9
தளிர் பச்சை வர்ண புடவையில் தங்க நிற சரிகையில் அதற்கு பொருத்தமான ஜாக்கெட்டில், கழுத்தில் வெண்முத்து மாலை அணிந்து காதில் சின்னதாக ஒரு ஜிமிக்கி, கூட கூட ஆட, முடியை பின்னி மல்லிப்பூ வைத்து, கை நிறைய வளையல்கள் போட்டு நெற்றியில் திலகமிட்டு அதன் மேலே மெல்லிய கீற்றாக திருநீறு இட்டு கண்களில் மையிட்டு, கால்களில் மெல்லிய வெள்ளி கொலுசு .! அடடா…! அற்புதமாக இருந்தாள்.
அவளுடைய உயரமும், மங்காத பொன் நிறமும், பிடிவாதக்காரி என்பதை உணர்த்தும் மேல் நோக்கிய கூரான முகவாயும், நடந்து வரும் போது ஒயிலுடன் கம்பீரமும், மொத்தத்தில் ராஜ தோரணையுடன் இருந்தாள்.
இது புற அழகு மட்டும் அல்ல என்பது அவனுக்கு புரிகிறது. இதை விட அழகிகள், பலதரப்பட்ட அழகிகள், பலநாட்டு அழகிகள் அவனுக்கு அத்துப்படி. இது அது அல்ல.
அதற்கும் மேலே..!
இது, இந்த அழகும் ஒயிலும் ஒய்யாரமும் தோரணையும் ஒப்பனையினால் மட்டும் வந்தது அல்ல. பிறப்பால் வந்திருக்க வேண்டும்.
யார் இவளோ?
எந்த நாட்டிற்கு இளவரசியோ?
அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அம்மா சொன்னது போல இவள் தானோ என் வாழ்க்கை துணையாக கூடியவள்?
மனது மயங்கிய போதும் அறிவு இடித்து இடித்தும், எச்சரிக்கை மணி அடித்தும் சொன்னதை அவனால் புறம் தள்ள முடியவில்லை.
இவளா..? இவளையா முருகன் கொடுப்பேன் என்று சொல்லி இருந்திருப்பார்? ச்சே. ச்சே. இருக்காது.
இருக்கும் இந்த ஊருக்கோ, படிக்கும் படிப்பிற்கோ, நாகரிகத்திற்கோ சற்றும் பொருந்தாதவள். மிடில் கிளாஸ் மென்டாலிட்டி. அவர்களுக்கே உண்டான மாரல் வேல்யூஸ். மாற்றிக் கொள்ளவே மாற்றிக் கொள்ளாத பிடிவாதம்.
இருக்காது. இவளாக இருக்காது. இருக்கவும் கூடாது.
மீண்டும் ஒருமுறை கர்பக்கிருகத்திற்குள் இருக்கும் முருகன் திசையை நோக்கி ஒரு கும்பிடு போட்டான். அப்பனே வேண்டவே வேண்டாமடா சாமி.
அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்து கொண்டு நிற்பதை கண்டு, அவன் எண்ணங்களின் ஓட்டத்தை ஒருவாறு யூகித்தவளாக முகம் சிவந்து நின்றாள் சாருலதா தேவி.
ஒருவேளை பாட்டி சொன்னது போல இவன் தானோ?
அவனை நன்றாக பார்த்தாள். எப்போதும் போல தான் உடை அணிந்து இருந்தான். என்றைக்கும் கல்லூரி வளாகத்திற்குள் பார்ப்பது போலத் தான் இருந்தான். கோவிலுக்கு வருபவனை போன்று எந்த விசேஷமும் அவனிடம் காணப்படவில்லை. ஆனால் இன்று நெற்றியில் சின்னதாக மெல்லிய திருநீறு அவனுடைய கருத்த நிறத்தை இன்னும் கூட்டி காட்டியது. களையான, மிடுக்கான, ஆண்மையின் சொரூபமான கிரேக்க சிலை போன்ற வசீகரிக்க கூடிய அவனை அவளும் ஒரு நிமிடம் கண் கொட்டாமல் பார்த்தாள்.
கண்களின் வழியே நுழைந்த காட்சி மனதிற்குள் புகுந்து ஒரே ஒரு வினாடி அவளை தடுமாற வைத்தது உண்மை தான். கண்கள் சொன்ன உண்மையை மனம் ஆமோதித்து கொண்டிருக்கும் போதே அவளுடைய அறிவு தனியாக அவள் காதிற்குள் கிசுகிசுத்ததை புறந்தள்ள முடியவில்லையே.
இவனா..? இவனையா முருகன் காட்டுவார் என்று பாட்டி சொன்னாள்?
இருக்காது. இவனுக்கு என்று ஒரு ஒழுக்கமான வாழ்க்கை முறை இல்லை. இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கொள்கை பிடிப்பும் இல்லாதவன். என்ன தான் பெற்றோர் செலவு செய்கிறார்கள் என்ற போதும் சதாகாலமும் பெண்கள் கூட்டத்திற்குள் இருப்பவன், ஊதாரியாக திரிபவன்.
கண்டிப்பாக இவன் இல்லை. இருக்கவும் வாய்ப்பில்லை. வேண்டவும் வேண்டாம். முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும். முருகனை நோக்கி ஒரு நிமிடம் கண்மூடி நின்றாள்.
இருவருமே ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து விட்டதினால் இனிமேல் பார்க்காதது போன்று போக முடியாது.
இருவரும் நண்பர்கள் இல்லை என்ற போதும், இருவருக்குமே ஒருவரை ஒருவர் வேண்டவே வேண்டாம் என்று தீர்மானித்து கொண்டவர்களாக இருந்த போதும், ஒருவரை ஒருவர் முகம் திருப்பி கொண்டு செல்வதற்கு இருவருக்கும் இடையில் துவேஷம் ஒன்றும் இல்லையே.
பரஸ்பரம் முகமன் கூறி நின்று ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி செல்வதற்கு அவர்களுக்கு அவசியம் இல்லாத போதும் அதற்காக முகத்தை முறித்து கொண்டு செல்வதற்கு என்று விசேஷமாக ஒரு காரணமும் இல்லையே.
ஆகையினால் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்ததும் சராசரியாகவே பேச்சை தொடர்ந்தார்கள்.
10
இவ்வளவு நேரமும் அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டு நின்றவன் சுதாரித்து கொண்டவனாக அவளை பார்த்து ஹல்லோ என்றான்
“என்ன ஒரே யோசனை?”
“இந்த கோயில் நன்றாக இருக்கிறது என்று நினைத்தேன்”
“ஓ, அதனால் தான் கோயிலுக்கு வந்தீர்களா?”
“ச்சே, ச்சே, அப்படி எல்லாம் இல்லை”
“நான் கூட சாமி கும்பிடத் தான் வந்தீர்களோ என்று நினைத்து விட்டேன்”
“ஏன் சாரு கலாய்க்கிறே? நானும் சாமி கும்பிடத் தான் வந்தேன்”
“ஓ..!அப்படியா?”
“அப்படித் தான். வேறு என்னன்னு நெனச்சே?’
“இல்லை! எப்படி அதிசயமாக கோயிலுக்கு வந்தீர்கள் என்று நினைத்தேன்?”
“நானாக வரவில்லை. என் கசின் வருகிறேன் என்று சொன்னான். கடைசியில் அவன் வரவில்லை”
“அதானே பார்த்தேன்.”
“நீ அடிக்கடி வருவாயா?”
“எப்போவாவது வருவேன்.”
“இன்றைக்கு என்ன விசேஷம்?”
“கோயிலுக்கு வருவதற்கு ஏதேனும் விசேஷம் இருக்கனுமா என்ன?”
“அப்படி எல்லாம் இல்லை தான். ஆனால்……….!” அவளை ரசனையுடன் பார்த்தவன் சொன்னான். “ஆனால் நீ இன்றைக்கு ரொம்ப விசேஷமாக இருக்கிறாயே. அதனால் தான் கேட்கிறேன்”
“என் பிறந்த நாள்”
“ஓ. ஹாப்பி பர்த் டே.”
“தேங்க்ஸ்.”
“ட்ரீட் இல்லையா?”
“என் நண்பர்களை மாலையில் வெளியே டின்னருக்கு அழைத்து போவதாக சொல்லி இருக்கிறேன்”
‘அப்படி என்றால் நான் உன் நண்பன் இல்லை என்று சொல்கிறாய். அப்படித் தானே?’
பதிலில்லை. மௌனம்.
சற்று நேரம் பொறுத்து பார்த்து விட்டு பதில் வராது என்று உறுதியாக புரிந்த பின்பு ம். நம் நட்பிற்கு எத்தனை பேர் காத்திருகிறார்கள். நான் போய் இவளிடம் அனாவசியமாக கெஞ்சி கொண்டிருக்கிறேனேன் என்று தன்னை தானே நொந்து கொண்டான்.
“உன் ரூமிற்கு தானே போகிறாய்? அல்லது வேறு எங்கேனும் அவுட்டிங்கா?”
“ரூமிற்கு தான் போகிறேன்”
“வா, நானும் உன்னுடன் வருகிறேன்”
“நான் மெட்ரோவில் போவேன்”
“நானும் கூடத் தான்”
“ஏன் உங்கள் வண்டி என்ன ஆயிற்று?”
“வண்டி ஓட்ட சோம்பேறித்தனமாக இருந்தது. அதனால் நானும் மெட்ரோவில் தான் வந்தேன்”
“ஓஹோஹோ”
சோம்பேறித்தனம் பட்டது தப்பு என்று இப்போது உணர்கிறேன்”
“போகட்டும். இப்போதாவது உணர்ந்து கொண்டீர்களே”
“அதுமட்டுமல்ல. இப்படி கோயிலில் ஒரு அழகு தேவதையை காண்பேன் என்று நினைத்திருந்தாலோ அல்லது அவளுடன் இப்படி ஒரு பிரயாணம் பண்ணக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தாலோ சோம்பேறித்தனத்தை உதறி தள்ளி விட்டு வண்டியை கொண்டு வந்திருப்பேன்”
“அடடா.! நீங்கள் வண்டி கொண்டு வந்திருந்தால் நான் உங்களுடன் வந்திருப்பேன் என்று நினைத்தீர்களா?”
“ஏன் வராமல் என்ன?”
“அப்படி எல்லாம் நான் உங்களுடன் வந்து விட மாட்டேன் சேகர்”
இவள் ஏன் மற்றவர்களைப் போன்று நம்மை கௌதம் என்று அழைக்க கூடாது என்று மனது கேட்டு கொண்டது. ஆனால் அவளுடைய பார்வையோ கிட்டே வராதே. எட்டியே நில் என்றது. அவள் அவனுடன் நட்பாக இல்லாவிட்டாலும் ஏதோ இந்த அளவிற்கு சகஜமாகவாவது இருக்கிறாளே.
“எனக்கு புரியவில்லை சாரு”
“அதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்கள்”
கௌதமின் வண்டியில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் அநேகமுறை பெண்கள் தான் அதிகம் காணப்படுவார்கள். தன்னையும் அவர்களில் ஒருத்தி போன்று நினைத்து கொண்டு விடக் கூடாது என்பதில் சாரு எப்பவுமே கவனமாக இருப்பாள். அதனால் தான் அவன் அவளை அழகாக இருக்கிறாள் என்று சொன்ன போதும் சரி. பார்வையாலேயே அவளை விழுங்கி விடுவது போல பார்த்த பார்வைக்கும் சரி, அதன் தொடர்ச்சியாக அவன் மனதில் எத்தகைய சிந்தனைகள் உலா வரக்கூடும் என்பதையும் அறிந்தவளாக இருந்த போதும் சரி, சராசரி பெண்களை போன்று தலை சுற்றி போனாள் இல்லை.
பேசி கொண்டே சாலையை கடந்து மெட்ரோ ரயில் நிலையம் போய் டிக்கெட் வாங்கி கொண்டு பிளாட்பார்மிற்கு வந்த போது ஒரு ரயில் கிளம்ப ஆயத்த நிலையில் இருக்கவே இருவரும் கால்களை எட்டி போட்டி கிட்டத்தட்ட அரை ஓட்டமாக விரைந்து ரயிலில் ஏறினார்கள். முன்னால் ஏறிய கௌதம் அவசரமாக ஏற முயன்ற சாருவின் தோளைப் பற்றி உள்ளே இழுத்து கொள்ளவும் ரயிலின் கதவு மூடி கொள்ளவும் சரியாக இருந்தது.
ரயில் வேகமெடுக்கவும் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த இருவரும் உட்புறம் நகர்ந்து காலியாக இருந்த இருக்கையில் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.
“நல்லவேளையாக இந்த மெட்ரோவில் கதவுகள் மூடி இருக்கிறது”
இருக்கையில் அமர்ந்தது முதல் வெளியே லண்டன் மாநகரை உயரத்தில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சாரு திடீரென்று சேகர் அவளிடம் பேசவும் திடுக்கிட்டவளாக அவனை திரும்பி பார்த்தாள். அவள் தன் முகத்தை பார்ப்பதை கண்டு மீண்டும் தான் சொன்னதை திரும்ப சொன்னான் கௌதம் சேகர்.
“ரயில் பயணம் நல்ல பாதுகாப்பாகத் தான் இருக்கிறது”
“ஆமாம்” என்றாள் பதிலுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று.
“கதவு உடனே மூடி கொள்கிறது”
ஏன் இவன் இதை ஒரு பெரிய விஷயமாக சொல்லி கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. நம்மூரில் சாதாரன டீலக்ஸ் பஸ்களே கதவை மூடிக் கொண்டு தானே செல்கிறது. இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? புரியவில்லை.
nice