Daily Update | 90's பையன் 2k பொண்ணு Register Login செய்து இலவசமாக வாசிக்கவும்.
Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-13

உயிரில் உறைந்தவள் நீயடி-13

அத்தியாயம்-13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

யுகேந்திரன் ‘என்ன தேடினியா?’ என்று மூச்சு வாங்க கேட்டதும், அவசரமாய் இல்லையென்று தலையாட்டினாள்.

அவளது மறுப்பும் குறுகுறுப்பான விழிகளும் பொய்யை சொல்வதை எடுத்தியம்ப, “நீ என்னைத் தேட வேண்டாம். நான் இனி தினமும் உன்னைத் தேடுவேன். இந்தப் பாசம், நம்ம குழந்தையால் கிடைக்குதுன்னு நீ மடத்தனமான நினைச்சாலும் பரவாயில்லை. ஆனா நான் தேடுவேன்.” என்று கூறி அவசரமாய்க் கன்னத்துல முத்தம் வைத்து நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

அவள் தேடிய யுகேந்திரனின்‌ பரந்த நெஞ்சு, அதில் முகம் புதைக்க, சுகமாய்ச் சாய்ந்தாள்.

அவளைப் படுக்க வைத்து அப்படியே உறங்க வைத்தான்.

ஹாஸ்பிடலிலிருந்து வந்த அசதி, உறக்கத்தைத் தர, நன்றாகத் துயிலில் ஆழ்ந்தாள்.

சம்பந்தி என்ற அறிமுகத்தை விட அண்ணன் தங்கை உறவில் இரு வீட்டார் மனமும் கலந்தது.

என்ன இருவர் ஒருவராய் கலந்த ஜோடி மட்டும் வெவ்வேறு பக்கம் முகம் தூக்கி இருந்தனர்.

முதல் பாதி ஆடிய ஆட்டத்திற்கு மறுபாதி அமைதியாக மாறினான் யுகேந்திரன்.

முக்கியக் காரணம் ரத்தக்கசிவு உடல் பலவீனமான நிலையில் கர்ப்பவதியாக ஜீவிதா இருக்க, தன் மனதை திறக்க காத்திருந்தான்.

அவன் காதலிப்பதாக அவனே மனசாட்சியிடம் ஒப்புக்கொண்டது இப்பொழுது தானே.

வினிதாவை சிலயிடத்தில் பார்த்திருக்கின்றான்.‌ ஏன் அத்தை மகளென்று அவனுக்குத் தெரியும். ஜீவிதாவை தான் அவன் பார்த்ததில்லை.

வினிதாவுமே யுகேந்திரனை மாமன் மகன் என்று அறியாமல் பார்த்திருக்கின்றாள்‌.

தந்தை தட்சிணாமூர்த்திக் கதிரவனிடம் பெரிய மகளை யுகேந்திரனுக்குப் பேசி முடித்ததாக வீட்டில் கூறவும் யுகேந்திரன் அத்தை மகளைப் பார்த்திருந்ததால் மணக்க அவனுமே சம்மதித்து விட்டான். தனக்கு வர போகும் துணை பற்றிப் பெரிதாகக் கனவு கோட்டை கட்டியதில்லை. அதனால் ஏற்கனவே நேரில் பார்த்த பெண் வினிதா என்பதால், பெண்‌பார்க்கும் வைபோகத்திற்குத் தவிர்த்து விட்டான். அப்பா அம்மா மட்டும் சென்று வந்தார்கள். அவர்களிடம் கதிரவன், மாப்பிள்ளை வந்திருந்தா வினிதா பார்த்து இருப்பா’ என்ற வார்த்தையில் தான் தன்னை மணக்க அந்தப் பெண்ணிற்குச் சொல்லி இருக்க, அந்தப் பெண் தன்னைப் பெண் பார்க்க எதிர்பார்த்திருப்பாளோ என்று எண்ணினான்.

மாட்டு பொங்கல் அன்று அம்மன் கோவிலிலை சுற்றும் மாட்டு வண்டியையும், விழாவை ரசிக்க வந்தனர் வினிதா ஜீவிதா.

கோவில் மரத்தடியில் கல்மேடையில் கரும்பை சுவைத்து வேடிக்கைப் பார்க்க, யுகேந்திரன் ஜெகனிடம் வினிதா இருக்குமிடம் கூறி, அவளைக் கிளம்பவிடாமல் நிறுத்தக் கூறினான். பெண் பார்க்க வரவில்லை. இன்று இரண்டு வார்த்தையாவது அவளிடம் பேசிட முடிவு எடுத்தான்.

நண்பன் சொன்னதைக் கேட்டு ஜெகன் இரு பெண்கள் இருக்கும் திசைக்கு வந்தான்.

மாட்டு வண்டியில் மொத்தம் மூன்று‌முறை கோவிலை சுற்றி வருவது வழக்கம். யுகேந்திரன் வண்டியில் மாட்டைக் கட்டி ஓட்டி வர, “அக்கா அக்கா… அக்கா இவர் தானே? சொல்லுக்கா” என்று ஜீவிதா உலுக்க, ”ஆமா அவரே தான்.” என்று வினிதா கூறிவிட்டு சோகமானாள்.

“இந்த ஊர்ல இவரைத் தெரியாதவங்க யாருமில்லை. என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் இவரைத் தெரிந்துயிருக்கு. என்‌ காலேஜ்மெட் இரண்டு பேர் விரும்பறதா இவரிடம் பிரப்போஸ் பண்ணிருக்காளுங்க. நேரா அந்தப் பொண்ணுங்களைக் கூட்டிட்டு அவளுங்க அப்பா முன்ன நிறுத்தி, ‘உங்க பொண்ணு என்னை விரும்புறதா பேசறா. கொஞ்சம் புத்திமதி செல்லுங்க. இல்லை கல்யாணம் பண்ணி வையுங்கன்னு’ கத்தி விட்டிருக்கார்.‌” என்று வினிதா பேச, கரும்பை கடித்துத் துப்பிய ஜீவிதாவோ ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

வினிதா தொடர்ந்து, அவரால என் பிரெண்ட்ஸ் அவங்க அப்பாவிடம் செம திட்டு. ஒருத்திக்கு ஆறு மாசம் முன்ன கல்யாணமே பண்ணி வச்சிட்டாங்க” என்று வருத்தமாய்ப் பேசினாள்.

ஜீவிதாவோ சும்மா இல்லாமல் “ஆள் பார்க்க சும்மா அழகா இருக்கார்ல. அந்தத் திமிருக்கா. பொண்ணுங்க தானா வந்து ப்ரபோஸ் பண்ணவும் தலைக்கனம் எறிடுது.

எங்கயாவது யாரிடமாவது அடிபட்டு, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டா அடக்கவொடுக்கமா இருப்பார். இல்லைன்னா இப்படித் தான் ஓவரா ஆடுவார்.

மோஸ்டா பணமும் புகழும் இருக்குல்ல, அந்த ஏத்தம்.

நீ வேண்டுமின்னா பாரு இப்படி ஓவர் ஸீன் போட்டு வாழற ஆண்கள் ஒரு நாள் அடங்கிப் போவாங்க. அந்த மாதிரி சம்பவம் நடந்து அவரைத் திருத்தும்.’ என்று கூறி சிரித்தாள்.

ஜீவிதா இப்படிச் சொன்னவள் மேலும் ”பச் உன்னைக் கட்டிட்டு வீட்டுக்கு வரட்டும்‌ நான் எப்படி ட்ரில் எடுக்கறேன்னு பாரு. மச்சினிச்சி எப்படி ட்ரில் எடுத்தாலும் என்னிடம் வழிவார்.

கல்யாண நாள் அப்ப ஆலம் கரைத்து சுத்தும் போது தங்க செயின் எனக்குக் கிப்ட் பண்ண வைக்கிறேன் பாரு” என்று பேசி கொண்டே போனாள்.

ஜெகனும் அதை அப்படியே யுகேந்திரனிடம் கூறினான்.‌

“வினிதா எல்லாம் உன்னைப் பார்த்துப் பயப்பட்டுத் தலைகுனிந்து இருந்தாடா.

சில்வண்டு தான் ரொம்பத் துள்ளுச்சு. ஆனா அழகான மச்சினிச்சிடா.” என்று பேசி சிரித்தான்.

ஏனோ ஜீவிதா அப்படிப் பேசியப்பின் அங்குச் சென்று பேச பிடிக்காமல் ‘அப்படியா.. அப்ப இன்னிக்கு பேச வேண்டாம். கொஞ்சம் விட்டு பிடிப்போம்.’ என்று விட்டுவிட்டான்.

‘நேர்ல வந்துட்டு பேசாம போகப் போறியா?” என்று கேட்க ஆமென்றான்.

ஆனால் அதன் பின் ஃபேக்டரியில் ஜெகனிடம் “இந்தச் சில்வண்டு இப்படிப் பேசுது. இதுவரை என் கண்ணுல பட்டதேயில்லை. ஊட்டில படிக்கப் போயிருக்கா. பார்றேன்… லட்டு மாதிரி இரண்டு அத்தை பொண்ணு. அதுவும் ஜீவி ஆவ்சம். துடுக்கு வாய்.” என்று ரசனையாய்ப் பேசினான்.

ஜெகனோ “மச்சி அக்காவை விட்டு தங்கைக்கு ரூட் போடாதடா.” என்று கேலி செய்தான்.

இப்படிச் சென்ற யுகேந்திரன் வாழ்வில் பத்திரிக்கை அடிக்கும் முன் வினிதா ஓடிப்போனதாகத் தெரியவும், நிஜமாகவே யுகேந்திரனுக்கு அடிவாங்கிய உணர்வு, அவமானம், அடிப்பட்ட வலி. அசிங்கமாய் மற்றவர்கள் பேசுவார்களோ என்று‌ தோன்ற, அசடாக ஜீவிதா பேசியதை சம்பந்தப்படுத்திக் கொண்டான்.

வினிதா ஓடிப்போனதை விட ஜீவிதா பேசியது இதயத்தைப் பாதித்தது. ஜீவிதாவை மணந்து, அவளைப் பழிவாங்க முடிவெடுத்தான்.

உண்மையில் வினிதாவால் பழிவாங்கவில்லை அவன். ஜீவிதா பேசியதற்காக மட்டுமே வார்த்தையை வீசினான்.

அவள் உடைந்து போனதில் ரசிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், உள்மனமோ, “இது நல்லதில்லை… அவ என்னவோ சிறுபிள்ளைத்தனமா பேசினா. இப்படித் தான் பேசி பழிவாங்குவது நல்லதா? என்ற இரண்டு மனமாய் இருந்தான்.‌

இதில் மச்சான் என்ற வார்த்தை சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. அத்தை மகள் அப்படித் தான் அழைக்க வேண்டும். ஆனால் அக்கா முறையில் மச்சான் அழைப்பதாக அதுவும் அவனை வாட்டியது.

அந்தக் கோபத்தை எப்படிக் காட்டுவதென்று தெரியவில்லை. ஆனால் ஜீவிதாவிடம் தன் தேவையையும், தேடலையும் தொடர தயக்கமோ அசௌகரியமோ இல்லாமல், அவளை சுகமாய் ஆள, தன் வாழ்வில் தனக்கானவள் இவளாக இருக்க வேண்டும் என்பது கடவுள் ஆசை என்று தெளிவடைந்தான்.

போதாத குறைக்கு உமாதேவி பெற்ற மகனை அறைந்து “பொண்ணை மதிப்பா நடத்துடா‌. அப்படி மதிப்பா நீ நடத்தலைன்னா, என் வளர்ப்பு எங்கயோ தப்புன்னு அர்த்தம்” என்று அடக்கினார்‌.

உமாதேவி இப்படி என்றால், தட்சிணாமூர்த்தி எளிமையான விதத்தில், “அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பதா நீயா சொல்லிருக்க. என்ன காரணம்‌? உண்மையில் இந்தப் பிள்ளையைப் பிடிச்சிருக்கா? நீயா அதுக்குத் தான் என்னிடம் கேட்காமல் முடிவெடுத்தியா? பழிவாங்கற மாதிரி தெரியலை. உங்க பொண்ணைப் பிடிச்சிருக்கு மாமா கட்டிக் கொடுங்கன்னு கேட்கற மாதிரி இருக்கு” என்று சொன்னதும் யோசிக்க வைத்தது.

ஜீவிதா அறைவாங்கிக் கன்னம் வீங்கியப்பின்னும் தன்னுடன் கூடலில் இசைந்தது யுகேந்திரனுக்குப் பழிவாங்கும் எண்ணத்தை நொறுக்கியது.

அதன் பின் இடைப்பட்ட மாதங்கள் இயல்பாய் கழிய, திருமணமாகி ஆறு மாதம் கடப்பதே தெரியவில்லை. இனிமையான திருமண வாழ்வில், கூடுதல் சுவையாகக் குழந்தை வரவு வரப்போகின்றது.

என்னவோ தெரிந்தோ தெரியாமலோ, மீண்டும் கையோங்கி அடித்துத் தள்ளிவிட்டு ஜீவிதாவிற்கு ரத்தக்கசிவு ஏற்பட்டுத் தற்போது தள்ளி நின்று நலம் காக்கா பாடுபட்டான்.

தாய் சேய் என்று இரண்டு உயிரல்லவா?! இரண்டும் அவனது உயிரே.

தன்னவளை தாங்கிட அவன் தயார், ஆனால் இதற்கு முன் தப்பும் தவறுமாய் அவள் மனதில் பதிந்திருக்க, என்ன செய்வான் அவன். ஒரே வழி காத்திருந்து காதலை அவள் காலடியில் சமர்ப்பிப்பதே.

ஜீவிதாவிற்கு இப்பொழுது எல்லாம் அதிகாலை கூடுதல் உறக்கம். எட்டு மணிக்கு தான் எழுகின்றாள்.

சாப்பிட்டு பால் குடித்து மெல்லிசையைக் கேட்பாள். மதியம் யுகேந்திரன் அறையில் இருப்பான்.‌ முன்பு போல மனைவியிடம் தாம்பத்யம் சுகமும் நாட முடியாது‌. அதனால் அவளை உறங்க வைக்க முற்படுவான்.‌தன் நெஞ்சில் சாய்த்து அவன் உறங்குவதாகக் காட்டிக்கொள்ள முடிவில் ஜீவிதா உறங்குவாள். அவளை மெத்தையில் படுத்திட வைத்து பேக்டரிக்கு செல்வான்.

ஜெகன் தான் விருந்துக்கு அழைத்து ஓய்ந்து போனான். முதலில் ‘கன்னம் வீங்கியிருக்கு எப்படிடா ஊர்ல கூட்டிட்டு வர? அப்பறம் வர்றேன்’ என்றான் யுகேந்திரன்.

இன்னும் சரியா பேசலைடா. கொஞ்சம் ஒன்னுக்குள்ள ஒன்னா மாறியதும் கூட்டிட்டு வர்றேன் என்றான்.

தற்போது அவளைப் பெட்ரெஸ்ட் இருக்கணுமாம்டா. அத்தை வீட்டுக்கு கூட அனுப்பாம இருக்கேன். நீ வேற” என்பான்.

ஜெகனோ, “மச்சி பொண்டாட்டியை இங்க விருந்துக்குக் கூட்டிட்டு வந்தா, அவ அப்பா வீட்டுக்கு போக வேண்டி கேட்பான்னு தானே அவாய்ட் பண்ணுற. எனக்கு உன்னைப் பத்தி தெரியும்டா ஜீவிதாவை நீ கைக்குள்ள வச்சிக்க நினைக்கிற” என்று நண்பனை எப்பொழுதும் போலக் கேலி செய்வான்.

ஐந்தாம் மாதம் வந்ததும் சிலரின் வழக்கப்படி, ஐந்து வகைச் சாதமும், வளையலும் கொண்டு வந்து வீட்டில் ஜீவிதாவிற்குப் பார்த்து பார்த்துச் செய்தார் ரேகா.

அன்று அலங்காரம் செய்யும் பொழுது அவன் லாக்கரில் வைத்த சாவி கொத்தை எடுத்து அவனாக அவள் இடையில் அணிவித்தான்.

ஜீவிதா அதனை எடுத்து, ‘எனக்கு வேண்டாம்’ என்று சாவி கொத்தை ஒதுக்கினாள்.

அவள் எதற்காக ஒதுக்கி வேண்டாம் என்பதை அறிந்தவனோ, ‘ஜீவி.. இந்தச் சாவி கொத்து ஸ்பெஷல். இந்த வீட்டில் வாரிசு சுமக்குறவங்க, இந்த வீட்டு வாரிசை பெற்றெடுத்தவங்க இதை இடையில் மாட்டிப்பாங்க. அம்மா சீக்கிரம் பேரன் பேத்தி பார்க்கணும் என்று எனக்குத் தெரிவிக்க இதை அன்னிக்கு உன்னைப் போட்டு அழகு பார்க்க தெரியாம கொடுத்து இருப்பாங்க.

இதைப் பார்த்து உங்க அம்மா கண்ணு நீ ப்ரெகனெட் நினைச்சாங்க. உன்னிடம் கேட்க கூட வேகமா வந்தாங்க. நான் உன்னை ரூமுக்கு இழுத்து எடுத்து அனுப்பியதும் அதைக் கேட்கலை. இப்ப புரியுதா? ” என்று கேட்டான்.

ஜீவிதா நம்பாமல் பார்க்க, அவள் இடையில் சாவி கொத்தை மாட்டி, “நம்பலைனா உங்க அம்மா இல்லை என் அம்மாவிடம் கேளு” என்று இடையில் வயிற்றில் முத்தமிட்டான்.

முத்தம் வாங்கியவள் மெதுவாக யுகேந்திரனிடமிருந்து நழுவி வெளிய வந்தாள்.

“நம்ப மாட்டேங்குதே சில்வண்டு.” என்று யுகேந்திரன் அவன் மற்ற வேலையைப் பார்க்க கவனத்தை மாற்றினான்.

ஜீவிதா யுகேந்திரன் சொன்ன கதையை அம்மாவிடம் கேட்டு விட, அவர்களும் ஆமென்றார்.

அப்படியே தாயும் மகளும் பேசிய பேச்சு வினிதா பக்கம் போனது.

“உங்க அக்கா ரொம்பக் கஷ்டப்படறா, நாம ஒருவாட்டி போய்ப் பார்க்கலாம் என்று உங்கப்பாவை கூப்பிட்டா என்னை அடக்கிடறார். அவர் இறந்தப்பிறகு என்னைப் போய்ப் பார்க்க சொல்றார்.” என்று கண்ணீர் உகுத்தினார்‌ ரேகா.

ஜீவிதாவோ தந்தையும் தாயும் வினிதா அக்காவை போலக் காதல் மணம் புரிந்தனர். பிறகு ஏன் அக்காவை தண்டிக்கின்றார் என்று ஜீவிதாவிற்குக் குழப்பமே. மேலும் தாத்தா ஆச்சி கூட இதே மனநிலையில் இருந்ததாக அல்லவா யுகேந்திரன் கூறினார்.

“நான் ஒருத்தி கதையா சொல்லிட்டு இருக்கேன்.” என்று ஜீவிதாவுக்கு உணவை ஊட்டினார் ரேகா.

மகளும் அம்மாவும் பேசட்டுமென உமாதேவி நாசூக்காய் வெளியேறி இருந்தார்.

“ஏம்மா நீ அப்பாவிடம் நம்மள மாதிரி தானே நம்ம குழந்தை என்று தன்மையா சொன்னா புரிஞ்சுப்பார்.” என்றதற்கு, “இத்தனை வருஷம் ஆகுது. என்னத்த புரிஞ்சுக்கறது. அவரெல்லாம் நான் சொன்னா கேட்க மாட்டார். காதலிக்கும் போது பெத்தவங்க மனசு புரியறதில்லை. பெத்தவங்களா இருக்கும் போது காதல் தப்புன்னு தெரியுது. அதுவும் பெத்தவங்க மனசை கொன்று போட்டு ரிஜிஸ்டர் கல்யாணம் செய்யற காதல் மேல வெறுப்பு வருது” என்பதையே கூறினார்.‌

‘தந்தையே அக்காவை ஒதுக்கும் போது தாத்தா அம்மாவை ஒதுக்கியதில் தவறென்ன? அப்படின்னா தாத்தா மாமா பக்கமும் தப்பில்லை என்பது போல ஆகுமே. அப்ப நான் தான் இவரிடம் அதிகப்படியா பேசியிருக்கேனா?

நானும் இவரும் இதுவரை மனசு திறந்து பேசியதில்லை. அவர் முதல்ல கொஞ்ச நாள் என்னைக் காயப்படுத்தினார். ஆனா பிறகு அவருண்டு அவர் வேலையுண்டு இருந்தார்.

இந்தப் பழிவாங்கல், திடீர் பொண்ணு மாத்தி கல்யாணம் என்பது ஏற்கவும், வாழவும் நேரம் பிடிக்கும். இத்தனை வருடம் காதலிச்சு வாழ்ந்த அப்பா அம்மாவே புரிதல் கொஞ்சம் தான் என்பது போலப் பேசறப்ப, ஆறு மாசத்துல அவரோட வலி, வேதனை மறந்து பழிவாங்கா மறந்து என்னோட பழகறது என்னைப் புரிஞ்சுக்கறது, அவருக்கு நேரம் குறைச்சல் தான்.

நானுமே அவரைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணலை‌ அவர் பழிவாங்க தாலி கட்டியதால் முதல் மூன்று நாளில் பேச கூப்பிட்டா எப்படி? கல்யாணமாகி வருஷம் கூட முடியலை’ என்று தேதியை பார்க்க, இன்னும் இரு தினத்தில் திருமண நாள் வரப்போவதாகக் காட்டியது.

ஒரு வருஷம் ஓடிடுச்சா? அட ஆமா… குழந்தை உருவாகி ஜந்து மாசமாகுது. அதுக்கு முன்ன ஆறு மாசத்துல தான் சண்டையில் மயங்கி ஹாஸ்பிடல் போனதால் உண்டானதே தெரியும்.

பதினோரு மாசம் முடிந்து பன்னிரெண்டாவது மாதம். ஒரு வருஷம் நெருங்குது.

இப்ப இதை நான் கொண்டாட என்ன செய்யலாம்? அவரோட பேசறதே குறைச்சிட்டேன்.‌ அவருமே ரொம்ப நல்லதா போச்சுன்னு விலகறார். இதுல கல்யாண நாளை கொண்டாடலாமான்னா சிரிப்பாரா?

அதுவொன்னு தான் குறைச்சல்னு நக்கல் செய்வார். ஜீவிதா முகம் தேதியை பார்த்து பார்த்து வாடியது.

அவளையே கண்காணித்தபடி இருந்த யுகேந்திரனுக்கு நகைக்கத் தோன்றியது.

-தொடரும்.

8 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-13”

    1. M. Sarathi Rio

      உயிரில் உறைந்தவள் நீயடி..!
      எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 13)

      அதுக்குள்ள ஒரு வருசம் ஆகிடுச்சா ? நமக்கே ஷாக்கிங்ன்னா, அவளுக்கும் ஷாக்காத்தான் இருக்கும்போல. முன்னே அவ வார்த்தையை விட்டதுக்கு கொஞ்ச நாள் ஃபீல் பண்ண மாதிரி, இவன் கல்யாணம் பண்ணிட்டு அவளை வைச்சு செஞ்சதுக்கு இப்ப இவன் ஃபீல் பண்றான் போல. தப்புக்கு தப்பு சரியாப் போச்சு அம்புட்டுத்தான். இனி சரிக்கு சரி ஏதாவது பண்ணட்டும் ரெண்டு பேரும்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!