Skip to content
Home » அரிதாரம் – 17

அரிதாரம் – 17

நடிகர் சங்கத்தில் ராஜேஷை பற்றி புகார் கொடுத்துவிட்டு வந்த ஆராதனா அன்று நிம்மதியாக உறங்கினாள். 

மறுநாள் நிம்மதியாக எழுந்த ஆராதனா, வேலை செய்யும் பெண்மணியை அழைத்து இனிமேல் தனக்கு சமையல் செய்ய வேண்டாம். நான் இருக்கும் பொழுது வந்து வீட்டு வேலைகளை மட்டும் முடித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டாள். அவளோ சம்பளம் குறையுமே என்று வருந்த, சம்பளத்தை நான் எதுவும் குறைக்கவில்லை. நீங்கள் அதை நினைத்து வருந்தாதித்தீர்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறினாள். 

அவர் பிறகு யூனியன் ஆபீஸ்சுக்கு ஃபோன் செய்து, நேற்று அளித்த புகாருக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டார்களா? என்று கேட்டாள். அவர் சொன்ன செய்தியில் அதிர்ந்து விட்டாள்.

“அப்படியா? எப்பொழுது ஆயிற்று” என்று கேட்டுவிட்டு, “சரி நான் விசாரித்துக் கொள்கிறேன்” என்று வைத்துவிட்டாள்.

நேற்று குடித்துவிட்டு பாரில் இருந்து வீட்டிற்கும் வரும்பொழுது ராஜேஷ் வந்த கார் ஆக்சிடென்ட் ஆகிவிட்டதாகவும், அதில் அவருக்கு பயங்கரமாக அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் கூறினார். 

இப்பொழுது ஆராதனாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கடவுளே அவனுக்கு அவனுக்கு தண்டனை கொடுத்து விட்டாரோ? என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் பாதிக்கப்படுவது கீதாகும் மான்சியும் தானே என்று, உடனே கீதாவிற்கு ஃபோன் செய்தாள். 

முதல் ரிங்கிலேயே ஃபோனை எடுத்த கீதா “என்ன ஆராதனா? எப்படி இருக்கீங்க? கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்க இல்லையா?” என்றாள்.

அவள் அப்படி கேட்டதும் சற்று அதிர்ந்த ஆராதனா “நேற்றே கொடுத்து விட்டேன். ஆனால் ராஜேஷிற்கு” என்று தயங்கினாள்.

“ஆமாம் என் அப்பாவிற்கு அவனின் குணங்கள் எல்லாமே தெரியுமே. அதனால்தான் என்னிடம் இந்த திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தார். நான் தான் பிடிவாதமாக அவனை கல்யாணம் செய்து கொண்டேன். உண்மையாகவும் அவனை காதலித்து அவனுடன் வாழ்ந்தேன். ஆனால் அவன் எனக்கு உண்மையாக இல்லை. திருமணம் முடிந்து ஆண்டுகள் கழிந்து அவனைப் பற்றி அரசல் புரசலாக செய்தி வந்தாலும், எதுவும் நேரடியாக வரவில்லையே என்று ஒழுக்கமானவனாக தான் இருப்பான் என்று நம்பிக் கொண்டு இருந்தேன். ஆனால் உங்கள் விஷயத்தை கேள்விப்பட்ட பிறகு, இனிமேலும் அவனை நம்ப தயாராக இல்லை. உடனே வந்து அப்பாவிடம் நடந்ததை சொல்லிவிட்டேன். 

அவர் “நான்தான் உனக்கு எவ்வளவோ தடவை சொன்னேன். நீ தான் கேட்கவில்லை. இப்படிப்பட்ட புருஷன் இன்னும் உனக்கு வேண்டுமா?” என்றார். 

நான்தான் உடனே அவன் இறந்து விட்டால், செய்த தவறை எப்படி உணர்வான் என்று “அவன் உயிருடன் இருக்க வேண்டும். உயிருடன் மட்டும்தான் இருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டேன் என்று மிகவும் சாதாரணமாக கூறினாள்.  

கீதாவின் கூற்றில் அதிர்ந்து விட்டாள் ஆராதனா. தன் கணவன் தவறு செய்து விட்டான் என்று தெரிந்து அவனுக்கு தண்டனை கொடுக்க துணிந்த கீதாவை நினைத்து பெருமையாக இருந்தது. 

அவளுடன் பேசிவிட்டு வைத்த ஆராதனா நிம்மதி பெருமூச்சு விட்டாள், ஒரு வழியாக இனிமேல் ராஜேஷின் தொல்லை இருக்காது என்று. ஆனால் ரகு என்று ஒருவன் இருக்கிறானே அவனை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கலானாள்.

ஆராதனா ராஜேஷின் மேல் புகார் அளித்தது சினிமா துறையில் காட்டுத்தீ போல் பரவியது. அடுத்து அவனுக்கு நடந்த விபத்தினால் மேற்கொண்டு எந்த முடிவும் எடுக்காமல், அந்த புகார் தள்ளுபடி ஆகிவிட்டது. 

ராஜேஷ்சினால் இனிமேல் தொல்லை இல்லாத போது, அந்தப் புகாரை பற்றியும் அவள் கவலைப்படவில்லை. 

ஒரு வாரம் கடந்திருக்க அடுத்து படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. இதுவரை ரகுவை பார்க்காமலும் பேசாமலும் காலம் கடத்தி ஆகிவிட்டது. இனிமேல் அவனை எதிர்கொள்ள தான் வேண்டும் என்று தனக்குள் தைரியத்தை வளர்த்துக் கொண்டு படப்பிடிப்பிற்கு கிளம்பினாள்.  

படப்பிடிப்பும் நன்றாக நடக்க மதியநேர இடைவேளையில் அவளின் கேரவனிற்குள் வந்தான் ரகு. “என்ன நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தால் ராஜேஷ் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தாயா?” என்றான். 

அவன் உள்ளே வந்ததும் பயந்தாலும் அந்த பயத்தை அவள் முகத்தில் காண்பிக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, “என் அனுமதி இல்லாமல் என் இடத்திற்கு நீ ஏன் வந்தாய்?” என்றாள். 

“நான் யாருன்னு மறந்துட்டியா?” என்றான் அவன் மீண்டும். 

“நீ யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போ. ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல், நான் தனியா இருக்கும் பொழுது நீ என்னிடம் பேச வரக்கூடாது. அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்” என்றாள் கராராக. 

‘இவளுக்கு என்ன நடந்தது தெரியவில்லையா? இல்லை மறந்து விட்டாளா? இல்லையே! தெரியாமல் இல்லை. தெரியாமலா ராஜேஷின் மீது புகார் அளித்திருப்பாள்? ஆனால் நம்மை கண்டு கொஞ்சம் கூட அவளுக்கு பயம் இல்லையே? அது எப்படி’ என்று குழப்பமாக தனக்குள் யோசித்தான். 

அவனது குழப்ப முகத்தை கண்டதும் நிம்மதி அடைந்த ஆராதனா “பத்து நிமிடம் தான் ஓய்வு கொடுத்திருக்கிறார். அடுத்த காட்சிக்கு நான் தயாராக வேண்டும். ஆகையால்” நீ என்று வாசலை நோக்கி கை காண்பித்தாள். 

“நான் வெளியே போவது இருக்கட்டும். உன் மானம் வெளியே போனால் பரவாயில்லையா?” என்று அவனது ஃபோனை எடுத்து அங்கும் இங்கும் ஆட்டினான். 

ஆராதனாவிற்கு புரிந்து விட்டது. இவனும் வீடியோ எடுத்து வைத்திருக்கிறான் என்று. மனதிற்குள் எவ்வளவு கேவலமான புத்தி உடையவனாக இருக்கிறார் இந்த ஆண்கள் என்று ஆண் இனத்தையே மொத்தமாக திட்டி தீர்த்தாள். 

“நீ ராஜேஷ்சின் மனைவியிடம் சென்று பேசியது எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா? அவன் வேண்டுமானால் பொண்டாட்டிக்கும் மாமனாருக்கும் பயந்து இனிமேல் அடங்கி இருக்கலாம். அவனுக்கு வேறு வழியும் இல்லை. விபத்து நடந்து படுத்தபடுக்கை ஆகிவிட்டான். ஆனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் சொல்வதைக் கேட்டு நீ என் ஆசைக்கு இணங்கா விட்டால், அதன் பிறகு நடப்பவற்றிற்கு நான் பொறுப்பாக முடியாது. இந்த வீடியோவை நான் எல்லா இடத்திலும் போடுவேன். பட்டி தொட்டி எல்லாருக்கும் தெரியும்படி செய்வேன். உன் அப்பா அம்மாவும் இதை பார்ப்பார்கள்” என்று சொல்லி வில்லன் போல் சிரித்துவிட்டு. “நீங்கள் தயாராகுங்கள் மேடம். நான் வெளியே இருக்கிறேன்” என்று பவ்யமாக சொல்லிவிட்டு சென்றான். 

அவன் என்ன செய்தாலும், அவனுக்கு எதிராக போராட வேண்டும் என்று நினைத்திருந்த ஆராதனாவால், தன் பெற்றோரும் தன் குடும்பத்தில் உள்ளவர்களும் இந்த வீடியோவை பார்த்தால் என்ன ஆவார்கள் என்று நினைக்கும் பொழுதே, அவளுக்கு உயிரே போய்விடும் வலி தோன்றியது. இதன் பிறகு நான் உயிருடன் இருக்காத்தான் வேண்டுமா? என்று தோன்றியது. 

அவன் வெளியே சென்ற பிறகு தன்னை சமன்படுத்திக் கொள்ள அவளுக்கு சற்று நேரம் ஆகியது. 

அவன் சொல்லுவதும் உண்மைதான். ராஜேஷிற்கு திருமணமாகி குழந்தையுடன் இருந்தான். ஆனால் இவனோ கல்யாணம் ஆகாதவன். அது மட்டுமல்ல இங்கு தனியாகத்தான் வீடு எடுத்து தங்கியுள்ளான். அவன் குடும்பத்தை பற்றி இவள் அவ்வளவாக கேட்டதும் இல்லை. யாரிடம் சென்று அவனைப் பற்றி சொல்லி அவனை திருத்துவது என்று ஒன்றும் புரியாமல், தலையை கைகளால் பிடித்தபடி அப்படியே அமர்ந்து விட்டாள். தலை வின்வின் என்று வலித்தது. சூடா காபி குடிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. 

அடுத்த காட்சி எடுப்பதற்கு டைரக்டர் தயாராகி விட்டதாக அவளிடம் தெரிவிக்கப்பட, தன் தலைவலியை பொறுத்துக் கொண்டு படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றாள். 

வழக்கமாக என்ன சீன் என்பதை தெளிவாக கேட்டுக்கொண்டு ஒரே டேக்கில் நடித்துக் கொடுத்துவிடும் ஆராதனாவால் இன்று முதல் டேக்கில் டைரக்டர் எதிர்பார்த்த அளவிற்கு நடிக்க முடியவில்லை. 

“என்னம்மா? என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதும் சரியில்லையா? பேக்கப் பண்ணிடலாமா?” என்றார் டைரக்டர் அக்கரையாக. 

இல்லை சார் கொஞ்சம் தலைவலிதான். சூட்டிங் எல்லாம் நிறுத்த வேண்டாம். இன்று எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து விடலாம்” என்று கூறி தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். 

அவளின் அருகில் வந்த டைரக்டர் “முடியலை என்றால், நாளை கூட பார்த்துக் கொள்ளலாம்” என்க, 

“இல்ல சார், அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை. நடித்து விடுவேன்” என்ற ஆராதனாவிடம், 

“சரி மா ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு, சூடா ஒரு காபி குடிச்சிட்டு வா” எனறு ஆராதனாவிடம் சொல்லிவிட்டு, அங்கு நின்றிருந்த பெண்ணிடம் மேடம்க்கு குடிப்பதற்கு சூடாக எடுத்துக் கொண்டு வா” என்று சொல்லிச்சொன்றார்.

அந்தப் பெண் சென்று ரகுவரிடம் மேடம் காபி கேட்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலை பார்க்கச் சென்று விட்டாள். 

சும்மா உட்கார்ந்து இருப்பதற்கு, நாமே போய் குடித்துவிட்டு வரலாம் என்று, எழுந்து சென்ற ஆராதனாவின் கண்களுக்கு ரகு காபியில் எதையோ கலந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவ்வளவுதான் அவளது கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.

நேராக டைரக்டரிடம் சென்ற ஆராதனா “சார் என்னால் முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். நாளைக்கு எவ்வளவு நேரம் என்றாலும் நடித்துக் கொடுத்து விடுகிறேன்” என்றாள் படபடப்பாக.

வியக்க விறுவிறுக்க நின்றிருந்த ஆராதனாவை கண்ட டைரக்டர், “சரிமா உடம்பை பார்த்துக்கோ. இல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகட்டுமா?” என்று அக்கறையாக கேட்க, 

“இல்லை சார் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற ஆராதனா மீண்டும் அவரிடம் காலதாமதத்திற்கு மன்னிப்பு கேட்டாள்.

“ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ இல்லாத காட்சிகளை இன்று எடுத்துக்கொள்கிறேன். நீ முதலில் உடம்பை கவனித்துக் கொள்” என்று கூறி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் டைரக்டர். 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *