இருளில் ஒளியானவன் 28
வெங்கட்டிற்கு இருட்டு என்றால் பயம் என்று மாமனார் கூறியதும், குழப்பமாக அவரைப் பார்த்தாள் வைஷ்ணவி.
அவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “அவன் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இரவில் சரியாக தூங்க மாட்டான் மா. ஆனால் பகலில் வெளிச்சத்தில் நன்றாக தூங்குவான். அதை எங்களுக்கு கண்டுபிடிக்கவே வெகு காலம் ஆகிவிட்டது. அதற்குள் எங்களுக்கு அடுத்த குழந்தையும் பிறந்து விட்டது. பிறகுதான் இரவு டியூப் லைட் போட்டே அவனை உறங்க வைக்க பழக்கினோம்.
சாதாரண விஷயம் தான் என்று அப்படியே அலட்சியமாக விட்டுவிட்டோம். ஆனால் அதுவே விபரீதமாகி விட்டது. அன்று ஒரு நாள்” என்று பள்ளியில் நடந்ததை கூற ஆரம்பித்தார்.
இருட்டு என்றால் அவனுக்கு பயம் என்று தெரிந்த பொழுது பெற்றோர்கள் டியூப் லைட் வெளிச்சம் போட்டு அவனை உறங்க வைக்க பழக்கினார்கள். அவனுக்கு உறங்குவதற்கு மட்டும் வெளிச்சம் இருந்தால் போதும், மற்றபடி அவன் அமைதியாக இருப்பான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்க, ஒரு நாள் அவனது வகுப்பில் அவனது தோழர்கள் அறையை வெளிப்பக்கம் மூடிவிட்டு சென்று விட்டார்கள்.
சிறிது நேரத்திற்கு எல்லாம் இருட்ட ஆரம்பிக்க, பயந்த வெங்கட், கத்தி கூப்பாடு போட்டு, அப்படியே மயங்கி விட்டான். நேரமாகியும் வீட்டுக்கு வராததால், அவனது பெற்றோர் பள்ளியில் சென்று விசாரிக்க,
“எல்லோருமே போயிருப்பாங்களே!” என்று கூறிய நிர்வாகி, எதற்கும் அவனது வகுப்பு சென்று பார்த்துவிட்டு வாரும்படி வாட்ச்மேனை அனுப்பினார்.
அவனது வகுப்பு வெளிப்பக்கம் பூட்டி இருக்க, கதவை திறந்து பார்த்த வாட்ச்மேன் மயங்கி கிடக்கும் வெங்கடே பார்த்து, தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்.
அவனைக் கண்டு பதறிய அவனது தாயோ, “இப்படித்தான் நீங்கள் பள்ளிக்கூடம் நடத்துவீர்களா?” என்று அவர்களுடன் சண்டைக்கு சென்று விட்டார்.
ஆனால் அவனின் தந்தையோ, “இப்பொழுது சண்டை பிடிக்கும் நேரமல்ல. உடனே இவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று மனைவியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
உடனே சிகிச்சை அளிக்கப்பட, “பயத்தில் அவனுக்கு ஃபிட்ஸ் வந்து மயங்கி இருக்கிறான். சிகிச்சை அளித்திருக்கிறோம். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும்” என்று கூறினார்.
அதன்பிறகு இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். அதன் பிறகு சிறிது நாள் பள்ளிக்கு அனுப்பாமலேயே இருந்தாள் அவனது அம்மா.
“ஆனால் படிப்பு முக்கியமாயிற்றே என்று, நான் தான் அவளை வற்புறுத்தி அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்தேன். மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் வெங்கட். அந்த ஒரு பயத்தை தவிர அவன் மிகவும் திறமைசாலி, படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரன்.
அதேபோல் மீண்டும் ஒரு நாள், வகுப்பில் ஆசிரியர் வராத பொழுது, எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து விளையாடி கொண்டு இருந்திருக்கிறான் ஒரு மாணவன். அது மழைக்காலம் ஆகையால் வகுப்பு சற்று இருளாக இருந்தது. பொருத்து பொருத்து பார்த்த வெங்கட், ஒரு கட்டத்தில் அவனால் முடியாமல் அந்த மாணவனை அடித்து நொறுக்கி விட்டான்.
மாணவர்களின் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த ஆசிரியர் வெங்கட்டை பிரித்து விட, அவனோ வெறிவந்தவன் போல் கத்திக் கொண்டு, அனைவரையும் தாக்க முயன்ற இருக்கிறான். உடனே அவனை இறுக்கி பிடித்து, தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து, எனக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேகமாக பள்ளி சென்று பார்ப்பதற்குள் அவன் மயங்கி இருந்தான். அவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பல பரிசோதனைகள் எடுக்கப்பட்டு அவனுக்கு சிகிச்சையும் அளித்தார்கள். அவன் இருக்கும் இடத்தை வெளிச்சமாக வைத்துக் கொள்ளும்படி எங்களுக்கு அறிவுரை கூறினார்கள்.
அது மட்டுமல்லாது மீண்டும் இதுபோல் ஃபிட்னஸ் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள். ஆகையால் எப்பொழுதும் நானும் அவனது தம்பிதான் அவனுடனே இருப்போம். வளர்ந்த பிறகும் அவனுக்கு அது குறையவே இல்லை. மருத்துவரிடம் கேட்டதற்கு குணப்படுத்துவது கடினம் என்று கூறிவிட்டார். நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம்.
ஆனால் அவனது அம்மாதான், அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்று கூற, மருத்துவரும், நானும் அவளை கண்டித்தோம். ஆனால் விடாப்பிடியாக அவள் திருமணத்தை நடத்த வேண்டும் என்று சொல்லி நடத்தியும் விட்டாள். அவன் மிகவும் நல்லவன் தான் மா, அந்த ஒரு குறையை தவிர.
அதுபோல தாயின் மீதும் மிகவும் பாசம் கொண்டவன். ஆகையால் அவனால் அவளது பேச்சையும் மறுக்க முடியவில்லை. அம்மாவின் ஆசைக்காக திருமணம் செய்தாலும் ஒரு வருடத்தில் விவாகரத்து செய்து விடுவதாக என்னிடம் கூறினான்.
அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டாள் என்று, நான் அவனுக்கு தெளிவாக எடுத்து கூறினேன். ஆனால் அவனோ “குணமாகாத நோயுடன், எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் வரும் பெண்ணையும் என்னுடன் வாழ வைப்பது கடினம் அப்பா. விவாகரத்து செய்துவிட்டால், அதன் பிறகு அம்மா என்னை திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டார்கள். அது மட்டுமல்லாது வேறு எந்த பெண்ணும் என்னை திருமணம் செய்ய விரும்பாதபடிதான் விவாகரத்துக்கான காரணத்தையே கூறுவேன். ஆகையால் கவலைப்படாதீர்கள்” என்று என்னை தேற்றினான்.
என்னதான் அவன், ஆயிரம் காரணம் கூறினாலும், எனக்கு இந்த திருமணத்தில் முழு விருப்பம் இல்லை மா. இருந்தாலும் அவனது அம்மாவிற்காக அவன் எடுத்த முடிவால், என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை. எங்களை மன்னித்து விடுமா. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. அவன் எப்படியும் உன்னை இங்கிருந்து அனுப்பி விடுவான். பின்னர் விவாகரத்தும் கொடுத்து விடுவான்” என்று கூறி, அவளின் முகத்தை பார்க்க முடியாமல் கீழே சென்று விட்டார்.
இவர் கீழே செல்லும் பொழுது அங்கு ஹாலில் அமர்ந்திருந்த அவனது தாய், “நீங்க எதுக்கு இப்போ மேல போயிட்டு வர்றீங்க?” என்று கோபமாக கேட்டார்.
அவர் அமைதியாக இருக்க, அதை வைத்தே, அவளிடம் உண்மையை சொல்லிவிட்டார் என்பதையும் புரிந்து கொண்டார். “நான் அவ்வளவு சொல்லியும், அவள் கிட்ட சொல்லி இருக்கீங்க இல்ல. இனிமேல் அவள் எப்படி இங்கே இருப்பாள். என் பையனோட வாழ்க்கை என்ன ஆகும்” என்றார்.
“உன் பையனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறாயே! அந்தப் பெண்ணின் வாழ்க்கையை பற்றி நினைத்துப் பார்த்தாயா?” என்றார் வேதனையாக.
“எனக்கு, என் மகன் சந்தோஷமாக வாழ வேண்டும். அதுதான் முக்கியம்” என்று கூறி, “வைஷ்ணவி” என்று சப்தமாக கத்தினார்.
‘அந்தப் பிள்ளையை, எதுவும் சொல்லி கஷ்டப்படுத்தாதே ” என்று அவரது அறைக்கு சென்று விட்டார்.
அவர் கூறிய அனைத்தையும் கேட்டு, அதிர்ந்த வைஷ்ணவி அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள்.
‘எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் என்ன பாவம் செய்தேன்? என் அப்பா அம்மா என்ன பாவம் செய்தார்கள்? இவர்கள் மகனின் வாழ்க்கைக்காக, என் வாழ்க்கையை பணயம் வைத்து விட்டார்களே?’ என்று பலவாறாக சிந்தித்து அதிர்ந்து அமர்ந்திருந்த அவளின் காதில், “வைஷ்ணவி” என்ற அவளது மாமியாரின் கோபமான சத்தம் கேட்டது. உடனே வேகமாக பயத்துடன் இறங்கி கீழே ஓடினாள் வைஷ்ணவி.
“என்ன? உன் மாமனார் எல்லாத்தையும் சொல்லிட்டாரா? இப்பதான் எல்லாம் தெரிஞ்சிருச்சு இல்ல, இனிமே அவனுக்கு ஏத்த மாதிரி வாழ கத்துக்கோ. போ, போய் காபி போட்டுட்டு வா” என்று அதிகாரமாக கூறினார்.
அவளுக்கு ‘என்ன மாதிரியான பெண்மணி இவர்’ என்றுதான் தோன்றியது. பிறருடைய மனதைப் பற்றி அவர் சிறிதும் யோசிப்பது இல்லை. தன் மகனின் வாழ்க்கையை பற்றி மட்டுமே யோசிக்கிறாரே என்ற வெறுப்பு தான் அவளுக்கு வந்தது.
அதன் பிறகு அவர் சொல்லும் வேலைகளை அவள் செய்து கொண்டு இருந்தாலும், மனம் முழுவதும் தன் தாய் தந்தையர் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ? என்ற ஒரு விதம் நடுக்கம் தோன்றியது. அவர்களுக்கு பொறுமையாக இதை புரிய வைத்துவிட வேண்டும் என்றும் நினைத்தாள் வைஷ்ணவி.
- தொடரும்..
(அதிக ஆபத்து உடைய நோய் எல்லாம் கிடையாது. கதைக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதி இருக்கிறேன். இது கதை, அப்படியே படிங்க)
🧡🧡🧡🧡🧡
Ennaku Venkat oda amma ah va partha than kobam ah varuthu indha alavukku suyanalam ah irundhu iruka venam
AVANUKU VELICHAM IRUKANUM OK THAN PERIYA DISEASE LA ILLA ATHUKAGA YEN AVAN AVA KITTA DISTANCE MAINTAIN PANRAN KONJAM PESAVATHU SEIYALAME
Nice epi