Skip to content
Home » எனை நீங்காதிரு 13

எனை நீங்காதிரு 13

எனை நீங்காதிரு 13
முன்தினம் கோபத்துடன் இணைப்பைத் துண்டித்திருந்தவள் அதன் பிறகு எனது அழைப்பை ஏற்காது இருப்பாள் என்று தான் நான் நினைத்திருந்தேன்.

ஆனால் அன்றிரவே எனது அழைப்பையேற்று இயல்பாய் பேசியிருந்தாள்.

மறுநாள் தான் வீட்டிற்குச் செல்ல முடியும் என்று உரைத்தவள் அங்குத் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்களைத் தன்னார்வலர்கள் கொடுத்தார்கள் என்றும், ஆயினும் இவளுக்குத் தான் உண்ண பிடிக்கவில்லை என்றும் உரைத்தாள். அங்கிருக்கும் கழிவறை உபயோகிக்கக் கூடிய நிலையில் இல்லை. இன்னும் ஒரு நாள் இங்கே எப்படி இருப்பது என்று தெரியவில்லை என்று புலம்பினாள். இதற்குப் பயந்தே உண்ணாது இருப்பதாக உரைத்தாள்.

நான் இங்கே இருந்து கொண்டு என்ன செய்வது. என்னால் முடிந்த வரை ஆறுதல் உரைத்தேன். நீர் ஆகாரமாய் எதையேனும் குடிக்குமாறு உரைத்தேன்.

மறுநாள் மதியம் அழைத்தவள், மாலை வீட்டிற்குச் செல்ல போவதாக மகிழ்வுடன் உரைத்திருந்தாள். ஆனால் மாலை அழைத்துக் கூறிய செய்தியில் அதிர்ந்து போனேன்.

தொடர்ந்த மழையில் ஊறியிருந்த சுவர் இடிந்து விழுந்து தங்க இடம் இல்லாது தெருவில் நின்றவாறு கண்ணீருடன் சக்தி என்னிடம் உரைத்த போது பதைப்பதைத்துப் போனது நெஞ்சம்.

‘அய்யோ என்னை நம்பி தானே வந்தா. இப்படி ஆகிடுச்சே’ எனத் துடித்துப் போனவனாய்,

“சக்தி! ஃபோனை அம்மாகிட்ட கொடு! நான் தங்க ஏற்பாடு செய்றேன்” என்று பதட்டத்துடன் நான் உரைத்ததைக் கேட்டதும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவளாய்,

“ஒன்னுமில்லடா விஷ்வா. ஐ கேன் மேனேஜ்! நீ பதட்டப்படாத” சற்று கரகரத்த குரலில் உரைத்தவள் எனது தாயிடம் கைப்பேசியைக் கொடுத்தாள்.

அம்மா ஒரு புறம் அழுதவாறு பேசி என்னை மேலும் தவிப்புற செய்ய, அவரிடம் இருந்து கைப்பேசியை வாங்கியவளாய், “நீ ஒன்னும் கவலைப்படாத விஷ்வா. அத்தையை நான் பார்த்துக்கிறேன். ஜீவா அண்ணாவோட மனைவி வந்து அவங்க வீட்டுக்கு வர சொல்லிட்டு போனாங்க. நாங்க அங்க போய்ட்டு போன் செய்றோம்” என்று உரைத்து விட்டு சென்றுவிட்டாள்.

அந்நிலையிலும் நான் தவிப்புறக் கூடாது என அவளின் வேதனையை மறைத்து என்னைச் சமாதானம் செய்து விட்டு செல்கிறாள்.

இவள் வைத்த உடனே ஜீவாவின் மனைவிக்கு அழைத்திருந்தேன். ஜீவா துபாய்க்குச் சென்றிருந்தான். அவரிடம் இருவரையும் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

அவரிடம் பேசி வைத்தபின்பு அடுத்து என்ன என்றே மனம் சுழன்று வந்தது. அன்றைய வேலைகள் எதிலும் மனம் செல்லவேயில்லை.

ஏற்கனவே தொழில் செய்யச் சேமித்து வைத்திருந்த பணத்தில் தான் திருமணச் செலவுகளைச் செய்திருந்தேன். இப்பொழுது இருக்கும் பணத்தையும் வீடு கட்ட செலவழித்து விட்டால் எப்படி ஒரு வருடத்திற்குப் பிறகு தொழில் தொடங்குவது என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தேன்.

சக்திக்கு அழைத்து வீட்டில் எந்தச் சுவர் இடிந்து விழுந்திருக்கிறது. எந்தளவிற்கு எடுத்து கட்ட வேண்டியிருக்கும் என்று கேட்ட பின்பு முடிவு செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஜீவாவின் வீட்டில் தங்கியிருப்பதாகக் குறுஞ்செய்தி அனுப்பினாள் சக்தி.

‘இன்னிக்கு தங்க ஏற்பாடு செய்தாச்சு. வீடு கட்டுற வரைக்கும் இவங்களை எங்க தங்க வைக்கிறது?’ என்று சிந்தித்தவனாய் எனது அலுவலக வேலையைக் கவனிக்கச் சென்றேன்.


ஒருவித அவமானத்தில் உடல் நடுங்கும் என்பார்களே, அத்தகைய மனநடுக்கத்துடன் தான் இடிந்த வீட்டின் முன்பு நின்றிருந்தேன் நான்.

அழுது விடக் கூடாது என்று முயன்று உதட்டினைக் கடித்துக் கொண்டு நின்றவள், விஷ்வாவிடம் பேசும் போது என்னை அறியாமல் கதறி விட்டேன்.

அதன் பின்பு தான் தூர தேசத்தில் இருப்பவனைப் பயமுறுத்துமே எனது செயல் என்று நெஞ்சம் துணுக்குற, நான் திடமாக இருப்பதாக அவனிடம் காட்டிக் கொண்டேன்.

ஜீவா அண்ணாவின் மனைவி ஆனந்தி அண்ணி வந்து அழைத்ததும் நெஞ்சம் சற்று ஆசுவாசமானது.

அவரின் வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாகக் கழிவறைக்குத் தான் சென்றிருந்தேன்.

நானும் அத்தையும் தங்கவென அவரின் வீட்டில் இருந்த ஒரு அறையைச் சுத்தம் செய்து ஒதுக்கி கொடுத்தார் ஆனந்தி அண்ணி.

எங்களது படுக்கையறை அளவே இருந்த அந்த அறையில் நானும் அத்தையும் சென்று அப்படியே தரையில் அமர்ந்து கொண்டோம்.

யாரென்று தெரியாதவர் வீட்டில் இப்படித் தங்குவது மிகுந்த அசௌகரியமாக இருந்தது. மனத்தினுள் பெருத்த வலி. அப்பா வேண்டும் என்று அரற்றியது மனம். எனக்குச் சின்னப் பிரச்சனை என்றாலும் ஓடோடி வந்து நான் இருக்கிறேன் என்று பாதுகாத்து அரவணைத்துக் கொள்ளும் அப்பாவின் நினைவில் கசிந்தது கண்ணீர். அப்படியே உடலைச் சுருக்கி தரையில் படுத்துக் கொண்டேன். எப்படி அவரால் இப்படி என்னை வெட்டி விட்டு செல்ல முடிந்தது. நான் இப்பொழுது இப்படிக் கஷ்டப்படுகிறேன் என்று கேள்விப்பட்டால் உடனே வந்திடுவார் தானே. ஆனாலும் எதுவும் அவருக்குத் தெரிய வேண்டாம். வாழ்ந்து காட்டுகிறோம் என்று வைராக்கியத்துடன் வந்த பிறகு, நன்றாக வாழும் போது தான் அங்குச் செல்ல வேண்டும். என்னென்னவோ எண்ண அலைகள் மனத்தோடு ஊர்வலம் போக அப்படியே உறங்கி இருந்தேன் நான்.


மாலை வேலை முடிந்து அறைக்கு வந்ததும் முதல் வேலையாக சக்திக்கு அழைத்தேன்.

“அங்கே எல்லாம் ஓகேவா சக்தி?”

“ஓகேடா. ஆனா எவ்ளோ நாள் இப்படி மத்தவங்க வீட்டுல இருக்க முடியும். நான் சென்னைக்குப் போய்ட்டாலும் அத்தையை இப்படி விட்டுட்டு போனா நல்லா இருக்காதே” சோகம் இழையோடியது அவள் குரலில்.

“அழுதியா சக்தி?”

“நான் அழாம இருந்தா தான் அதிசயம்னு ஆகிப் போச்சு. இந்த இரண்டு நாள்ல ரொம்பப் பட்டுட்டேன்டா. அப்பா அம்மாவை கஷ்டபடுத்தினதால தான் இப்படி அனுபவிக்கிறேன் போல” நா தழுதழுக்கக் கூறியவளிடம் கோபம் கொள்ள முடியவில்லை எனக்கு.

ஆனாலும், “என்னை ஏன் தான் கட்டிக்கிட்டோமோனு தோணுதா சக்தி” எனக் கேட்டிருந்தேன்.

அவள் கூறிய சொற்களின் பொருளை அறிய முற்பட்டேன்.

“லூசு மாதிரி பேசாத விஷ்வா. ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன். நீ வேற வெறுப்பேத்தாத” கடுப்பாய் அவளுரைக்க,

“அப்ப நீ சொன்னதுக்கான அர்த்தம் தான் என்ன? என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டனால தானே உன்னோட அம்மா அப்பாவை நீ கஷ்டப்படுத்த வேண்டியதா போச்சு” எனக் கேட்டேன்.

“எனக்கு மேரேஜ் செஞ்சி வச்சிட்டு உன் கூட அப்படியே அனுப்பிடுவோம்னு சொன்னப்ப நான் எதுவும் எதிர்த்து பேசாம சம்மதிச்சா போதும்னு இருந்துட்டேன் விஷ்வா. அப்பவே அவங்ககிட்ட சண்டை போட்டு என்னோட மேரேஜ்க்கு பிறகும், கூட இருக்கனும்னு சொல்லி சம்மதிக்க வைக்க ஏதேனும் முயற்சி செஞ்சிருக்கலாமோனு தான் நினைச்சேனே தவிர, உன்னை ஏன் கல்யாணம் செஞ்சிக்கிட்டேனோனு நினைக்கலை. உன்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிக்கிட்டு தானே ஒத்துக்கிட்டேன். மழை பெஞ்சி வீடு இல்லாம போனா நீ என்ன செய்வ? இனி ஒரு தரம் இப்படிச் சொல்லாத விஷ்வா. ஏற்கனவே இருக்கிற வலில நீயும் என்னைக் கஷ்டப்படுத்தாதடா! இப்ப கூட நம்ம வீட்டை எப்படிச் சரி செய்யலாம்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்” கோபமும் ஆதங்கமும் போட்டி போட கடுமையாகவே உரைத்திருந்தாள்.

“சாரி சக்தி” உணர்ந்து மன்னிப்புக் கேட்டேன்.

“நான் பக்கத்துல இருந்திருந்தா இப்படி உன்னை ஃபீல் செய்ய விட்டிருக்க மாட்டேன். அட்லீஸ்ட் நான் இருக்கேன்ற ஆறுதலாவது உனக்குக் கிடைச்சிருக்கும்” வேதனையுடன் நான் உரைக்க,

“ஆமா விஷ்வா. ரியலி மிஸ் யூ எ லாட்” என்றாள்.

ஹ்ம்ம் எனப் பெருமூச்சு விட்டவனாய், “இப்ப என்ன செய்யலாம்? எந்தப் பக்க செவுரு இடிஞ்சி விழுந்திருக்கு?” எனக் கேட்டேன்.

“நம்ம பெட்ரூம் செவுரு தான் இடிஞ்சி விழுந்திருக்கு விஷ்வா”

“அதை மட்டும் எடுத்து கட்டலாமா சக்தி”

“இல்ல விஷ்வா. எப்படியோ முழு வீட்டையும் இடிச்சி கட்ட தானே போறோம். அதை இப்பவே செஞ்சா என்ன?”

“ஹே பெரிசா வீடு கட்டனும்னா எவ்ளோ பட்ஜட் ஆகும்னு தெரியுமா?”

“நான் பெரிசா கட்ட சொல்லலை. பெட்ரூம் கூடவே அட்டாச்டு பாத்ரூம். சின்ன ஹால் அண்ட் கிச்சன். அவ்ளோ தான். இந்த வீடு ரொம்பப் பழசா இருக்கு. திரும்ப மழை பெஞ்சி இடிஞ்சு விழுந்தா என்ன செய்றது. அதுக்கு முழுசா கட்டுறது தானே பெஸ்ட்”

திருமணச் செலவு போக மீதமிருக்கும் சேமிப்பில் முக்கால்வாசி இதில் கரைந்து விடுமே என்று யோசித்த வண்ணம் அமைதியாக நான் இருக்க, எனது அமைதியின் பொருள் புரிந்தவளாய், “வீடு கட்ட என் நகையை நான் வித்துக் கொடுக்கிறேன் விஷ்வா” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன்” பட்டென உரைத்திருந்தேன் நான்.

“என் காசை வாங்குறதுல உனக்கு என்ன தான்டா பிரச்னை? பொண்டாட்டி காசுல புருஷன் வாழக் கூடாதுனு நினைக்கிற ஈகோயிஸ்ட்டாடா நீ” அத்தனை கோபமாகக் கேட்டிருந்தாள்.

“சக்திஇஇஇ! மைண்ட் யுவர் வர்ட்ஸ்” பல்லைக் கடித்துக் கொண்டு கத்தியிருந்தேன் நான்.

“பின்னே எல்லாத்துக்கும் வேண்டாம் வேண்டாம்னா மனசுல என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்க நீ?” என்றவள் கேட்க, இணைப்பைத் துண்டித்திருந்தேன் நான்.

“ஈகோயிஸ்ட்” அந்த வார்த்தை அத்தனை கோபமூட்டியது என்னை.

அவள் அழைக்க மீண்டும் துண்டித்திருந்தேன். மீண்டும் மீண்டும் அழைக்க, மீண்டும் மீண்டும் துண்டித்திருந்தேன்.

இரவு உணவும் உண்ணாமல் படுக்கையில் உருண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வராதிருக்க, அதற்கு மேல் கோபத்தை இழுத்து வைத்து பிடிக்க இயலாதவனாய் சக்திக்கு அழைத்தேன்.

“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றாள்.

அவளின் ங்க விளிப்பில் அருகில் அம்மா இருக்கிறார் என்று புரிந்ததும் லேசாய் முறுவலித்தேன்.

“அத்தைக்கிட்ட கொடுக்கிறேன் பேசுங்க” என்றவள் அம்மாவிடம் கொடுத்து விட்டாள்.

அவரிடம் பேசிவிட்டு மீண்டுமாய் இவளிடம் அம்மா கைப்பேசியைக் கொடுத்ததும், இணைப்பைத் துண்டித்திருந்தாள்.

“ம்ப்ச் இப்ப இவ டர்ன்னா..” சலித்தவாறு மீண்டுமாய் அழைத்தேன் நான்.

“ஹ்ம்ம் சொல்லுங்க” வாய்க்குள்ளேயே முனகினாள்.

“சாரிப்பா! நீ ஈகோயிஸ்ட்னு சொன்னது ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு. ஆனா உன்கிட்ட அப்படிச் சண்டை போட்டுட்டு தூங்கவும் முடியலை. சாரிடா சக்தி” என்றதும்,

“ஹ்ம்ம்” என்றாள்.

“என்னப்பா முனகிட்டு இருக்க? வாய் திறந்து பேசேன்” என்றேன்.

அவள் ஏதும் பேசாது தொடர்பில் இருக்க, “சரி நான் ஏன் உன்கிட்ட பணம் வாங்க மாட்டேங்கிறேன்னு சொல்றேன்”

அந்தப் பக்கம் பதில் வராது இருக்க,

“ஹ்ம்ம் ஆவது கொட்டேன்டி” என்றேன்.

“ஹ்ம்ம்‌. அத்தையை விட்டு தள்ளி வந்துட்டேன். மாடில நிக்கிறேன்” என்றாள்.

“ஹ்ம்ம் உங்கப்பா என்னை வேண்டாம்னு சொன்ன காரணமே எனக்கிருந்த கடனும் எப்படியும் நான் வாழ்க்கைல முன்னேறிக்க மாட்டேன்னு என் மேல அவருக்கு இருந்த நம்பிக்கையும் தான்னு எனக்கு நல்லா தெரியும்” நான் சொல்லி முடிப்பதற்குள்,

“உனக்கெப்படிடா தெரியும்?” என ஆச்சரியமாகக் கேட்டிருந்தாள் அவள்.

“உங்கப்பா எனக்குப் போன் செஞ்சி பேசினாங்க சக்தி. உன்னை விட்டுட சொல்லி பேசினாங்க. இரண்டு பேரோட ஸ்டேடஸ் பத்தி சொன்னாங்க. என் கூட வாழ்ந்தா நீ ரொம்பக் கஷ்டபடுவனு சொன்னாங்க. நான் உனக்குத் தகுதி இல்லாதவன்னு சொன்னாங்க. இன்னும் நிறைய நிறையச் சொன்னாங்க” ஆழ்ந்த குரலில் அமைதியாக நான் உரைத்ததைக் கேட்டு அவள் அங்கு உறைந்திருக்க வேண்டும்.

“விஷ்வா ஏன்டா என்கிட்ட சொல்லலை”

“உன்கிட்ட சொல்லி சங்கபடப்படுத்த விரும்பலை. அப்ப முடிவெடுத்தேன் உன்னோட காசுல கடன் அடைக்கக் கூடாது. வீடு கட்ட கூடாதுனு. என்னோட ஊருல இருக்கும் கடனும் வீடும் என்னோட சொத்து. அதுல உனக்குப் பங்கு இல்லை சக்தி. இப்ப நீ என்னோட சேர்ந்த பிறகு நமக்குனு புதுசா வர்ற எந்தவிதமான கடன், சொத்து எதுவானாலும் அதுல உனக்கும் பங்கு உண்டு. அதுக்கு முன்னாடி எனக்கிருந்த சுமையை உன் மேல ஏத்திடக் கூடாதுனு தெளிவா இருந்தேன்.

கல்யாண செலவு இரண்டு பேரும் சேர்ந்து செஞ்சா அதுக்குக் கூட எனக்கு வக்கில்லைனு உங்கப்பா சொல்லிடுவாரோனு தான் வேண்டாம்னு சொன்னேன். எப்படியும் என் பொண்ணோட சம்பாத்தியத்தை வச்சி தானே கடன் அடைச்ச, சொந்த வீடு கட்டியிருக்க, அதுக்குத் தானே அவளைக் காதலிச்சனு உங்கப்பா ஈசியா என் காதலை கொச்சைப்படுத்திடுவாருப்பா. எனக்கு அப்படி ஒரு பெயர் வாங்கித் தர போறியா சக்தி” எனக் கேட்டேன்.

“நிஜமா அப்பா இப்படிப் பேசினாங்களா?” நம்ப முடியாத பாவனையில் கேட்டாள்.

“ஆமா சக்தி! அவருக்கு என் காதல் மேல நம்பிக்கை இல்லை. நான் எப்படியும் உன்னைக் கஷ்டப்படுத்தித் தான் வாழ்வேன்னு நம்புறார். அதான் அவர் துணை இல்லாம என் கூட வாழும் போது வாழ்க்கையோட கஷ்டம் புரியும் நீ அவரைத் தேடி போய்டுவனு நினைச்சு தான் இப்படி விட்டுட்டு போய்ருக்காரு” என்றேன்.

சக்தியின் விசும்பல் ஒலி எனக்குக் கேட்க, “விடு சக்தி. இதெல்லாம் தெரிஞ்சா கஷ்டப்படுவனு தான் நான் சொல்லலை. அதான் வீடு கட்டவும் கடன் அடைக்கவும் உன் பணம் வேண்டாம்னு சொல்றேன். நீ சேர்த்து வச்சிக்கோ. சென்னைல சொந்த வீடு வாங்கவோ இல்ல பிஸ்னஸ் செய்யவோ யூஸ் செஞ்சிக்கலாம்” என்றேன்.

“என்னால ஜீரணிக்கவே முடியலை விஷ்வா” கண்ணீருடன் கூறியிருந்தவளை அணைத்து ஆறுதல் கூற கை பரபரத்தது.

அழைப்பைத் துண்டித்து விட்டு வீடியோ காலில் அழைத்தேன். அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தாள். அங்கிருந்த பல்ப் ஒளியில் இருட்டில் தெரிந்தது அவளின் முகம்.

“கண்ணைத் துடை சக்திமா!” என்றதும் கண்ணீரை துடைத்தவளாய் என் முகத்தைப் பார்த்தாள்.

“அப்பா முன்னாடி நல்லா வாழ்ந்து காண்பிக்கனும் விஷ்வா. உன்னை அவங்க தப்பா நினைச்சு வச்சதுக்குலாம் பதிலடி கொடுக்கனும்” கோபத்துடன் அவள் உரைக்க,

“நாம நம்ம வேலையை சரியா செஞ்சாலே போதும் சக்தி. எல்லாமே தன்னால நடக்கும். இப்ப வீடு கட்ட எஸ்டிமேட் போட சொல்லனும். எனக்கு ஊரிலேயே தெரிஞ்ச கொத்தனார் இருக்காங்க. அவங்ககிட்ட பேசுறேன். அவங்க சொல்ற பட்ஜெட் வச்சி பிளான் செய்யலாம்” என்றேன்.

சரி எனத் தலை அசைத்தாள்.

“இரண்டு நாள்ல ரொம்ப வாடி சோர்ந்து போய்ட்டப்பா! நீ இங்கிருந்தது போதும். சென்னைக்குக் கிளம்பு. அம்மாவை எங்கே தங்க வைக்கிறதுனு நான் யோசிக்கிறேன்” என்றேன்.

“இல்ல அத்தையை நான் என் கூடவே கூட்டிட்டுப் போய்ப் பிஜில தங்க வச்சிக்கிறேன்” என்றாள் அவள்.

“அய்யய்யோ உங்க இரண்டு பேருக்குள்ள ஏதாவது பஞ்சாயத்து வந்துச்சுனா என்னால சமாளிக்க முடியாது. அம்மாவுக்கு இந்த வெஸ்டன் டாய்லெட்டு, ஜெயில்ல போடுற மாதிரி வச்சிருக்கச் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடுறதுலாம் செட் ஆகுது. அந்த மண்டபத்துல இருக்கும் போது கூட அவங்க சந்தோஷமா இருந்திருப்பாங்களே”

“ஆமா விஷ்வா. அங்கே ஊர்காரங்ககிட்டலாம் பேசிட்டு மண்டபத்தையே ரவுண்ட் அடிச்சிட்டு வந்தாங்க. நான் கூட இப்படிலாம் இருந்து அவங்களுக்குப் பழக்கமோனு கேட்டேன். இல்ல இங்க இருக்கிறவங்கலாம் நம்ம ஊர்காரங்க தானே இதுல என்ன சங்கடம்னு சொன்னாங்க. ஆனா வீட்டை பார்த்ததும் தான் அழுதுட்டாங்க. மாமா இருந்து கட்டின வீடாமே, அவங்களைப் பார்க்கவும் ரொம்பக் கஷ்டமா போச்சு விஷ்வா”

“ஹ்ம்ம் ஆமா அப்பாகிட்ட அப்ப இருந்த காசுல கட்டினாங்க. வீடு கட்டி முடியுற வரைக்கும் நான் அம்மாவை இங்கே ஜீவா வீட்டுலயே வாடகைக்குத் தங்க வைக்கப் பேசுறேன். நீ நாளைக்கே சென்னைக்குக் கிளம்பிடு”

“சரி விஷ்வா” என்றவளிடம் மேலும் சில நிமிடங்கள் பேசி அவளை இலகுவாக்கி, ஆறுதல் உரைத்துக் கன்னங்களைச் சிவக்கச் செய்து மனத்தை ஆசுவாசப்படுத்திய பின்பே இணைப்பைத் துண்டித்தேன்.

மறுநாள் சென்னைக்குக் கிளம்பி சென்றவள் அவளை வேலையை விட்டு நீக்கி விட்ட செய்தியை கூற தான் என்னை அழைத்திருந்தாள்.

5 thoughts on “எனை நீங்காதிரு 13”

  1. CRVS 2797

    பாவம் தான் சக்தி..! அவங்கப்பா எண்ணப்படியே தான் எல்லாம் நடக்குது.
    ரெண்டு பேருமே தாக்கு பிடிப்பாங்களா…? இல்லை பாதியிலேயே விலகிடுவாங்களா..? பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

  2. Kalidevi

    Avanga appa pesinathu ellam eppadi sollama manasula vachi vairakiyama irunthu iruka viswa . Evlo kasta paduranga irunthum ivanga love koraiya kudathu vazhnthu katanum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *