Skip to content
Home » எனை நீங்காதிரு எபிலாக்

எனை நீங்காதிரு எபிலாக்


நான்கு வருடங்களுக்குப் பிறகு…


“உங்க அப்பாக்கு வருஷத்துல நாலஞ்சு மாசம் உன் கூட வந்து தங்கினா தான் மனசு நிம்மதியா இருக்காம்”

எங்களது சென்னை சொந்த வீட்டில் மூன்று மாதம் தங்குவதற்காக வந்திருந்த அம்மா, அப்பாவைப் பார்த்தவாறு கேலியாகக் கூறிச் சிரித்திருந்தார்.

அந்நேரம் கடைக்குச் செல்வதற்காகக் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்த விஷ்வா, “வாங்க மாமா! வாங்க அத்தை” என்று முகமென் கூறிவிட்டு கடைக்குச் செல்வதாக உரைத்து விட்டுச் சென்றிருந்தான்.

இப்பொழுது விஷ்வசக்தி அரிசி மற்றும் ஆர்கானிக் கடை விரிவடைந்து சென்னையிலேயே மூன்று கிளைகளுடன் வளர்ந்திருந்தது. ஆன்லைனில் பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருந்தது.

அப்பா பார்த்திருந்த எங்களுடைய பரம்பரை ஆடைத் தொழில் கொரோனாவிற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் மீண்டும் லாபத்துடன் நகர ஆரம்பித்தது. விஷ்வாவின் வியாபார அறிவைக் கண்டு எங்களது தொழிலையும் விஷ்வாவையே பார்த்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டிருந்தார் அப்பா. அவனுக்கு விருப்பமில்லை என்று விட்டான். நான் எனது ஐடி வேலையில் இருந்து என்று விலகுகிறேனோ அப்பொழுது அப்பாவின் தொழிலை கவனித்துக் கொள்வதாக உரைத்து விட்டேன்.

விஷ்வா கடைக்குச் சென்ற பிறகு, நான் அலுவலகத்திற்குக் கிளம்பி சென்றிடுவேன். அதன் பிறகு பள்ளிக்குச் சென்றிருக்கும் குழந்தைகளை அழைத்து வந்து உணவு ஊட்டி அவர்களை முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் வேலை அப்பா அம்மாவினுடையது. அவர்கள் ஊருக்கு சென்ற பிறகு அத்தை வந்து தங்கியிருந்து கவனித்துக் கொள்வார். ஆக இரு வீட்டு பெரியவர்களாலும் தான் நாங்கள் இருவரும் நிம்மதியாக எங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

“அப்பா! பாப்பாக்கு மதியம் ஸ்கூல் முடிஞ்சிடும். தம்பிக்குச் சாயங்காலம் ஆகிடும். பார்த்துக் கூட்டிட்டு வந்துடுங்க” என்றவளாய் எனது இருச்சக்கர வாகனத்தில் அலுவலகத்தை நோக்கிச் சென்றேன்.

இப்பொழுது அலுவலகத்தில் குழுத்தலைவியாய் பதவி உயர்வு பெற்றிருந்தேன். எனக்குக் கீழே இரண்டு ஆண்கள் நான்கு பெண்கள் கொண்ட குழு பிராஜக்ட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர். அனைவருமே நட்புடன் பழகியிருந்தோம்.

அன்று நாங்கள் அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், “இன்னிக்கு வேலண்டைன்ஸ் டே! எல்லாரும் அவங்கவங்க பார்ட்னருக்கு என்ன கிஃப்ட் வாங்கிக் கொடுத்தீங்க?” எனப் பேச்சைத் தொடங்கினாள் திருமணமாகாத இளம்பெண் நித்யா.
ஆம் எனது தோழியின் பெயர் தான் இவளுக்கும். அதனாலேயே இவளுடன் சற்று ஒட்டுதல் உண்டு எனக்கு. இவள் கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களாகிறது. கொஞ்சம் துடுக்காய்ப் பேசுபவள் என்பதால் இயல்பாய் அனைவருடனும் ஒட்டுதலுடன் பழகி விட்டாள்.

“அட போ மா! அதெல்லாம் காதலிக்கும்போதும் கல்யாணமான புதுசுலயும் செய்றது. குழந்தை பிறந்த பிறகு அதுலலாம் இன்ட்ரஸ்ட் போய்டும்மா” என்று மணமான பெண் கூற, மற்றவர்களும் ஆமோதித்தனர்.

“என்ன இப்படிச் சொல்லிட்டீங்க! நான்லாம் கல்யாணமான பிறகு எத்தனை வருஷமானாலும் வேலண்டைன்ஸ் டே செலிப்ரேட் செய்வேன். இது கூடக் கொண்டாடாம என்ன வாழ்க்கை?” என்றாள் நித்யா.

“அதெல்லாம் அந்த வயசுல ஆர்வத்துல அப்படித் தான்மா நாங்களும் சொல்லிட்டு திரிஞ்சோம். அப்புறம் புள்ளை குட்டியை ஸ்கூலுக்கு அனுப்பனும், சமைக்கனும், நாமளும் வேலைக்குக் கிளம்பனும்னு இருக்கிற வேலைக்கு இடையில் இதெல்லாம் ஞாபகமே இருக்காது” என்றார் அவர்.

“நீங்கலாம் அரேஞ்ச் மேரேஜ் செஞ்சவங்க. அதனால அப்படிச் சொல்றீங்க! இங்க இருக்கிறதுலயே லவ் மேரேஜ் செஞ்சிருக்கிறது சக்தி தானே. அவங்களைக் கேட்போம். சொல்லுங்க சக்தி, வேலண்டைன்ஸ் டேக்கு என்ன ஸ்பெஷல்?” எனக் கேட்டாள் என்னிடம்.

“லவ் மேரேஜ் செஞ்சிக்கிட்ட நாங்க, இது வரைக்கும் ஐ லவ் யூ கூடச் சொல்லிக்கிட்டது இல்ல! இதுல வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் பத்தி என்கிட்ட கேட்குற பார்த்தியா” எனச் சிரித்தவளாய் உரைத்தேன்.

“அப்படியா?” என்று அனைவரும் ஆச்சரியமாக என்னைப் பார்க்க,

“ஆமா நிறைய மிஸ் யூ தான் சொல்லிருக்கோம். லவ் யூவை விட மிஸ் யூல இருக்கக் காதல் தான் அதிகம் நித்யா” என்றேன்.

“லவ் யூவே சொல்லாம எப்படிப் பிரபோஸ் செஞ்சாங்க. ஆமா யாரு முதல்ல பிரபோஸ் செஞ்சது நீங்களா இல்லை உங்க ஹப்பியா? உங்க லவ் ஸ்டோரியைச் சொல்லுங்க” எனக் கேட்டாள்.

அனைவரின் கண்களும் ஆர்வமுடன் என்னைப் பார்த்தன.

“எங்களோடது பப்பி லவ்வோ காலேஜ் லவ்வோ இல்லமா! நல்ல மெச்சூர்ட்டான வயசுல, அவரைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டா நிறையக் கஷ்டப்பட வேண்டி இருக்கும்னு தெரிஞ்சே தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்.

ஐம் தேர் ஃபார் யூ ஆல்வேஸ்!

இந்த வார்த்தைல ஆரம்பிச்சது தான் எங்க நட்பு! என் ஹப்பி என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்! அவரோட வாழ்க்கைல ரொம்பக் கஷ்டமான பேஸ்ல தோழியா நுழைஞ்சேன் நான். எனக்கு எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆர்மபிச்சதும், மூனு வருஷம் பெஸ்ட் ஃப்ரண்ட்டா இருந்தவர்கிட்ட போய், ‘என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறீங்களானு’ கேட்டேன். சோ பிரபோஸ் செஞ்சது நான் தான்.

என்னைக் கட்டிக்கிட்டா நீ ரொம்பக் கஷ்டப்பட வேண்டியது வரும்னு சொல்லி, நம்ம இரண்டு பேரோட ஸ்டேடஸ்ஸே வேறனு ரொம்ப யோசிச்சாங்க. என்ன மாதிரிலாம் கஷ்டம் வரும்னு சொன்னாங்க. இது எல்லாத்தையும் அக்சப்ட் செஞ்சிட்டு வாழனும் உனக்கு ஓகேவானு கேட்டாங்க.

அவரை விட்டுட்டு வேறொருத்தரை கட்டிக்க முடியும்னு தோணலை. அந்தக் கஷ்டத்தை விட இவரைக் கட்டிக்கிட்டு கஷ்டப்படலாம்னு நினைச்சு ஓகே சொல்லிட்டேன்.

அவர் உடனே எங்க அப்பாகிட்ட தான் பேசினாரு. வீட்டுல ஒத்துக்கலை. அடம்பிடிச்சி ஒத்துக்க வச்சேன். கல்யாணம் மட்டும் செஞ்சி வச்சிட்டு என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க எங்க வீட்டுல. அப்ப ஆரம்பிச்ச கஷ்டம்.

எப்பா சாமி என்னை விட்டுடுனு கதறுற அளவுக்கு அடுத்து வந்த வாழ்க்கை முழுசும் கஷ்டம் தான் நித்யா.

நம்ம காதலுக்காகக் கஷ்டத்தை ஏத்துக்கிறேன்னு சொல்லும் போது ஈசியா இருந்துச்சு. ஆனா அனுபவிக்கும் போது ரணமா வலிச்சிது. எந்த நிலையிலையும் அவரை விட்டுட்டு போகனும்னு நானோ இல்ல அவரோ நினைச்சதே இல்லை. அந்த அன்பு மட்டும் தான் அந்தக் கஷ்டமான சூழ்நிலைலயும் எங்களை இறுக்கி பிடிச்சி கொண்டு போச்சு “

“அய்யோ அப்ப காதலிச்சி கல்யாணம் செஞ்சாலே கஷ்டப்படனும் போலயே?” என்றாள் நித்யா.

அனைவரும் வாய்விட்டு சிரிக்க, “எல்லாக் கல்யாணத்துலயும் கஷ்டம் இருக்கும் நித்யா. ஆனா காதல் கல்யாணத்துல கொஞ்சம் கூடுதலா கஷ்டம் இருக்கும். நீயே தேர்ந்தெடுத்த வாழ்க்கை நீ தான் பார்த்துக்கனும்னு பெரியவங்க யாரும் தலையிடவே மாட்டாங்க. சண்டை வந்தாலும் நாமளே தான் பல்லை கடிச்சிட்டுச் சமாளிச்சி போகனும். பஞ்சாயத்துச் செய்யலாம் ஆள் வர மாட்டாங்க.

எங்க இரண்டு பேருக்குள்ளையுமே நிறையச் சண்டைகள் வந்துருக்கு. ஆனா இரண்டு பேருமே எப்பவுமே பிரியனும்னு நினைச்சதே இல்லை. ஏன் தான் இவங்களைக் கல்யாணம் செஞ்சோமோனுலாம் நினைச்சதே இல்லை.

இரவுனு இருந்தா விடியல்னு ஒன்னு வந்து தானே ஆகனும். அப்படி எங்க வாழ்க்கையும் மாறிச்சு. இப்ப சந்தோஷமா இருக்கோம். அப்ப கஷ்டத்திலயும் பிரச்சனைலயும் இரண்டு பேரும் இறுக்கி பிடிச்சிக்காம உதறி போயிருந்தா இன்னிக்கு இந்தச் சந்தோஷத்தை அனுபவிச்சிருக்க முடியாது.

ஆகக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கிறது தப்பில்லை. அப்படிக் காதல் கல்யாணம் செய்யும் போது அதிலையும் நிறையக் கஷ்டங்கள் துயரங்கள் வரும். ஒரே சில டைம்லாம், காதலா, அது எங்க இருக்குங்கிற அளவுக்கு மனசு மரத்து போய்டும். அதை எல்லாம் தாண்டி சமாளிச்சு எந்த நிலையிலயும் காதலையும் காதலிச்சவரையும் விட்டு கொடுக்காம ஏத்துக்கிட்டு வாழ முடியும்ன்ற நம்பிக்கையும் தைரியமும் இருந்தா மட்டும் தான் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கனும்னு சொல்லுவேன்”

“ஹப்பா கேட்கவே பயங்கரமா இருக்குங்க! நல்ல வேளை நான் அரேஞ்ச் மேரேஜ் தான் செஞ்சிக்கிட்டேன். என் அப்பாவுக்கும் சொந்தகாரங்களுக்கும் பயந்தே என்கிட்ட ரொம்பச் சண்டை போட மாட்டாரு என் ஹப்பி” என்றார் மணமான அந்தப் பெண்.

“என்ன ஹப்பியும் சண்டைலாம் போட மாட்டாருங்க. என்ன என்கிட்ட பேசாம இருந்து என்னை வச்சி செய்வாரு” என்று சிரித்தேன்.

அனைவரும் சிரித்திருந்தனர். வேலைக்கு நேரமானதால் மேலும் பேச நேரமில்லாமல் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றோம்.

நெடுநாள்களுக்குப் பிறகு பழைய நினைவுகளில் உழன்றவளாய் உலவிக் கொண்டிருந்தேன்.

அன்று வீட்டிற்குச் செல்ல இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.

குழந்தைகள் இருவரும் தாத்தா பாட்டியின் அறையில் உறங்கியிருந்தனர்.

அம்மா வந்து எனக்கு இரவுணவு எடுத்துக் கொடுத்தார்.

அப்பாவும் அம்மாவும் உறங்கியதும், இரவு பதினொரு மணியளவில் வந்தான் விஷ்வா.

அவனுக்கு உணவைப் பரிமாறியவளாய் அருகில் அமர்ந்திருந்தேன்.

உண்டு முடித்து என்னுடன் சேர்ந்து சமையலறையைச் சுத்தம் செய்ய உதவிய பிறகு படுக்கையறைக்குள் நுழைந்த விஷ்வா, “ஹேப்பி வேலண்டைன்ஸ் டே லட்டுக்குட்டி” என்றவனாய் இறுக்கி அணைத்தவன் எனது கைகளில் ஒரு கவரை கொடுத்தான்.

உள்ளிருந்த மல்லிகைப்பூவைப் பார்த்துச் சிரித்தவளாய், “என்னடா இன்னிக்கு என் புருஷன் ஆக்ஷன் மோட்ல இருக்கான் போலயே” என்றேன்.

“ஹ்ம்ம் ஹ்ம்ம் உனக்கு ஓகேவா? டயர்ட்டா இருக்கியா?” என்றவனாய் எனது கழுத்திற்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

அவனை அணைத்து சம்மதம் தெரிவிக்க, அடுத்தச் சில மணி நேரங்கள் இன்னிசை சந்தங்களாய் உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்து சென்றிருக்க, அவனது மார்பில் முகம் புதைத்திருந்த எனது நெற்றியில் முத்தமிட்டவனாய், “ஆர் யூ ஹேப்பிப்பா?” எனக் கேட்டான்.

“உன் கூட இருக்க எல்லா நாளும் எல்லா நேரமும் நான் ஹேப்பியோ ஹேப்பி தான்டா” கண்கள் மின்ன புன்சிரிப்புடன் கூறியிருந்தேன்.

“ஆயுளுக்கும் என்னை இப்படிக் காதலிச்சு என்னையும் காதலிக்க வச்சிக்கிட்டே இருடா லட்டுக்குட்டி” என்றவனாய் ஆத்மார்த்தமாக முத்தமிட்டிருந்தான்.

உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது என்னோட பாசம்

அழியாக் காதலுடனும் முடியாப் பாசத்துடனும் இணைப்பிரியாது வாழ்வாங்கு வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் விடைப்பெறுகிறோம் நாங்கள்!

5 thoughts on “எனை நீங்காதிரு எபிலாக்”

 1. CRVS2797

  வாவ்…! ரியலி வெரி நைஸ் ஸ்டோரி. தீராக்காதல்ங்கறது இது தானோ….!!!

 2. Avatar

  யதார்த்தம் நிறைந்த அருமையான காதல் கதை
  பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்ந்து இறுதி வரை இனை பிரியாமல் வாழும் சக்தி விஷ்வக்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்

  1. Dina Nila

   அழகா சொல்லிட்டீங்க சிஸ் ❤️🤩 அவர்களுக்கு தான் இக்கதை சமர்ப்பனம் 😍😍😍😍 அனைத்து அத்தியாயத்திற்கு நீங்க கொடுத்த கமெண்ட்டை படித்தேன். தொடர்ந்து வாசித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கும் தங்களின் வாழ்த்திற்கும் நன்றி 🩷❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *