39
Thank you for reading this post, don't forget to subscribe!ரொம்ப நாட்களுக்கு பிறகு தந்தையின் சாகும் தாருவாயில் அவர் சொன்ன ஆலங்குடி ஜமீன்
இளவரசி நாகம்மை தேவியை திருமணம் முடித்த வல்லபருக்கு முதலில் பிறந்த பத்து ஆண்
குழந்தைகளும் பிறந்து பிறந்து இறந்து விடவே வாரிசு அற்ற ஜமீனை பங்காளிகள் தங்களுக்குள்
பங்கிட்டு கொள்ள முனையும் போது, அவருடைய வயதான காலத்தில் கடைசியாக பிறந்தாள்
உலகம்மை தேவி.
ஆலங்குடியில் தாய் வழி உறவினரான கருணாகரனை திருமணம் முடித்து அவளுக்கும் பிறந்த
குழந்தைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக இறக்கவே அதுவும் ஆண்குழந்தைகள் அத்தனையும்
இறந்து போகவே வாரிசே அற்று போய் விடுமோ என்று பயந்திருந்த நேரத்தில் பிறந்தவள்
உமையாள் தேவி. அவள் திருமணம் செய்திருந்த இளமாறன், சாரு பிறந்த கொஞ்ச
வருடங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து போனான். அவன் இறக்கும் போது கர்ப்பிணியாக
இருந்த உமையாளும் ஒரு ஆண்மகனை பெற்றெடுத்து விட்டு பிரசவ கோளாறினால் இறந்து
போனாள். அந்த குழந்தையும் இறந்து போகவே இருக்கிற சாருவையேனும் அல்பாயுளில் பறி
கொடுத்து விடக்கூடாது என்று அச்சரவில் ஆலங்குடியில் முகாமிட்டிருந்த அந்த மகானை போய்
சந்தித்தார்கள் கருணாகரனும் உலகம்மையும்.
இவர்களை கண்டதும் இவர்கள் எதுவும் சொல்லும் முன்பாகவே இவர்கள் சரித்திரத்தை அறிந்து
அதை சொன்னார் அந்த மகான். அதிசயப்பட்டவர்கள் இந்த குழந்தையை எப்படியேனும்
காப்பாற்றி கொடுத்து விட மன்றாடினார்கள்.
“கடவுளின் ஆசீர்வாதம் என்பது ஆயிரம் தலைமுறைக்கு இருக்கும். ஆனால் சாபம் என்பது மூன்று
தலைமுறைக்குத் தான் இருக்கும். அதையே நம்மால் தாங்கி கொள்ள முடியாது. நிர்மூலமாகிப்
போவோம். அதனால் தான் நம் சந்ததியினருக்கு நாம் ஆசிர்வாதத்தை கொடுத்து செல்லவில்லை
என்றாலும் குறைந்தபட்சம் சாபத்தையாவது சேர்த்து வைக்காமல் செல்ல வேண்டும் என்பது.”
“சாமி, எங்கள் வம்சமே அழிந்து விடுமோ?”
“இந்த குழந்தை இருபத்தி ரெண்டு முடிந்து இருபத்தி மூன்றாவது வயதை கண்டு விட்டால் உங்கள்
வம்சத்தின் சாபம் நீங்கியது என்று புரிந்து கொள்ளுங்கள்”.
“ஆனால்…”
“ஆனால் என்ன சாமி?”
“எனக்கு எப்படி சொல்லுவது என்று புரியவில்லை”
“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சாமி”
“அது எப்படி முடியும் என்பது தான் யோசனையாக இருக்கிறது?”
“எது சாமி?”
“ஒரு பெண்ணால் ஏற்பட்ட சாபம். இன்னொரு பெண்ணால் தான் நிவர்த்தியாகும்”
“அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் சாமி?”
“எந்த குடும்பத்தால் உங்களுக்கு இப்படி ஒரு சாபம் எற்பட்டதோ அந்த குடும்பத்தில் உங்கள்
பெண்ணை கொடுத்தால் இந்த பெண் நீண்ட ஆயுளுடன் இருப்பாள்.”
“சாமி, நாங்கள் அந்த குடும்பத்தை எங்கே என்று தேடுவது? மேலும் அந்த குடும்பத்தில் இன்று
யாரும் இல்லையே சாமி”
அவர் சற்று நேரம் கண்களை மூடி தியானித்தார். கண்களை திறந்து அவர்களை பார்த்தவரின்
கண்களில் அளவிட இயலாத கருணை இருந்தது.
“உங்கள் பூஜையாலும் புண்ணியத்தாலும் தான தருமத்தாலும் இந்த பெண்ணிற்கு திருமணத்திற்கு
உரிய நேரம் வரும் போது அவனை அந்த முருகனே காட்டி கொடுப்பான்”
“அப்படி இல்லாவிட்டால்?”
“அப்படி இல்லாவிட்டால் இந்த பெண் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டுமானால் இவளுக்கு
நீங்கள் திருமணமே செய்து வைக்காமல் இருங்கள்”
உலகம்மை சொல்லி வந்த விவரத்தை கேட்டு கொண்டிருந்த இருவருக்கும் ஏதோ துப்பறியும்
கதையை கேட்டது போல இருந்தது.
இந்த நூற்றாண்டில் கூடவா சாபம் பாவம் என்று இருக்கும்?
ஆனால் உலகம்மை சொன்னது போல தானே நடந்திருக்கிறது.
“பாட்டி, நான் கொஞ்ச நாட்கள் வாழந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன்”
கெஞ்சினாள் சாரு.
“உனக்கு ஏதேனும் ஆயிற்று என்றால் அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியுமா?” கண்ணீர்
பெருக்கினாள் பாட்டி.
“என்னோடு நம் வம்சம் முடிந்து போகாமல் நானும் ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்வேன்
அல்லவா!”
“ அதைப் பார்க்க நாங்கள் உயிரோடு இருக்க வேண்டாமா?”
தளர்ந்து சரிந்தாள் சாருலதா தேவி. கண்கள் கௌதமை நிராசையுடன் பார்த்தது. அந்த கண்களில்
கண்ட ஏக்கத்தைக் காண சகிக்கவில்லை அவனுக்கு.
பெரியவர்களின் வார்த்தைகளும் பயமும் தேவையற்றது என்று சொன்னால் நம்ப
மறுப்பவர்களிடம் என்ன சொல்வது? அவர்கள் பயத்தை மதிக்காமல் தாங்கள் விரும்பியதை
செய்வோம் என்றாலோ அவர்கள் உயிரோடு இருக்க மாட்டோம் என்று சொல்லும் போது
அதையும் தாண்டி ஒரு விஷயத்தை செய்திட இயலாது.
தான் சாருவை திருமணம் முடித்து அவள் அவனுடன் வாழாமல் அல்பாயுசில் போக வேண்டுமா?
அல்லது எங்கேனும் கண்காணமல் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுசுடன் வாழ
வேண்டுமா?
தன்னைத் தானே கேட்டு கொண்டவன் தான் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து
கொண்டான்.
மறுப்பேச்சு பேசாமல் போய் வருகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லாமல் அவளை நிமிர்ந்தும்
பார்க்காமல் பையை எடுத்து தோளில் மாட்டி கொண்டு வெளியே போகும் கௌதமை நெடு நேரம்
பார்த்து கொண்டு நின்றாள் சாருலதா தேவி.
40
ஒரு திங்கட்கிழமை காலை வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் பையை தூக்கி தோளில்
போட்டு கொண்டு போனவன் இரண்டு நாட்கள் கழித்து வந்தான். வந்த போதே முகம் சரியில்லை.
சாப்பாடு இல்லை. தூக்கம் இல்லை. யாருடனும் பேச்சு இல்லை. அறையை விட்டு வெளியே
வரவேயில்லை. யார் போய் ஏதும் கேட்டாலும் உலகையே வெறுத்த சலிப்புடனே பதில்
சொன்னான்.
அவன் துயரம் எது என்று முதலில் புரியவில்லை பெரியவருக்கு. சாரு வேலையை ராஜினாமா
செய்து விட்டு போனதையும் அவளைத் தேடியே அவன் சென்றிருக்க வேண்டும் என்றும் ஊருக்கு
போய் வந்ததிலிருந்து இவன் தவியாய் தவிப்பதையும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று
கணக்கிட்டு காரணத்தை ஒருவாறு ஊகித்தார்கள். தாத்தா தந்தை தாய் என மூவரும் ஒரு சேர
அவன் அறையில் போய் அமர்ந்து கொண்டார்கள். மாறி மாறி பேச்சு கொடுத்தார்கள்.
அவன் பார்வையை போன்றே அவன் அறையும் வெறுமையின் வெப்பத்தால் தகித்தது.
பெரியவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. நீ எந்த பெண்ணை விரும்பினாலும் அவள்
எப்படி பட்ட பின்புலத்தினை உடையவளாக இருந்தாலும் நாங்கள் அவளையே உனக்கு
மனமுவந்து மணமுடித்து தருகிறோம் என்றார்கள். சாரு தானே அந்த பெண் என்று கேட்டார்கள்.
அவளிடம் தங்களுக்குமே நல்ல அபிப்ராயம் இருப்பதாகவும் சொன்னார்கள். அவளாக இருந்தால்
தங்களுக்குமே அது சந்தோஷம் என்றார்கள்.
பதில் பேசாமல் இருந்தவனை மீண்டும் மீண்டும் கேட்டார்கள் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று.
ஒருவழியாக மௌனம் கலைத்தான். அவர்கள் வீட்டில் தர மறுக்கிறார்கள் என்றான்.
தங்களுடைய சொத்தையும் செல்வாக்கையும் பெரிதென நினைத்திருந்தவர்கள் தங்களுடைய
மகனுக்கு கூட பெண்ணை தர மறுப்பார்களா என்று அதிசயப்பட்டு போனார்கள். காரணம்
கேட்டார்கள். ஒருவித தவிப்போடு முழுக்கதையையும் சொன்னான். அவனைப் போலவே இந்த
நூறாண்டில் கூடவா சாபம் பாவம் எல்லாம் இருக்கும் என்று அவனுடைய பெற்றோர்கள்
அதிசயப்பட்டார்கள்.
மெளனமாக கதை முழுவதையும் கேட்டு முடித்த ராஜசேகர் சொன்னார்.
“வாருங்கள். நாமே நேரில் போய் பெண் கேட்போம்”
“அப்பா, அவர்கள் தர மறுக்கிறார்களே? அதற்குரிய காரணமும் சரியானதாகவே இருக்கிறதே.
அப்புறம் எப்படியப்பா போய் கேட்பது?”
“நாம் நேரில் போய் கேட்போம்”
கண்டிப்புடன் சொன்ன பெரியவரை மறுத்து பேச முடியாமல் தங்கள் மகனின் எத்தை தின்னால்
பித்தம் தெளியும் என்ற நிலை புரிந்து மேற் கொண்டு விவாதித்து கொண்டிருக்காமல் எல்லோரும்
கிளம்பினார்கள்.
சிம்மபுரம் ஜமீன்.
பழைய கால நெடி வீசும் அந்த மாளிகையின் தர்பார் ஹாலில் தேக்குமர இருக்கையில்
அமர்ந்திருந்தார்கள். வந்தவர்களை உரிய விதமாக வரவேற்றிருந்த போதும் இத்தகைய
அந்தஸ்தானவர்களை நமக்கு சம்பந்தம் கொள்ள கொடுத்து வைத்திருக்கவில்லையே என்று மனம்
வேதனைபட கொஞ்சம் தர்மசங்கடத்துடனே இருந்தார்கள் கருணாகரனும் உலகம்மையும்.
கௌதமின் வாய் வார்த்தையாக கேட்டறிந்த சிம்மபுரம் ஜமினின் சரித்திரத்தை மீண்டும்
ஒருமுறையாக நேரடியாகவே உலகம்மையின் வாய் வார்த்தையாக கேட்டறிந்தார்கள்.
கௌதமின் பெற்றோருக்கு ஏதோ பழைய கால திரைப்படத்தை பார்ப்பது போன்ற ஒரு வித
உணர்வு ஏற்பட்டது என்றால் தாத்தா ராஜசேகரோ விவரிக்கவொண்ணாத ஒருவித கலவையான
உணர்வில் இருந்தார். அவருடைய வயோதிகமும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. தன்னை
மீறிய படபடப்புடன் இருக்கையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தார். அவருக்கு என்னவோ
செய்தது.
“தாத்தா என்ன செய்யுது? வாங்க இங்கே இருந்து போய் விடலாம்”
“இப்போது தான் வந்திருக்கிறேன். உடனே போய் விட முடியாது”
“இல்லை தாத்தா. உங்களுக்கு உடம்புக்கு சரியில்லை. வாங்க போய் விடலாம்”
“உடம்பு சரியாயிருக்கு. ஆனால் மனசு?”
“மனசிற்கு என்ன தாத்தா? ஓஹோ, இந்த கதை உங்களை கஷ்டப்படுத்தி விட்டதா?”
“ஏனப்பா, அப்படியா?”
“மாமா யாருக்கோ எப்போதோ நடந்த கதை உங்களை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்தணும்?”
என்று இந்துமதி கவலைப்பட்டாள்.
“நாங்களும் தானே கேட்டு கொண்டிருந்தோம்?”
“நீங்கள் எல்லோரும் கேட்டு கொண்டிருந்தீர்கள். நான் பார்த்து கொண்டிருந்தேன்”
“புரியவில்லை தாத்தா”
“உங்களுக்கு புரியாது.” உலகம்மையையும் கருணாகரனையும் வெகு நேரம் தீர்க்கமாக பார்த்து
கொண்டிருந்தவர் சொன்னார்.
“உங்களுக்கு இந்த கதையின் முன்கதை சுருக்கம் தான் தெரியும். எனக்கோ இந்த கதையின்
பின்பகுதியும் தெரியும்”
“எப்படி?எப்படி?” பரபரத்தார்கள் இருவரும்.
அங்கே இருந்த மற்றவர்கள் திகைத்தார்கள்.
“மீனாட்சியின் தம்பி வீரையன் ஓடி போனானே. ஞாபகம் இருக்கிறதா?”
“ஆமாம். அவன் எங்கே என்று தெரியாது. அவனுக்கு குடும்பம் இருக்கிறதா என்று தெரியாது.
இவள் வயதிற்கொத்த பையன் இருக்கிறானா தெரியாது. அப்படியே இருந்தாலும் நல்லநிலையில்
இருக்கிறானா தெரியாது”
“அந்த வீரையன் வெகுநாட்கள் எங்கெங்கோ ஓடி ஓடி இறுதியாக திருச்சி கலெக்டரிடம்
அடைக்கலம் அடைந்தான். அவனுடைய கதையை கேட்ட கலெக்டர் உள்ளூர் ஜமீனை
நேரடியாக பகைத்து கொள்ள இயலாமல் இவனை எப்படியேனும் காப்பாற்றி விடும்
நோக்கத்துடன் அவனை மதராசபட்டினத்திற்கு மற்றொரு வெள்ளைகார துரையிடம் அனுப்பி
வைத்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்த வீரையன் நாளடைவில் இரும்பு கழிவுகளை வாங்கி
விற்கும் வியாபாரம் செய்ய தொடங்கினான்”
“தாத்தா”
“அப்பா”
“அந்த வீரையன் பின்னாளில் தன் பெயரை வீரசேகர் என்று மாற்றி வைத்து கொண்டு தன் இன
தொழிலான இரும்பு வியாபாரம் செய்தான்”
“தாத்தா” ஓடி சென்று அவரை கட்டி கொண்ட கௌதமை மெல்ல தோளில் ஆதரவாக தட்டி
கொடுத்த பெரியவர் மேலும் சொன்னார்.
“நீண்ட நாட்கள் அவருடைய கண்களில் நின்ற காட்சி மனதின் ஆழத்தில் வடுவாக நின்று
விட்டது. ஒரு மகள் பிறந்தாள். மீனாட்சி என்று பெயர் வைக்கப்பட்ட அந்த பெண் குழந்தை
இறந்து விடவே மீனாட்சியே அவருக்கு குலதெய்வமாகிப் போனாள். அவர்களுடைய
குலதெய்வமான பிடாரி அம்மனே மீனாட்சியாகி போனது. தன்னுடைய மகனை மொட்டை
அடிக்க குலதெய்வம் கோயிலுக்கு கொண்டு வர முடியாமல் தவித்தார். எத்தனையோ நாட்கள்
இரவு மீனாட்சியுடன் ஊர் பெண்களையும் கொளுத்தியது அவர் தூக்கத்தை தொலைத்தது. அந்த
கூக்குரல் காட்டிற்குள் அவர் பின்னால் விரட்டி கொண்டு வந்ததை மறக்க முடியாமல்
அவதிபட்டார். தன்னுடைய உற்றார் உறவினரை பார்க்க முடியாமல் தன்னுடைய மகனுக்கு
அவனுடைய மண்ணை காட்டாமல் வளர்த்தார்.
👌👌😍
superb