Skip to content
Home » எனை நீங்காதிரு 10

எனை நீங்காதிரு 10


விஷ்வா எனது கழுத்தில் தாலியைக் கட்டிய மறுநொடி கண்களில் இருந்து பொல பொலவெனக் கொட்டியது கண்ணீர்.

ஆனந்த கண்ணீர்!

என் மனங்கவர்ந்தனின் கரம் பற்றி விட்டேன் என்கின்ற மகிழ்வு அளித்த கண்ணீரது.

எனது தாய் தந்தையின் காலில் விழுந்து வணங்கினோம்.

விஷ்வாவின் அன்னை எனக்கு கன்னம் வழித்து திருஷ்டி சுத்தியவராய் ஆசிர்வாதம் வழங்கினார்.

விஷ்வாவின் தூரத்து சொந்தக்காரர்கள், அண்டை வீட்டினர்கள், உற்றார் உறவினர்கள் என அந்த ஊரிலிருந்த மொத்த குடும்பமும் எங்களின் திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்தியதைப் பார்க்க அத்தனை ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது எனக்கு.

நான் மாதாமாதம் அவர்களுக்கு அனுப்பியிருந்த சம்பளப் பணத்தை சேமித்து வைத்திருந்ததாகக் கூறி ஒரு வங்கியின் பாஸ்புக்கை என்னிடம் வழங்கிய அம்மாவும் அப்பாவும் அடுத்த சில நிமிடங்களில் கிளம்பி இருந்தனர்.

திருப்பூரில் இருந்து முந்தைய நாளே விருது நகர் அருகே இருக்கும் டவுனில் அறை எடுத்து தங்கியிருந்தோம். திருமணத்திற்கு எனக்கு பத்து பவுன் நகையும் புடவையும் விஷ்வாவிற்கு வேஷ்டி, தங்க சங்கிலி, மோதிரம் வாங்கிக் கொடுத்திருந்தனர். என்னுடைய திருமணத்தை எத்தனை சிறப்பாய் நடத்த வேண்டுமென கனவு கண்டிருந்தீர்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று மனம் தாளாது எனது தந்தையிடம் நான் கேட்டதற்கு அதிகமாக தங்கமோ ரொக்கமோ கொடுத்தாலும் விஷ்வாவின் குடும்ப நிலைக்கு அதனை என்றேனும் விற்றிடுவார்கள் அல்லது அடகு வைத்திடுவார்கள். அதற்கு இந்த பத்து பவுன் போதும், இதாவது உன்னிடம் தங்குகிறதா என்று பார்ப்போம் என்று கூறிவிட்டார் எனது அப்பா. விஷ்வா இதனைக் கேட்டால் எத்தனையாய் மனம் உடைந்து போவான். “ஏன்ப்பா இப்படிலாம் பேசுறீங்க” ஆற்றாமல் கேட்டிருந்தேன் தந்தையிடம். அப்படியே விற்றாலும் எனக்கு கொடுத்த பிறகு அவை எனது நகைகள் தானே, அதை என் அனுமதியுடன் எனது கணவன் என்ன செய்தால் இவர்களுக்கு என்ன என்று கேட்டே சண்டையிட்டிருந்தேன். அப்பொழுது தான், “நல்லவேளை நீ சம்பாதிச்சதை நீயே எடுக்க முடியாத மாதிரி தான் பேங்க்ல போட்டு வச்சிருக்கோம். இல்லனா நீயே கொண்டு போய் கடனை அடைச்சிக்கோங்கனு கொடுத்திருப்ப போலயே” என்றவராய் வங்கியில் எனது பெயரில் மாதா மாதம் வட்டி வருமாறு பணம் போட்டு சேமித்து வைத்திருப்பதாய் கூறியிருந்தார். அதை தான் இப்பொழுது என்னிடம் கொடுத்து விட்டு கிளம்புயிருந்தனர்.

பிரிவின் வேதனையில் நெஞ்சம் துடிக்க, தாயை அணைத்து கதறி அழுது, தந்தையின் கைப்பிடித்து முகத்தை புதைத்துக் அழுது என கண்ணீரில் எனது கண்மை கரையும் அளவிற்கு அழுதவாறு தான் அவர்களுக்கு விடைக்கொடுத்தனுப்பினேன். இருவருமே கண்ணீருடன் கிளம்பினார்கள். நெஞ்சில் குற்றவுணர்வு ஆட்கொண்டது. ஆயினும் அவர்கள் இவ்வாறு என்னை விட்டு செல்வதும் தவறு தானே என்று நெஞ்சம் கோபம் கொண்டது.

விஷ்வா தான் என்னைத் தேற்றி உணவுண்ண அழைத்துச் சென்றான். இருவருமாக சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம் என கைப்பேசியை எடுத்தவன், எனது முகத்தை பார்த்து விட்டு தனது கைக்குட்டையை எடுத்து எனது கண்களில் இருந்து வழிந்திருந்த கண்மையை திருத்த, சுற்றியிருந்த இளசுகள் பட்டாளம் ஓ என அலறி கேலிச் செய்து என்னை வெட்கம் கொள்ள செய்தனர்.

விஷ்வாவின் கையைப் பிடித்தவளாய், “போதும் விஷ்வா. கொடு நானே சரி செஞ்சிக்கிறேன்” நாணத்துடன் உரைத்தவளாய் அவனின் கைக்குட்டையை வாங்கி கைப்பேசியை பார்த்தவாறு திருத்திக் கொண்டேன்.

பின்பு இருவருமாக இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டோம். எங்களது திருமணத்தில் எடுக்கும் முதல் செல்ஃபி. அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தேன்.

பட்டு வேஷ்டி சட்டையில் கழுத்தில் மாலையுடன் நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்து, தாலிக் கட்டிய போது தூவிய பூக்கள் தலையில் ஆங்காங்கே இருக்க, முகத்தில் திருமணக்களை தாண்டவமாட அத்தனை அழகாய் இருந்தான் விஷ்வா. அவனருகில் பட்டு சேலை உடுத்தி, மணமகளுக்கான அலங்காரத்துடன் கழுத்தில் தங்க நகையும் மஞ்சள் கயிற்றில் பொன் தாலி பளபளக்க, மாலை அணிந்து நெற்றியிலும் உச்சியிலும் அவனிட்ட குங்குமத்துடன் மணப்பெண்ணுக்குரிய களையுடன் கன்னம் சிவந்தவளாய் நின்றிருந்த இந்தப் புகைப்படம் ஆயுளுக்கும் எங்களது மணவாழ்வின் தொடக்கத்தினை நினைவூட்டும் படமாக இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

அங்கேயே கோவில் முன்பு வந்திருந்த அனைவருக்கும் உணவு பரிமாறப்பட நாங்களும் உட்கார்ந்து உண்டோம்.

மீண்டும் சாமியை கும்பிட்டு விட்டு, வந்திருந்தவர்களை வழியனுப்பி விட்டு நாங்களும் கிளம்பலாம் என்று நின்றிருந்த வேளையில், விஷ்வாவின் கையில் இருச்சக்கர வாகனச் சாவியை கொடுத்தான் ஒருவன். அவனின் பெயர் ஜீவா என்றும் விஷ்வாவின் பக்கத்து வீட்டில் வசிக்கிறான் என்றும் இருவரும் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் ஒன்றாய் பயின்றவர்கள் என்றும் கூறி அறிமுகம் செய்து வைத்தான் விஷ்வா.

விஷ்வாவையும் அவன் கையில் இருந்த சாவியையும் கேள்வியாய் நான் பார்க்க, “அடுத்து நம்ம வீட்டுக்கு தான் போகனும்‌. இங்கிருந்து ஒரு கிமீ நடக்கிற தூரத்துல தான் இருக்கு. அதான் நாம போறதுக்கு அவனோட பைக் கொடுத்திருக்கான்” என்றான்.

‘மாப்பிள்ளை மணப்பெண்ணை பைக்ல கூட்டிட்டு போறதா? இது தான் இந்த ஊரு வழக்கமோ?’ என்று யோசித்தவளாய் அவனுடன் நடந்தேன்.

அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அவனது தோளைப் பற்றியவளாய் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

“புடவை வீல்ல மாட்டாம நல்லா இழுத்து பிடிச்சிக்கோ சக்தி” என்றவன் பின் நோக்கி திரும்பி சரியாக அமர்ந்திருக்கிறேனா என்று பார்த்தான்.

“சரியா தான்டா உட்கார்ந்திருக்கேன். நீ ஸ்டார்ட் பண்ணு” என்றேன்.

“ஆமா எதுக்கு இவ்ளோ கேப்பு?” என்று எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் காண்பித்து அவன் கேட்க,

மெல்ல சிரித்தவளாய் அவனை ஒட்டி அமர்ந்து கொண்டேன். அவனும் சற்று பின்னே தள்ளி என் உடலுடன் உரசியவாறு அமர்ந்தவனாய் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

எத்தனை மெதுவாக செல்ல முடியுமோ அத்தனை மெதுவாக வண்டியை ஓட்டினான்.

“சைக்கிளே நம்மளை ஓவர்டேக் பண்ணிடும்டா விஷ்வா” என்று சிரித்தேன் நான்.

எனது கைப்பேசியை எடுத்தவளாய் இருவரையும் அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தேன்.

செல்ஃபி எடுத்தது போதும் என்றவனாய் எனது கையை பிடித்து அவனது வயிற்றைச் சுற்றி போட்டுக் கொண்டான் விஷ்வா.

இருவரும் இணைந்து செல்லும் முதல் பைக் பயணம்!

மெல்ல அவனது தோளில் சாய்ந்து கொண்டேன். அவனது தலையை சாய்த்தவனாய் எனது தலையில் முட்டினான்.

“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு இன்னும் நம்ப முடியலை சக்தி” என்றான்.

அவனது வயிற்றில் இருந்த கையை நகர்த்தி தொடையில் சுளீரென நான் கிள்ள, ஸ்அஆஆஆ எனக் கத்தியவனாய், “ஏன்டி கிள்ளுன?” எனக் கேட்டான்.

“என்னது டி-யா”

“ஆமாடி இனி நீ தான்டி என் பொண்டாட்டி. அதுலயே டி வருதே டி” என்று டீ போட்டு வெறுப்பேற்ற, மெல்ல குனிந்து அவன் காதை கடித்திருந்தேன் நான்.

“அடியே என்னடி செய்ற” கூச்சத்தில் நெளிந்தவனாய் வயிற்றில் இருந்த எனது கையில் கிள்ளினான்.

எத்தனை மெதுவாக ஓட்டியும் பத்து நிமிடத்தில் வீடு வந்துவிட்டிருந்தது.

வெளியே சுற்று சுவராக முள்வேலி கட்டப்பட்டிருக்க, அதன் மத்தியில் செங்கலில் கட்டப்பட்டு உச்சியில் ஓலை வேயப்பட்ட கூரை வீட்டை பார்த்து வாயடைத்து நின்று விட்டேன் நான். அந்த முள்வேலிக்குள்ளேயே வெளியே தனியே குளியலறையும் கழிவறையும் கட்டப்பட்டிருந்தது.

இத்தகைய அமைப்பில் இருக்கும் வீட்டை எதிர்பார்த்திருக்கவில்லை நான்.

திருப்பூரில் இருந்து நாங்கள் மகிழுந்தில் தான் விருது நகர் வந்திருந்தோம். காலை நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே அலங்காரம் முடிந்து விட்டு தான் கிளம்பினோம். அதனால் என்னை கோவிலில் இறக்கி விட்டு என்னுடைய உடைமைகளை விஷ்வாவின் வீட்டில் வைத்து விட்டு வருவதாக உரைத்து எனது தாயும் தந்தையும் சென்றார்கள். ஒரு வேளை விஷ்வாவின் வீட்டை பார்த்து விட்டு தான் இங்கே வர பிடிக்காது உடனே கிள்மபி விட்டார்களோ என்று சிந்தித்தவளாய் நின்றிருந்தேன் நான்.

சிரித்த முகமாய் விஷ்வா எனது கையைப் பற்றி நடக்க, சிந்தனையை கைவிட்டு நானும் சிரித்த முகமாய் உடன் சென்றேன்.

வீட்டின் வாசலில் எங்களுக்காக மூத்த பெண்மணிகள் சிலர் காத்திருந்தனர்.

எங்கள் இருவருக்கும் வாசலிலேயே ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினர்.

உள்ளே சென்று மாலையை கழற்றி விட்டு இருவரும் நாற்காலியில் அமர, சுற்றியும் பார்வையை சுழல விட்டேன்.

ஒரு படுக்கையறையும் அதனை ஒட்டி சிறிய சமையலறையும் ஒருவர் படுக்கும் அளவு சிறிய முகப்பறையும் இருந்தது.

ஒரு மூத்த பெண்மணி வந்து அவனுக்கு பாதி வாழைப்பழத்தை உண்ண கொடுத்து விட்டு மீதியை எனக்கு கொடுத்தார். ஒரு டம்ளர் முழுவதும் பாலை நிரப்பி கொடுத்து பாதியை அவனை குடிக்க செய்து மீதியை எனக்கு கொடுத்தார்.

அதன் பிறகு அனைவரும் உட்கார்ந்து அவரவர் கதையைப் பேசிக் கொண்டிருக்க, வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் விஷ்வா. இனி இது தான் என் வீடு என்று மனத்தை தேற்றிக் கொண்டேன். காலையில் நடந்த எனது திருமணத்தை நினைத்து பார்த்தேன். மொத்தமே மூன்று மணி நேரத்தில் அனைத்து சடங்குகளும் முடிந்து தாலியும் கட்டிருந்தான் விஷ்வா. இத்தனை விரைவாக சடங்குகளுடன் நடந்த திருமணத்தை என் வாழ்நாளில் இப்பொழுது தான் பார்க்கிறேன். எப்படியோ விஷ்வாவின் மனைவி ஆகிவிட்டேன் என்கின்ற எண்ணமே மனத்திற்குள் ஒருவிதமான பூரிப்பை அளித்திருந்தது. ஊரிலிருந்த பெண்மணிகள் சிலர், திருமணத்திற்கு வர முடியவில்லை எனக் கூறி வந்து பார்த்து பேசிவிட்டு சென்றனர். எனக்கு இங்கு அனைத்துமே புதிதாக இருந்தது.

ஏதேதோ சிந்தத்தவளாய் நான் எனது கைப்பேசியில் எங்களது புகைப்படத்தை ஸ்டேடஸில் வைத்து விட்டு தாய் தந்தையரின் வாட்ஸ்சப்பிற்கு ஆசை ஆசையாக அந்த செல்ஃபியை அனுப்ப, அப்பொழுது தான் அவர்கள் இருவரும் எனது எண்ணை பிளாக் செய்திருந்ததைக் கண்டேன்.

சட்டென கண்களில் துளிர்த்த நீரை அவசரமாகத் துடைத்தவளாய் சுற்றி முற்றி பார்த்தேன். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருக்க என்னை யாரும் பார்க்கவில்லை. எனக்கு மனமே ஆறவில்லை. அந்தளவிற்கு நான் என்ன தப்பு செய்து விட்டேன். துடைக்கத் துடைக்க நில்லாது கண்ணீர் பெருகியது.

என்னருகில் வந்த எனது அத்தை, “நீ ரூம்குள்ள போய் தூங்குமா. சாயங்காலமா ஊருல உள்ளவங்களுக்குலாம் நாம விருந்து சோறு போடுறோம். அதுக்கு நீ கிளம்பி வந்தா போதும்” என்று என்னை அனுப்பி வைத்தார்.

படுக்கையறைக்குள் நுழைந்து பார்த்தேன். ஒருவர் படுக்கக் கூடிய வகையில் இருந்த அந்த ஸ்டீல் கட்டில் மேல் மெத்தை போடப்பட்டிருந்தது. ஒரு பக்க சுவர் முழுவதும் துணிமணி சாமான்கள் வைப்பதற்கான ஷெல்ப் போல் கட்டப்பட்டிருந்தது. கட்டில் போடப்பட்டுள்ளதால் இருவர் நடமாடும் அளவு மட்டுமே அறையில் இடமிருந்தது. ஆனால் கழிவறை உள்ளே இல்லை. அப்படியே அந்த மெத்தையில் படுத்தேன். கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி வழிந்தன.

“தம்பி விசுவா…” என எனது அத்தை விஷ்வாவை அழைக்கும் குரல் எனக்கு இங்கே தெளிவாகக் கேட்டது.

“அந்தப் பிள்ளை முகமே வாடிக் கிடக்கு. புது இடம். அதுக்கு உன்னை மட்டும் தானே தெரியும். நீயும் இப்படி கண்டுக்காம இருந்தா அந்த பிள்ளை மனசு சங்கடப்படும்ல. போய் அந்த பிள்ளை கூட இரு தம்பி” எனது அத்தை விஷ்வாவிடம் பேசியது தெள்ளத் தெளிவாக எனக்கு கேட்டது.

அறைக்குள் நுழைந்தான் விஷ்வா.

———–

என் வாழ்நாளுக்குமான பொன்நாள்!
என்னவளை நான் கரம் பிடித்த நன்னாள்!
என் மணநாள்!

உண்மையில் மாப்பிள்ளையாய் இந்நாளைப் பற்றிய கனவுகளிலும் கற்பனைகளிலும் சஞ்சரிக்கக் கூடிய சூழலில் நான் இருக்கவில்லை.

எங்கள் ஊரில் எங்கள் குலத்தெய்வக் கோவிலில் திருமணம் நடைபெறுவதால், திருமண ஏற்பாட்டை முழுவதுமாக நானே செய்ய வேண்டிய நிலையில் இருந்தேன்.

தந்தையின் இன்மையையும் உறவென்று உதவ யாருமில்லா வெற்றிடத்தையும் வெகுவாய் உணர்ந்த தருணமது.

இந்நிலையில் எனக்கு கைக்கொடுத்து உதவியது ஜீவா தான். நானும் அவனும் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக பயின்றோம். அதன் பிறகு நான் மேலும் படிக்க சென்று விட்டேன். அவன் வேலைக்கு சென்று விட்டான். அவன் இப்பொழுது துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான். மனைவியின் பிரசவத்திற்காக இப்பொழுது ஒரு மாத விடுப்பில் வந்திருந்தவன், திருமண ஏற்பாட்டில் நிறைய எனக்கு உதவியிருந்தான்.

இரு நாள்களுக்கு முன்பு‌ தான் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தேன். தாய் வழி உறவினர்கள் சிவகாசியில் இருக்க, அவர்களையும் ஊரிலுள்ள அனைவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தேன்.

இந்த அலைச்சலில் இருந்ததினாலும் திருமண நாளன்று அனைத்தும் சரியாக நடக்க வேண்டுமென மேற்பார்வை பார்த்துக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்ததாலும், அனைத்தும் சரியாக நடக்க வேண்டுமே என்கின்ற படபடப்பினாலும் எனது திருமணத்தை கொண்டாட்ட மனநிலையில் அணுக முடியாத நிலையில் இருந்தேன்.

என்னவளின் கழுத்தில் தாலியைக் கட்டிய அந்தத் தருணத்தில் இருந்த மனச்சோர்வுகள் அனைத்தும் தூள் தூளாக, மனம் மகிழ்வில் துள்ளியது. அதன் பிறகு தான் சற்று இயல்பாகி கலகலப்பாக உலாவினேன்.

அந்த பைக் பயணத்தை அத்தனையாய் ரசித்தேன். அவளுடன் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் வயிற்றினுள் பட்டாம்பூச்சி பறக்கும் பூரிப்புடன் அத்தனையாய் ரசித்தேன்.

வீட்டிற்கு வந்ததும் மாலை ஊர் விருந்து ஏற்பாட்டைப் பற்றி கேட்டறிந்து கொள்ள சென்றேன்.

உணவு ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் பேசி முடித்து, விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் மண்டபத்திற்கு பேசி முடித்து சற்று இலகுவாய் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அழைத்தார் என் அன்னை.

சக்தியின் முகம் வாடியிருப்பதாய் அவர் கூறியதும், அவ உடம்புக்கு எதுவும் முடியலையோ என்று எண்ணியவனாகத் தான் உள்ளே சென்றேன்.

கட்டிலில் படுத்தவாறு கண்ணீர் உகுத்தவளைக் கண்டு பதறிப்போனது நெஞ்சம்.

“என்னாச்சுப்பா? ஏன்ப்பா அழுற?” என்றவாறு கட்டிலில் நான் அமரவும், எனது மடியில் தலை வைத்து இடையைக் கட்டிக் கொண்டாள்.

“என்னாச்சு சக்திமா?” அவளின் கண்ணீரைத் துடைத்தவனாய் நான் கேட்க,

“அப்பாவும் அம்மாவும்” என விசும்பினாள்.

“அப்பாவும் அம்மாவும் உன்னை பாதிலேயே விட்டுட்டு போனது கஷ்டமா இருக்கா? அதான் நான் இருக்கேனே சக்தி” அவளின் தலையைக் கோதியவனாய் நான் கூற,

அழுகையின் விம்மலுடன், “என்னோட போன் நம்பரையே பிளாக் செஞ்சிட்டாங்கடா விஷ்வா” என்றாள்.

“ஓ” சட்டென அமைதியாகி விட்டேன். என்ன கூறவென எனக்கே தெரியவில்லை.

“விடுப்பா! இதெல்லாம் கொஞ்ச காலம் தான். எத்தனை நாளைக்கு தான் இப்படி அவங்களால வெட்டிக்கிட்டு இருக்க முடியும். நமக்கு குழந்தை பிறந்த பிறகு தாத்தா பாட்டினு வந்து நிப்பாங்க பாரு” என்றேன்.

அவளின் கண்ணீரைத் துடைத்து, குனிந்து நெற்றியில் முத்தமிட்டேன்.

எழுந்து அமர்ந்து, “குடிக்க தண்ணீர் வேணும்” என்று கேட்டாள். சமையலறையில் குடத்தில் வைத்திருந்த தண்ணீரை சொம்பில் மொண்டு வந்து அவளுக்கு கொடுத்தேன்.

தண்ணீரைக் குடித்தவளாய், “விஷ்வா இது தான் உங்க வீடா?” எனக் கேட்டாள்.

“ஆமா ஏன் அப்படி கேட்குற?”

“இல்ல நான் திண்ணை, முத்தம்லாம் வச்சி பெரிய வீடுனு நினைச்சேன்” சற்று தயக்கத்துடனேயே கேட்டாள்.

அவளின் கையைப் பற்றி எனது கைக்குள் வைத்து வருடியவனாய்,
“அப்படி ஒரு பாரம்பரிய வீடு எங்களுக்கு இருந்துச்சு சக்தி. நான் ஏழாவது படிக்கிற வரைக்கும் அங்கே தான் இருந்தோம். அப்பாவோட தங்கச்சி புருஷன் இறந்ததும் அவங்களுக்கு போக்கிடம் இல்லை உதவ ஆள் இல்லைனு அந்த வீட்டை அவங்களுக்கு எழுதி கொடுத்துட்டாங்க அப்பா. நாங்க இங்கே வந்துட்டோம். இந்த இடத்துல அந்த மாதிரி ஒரு சொந்த வீட்டை கட்டுறது தான் எனக்கு லட்சியமே சக்தி” என்றேன்.

“ஹ்ம்ம்” என்றவளாய் எனது புஜத்தினைப் பற்றி தோளில் சாய்ந்து கொண்டாள்.

“இரண்டு மாடி ஏசி ரூமுனு இருக்கிற உங்க வீட்டோட கம்பேர் செய்யவே முடியாத சின்னவீடு தான் இது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ சக்தி” என்றேன்.

“பரவாயில்ல விஷ்வா. எந்த மாதிரி இடமா இருந்தாலும் நீ என் கூட இருந்தா போதும்” என்றவளை கனிவுடன் நோக்கியவனாய் கன்னத்தில் இதழ் பதித்தேன்.

என் இடையோடு அணைத்து மேலும் என்னோடு இறுக்கி கிடந்தவளாய், “ஆமா அது என்ன ஊர் விருந்து?” எனக் கேட்டாள்.

“கல்யாணம்னா எங்க ஊரு வழக்கப்படி காலைல பொண்ணு வீட்டுல போய் தாலிக் கட்டிட்டு அப்பவே கையோட பொண்ணை கூட்டிட்டு வந்துடுவாங்க. சாயங்காலம் பொண்ணு வீட்டுல உள்ளவங்கலாம் பையன் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுவாங்க. அன்னிக்கு பையன் வீடு இருக்க ஊரே அந்த சாப்பாட்டை சாப்பிடும். அதை இங்கே கொஞ்சம் சிம்பிளா ரிசப்ஷன் மாதிரி செய்யலாம்னு எங்க ஊருக்குள்ள இருக்க மண்டபத்தையும் புக் செஞ்சிட்டேன்” என்றவாறு அவளின் கையில் ஒரு பார்சலை கொடுத்தேன்.

“என்னடா இது?”

“பிரிச்சி பாரு”

பிரித்தவளின் கண்கள் ஒளிர, “டிசைனர் சாரி! எப்படா வாங்குன?” எனக் கேட்டாள்.

“சென்னைல இறங்கி வாங்கிட்டு தான் இங்கே வந்தேன். இதே கலர்ல எனக்கு சட்டை எடுத்தேன். இன்னிக்கு சாயங்காலம் இந்த சாரி கட்டிக்கோ. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு இந்த சாரிக்கு செட் ஆகுற மாதிரி கொஞ்சம் கிராண்டா பிளவுஸ் எடுத்திருக்கேன்” என்றவாறு ஒரு பார்சலை வழங்கினேன்.

அதில் இந்த புடவை நிறத்திற்கு ஏற்ற வளையல், பொட்டு, நகப்பூச்சு, செருப்பு எல்லாம் இருந்தது.

“எப்படிடா எல்லாமே கரெக்ட் சைஸ்ல வாங்கியிருக்க?” ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“எல்லா கடைலயும் உன்னை மாதிரியே ஏதாவது பொண்ணு இருந்தாங்க. அவங்களை காண்பிச்சு அந்த சைஸ்னு சொல்லி தான் வாங்கினேன்” என்றேன்.

அவளின் முகம் மகிழ்ச்சியில் மிளிர்வதை சந்தோஷத்துடன் நான் பார்த்துக் கொண்டிருக்க, எனது சட்டை காலரை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“இப்பவே உசுப்பேத்து விட்டுடாதப்பா‌! அப்புறம் நைட் வரைக்கும் நான் காத்துக் கிடக்கனும்” என்று கேலியாய் கூற,

“ஆமா அப்படியே என்னமோ நைட் பத்தின எண்ணமே இல்லாம இருக்க மாதிரி பேச்சை பாரு” எனது மார்பில் முகம் புதைத்தவளாய் ஹஸ்கி குரலில் கூறினாள்.

சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவனாய், “ஹாஹா ஹா அதை ஏன் ரகசியமா ஹஸ்கி வாய்ஸ்ல சொல்ற?” எனக் கேட்டேன்.

“இங்கே சைலண்ட்டா பேசினாலே வெளிய கேட்கும் போலயே விஷ்வா. எப்படிடா நைட் சத்தம் வராம பேசுறது” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் அட்டகாசமாய் சிரித்தவனாய், “நாம ஏன்ப்பா நைட் பேசிக்கிட்டு இருக்க போறோம்” எனக் கேட்டேன்.

எனது காதோரம் உரசியவாறு, “முத்தம் கொடுத்தா சத்தம் வராதா?” எனக் கேட்டாள்.

“ஓ அந்த சத்தம். நீ ஒன்னும் கவலைப்படாதடா சக்திமா! சத்தம் வராம உன் புருஷன் மேட்டரை முடிச்சிடுறேன்”

“அச்சோ அசிங்கமா பேசாதடா” எனது உதட்டில் அடித்தாள்.

“யாரு நானு அசிங்கமா பேசுறேன். இந்த பேச்சை ஆரம்பிச்சது யாருப்பா” அவளின் கண்ணை உற்று நோக்கியவாறு கேட்க, கூச்சத்தில் நெளிந்தவளாய் எனது மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

வாய்விட்டுச் சிரித்தவனாய், “மை ஸ்வீட் லட்டுக்குட்டி” என அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.

மாலை வரவேற்பும் விருந்தும் விமர்சையாய் நடந்து முடிக்க, நாங்கள் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இரவு சடங்கும் இனிதாய் நிறைவடைந்தது.

பூவும் நாறுமாய் பின்னி பிணைந்து ஈருடல் ஓருயிராய் அவளுள் நானும், என்னுள் அவளும் ஒன்றாய் கலந்து விஷ்வசக்தியாய் கரைந்து போனோம்.

அடுத்த வந்த பத்து நாள்களும் எனது வாழ்வில் மகிழ்வை மட்டுமே சுமந்து வந்த இனிய நாள்களாய் பறந்தோடின. நான் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய அந்த நாளும் வந்தது.

5 thoughts on “எனை நீங்காதிரு 10”

 1. CRVS 2797

  அப்படின்னா .. பொண்டாட்டியை இங்கேயே விட்டுட்டு தான் சிங்கப்பூர் போகப் போறானோ…??

 2. Kalidevi

  Congrats mrg panitanga next step started. Ipo shakthi ah vitu singapore poriya viswa ava inga thaniya ena pana pora eppadi iruka pora una vitu

  1. Dina Nila

   ஆமா கஷ்டம் தான். என்ன செய்ய போறானு பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *