இருளில் ஒளியானவன் 11
அன்பரசுவிற்கு இப்பொழுது தன் மகளின் வாழ்க்கை மட்டுமே முக்கியமாக இருந்தது. இன்றே பேசி முடிவெடுத்து விட வேண்டும் என்று வெங்கட் இருந்த அறைக்கு வந்து விட்டார்.
பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தான் வெங்கட். அவனது பார்வை ஜன்னலின் வழியே தூரத்தில் எங்கோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது.
அன்பரசு தொண்டையை செருமி தன் வரவை தெரிவிக்க, அவனோ அப்பொழுதும் தன் பார்வையை அகற்றவில்லை. அப்பொழுது குளியலறை கதவை திறந்து கொண்டு அங்கு வந்த அவனது தந்தை, அன்பரசுவை வரவேற்று உட்காரும்படி அங்கிருந்த இருக்கையை காண்பித்தார்.
அவரும் அமர்ந்து “வைஷ்ணவிக்கு உங்கள் மகனுடன் நடந்த திருமணத்தை ரத்து செய்ய விரும்புகிறேன். அதைப் பற்றி விசாரிக்க நேற்று எனது வக்கீலிடம் விசாரித்தேன். அவரோ குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்கின்றார். ஆனால் எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை. இனி எப்பொழுதுமே அவள் உங்கள் மகனுக்கு மனைவி அல்ல. என் மகள் மட்டுமே அதைப் பற்றியும் பேச தான் இங்கு வந்தேன்” என்றார்.
அவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. “சரிங்க சம்..” சம்பந்தி என்று சொல்ல வந்து, “அன்பரசு” என்றார். “நான் எங்களது வக்கீலிடம் இதைப் பற்றி கேட்டு சொல்கிறேன். நிச்சயமாக இனியும் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டோம்” என்று கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் பாணியில் வணங்கினார்.
அவர் இவரிடம் மன்னிப்பு கேட்டதும், ‘மன்னிப்பு கேட்கும் அளவிற்கு அவர்கள் தங்களுக்கு செய்திருக்கிறார்கள்’ என்ற எண்ணம் தான் அவருக்குள் ஓடியது. இருந்தாலும் இதற்கு மேலும் எந்த விதத்திலும் பேசி, சுமூகமான உறவை வளர்க்க விரும்பாமல், சரி என்று தலையை மட்டும் ஆட்டினார்.
சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவ, “இனிமேல் எந்த விஷயத்திற்கும் எங்கள் வீட்டிற்கு உங்கள் வீட்டில் இருந்து யாரும் வந்து விடாதீர்கள். எதுவென்றாலும் எனது அலுவலகத்திலேயோ அல்லது வக்கீலின் அலுவலகத்திலேயோ பேசி கொள்ளலாம் என்றார்.
எவ்வளவு பெரிய அவமானமான வார்த்தைகள், தன் மனைவியால் அத்தனையையும் கேட்க வேண்டியது இருக்கிறது என்று வேதனை அடைந்தார்.
அது அவரது முகத்தில் பிரதிபலிக்க, தான் கொஞ்சம் அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று அன்பரசுவும் வருத்தம் அடைந்தார் ஆனால் அவருக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை.
“கொஞ்சம் கடுமையாக பேசியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என் மனம் அவ்வளவு வேதனையில் இருக்கிறது அதனால் தான் அப்படி பேசி விட்டேன்” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் கூறி, “வக்கீலிடம் சீக்கிரமாக விசாரித்து சொல்லுங்கள்” என்று பொதுவாக சொல்லி இருவரையும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அன்பரசு அங்கிருந்து சென்ற பிறகு, அந்த அறை மிகவும் அமைதியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து தந்தையைப் பார்த்த வெங்கட், வக்கீலை அழைக்கும்படி கூறினான்.
“நான் பார்த்துக் கொள்கிறேன் வெங்கட். நீ இதைப்பற்றி யோசிக்காதே” என்றார்.
“நான் உங்களை வக்கீலுக்கு ஃபோன் பண்ண சொன்னேன்” என்றான் அழுத்தமாக.
இனி அவனிடம் பேச முடியாது என்ற முடிவு செய்தவர், உடனே வக்கீலுக்கு அழைத்து ஃபோனை அவனது கையில் கொடுத்தார்.
அவரிடம் பேசிய வெங்கட் சில ஆலோசனைகளை கூறி, “உடனே விவாகரத்து வேண்டும். சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
அவன் பேசுவதை கேட்டு அவனது தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. “இதையெல்லாம் வக்கீலிடம் சொல்ல வேண்டுமாப்பா” என்றார் வேதனையாக.
பெருமூச்சு விட்ட வெங்கட் “அப்பத்தான் சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும்” என்று கூறிவிட்டு, மீண்டும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினான்.
அடுத்த நாளே வெங்கட் கையெழுத்துப் போட்ட விவாகரத்து நோட்டீஸ் அன்பரசுவின் கையில் இருந்தது. கேசவனின் அறையில் இருந்து விவாகரத்து கடிதத்தை பார்த்துக் கொண்டு இருந்தார் அன்பரசு.
அருகில் அமர்ந்திருந்த வெங்கட்டின் தந்தை, குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது என்ன என்ன சொல்ல வேண்டும் என்பதை கூறினார். வெங்கட் தான் இப்படி சொல்லச் சொன்னான் என்பதையும் கூற, இருவரும் மௌனமாக தலையாட்டினர்.
மீண்டும் அன்பரசுவிடம் “தேவை இல்லாமல் உங்கள் பெண்ணின் வாழ்க்கையை என் மனைவியின் பேச்சைக் கேட்டு கெடுத்து விட்டேன். அதற்கு மனதார உங்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் எங்கள் குடும்பத்திற்கும் வைஷ்ணவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் தைரியமாக இருக்கலாம். அவள் உடலும் மனமும் தேறியதும் நல்ல வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்து விடுங்கள்” என்றார்.
விஷயம் கேள்விப்பட்டு அங்கு வேகமாக வந்த வெங்கட்டின் தாய் “எதற்கு இப்படி அவசரப்படுகிறீர்கள்?” என்று தன் கணவனை பார்த்து கேட்டார்.
மனைவியை கண்டிப்பு பார்வை பார்த்தவர், “நீ எதிலும் தலையிடாதே! உன் பேச்சைக் கேட்டு தான் எல்லாம் தவறாகவே நடந்து கொண்டு இருக்கிறது. வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு. இது வெங்கட்டின் முடிவு. இதற்கு மேல் ஏதாவது நீ பேசி குழப்பத்தை உண்டு பண்ணினால், அவன் மனிதனாகவே இருக்க மாட்டான். நினைவு வைத்துக் கொள்” என்றார் எச்சரிக்கையாக.
பின்னர் கேசவனை பார்த்து “அவன் கல்யாணம் வேண்டாம் என்று தான் சொன்னான். எனக்கும் அவனுக்கு திருமணம் செய்வதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் இவள் தான் விடாபடியாக அவனையும் மிரட்டி, எல்லாம் சரியாகும் என்று சொல்லி திருமணம் செய்து வைத்தாள்” என்றார் வேதனையாக.
“வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைத்ததில் என்ன குடிமுழுகி போய்விட்டது. இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியாக மனம் ஒத்து வாழ்ந்தால், நன்றாக தானே இருக்கும். நாளைக்கு அவளுக்கு வயிற்றில் ஒரு குழந்தை வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடப் போகிறது” என்று சொல்லிவிட்டு அன்பரசுவை பார்த்து,
“ஒருவேளை உங்கள் மகள் மட்டும் குழந்தை உண்டாகி விட்டால், குழந்தை பெற்றுக் கொடுக்கும் வரை அவள் எங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும். அதன் பிறகு வேண்டுமானால் நீங்கள் விவாகரத்து செய்து உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு கோபமாக வெளியே சென்றார்.
மனைவி பேசியதற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டு, “இனிமேல் உண்மையில் எந்த தொந்தரவும் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறி வேகமாக அவரும் மனைவியின் பின் சென்றார்.
வெங்கட்டின் தாய் பேசி சென்றதில் அதிர்ந்து அப்படியே அமர்ந்திருந்தார் அன்பரசு.
“என்ன அரசு? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்ட கேசவனிடம்
“அந்த அம்மா எப்படி பேசிட்டு போகுது பாரு கேசவா? ஒருவேளை அந்த அம்மா சொல்வது போல் வைஷ்ணவிக்கு குழந்தை உண்டாகி விட்டால்?” என்று அதிர்ச்சியாக கேட்டார்.
“நீ அதை நினைத்தெல்லாம் கவலைப்படாதே அரசு. அவளுக்கு குழந்தை எல்லாம் இப்பொழுது உண்டாகாது. அதற்குரிய சிகிச்சை நான் கொடுத்து விட்டேன்” என்றார்.
அதன் பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டார் அன்பரசு. “ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்று சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல் எப்படி பேசிவிட்டு செல்கிறார்கள் பார்” என்றார் வேதனையாக.
“அதை விடு, முடிந்ததை பற்றி இனிமேல் பேசி வேதனை அடையாதே! அவர் கூறியது போல் உடனே வக்கீலை சென்று பார்த்து, சீக்கிரம் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்” என்று கூறினார் .
பின்னர் “இனி வைஷ்ணவி மருத்துவமனையில் இருக்க வேண்டாம். அவளை வீட்டிற்கு அழைத்துச் செல். அதுபோல கொஞ்ச நாளைக்கு வீட்டிற்கு அவர்கள் வீட்டில் இருந்து யார் வந்தாலும் பார்க்க அனுமதிக்காதே! இந்த லேடி ரொம்ப ஓவரா தான் பேசுகிறது” என்றார் கேசவன்.
- தொடரும்..
💛💛💛💛💛💛
Nice epi👍
Venkat oda amma ku konjam kooda manastchi nu onnu illavae illa pola
இனியாவது அவ நிம்மதியா இருக்கட்டும்!!… அந்த அம்மாவுக்கு எவ்வளவு சுயநலம்!!..
Oru ponna irunthu yosicha therium avanga amma va irunthu pakaranga atha oru amma va yosichalum oru niyayam venum la ippadi pesitu poranga