக சொன்ன வார்த்தையை கேட்டதிலிருந்தே கொஞ்சம் பயம் தான்.
சக தோழிகள், ஆசிரியைகள் தனியாக பேசும் போது, “என்ன படிச்சு என்ன பண்ண. கடைசியில பொம்பளை ஜென்மம், கட்டுனவன் ஆசைக்கு தான் ஆட வேண்டியது இருக்கு. நாள் பூரா நிக்கிறது, பசங்களோட மல்லுக் கட்டுறது, முடியலைனாலும் கேட்க மாட்டேங்குறான்’ என புலம்புவதை கேட்கும் போது,
“ ஏம்பா, புதுசா கல்யாணம் ஆனவங்க ஆசை இருக்காதா. அண்ணன் உன் மேல லவ்வா தான் இருக்கார். எதையவாது சொல்லாதே” என்பாள்.
“ உனக்கு கல்யாணம் ஆகும்ல. அப்புறம் வந்து பேசு கேட்டுக்குறேன்” என்பாள், அந்த ஆசிரியை.
அதே ஆசிரியை வந்து, வாழ்த்தி விட்டு க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டு போனதில் அவள் பேச்சு நினைவில் வந்தது. கந்தவேலு தான் மாப்பிள்ளை எனும் போது அவனை பற்றிய அனுமானங்களும் ஓடி இருக்க, அருகிருந்தவனை அச்சத்தோடு பார்க்க ஆரம்பித்தாள்.
மணமேடையில் நிற்கும் போதே பந்தாவாக நாலு மோதிரம், இரண்டு படா செயின் போட்ட ஒரு ஆள் வந்தான். அவனுக்கு பயங்கர மாரியாதை கொடுத்து, அவளுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான்.
“ உங்க மனைவி வந்த நேரம் உங்கள் வாழ்க்கையில் அதிஷ்டம் கொட்டப் போகுது. கோடீஸ்வரன் ஆகப் போறீங்க வேலு” எனவும், ஈ யென காது வரை சிரித்து வைத்தவன், “ சாப்பிட்டு உட்காருங்க, கையோடு வாங்கிட்டு போயிடுவீங்க” என அவனை உபசரித்தான்.
கோகிலா தம்பியிடம் வந்து “பணம் வந்துடுச்சா. அன்பு கிளம்பிட்டாப்ல.” என ரகசியம் பேச, “ அவன் கிளம்பித் தொலைஞ்சா சரி தான். உன் மாமனார் பணத்தை அப்பாகிட்ட கொடுத்துட்டாராம். அவரை வரச் சொல்லு. இவர்கிட்ட தான் அந்த பிஸ்னஸ் பண்ணப் போறோம்” என தங்ஙச்சங்கிலி பார்ட்டியைக் காட்டிச் சொல்லி அனுப்பி விட்டான்.
கோகிலா, தனது சித்தப்பா, கந்தவேலுவின் தகப்பனிடம் சென்று, தம்பி சொன்னதைச் சொல்ல,
“ அவன் கிடக்குறான். இப்ப என்ன அவசரம். நல்ல நேரத்தில மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போகனும். தொழில் எல்லாம் ஆற அமர பார்த்துக்கலாம்னு சொல்லு” என்றார்.
“ சித்தப்பா, நீங்க பேசுறதை பார்த்தா சந்தேகமா இருக்கே. என் மாமனார் பணம் குடுத்துட்டார்ல” என வினையமாக கேட்டாள்.
“ கொடுத்தார் ஆத்தா, கொஞ்சம் கொடுத்தாரு. மீதியை ஒரு வாரத்தில புரட்டி தறோம்னு சொல்லியிருக்கார். முன்னாடியே சொன்னா, கல்யாணத்தை நிறுத்திபுடுவானேண்டு தான் நான் சொல்லலை” என்றாள்.
“ அதுகுண்டு பணத்தை கொடுக்காததை எதுக்கு மறைச்சிங்க” என்றவள், அவரை வாயை பிடிங்கி விசயத்தை தெரிந்துக் கொண்டவள்,
“ ஒரு லட்சம் தான் தந்தாரா. மீதி, இவர் தலையை அடமானம் வச்சா எவன் பணம் தருவான். எல்லாம் எம்புருஷன் தலையில விழுந்திடப் போகுது. இப்பவே கேட்டிங்கண்டா, இவரு கேட்கலைனாலும், இந்திராணி சின்னம்மா, மகன்கிட்ட வாங்கிக் கொடுக்கும். அவனை போகவிட்டா, என்னத்தை கிடைக்கும் “ என்றாள்.
மேடையில் கூட்டம் குறையவுமே கீழே இறங்கி விட்ட கந்தவேலு தங்கச் சங்கிலிக்காரனோடு தான் பேசிக் கொண்டு இருந்தான். எழிலை, கலை மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தாள்.
கோகிலா, தனது சித்தப்பா தடுத்தும் கேட்காமல், அன்புக்கரசன் கிளம்பும் முன், தூண்டி விட்டு, அன்புவிடமிருந்து பணத்தை கரந்துவிட வேண்டும் என நினைத்தாள். இந்த முதலீட்டில் வரும் பணத்தில் அக்காவுக்கும் பங்கு தருவாதாக வேலு சொல்லி இருந்தான். பிற்பாடு அப்படி நடக்கும் எனத் தெரிந்திருந்தால் தம்பியை தூண்டி விட்டு இருக்க மாட்டாளோ என்னவோ.
“ தெரியும். எங்கப்பன் இப்படி தான், ஏதாவது செய்வாண்டு தெரியும். இவளை அந்த அன்பு கூட்டிட்டு வர்றதை பார்த்துப் புட்டு, பயந்து போய், பணத்தை எண்ணிப் பார்க்காமல் அவசரமா தாலிக் கட்டப் போயிட்டேன். ச்சை” என்றான்.
“ இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. நம்ம மாமனாரை சபையில வச்சு கேளு . அன்பு கிளம்பும் முன்னாடி வாங்கிடலாம்” என சித்தப்பாவிடம் சொன்னனதையே சொன்னாள்.
“ அவன் குடுக்குறான், குடுக்கலை. அது என் பிரச்சினை இல்லை. இந்த பணத்துக்காக இவர் மகளுக்கு ஏத்த மாதிரி என் ஜாதகத்தை மாத்தி நாடகமல்லாம் ஆடியிருக்கேன். விடுவேனா” என மீசையை முறுக்கியவன்,
அக்காள் கலையரசியோடு வந்த எழிலரசியை பார்த்து கோபமாக “உன அப்பன் எங்கடி” என்றான்.
முதல் முறை, கணவனானவன் தன்னிடம் பேசும் வாக்கியமே இவ்வளவு மோசமானதாக இருக்க, அதிர்ந்தவள்
“ஏன் இப்படி கேட்குறீங்க” என கலவரமாகவே கேட்டாள்.
“ ம்ம்ம், அந்தாளை கொஞ்சறதுக்கு. நம்ப வச்சு ஏமாத்திட்டான் உன் அப்பன். நம்பிக்கை துரோகி” என்றான்.
“ இந்த மாதிரி வார்த்தை எல்லாம் வேண்டாம். அவர் உங்க மாமனார்” என நினைவுப் படுத்தினாள்.
“ஆமாம், மாம நாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தாளை நாறடிக்கப் போறேன் பாரு” என அழகரைத் தேட, பயந்து போன கலையரசி,
“ மதினி, உன் தம்பி என்ன இப்படி பேசுறாரு” என கோகிலாவைக் கேட்டாள்.
“ மாமா, சொன்னபடி பணம் தரலையிண்டு கேட்குறான்” அவளும் சேர்ந்து குறை சொல்ல,
கந்தவேலுவின் தகப்பன், “இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். அட்ங்குடா” என ஓடி வந்தார்.
“ உன்னைய அடக்கம் பண்ணிட்டு தான் அடுத்த சோலி” என தகப்பனையே எடுத்தெறிந்து பேச, எழில் அதிர்ச்சியில் நின்றாள்.
“ இவரு எதுக்கு இப்படி தகறாரு பண்றாரு” என கலையரசி, கணவன், அண்ணன்களை கூப்பிட ஓடினாள்.
மகனை வழியனுப்பி வைத்துவிட்டு மண்டபத்துக்குள் வந்த இந்திராணி, “ என்ன சாமி, என்ன பிரச்சினை “ என அதிர்ந்து நின்ற எழிலிடம் கேட்டார்.
கந்தவேலுவின் தாயும் ஒடி வந்திருந்தாள்,
“வேலு இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்யா. மொதல்ல மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்” என்றார்.
“ அந்தாளு சொன்னபடி காசை எண்ணி வைக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்” என வெறி பிடிததவனாக கத்த ஆரம்பிக்க எல்லாருமே கூடி விட்டனர்
கோகிலா நல்ல பிள்ளை போல் பந்தி பரிமாறும் இடத்தில் நின்ற அழகரிடம், “ மாமா, வரதட்சனை பணம் ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொன்னீங்க. இன்னும் குடுக்கலையா” எனவும
*கேட்ட இடத்தில கொஞ்சம் லேட்டாகுது ஆத்தா. சம்பந்திகிட்ட சொல்லிட்டேனே” என்றார்.
“ தம்பி, எழிலு பேர்ல தொழில் முதலீடு பண்ண, இன்னைக்கே தர்றதா சொல்லி வச்சிருந்தானாம். இல்லைங்கவும் கோவப்படுறான். அன்பு தம்பி கிட்டையாவது கை மாத்தா வாங்கிக் கொடுங்க. எழிலு புகுந்த வீட்டுக்கு போகும் முன்னாடியே பிரச்சினை ஆரம்பிக்க வேண்டாம்” என்றாள்.
மகளுக்கு பிரச்சினை வரும் எனவும்,”என்னாத்தா சொல்ற” என பதட்டத்தோடு கூடத்துக்கு ஓடினார்.
அதற்குள் அழகரின் மூத்த மகன் நாகு, அவர்கள் தாய்மாமன் வீடு என எல்லாரும் கூடி விட்டனர்.
“ இந்த புள்ளைக்கு தாலி தோஷம் இருக்குண்டு தானே, தங்கச்சி மகனுக்கு கட்டிக் கொடுக்காமல், எனக்கு கட்டிக் கொடுத்தார் உங்கப்பா. உயிரை பணையம் வச்சு இவ கழுத்தில தாலி கட்டுனது சும்மாவா. அதுக்கு ஒரு விலை மதிப்பு வேண்டாம்” அவன் ஞாயம் பேச, எழில் குறுகிப் போனாள்.
“ ஐயா சாமி என் மவன் ஜாதகம் பொருந்தலை ஒத்துக்குறேன். ஆனால் உன் ஜாதகம் பொருந்துனதுனால தான் ஐயா எங்க பொண்ணை உனக்கு கொடுக்குறோம். என் மருமகளை கல்யாணம் கட்டினா, நீ மகராசனா நூறு ஆயிசுக்கு நல்லா இருப்ப ” என்றார் இந்திராணி
“ இந்த சால்ஜாப்பு எல்லாம் வேண்டாம். உசுருக்கு பயந்த உன் மவனை விட நான் தகிரியமானவன். எனக்கு குடுத்த வாக்கை காப்பாத்தனுமா வேண்டாமா” என பஞ்சாயத்து வைத்தான்.
“ அடேய், ஒரு பொண்ணு பாவத்தை கொட்டிக்காதே. நம்ம வீட்டில வந்து வாழப் போற பொண்ணு. அது மனசை நோகடிக்காதே” என்றார் அவன் தகப்பன்.
“ ஆமாம் சாமி, மகாலெட்சுமியாட்டம் மருமகள்” அவன் தாய், எழிலின் கையை பற்றிக் கொண்டு மகனை சமாதானம் செய்தார்.
“அப்பா எவ்வளவு கொடுத்தாரு இன்னும் எவ்வளவு பாக்கி” என நாகு விசாரித்தான்.
அதற்குள் அங்கே வந்திருந்த அழகர், “ மாப்பிள்ளை பணம் கிடைச்சிடும் ஐயா. வழக்கமா நமக்கு கொடுக்கிறவர் தான்.” என சமாதானம் சொல்ல,
“ ம்ம், இப்ப வந்து சொல்லும். உன் மவ கழுத்தில தாலி கட்டும் முன்னையே அதை சொல்ல வேண்டியது தானே. வாக்கு சுத்தம் வேணும்யா. நாணயம் இல்லாத ஆளு. “ என்றான்
“அப்படி இல்ல ஐயா, உங்க அப்பா, சம்பந்திகிட்ட சொல்லிட்டேன். அவரு தான் சரின்னு சொன்னாரு” எனவும்,
“ யோவ், உன் மகளோட நான் குடும்பம் நடத்து போறனா, எங்கப்பனா” எனவும் எழில் காதை மூடிக் கொள்ள, தக்ப்பன் தலையில் அடித்துக் கொள்ள அவன் அம்மா அவனை அறைந்திருந்தார்.
அழகரின் மச்சினனிலிருந்து ஆளாளுக்கு, “ டேய், நீ பேசுறது சரியில்லை” என கண்டித்தனர்
“ தாமு, “ டேய், என்ன பேசுறமுண்டு புரிஞ்சு பேசு.” என அவன் சட்டையை பற்றி இருந்தான்.
டேய்” என நாகு வேகமாக, அவன் அம்மா அடித்ததுக்கு அடுத்து மற்றொரு அறை விட்டிருந்தான்.
அம்மாவை எதிர்க்க முடியாதவன், நாகுவை “ சொன்ன வாக்கை காப்பாத்த முடியலை. உங்களுக்கு என்னடா ரோசம்” என தன் சட்டையை பிடித்திருந்த தாமுவை உதறி விட்டு, நாகுவிடம் பாய்ந்து இருந்தான்.
சூழல் ரசாபாசமாவை உணர்ந்த கலையரசி கணவன், “மாப்பிள்ளை, இந்த சல்லிப்பய கிட்ட நீ போகாத” என நடுவில் வந்து விலக்கி விட்டு பெரிய மச்சினனை பிடித்து இழுத்தான்.
“ யார்டா சல்லிப் பய, பத்து லட்சம் தரேன்னு சொல்லிட்டடு ஏமாத்துன, உன் மாமன் தான் சல்லிப் பய” எனவும்
அழகர், நெஞ்சை பிடித்துக் கொண்டு, “ அப்படி எல்லாம் பேசாதீங்க சாமி. பணம் தானே நான் கொடுத்துடுறேன்” என கைக் கூப்பிக் கொண்டு கந்தவேலு காலில் விழப் போக,
“ அப்பா” என வந்து எழில் வேகமாக அவரைத் தடுத்தாள்.
“ விடு தாயி. நான் ஏற்பாடு பண்ண கல்யாணம். நான் தான் பேசி சரி பண்ணனும்” என கந்த வேலை நோக்கி முன்னேற,
அவரோடே சென்ற, எழில்,
“ சொன்னா கேளுங்கப்பா. வேணாம்பா. இந்தாள் கூட போனலும் என்னால நிம்மதியா வாழ முடியாதுப்பா. “ எனவும், அவன் முறைத்தான்.
“ அப்படி எல்லாம் சொல்லாதம்மா. இதெல்லாம் பேசி சரி பண்ற விசயம் தான்” என்றார்.
“ எதுப்பா பேசி சரி பண்ற விசயம், வரதட்சனை பணம் தரலையினு, போட்ட மாலை உதிரும் முன்ன, தாலி கட்டினவளை அப்பனுக்கு கட்டியிருக்கானு கேட்டானே. இவனையா பேசி சரி கட்ட முடியும். இப்படி ஒருத்தனை கட்டி வைங்கன்னு நான் கேட்டேனா. காலத்துக்கும் உங்க மகளாவே இருந்துட்டு போயிருப்பேனே” என அவள் க்ண்ணீர் விட,
“ ஆத்தா, வாயைக் கட்டு. அவன் தான் பேசத் தெரியாமல் பேசுறான்னா, படிச்சு புள்ளை நீயும் வாயை விடக் கூடாது” என தாய்மாமன் நடுவில் வந்தார்.
“ ஆத்தி இம்புட்டு பேச்சு வருமுண்டு தெரிஞ்சா, பரிகாரத்தை பண்ணிபுட்டு என் மகனுக்கே மருமகளை கட்டி வச்சு தங்கம், தங்கமா தாங்கியிருப்பேனே” என இந்திராணி அழ,
“ உன் ப்ளானு தெரிஞ்சு தான், அவன் ஹிந்திகாரியோட வந்துட்டான். ஹேய் ஹய் , இவளை என்னை தவிர எவென் தகிரியமா கட்டுவான்” என்றவன்,
“ முடிவா சொல்றேன். முழுசா பத்து லட்சத்தை எண்ணி வைங்க. இல்லையினா, நீயே உன் பொண்ணை கூட்டிட்டு போ” என்றான்.
“ ஐயா, அப்படி சொல்லாதீங்க சாமி” என அழகர் மீண்டும் அவன் காலில் விழப் போக, வெகுண்ட எழில்,
“ உழைச்சு சம்பாரிக்க துப்பில்லாத, இந்த பொட்டப்பய காலுல ஏன்பா விழுறீங்க” என அழகரை தடுக்கவும்,
“ யாரைடி பொட்டப் பயன்னு சொன்ன.என் கூட படுத்து பார்த்தியா, இல்லை உன் அயித்த மகனோட ராசலீலை நடத்திட்டியா” அவன் கேட்க, ‘அடப்பாவி’ சொல்லக் கூடாத சொல், கேட்கக் கூடாத வார்த்தை என சூழ இருந்தோர், வாயையும் காதையும் பொத்திக் கொண்டு, அற்ப பிறவியே என அவனைப் பார்த்தனர். பெற்றவர் தலை குனிந்தனர்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என எழிலரசியே , காளியாக மாறி தாலி கட்டியவன் முகத்தில் உமிழ்ந்து, அவன் கன்னத்தில் ஓங்கி அறை விட்டு இருந்தாள்.
அதை எதிர் பாராதவன் வெறி உச்சத்துக்கு செல்ல, “ என்னையவாடி அடிச்ச” என அவளை நோக்கி முன்னேற, அண்ணன் மார் குறுக்கே வந்தனர். அவர்களையும் தாண்டி, எட்டி தான் கட்டிய தாலியை எழிலரசியின் கழுத்திலிருந்து தானே அறுத்திருந்தான்.
நடந்தது யாது என யூகிக்கும் முன், எழிலரசி கழுத்திலிருந்த தாலி கந்தவேல் கையில் இருக்க, பெண்கள் அதிர்ந்தனர். அவனை ஏற்றி விட்டு கொண்டிருந்த கோகிலாவே, “ அடப் பாவி, நீ உருப்புடுவியா. யாருமே பொண்ணு கொடுக்க தயங்கின உனக்கு என் நாத்தியை கொடுக்க வந்தேனேடா.” என ஒப்பாரி வைத்தாள்.
நாகுவும், தாமுவும் வெறி கொண்டவர்களாக கந்தவேலை அடித்துக் கொண்டு இருக்க, அவர்களைத் தடுக்க யாரும் வரவில்லை.
கழுத்தில் ஏறிய தாலி மூன்றே மணி நேரத்தில், கட்டியவனாலேயே அறுக்கப்பட, ஒரு பக்கம் அதிர்ந்தாலும் மறு பக்கம் எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு. அழுவதா,சிரிப்பதா அறியாமல் பிரம்மை பிடித்து நின்றாள்.
“ என்னை மன்னிச்சிடு தாயி” என மகளின் கைகளை பற்றப் போயி அழகர் மயங்கி விழுந்தார்.
Interesting sis
Nice 🙁