Skip to content
Home » அரிதாரம் – 25

அரிதாரம் – 25

ரகுவிற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நிகேதனுக்கு, அவனது தாய் தந்தை நினைத்து கவலையாக இருக்க, அதை கீதாவின் தந்தையிடம் கூறினான். 

நிகேதனின் இளகிய மனதை கண்டவர், அவனிடம் கமிஷனர் சூரியா பற்றி கூறினார். 

“எனக்குத் தெரிந்த கமிஷனர் இப்பொழுதுதான் சென்னைக்கு மாற்றலாகி வந்துள்ளார். அவன் நல்லவங்களுக்கு நல்லவன். கெட்டவங்களுக்கு மிகவும் கெட்டவன். தவறு செய்தவன் அரசாங்கம் கொடுக்கும் தண்டனையை அவர்கள் கட்டாயம் அனுபவிப்பர். அது கூடவே இவன் கொடுக்கும் தண்டனையையும் சேர்த்து. 

அரசாங்கமாவது சாட்சிகள் வைத்து தீர்ப்பை முடிவு செய்யும். ஆனால் இவன் மனசாட்சியை மட்டும் தான் நம்புவான். இப்பொழுது நீ சொன்னதைப் போல்  ஈவு இறக்கமெல்லாம் பார்த்து விடமாட்டான். இவன் கொடுக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும். 

ஆகையால் நான் இந்த விஷயத்தை அவரை வைத்து டீல் செய்து கொள்கிறேன். இனிமேல் உங்களுக்கும் ரகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயத்தை இத்துடன் மறந்து விடுங்கள். இனி உங்கள் கண் முன் ரகு என்றைக்கும் வரமாட்டான்.

ஆராதனா ரொம்பவும் நல்ல பிள்ளை. சிறந்த நடிகை. நீங்கள் அவளை கல்யாணம் செய்ய போவதாக சொல்வதால் நான் உங்களுக்கு இவ்வளவு உதவி செய்கிறேன். அவளிடமும் இனிமேல் இந்த விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு  கல்யாணம் செய்து சந்தோசமா வாழும் வழியை பார்க்க சொல்லுங்க. 

இனிமேல் நாம் எப்பொழுது சந்தித்தாலும், இந்த விசயத்தை பற்றி பேசக்கூடாது. சரியா?” என்று சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டு “போயிட்டு வாங்க” என்று வாசலை காண்பித்தார். 

அவரின் செய்கையில் அதிர்ந்த நிகேதன், “போலீஸ் என்றால் அவனது ஃபோனையும் கேட்பார்களே!” என்று தயக்கமாக கூறினான். 

“வேண்டாம், அதை நீங்களே டிஸ்ட்ராய்டு பண்ணிடுங்க. நான் அவரிடம் சொல்லிக் கொள்கிறேன்” என்று சொல்லி நிகேதனை அங்கிருந்து அனுப்பினார்.

(எனது காவிய தலைவன் என்ற கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் சூர்யா. நேரம் இருந்தால் பிரதிலியியில் காவிய தலைவன் கதையையும் படிங்க. 😊 ) 

அவர் பேசியதை கேட்டதும் நிகேதனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. வயதான காலத்தில் தங்களை தங்கள் மகன் காப்பாற்றுவான் என்று நினைத்திருந்த பெற்றோருக்காகத்தான் கொஞ்சம் யோசித்தான். ஆனால் இவர் போலீஸ் மூலம் அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்று சொல்கிறார். எது எப்படியோ, இனிமேல் நாம் இதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிம்மதி அடைந்தான். 

வீட்டிற்கு வந்ததும் அவன் ரகுவின் ஃபோனை ஆன் செய்து அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்தான். எங்கெல்லாம் படத்தை சேமித்து வைக்கும் வசதி இருக்கிறதோ? எல்லாவற்றையும் அழித்து, மறுபடியும் எடுக்க முடியாதபடி செய்து, ஃபோனையும் உடைத்து விட்டான். அதன் பிறகு தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. 

சற்று நேரம் தூங்கி எழுந்த நிகேதனுக்கு உடனே ஆராதனாவை பார்க்க வேண்டும் என்று தோன்ற, ஊட்டிக்கு போக தயாராகி கீழே வந்தான். அவன் வரும்பொழுது அவனது தாய் தந்தை இருவரும் ஹாலில் எங்கோ கிளம்பி தயாராக இருந்தார்கள். 

மகனைப் பார்த்ததும் “காபி குடிக்கிறாயா?” என்றார் ஷர்மிளா. 

சரி என்று புன்னகைத்துக் கொண்டே, தந்தையின் அருகில் வந்த அமர்ந்த நிகேதன், “எங்கே போக ரெடியாகி உட்கார்ந்து இருக்கீங்க?” என்றான்.

அவரோ அமைதியாக இருக்க, காபியை கொண்டு வந்து நிகேதன் கையில் கொடுத்தபடியே, “நாங்க ஊட்டிக்கு போகிறோம்” என்றார் ஷர்மிளா. 

அதிர்ந்த நிகேதன் பெற்றோர் இருவரையும் மாறி மாறி பார்க்க, “நாங்க இப்பவே எங்க மருமகளை பார்க்க வேண்டும்” என்றார் சர்மிளா. 

“அம்மா ப்ளீஸ். நான் இப்பதான் என்னோட காதலை சொல்லி இருக்கேன். இன்னும் கொஞ்சம் அவளை நான் காதலிக்கணும். அதன் பிறகு தான் கல்யாணம். நீங்க வந்து எதையும் சொதப்பிடாதீங்க, ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக.

 “நீ லவ் மேரேஜ் பண்றதுக்குரிய நேரம் எல்லாம் முடிஞ்சிருச்சு. நீ உன்னுடைய லவ்வ சொல்லிட்ட இல்ல. அதோட நிறுத்திக்கோ! இனிமே நாங்க அதை அரேஞ்ச் மேரேஜா மாத்திடுவோம்” என்று நக்கலாக தன் மகனை பார்த்தார் ஷர்மிளா. 

“மாம்” என்று முறைக்க, 

“பின்ன என்னடா, நீ காதலிக்கிறேன் என்று அவள் முன்னாடி போய் நின்று, எது செய்தாலும், அது அவளுக்கு காமெடியாக தான் இருக்கும். என் மருமகள் எத்தனை படங்களில் இதைவிட சிறந்த காதல் காட்சிகளை எல்லாம் பார்த்திருப்பாள், நடித்திருப்பாள்?” என்றார்.

“மாம், திஸ் இஸ் டூ மச். நீங்க என்னை ரொம்ப கிண்டல் பண்றீங்க!” என்றான். 

“கிண்டனும் இல்லை, சுண்டலும் இல்லை. என்னங்க பேக் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்க இல்ல?” என்று கணவன் புறம் திரும்பினார். 

அவரும் “எல்லாம் ரெடியா இருக்கு” என்று வாசல் புறம் கை காண்பிக்க, 

அங்கு இரண்டு ட்ராலி பெட்டிகள் தயாராக இருக்க, இனி மேலும் தன் தாய் தந்தையரை நிறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டான் நிகேதன்.

“சரி, வாங்க. ஆனா அங்கு ஏதாவது ஏடாகூடம் செய்து அவளை கஷ்டப்படுத்திடாதீங்க” என்றான். 

“பாருங்கங்க, இப்பவே அவன் பொண்டாட்டிய நாம எதுவும் சொல்லிடக்கூடாதாம்” என்று ஆதங்கமாக கணவனிடம் கூறினார். 

“அம்மா, அவ கஷ்டப்படக்கூடாதுன்னு தான் சொன்னேன். எனக்கு தெரியாதா? என் அம்மா அவளை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்று” என்று சொல்லி கார் சாவியை எடுத்துக்கொண்டு “வாருங்கள்” என்று வெளியேறினான்.

தாய் தந்தையுடன் பயணம் என்பதால் மெதுவாகவே காரை ஓட்டினான் நிகேதன். 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ஷர்மிளா கொஞ்ச நேரம் கழித்து மெதுவாய்  கண்ணயர்ந்து விட்டார். அதன் பிறகு அவர் கண்ணை திறக்கும் பொழுது சூரியன் நன்றாக உதித்து, வெயில் அடிக்க தொடங்கியிருந்தது. 

கண்களை கசக்கியபடி எழுந்த ஷர்மிளா, என்ன வெயிலு இப்படி கொளுத்துது என்று சுற்று முற்றும் பார்க்க, எங்கும் மலை இருப்பதற்கான அறிகுறியே இல்லை. “என்னடா? ஊட்டிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, எங்க போயிட்டு இருக்க?” என்று மகனிடம் கேட்க, தந்தையும் மகனும் சிரித்துக்கொண்டார்கள்.

அருகில் இருந்த ஒரு சிறிய ஹோட்டலில் காரை நிறுத்திய நிகேதன், “கொஞ்சம் பிரஷப் ஆகிட்டு கிளம்பலாம்” என்று காரை விட்டு இறங்கினான். 

ஷர்மிளாவிற்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. “இப்பொழுது நாம் எங்கே போகிறோம் என்று சொல்ல போறீங்களா? இல்லையா?” என்று காரை விட்டு இறங்கி, இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, மகனையும் கணவனையும் முறைத்தார். 

மனைவியின் முறைப்பைக் கண்டு சிரித்தபடி அவளின் அருகில் வந்த விஜயன், அவர்கள் தோளில் கை போட்டுக்கொண்டு, “போய் பிரஷ் ஆயிட்டு வா. சாப்பிட்டுவிட்டு சம்மந்தி வீட்டுக்கு போகணும். கல்யாணத்தைப் பற்றி பேசணும் இல்லையா?” என்றார்.  

அதில் மிகவும் மகிழ்ந்த ஷர்மிளா “நாம இப்போ ஆராதனா வீட்டிற்கு போகிறோமா?” என்று மகிழ்ச்சியாக கேட்டார். 

“ஆமாம்” என்று சிரித்தபடியே தலையை ஆட்டினான் நிகேதன். 

அதன் பிறகு அவரை கையில் பிடிக்க முடியுமா? சீக்கிரம் வந்த வேலைகளை முடித்துக் கொண்டு, லேசாக ஒப்பனை செய்து கொண்டு மகனையும் கணவனையும் “சீக்கிரம் கிளம்புங்கள்” என்று அவசரப்படுத்தினார்.

தன்னைவிட தன் தாய் தன் திருமணத்தில் அவசரமாக கண்டு புன்னகைத்துக் கொண்டே காரை தனது மாமனாரின் வீட்டை நோக்கி செலுத்தினான் நிகேதன்.

ஆராதனாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் தட்டில் வைப்பதற்கு தேவையானவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டார் ஷர்மிளா. 

பத்து மணி அளவில் ஆராதனாவின்  ஊருக்கு வந்து விட்டார்கள். திடீரென்று தங்கள் ஊருக்குள் வந்த காரை கண்டு சிறு பிள்ளைகள்  பின்னால் ஓடி வர, அவர்களிடம் விசாரித்து ஆராதனாவின் வீட்டை கண்டு, அவர்கள் வீட்டில் வாசலில் சென்று காரை நிறுத்தினான் நிகேதன். 

திடீரென்று தங்கள் வீட்டின் முன் கார் வந்ததை கண்டு, வீட்டில் இருந்த பெண்கள் வெளியே வந்து எட்டிப் பார்த்து, தங்கள் வீட்டிற்கு வந்த புதியவர்களை கண்டு குழப்பமாக வரவேற்று உபசரித்தனர். அங்கிருந்த சிறுவர்களிடம் சொல்லி வயலுக்குச் சென்று இருந்த ஆண்களை அழைத்து வரும்படி கூறினார் ஆராதனாவின் தாய் சரஸ்வதி. 

குச்சி ஊன்றிய படி அங்கு வந்து அமர்ந்தார், ஆராதனாவின் தாத்தா தங்கமுத்து. “யார் நீங்க? என்ன விஷயமா வந்து இருக்கீங்க?” என்று விஜயனைப் பார்த்து கேட்டார்.

விஜயனும் தன்னை அறிமுகமபடுத்திவிட்டு, மனைவியையும் நிகேதனையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் தாங்கள் ஆராதனாவை பெண் கேட்டு வந்திருப்பதாக கூறினார். 

அதில் முதலில் அதிர்ந்த தாத்தா, பின்னர் மகிழுந்து “ரொம்ப சந்தோஷம்” என்று வீட்டில் உள்ளவர்களை அழைத்தார். 

வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, “இது சரஸ்வதி, ஆராதனாவின் அம்மா. இவள் உமா, அவளின் சித்தி” என்று உற்சாகமாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அவளுக்கு சொந்த அண்ணன் ஒருத்தனும் சித்தப்பா பையன் ஒருத்தன் இருக்காங்க என்று, குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பற்றியும் சொல்ல, 

“எனக்கு எல்லார் பற்றியும் தெரியும் தாத்தா. உங்கள் எல்லோருடைய சம்மதத்துடன் ஆராதனாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். அதற்காகத்தான் என் அப்பா அம்மாவையும் அழைத்துக்கொண்டு இப்பொழுது இங்கு வந்திருக்கிறேன்” என்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினான் நிகேதன்.

அவனின் கம்பீரமான தோற்றத்தை கண்டு, அவனை தொட்டு தொட்டு பார்த்து, “என் பேத்திக்கு ரொம்ப பொருத்தமா தான் இருக்கிறாய்” என்று மகிழ்ந்தார். 

அதற்குள் வயலிலிருந்து அவளது தந்தை முத்துப்பாண்டியும், சித்தப்பா முத்துவேலும் வியர்வையை துடைத்துக் கொண்டே வேகமாக உள்ளே வர, முதலில் அங்கு உற்சாகமாக உட்கார்ந்திருக்கும் தந்தையை கண்டுதான் இரு மகன்களும் வியந்தார்கள். 

அதே வியப்புடன் வந்தவர்களையும் காண, தன் மகன்கள் இருவரிடமும் “இவர்கள் ஆராதனாவை பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்று பெருமையாக கூறினார் தாத்தா தங்கமுத்து. 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *