Skip to content
Home » இதமான இதயவலி (சிறுகதை)

இதமான இதயவலி (சிறுகதை)

இதமான இதயவலி

Thank you for reading this post, don't forget to subscribe!

ஷாலினியின் அலைப்பேசி சிணுங்க, உதட்டை கடித்தபடி “சொல்லு ஹரிஷ்” என்றாள்.
“ஆபிஸ் முடிஞ்சு சீக்கிரம் வந்துட்டேன். வீடு பூட்டி இருக்கு. பாப்பாவும் நீயும் எங்க போனிங்க?” என்றான்.

“இ..இங்க கொஞ்சம் தள்ளி வாக்கிங்” என்றாள் ஷாலினி.

“வாக்கிங்கா.. சரி.. இடத்தை சொல்லு. நான் வந்து உன்னையும் பாப்பாவையும் பிக்கப் பண்ணிடறேன். அதோட இன்னிக்கு செலரி இன்கிரிமெட் செய்திருக்காங்க. டின்னருக்கு ஹோட்டலுக்கு போகலாம்.” என்றான்.

“சூப்பர் ஹரிஷ். அப்ப நீங்க பைக் எடுத்துட்டு வாங்க. நானும் பாப்பாவும் வெயிட் பண்ணறோம்” என்றாள்.

“வான்னா… எப்படி? எங்கயிருக்க?” என்றான்.

“ஹரிஷ்… லொகேஷன் ஷேர் பண்ணறேன். திட்டாம வந்துடு. ப்ளீஸ்” என்று துண்டித்தாள்.

‘திட்டாம வரவா?’ என்று வாட்சப்பை கவனிக்க ஷாலினி அனுப்பிய இடத்தை காட்டியது.

ஹரிஷோ ‘இவளை இங்க போகாம எத்தனை தடவை தவிர்த்தேன். இன்னிக்கு குழந்தையை தூக்கிட்டு போயிருக்காளே’ என்று கடுகடுத்து பைக்கை உயிர்பித்தான்.

ஷாலினியோ ‘எத்தனை முறை கல்யாணம் ஆனதிலருந்து இந்த பார்க்ல ஜோடியா கொஞ்ச நேரம் உட்காரலாம்னு கேட்பேன். ஹரிஷ் நாட் இன்ட்ரஸ்ட்னு சொல்லி தவிர்ப்பார். அட்லீஸ்ட் கன்சீவா இருந்தப்ப கால் வீக்கமா இருக்கு ஹரிஷ் பார்க்ல வாக் பண்ண வாங்கன்னு கூப்பிட்டப்பவும், மாடில நடக்கலாம்னு கூட்டிட்டு போயிட்டார். இன்னிக்கு சனா குட்டி கூட வந்துட்டேன்.’ என்ன சொல்ல போறாரோ’ என்று ஹரிஷிற்காக காத்திருந்தாள்.
ஷாலினி ஹரிஷிடம் இந்த பார்க்கில் சற்று காலார நடக்கலாமென்று பல முறை கணவனிடம் கேட்டிருந்தாள். அப்பொழுது எல்லாம் கண்டிப்பாய் தவிர்த்துவிட்டான்.

இன்று சனாவின் சாக்கில் வந்துவிட்டாள். ஹரிஷ் வந்து ஏதேனும் திட்டுவானோ என்று சனாவை பார்த்து நின்றாள். எப்படியும் சனா மீது பழியை போட்டால் ஹரிஷ் ‘கப்சிப்’பென்று ஆகிடுவான்.

சனா பிறந்ததிலிருந்து ஏதேனும் ஆசையிருந்தால் அவள் பெயரை உச்சரித்தே காரியம் சாதிக்கின்றாள் ஷாலினி.

இப்படி தான் ஹரிஷின் பிடித்த சட்டையில் ஷாலினியின் புதுப்ளவுஸ் சாயம் ஒட்டிலிட, ‘சாரிங்க சனாவை குளிக்க வைக்கும் போது அவ தான் டிரஸை மிக்ஸ் பண்ணி தண்ணில விளையாடினா. ப்யூ செகண்ட்ல கலர் ஒட்டிடுச்சு’ என்று மகள் மீது பழி போட்டு நழுவினாள்.

சனா என்றாலே ஹரிஷுக்கு கெள்ளைப்பிரியம் என்பதால் மற்ற எந்த விஷயத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டு மகளோடு கொஞ்சுவான்.

இன்றும் சனாவை வைத்து பூங்காவிற்கு வந்தாயிற்று. ‘உன்னை இங்க வரவேண்டாம்னு எத்தனை முறை சொன்னேன்’ என்று ஹரிஷ் கேட்டால், ‘உங்க மக தான் அழுது அலைப்பறை செய்துட்டா’ என்று கைகாட்டி விடலாம். அப்படி தான் சனா துள்ளி குதிக்காத குறையாக மற்ற குழந்தைகளோடு விளையாடி திரிகின்றாள்.

குடியிருப்பு பகுதியில் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்ட குழந்தைக்கு மற்ற குழந்தைகளையும் விளையாட்டும் பிடித்திட, அங்கும் இங்கும் ஓடி விளையாடுவதை ஷாலினி ரசித்தாள்.

அவளெதிரே குழந்தை சனாவை தூக்கிய ஹரிஷோ, “கிளம்பு” என்று ஷாலினியை அழைக்க, “கொஞ்ச நேரம் இங்க உட்காருங்களேன். பாப்பா எவ்ளோ அழகா விளையாடறா தெரியுமா?” என்று அமர்ந்தபடி கூற, “பச் இப்ப எந்திரிச்சு வர்றியா இல்லையா?” என்று கத்தாத குறையாக கூறினான்.

ஹரிஷ் சாமன்யத்தில் கோபம் கொள்ளும் மனிதன் இல்லை. அதோடு சனாவுக்கு இரண்டரை வயது முடிய, மீண்டும் கருவுற்றதாக போன வாரம் தான் தெரியவந்தது. அதனால் அவனது இந்த பேச்சு வித்தியாசம் தரவும் ஷாலினி மெதுவாக எழுந்தாள். அப்படியும் ஹரிஷ் பேச்சில் சற்று தள்ளாடினாள்.

“ஏய்… கன்சீவா இருக்க இப்படி தான் அஜாக்கிரதையா எழுந்துக்கறதா” என்று அதற்கும் சிடுசிடுத்தான்.

ஷாலினி முகம் தூக்கி ஹரிஷ் பின்னால் நடந்தாள்.

சனாவோ தந்தை தூக்கியதும் அப்பாவை கட்டிக்கொண்டாள். ஹரிஷை சுரண்டி சுரண்டி ஊஞ்சலை காட்டினாள்.

“ஊஞ்சலில் கூட்டம் அதிகமாயிருக்கு. நாம நம்ம வீட்டுலயே ஊஞ்சல் வாங்கிடலாம்” என்று கூறி அழைத்து சென்றான்.

ஷாலினி முகம் கொஞ்சமும் தெளிவில்லாமல் உம்மென்று வர, பூங்காவை விட்டு வந்ததும், பைக்கில் குழந்தையை முன்னே வைத்து, ஷாலினியை பின்னால் அமர வைத்து பைக்கில் மிதமான வேகத்தில் சென்றான்.

அடிக்கடி கண்ணாடியில் மனைவி முகத்தை கண்டவன், “என்னாச்சு” என்றான்.‌

“ஒன்னுமில்லை” என்று சத்தமாக கூறியவள், ‘ஏதாவது கேட்டா அப்படியே எனக்காக செய்துட்டு தான் மறுவேலை பார்ப்பிங்க’ என்று முனங்கினாள்.

ஹரிஷ் ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்திவிட்டு, “ஏய் ஷாலு என்ன முனங்கற?” என்றான்.‌

“ஒன்னுமில்லை பசிக்குது வண்டியை எடுங்க” என்றாள்.

“இப்படி உம்முனு வந்தா நான் எடுக்க மாட்டேன்.” என்று ஹரிஷ் கூற, சனாவோ தந்தையின் பைக் சாவியை எடுத்தாள்.

“பார்க்ல வந்தது குற்றமா? அப்படி கத்தறிங்க. எத்தனை முறை இங்க வர கூப்பிட்டேன். சரி உங்களை தொந்தரவு செய்யாம குழந்தையை கூட்டிட்டு வந்தேன். என்னவோ திட்டறிங்க. அதுவும் உங்களால் மறுபடியும் கன்சீவாயிருக்கேன். வரவர பாசமேயில்லை” என்று அடுக்கினாள்.
லேசாக அழ முயன்று இதற்கெல்லாம் சிணுங்க வேண்ஞுமா என்று முதிர்ச்சியாகவும் நடந்தாள்.

“இப்ப நான் என்ன செய்யணும்? இந்த முகம் விலைமதிப்பில்லாத புன்னகையை அணிய?” என்று கேட்டான்.

“பச்.. நான் சொல்லற ஹோட்டலுக்கு போங்க. வண்டியை எடுங்க” என்று கூறினாள்.

“ஓகே.. நீ சொன்ன ஹோட்டலுக்கு போறேன் மகாராணி” என்றான் ஹரிஷ். அவன் கூறிய தோரணையில் ஷாலினி சிரித்து விட்டாள்.

மீண்டும் இருசக்கர வாகனம் பறந்தது.

ஹரிஷின் தோளைத்தட்டி, “ஹரிஷ் ஹரிஷ்… இந்த ஹோட்டலுக்கு போகலாமா? டெரஸ்ல கார்டனுக்கு நடுவுல இருக்கும்னு கேள்விப்பட்டேன். போகலாமா?” என்றதும் ஹரிஷ் ஹோட்டலை பார்த்து ஷாலினியின் முகமலர்வில், மறுக்காமல் அங்கே பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினான்.

அந்த ஹோட்டலை வெறித்தவன், நீண்ட நெடிய மூச்சை வெளியிட்டு, ஷாலினிய பார்த்து மகளை தன்னிடம் வாங்கிக் கொண்டு நடந்தான்.‌

ஹரிஷ் முகம் பலவித மாறுதலுக்கு உள்ளானாலும் தன்‌மகள் சனாவை தன்னுடன் அணைத்து நடந்தான்.‌

தனிதனி பிரிவாக இருந்த உணவகத்தில், நால்வர் இருக்கையில் வந்தமர்ந்தான்.

எதிரே மலர்ச்சியோடு ஷாலினி, “அப்பா… பூ..” என்று சனா மழலையில் பேச, “ம்ம்” என்றவன் சனாவை ஏறிட்டு தொண்டைக்குழியில் எச்சிலை விழுங்கினான்.

"ஹரிஷ் இந்த ஹோட்டல் லவ்வர்ஸுக்கும், புதுமணத் தம்பதியருக்கும் பேமஸ் தெரியுமா? கல்யாணமான புதுசில் இங்க வர ஆசையா இருந்தது. இந்த பார்க் பக்கமே நீங்க என்னை அழைச்சிட்டு வராததால் இங்க வர்ற சான்ஸ் இல்லாம போச்சு. இன்னிக்கு தான் சனாவோட வந்திருக்கோம். அடுத்த வருடம் வயிற்றுல இருக்கற குழந்தையோட வரலாம். நால்வர் சீட் பேமிலியா சாப்பிடலாம் இல்லையா?!" என்று கேட்டாள். 

ஹரிஷ் ஆர்டர் தந்துவிட்டு ஆமென்று உரைத்தான்.

இதே போல சற்று வார்த்தை மாற்றி போட்டு சனாவும் உரைத்திருந்தாள். ஹோட்டலில் மட்டுமா? சற்று முன் பூங்காவிலும் சனாவின் சிரத்திற்கு தன் தோளை தாரை வார்த்து கைப்பிடித்து கதை அளந்தவனே.
அன்று ஆசைஆசையாக நிறைய பேசியதால் இன்றுவரை பூங்காவை தவிர்த்தான். இதோ இந்த ஹோட்டலில் கூட “கண்டிப்பா சனா” என்று கொஞ்சி பேசி சிரித்தவனே ஹரிஷ்.

இன்றும் சனா அருகே அமர்ந்திருக்கின்றாள். ஆனா ஷாலினிக்கும் தனக்கும் பிறந்த மகளாக. அவன் காதலித்த சனா தான் அவள் தந்தையின் பேச்சால் காதலை துறந்து, ஹரிஷிடம் ‘மன்னித்திடு.. மறந்திடு…’ என்று கூறி ஒரேடியாக மாற்றான் மனைவியாக மாறிவிட்டாளே.

இதயத்தில் இதயவலியோடு தன் குழந்தை சனாவுக்கு ஊட்டிவிட்டு, உதட்டை பேப்பரால் துடைத்தான்.

காதலித்த பெண் சனாவோடு அவன் ஆசையும் கனவையும் பேசியது போல ஷாலினி ஹரிஷிடம் கதைத்துக் கொண்டிருந்தாள். என்னவொரு வித்தியாசம் அவள் கனவு காணவில்லை. நிஜத்தில் ஹரிஷோடு வாழ்கின்றாள். ஹரிஷுமே சனாவின் பெயரை மகளுக்கு வைத்து இதயத்தில் இதயவலிக்கு மயிலறகாய் தடவி விட்டு ஷாலினியோடு இதயமாற்று சிகிச்சை செய்து கொண்டான்.

-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “இதமான இதயவலி (சிறுகதை)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *