Skip to content
Home » எனை நீங்காதிரு 2

எனை நீங்காதிரு 2

விஷ்வா

அன்றிரவு அலுவலக வேலை முடிந்து இருச்சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது எனது மனத்தை நிறைத்திருந்தன வலியும் வெறுமையும்.

அன்றாடம் கோடிங், மீட்டிங், எஸ்கலேஷன், என ஸ்டெரஸ்ஸாகவே செல்லும் இந்த வேலையில் இருந்து எப்பொழுது தான் விடியல் கிடைக்கும் என்று ஏங்கித் தவிக்குது நெஞ்சம்.

வேண்டா வெறுப்பாகச் செய்யும் வேலை நிம்மதியா அளிக்கும்? பிடிக்காத அந்த வேலையிலும் தனது முழு உழைப்பையும் செலுத்தி நற்பெயரும் பணமும் பெற தன்னை ஈடுபடுத்திக் கொள்வது எத்தகைய அழுத்தத்தை அளிக்குமென அன்றாடம் வெறுப்புடன் உணர்ந்து, இதிலிருந்து தப்பிக்க முடியா சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்.

எத்தனை நாட்கள் தான் பிடிக்காத இந்த வேலையைச் செய்து கொண்டிருப்பது. இதுவே இந்நேரம் எனது சொந்த ஊரில் இருந்திருந்தால் அம்மாவின் கைமணத்தில் வயிராற உண்டு இன்பமாய் உறங்கிக் கொண்டிருந்திருப்பேன்.

நீண்ட பெருமூச்சு எழுந்தது என்னிடம்.

அது ஒரு கனா காலம்!

அன்றாடம் ஆற்றங்கரையில் குளித்து அவசரம் அவசரமாகப் பழையதை உண்டு விட்டு பள்ளிக்குத் தோழர்களுடன் ஓடோடிச் சென்று படித்த நாட்கள்!

பள்ளி இல்லா நாட்களில் தென்னந்தோப்பு, மாந்தோப்பு, கரும்புக் காடு என இயற்கையோடு இயற்கையாய் சுற்றித் திரிந்த நாட்களின் இன்பம் இங்கே இயந்திரங்களாய் இயங்கும் இம்மாநகரத்தில் எங்கிருந்து கிடைக்கப் போகிறது!

அவ்வாறு இயற்கையோடு இயைந்து மனைவி குழந்தையுடன் எனக்கு மிகவும் பிடித்தமான தொழில் செய்து சொந்த ஊரில் உற்றார் உறவினர்களுடன் வாழ வேண்டுமென்பதே எனது பெரும் ஆசை! கனவு! லட்சியம் எல்லாமுமாக இருந்தது நான் கல்லூரி முடித்த காலத்தில்.

ஆனால் காலம் வேறொரு கணக்கையிட்டு, கடைமையைக் கையில் திணித்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டது.

விருது நகர்!

நான் பிறந்த வளர்ந்த எனது சொந்த ஊர்! விவசாயின் மகன்! எனது பெற்றோருக்கு ஒரே மகனான என்னை உயர்ந்த படிப்பு படிக்க வைத்து பெரிய ஆளாய் ஆக்குவது தான் அவர்களின் லட்சிய கனவாக இருந்தது‌. நானும் நன்றாகப் படித்தேன். அவர்களின் ஆசைகேற்ப பொறியியல் பட்டம் பெற்றேன்.

சொந்த ஊரில் சொந்த தொழில் செய்து பாரம்பரியமான சொந்த வீட்டில் வாழ்வதே எனது லட்சியமாகக் கொண்டிருந்தேன்.

பட்டப்படிப்பை முடித்ததும் சொந்த தொழில் செய்யத் தேவையான முதலீட்டை எவ்வாறு வங்கிகளில் பெறலாம் என்று ஆராயத் தொடங்கியிருந்தேன்.

எதையும் மாற்றும் வல்லமை கொண்ட காலம் சதி செய்து விதியாய் உருமாறி என்னை இந்த மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் வகையில் இழுத்து விட்டிருந்தது.

குடிகாரத் தந்தையின் கையாலாகத்தனத்தில் எங்களது பாராம்பரிய வீடும் நிலங்களும் கைவிட்டு போன விரக்தி வேதனை என வாழ்வில் நிகழ்ந்த பெரிய இடர்பாடுகளில் சிக்கி, கனவுகள் கருகிப் போக, உயிரற்ற உடலாய் இவ்வேலையைப் பற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான்கு நண்பர்களுடன் நான் தங்கியிருக்கும் வாடகை வீட்டை வந்தடைந்ததும், பின்னோக்கிச் சென்ற மனத்தை நிகழ்வுலகுக்குள் இழுத்து வந்தேன்.

“சக்தி! எனக்கு எப்ப ஓகே சொல்லுவ”
நாங்கள் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து வந்த தொலைகாட்சியின் இந்த ஒலியில் இதழில் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது குறுநகை.

உள்ளே சென்று தொலைக்காட்சியை எட்டிப் பார்த்தேன்.

“சக்தி! சக்தி” என ஷாலினி பின்னே சுற்றிக் கொண்டிருந்தார் மாதவன்.

“மச்சி! சாப்பிட்டியா” கேட்ட நண்பனிடம் தலையசைத்தவனாய் எனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தேன்.

“சக்தி”

இத்தனை நேரமாக இருந்த மனத்தின் இறுக்கம் தளர்வதைப் போல் உணர்ந்தேன்.

எனது உதடுகள் உல்லாசமாய் அவளின் பெயரை உச்சரித்த வேளையில் உள்ளமோ வேண்டாம் இவள் உனக்கு என எச்சரித்தன.

அவளைப் பார்த்தாலே பணக்காரப் பெண் எனத் தெரிகிறது என எச்சரித்தது மனம்.
ஆமாம் அவளுக்குப் பொருந்தாதவன் தான் நான்.

பெருமூச்சை வெளியிட்டவனாய் எழுந்து அமர்ந்தேன்.

“நினைக்காதே மனமே அவளை நினைக்காதே” மனத்தோடு உருப்போட்டவனாய் நண்பர்களுடன் ஐக்கியமானேன்.

மறுநாள் காலை அலுவலகத்தில் எனது ஜூனியர் நித்யாவிடம் வேலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, அன்று நிகழ்ந்த பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் வேண்டுமெனக் கேட்டாள்.

நான் அந்தப் பார்ட்டியின் ஒருக்கிணைப்பாளர் என்பதால் இதற்கெனத் தனியாகக் கேமராமேன் வைத்து நிறையப் படங்கள் எடுத்திருந்தேன். அதைப் பகிரச்சொல்லி அவள் கேட்டதும், எனது கணிணியில் பதிவேற்றி வைத்திருந்த புகைப்படங்களைக் காண்பித்தவாறு பேசிக் கொண்டிருக்கும் போது சக்தியைப் பற்றி அறியும் உந்துதலில், “ஆமா யார் இவங்க? உன்னோட ரிலேட்டிவ்வா?” எனக் கேட்டிருந்தேன்.

அவளின் கண்களில் என்னை ஆராயும் பாவனை! ஆயினும் நான் கேட்டதற்குப் பதிலளித்தாள்.

அவளின் நெருங்கிய கல்லூரித் தோழி எனவும், இருவருமே வெவ்வேறு அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் ஒரே தங்கும் விடுதியில் தங்கியிருப்பதாகவும் உரைத்தவளிடம் சக்தியின் குடும்பம் சொந்த ஊரென நான் கேட்க,

“நீங்க ஏன் அவளைப் பத்தி இவ்ளோ கேள்வி கேட்குறீங்க?” முடிச்சிட்ட புருவத்துடன் கேட்டவள் விடைப் பகராது சென்று விட்டாள்.

‘ஆமா பெரிய உலக அழகி! எனக்கென்ன வந்துச்சு’ தோளைக் குலுக்கியவனாய் என்னுடைய வேலையைக் கவனிக்கலானேன்.

ஆனால் காலம் எங்களை மீண்டுமாகச் சந்திக்கச் செய்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் எனது கல்லூரித் தோழனின் திருமணத்திற்குச் செல்லவெனக் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்.

நான் செல்ல வேண்டிய பேருந்து எந்தப் பிளாட்பாரத்தில் நிற்குமெனத் தேடிச் சென்று போய் நின்றிருந்த வேளையில், பூரிப்பான முகத்துடன் என்னை நோக்கி வந்தாள் அவள்.

“நீங்க.. நீங்க நித்தியோட டீம் மெட் தானே” எனக் கேட்டாள்.

அவள் யாரென்றே எனக்குத் தெரியாத பாவனையில் அவளைப்‌ பார்த்தவனாய், “சாரி யார் நீங்க? நம்ம முன்னாடி மீட் செஞ்சிருக்கோமா?” எனக் கேட்டான்.

முதலில் புருவம் சுருக்கியவள் பின்பு கோபம் கொப்பளிக்க, “சாரி” என்றவளாய் என்னை விட்டு சற்றுத் தூரமாய்ச் சென்று தள்ளி நின்று கொண்டாள்.

அவளின் பாவனையில் உதட்டுக்குள் சிரித்தாலும், அவளிடம் பேசிடு உண்மையைச் சொல்லிடு எனத் தடுமாறும் நெஞ்சை இழுத்துப் பிடித்து வைப்பது பெரும்பாடாய் தான் இருந்தது எனக்கு.


தனியாகப் பேருந்தில் பயணிப்பது எனக்கு அறவே பிடிக்காது. உடன் யாரேனும் இருக்க வேண்டும். பெரும்பாலும் என்னுடைய அறைத்தோழி ஒருத்தி என்னுடன் பயணிப்பாள். இல்லையென்றால் நித்யாவையே எங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவேன்.

ஆனால் இன்று தனியே செல்ல வேண்டிய சூழ்நிலை வந்து விட்டதே என மனத்தோடு கலங்கியவாறு நின்றிருந்த வேளையில் தான் அவனைக் கண்டேன்.

ஆம் அந்த விஸ்வேஸ்வரனைத் தான் கண்டேன்.

அவனைக் கண்டதும் மனத்தினுள் ஏற்பட்ட ஆசுவாசத்திற்கு அளவே இல்லை.

‘ஒரு வேளை அவனும் திருப்பூர் தானோ! அதான் நாம போற பஸ் ஸ்டேன்ட்ல அவனும் வந்து நிக்குறானோ’ என்று கேள்வி எழ, உடனே அதனை அறிந்து கொள்ளும் ஆவலிலும் மனத்தின் உந்துதலிலும் எதையும் யோசிக்காது அவனின் முன் சென்று நின்றேன்.

ஆனால் என்னைத் தெரியாதது போல் அவன் பேசிய பேச்சு, காற்றுப் போன பலூனாய் என்னைச் சுருங்கச் செய்தது.

‘போடா உனக்குக் கனிமொழி தேன்மொழினு யாராவது வாய்க்கா வரப்புல திரிவா! நான்லாம் உனக்குச் செட்டே ஆக மாட்டேன்’ என மனத்தோடு அவனைத் திட்டியவனாய் அவனது முகம் பார்க்க முடியாத் தொலைவு தள்ளி நின்று கொண்டேன்.

நான் செல்ல வேண்டிய பேருந்து, நிறுத்தத்திற்கு வந்ததும் அதில் ஏறி அமர்ந்தேன். அதே பேருந்தில் எனக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்தான் அவன்.

இருவரும் அடுத்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இயல்பாய்ச் சென்றது அப்பயணம்.

நான் இறங்கும் வரை அவன் எந்த நிறுத்தத்திலும் இறங்கவில்லை. என்னுடைய ஊரின் நிறுத்தத்தில் இறங்கி, எனக்காகக் காத்திருந்த தந்தையை நோக்கி குதூகலத்துடன் ஓடிச் சென்று அவரிடம் எனது பையை வழங்கினேன்.

நான் இறங்கிய பேருந்து நகர, அப்பேருந்தின் இருக்கையில் அவன் என்னையும் எனது தந்தையையும் விழி அகலாது பார்த்தவாறு செல்வதைப் பாரத்தவளாய் எனது தந்தையின் இருச்சக்கர வாகனத்தின் பின் அமர்ந்தேன் நான்.

அன்று என்னைப் பார்க்க மாப்பிள்ளைப் பையன் வரப் போவதாகக் கூறி எனக்கு அதிர்ச்சியளித்தனர் என்னுடைய பெற்றோர்.

— தொடரும்

7 thoughts on “எனை நீங்காதிரு 2”

  1. Fellik

    ஒழுங்கா ஆமா ஹாய் ஹெய் நீ எஙாக இங்கனு பேசி ப்ரெண்ட் பிடிக்காம யார்னு தெரியாத மாதிரி காட்ரான். நைஸ் அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *