11
அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.
“நீ வண்டிக்குள் ஏறும் போது உன் தோளை பிடித்து உள்ளே இழுத்து கொண்டேனே. எங்கே நான் தொட்டதினால் உன் கற்புநிலைக்கு களங்கம் வந்து விட்டது என்று வண்டியிலிருந்து குதித்து விடுவாயோ என்று பயந்து கொண்டிருந்தேன் சாரு. நல்லவேளையாக நீ அப்படி செய்யவில்லை.
ரயிலும் கிளம்பி விட்டது. இனியும் நீ கீழே விழுந்து விட மாட்டாய் என்று நிச்சயம் ஆனதும் தான்
எனக்கு நிம்மதி ஆச்சு.”
“நக்கல். ம்.”
“ச்சே. ச்சே. நிஜம். இப்போ தான் எனக்கு நிம்மதி ஆச்சு”
நெஞ்சின் மேல் வலது கையால் தட்டி ஆசுவாசபடுத்தி கொண்டவனாக ஒரு பெரிய பெருமூச்சை வெளி விட்டான். அவன் வாய் வார்த்தையாக சொன்னாலும் குரலிலும் பார்வையிலும் பரிகாசம் பூரணமாக இருந்தது. அந்த சின்ன நடிப்பை புரிந்து கொண்ட பார்வையில் கீழ் உதட்டை பற்களால் மெல்ல கடித்து கொண்டே அவனை முறைத்தாள் சாரு.
“அம்மாடியோவ். பயமாக இருக்கிறது சாரு”
“இருக்கும். இருக்கும்.”
“நிஜம் தான். போய் வந்தது முருகன் கோயிலா? அல்லது அம்மன் கோவிலா என்று குழப்பமாக இருக்கிறது”
அவள் பதிலேதும் சொலவில்லை.
“ஏற்கனவே கொடிமரத்தின் கீழே, வெள்ளி கொலுசு இட்ட செவ்வரி ஓடிய ரெண்டு வெண்பாதங்கள் ஏற்படுத்திய குழப்பமே இன்னும் தீரவில்லை. இப்போது மீண்டும் காளிகாம்பாள் மாதிரி முறைக்கவும் குழப்பம் அதிகமாகி விட்டது”
அவள் அதற்கும் பதில் ஏதும் சொல்லாததால் அவளை சாரு என்று அழைத்து அவள் கவனத்தை தன்புறமாக திருப்ப முயன்றான்.
“நீயே சொல்லு சாரு. நாம் போய் வந்தது முருகன் கோவிலா? அல்லது அம்மன் கோவிலா?”
அதற்கும் அவள் பதில் ஏதும் சொன்னாள் இல்லை. கோபமாக கூட இரண்டு வார்த்தை பேசி விட முடியாது. பிறகு அதை வைத்து இவன் இன்னும் பத்து வார்த்தைகள் பேசுவான். எதற்கு வீண் வம்பு?
“ஏன் என்றால் என் அருகில் ஒரு அம்மன் அமர்ந்திருக்கிறதே. ஒருவேளை கோவிலில் இருந்த அம்மன் என்னோடு கிளம்பி வந்து விட்டதோ?” என்று அதி தீவிரமாக அவளிடமே சந்தேகம் கேட்டான்.
இப்போதும் அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் கண்ணாடியின் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பது போல அவன் பேச்சை கேட்காதவள் போல ஆனால் இதுவரை அவன் பேசியதை கேட்டு வாய்க்குள் சிரித்து கொண்டாள்.
அவள் கண்ணோரங்கள் சுருங்குவதினால் அவள் சிரிக்கிறாள் என்பதை கண்டு கொண்டவனாக உற்சாகமடைந்து இன்னும் அவளை வம்பு இழுத்தான்.
அவள் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி மாணவர்களுடன் சேர்ந்தே படித்தவள் தான். அதனால் ஆண்கள் என்பதை அறியாதவள் அல்ல. ராகவனுடன் அருகில் அமர்ந்து பாட சம்பந்தமாக விவாதிப்பதும் உண்டு தான். வகுப்பிலும் ஆண்களும் பெண்களுமாக சேர்ந்தே இருக்கும் தருணங்களும் அதிகம் தான். அதனால் ஆணின் அருகாமை அவளுக்கு ஒன்றும் புதிது அல்ல. எனினும் இவன் அருகாமை அவளை அன் ஈசியாக உணர வைத்தது. உள்ளே ஒரு குறுகுறுப்பு இருந்தது.
ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை பாட்டி சொன்ன அவனோ இவன் என்ற சிந்தனை தடுமாற்றமோ?
அவன் வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்தான். எதுவுமே பாட சம்பந்தமானதோ அல்லது அவளுடைய கல்லூரி சம்பந்தப்பட்டதோ அவளுக்கு பயன் தரக்கூடியதோ இல்லை. ஆனாலும் கேட்க கேட்க சுவாரஸ்யமான விஷயங்களாக இருந்தது. அதில் ஒன்றாக தென்னாப்பிரிகாவினருக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி பேசினான். .
நம் கிராமங்களில் மக்களுக்கு வைக்கப்படும் குப்பை பிச்சை கண்மணி பொன்மணி என்ற பெயர்களை போன்று அவர்கள் ஊர் பெயரும் பொறுமை, தன்னம்பிக்கை, வாக்கு, ஒனாரி, போன்ற பெண்கள் பெயர்களும், குட்விநோட்டு, சந்நிஒட்டு, திங்கள் வெள்ளி ஞாயிறு என்று ஆண்கள் பெயர்கள் என்று வேடிக்கையாக பேசி கொண்டு வந்தான்.
இந்த லண்டன் மாநகரை பற்றி இந்த மெட்ரோ ரயிலைப் பற்றி அதுவும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இது பயன்பாட்டிற்கு வந்தது மேலும் உலகின் முதல் மெட்ரோ என்றும் அவள் அறியாததை சொன்னான்.
ரயிலை விட்டு இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியே வந்ததும் அவன் வழியில் போய் விடுவான் என்று நினைத்ததற்கு நேர்மாறாக அவன் அவளுடனே நடந்து வந்தான். சாலையைக் கடக்க முயன்ற போது சின்ன குழந்தையை கையை பிடித்து அழைத்து செல்வது போல அவள் கையை பற்றி மிகவும் பொறுப்பாக சாலையை கடந்தான்.
அவளுடைய அறைக்கு அருகில் வரை அவளோடு கூடவே நடந்து வந்தான். ரெண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. என்னவோ காலாகாலமாக அவனுடன் பேசி பழகியதான உணர்வை கொடுத்திருந்தது சாருவிற்கு. சகஜமாக பேசி கொள்ள முடிந்தது இருவருக்கும்.
இவன் இன்று நம்முடனே இருக்கிறானே இன்றைக்கு எங்கும் வெளியே சுற்றும் புரோகிராம் ஏதும் இல்லை போலும் என்று அவள் நினைத்த மாத்திரத்தில் அவனுடைய கைப்பேசி அழைத்தது. எடுத்து பேசியவன் ஆங்கிலத்தில் பேசவே அவனுடைய நண்பர்கள் என்பது புரிந்தது.
“இல்லை. இன்றைக்கு என்னால் எங்கும் வர முடியாது. நான் கோவிலுக்கு போய் இருந்தேன்”
“………………….”
“நான் போனது ஆண்டவன் கோவிலுக்கு. ஆனால் அம்மன் தரிசனம் நன்றாக கிடைத்தது”
சாரு அவனை திரும்பி பார்த்து முறைக்கவும் அவன் கைப்பேசியில் பேசி கொண்டே அவளை பார்த்து கண்களை சிமிட்டினான். ஆனால் அவளுடன் கூடவே நடந்தவாறு பேச்சை தொடர்ந்தான்.
“இல்லை. இன்னும் டிக்கெட் புக் பண்ணவில்லை”.
“……………………”
“மேலும்……” அவளை பார்த்து கொண்டே சொன்னான்.
“திட்டத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கிறது. நான் உனக்கு பிறகு சொல்கிறேன்”.
“…………………….”
“இல்லை. இல்லை. பெரியதாக நம்பிக்கை வைக்காதே. எனக்கு வேறே திட்டங்கள் இருக்கிறது”
“……………………..”
“நல்லது. அப்படியே செய். என்னை நம்பாதே. நான் வரவில்லை. என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி”
தொடர்பை துண்டித்து விட்டு கைப்பேசியை பாக்கட்டில் வைத்து விட்டு என்னவோ யோசனையாக உடன் நடந்து வந்தான். அவளுடைய அறையை நெருங்கியதும் அவள் படியேறி போகும் வரை நின்று விட்டு திரும்ப போனான்.
12
சாரு மூடியிருந்த அறை கதவை சாவி கொண்டு திறக்க முயன்றாள். உள்தாழ்ப்பாள் போட்டிருந்தது. எனவே சற்றே நகர்ந்து பக்கவாட்டில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்துவதற்கு நகர்ந்த போது பின்னால் யார் மீதோ மோதி கொள்ளவே பதறி திரும்பினாள். தன் மேல் மோதிக் கொண்டவளை பின்னால் இருந்து மென்மையாக பிடித்து கொண்டவனாய் கௌதம், “மெல்ல சாரு மெல்ல” என்றான்.
“என்ன பண்றீங்க இங்கே? இன்னும் போகலையா?”
“போகணும். அதற்குள் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று திரும்ப வந்தேன்”
“இவ்வளவு நேரம் என்னோடு பேசி கொண்டு தானே வந்தீர்கள். அப்போதே சொல்ல வேண்டியதை சொல்லாமல், போனவர் திரும்ப வந்து பேசுவதற்கு என்ன இருக்கிறது?” .
“இருக்கிறதே.”
“இருக்கிறதா..? உங்களுக்கு என்னிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது?”
“லிட்ரலா சொல்லணும் என்றால் பேசுவதற்கு என்பதை விட அழைப்பதற்கு என்பது தான் சரி”
“எங்கே?”
“சாரு ப்ளீஸ் என்னை இப்படி மிரட்டாதே”
“எங்கே என்று கேட்டால் அதற்கு பெயர் உங்கள் ஊரில் மிரட்டுவதா?”
“நீ கேட்கிற தோரணை இருக்கிறதே? அப்பப்பா. நான் சொல்ல வந்ததையே மறந்து போய் விடுகிறேன். பேசுவதற்கு வார்த்தைகளே வருவதில்லை”
“யாருக்கு…? உங்களுக்கா? பேச வார்த்தை வரவில்லை. அதுவும் என்னிடம்?”
“ப்ளீஸ் குறுகுறுக்க பேசாதே”
சரி சொல்லித் தொலையுங்கள் என்று சொல்ல வாயில் வந்ததை சட்டென்று மென்று முழுங்கி விட்டு முடியுங்கள் என்றாள்.
“வருகிற வாரம் நமக்கு தொடர்ந்தார் போல் ஒரு வாரம் லீவ் வருகிறது அல்லவா? அப்போது நாம் யூரோப் டூர் போகலாமா?”
“டூர் போகும் அளவிற்கு இப்போது நான் இல்லை”
“பணம் ஒரு பிரச்சினை இல்லை சாரு. நான் பார்த்து கொள்வேன்”
“எத்தனை பேருக்கு நீங்கள் பார்த்து கொள்வீர்கள்?”
“எத்தனை பேரா?”
“ஆமாம். இப்போது கூட பேசினீர்களே. அவர்களும் கூட வருவார்கள் தானே”
“இல்லையே. அவர்களிடம் சொன்னேனே. திட்டம் மாறிவிட்டது. என்னை நம்ப வேண்டாம் என்று. அவர்களும் சரி என்று சொல்லி விட்டார்களே”
“அப்படியானால் என்னை மட்டும் தான் அழைக்கிறீர்களா?”
“ஆமாம். இதில் உனக்கு என்ன சந்தேகம்?”
“உங்களுக்கு என்ன தான் நினைப்போ தெரியவில்லை?”
“என்ன நினைப்பு? இனி இந்த ஊருக்கு எல்லாம் போக கூடிய வாய்ப்பு கிடைக்குமா? வருவதற்கு உனக்கென்ன பிரச்சினை?”
“உங்களுடன் நான் டூருக்கு..? ஒரு வாரம்…? அதுவும் தனியாக….?”
“ஆமாம்.”
“சேகர் எனக்கு கோபம் வருவதற்கு முன் இங்கிருந்து போய் விடுங்கள்”
“சாரு. எனக்கு புரியவில்லை. உனக்கு எதற்கு கோபம் வர வேண்டும்? டூருக்கு தானே
கூப்பிடுகிறேன். இஷ்டம் இருந்தால் வா. இல்லை என்றால் வரமாட்டேன் என்று சொல்லி விட்டு போ. அவ்வளவு தானே. அதற்கு ஏன் கோபப்பட போகிறாய்?”
“இந்த ரெண்டு மணி நேரம் இன்று உங்களுடன் பேசி கொண்டு சகஜமாக இருந்து விட்டதினால் ஈசியாக என்னை அழைக்கிறீர்கள்”
“இதில் ஈசி என்ன? கஷ்டம் என்ன? எனக்கு புரியவில்லையே?”
“சரி. உங்களுக்கு புரிகிற மாதிரியே சொல்கிறேன். நான் வரவில்லை”
“அது தான் ஏன் என்று கேட்கிறேன்?”
“நான் அன்று சொன்னது தான் இன்றும்”
“என்றைக்கு? என்ன சொன்னாய்?”
“ஊர் விட்டு வந்தால் வேர் விட்டு போகுமா?”
“ஓ, யெஸ். யெஸ். சொன்னாய். ஊர் வேர் என்று என்னமோ சொன்னாய்”
“ம். அதே தான். ஞாபகம் வைத்திருந்ததற்கு நன்றி. அப்படி இருந்தும் ஏன் கேட்கிறீர்கள்?”
“உன்னை தனியா கூப்பிட்டால் தானே உனக்கு வருவதற்கு பிரச்சினை? அப்படியானால் உன் பிரெண்ட் ரேணுவை அழைத்து கொள்வோம்”
“சரி. ஆனால்.!”
“ஆனால்..ஆனால் என்ன?”
“அதில்லை. ரேணு வந்தால் கூடவே..சரி விடுங்கள்”
“என்ன சாரு? கூடவே..!”
“கூடவே அவளுடன் ராகவனும் வருவானே”
ராகவனா?”
“ஆம்”
“ஏன் சாரு, ராகவன் இல்லாமல் வரமுடியாதா?”
“அவன் எங்கள் நண்பன் ஆயிற்றே”
“நான் என் நண்பர்கள் இல்லாமல் வரவில்லையா?”
“நான் உங்களை அப்படி வரச் சொல்லைவில்லையே”
“சரி சாரு. நீ உள்ளே போ. நான் போகிறேன். பை”
திரும்பி பார்க்காமல் விடுவிடு என்று நடந்து போகிறவனை, அவனுடைய கோபமும் எரிச்சலும் புரிந்தவளாய், இதில் தான் அவனுக்கு எந்தவகையிலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற அலட்சியமாக வாசல்படியில் நின்று அவன் கண்களுக்கு மறையும் வரை பார்த்து கொண்டே நின்றாள் சாருலதா தேவி.
to be continue
nice