நிகேதன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ஆராதனா.
சில நொடிகள் தான் அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சற்றென்று அவள் முகம் அலட்சியமாக மாற, சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த கொண்டு, “நீங்கள் நினைப்பது போல் உள்ள பெண் நான் அல்ல” என்று நக்கலாக சிரித்தாள்.
அவளின் உடல் மொழியே அவளின் எண்ணத்தை அவனுக்கு உணர்த்த, “நீ நினைப்பது உள்ள ஆண் நானும் அல்ல. நீ நினைப்பது போல் நான் உன்னிடம் கேட்கவில்லை. கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்றுதான் கேட்டேன்” என்றான் அடுத்த நொடியே.
அதில் சற்று நிதானித்த ஆராதனா, “நீங்கள் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை. என்னால் உங்களை கல்யாணம் செய்து கொள்ள முடியாது” என்றாள் அழுத்தமாக.
“ஏன்?” என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்தினான்.
அவனின் உடல் மொழியில் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
அவளிடம் இருந்து கண்டிப்பாக பதில் வேண்டும் என்பது போல் அவனது பார்வை அவளிடமே அழுத்தமாக இருந்தது.
“நான் ஏன் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நான் யார் என்ன என்று உங்களுக்கு தெரியாது! அப்படி இருக்க என்னை ஏன் நீங்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? ஏன் உங்களுக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? இல்லை என்றால் என்னை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் இந்த படத்தையே எடுக்கிறீர்களா? என்று பல கேள்விகளை நிகேதனிடம் கேட்டாள் ஆராதனா.
அவனும் சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு “சினிமாவில் மட்டும் கண்டதும் காதல் வராது சில சமயம் உண்மையிலும் நடக்கும்” என்றான்.
அவள் புரியாமல் அவனைப் பார்க்க,
“முதல் முதலில் உனக்கு அவார்ட் கொடுக்கும் பங்க்ஷனில் தான் உன்னை பார்த்தேன். அப்பொழுதே நீ என் மனதில் ஆழமாக பதிந்து விட்டாய். அன்றே உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.
நீ சொல்லுவதும் உண்மைதான். உனக்காகத்தான் இந்த படத்தையே நான் எடுக்க முடிவு செய்தேன். அப்பொழுது தானே நான் உன்னுடனே இருக்க முடியும்.. அந்த சமயம் என் காதலை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றுதான்” என்று சொல்லி தன்னைப் பற்றியும் தன் வேலையைப் பற்றியும் கூறினான்.
“நான் உன்னை பார்த்த பிறகு, உன்னை பற்றி தேடி தேடி ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். உனக்கு நடிப்பின் மேல் உள்ள ஆசையை தெரிந்த பிறகுதான் என் தொழிலை நானும் சினிமா பக்கமும் செலுத்தலாம் என்று முடிவு செய்தேன். உனக்காக தொடங்கப்பட்டது தான் இந்த புரொடக்ஷன் கம்பெனி” என்றான்.
அவன் பேசுவதிலேயே அவன் உறுதியாகவும் உண்மையாகவும் தான் சொல்கிறான் என்பதை தெரிந்து கொண்ட ஆராதனாவிற்கு, இப்பொழுது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
தன் நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு சற்று அழுத்தி தேய்த்து விட்டு “இங்க பாருங்க சார், நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை. என்னால் உங்களை கல்யாணம் செய்து கொள்ள முடியாது” என்றாள் மென்மையாக.
“ஏன்?.. ஏன்? கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்கிறேன். எப்படி என்றாலும் நீ என்றாவது ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளத் தானே வேண்டும்?” என்றான்
“இல்லை சார். தயவு செய்து புரிஞ்சுக்கோங்க. என்னால் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் ஏற்கனவே காதலித்து..” என்றதும்
“இருந்தாய், அவரும் உன்னை காதலித்திருந்தான். அது முடிந்து போன கதை. அவனுக்கும் இப்பொழுது கல்யாணமாகிவிட்டது. அடுத்து என்ன நீ உன் வேலையை பார்க்க வேண்டியதுதானே? இன்னும் அவனையே நினைத்துக் கொண்டு இருக்கிறாயா?” என்றான் ஆராய்ச்சியாக
உடனே மறுப்பாக தலையாட்டிய ஆராதனா “அதெல்லாம் இல்லை. அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. திருமணம் முடிந்த பிறகு இன்னொருவரவது கணவனை நான் எப்படி காதலிப்பேன்” என்றாள் வேகமாக.
“பின்னர் என்ன? என்னை கல்யாணம் செய்வதில் வேறு என்ன பிரச்சனை உனக்கு?” என்றான் சற்று கோவமாக.
தன்னை பற்றி என்று சொல்ல வந்தவள், அவர் தான் இவ்வளவு தெளிவாக சொல்கிறாரே, என் பெற்றோரை பற்றியும் அவருக்கு தெரிந்து தான் இருக்கும் என்று நினைத்து, இருந்தாலும் சொல்வோம் என்று, “என் குடும்பம்” என்றாள்.
உடனே “உன் அப்பா அம்மா தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி அண்ணன் அக்கா எல்லோரைப் பற்றியும் எனக்கு தெரியும்” என்றான். “எனக்கு உன் சம்மதம் மட்டும் தான் வேண்டும். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. அவர்களை எப்படியும் நான் சம்மதிக்க வைத்து விடுவேன்” என்றான்.
“அதற்கு முதலில் உன்னுடைய சம்மதம் தான் வேண்டும்” என்று உறுதியாக அவளைப் பார்க்க,
அவளுக்கோ இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைய தொடங்கினாள்.
“இதற்காகத்தான் என்னை இங்கு தனியாக அழைத்து வந்தீர்களா?” என்றாள் சற்று கோபமாக.
“பிரணவ் இன்னும் பத்து பதினைந்து நாட்கள் ஷூட்டிங் இருக்கு என்று சொல்லிவிட்டான். எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு நான் கண்டிப்பாக சென்னைக்கு போகணும். அதற்கு முன் உன்னிடம் சம்மதம் கேட்டு விடலாம் என்று தான் இன்று பேச்சை ஆரம்பித்தேன்” என்றான் நிகேதன்.
“சார், கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. நான் ஒரு நடிகை. நடிகையை எந்த ஒரு அம்மாவும் தன் மகனுக்கு கட்டி வைக்க விரும்ப மாட்டார்கள். என்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னால் உங்கள் வீட்டில் வீணாக பிரச்சனை தான் வரும். தயவுசெய்து இந்த பேச்சை இத்துடன் நிறுத்தி விடுங்கள். உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல பெண் கிடைப்பாள்” என்று அமைதியாகவே கூறினாள்.
“என் அப்பா அம்மா என்றுமே என் விருப்பத்திற்கு மறுப்பாக எதுவும் சொல்ல மாட்டார்கள். நடிப்பும் ஒரு வேலைதான். வேலைக்கு போகும் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளும் பொழுது நடிக்கும் பெண்களும் கல்யாணம் செய்து கொள்ளலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதை என் வீட்டில் என் பெற்றோருக்கு நல்லாவே புரியும். ஆகையால் அதை நினைத்து உனக்கு கவலை வேண்டாம்.
அப்புறம் என்ன சொன்ன, நல்ல பெண்ணா! ஏன் நீ நல்ல பெண் இல்லையா?” என்று அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.
அவளுக்கோ சங்கடமான உணர்வு. இவ்வளவு தெளிவாக பேசுபவனை தான் எப்படி மணந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு நான் சுத்தமான பெண் அல்லவே என்று மனதுக்குள் நினைத்து மருகினாள்.
சற்று அவளின் முன் சாய்ந்து “நீ எதை நினைத்தும் குழப்பம் கொள்ளாதே ஆராதனா. நம் வாழ்க்கையின் கடைசி வரையில் நாம் சேர்ந்தே இருப்போம். உன்னை என்னைத் தவிர வேறு யாராலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது” என்றான் அவளது கண்களைப் பார்த்து.
அவனது வார்த்தையில் இருந்த ஏதோ ஒன்று அவள் இதயத்தை தாக்க, கண்கள் கலங்க “உங்களுக்கு நான் பொருத்தமானவள் இல்லை சார். தயவு செய்து..”; என்றதும் அவள் கைகளை பற்றி அவர் வார்த்தையை நிறுத்திய நிகேதன்,
“கல்யாணம் பண்ணுவதற்கு தகுதி முக்கியமில்லை ஆராதனா, இருவரது மனம் சம்மதித்தால் போதும். அதேபோல் மனம் சுத்தமாக இருந்தால் மட்டும் போதும்” என்றான் அவளைப் பற்றி தெரியும் என்பதை மேற்கோள் காட்டியபடி.
நிகேதன் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பத்தில் இருந்தே உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உடைய தொடங்கிய ஆராதனா, கடைசியில் அவன் பேசியதும் முழுவதுமாக நொறுங்கி விட்டாள். எவ்வளவு நேரம் தான் அவளும் தைரியமாக இருப்பது போலவே நடித்துக் கொண்டிருப்பது. அவளது கண்கள் அவளின் அனுமதியின்றி கண்ணீர் வடிக்க, இருக்கையில் இருந்து “சார்” என்று எழுந்து “என்னால..” என்று வார்த்தை குளற தயங்கி நின்றாள் ஆராதனா.
“ப்ளீஸ். நீ எனக்கு மறுப்பாக எதுவும் சொல்லி விடாதே! சம்மதம் என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல் போதும்” என்றான் ஏக்கமாக.
இதற்கு மேலும் அவனுக்கு வேறு எந்த காரணமும் சொல்ல விரும்பாத ஆராதனா “நான்.. என்னை.. என்று தயங்கி பின்னர், “என்னை இருவர் நான் அறியாமலேயே என் கற்பை சூறையாடி விட்டார்கள்” என்றாள் கண்களில் கண்ணீர் வடிய தேம்பியவாறு.
அவளை நெருங்கி “எனக்கு எல்லாம் தெரியும் ஆராதனா” என்றான்.
“அப்படி இருந்தும் நீங்கள் என்னை கல்யாணம் செய்துக்க விரும்புகிறீர்களா?” என்று அவனை கேள்வியாக பார்த்தாள்.
ஆமாம் என்ற தலையாட்டி நிகேதன் “நான் உன் அழகையோ உடம்பையோ விரும்பவில்லை. உன்னுடைய திறமையையும் தன்னம்பிக்கையும் தான் விரும்புகிறேன். அன்று விழா மேடையில் தலைநிமிர்வோடு நடந்து வந்த இந்த ஆராதனாவை தான் விரும்புகிறேன்” என்று அவளைப் பார்த்து கையை காண்பித்தான்.
“நேர்கொண்ட பார்வையும், உறுதியான நடையும் கொண்ட இந்த சிங்கப் பெண்ணை தான் நான் விரும்புகிறேன்” என்று அவளை நெருங்கி அவளின் தோள்கள் இரண்டையும் பற்றி, அவள் கண்ணோடு கண் பார்த்து கூறினான்.
அவன் பேசி முடித்ததும் முழுவதும் நொறுங்கிய ஆராதனா, குலுங்கி அழ ஆரம்பிக்க, அவளை தன் மார்புடன் அணைத்து முதுகை தடவிக் கொடுத்தான்.
அவனது அணைப்பும் ஆறுதலும் அவளுக்கு தான் தன் உள்ளத்தில் உள்ள அழுத்தத்தை குறைப்பது போல் இருக்க, கதறி ஓங்கி அழுத அவளது அழுகையை கொஞ்சம் கொஞ்சமாக விசும்பலாக மாறி, சற்று நேரத்தில் நின்றது.
பின்னர்தான் அவனை கட்டி அணைத்து நிற்பதை தெரிந்து அவனிடமிருந்து விலக முயல, தன்னிடமிருந்து அவளை விலக்கி நிறுத்தி, அவள் முகம் பற்றி நெற்றியில் இதழ் பதித்து “ஐ லவ் யூ ஆராதனா. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்படுகிறேன்” என்றான் மீண்டும் அழுத்தமாக.
அவனின் இதழ் தன் நெற்றியில் ஸ்பரிசித்த நொடியில் கண்கள் மூடி அவனது அன்பை ஏற்றுக் கொண்டாள்.
பின்னர் மெதுவாக கண் திறந்து “எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இது சரியா தவறா என்றும் தெரியவில்லை. ஏனோ உங்களின் பால் என் மனது சாய்கிறது” என்று தலைகுனிந்தபடி கூறி முடித்தாள் ஆராதனா.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
சூப்பர். … ஜோடி செம… அந்த ரகுவை சும்மா விடுறக்கூடாது நிகி … பெண்களை கஷ்டப்படுத்தப்பவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கனும். .. ரகு செய்தது துரோகம் & பாவம் … தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு ஆனால் துரோகம் & பாவம் செய்தவர்களுக்கு மன்னிப்பு இல்லை தண்டனை மட்டும் தான்
நன்றி மா 😊😊
oru valiya nikethan love aaradhana ethukitta eppadi ninaipalo ninachathuku accept panita . antha raghu ena aanan avanuku punishment kedaikanum
Interesting😍