Skip to content
Home » எனை நீங்காதிரு-1

எனை நீங்காதிரு-1

2015

“எழுந்திரு சக்தி! நேரமாச்சு”

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து லேசாய் விழிப்புத் தட்டிய நிலையில் இமையைப் பிரிக்க இயலாது புரண்டு படுத்தேன் நான்.

“அடியேய் எழுந்திரு சக்தி” என்னைத் தட்டி எழுப்பினாள் என் தோழி நித்யா.

“நீ உன் டீம் லன்ச்க்கு போறதுக்கு என்னை ஏன்டி எழுப்பிட்டு இருக்க?” மெல்ல கண்களைக் கசக்கிக் கொண்டு விழித்தவளாய் நான் கேட்க,

“அதான் நேத்தே சொன்னேன்ல! இந்த டைம் எங்க பிராஜக்ட் டீம் லன்ச்ல கூட ஃபேமிலி இல்லனா ஃப்ரண்ட்ஸ்ஸை கூட்டிட்டு வரலாம்னு சொன்னாங்கனு சொன்னேன்ல! நம்ம ரூம்ல எனக்கு நீதானடி பெஸ்ட் ஃப்ரண்ட்” என்று பாசமாய் என்னை ஒரு பார்வைப் பார்த்து வைத்தாள் அவள்.

“கிளம்பித் தொலையுறேன்” என்றவளாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டேன் நான்.

தாய் தந்தையருக்கு ஒற்றை மகளாகத் திருப்பூரில் பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பையும் அங்கேயே முடித்த நான், சென்னையில் தகவல் தொழில்நுட்ப கல்வியைப் பயின்று விட்டு கடந்த ஐந்து வருடங்களாக மென்பொருளாளராய் பணியாற்றி வருகிறேன். தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட நித்யாவும் நானும் கல்லூரித் தோழிகள். அவளும் நானும் வெவ்வேறு அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் ஒரே தங்கும் விடுதியின் அறையில் தங்கியிருக்கிறோம்.

இருவருமாகக் கிளம்பி ஆட்டோவைப் பிடித்து நித்யாவின் அலுவலகத் தோழமைகள் கூறியிருந்த உணவகத்திற்குச் சென்றோம்.

அவரவருக்குத் தேவையான விருப்பமான உணவைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் முறையில் உணவுகள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பிராஜக்ட் பார்ட்டியில் சற்றுத் தயக்கத்துடனே தான் அமர்ந்து கொண்டிருந்தேன் நான்.

நித்யா அவளது அலுவலகத் தோழியுடன் பேசிக் கொண்டிருக்க, நாற்காலியில் தனியே அமர்ந்து சுற்றியுள்ளவர்களை வேடிக்கைப் பார்த்தபடி இருந்த என்னிடம், “சாப்பிட்டீங்களா? தயங்காம வேண்டியதை எல்லாம் எடுத்துச் சாப்பிடுங்க? ஃபீல் ஃப்ரீ!” எனது பார்வையில் இருந்த தயக்கத்தை அவதானித்தவனாய்க் கேட்டிருக்கிறான் என்று எண்ணியவளாய் சரியெனத் தயக்கத்துடனே தலையசைத்த எனது பார்வை அவனது முகம், கண், மூக்கு, வாய் என உலாவர,

மெல்ல இதழ் விரித்துச் சிரித்தவனாய், “ஃபுட் நல்லா தானே இருக்கு?” எனக் கேட்டான் அவன்.

‘அப்பட்டமா அவனைச் சைட் அடிச்சிட்டு இருக்க நீ’ என மனசாட்சி எனக்குக் குட்டு வைக்க,

கனவில் இருந்து வெளி வந்தவள் போல் தலையை உலுக்கியவளாய், “ஹான் நல்லா இருக்கு” என்றேன் நான்.

சரியெனத் தலையசைத்தவனாய் அடுத்து அங்குள்ளவர்களிடம் உணவைப் பற்றி விசாரித்தாலும் அவனது பார்வை அவ்வப்போது என்னைத் தொட்டு மீண்டது.

எனது வாழ்வில் முதல் முறையாய் முதல் பார்வையிலேயே உள்ளுக்குள் சிலிர்ப்பை உணரச் செய்திருந்தான் அவன்.


முதல் முதலாய் என்னை ஆர்வமாய்ப் பார்க்கிறாள் ஒரு பெண்! உள்ளத்தில் சாரல் மழை!

நான் ஒன்றும் சினிமா நாயகனுக்கு இணையான அழகு நிறைந்த ஆண்மகன் அல்ல! தென் தமிழகத்தான் எனக் கண்டதும் கண்டுபிடிக்கக் கூடிய நிறமும் உயரமும் உடல் திண்மையும் முகவடிவும் கொண்டவன்.

பால் நிறத்தில் பளிங்கு போன்று அழகுப் பதுமையாய் இருப்பவள் எப்படி என்னை இப்படி ரசித்துப் பார்க்கிறாள்? ஒரு வேளை நான் தான் அவளது பார்வையைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளேனோ என்று அவளை எட்டிப் பார்க்க, அவளின் கடைக்கண்களால் என்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மச்சி! யாருடா அந்தப் பொண்ணு?” எனது தோழனிடம் அவளைக் காண்பித்துக் கேட்டிருந்தேன்.

“யாரைடா கேட்குற?” அவன் கேட்க,

அவளிருக்கும் நாற்காலியைக் கண்களால் சுட்டிக் காட்டிக் கேட்டேன்.

“நம்ம டீம் மெட் நித்யாவோட ஃப்ரண்ட்டா! பேரு சக்தி! வேறெதுவும் டீடெய்ல்ஸ் வேணுமா” கேலியாய் அவன் என்னிடம் கேட்டிருக்கும் பொழுதே நித்யா அவளருகில் அமர்வதும், நித்யாவிடம் அவள் என்னைப் பற்றி வினவுவதும் தெரிந்தது எனக்கு.


“ஹே நித்து! யாருடி அந்தப் பையன்”

“யாரைடி கேட்குற?”

“அதோ! எல்லார்கிட்டயும் ஃபுட் நல்லா இருக்கானு கேட்டுட்டு இருக்காரே”

“ஓ அவரா! அவர் எங்க டீம் சீனியர்டி! பேரு விஸ்வேஸ்வரன்! விஷ்வானு கூப்பிடுவோம். அவர் தான் இந்த ஈவண்ட் ஆர்கனைஸர். அதனால ஃபீட்பேக் கேட்டிருப்பாரா இருக்கும்” என்ற நித்யாவிடம் அவளது அலுவலகத் தோழி வந்து பேச,

எனது கைப்பேசியை எடுத்து நித்யாவின் முகநூல் பக்கத்திற்குச் சென்று விஸ்வேஸ்வரன் என்ற பெயரைத் தேடிப் பார்த்து அவரைப் பற்றி ஆர்வமாய் ஆராயத் தொடங்கினேன் நான்.


எங்கள் பிராஜக்ட் பார்ட்டி முடிந்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள், எனது அறையில் பொழுது போகாது முகநூலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த எனது பார்வையில், உங்களுக்குத் தெரிந்த நண்பராய் இருக்கலாம் என்ற முகநூலின் நட்பு பரிந்துரையில் அவளின் படத்தைக் காண்பிக்கவும், “ஹே இது அந்தப் பொண்ணுல” என்று இன்பமாய் அதிர்ந்து உள்ளே சென்று பார்த்தேன் நான்.

“ஒரு வேளை இந்தப் பொண்ணு நம்ம பிரோபைலைப் பார்த்திருக்குமோ” என்ற சந்தேகம் எழுந்தது எனக்கு.

“ஹ்ம்ம் திருப்பூர் பொண்ணு சென்னைல வேலைப் பார்க்குது” என்று அப்பெண்ணின் சுயவிவரங்களை முகநூலில் பார்வையிட்டேன்.

அவளுக்கு இருபத்து ஐந்து எனக்கு இருபத்து எட்டு! பத்து பொருத்தமும் பக்கவாகப் பொருந்துகிறது என்று எனது மனசாட்சி உசுப்பேற்றி விட, ‘அடேய் கொஞ்சம் பணக்காரப் பொண்ணா தெரியுது! நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் செட் ஆகாது’ என்று அடக்கி வைத்தேன் நான்.


அந்தப் பிராஜக்ட் பார்ட்டிக்கு சென்று வந்து ஒரு மாதம் கடந்திருந்தது.

அன்றாடம் இரவு உறங்குவதற்கு முன், அவரின் முகநூல் பக்கத்திற்குச் சென்று பார்ப்பதை வழக்கமாக்கி இருந்தேன் நான்‌.

நித்யாவிடம் விஷ்வாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அன்றாடம் அவளது அலுவல் நிகழ்வுகளைக் கேட்டறிந்து கொள்ளத் தொடங்கினேன். ஒரு தடவை நேரடியாகவே விஷ்வாவின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்ட பொழுது, “என்ன போன வாரம் தான் அவர் உன்னைப் பத்தி கேட்டாரு! இப்ப நீ அவரைப் பத்தி கேட்குற? என்ன டிராக் ஓடுது உங்க இரண்டு பேருக்குள்ள?” இடையில் கைவைத்து முறைத்தவாறு நித்யா என்னைக் கேட்டாள்.

“என்னது என்னைப் பத்தி கேட்டாரா? என்ன கேட்டாரு?” கண்கள் மின்ன நான் கேட்டதில்,

“இதெல்லாம் சரிபட்டு வராது சக்தி! உன்னோட குடும்பம் ஃபினான்ஷியலி ஸ்டேபிள் ரிச் குடும்பம். உன்னோட சம்பளம்லாம் உன் குடும்பத்துக்குத் தேவையில்லனு நீ கையில வச்சி செலவழிச்சிட்டு இருக்க! ஆனா அவர் குடும்பமே அவரோட சம்பளத்தை நம்பி தான் இருக்கு! அவர் உனக்கு செட் ஆக மாட்டாரு! மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு கஷ்டப்படாத! அவ்ளோ தான் சொல்லிட்டேன்” அறிவுரை மழை பொழிந்தாள் நித்யா.

“நீ நினைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்ல நித்து” என்று அவளிடம் கூறினாலும் மனம் சுணங்கிப் போனது எனக்கு‌‌.

ஏன் என் மனது இவ்வாறு வேதனைக் கொள்கிறது என்று புரியாமலேயே ஆழ்ந்த கவலைக்குள் ஆட்பட்டிருந்தேன் நான்‌.

இனி அவரைப் பற்றி நினைக்கவே கூடாது என்று எனக்குள்ளே சபதமெடுத்த நான் அவரை நினைக்காத நாளில்லை என்ற வகையில் அவரின் நினைவோடே உலாவந்திருந்த பொழுது காலமே அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

— தொடரும்

10 thoughts on “எனை நீங்காதிரு-1”

  1. Mark 7

    வாவ் சூப்பர். நினைக்க கூடாதுனு நினைச்சாதானே கண் முன்னே வருவாங்க. நைஸ் ஸ்டார்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *