Skip to content
Home » இரசவாதி வித்தகன்-17

இரசவாதி வித்தகன்-17

இரசவாதி வித்தகன்-17

இப்ப என்ன பேசிட்டோம்? ஏன் இப்படிக் கத்தினான்?

இங்க வந்ததிலருந்து பேசறேன் சண்டை போடறேன், என்னிடம் மல்லுக்கு நிற்பான். ஆனா இந்தளவு வெடுக்குனு பேசலையே. என்னாச்சு? ஒரு வேளை அத்தையை அப்பாவை பிடிக்கலையா? இதே தான் மஞ்சரிக்குள் ஓடியது.

பார்வதி காலை உணவை செய்து வைக்க, “இதைக் கொடுத்துட்டு வா” என்று மகளை ஏவினார்.

மயூரனோ “அத்தை… அவனுக்குச் சாப்பாடு வேண்டாமாம். பாட்டி சமைக்கிறேன்னு சொல்லிட்டாங்க. சாரி நான் தான் சவீதா தம்பி ரித்விக் கூடப் பேசியதுல சொல்ல மறந்துட்டேன்.” என்று மன்னிப்பு கேட்டான்.

“இருக்கட்டும் மயூரன். இதையும் சேர்த்து சாப்பிடட்டும். அண்ணி சமைச்சது டி.” என்று மகளிடம் திணிக்க முயன்றார்.

“ம்மா… அவன் கடிச்சி கொதறாதது தான் மிச்சம். நம்ம வீட்டுக்கு வரப்பிடிக்கலைனு அவன் முகத்துல பளிச்சினு தெரியுது. தயவு செய்து எதுவும் கொடுத்து விடறேன்னு என்னை அனுப்பாத.

என்னவோ பாட்டியை அம்போனு விட்டதா பேசறான். எரிச்சலா இருக்கு.

அத்தைக்கு அக்கறை இருந்தா அங்க வரச்சொல்லி சமைச்சி தரட்டும்னு பேசுறான். அத்தை இங்க இருப்பதை அவன் விரும்பலை. அப்பா வேற என்ன பேசி தொலைச்சரோ? இப்ப நான் கொண்டு போய்க் கொடுத்தா என் மூஞ்சில விசிறிடுவான்.

தேவையேயில்லை…. அவனா சாப்பிட வரமாட்டான். நானும் கொண்டு போய்க் கொடுக்க மாட்டேன். வேண்டுமின்னா மயூ அத்தானே எடுத்துட்டு போகட்டும்.” என்று முடிவாய் கூறினாள்.

ஹாலில் டிவியின் ஒலியை குறைத்த ஐயப்பன் “ஏன் அத்தை மயூரனுக்குச் சமைக்கலையா. அவனுக்கும் சமைச்சிட்டா என் தங்கைக்கு வேலை மிச்சம்ல.” என்று இடக்காய் கேட்டார்.

“மாமா… அங்க மீனா பாட்டி அவங்களுக்கும் வித்தகனுக்கும் தான் சமைக்கறாங்க. எங்களுக்குச் செய்யலை.” என்று நிலையை விவரித்தான் மயூரன்.

“அம்மா ஏன் தான் இப்படிப் பண்ணறாங்களோ?” என்று பார்வதி அமைதியாகச் சென்றிட, அமலாவோ வித்தகனை காண முடிவெடுத்து மேகவித்தகனை போனில் அழைத்தார்.

மயூரன் போனிலிருந்து வித்தகனுக்கு அழைக்கவும், “சொல்லு” என்ற கரடான குரலில் கேட்டான் வித்தகன்.

“நான் அம்மா பேசறேன் வித்தகா. இங்க வரமாட்டியா?” என்று மென்குரலில் கேட்டார்.

“அங்க வரமாட்டேன்.” என்று பளிச்செனப் பதில் தந்து பேசினான்.

“ஏன்யா.. அம்மா மேல கோபமா?” என்று வருத்தமாய்க் கேட்டார் அமலா.

“சேசே… இல்லைம்மா. உங்க மேல என்ன கோபம். உங்களுக்கு உங்க அண்ணா வீடு பிடிச்சிருக்கு. போய் இருக்கிங்க. எப்ப உங்க வீட்டுக்கு வரணும்னு தோன்றுதோ அப்ப வந்து இங்க ஒரு பையன் இருப்பதை நினைவு வச்சி என்னிடம் பேசுங்க. சமைத்து தாங்க, ஏதேனும் பேசணும்னா பேசலாம்.

அதை விட்டு நான் ஏதாவது பேச உங்கண்ணா நந்தி மாதிரி என் தங்கச்சி அழுவறா, என் தங்கச்சியைக் கஷ்டப்படுத்தாதே, இப்படி என்னிடம் பேசினா. எனக்குப் பிடிக்காது.

என்னை மதிக்கிற இடத்துல நான் இருப்பேனே தவிர, மதிக்காத இடத்துல ஒரு நிமிஷம் கூட நிற்க மாட்டேன்.” என்று அறிவித்தான்.

“அண்ணா… உன்னை மதிக்காம இல்லையேப்பா” என்று பேசவும், “ம்மா.. நான் ஒன்னும் ஐந்து வயசு பத்து வயசு பையன் இல்லை.

முதல்லயிருந்தே அவருக்கு என்னைப் பிடிக்காது. இதுல ஜாதகம் அதுயிதுனு நான் கூடயிருந்தா குடும்பம் நிம்மதி குலையும், உயிர் போகும், என்னை அம்மா அப்பா கூடிவேயிருக்கக் கூடாதுனு ஜாதகம் பார்த்து கதை திரிச்சதே அவர் தான்.

அதுக்கு ஏத்தமாதிரி அப்பா இறந்துட்டார். நீங்களும் ஜெயிலுக்குப் போனிங்க. குடும்பமும் நிலைக்குலைந்து போயிடுச்சு.

ஏதோ இப்ப தான் மயூரன் கல்யாணம் என்று வந்திருக்கேன். அவன் கல்யாணம் முடியவும் அடுத்தச் செகண்ட் பிளைட் ஏறிடுவேன்.

உங்களுக்கு விருப்பம் இருந்தா என்னோட பேச பழக ஆசைப்பட்டா, இந்த ஜாதகம் ஜோசியம்னு மேல நம்பிக்கை இல்லைனா இங்க வாங்க.

எனக்கு அண்ணா தான் கோவில். இங்க வர்றது பிடிக்கலைனா பரவாயில்லை. நான் கவலைப்பட மாட்டேன். உங்களைத் தப்பா நினைக்க மாட்டேன். என் தலைவிதி எல்லாரும் எப்பவும் போல ஒதுக்கறாங்கனு நான் என் லைப்பை வாழ போயிடுவேன். பேஸிக்கலி நான் பிராக்டிகலான ஆளு.

எனக்கு இந்தச் செண்டிமெண்ட்(sentiment), டீயர்ஸ்(tears), உறவுகளைத் தக்கவச்சிக்க எக்ஸ்பிளனேஷன்(explaination) எதுவும் தேவையில்லை. என் விரோதியே வீட்டுக்கு வந்தாலும் நான் சந்தோஷமா கவனிப்பேன். பிகாஸ். அதான் நான்.” என்று நீண்ட உரையாற்றி “ஓகே ம்மா… ஆபிஸ் கால் வரவேண்டியது. வைக்கறேன் பை மா. லவ் யூ.” என்றான்.

அமலா மெதுவாய் “சரிப்பா.” என்று துண்டிக்கப்பட்ட போனை கவனித்தாள்.

“என்னம்மா காயப்படுத்தற மாதிரி பேசினானா?” என்றதும் தலையை இல்லையென ஆட்டி, சின்னவன் பேசியதை விவரித்தார் அமலா.

மஞ்சரியோ அறையிலிருந்து கேட்டுவிட்டு, ‘அப்பா தான் வரவிடாத அளவுக்குக் காயப்படுத்திட்டார்’ என்று எண்ணினாள்.

அவளுக்கு அக்கணமும் தெரியவில்லை. அவன் வராததற்குத் தானும் தனது ‘மயூ அத்தான்’ என்ற பேச்சும், ‘பார்ஷியாலிட்டி’யுமெனத் துளியும் நினைவுக்கு வரவில்லை.

அமலாவோ முடிவெடுத்தவளாகத் தனது தோட்டத்து வீட்டுக்கு சென்று பெட்டி படுக்கையைக் கட்டினாள்.

மதியம் சாப்பிட்டதும் மயூரனோடு செல்ல தயாராக, ஐயப்பன் தடுத்தார்.

“இல்லைனா இங்கயிருந்து என்ன பண்ணப்போறேன். அங்க இருந்தாலும், இங்க இருந்தாலும் என் மனக்காயம் மாறிடப்போறதில்லை.

குறைந்தப்பட்சம் என் மகனோட, இந்த இடைப்பட்ட நாள்ல இருந்த திருப்தியாவது எனக்குக் கிடைக்கட்டும்” என்றார் அமலா.

ஐயப்பனுக்கு அதிருப்தியானது. ஆனால் மயூரன் மகிழ்ச்சியாக “அம்மா அங்க வர்றிங்களா. அச்சோ சந்தோஷமா இருக்கும்மா.” என்று பெட்டியை தூக்கவும் ஐயப்பன் தடுக்கவில்லை.

அது என்னவோ மயூரன் என்றால் கொள்ளைப் பிரியம். சிறுவயதிலிருந்து வளர்த்த பாசம். மகனை விட மகளை விட மருமகனை அப்படிக் கவனித்தார்.

ஆம் ‘மருமகன்’ என்ற ரீதியில். இன்று அடியோடு மாறியதை எண்ணி சற்றுக் கவலைப்பட்டாலும் மயூரன் மகிழ்ச்சியைத் தடைப்படுத்த எந்த வழியும் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனோ மகளுக்குத் தலையில் என்ன எழுதியதோ அதுப்படி நடக்கட்டும் என்று சோர்ந்துவிட்டார்.

பார்வதியும் அமலாவை வழியனுப்பவே எண்ணினார்.

தன் பெரிய அண்ணன் இறந்ததும் நாலாப்பக்கமுமாகச் சிதறிய அவரது குடும்பம் இன்று ஒன்றிணைந்ததாக மகிழ்வது தானே சிறந்தது.

மஞ்சரி மட்டும் அத்தையை அணைத்து அழுது விடுவித்தாள்.

“என்ன பார்க்க தினமும் வந்துடணும்.” என்று மஞ்சரியிடம் கோரிக்கை வைத்தார் அமலா.

“ஜெயிலில் இருந்தப்பவே வருவேன். இப்ப வரமாட்டேன்” என்று அவளும் விடைக்கொடுத்தாள்.

சேதுபதியோ அண்ணி, அண்ணன் மகன் மயூரன் இருவரும் தான் வளர்த்த வித்தகனோடு உறவாடி பாசம் வைத்தால் தன்னை ஒதுக்குவானோ என்று கவலையோடு அமலாவை நோக்கினார்.

ஆனாலும் அண்ணி அடைந்த கஷ்டம் போதும். இருமகனோடு வாழட்டும் என்று எண்ணினார்.

அமலாவோடு சேதுபதி மயூரன் இருவரும் வித்தகன் இருக்கும் வீட்டுக்கு நடந்தார்கள்.

வாசலில் இருந்த சில தலைகள் அமலாவை கண்டதும் கிசுகிசுக்க ஆரம்பித்தது. அமலாவோ சங்கடமாய் நடந்து செல்ல, மயூரனுக்குப் பழகி போனதால் அன்னை கைப்பிடித்து நடந்தான்.

வித்தகன் வேலை பார்த்துக் கொண்டிருந்ததை விடப் பெரும்பாலும் போன் அழைப்பில் பேசி கொண்டிருந்தான்.

அன்னை வருவதைக் கண்டதும் அலட்டிக்காமல் பார்த்தான்.

மயூரன் தான் அம்மா வந்துட்டாங்க டா.” என்று ஆர்ப்பரித்தான்.

“நம்ம அம்மா நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க இதுல என்ன ஆச்சரியம்” என்று தமையனிடம் பேசி, “அம்மா… நைட்டு ஆப்பத்துக்கு மாவு ஆட்டிடு. மீனுவிடம் சொன்னா முழிக்கறாங்க” என்று இயல்பாய்க் கடந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

3 thoughts on “இரசவாதி வித்தகன்-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *