Skip to content
Home » எனை நீங்காதிரு 20

எனை நீங்காதிரு 20

குழந்தைப் பிறந்ததும் இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். அதற்குள் விஷ்வாவைப் பார்த்து அவனைக் காயப்படுத்திப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டு விட்டால் போதும் என்ற எண்ணத்துடனேயே தான் பிரசவ அறைக்குள் நுழைந்திருந்தேன்

அவனைக் கண்டு மன்னிப்புக் கேட்டதும் எனது மனம் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை. இனி நான் இறந்தாலும் நிம்மதி தான். எங்கள் குழந்தையை விஷ்வா பார்த்துக் கொள்வான் என்று தான் நினைத்திருந்தேன்.

நான் மயக்கம் தெளிந்து முழித்த போது கூட, நான் இறந்து ஏதோ வேறு உலகில் சஞ்சரித்திருப்பது போலவே உணர்ந்தேன். ஆனால் உடலில் உணரப்பட்ட ரணமான வலியில் முகத்தைச் சுருக்கி சுற்றிலும் பார்வையைச் சுழலவிட, மருத்துவமனையில் இருப்பது புரிந்தது.

மயங்கும் முன் கேட்ட குழந்தையின் அழுகுரல் நினைவிற்கு வர, குழந்தையைத் தேடி அலைபாய்ந்தன கண்கள்.

அங்கமெங்கும் சதையைப் பிய்த்தெடுத்து கூர் கூராக்கியது போன்ற வலியில் இருந்தேன்‌. இடுப்பை அசைக்கும் போதெல்லாம் அடிவயிற்றில் விறுவிறுவென உணரப்பட்ட வலியில் விலுக்கெனக் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அம்மாவை வெகுவாகத் தேடியது மனம்.

‘நான் என்ன தப்பு செஞ்சேன். காதல் கல்யாணம் செஞ்சது தப்பா? ஏன் இந்த அம்மாவும் அப்பாவும் என்னை இப்படி அனாதை மாதிரி விட்டுட்டாங்க’ உடலின் நோவு உள்ளத்தைக் குமுறச் செய்ய, கண்களில் வழிந்த கண்ணீருடன் எழுந்து அமர முற்பட்டேன்.

“அச்சோ பச்சை உடம்புக்காரி இப்படி அழுதுட்டு இருக்கலாமா?” என்றவாறு என்னருகில் வந்து நான் எழுந்து அமர உதவியவாறு எனது கண்ணீரைத் துடைத்து விட்டார் எனது அத்தை.

கடந்த சில மாதங்களாகத் தாயிற்கு இணையாக என்னைக் கவனித்துக் கொண்ட அற்புத மனிதி அவர்.

“குழந்தை” என்று நான் அழுகை குரலில் திக்கித் திணிறியவாறு கேட்கவும், “சுத்தம் செய்ய எடுத்துட்டு போயிருக்காங்கமா. வந்துடுவாங்க” என்றார்.

சில நிமிடங்கள் கழித்துக் குழந்தையை எனது கைகளில் அவர்கள் கொடுத்த நொடி, அந்தப் பிஞ்சு மென்மொட்டு உடலை கைகள் தழுவியதும் நெஞ்சுக்குள் சிலீரென்ற உணர்வு எழ உடலெல்லாம் புல்லரித்துப் போனது. பிள்ளையின் முகத்தை ஆனந்த கண்ணீருடன் பார்த்தவளாய், “விஷ்வா எங்கே அத்தை?” எனக் கேட்டேன். மனம் விஷ்வாவைத் தேடியது. எங்களுக்குத் தேவையானதை வாங்கச் சென்றிருக்கிறான் என்றார் அத்தை.

‘எப்படியோ என் மேல இருக்கக் கோபம்லாம் போய்ப் பிள்ளை பிறக்கிற நேரமாவது வந்தானே’ என்று நினைத்துக் கொண்டேன். விரல்களும் கண்களும் குழந்தையை வருடின. ‘என் குழந்தை’ நெஞ்சிற்குள் இதத்தை உணர்ந்தேன். வலியும் இதமும் கூடிய கலவையான உணர்வு.

குழந்தைக்கு எப்படிப் பாலூட்ட வேண்டுமெனக் கூறியவாறு அதற்கேற்றவாறு எனது உடையைச் சரி செய்தவராய் குழந்தையைக் கையினில் தாங்கி எப்படிப் பிடிப்பது என்று சொல்லிக் கொடுத்தார் எனது அத்தை.

நான் சரியாகக் கொடுக்கிறேனே என்று பார்த்தவர், “நீ சங்கடப்படாம கொடுமா. நான் வெளியே இருக்கேன்” என்றவராய் வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் உள்ளே வந்த விஷ்வா, என்னைப் பார்த்து விக்கித்தவனாய் வெளியே சென்றதைக் கண்டதும் சட்டெனச் சிரித்து விட்டேன் நான்.

சிரித்ததில் அடிவயிற்றில் சுளீரென வலிக்க, ஆஆஆ என லேசாய் அலறினாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்னால்.

‘என்னமோ என்னைப் பார்த்ததே இல்லங்கிற மாதிரி என்னா சீன் போடுறான் பாரு’ என்று மனசாட்சி வேறு அவனைக் கேலி செய்து சிரிக்க வைத்திருந்தது.

சிறிது நேரம் கழித்து வந்தவன், பூரிப்புடன் கைகளில் குழந்தையை ஏந்திக் கொஞ்சியதை பார்த்த நொடியில் ஆனந்த கண்ணீர் என்னிடத்தில்.

எங்கள் காதலின் உதிரத்தை ஓர் உருவமாக்கிப் பரிசாய் என்னவனிடமே கொடுத்த உணர்வுபெருக்கில் நெகிழ்ந்திருந்தேன்.

அடுத்து வந்த நாள்களில் இயல்பாய் பேச முடியவில்லை அவனிடத்தில். அவனை அப்படி எல்லாம் திட்டிவிட்டு இப்பொழுது எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது என்ற குற்ற குறுகுறுப்பில் இயல்பாகப் பேச முடியாது தத்தளித்திருந்தேன். அவன் எனது அறைக்குள் வந்து குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் அவனைத் தொடர்ந்திருந்தன எனது கண்கள்.

என்னிடம் இப்படியே பேசாது இருந்திடுவானோ என்று பயம் தோன்றிய போது தான் குழந்தைக்கான பெயரை தேர்ந்தெடுக்கும் சாக்கில் பேசியிருந்தேன் அவனிடம். என்னையும் அவனது மனத்தில் வைத்து, வசந்தன் என்று அவன் கூறிய பெயரைக் கேட்டதும் மனத்தில் இன்பச்சாரல். ‘ஹப்பாஆஆ’ என்னை வெறுக்கவில்லை அவன்.

வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்ற பிறகு இயல்பாய்ப் பேசுவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் நாள் முழுவதும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டும் எனக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டும் இருந்தானேயன்றி தேவைக்கு மீறி ஒரு வார்த்தை அதிகமாகப் பேசினானில்லை.

குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கிய பொழுதினில் இருந்து மார்பில் ஒருவிதமான வலியும் அசௌகரியமும் இருந்தது. கூடவே தையலின் வலியும் உதிரப்போக்கும் சேர்ந்து கொள்ள எந்நேரமும் கண்ணீர் வந்து விடுவேன் என்ற வகையில் இருக்க, நிமிர்ந்து அமரவும் முடியாது எல்லாம் சேர்ந்து என்னை மிகவும் சோர்வுறவும் வருத்தியும் இருந்த போது, கொஞ்சமேனும் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்திருந்தது விஷ்வாவின் இருப்பு மட்டும் தான். அவன் என்னுடன் இருந்ததே அத்தனை மகிழ்வளித்தது எனக்கு. என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டான். எனக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்தான். நான் உறங்கும் நேரம் முழுமையாகக் குழந்தையைப் பார்த்துக் கொண்டான்.

இயல்பாய் பேசவில்லை என்றாலும் இருவரும் ஒருவரையொருவர் இப்படி அண்மித்து இருப்பதே போதுமென்று அவனது அண்மையையும் எனக்கு அவன் செய்யும் உதவிகளையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருந்தேன்.

ஆனால் அதையும் நீட்டிக்க விடாது, “சக்தி நாளைக்கு நான் கன்னியாகுமரிக்கு கிளம்புறேன்” என்று அவன் வந்து உரைத்த போது அதிர்ந்து விழித்தேன்.

மன உளைச்சலுக்கு ஆளாகி கடும் கோபமுற்று அவனிடம் சண்டையிட்டிருந்தேன்.

“என்ன வேலை உனக்குக் கன்னியாகுமரில! திரும்பவும் எங்களை விட்டுப் போகப் போறியா?”

குழந்தை உறக்கத்தில் இருக்க, கட்டிலில் இருந்து எழுந்து அவன் முன் சென்று நின்றவளாய்க் கேட்டிருந்தேன்.

“மீன் விற்பனை தொழில் சக்தி. என் ஃப்ரெண்ட் கடைல தான் வேலை பார்க்கிறேன். நான் இப்ப நம்ம குடும்பத்துக்காகச் சம்பாதிக்கனும்ல சக்தி. இப்படியே இருந்துட்டா முடியுமா? போய்த் தானே ஆகனும்” எனது முகத்தைப் பார்க்காது வேறெங்கோ பார்வையைச் செலுத்தியவனாய் உரைத்தான்.

“அதெல்லாம் ஒன்னும் போகத் தேவையில்லை. ரொம்பக் கருத்து ஆளே இளைச்சு போய் ஒரு மாதிரி ஆகிட்டடா விஷ்வா. இந்த வேலைக்குலாம் நீ ஒன்னும் போகத் தேவையில்ல. இன்னும் ஆறு மாசத்துக்கு எனக்குச் சம்பளம் வரும் விஷ்வா. அதுக்குள்ள நியூ நார்மல் லைஃப் நமக்குப் பழகிடும். கடையைத் திரும்பவும் ஓபன் செஞ்சி உன் பிஸ்னஸ்ஸை ஸ்டார்ட் செய்யலாமே விஷ்வா” அவனது முகத்தைப் பார்த்தவாறே கேட்டிருந்தேன்.

“பொண்டாட்டி தலைல சுமையை ஏத்திட்டு சுகமா வாழுற புருஷன் நான் இல்லை சக்தி! நான் போறது தான் சரியா இருக்கும்” உணர்வற்ற குரலில் எனது முகத்தை உற்று நோக்கி அவன் உரைத்ததும் விக்கித்துப் போனேன் நான்.

எனது கண்களில் இருந்து சட்டெனக் கண்ணீர் வழிய அவனைப் பார்த்திருந்தேன்.

“ஏன் விஷ்வா இப்படிப் பேசுற! அன்னிக்கு ஏதோ கோபத்துல வாழ்க்கை பத்தின பயத்துல அப்படிப் பேசிட்டேன்டா! அதுக்காக எவ்ளோ வேணாலும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எங்களை விட்டுட்டு போகாதடா!” கூறியவாறு அவனின் கரத்தை நான் பிடிக்கப் போக,

அவனது கரத்தைப் பின்னே இழுத்தவனாய், “இல்ல சக்தி! பணம் சம்பாதிக்கத் துப்பில்லாம மனைவியோட காசுல சுகமாய் வாழறவனா நான் இருக்க விரும்பலை” என்றான்.

என்னுடைய வார்த்தைகள் எத்தனையாய் அவனைக் காயப்படுத்தியிருக்கிறது என்று புரிந்தது எனக்கு.

அழுகையை அடக்கியவளாய், “நீ எங்க கூட இல்லாம நீ கொடுக்கிற காசு மட்டும் எங்களைச் சந்தோஷப்படுத்திடுமா விஷ்வா” விம்மலுடன் கேட்டிருந்தேன்.

“அந்தக் காசு இல்லாதனால தான் அன்னிக்கு நீ என்னை அவமானப்படுத்திப் பேசின சக்தி! உனக்கு வேணா மறந்திருக்கலாம். இல்ல அன்னிக்கு இருந்த சூழ்நிலைல அப்படிப் பேசிட்டேன்னு நீ சொல்லலாம். ஆனா எனக்கு மறக்கவும் இல்லை மனசு ஆறவும் இல்லை சக்தி. இன்னும் ரணமா வலிச்சிட்டு தான் இருக்கு. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும் சக்தி. என்னோட மன நிம்மதிக்காக, நான் இப்ப தள்ளி இருக்கிறது தான் சரியா இருக்கும் சக்தி” கரகரத்த குரலில் கூறியவனை அழுகையும் கண்ணீருமாய் நான் பார்த்திருக்க, என்னை நிமிர்ந்தும்‌ பாராது வெளியே சென்றிருந்தான்.

நெஞ்சை நேராக வந்து தாக்கின அவன் சொற்கள்! அன்று அவனுக்கும் இப்படித் தானே இருந்திருக்கும்.

அதீத துடிப்புடன் படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சை குற்றவுணர்வுடன் நீவிக் கொண்டேன்.

குலுங்கிக் குலுங்கி அழுதிருந்தேன்.

அவன் அன்றே கன்னியாகுமரி கிளம்பிச் சென்றிருந்தான்.

அடுத்து வந்த நாள்கள் எல்லாம் உள்ளம் மரணித்து உடல் மட்டுமே வாழ்வது போன்று உயிர்த்திருந்தேன்.

என்னிடம் அலைபேசியில் பேசுவதையே நிறுத்தியிருந்தான். அவனது தாயின் மூலம் எங்களின் நலனை அறிந்து கொள்பவன், முற்றிலுமாக என்னைப் புறக்கணித்திருந்தான்.

அவன் சிங்கப்பூரில் இருந்த போது எங்களின் உடல்கள் பிரிந்திருந்தாலும் உள்ளங்கள் பின்னிப் பிணைந்திருந்ததாய் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இன்று அவனது உடலும் உள்ளமும் என்னை விட்டு நீங்கிச் சென்றதாய் எண்ணிக் கலங்கினேன்.

இரு மாதங்கள் அவன் வீட்டிற்கே வராது இவ்வாறு கடந்திருந்த போது, ‘என்னை வெறுத்துட்டானா? எப்படி அவனால இப்படி என்கிட்ட பேசாம இருக்க முடியுது?’ என்று புலம்பியவளாய் அழுகையில் கரைந்திருந்தேன்.

அப்பொழுது எனது மாமியார் என்னிடம் பேசினார்.

“என் பிள்ளைக்கு உன் மேல பாசம் அதிகம்மா. ஒரு நாளைக்கு அஞ்சு தரமாவது போன் செஞ்சி உன்னைப் பத்தியும் பிள்ளை பத்தியும் கேட்டுருவான. இதோ ஒரு வாரமா உனக்குச் சுறா புட்டும், மீன் வறுவலும் குழம்புமா வச்சி கொடுக்கிறேனே அது அவன் அனுப்பி வச்சது தான். சுறா புட்டு சாப்பிட்டா நல்லா பால் சுரக்குமாமே செஞ்சி கொடுமா அவளுக்குனு சொல்லியே அனுப்பி வச்சான். மீன் நிறையச் சாப்பிட்டா சத்து ஏறுமாமே. குழந்தை சுமந்ததுலருந்து ஆளே வெளிரி போய் இருக்கா, எடையும் ரொம்பக் குறைஞ்சு போய் இருக்கா, சத்தா சமைச்சி கொடுமானு சொல்லி வாங்கிக் கொடுத்தான். நீ அவனை நினைச்சு வெசனப்படுதேனு புரியுதுமா. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியலை. ஆனா ஒன்னு அவனுக்கு நீனா ரொம்ப இஷ்டம்மா. உன்னை விட்டுட்டுலாம் அவனால வாழ முடியாது. ஏதோ கோபத்துலயும் சம்பாதிச்சாகனும்ன்ற வைராக்கியத்துலயும் இப்படித் திரிஞ்சிட்டு கெடக்கான். அவன் பேசலைனா என்ன? நீ பேசலாம் தானே! நீ போன் போட்டு பேசுமா”

அவரின் வார்த்தை ஒவ்வொன்றும் காயம் கொண்ட நெஞ்சிற்கு மயிலிறகு வருடலாய் இருந்தது.

அவரின் வார்த்தைகள் அளித்த உத்வேகத்தினால் இப்படியே அவனை விட்டு விடக் கூடாது என்று அவனுக்குத் தினமும் வாட்ஸ்சப்பில் குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கினேன்.

தோழியாய் அவனிடத்தில் அன்றாடம் குறுஞ்செய்தியில் பேசிய நாள்கள் நினைவுகளாய் வந்து போயின.

“குட் மார்னிங்”

“எப்படி இருக்க?”

“என்ன செஞ்சிட்டு இருக்க?”

“சாப்பிட்டியா?”

“உன் பையன் இன்னிக்கு என்ன செஞ்சான் தெரியுமா?”

“குட் நைட் எங்கே சொல்றது? உன் பையன் என்னைத் தூங்க விடுறதே இல்ல”

இவ்வாறாகத் தொடர்ந்து நான் அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பார்த்தானே அன்றிப் பதில் ஏதும் அனுப்பவேயில்லை அவன்.

ஆனாலும் நான் விடாது அன்றாடம் மகனின் படத்தை அனுப்பி, குழந்தையின் செய்கைகளை விஷ்வாவிற்கு ஆடியோவாகப் பேசி அனுப்பிய வண்ணம் இருந்தேன்.

விஷ்வாவிடம் இருந்து பதில் வராது போயினும் இவ்வாறு என் மனத்தில் உள்ளதை எல்லாம் புலனத்தின் வழியாக நான் தொடர்ந்து பகிர்ந்து வந்தது எனது மனஉளைச்சலையும் மன அழுத்தத்தையும் குறைத்து மனத்திற்கு ஒருவிதமான அமைதியையும் நிம்மதியையும் அளித்திருந்தது.

குழந்தைக்கு மூன்று மாதம் ஆகிய போது இரண்டு நாள்கள் வந்து தங்கியிருந்து போனான் விஷ்வா. என்னிடம் இயல்பாகப் பேசவில்லை ஆயினும் நான் கேட்பவற்றிற்குப் பதிலளித்துப் பேசினான். அடுத்த வந்த நாள்களில் நான் அனுப்பும் செய்திகளுக்கு அவ்வப்போது ஒரு வார்த்தையில் பதிலனுப்ப துவங்கியிருந்தான்.

இந்நிலையில் குழந்தைக்கு ஆறாம் மாதமான போது எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அழுதவளாய் விஷ்வாவை வரவழைத்து அவனுடன் அவர்களைக் காணச் சென்றிருந்தேன்.

4 thoughts on “எனை நீங்காதிரு 20”

  1. Kalidevi

    Ippadi pesina kandipa oru aambalaiku sambarikanum nu veri varum than apo iruntha situation la nee pesinalum avanuku vali irukume

  2. Avatar

    இப்பவாவது அவர்களை ஏத்துப்பாங்களா…? இல்லை திரும்பவும் அவமானப்படுத்தி அனுப்பிடுவாங்களா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *