Skip to content
Home » எனை நீங்காதிரு 19

எனை நீங்காதிரு 19


வறுமை ஒருவரை எப்படி எல்லாம் பேச வைக்கும் என்பதை என் சக்தி மூலம் அறிந்து கொண்டேன். பூவை விட மென்மையானவள் சக்தி. அன்பை விடப் பணத்தைப் பெரியதாக எண்ணாதவள் தான் சக்தி. அதனால் தான் கடன்காரனாய் இருந்த என்னைக் காதலித்து மணம் புரிய முடிந்தது அவளால். தன்னால் முடிந்த மட்டும் பொறுத்து போவாள். அவளின் பொறுமையும் சகிப்புத் தன்மையும் என் மீதான அளவற்ற காதலும் தான் எத்தனை துன்பங்கள் அவளைத் துரத்தி வந்த போதும், என்னை விட்டு அவளை நீங்காது வைத்திருந்தது.

நிரந்தரமான சம்பளம் என்னிடம் இல்லாது போனதும் நிலையில்லா தொழிலும் அவளின் பிள்ளைப்பேறும் அச்சமூட்டி அவளை நிறையப் பேச வைத்திருந்தன.

அதிலும் எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்து வேலையும் செய்து பணம் ஈட்டி உடல் உபாதைகளையும் ஏற்று வாழும் அவளின் நிலை நன்றாகவே புரிந்தது எனக்கு. அதனால் தான் முடிந்த வரை பொறுத்துக் கொண்டு போனேன்.

வாழ்வின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு என்னுடைய லட்சிய பயணத்தைத் தொடங்கி, அதற்கென முழு உழைப்பும் போட்டு, அந்த லட்சியம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென அது கீழே விழுந்து தூள் தூளாக உடைந்து, முதலில் இருந்து எனது வாழ்வை தொடங்குவது போல் அமைந்த அந்நிலையில் எனது மனம் என்ன பாடுபட்டிருக்கும். அடுத்து என்ன செய்வது என்று புரியாது நிலை. பணப்பற்றாக்குறை வேறு! என் காதல் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்க முடியாத கையறுநிலை! எனது சுமை எல்லாம் அவளின் மீது ஏற்றி வைத்து அவளைக் கஷ்டபடுத்துகிறேன் என்கின்ற குற்றயுணர்வு! இவை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு இந்நிலையில் இருந்து எப்படி வெளி வந்து முன்னேறலாம் என்கின்ற தேடலும் ஓட்டமுமாக, நான் மிகுந்த மன உலைச்சலிலும் மன அழுத்தத்திலும் இருந்தேன்‌.

ஆயினும் அவளின் நிலையைப் புரிந்து கொண்டு முடிந்த வரை அமைதியாகப் போனேன். ஆனால் நானும் மனிதன் தானே. கொஞ்சமேனும் தன்மானமும் சுயமரியாதையும் நிறைந்த மனிதனாய் வேறு வாழ்ந்து விட்டேன்.

வாழ்வின் போக்கில் மனைவியிடம் இவை இரண்டையும் விட்டுக் கொடுத்து கடந்திட தான் நினைத்தேன். அவளை எதிர்த்து பேசாது அமைதியாக அவ்வாறு கடந்து செல்ல முற்பட்டது, எங்கள் இருவருக்குள்ளும் தூரத்தை வளர்த்திருந்தது என்று அப்போது புரியவில்லை எனக்கு.

நானே நினைத்தாலும் கூட என்னால் இயல்பாக அவளிடம் பேச முடியவில்லை. எந்நேரம் எப்படிக் குத்தீட்டியாய் வார்த்தையை விடுவாளோ என்று பயமாக இருந்தது. அப்படி அவள் பேசும் நேரம் எங்கே என்னால் அவளின் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது ஏதேனும் அவளைக் காயப்படுத்தி விடுவேனோ என்ற அச்சத்தினாலேயே வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டேன்.

காலையிலேயே சமைத்து வைத்து விட்டு வெளியே செல்பவன் எங்கேனும் ஏதாவது கூலி வேலையாவது கிடைக்காதா என்று தான் அலைந்து கொண்டிருந்தேன். மனைவியின் பிரசவத்திற்குக் கூடச் சம்பாதிக்க முடியாத நானெல்லாம் என்ன ஆண்மகன் என்று எனது மனசாட்சியே என்னைக் குத்தி கிழிக்க, அந்தக் குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டு என்னை அவளிடம் இயல்பாகப் பேசவிடாது செய்திருந்தது.

அன்றாடம் ஏதேனும் ஒரு பழைய பள்ளி கல்லூரி நண்பனிடம் பேசி எனது நிலையை எடுத்துக் கூறி வேலையைக் கேட்டிருந்தேன்.

இவ்வாறாகப் பேசியதில் தான் கன்னியாகுமரியில் இருக்கும் நண்பனொருவன் அங்கு என்னை வருமாறு அழைத்திருந்தான்.

அன்றைய நாள் அவளிடம் இதனைக் கூறிவிட்டுக் கிளம்பலாம் என்று நினைத்திருந்த போது தான் இரண்டாம் திருமணத்தைப் பற்றிப் பேசியிருந்தாள் சக்தி. என்னைப் பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு தானே காதலித்து மணம் புரிந்து கொண்டாள். இப்பொழுது என்னவோ அவளின் தலையில் சுமையேற்றி விட்டு நான் சுகமாய் வாழ்வது போன்று அவள் கூறியது அத்தனை கோபத்தை அளித்தது எனக்கு.

இத்தனை நாள்களாய் சேமித்து வைத்த ஆத்திரம் அத்தனையும் அந்தத் தட்டை வீசி எறிந்ததில் கொட்டியிருந்தேன். மீண்டுமாய் அந்த வீட்டிற்குள் செல்லவும் அவளின் முகத்தில் முழிக்கவும் துளியளவும் மனமே வரவில்லை எனக்கு.

எப்படியேனும் பிரவசத்திற்கான பணத்தைச் சம்பாதித்து விட வேண்டும் என்று மனத்தில் ஒருவிதமான வெறியும் வைராக்கியமும் உருவானது.

அவளுக்குத் துணையாய் இருக்க, உடனே தாயை இங்கே வரவழைத்தேன். நான் கன்னியாகுமரிக்குச் சென்றிருந்தேன்.

தோழனின் மீன்பிடி தொழிலுக்கு உதவியாக இருந்தேன். கடலன்னையின் உப்பு நீரில் அன்றாடம் எனது கண்ணீர் கலந்து போனது.

“என் சக்தி” அவளை மறக்கவும் முடியாமல், நினைக்காமல் இருக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும் ஆசை இருந்தது. பிள்ளைபேற்றின் போது எனது மனைவியை எப்படி எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கும் கனவு இருந்தது. கருவில் சுமப்பாள் தாய் என்றால் இருவரையும் மனத்தில் சுமப்பவன் தந்தை அல்லவா! வி ஆர் பிரக்னெட் என்று தானே என்னிடம் உரைத்தாள். அந்த கடமையில் இருந்து எப்படி நான் தவறுவேன் என்று நினைத்தாள். அவளின் வயிற்றைத் தொட்டு எனது குழந்தையின் அசைவை கூட உணராது தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் இருவரும். காலம் இப்படி எங்களின் காதலை சோதித்திருக்க வேண்டாம்.

என் வாழ்நாளில் நான் மிகவும் வெறுத்த மூன்று மாதங்கள் இவை தான். சக்தியிடம் பேசாது இருந்த நாள்கள். அம்மாவின் மூலமாக எனக்காக அவள் தவித்திருப்பதைக் கேள்விப்பட்டேன். என்னைக் காண ஆவலுடன் காத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். ஒரு மனமோ அவளை உடனே பார்க்க சென்று விடு என்று கூற, மற்றொரு மனமோ குழந்தை பிறந்த போதும் அவளைச் சென்று பார்க்காதே, பணத்தை மட்டும் அனுப்பி விடு! அவள் பேசியதற்கு அனுபவிக்கட்டும் என்று கூறியது.

எனது அம்மாவிற்கு நாங்கள் சண்டையிட்டுப் பிரிந்திருக்கிறோம் என்பது ஓரளவிற்குப் புரிந்து போனது. என்னிடம் தான் அதைப் பற்றிக் கேட்டு அறிவுரை கூறினாரே அன்றி அவளிடம் ஏதும் பேசவில்லை.

“பாவம் தம்பி அந்தப் பொண்ணு! பிள்ளைத்தாச்சுப் பொண்ணை ஏங்க விடாத விசுவா. நான் உன்கிட்ட பேசும் போதெல்லாம் அவ்ளோ ஏக்கமா பார்க்குது அந்தப் பொண்ணு! அம்மா அப்பாவை விட்டுட்டு உனக்காக வந்த பொண்ணு அவ! அவ என்ன செஞ்சாலும் பேசினாலும் நீ தான் பொறுத்துப் போகனும். பணக்கார வீட்டுப் பொண்ணு உனக்காக எவ்ளோ கஷ்டம்லாம் தாங்கிட்டு இருந்திருக்கா! அம்மாவுக்காக இந்த ஒரு நேரம் அவ கூடச் சமாதானம் ஆகிப் பேசு விசுவா” என்றார் அம்மா.

“சண்டைலாம் இல்லமா! கொஞ்சம் ஓவரா பேசிட்டா! திரும்ப ஏதாவது பேசி நான் வாங்கிக் கட்டிக்கக் கூடாது பாரு. அதான் பேசாம இருக்கேன். அவளுக்குப் பிரசவ செலவுக்குச் சம்பாதிச்சிட்டு வந்துடுறேன்மா! நீ அவளை நல்லா பார்த்துக்கோ” அம்மாவின் வாயடைக்க இவ்வாறு கூறியிருந்தேன்.

அம்மா கூறியதைக் கேட்டு மனம் ஒருவிதமாக மகிழ்ந்தது. அவளால் என்னை விட்டு இருக்க முடியலை! எனக்கான ஏக்கம் அவளிடம் இருக்கிறது என்று அறிந்ததே என் மனவலியை சற்றுக் குறைந்திருந்தது.

அடுத்து வந்த நாட்களில் மிகவும் உற்சாகத்துடன் தான் வேலை செய்திருந்தேன். நான் செய்கின்ற வேலை பற்றி எல்லாம் எனக்குக் கவலை இருக்கவில்லை. எப்படியேனும் பிரசவ செலவுக்குச் சம்பாதித்திட வேண்டும் என்ற என் வைராக்கியத்திற்குக் கடவுள் அளித்த நல் வாய்ப்பாகத் தான் இந்த வேலையைக் கருதினேன்.

எனது தோழனின் தந்தை பெரிய மீன் பண்ணையே வைத்திருந்தார். வெளியூர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்திருந்தார்கள். எனது நிலை அறிந்து மாதம் முப்பதாயிரம் சம்பளத்திற்கு என்னை வேலைக்கு எடுத்துக் கொண்டான். ஓனருக்கு அடுத்த நிலை தொழிலாளியாய் ஏற்றுமதி இறக்குமதி கணக்கில் இருந்து மீன் விற்பனை வரை அனைத்தையும் பார்த்துக் கொண்டேன். நானும் எனது நண்பனும் மட்டுமே முழு வேலையும் செய்தோம்.

மூன்று மாதங்கள் கடந்து அம்மா அவளுக்கு இடுப்பு வலி வரும் நாள் நெருங்கிவிட்டது கிளம்பி வா என்று கூறிய அன்றே கிளம்பி இருந்தேன் நான்.

நான் இங்கு வந்து சேர்ந்த போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுப் பல மணி நேரங்கள் ஆகியிருந்தன.

மிகுந்த பதட்டத்துடன் தான் அவளிருக்கும் அறை நோக்கி சென்றேன். அவளின் அழுகுரலும் வலி தாங்காது அவள் கத்தும் கதறலும் என் நெஞ்சை கிழித்துக் கண்களில் கண்ணீரைப் பொங்கச் செய்தது.

என்னை நேரில் கண்டு கோபத்தில் கத்துவாளா இல்லை அழுவாளா என்ற கேள்வியுடனேயே அறைக்குள் சென்று கிழிந்த நூலாய் வலியில் சுருங்கிய முகத்துடனும் பெரிய வயிற்றுடனும் அழுது கலைந்து கிடந்தவளை கண்டதும் நெஞ்சம் விம்மி அடங்கியது.

என்னைக் கண்டதும், “விஷ்வா” என்று சிறு பிள்ளையாய் உதட்டைப் பிதுக்கி இரு கைகளையும் விரித்து அழைத்திருந்தாள் சக்தி. அந்தப் பெரும் வலியையும் தாண்டிய மகிழ்வின் தடம் அவள் முகத்தில்.

அவளின் தலையை எனது வயிற்றில் வைத்து அழுத்தியவனாய் உச்சியில் முத்தமிட்டிருந்தேன்.

“ரொம்ப வலிக்குதுடா” எனும் போதே அவளின் கண்களில் இருந்து பொங்கி வந்த கண்ணீர் எனது சட்டையை நனைந்திருந்தது.

அவளின் அழுகையிலும் அவள் கூறிய விதத்திலும் நெஞ்சில் கத்தியால் குத்தியது போன்ற பெரும் வலியை உணர்ந்தேன்.

‘நீ முன்பே வந்திருந்து அவளுக்கு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்’ குத்திக் காட்டியது மனசாட்சி.

எனது வயிற்றில் இருந்து முகத்தை நிமிர்த்தி என்னைப் பார்த்தவளாய், “என்னை விட்டு போய்டாத விஷ்வா” என்றவாறு எனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

எனது கண்ணீர் கன்னத்தை நனைத்து உதட்டை அடைந்திருக்க, அக்கண்ணீர் தடத்துடனேயே அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவனாய், “இல்லப்பா! உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்றேன்.

இருவரும் சில நொடிகள் குலுங்கி அழுத வண்ணமிருக்க, திடீரென ஆஆஆ என அலறியவளின் முகம் வலியில் வெளிரியிருந்தது.

“நீங்க வெளியே போங்க சார்” என்று அங்கிருந்த செவிலியர் உரைத்ததும் அவளின் கையை நான் விலக்க முற்பட, அதற்கு வழி விடாது மேலும் இறுக்கிப் பிடித்தவாறு,

அதீத வலியில் முகத்தைச் சுருக்கி திக்கித் திணறியவளாய், “உன்னை உன் மனசை கஷ்டப்படுத்தினதுக்குலாம் சாரி விஷ்வா. இனி நான் செத்தாலும் நிம்மதியா சாவேன்” என்றாள்.

உள்ளம் நடுங்க பதறி அவளின் வாயில் அடித்தவனாய், “நீ இல்லாத அடுத்த நிமிஷம் நானும் இருக்க மாட்டேன் சக்தி! நீயும் நம்ம குழந்தையும் நல்லபடியாக என் கைக்குள்ள வந்து சேருவீங்க” கண்ணீர் கண்களுடன் உரைத்து விட்டு அங்கிருந்து அகன்றேன்.

அடுத்து வந்த நிமிடங்கள் என் வாழ்வில் நான் அறவே வெறுத்த நொடிகளாய்க் கடந்தது.

இது வரை கடவுளைப் பெரிதாக வணங்காதவன், “அம்மா பெரியாச்சி தாயே! என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் காப்பாத்துமா” என்று எனது குலத்தெய்வத்தை இடைவிடாது வேண்டியவனாய்க் காத்திருந்தேன்.

அவளின் அழுகை சத்தம் குறையவும், “உங்களுக்கு மகன் பிறந்திருக்கான்” என்று வந்து சொல்லி விட்டுச் சென்றார் செவிலியர்.

எனது தாயின் கரத்தினில் முகத்தைப் பொத்தி கொண்டு அழுது கரைந்தேன். எனது கண்ணீரில் அவரும் அழுதவராய் எனது முதுகை தடவி ஆற்றுப்படுத்தினார்.

அடுத்து சில மணி நேரங்கள் கடந்து நான் உள்ளே சென்று பார்த்த போதும் சக்தி மயக்கத்தில் தான் இருந்தாள். அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தலையை வருடியவனாய், ‘எனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டுட்டா என் சக்தி! இனி அவளை கஷ்டப்படுத்தாம சந்தோஷமா வச்சிக்கனும்’ மனத்தோடு நினைத்துக் கொண்டேன். குழந்தையைக் கையினில் ஏந்தி கொஞ்சினேன்.

உலகத்தில் இது வரை நான் அனுபவித்த இன்பங்கள் அனைத்திலும் மேலான இன்பத்தை உணர்ந்த நொடி நான் எனது மகனை கையினில் ஏந்திய அந்நொடி. கண்ணீர் பார்வையை மறைக்க நெகிழ்வுடன் அவனைப் பார்த்திருந்தேன்.

என் உதிரத்தின் விதை
என் உயிர் உதிர்த்த சதை

நா.முத்துகுமாரின் வரிகள் எனது காதினில் ரீங்காரமிட்டன.

சக்திக்கும் குழந்தைக்கும் தேவையானதை வாங்குவதற்காக நான் கடைக்குச் சென்றிருந்த போது அவள் விழித்திருந்தாள்.

நான் மருத்துவமனை வந்த போது, அவள் முழித்ததும் என்னைத் தேடியதாகத் தாய் வந்து உரைத்தார்.

அவளைக் காண உள்ளே சென்றேன். குழந்தைக்கு அமுதளித்துக் கொண்டிருந்தாள். சட்டென வெளியே வந்து விட்டேன்.

ஏதோ ஒன்று அவளை நேர்கொண்டு பார்த்து பேச என்னைத் தடுத்தது. அடுத்து அவள் மருத்துவமனையில் இருந்த இரு நாட்களும் அவள் கேட்டதற்குப் பதிலளித்தேனே அன்றி நானாய் ஏதும் பேசவில்லை. அவளும் என்னிடம் பெரியதாக பேசவில்லை என்றாலும் நான் உள்ளே இருந்தாலே அவளின் பார்வை முழுவதும் என்னைச் சுற்றியே இருப்பதை உணர்ந்தேன். என்னிடம் ஏதும் பேசனுமா என்று நேரடியாகவே கேட்ட போதும், எதுவும் இல்லை என்று தலையசைத்திருந்தாள்.

மருத்துவமனையில் இருந்து கிளம்ப வேண்டிய அந்நாளில் நான் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி கொண்டிருந்த போது, “குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம் விஷ்வா?” எனது முதுகை பார்த்தவாறு கேட்டிருந்தாள்.

“எனக்கு எதுவும் ஐடியா இல்லை. உனக்கு என்ன தோணுதோ அதையே வச்சிக்கோ சக்தி” குழந்தையை கொஞ்சியவாறு உரைத்திருந்தேன்.

“விஷ்ணுனு வைக்கலாமா.. விஷ்வா விஷ்ணு ரைமிங்கா இருக்குல” என்றாள்.

குழந்தையின் பெயரில் கூட என்னைக் குறித்து யோசித்துப் பெயரைத் தேர்ந்தெடுத்தவளின் அன்பை எண்ணி உருகிப் போனது நெஞ்சம்.

“விஷ்வசக்தில இருக்க வச சேர்த்து வசந்தன்னு வைக்கலாமா?” குழந்தையைக் கொஞ்சியவாறு தான் கூறியிருந்தேன்.

“ஹே நல்லா இருக்குடா! அப்படியே வைப்போம்” சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்து சிரித்தவனாய் தலையசைத்து வெளியே சென்றேன்.

அவளையும் அம்மாவையும் குழந்தையுடன் கூட்டிட்டுக் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு ஒரு வாரம் அவர்களுக்குத் தேவையானதை பார்த்துச் செய்து கொடுத்து விட்டு கன்னியாகுமரி சென்றிருந்தேன்.

சக்தி என்னைப் போக வேண்டாம் எனக் கூறி அடம் பிடித்து அழுதிருந்தாள். ஆனாலும் இந்த லாக்டவுன் முடியும் வரை அந்த வேலையை விடுவதாக இல்லை எனக் கூறி அவளின் மறுப்பையும் ஏற்காது அவளைக் கோபமேற்றி விட்டே வேலைக்குச் சென்றிருந்தேன். இதன் தாக்கம் இருவரையும் மேலும் உடலாலும் மனத்தாலும் விலகியிருக்கச் செய்திருந்தது.

5 thoughts on “எனை நீங்காதிரு 19”

 1. Kalidevi

  Unakaga ellaraium vitu vanthava viswa shakthi apo una thana ethir parpa ava manasu evlo kasta padum nirai masama irukum pothu pona ipo vanthu venumrathu ellam vangi koduthutu vitu poi rendu perum manasu alavula nonthu poringa

 2. CRVS2797

  உண்மை தானே..! லாக் டவுன்ல தாய், சேய் எல்லாருக்கும் சேர்த்து பணம் வேணும் தானே. அதுக்கு அவன் சம்பாதிக்க வேண்டும் தானே..!

  1. Dina Nila

   ஆமா அவன் போவது சரி தான். என்னாகுதுனு பார்ப்போம் 😍😍 மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *