7
அன்று ஈஸ்ட் ஹாம்மில் இருக்கும் முருகன் கோவிலில் என்னவோ விசேஷம் போலும். இல்லை இல்லை. தை மாதம் பிறந்திருப்பதினால் ஏதோ கல்யாணம் நடக்கிறது போலும். ஒரே கூட்டம்.
கோயிலில் என்ன விசேஷமோ தெரியவில்லை. ஒரே ட்ராபிக் ஜாம். கோயில் முகப்பு வரை பேருந்து செல்லும் என்றாலும் இன்று உற்சவத்தை முன்னிட்டு கோயில் இருக்கும் பகுதியில் ஒன்வே ஆக்கி ட்ராபிக்கை வேறு பாதையில் மாற்றி விட்டிருந்தார்கள். இந்த அந்நிய மண்ணில் நம் கோயிலுக்கு, அதில் நடக்கும் உற்சவத்திற்கு என்று இத்தகைய விசேஷ முன்னேற்பாடுகளை பார்க்கும் போது கௌதமிற்கு இந்த மக்களின் பெருந்தன்மையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் நம் தெய்வ வழிபாடு எத்தகைய நன்மதிப்பை இம்மக்களிடத்தில் பெற்றிருக்கிறது என்று பெருமிதம் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
அதனால் பேருந்தில் இருந்து இறங்கி நடந்தே கோயிலுக்கு வரும்படி ஆயிற்று. நடந்து வரும் வழியில் பார்க்கும் எல்லோருமே தமிழ் முகமாகவே தென்பட்டார்கள்.
அதுவும் இந்த பனிகால காலை வேளையில் கிட்டத்தட்ட எல்லோருமே கூடுமானவரை தமிழர்களின் பாரம்பரியமான உடையான வேட்டி புடவையில் வந்திருந்தார்கள்.
அந்த கோயில் இருக்கும் இடத்தை சுற்றி அதிகமான தமிழர்கள் வசிப்பதினால் அந்த இடமே ஒரு சின்ன தமிழகம் போல தான் இருக்கும். எங்கும் தமிழ். கோயில் உள்ளே சன்னதியை சுற்றி இருக்கும் சிறு சிறு கடைகளிலும் கூட தமிழ் கலாசாரத்துக்கு ஒப்ப உரிய பொருட்கள் விற்பனை செய்யப்டுகிறதனால் நம் ஊரில் கிடைக்கும் எல்லா வகையான பொருட்களும் அங்கே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
கோயிலுக்கு வெளியே காத்து கொண்டிருந்தான் கௌதம். இன்னும் மகேஷை காணவில்லை. இந்த டாக்டர் பயல் சகவாசமே கூடாது என்பது இதற்கு தான் என்று மனதிற்குள் அவனை திட்டி கொண்டே நின்றிருந்தான்.
அவன் கைப்பேசி அழைத்தது. டிஸ்ப்ளே மகேஷ் என்றது. எரிச்சலுடனே எடுத்து ஹல்லோ என்றான்.
“சாரிடா.”
“போய் தொலை. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் நீ வர?”
“நான் கிளம்பும் நேரத்தில் அர்ஜென்ட் கேஸ் ஒன்று”
“அது தான் சொல்லிட்டியே. சீக்கிரம் வா”.
“திட்டாதேடா. நான் இன்னும் கிளம்பவே இல்லை”
“என்ன? இன்னும் கிளம்பவே இல்லையா? என்னடா விளையாடறியா? எவ்வளவு நேரமா காத்து கொண்டு நிற்கிறேன்”
“மாப்பிளே கோவிச்சாக்காதே. இன்று என்னால் வர முடியாது”
“இன்னொரு நாளும் உன்னை நம்பி இப்படி நடுரோடில் நிற்கணுமா நான்?”
“வேண்டாம். வேண்டாம். நானே வர ஞாயிற்று கிழமை உன்னை வந்து பார்க்கிறேன்”
“அப்படின்னா சரி”
சாலையை கடந்து எதிர் வாடையில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு போக எத்தனிக்கையில் மீண்டும் கைப்பேசி அழைப்பு. அவனுடைய அம்மா இந்துமதி அவனை கைப்பேசியில் அழைக்கவும் அந்த கோபத்தை அப்படியே அவளிடம் இறக்கி வைத்தான் அவன்.
“ஏன்மா என்னவோ இந்த ஊரில் கிடைக்காத வஸ்து போல கண்டதையும் செய்து எவனாவது இளிச்சவாயன் அகப்பட்டு கொண்டால் அவனிடம் கொடுத்து விடறே. அவன் என்னடான்னா உன் பார்சலை வாங்கி கொள்ள அங்க வா இங்க வான்னு அலைகழிக்கிறான்”
“சுத்தமான நெய்யில் செய்ததுடா.”
“ஆமாம் ரொம்ப முக்கியம்”
“என்னப்பா ஆச்சு? மகேஷ் உன்னை பார்த்து கொடுப்பதாக தானே சொல்லி வாங்கி கொண்டு போனான்”
“எல்லாம் சரி தான். அவனால் வரமுடியவில்லை. அவனுக்காக முருகன் கோயில் வாசலில் காத்து கிடந்தது தான் மிச்சம்”
“முருகன் கோயில் வாசலிலா நிற்கிறாய்?”
“ஆமாம்.”
“அப்படியா……….?”
“அதுக்கு நீ ஏன் இப்படி எக்சைட் ஆவரே?”
“டேய் கௌதம் இன்று தைப்பூசம். முருகனுக்கு உகந்த நாள். உன்னை அந்த முருகனே கூப்பிட்டிருக்கிறான். தயவு செய்து உள்ளே போய் சாமியை தரிசனம் செய்து விட்டு வாடா”
“ஒரு வார்த்தை சொன்னால் அதை லீட் எடுத்து பத்து வார்த்தை பேச உன்னால் தான் ஆகும்.”
“உண்மையாக இன்னைக்கு முருகனுக்குரிய நாள்டா. வாசலில் நிற்பதற்கு பதிலா உள்ளே போய் தான் வாயேம்ப்பா.”
“ஓஹோ, அதனால் தானா இங்கே ஒரே கூட்டம். பஸ்ஸை திருப்பி விட்டிருக்கிறான். அவ்வளவு தூரம் நடந்தே தான் வந்தேன்”
“ஏன் உன் கார் என்னாச்சு?”
“ஓட்டுவதற்கு சோம்பேறித்தனமா இருந்தது. அதனால் பஸ்ஸில் வந்தேன்”
“எப்படியோ கோயில் வரைக்கும் வந்துட்டே. இதுக்காக வரலை. வந்தது வந்துட்டே. தயவு செய்து கோயிலுக்கு உள்ளே போ கௌதம்”
“போம்மா வேறு வேலை இல்லை. அதோ பஸ் வருது நான் போறேன்”
“கௌதம் ப்ளீஸ், கோயிலுக்கு போடா”
“போனால் உன் முருகன் என்ன கொடுப்பார்?”
“பொண்ணு கொடுப்பார்”
“ரைமிங்கா பேசறியா?”
“சட்டுன்னு வாயில் வந்தது”
“வரும். வரும். உனக்கு என்னை கண்டால் கிண்டலா இருக்கு”
“இல்லடா செல்லம். என்னை அறியாமல் சொல்லிட்டேன். சாரிப்பா”
“படிச்சி கிட்டு இருக்கிறவன் நான். உன்னிடம் கல்யாணம் பண்ணி வை என்று கேட்டேனா?”
“நெருப்புன்னா வாய் வெந்துடுமா? கல்யாணம்னா நாளைக்கே நடந்து விடுமா?”
“நாளைக்கே நடக்கப் போவது இல்லை என்று தெரிகிறது தானே?. அப்புறம் ஏன் இது மாதிரி எல்லாம் பேசி வெறுப்பேத்தறே?”
“ஆனால் யாருக்கு தெரியும்? உண்மையில் எதிர்காலத்தில் நீ கட்டி கொள்ள போற பொண்ணை உன் கண்ணிற்கு அந்த முருகன் காட்டினாலும் காட்டுவார்”
“ஏன்மா, நான் கோயிலுக்கு போகணும் என்பதற்காக எப்படி எல்லாம் பில்ட் அப் பண்றே நீ”
“நீ கேட்டதுனாலே சொன்னேன். நீ இதுக்குன்னு போகலை. வாசல் வரை போயிட்டு அப்படியே வராமல் உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டு விட்டு வாப்பா.”
“மாட்டேன் என்றால் நீ விடவா போறே? சரிம்மா நான் கோயிலுக்கு போறேன். பார்ப்போம் உன் முருகன் எனக்குன்னு யாரை தான் காட்டறார்ன்னு”
“போடா தலைபிரட்டை”
சிரித்து கொண்டே உள்ளே வந்தான். கோயிலின் உள்ளே, பின்னணியில், நாதஸ்வர இசை மங்களகரமாக இசைத்து கொண்டிருந்தது. முருகன் கண்கொள்ளாக் கோலத்தில் ராஜ அலங்காரத்தில் அம்சமாக இருந்தார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த போது கடைகள் கண்ணில் பட்டது.
மல்லி பூக்கள், அரளி சாமந்தி பூக்கள் கலந்து கட்டி ஒரு திவ்வியமான மணத்தை கொடுத்தது. கோயிலுக்கே உரிய பிரத்தியேகமான வாசனை மனதிற்கு ஒரு வித அமைதியை கொடுத்தது. என்னவோ தாய் மடி வந்து சேர்ந்த கன்றை போல் மனம் சொந்த இடத்திற்கு வந்தது போன்று நிறைவை கொடுத்தது. இதற்காகத் தான் எல்லோரும் கோயிலுக்கு வருகிறார்கள் போலும். யாருடைய அருகாமையும் எத்தகைய சூழலும் இத்தகைய நிம்மதியை கொடுத்தது இல்லை
என்பதை ஒப்பு கொள்ளத் தான் வேண்டும்.
8
கேளிக்கை விடுதிகளில் களியாட்டம் போடும் போது இத்தகைய நிறைவு இருக்கவில்லை என்பது புரிந்தது அவனுக்கு. நண்பர்கள் அனைவரையும் இங்கே அழைத்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
வாருங்கள் வந்து பாருங்கள். இந்த அமைதியற்ற உலகில் நாங்கள் மட்டும் எப்படி சமாதானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் அதன் காரணத்தையும் வந்து பாருங்கள்.
சின்ன சின்ன பேப்பர் தட்டில் வைத்து பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஒழுங்கான வரிசையில் இவனும் போய் சேர்ந்து கொண்டான். கையில் கிடைத்த பிரசாதத்தை உண்கையில் அம்மாவின் சுத்தமான நெய்யில் செய்த பலகாரம் நினைவிற்கு வந்தது. இத்தகைய ஒரு உணர்விற்காக தான் அம்மா இதை எல்லாம் கொடுத்து அனுப்பினாள் போலும். பாவம் அம்மா.
அம்மா சொன்னதை நினைத்து சிரித்து கொண்டான். எப்படி எல்லாம் கதை விடுகிறாள் இந்த அம்மா.
என் கண்ணில் காட்டுவாராமே ! அப்படியா.!
தங்க ரதம் புறப்பாடு நடந்து கொண்டிருந்தது. பிரகாரத்தில் ரதத்தை பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று கோஷித்து கொண்டே இழுத்து கொண்டு வந்தார்கள். வருபவர்களுக்கு வழியை விட்டு சற்றே பின்னுக்கு தள்ளி நின்ற போது தான் தன்னைப் போலவே பின்னுக்கு தள்ளி தன்னருகில் நின்ற அந்த பெண்ணை பார்த்தான்.
இந்த பெண்ணாக இருக்குமோ? அருகில் நின்ற பெண் நல்ல தாழம்பு நிறத்தில் சராசரி உயரத்தில் கண்களில் மையிட்டு பொட்டிட்டு பூவைத்து அம்சமான தமிழ் பெண்ணாக இருந்தாள். இவன் அவளை பார்க்கவும் அவளும் அவனை எதேச்சையாக பார்த்து மையமாக புன்னகைத்தாள். ச்சே. ச்சே. நம் புத்தி ஏன் இப்படி கெட்டு போயிற்று?. இந்த அம்மா ஏற்றி விட்டதினால் தானே?. என்னவோ நமக்கு பெண்கள் புதிது போல? இப்படி உற்று பார்த்து கொண்டிருக்கிறோம். அக்கம்பக்கத்தில் பார்க்கும் பெண்களை உற்று பார்க்க கூடாது என்று தீர்மானித்து கொண்டவனாக பார்வையை பிரகாரத்தில் இருந்த சிறு சிறு கடைகளில் திருப்பினான்.
இன்று மகேஷிற்காக, அவன் தொல்லை பொறுக்காமல் வந்தது எவ்வளவு நல்லதாக போயிற்று. விடுமுறை நாளில் அவன் வழக்கமாக கழிக்கும் பொழுதுகள் போல் தலைவலியை கொடுக்கவில்லை. வயிறும் மனதும் நிரம்பி இருந்தது.
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கொண்டே வந்தான். புத்தக கடையில் உள்ளே நுழைந்து ஒவ்வொரு புத்தகமாக எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தான்.
தத்துவ போதனை. ஆசிரியர் என்.சிவராமன். புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்டி கொண்டிருந்தான். வாழ்க்கையில் அகங்காரத்தை விட்டு ஓழிப்பது எப்படி என்றும் மனத் தாழ்மையுடன் இருப்பது என்பது எத்தகைய சுகமான அனுபவம் என்றும் விளக்கி இருந்தார். விவேகானந்தரின் சிகாக்கோ சொற்பொழி, ராமகிருஷ்ண பரமகம்ஸர் என்று ஒரு அலசு அலசி விட்டு இறுதியாக பாரதியின் கவிதையையும் தாகூரின் கீதாஞ்சலி புத்தகங்களையும் வாங்கி கொண்டு திரும்பினான்.
கடைசியாக கோவிலை விட்டு வெளியே வருவதற்கு முன் கொடி மரத்தின் கீழே விழுந்து சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்து போது தழைய தழைய கட்டியிருந்த புடவையின் கீழாக வெண்மையாக இரு அழகிய பாதங்கள் கண்ணில் பட்டது.
செவ்வரி ஓடிய வெண்மை நிற பாதங்கள் இரண்டு.
தரைக்கு போடப்பட்டிருந்த கிரானைட் கற்களின் குளிர்ச்சி கால்களின் வழியே உடலுக்கு பரவுவதனால் தானோ என்னவோ இரண்டு கால்களையும் முழுவதுமாக தரையில் அழுந்த பதிக்காமல் காற்றில் மிதப்பது போன்ற ஒரு பாவனையில் மிதந்தார் போல இருந்தது.
முருகன் கோவிலில் அம்மன் தரிசனமா?
இது எப்படி சாத்தியம்? என்று அம்மாவிடம் கேட்க வேண்டும். கேட்டு அம்மா திகைப்பதை பார்க்க வேண்டும் என்று நினைத்து, அந்த நினைவில் புன்னகைத்து கொண்டே நிமிர்ந்தான்.
சாருலதா தேவி..!
பார்த்தான்.
பார்த்தது பார்த்தவாறு, பார்வையை நகர்த்தாமல், பார்த்த விழிகள் நிலைத்து நிற்க, ஒரு வினாடி கூட இமைகள் மூடாமல், கண்கள் அசைக்காமல் பார்த்தான்.
தன் உள்ளே ஏதோ ஒன்று இடம் பெயர, அதன் வலியை கூட உணராமல் பார்த்தான்.
புலம் பெயர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக போவது போல தன்னுள் இடம் பெயர்ந்த ஏதோ ஒன்று அது இதயமா? உயிரா? தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று. தனக்குரிய எல்லாவற்றையும் நிமிஷத்தில் உதறி விட்டு அவளிடம் அகதியாக சரணாகதி ஆனதை கூட உணர்ந்து கொள்ள முடியாதவனாக..!
சுற்றம் மறந்தான். புறம் மறந்தான். தன்னையும் மறந்தவனாக பார்த்தான்.
என்ன அழகு.!
பார்த்தவனை, பார்த்த விழி பார்த்தவாறு, தன்னில் பார்வையை பதித்தவனை, அதையும் நொடி பொழுதும் இமை கொட்டாமல் பார்த்தவனை, பார்த்தது பார்த்தவாறு நின்றிந்தவனை அவளும் பார்த்தாள்.
அந்த பார்வையின் பொருள் புரியாமல் இல்லை அவளுக்கு. லேசாக கன்னகதுப்புகள் சூடாக, அவன் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்றே பார்வையை தாழ்த்தி, உடனே சுதாரித்து கொண்டவள், அதற்குள் அவனருகில் வந்து விட்டவள் கோவிலில் அவனை கண்டதும் அதிசயபட்டவளாக சேகர் நீங்களா? என்றாள்.
பொதுவாக கல்லூரியிலும் சரி, வெளி இடங்களிலும் சரி சாரு ஜீன்ஸ் அல்லது பான்ட் ஷர்ட் தான் அணிந்து இருப்பாள்.
ஆனால் இன்று..!
SAREE ODA THANI ALAGE ATHU THANA