Skip to content
Home » எனை நீங்காதிரு 17

எனை நீங்காதிரு 17

எனை நீங்காதிரு 17
ஆகஸ்ட் 2019
என்னுடைய லட்சியத்தின் முதல் படியை எடுத்து வைத்த நாள்!

விஷ்வசக்தி அரிசி கடை மற்றும் ஆர்கானிக் ஸ்டோர் என்ற எங்களது கடையின் திறப்பு விழா நடந்த நாள்‌!

பாரம்பரிய அரிசி வகைகள் முதல் அனைத்து வகையான சிறு தானியங்களும், அதனுடன் செக்கு எண்ணெய், கருப்பட்டி போன்றவைகளும், விற்பனை செய்யும் கடையாக இதனை திறந்தோம்.

சென்னை திருமுல்லைவாயிலில் கடை கிடைக்க, அங்கேயே வீடு எடுத்து கொண்டோம். சக்தியின் அலுவலகத்திற்கு அங்கிருந்து ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டி இருந்த போதும் கடைக்கு அருகிலேயே வீடு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்துக் கொண்டாள்.

காலை செய்தித்தாளில் எங்களது கடையின் விளம்பரத்தாளை வைத்து அனுப்ப செய்தோம். அதன் மூலம் இங்கு இப்படி ஒரு கடை வந்திருக்கிறது என்று அந்த ஏரியாவில் பலருக்கும் தெரிய வந்தது. அதன் மூலமாக சில வாடிக்கையாளர்கள் வந்தனர். ஹோம் டெலிவரியும் வைத்திருந்தோம்.

ஆனால் கடைக்கு என்னுடன் இணைந்து வேலை செய்யவென ஆள்கள் எவரையும் எடுக்கவில்லை. நானே காலை முதல் இரவு வரை அனைத்து வேலையும் பார்க்க வேண்டியிருந்தது. காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு பதினோரு மணிக்கு தான் வீட்டிற்கு வருவேன். கடுமையான உழைப்பை போட வேண்டியதாக இருந்தது. சக்தியுடன் நான் செலவிடும் நேரங்கள் நிறையவே குறைந்து போனது. முன்பு நான் அவளுக்கு செய்திருந்த சமையல் உதவிகள் எதையும் செய்வதற்கு நேரம் இருக்கவில்லை. ஆயினும் அவள் ஏதும் கூறாது இந்தத் தொழிலில் நான் வெற்றிப் பெற வேண்டுமென்ற வேண்டுதலுடன் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள்.

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஐயாயிரம் லாபம் கிடைத்திருந்தது. நஷ்டமில்லாமல் லாபம் கிடைத்ததே மகிழ்வு தான் என்ற போதிலும் ஐடியில் வேலை செய்யும் போது மாதயிறுதியில் வங்கியில் வரும் கை நிறைய பணத்தை பார்த்து பழகிவிட்டு இவ்வாறு ஒன்றுமில்லாமல் இருப்பது மனத்தை சுணங்கச் செய்தது. ஆனாலும் எப்படியேனும் வியாபாரத்தில் முன்னேறிட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டேன்.

மாத துவக்கத்தில் எனது அருகில் வந்து அமர்ந்தாள் சக்தி.

“இருபதாயிரம் வட்டிக்கு கொடுக்கனும். அது போக இருப்பத்து அஞ்சு தான் கைல இருக்கு. பத்தாயிரம் வீட்டு வாடகைல போய்டும். கரெண்ட் பில் எவ்ளோ வரும்னு தெரியலை. மீதி இருக்கிறதை வச்சி பெட்ரோல், போன் பில், வைஃபை பில், மளிகை சாமான்னு யோசிச்சா பயமா இருக்கு விஷ்வா! இந்த மாசத்தை மேனேஜ் செய்ய முடியுமா?”

“ஹ்ம்ம் செஞ்சி தானே ஆகனும். எப்படியாவது செய்வோம்” என்றேன்.

எனது புஜத்தை பற்றியவளாய் சோகமாய் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“ஹ்ம்ம் செய்வோம். அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?” எனக் கேட்டாள்.

இன்னும் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் ஏதேனும் செய்ய வேண்டும் என சக்தியுடன் பேசியவனாய் லோக்கல் டிவியில் விளம்பரம் செய்யும் யோசனையை கூறினேன். அதற்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தில் கொஞ்சம் செலவிட வேண்டியிருக்கும் என்று கூறினேன். அவளும் ஒத்துக் கொள்ள அதையும் செய்தோம். அந்த ஏரியாவின் லோக்கல் சேனலில் எங்களது கடையின் விளம்பரம் வருமாறு செய்தோம். நான் மீதம் வைத்திருந்த செட்டில்மென்ட் பணம் முழுவதும் இதற்கு செலவாகியிருந்தது.

இரண்டாம் மாத இறுதியில் இருப்பத்து ஐந்தாயிரம் வரை லாபம் கிடைத்தது.

இதனைக் கேட்டு துள்ளிக் குதித்த சக்தி, “இன்னிக்கு ஒரு நாள் சாயங்காலம் சீக்கிரம் வாயேன். உன்னோட டைம் ஸ்பென்ட் செஞ்சி ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு” எனக் கேட்டாள்.

அன்றிரவு வெளியே கடையில் உண்டுவிட்டு இருவருமாக கைப்பற்றிக் கொண்டு நடந்தவாறு வீட்டை வந்தடைந்தோம்.

என்னை இறுக அணைத்தவளாய், “ஐ நீட் யூ பேட்லி” என்றாள். என்னை எத்தனையாய் மிஸ் செய்திருக்கிறாள் என்பதை அவளின் அணைப்பிலும் முத்தத்திலும் உணர்த்தினாள். என் மீதான அவளின் காதலை எண்ணி எப்பொழுதும் போல் நெகிழ்ந்தது நெஞ்சம்.

கடந்த இரண்டு மாதமாக கடை வேலையில் மூழ்கி அதிலேயே உழன்று அவளை நெருங்காது இருந்த என்னை அன்று அவளுள் மூழ்கி கொண்டாட செய்திருந்தாள்‌.

நாங்கள் செய்த விளம்பரத்தின் பலனாக அந்த மாதத்தில் வியாபாரம் அபரிதமாக இருக்க, எனக்கு வேலையும் நிறையவே இருந்தது. சக்தியை கவனிக்கும் நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன்.

அன்றாடம் இரவு பதினோரு மணிக்கு நான் வீட்டிற்கு செல்லும் போதும் முழித்திருந்து, அருகில் அமர்ந்து பேசியவாறு எனக்கு உணவு பரிமாறுவாள். நான் உண்டு முடித்து அவளுடன் இணைந்து சமையலறையை ஒதுங்க வைக்க உதவி செய்வேன். அதன் பின்பு என்னுடன் சேர்ந்து தான் உறங்குவாள். காலை நான் குளிக்கும் போது தான் எழுபவள், நான் வெளியே கிளம்புவதற்குள் எனக்கு காலை உணவை அளித்திடுவாள்‌.

ஆனால் கடந்த ஒரு வாரமாக இரவு நான் வரும் வேளையில் கதவை திறந்து விட்டு போய் படுப்பவள், காலை நான் கிளம்பும் வரையில் கூட எழுந்திருக்காது இருந்தாள். முதலில் அவளுக்கு மாதவிடாய் நாள்களாக இருக்குமோ என்றெண்ணி பெரியதாக கண்டுகொள்ளாமல் இருந்த நான், ஆறு நாள்களுக்கு மேல் இது தொடரவும் ஒரு நாள் குளித்து முடித்து வந்து அவளை எழுப்பினேன்.

முழித்துப் பார்த்தவள் மீண்டுமாய் கண்களை மூடவும், அவளை எழுப்பி அமர வைத்தேன்.

“என் மேல எதுவும் கோபமா சக்தி” என்று கேட்டேன்.

மலங்க மலங்க விழித்தவள், “எனக்கு தூக்கம் வருதுடா” என்று படுத்துக் கொண்டாள்.

“நீயும் நானும் பேசி கிட்டத்தட்ட பத்து நாள் ஆகுது சக்தி! நீ என்னை மிஸ் செய்யலையா?” எனக் கேட்டேன்.

“இல்ல நான் இப்ப தூக்கத்தை தான் மிஸ் செய்றேன்” என்றவளை எழுப்பி தள்ளிக் கொண்டு போய் குளியலறைக்குள் விட்டவனாய், “நான் மிஸ் செய்றேன். எனக்கு என் பொண்டாட்டிக்கிட்ட பேசனும். பிரஷ் செஞ்சிட்டு வா! காபி குடிச்சிட்டே பேசலாம்” என்றவனாய் குளியலறை கதவை சாற்றி விட்டு சமையலறைக்குள் நுழைந்தேன்.

குளியலறையில் இருந்து “உவ்வே.. உவ்வே” என அவள் வாந்தி எடுக்கும் சத்தம் வரவும், அவசரமாக அங்கு சென்றவனாய்,

“என்னப்பா என்னாச்சு?” என்றவாறு அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன்.

வாயை கொப்பளித்து விட்டு சோர்ந்து போனவளாய் நிற்கவும் முடியாது அவளது பின்னந்தலையை எனது மார்போடு சாய்த்து நின்று கொண்டவள், “ஐ திங்க் ஐம் பிரக்னெட்” என்றாள்.

இன்பமாய் அதிர்ந்தவனாய், அவளை என்னை நோக்கி திருப்பி அவளின் முகத்தை கைகளில் தாங்கியவனாய், “ஹே நிஜமாவாப்பா” எனக் கேட்டேன்.

“தெரியலை” என உதட்டைப் பிதுக்கியவள், “சிம்டம்ஸ்லாம் அப்படி தான் சொல்லுது! டெஸ்ட் செய்யனும்” என்றவளாய் என்னை தள்ளி விட்டு வெளியே சென்று படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

“என்னப்பா எவ்ளோ சந்தோஷமான செய்தியை இப்படி சொல்ற?” எனக் கேட்டேன்.

“நான் சந்தோஷமா இல்லை விஷ்வா” என்றவளாய் சுருண்டுப் படுத்துக் கொண்டாள்.

“ஏன் சக்தி? இப்ப குழந்தை வேண்டாம்னு நினைக்கிறியா?” என்று நான் கேட்டதும், எழுந்து அமர்ந்து தீயாய் முறைத்தாள்.

“பத்து நாளா இப்படி தான் முடியாம, தலை சுத்தி மயக்கம் வந்து, ஒன்னும் திங்கவும் முடியாம, அப்படியே ஆபிஸ்கும் போய்ட்டு வந்து வீட்டுலயும் வேலை செஞ்சிட்டு இருக்கேன். நான் என்ன செய்றேன்னு எப்படி இருக்கேன்னு கண்டுக்கவே இல்லை நீ! இந்த நிலைல குழந்தை பெத்துக்கிட்டா நான் செத்தா கூட கண்டுக்க மாட்ட தானே நீ” என்றவள் சொன்னதும் எனக்கு வந்த ஆத்திரத்தில், “ஏய் என்னடி பேசுற?” என்று அவளின் வாயில் பட்டென அடித்திருந்தேன்.

சட்டென அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளை என்னை நோக்கி திருப்பியவனாய், “ஏன்டி இப்படி பேசுற! நல்ல விஷயம் நடக்கும் போது இப்படியா பேசுவாங்க. நான் இன்னிக்கு முழுக்க உன் கூடவே இருக்கேன். நாம போய் ஹாஸ்பிட்டல்ல செக் செய்யலாம்” என்றேன்.

“ஒன்னும் வேண்டாம். நான் எங்கேயும் வரலை” என்றவளாய் காலை ஒடுக்கிக் கொண்டு சுருண்டு அவள் படுக்க, அவள் பின்னேயே ஒட்டிக் கொண்டு படுத்தவனாய் அவளின் இடையை அணைத்து என்னுடன் இறுக்கி கொள்ள அழுதவாறு அப்படியே படுத்திருந்தாள்.

பத்து நிமிடங்கள் கழித்து என்னை நோக்கித் திரும்பிப் படுத்தவள் எனது கண்களை பார்த்தவாறு கன்னத்திலேயே பட்டென அடித்திருந்தாள்.

“ஏன்டி” என்றவளாய் கன்னத்தை பிடித்துக் கொண்டு அவளை நான் பார்க்க, என் மார்பில் முட்டியவாறு அணைத்துக் கொண்டாள்.

அவளின் முதுகை வருடியவனாய் அணைத்திருந்தேன். அவள் என் மீது அதீத கோபமாய் இருப்பதும், அதே சமயம் அந்த கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம் என இறுகி தயங்கி இருந்து இவ்வாறாக வெளிப்படுத்துக்கிறாள் என்றும் புரிந்தது எனக்கு.

“சரி கிளம்புடா லட்டுக்குட்டி! ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றேன்.

“எனக்கு மயக்கம் மயக்கமா வருதுடா” என்றவள் மீண்டுமாய் என்னுள் புதைந்து கொள்ள, “சரி இரு! உனக்கு குடிக்க நான் ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்றவனாய் சென்று அவளுக்கு குடிக்க பால் கொடுத்து விட்டு காலை உணவை தயாரித்துக் கொடுத்தேன்.

அவள் உண்டு கொண்டிருந்த நேரம் எனது கைப்பேசி அலறியது.

ஒரு வாடிக்கையாளரின் வீட்டிற்கு இன்று நான் அரிசி மூட்டையை ஹோம் டெலிவரி செய்வதாய் உரைத்திருந்தேன். அவர் தான் அழைத்து கேட்டிருந்தார்.

“நான் இப்ப போய்ட்டு ஒரு மணி நேரத்துல வரேன். நீ கிளம்பி ரெடியா இரு! நான் வந்ததும் ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றவனாய் கடைக்கு சென்றவன் வீட்டிற்கு வருவதற்கு மதியம் ஆகியிருந்தது.

வீட்டிற்கு வந்து பார்க்க, வீடு பூட்டப்பட்டிருந்தது‌.

அவளுக்கு நான் அழைக்க, அழைப்பை ஏற்கனவே இல்லை அவள்.

‘ம்ப்ச் எந்த ஹாஸ்பிட்டலுக்கு போய்ருக்கானு தெரியலையே! இல்ல ஆபிஸ்கே போய்ட்டாளா?’ என்று யோசித்தவாறு கடைக்கு சென்று விட்டேன்.

தொழில் செய்யும் போது நாம் எப்பொழுதும் மக்கள் கேட்டதும் கொடுக்க கூடிய கிடைக்க கூடிய இடத்தில் இருக்க வேண்டும்.

ஒரு நாள் கடையை அடைத்து விட்டு நாம் வெளியே செல்லும் சமயம், வாடிக்கையாளர்கள் வந்து பார்த்து விட்டு வேறு கடைக்கு சென்றுவிட்டால் அந்த லாபம் நம்மை விட்டு சென்று விடும். இங்கு ஒவ்வொரு ரூபாயும் முக்கியம். இந்நிலையில் நான் எப்படி சக்தியின் பின்னேயே சுற்றிக் கொண்டிருக்க முடியும். இதை எப்படி அவளிடம் கூறி புரிய வைப்பது என்று யோசித்தவனாய் தான் கடைக்கு சென்றிருந்தேன்‌.

மாலை வேளையில் அவளுக்கு அழைக்க, அப்பொழுதும் அழைப்பை ஏற்கவில்லை.

இரவு எட்டு மணிக்கெல்லாம் கடையை எடுத்து வைத்து விட்டு வீட்டிற்கு சென்றேன்.

கதவை தட்டவும் திறந்தவள் போய் படுத்துக் கொண்டாள்.

“சாரி சக்தி” என்று அவளின் அருகே சென்று நான் அமர, “எனக்கு சண்டை போட கூட தெம்பில்லைடா. நாளைக்கு சண்டை போடுறேன்” என்றவளாய் உறங்கியவளின் முகத்தை வருடியவனாய் அவளின் கைப்பையை எடுத்துப் பார்த்தேன்.

மருத்துவமனை சென்றதற்கான தடயங்கள் ஏதுமில்லை. வேலைக்கு தான் சென்றிருக்கிறாள் என்று புரிந்தது. கர்ப்ப பரிசோதனை செய்வதற்கான கிட் வாங்கி வைத்திருந்தாள். நாளை கண்டிப்பாக அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிட வேண்டுமென எண்ணிக் கொண்டவனாய் அவளுக்கு உணவைத் தயாரித்து எழுப்பி ஊட்டி விட்டு உறங்க வைத்தேன்.

மறுநாள் காலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனது கன்னத்தில் முத்தமிட்டு எழுப்பியவள், கைகளில் அந்த கிட்டை காண்பித்தாள்.

கண்களை கசக்கியவனாய் அதனைப் பார்த்தவன் ஏதும் புரியாது, “பிரக்னென்சி கன்பார்ம்மா சக்தி” எனக் கேட்டேன்.

மீண்டுமாய் அந்த கிட்டை அவள் என்னிடம் காண்பிக்க, “அய்யோ அதெல்லாம் எனக்கு பார்க்க தெரியாது சக்தி! பாசிட்டிவ்வா இல்லையா அதை மட்டும் சொல்லு” என்றேன்.

என் மண்டையில் குட்டியவளாய், “இது கூட தெரியாதா?” என்றவள், “பாசிட்டிவ் டா! வி ஆர் பிரக்னெட்” என்றாள்.

அவளின் முகத்தில் முத்த மழை பொழிந்து என்னோடு இறுக அணைத்துக் கொண்டேன். எனது கண்கள் கலங்கிப் போனது.

‘நான் அப்பாவாக போறேன்’ எனக்கு நானே கூறிக் கொண்டேன். அகத்தில் ஒருவிதமான பரவசத்தை உணர்ந்தேன்.

எனது மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டவள், “பயமா இருக்கு விஷ்வா” என்றாள்.

“பிரக்னென்சி நினைச்சு பயமா இருக்கா? அதான் நான் கூட இருக்கேனே” என்றேன்.

“இல்ல விஷ்வா! பணத்தை நினைச்சி பயமா இருக்கு”

“பணமா?”

“ஆமா உன் பிஸ்னஸ் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக டெவல்ப் ஆகிட்டு வருது. இது வரைக்கும் இரண்டு பேருங்கிறதால என் சம்பளத்தை வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம். ஆனா இனி ஹாஸ்பிடல் செக்கப் ஸ்கேன்னு நிறைய செலவு இருக்குமேடா! என்ன செய்றது?” எனக் கேட்டாள்.

“நஷ்டம் இல்லாம லாபத்தோட போறதே நல்ல சைன் தான் சக்தி. கண்டிப்பாக பிரக்னென்சி டைம்ல பணக் கஷ்டம்லாம் இருக்காதுனு நம்புறேன்” என்றேன்.

எனது இடையை கட்டிக் கொண்டு உறங்கிப்‌போனாள்‌. சக்தியின் பயம் என்னைத் தொற்றிக் கொள்ள தீவிரமான சிந்தைக்கு ஆட்பட்டவனாய் உறக்கத்தை தொலைத்திருந்தேன்.

அன்று சக்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கும் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதும் அம்மாவிற்கு அழைத்து இந்த நற்செய்தியை உரைத்திருந்தேன்.

சக்திக்கு மசக்கை அதிகமாக இருந்தது. காலை எழும்பியதும் எதுவும் உண்ண முடியாமல் வாந்தி எடுத்து படுத்தே கிடந்தாள்‌. ஒரு வாரமாக இவளையும் கவனித்துக் கொண்டு கடையையும் பார்த்துக் கொள்வது எனக்கு அதீத அழுத்தத்தை அளித்திருக்க, மாதம் ஏழாயிரம் சம்பளத்தில் கடைக்கு வேலையாள் பார்த்தேன்.

வேலையாள் கிடைக்க தாமதமாக, அந்த மாதம் கடையின் வருமானம் குறைந்து போனது. அது என்னை வாட்டி எடுக்க,

“சக்தி ஒரு வாரம் மேனேஜ் செஞ்சிக்கிறியா? வேலைக்கு ஆள் வேணும்னு விளம்பரம் கொடுத்திருக்கேன். ஆள் கிடைக்கிற வரைக்கும் நான் கடையை பார்த்துக்கலைனா டெவலப் செஞ்சதுலாம் வீணா போய்டும்” என்றதும் ஒப்புக் கொண்டாள்.

காலை சென்று விட்டு இரவு தான் வீட்டிற்கு வருவேன். இரவு பெரும்பாலும் எதுவும் சமைத்திருக்க மாட்டாள். நான் வெளியில் சாப்பிட்டு விட்டு அவளுக்கு ஏதேனும் வாங்கி வருவேன். காலை அலுவலகத்தில் உண்டு கொள்வதாக உரைத்து விட்டு கிளம்பிடுவாள். எங்களுக்குள்ளான உரையாடல் நிறையவே குறைந்து போனது. சாப்பிட்டியா இல்லையா என்ற கேள்விகளும் பதிலுமாக தான் நாள்கள் சென்று கொண்டிருந்தன. இப்படியே மூன்று மாதங்கள் சென்ற பிறகு தான் வேலையாள் கிடைத்தான். கடந்த இரண்டு மாதமும் மருத்துவமனை செக்கப்பிற்கு கூட அவளே தனித்து சென்று விட்டு வந்திருந்தாள்.

வேலையாள் கிடைத்ததும், கடையை அவன் பொறுப்பில் விட்டு விட்டு, “சக்தி இந்த மாசம் செக்கப்பிற்கு நான் வரேன்” என்றேன்.

“ஒன்னும் தேவையில்ல! நீ அந்தக் கடையையே கட்டிட்டு அழு” என்றவள் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“இப்ப கடைக்கு ஆள் இருக்கு சக்தி! நானும் வரேன். எத்தனை மணிக்கு போவ ஹாஸ்பிட்டலுக்கு” எனக் கேட்டேன்.

வாசல் வரை சென்றவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

“யாரும் இல்லாமலும் வாழ பழகனும்னு எனக்கு கத்துக் கொடுத்துட்டு இருக்கடா நீ! நீயே ஏன் அதை பிரேக் செய்ற! புருஷனோட கவனிப்பு இல்லாம என் அப்பா அம்மாவோட கவனிப்பு இல்லாம தனிச்சு கூட என்னால இந்தக் குழந்தையை பெத்துக்க முடியும்! எனக்கு யாரும் வேண்டாம்” என இதழ்துடிக்க கூறியவள் கண்களைத் துடைத்தவளாய் கிளம்பி சென்றாள். மனம் சுணங்கியது எனக்கு. எப்படி அவளை சமாதானம் செய்வது என்று புரியாது அவள் சென்ற பின்பும் பித்து பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன். அடுத்தடுத்த கடை வேலைகள் மேலும் அவளைப் பற்றி சிந்திக்க விடாது என்னை உள்ளிழுத்திருந்தன.

அடுத்த வந்த இரண்டு நாட்களும் நான் எவ்வளவு சமாதானம் செய்தும் என்னிடம் பேசாது இருந்தவளை அவளின் மன மாற்றத்திற்காக எங்களின் ஊருக்கு அழைத்துச் செல்லலாமெனத் திட்டமிட்டிருந்த பொழுது கொரோனா என்ற புதிய வைரஸ் பரவ உள்ளதாக கூறி லாக் டவுனை அறிவித்திருந்தது அரசு.

5 thoughts on “எனை நீங்காதிரு 17”

  1. Kalidevi

    Interesting ah poitu iruku story. Kadai vachi irunthale ippadi tha ellam shakthi mari tha irukanum ethukum husband ethirpatha velai agathu oru time la verupa aeidum

  2. CRVS2797

    அச்சோ போச்சா..! இனி எல்லாமே அவ்வளவு தான் போலவே..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *