Skip to content
Home » இரசவாதி வித்தகன்-4

இரசவாதி வித்தகன்-4

இரசவாதி வித்தகன்-4

சேதுபதியோ சற்று உறங்கி எழுந்து முகமலம்பியவர், வித்தகனிடம் “பார்வதி இங்க வரலை… ஐயப்பன் இங்கயெல்லாம் அனுப்ப மாட்டான். அதனால நான் ஓரெட்டு பார்த்துட்டு வந்துடறேன்” என்று செருப்பை மாட்டினார். இங்கு வந்ததும் தனது பாரம்பரிய வேஷ்டியை கட்டத்துவங்கவும் லெதர் செருப்பையும் வாங்கியிருந்தார்.

வித்தகனோ, ‘பார்வதினா… அத்தை. அத்தையோட பொண்ணு தானே அந்த மஞ்சரி?’ இங்க வந்து லந்து பண்ணிட்டு போனவளை அங்க போய் ஒருகை பார்க்கும் முடிவோடு, “சித்தப்பா ஒரு நிமிஷம். நானும் உங்களோட வர்றேன்.” என்று ஷார்ட்ஸும் கையில்லாத டீ ஷர்டும் அணிந்து ஸ்போர்ட்ஸ் ஷூவை அணிந்தான், சேதுபதி லேசாய் தயங்கினார்.

“என்ன சித்தப்பா… போகலாம். ஒரே ரூம்ல இருந்து என்ன பண்ணறது. அதுவும் நெட் வசதி விட்டு விட்டு வருது. பதினைந்து நாள் இங்க தானே சுத்தி பார்த்தாகணுமே.” என்றதும் சேதுபதிக்கு அவன் பேச்சு நியாயமாய்பட்டதும், கூடவே அழைத்துச் சென்றார்.

சேதுபதி வழியெல்லாம் மறக்காமல் தன் பசுமை நினைவை மனதிலேயே மீட்டியபடி வந்தார்.

பார்வதி வீட்டின் முன் வரவும் உள்ளே செல்ல மனம் முரண்டியது. ‘இதுவரை வந்துவிட்டாய்… இங்கு வர என்ன தயக்கம்’ என்று மனசாட்சி கேலியில் இறங்கியது.

“வாங்க சித்தப்பா. ஏன் யோசிக்கறிங்க இதுவும் நம்ம வீடு தான்” என்று உரிமையாய் கூப்பிட, மயூரனோ “மாமா… நீங்களும் சித்தப்பாவை கூப்பிடுங்க” என்று கேட்டதும் மனம் உருகிவிட்டார் ஐயப்பன்.

தாய் மாமன் அல்லவா. ஐயப்பனோ மயூரனின் பேச்சிற்குக் கட்டுப்பட்டு “வாங்க மச்சான்.” என்று அழைத்தார்.

“எப்படியிருக்கிங்க மச்சான். இளச்சிட்டாப்ல இருக்கு.” என்று சேதுராமனும் பேசினார்.

இங்கு உறவுகளுக்குள் யார் முதலில் பேசுவதென்ற தயக்கம் தான் சீனச்சுவராய் நடுவில் இருக்கும். அதை மட்டும் உடைத்து விட்டால் சரளமாய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது போலத் தடையின்றிச் ‘சல்லென்று’ உறவெனும் பயணத்தில் கலந்திடலாம்.

ஐயப்பன் தங்கை மகன் மயூரனுக்காகத் தடையின்றி அழைக்க, சேதுபதியும் அண்ணன் மகன் மயூரனுக்காகப் பேசிவிட்டார்.

இதற்குபின் நலன் விசாரிப்பும், தொழில் முறையும் பற்றிப் பேச்செடுக்க, நெடுநாள் தொடர்பற்ற செய்திகளைப் பேசிக்கொண்டார்கள்.

வாசலில் அலங்கரித்த வண்ண கோலமாக, ரங்கோலியை தனது விலையுயர்ந்த போனில் ‘க்ளிக்’ செய்து முடித்து, மெதுவாய் ரசித்து உள்ளே வந்தான் வித்தகன்.

“வித்..வித்தகன்… மேகவித்தகன்?” என்று கையை நீட்டி சேதுபதியிடம் கேட்டார் ஐயப்பன்.

“அவனே தான்.” என்றதும், ஐயப்பன் எழுந்தார்.

“பதினாறு வருஷம்… இடையில ஒருமுறை பார்வதி போட்டோவுல காட்டியிருக்கா. ஆனா… நேர்ல.. இப்ப தான் பார்க்கற பாக்கியம் கிடைச்சிருக்கு.” என்றவர் கண்கள் தானாகக் கலங்கியது.

“ஹலோ” என்று வித்தகன் பெயருக்கு பேசிவிட்டுக் கண்களை நாலாப்பக்கமும் சுழற்றினான்.

அவன் விழிகள் மஞ்சரியை தேடியது. ஐயப்பனோ தாயை காணும் ஆவலில் தேடுவதாக எண்ணிவிட்டு, தோட்டத்து வீட்ல ஓரெட்டு பார்த்துட்டு வாங்க” என்று இலைமறையாய் அன்னை அங்கு உள்ளாரெனக் கூறி அனுப்பினார்.

வித்தகன் உடனே சென்றுவிட்டான்
மயூரனோ மெதுவாய் ஐயப்பன் மாமா அருகே வந்தான். சேதுபதி சித்தப்பா பார்க்கவும் ‘அம்மா அங்க தானே இருக்காங்க மாமா’ என்பதைக் கேட்க தயங்கி தம்பியை எதிர்நோக்க அவனோ வீட்டை மேற்பார்வையிடுபவன் போல, ஷார்ட்ஸின் பாக்கெட்டில் கையை விட்டு வீட்டுக்குள்ளே ஷூவை போட்டு உலாத்த துவங்கினான்.

அவனையும் நிறுத்த இயலாமல், ‘அம்மா எங்கே இங்கு வந்துவிட்டாரா?’ என்று ஆசையோடு மாமாவிடம் கேட்கவும் இயலாது தவித்தான்.

சித்தப்பா எதிரில் அம்மாவை கேட்டால் அதற்கு வேறு சாமியாடுவார்.

சமார்த்தியமாக அணுகுவதாகப் பார்வதி அத்தையிடம் வந்து கேட்க முயல, அவரோ அண்ணனை கண்டு ஆனந்த கண்ணீரை வடித்துப் பேச்சிழந்து நின்றார்.

சேதுபதியும் “எப்படிம்மா இருக்க? என்னதான் போன்ல வீடியோ கால்ல பேசி பழகினாலும், நேர்ல என் தங்க விக்கிரகத்தைப் பார்க்கற கொடுப்பினை இத்தனை நாளா இந்த அண்ணனுக்கு இப்ப தான் கிடைச்சது” என்றதும் நட்சத்திர வடிவ நெல்லிக்கனியை அறிந்து வைக்கப் பிடித்தமானதை எடுத்து சாப்பிட்டு பழைய கதையைத் தவிர்த்து, நடக்கும் திருமணத்தைப் பற்றிப் பேசினார்கள்.

என்ன தான் இயல்பாய் பேசினாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு என்பதால் கண்ணீரை அடிக்கடி ஒற்றியெடுத்துப் பேசினார்கள்

இங்கு வருவதையே பிடிக்காமல் இருந்த வித்தகனுக்கு, அந்த மஞ்சரியை கண்டதிலிருந்து அவளைத் தேடும் ஆர்வமும், அவளிடம் பழகும் எண்ணமும் மிதக்க வீட்டையே பார்வையால் அலசி வீட்டு தோட்டத்துப் பக்கம் வந்து சேர்ந்தான்.

யாரின் மீதோ இடித்து நின்றான். எதிரே வந்த நபரும் குனிந்தே வந்திருக்க வேண்டும்.

இருவரும் நேராய்க் கண்டதும், வித்தகன் கண்ணாடியை கழற்றினான். மஞ்சரியை தேடுவதையும் பிறர் அறியாமல் அவளை ரசிக்கவும் கூலிங் கிளாஸை அணிந்து வந்தான் தற்போது அக்கண்ணாடியை மெதுவாய் கழட்டவும், “என்னடா இது மாப்பிள்ளை களையே இல்லை. ஏதோ ஊரை சுத்தி பார்க்க வந்தவன் மாதிரி இருக்க.?” என்று கேட்டாள் எதிரேயிருந்த பெண்மணி.

வித்தகனோ நெற்றி சுருங்க, ‘அம்மா?’ என்று கண்டுக்கொண்டான். ஆனால் வாய் வார்த்தையில் அழைக்கவில்லை.

“மயூ..மயூ தானே? என்று அமலா கேட்டார். ஒரு நக்கல் வழியும் பார்வையை வீசி, கூலிங் கிளாஸை மீண்டும் அணிந்து “பெத்த பையனையே யாருனு அடையாளம் தெரியலை. நான் தான் பதினாறு வருஷம் உங்களைப் பார்த்ததில்லை. உங்க பெரிய பையன் மயூரனை கூட நினைவுயில்லையா.

என்னிடம் வந்து கல்யாண களையில்லைனு பேசறிங்க. நான் ஊர்சுத்தி பார்க்க வந்தவனே தான்.” என்று திமிராய் குற்றம் சுமத்தும் பார்வையோடு கூறினான்.

“வித்..வித்தகன்?” என்று அமலா கேட்டதும், “மேகவித்தகன்” என்று கூறவும், அமலா கண்ணீரை உகுத்தி அவனைத் தீண்ட வந்தாள்.
இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

”பெத்த பையனை பார்க்க கூட வராம, தனியா ஜாதகத்தை நம்பி இளையவாரிசு கூடயிருந்தா ஆபத்துனு என்னைத் தள்ளி வச்ச நீயெல்லாம் என்னைத் தொடக்கூடாது.” என்று எரிமலை வார்த்தைகளை அள்ளி வீசினான்.

அமலாவோ விரக்தியாய் ஒரு புன்னகை உதிர்த்தாள்.

அதற்குள் மயூரன் ஓடிவந்து, “அம்மா…” என்று அழைக்க, பெரியவனைக் கண்டார்.

எப்பொழுது வித்தகனை சேதுபதி அழைத்துச் சென்றாரோ, அன்றிலிருந்து மயூரனையும் அமலா சந்திக்கவில்லை.

மயூரன் ரிப்போர்டர் என்றதால் சந்திக்க ஏற்பாடு செய்த போதிலும், யாரையும் காண விருப்பமில்லையென்று அமலா மறுத்துவிட்டார்.

ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பார்க்க அமலா மனம் தயாராகவில்லை.

மேகவித்தகனை பிரிவதால் மயூரனையும் காண்பதை தவிர்த்துவிட்டார். ஐயப்பன் கூட ‘மயூரன் உன்னைப் பார்க்க ஆசைப்படறான். ஏன்மா தவிர்க்கற?’ என்று கேட்டதற்கு, ‘எப்படிண்ணா… மயூரனை பார்த்தா வித்தகனும் இப்படித் தானே வளர்ந்திருப்பான். என்னைத் தேடி அம்மா பாசத்துக்கு ஏங்குவான். அவனை நானே போங்க கூட்டிட்டு போங்கனு கொழுந்தனாரிடம் சொல்லிட்டேனே. அவனைப் பார்க்காம இவனை மட்டும் பார்த்து ரசித்தா என் மனசாட்சி குத்தாதா?’ என்று மயூரனை காண மறுத்துவிட்டார் அமலா.

இதெல்லாம் வித்தகன் அறியாதது. மயூரன் அறிந்ததால் தான் அன்னையை மதிப்பது.

எப்படியும் அமலா மற்றும் மயூரனை கண்டால் சிடுசிடுத்துவிடுவோமே என்று வித்தகன் இந்தியா வருவதைத் தவிர்த்திருந்தான். சேதுபதி சித்தப்பாவிற்காக வந்தவன் மயூரனின் அன்பில் நிஜமாகவே திருமணத்தை நல்விதமாய் நடந்து முடிய கிளம்பும் எண்ணத்தில் இருந்தான்.

இங்கு மஞ்சரியை கண்டதும் வேறு சில ஆசையுணர்வில் மனம் லயித்திடவும், அமலாவை மறந்தேபோனான்.

தற்போது அமலாவை கண்டதும் எரிச்சலாக இடத்தை விட்டு அகல முயன்றான்.

“ஹலோ… பாரின் பார்ட்டி… ஒரு நிமிஷம்.” என்று மஞ்சரி சொடக்கிட்டு அழைத்தாள்.

வித்தகனும் அதே அனலை விழுங்கியவனாகத் திரும்பினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இரசவாதி வித்தகன்-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *