Skip to content
Home » எனை நீங்காதிரு 22 & 23 (Final Episode)

எனை நீங்காதிரு 22 & 23 (Final Episode)

எனை நீங்காதிரு 22

“குட்டிப்பா! அப்பா வந்திருக்கேன் பாருங்க” உறங்கும் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான் விஷ்வா.

மெல்லிய சிரிப்புடன் அவன் உண்ணுவதற்கு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

அத்தை அவரின் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார்.

விஷ்வாவின் குட்டிப்பா என்ற அழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் விஷ்வாவிற்குப் பெரிய அப்பா, மகன் குட்டி அப்பா என அதற்கு நானே அர்த்தம் கற்பித்துக் கொண்டு அவ்வாறு அவன் அழைக்கும் போதெல்லாம் நெகிழ்ந்து போவேன்.

இரவு பத்து மணியளவில் தான் கன்னியாகுமரியில் இருந்து வந்திருந்தான் விஷ்வா.

வரும் பொழுது எனக்கும், குழந்தைக்கும், அத்தைக்கும் நிறையப் பொருள்கள் வாங்கி வந்திருந்தான். கன்னியாகுமரியில் சிற்பியில் செய்யப்பட்ட கிளிப், வளையல், கம்மல், மணி என எனக்கு நிறைய வாங்கி வந்திருந்தான். அதனை ஆசையாக எடுத்துப் பார்த்தவளாக எனது கப்போர்டுக்குள் வைத்தேன்.

இப்பொழுதெல்லாம் அவனது அன்பை இவ்வாறான செயல்களில் தான் பார்க்க முடிகிறது. நான் கேட்பதற்குப் பதிலளிப்பானே அன்றி என்னிடம் அதிகமாக ஒரு வார்த்தை பேசுவதில்லை அவன். எப்பொழுது என்னிடம் இயல்பாக அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் பழைய கணவர் தோழன் விஷ்வாவாக மாறுவான் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

தட்டில் வைத்த உணவை ஏதும் கூறாது அமைதியாக அவன் உண்ண, “நாளைக்குக் காலைல திருப்பூருக்கு கிளம்பலாமா விஷ்வா?” எனக் கேட்டேன்.

“ஹ்ம்ம் போகலாம்” என்றவன் ஏதோ யோசித்தவனாய், “இன்னும் கொரோனா முழுசா சரியாகாத நேரத்துல குழந்தையைக் கூட்டிட்டு போகனுமானு யோசனையா இருக்கு. வசந்தனை அம்மாகிட்ட விட்டுட்டு போவோமா?” எனக் கேட்டான்.

“கல்யாணத்துக்குப் பிறகு இப்ப தான் அவங்களைப் பார்க்க போறோம். அம்மா அப்பா குழந்தையைப் பார்க்கனும்னு ஆசைப்படுவாங்கல விஷ்வா” என்றேன்.

“உங்க அப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்துட்டாங்களா?”

“ஆமா வந்துட்டாங்க. மஞ்சள் காமாலை தானே விஷ்வா. கொரோனா வார்டுலலாம் அவரை வைக்கலை. இப்ப வீட்டுல தான் இருக்காங்கனு ஃப்ரண்ட் சொன்னா. அதனால பையனைக் கூட்டிட்டு போறதுல பிரச்சனை இல்லை விஷ்வா” என்றேன்.

“ஹ்ம்ம் பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வரனும். வந்ததும் டாக்டர்கிட்ட அவனுக்கு ஒரு செக்அப் செஞ்சிடலாம்” என்றவாறு அவன் கை கழுவ எழுந்து கொள்ள,

“அடுத்த வாரத்துல இருந்து வேலைக்கு ஜாய்ன் செய்றேன். இப்போதைக்கு வர்க் ஃப்ரம் ஹோம் தான். அதனால பிரச்சனை இல்லை” ஏற்கனவே அவனிடம் கூறிய விஷயம் தான் என்றாலும் அவனிடம் பேசும் நேரத்தை நீட்டிக்க வேண்டுமென்றே பேச்சை வளர்த்தேன்.

“ஹ்ம்ம் சரி! அதான் அம்மா கூட இருக்காங்களே! உனக்கு வேலையும் பார்த்துட்டு குழந்தையும் பார்க்க கஷ்டம் இருக்காது” என்றவன் கையைக் கழுவி விட்டு அறைக்குள் நுழைய போக, அவன் பின்னேயே சென்றவளாய்,

“இங்கே கடை வேலைலாம் முடிஞ்சிதா? எப்ப கடையைத் திறக்க போற? கடை வாடகைலாம் பேலன்ஸ் இருந்துச்சே அதுக்கு என்ன செஞ்ச? கொஞ்சம் கொஞ்சமாக நம்ம கடன்லாம் வேற கொடுக்க ஆரம்பிக்கனும்” என்றேன்.

“கவலைப்படாதே! கடன் சுமை எதையும் உன் தலைல கட்டிட்டு நான் சுகமா இருந்துட மாட்டேன். கூலி வேலை செஞ்சாவது கடனை அடைச்சிடுவேன்” சற்றுக் காட்டமாக உரைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டான் விஷ்வா.

அதிர்ந்த முகத்துடன் கண்களில் கண்ணீர் தேங்க அப்படியே நின்று விட்டேன் நான்.

சில நொடிகள் கழித்து அறைக்குள் சென்றவளாய், “அதை மறக்கவே மாட்டியா விஷ்வா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிக் குத்திக் காண்பிச்சுட்டு என்னை விட்டு ஒதுங்கி இருக்கப் போற?” அழுகையும் விம்மலுமாய்க் கேட்டிருந்தேன் நான்.

“ஷ்ஷ் குழந்தை தூங்குறான்ல! நம்ம சண்டையை அப்புறம் வச்சிக்கலாமா?” எனக்கு முதுகு காண்பித்தவாறு படுத்து விட்டான் அவன்.

‘ஏன் இவன் என்னைப் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறேன்’

கரைப்புரண்டோடிய கண்ணீரைத் துடைத்தவளாய் அழுகையுடனேயே உறங்கியிருந்தேன்.

“சக்தி! சக்தி” என்னை எழுப்பி இருந்தான் விஷ்வா.

கண்களைக் கசக்கியபடி விழித்தவாறு அவனைப் பார்த்தேன். இருந்த தூக்க கலக்கத்தில் அவனிடம் சண்டையிட்டு அழுதவாறு உறங்கியதெல்லாம் மறந்திருந்தது எனக்கு.

“எழுந்திரு சக்தி! குழந்தை பசில அழுறான் பாரு” என்றவனாய் குழந்தையைக் கைகளில் கொடுத்தான்.

ஏற்கனவே கண்களில் திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்தவளாய் எழுந்து குழந்தையை நான் வாங்க, “அழுதுட்டே பால் கொடுக்காத” என்றவனாய் வெளியே சென்றிருந்தான்.

மீண்டுமாய் உள்ளே வரும் போது ஒரு கோப்பை பாலை கைகளில் வைத்திருந்தான்.

குழந்தைக்குப் பாலூட்டி விட்டு ஆடையைச் சீர் செய்தவாறு எழுந்தமர்ந்தேன்.

“அம்மா கொடுக்கச் சொன்னாங்க?” என்றவாறு அந்தக் கோப்பையை அளித்தான்.

அத்தை கொடுக்கவில்லை என்று நன்றாகத் தெரியும் எனக்கு. இரவு நானாகக் கேட்காமல் அத்தை எதுவும் கொடுக்க மாட்டார். எனக்காக இவனே கலக்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்று புரிந்தது.

‘எங்கிருந்து வந்துச்சு இந்த ஈகோ இவனுக்கு! நானே பால் கலக்கி எடுத்து வந்தேன்னு சொன்னா என்னவாம்’ மனத்திற்குள் எண்ணியவாறே ஏதும் கேட்காது அவனது கண்களைப் பார்த்தவாறு வாங்கி அருந்தினேன்.

கட்டிலில் என்னருகில் படுத்தவன் குழந்தையைத் தனது மார்பில் போட்டுக் கொண்டு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரையும் பார்த்தவாறு அப்படியே உறங்கிப் போனேன் நான்.

மறுநாள் காலையிலேயே பேருந்தில் பயணிக்கத் தொடங்கினோம். குழந்தையை அவனே வைத்திருந்து பார்த்துக் கொண்டான். எனக்குத் தேவையானவைகளை அவ்வப்போது கேட்டு பார்த்து பார்த்துச் செய்து கொடுத்தான். எங்களது காதலைப் பற்றி வீட்டில் பேசுவதற்காக இவனுடன் பயணித்த அந்தப் பேருந்து பயணம் நினைவிலாடியது. அன்று மனம் முழுக்க நிரம்பிருந்த அந்தக் காதல் எப்பொழுது எங்களுக்குள் எங்கோ தூரமாய்ச் சென்று விட்டதோ என்று தோன்றியது. என் மீதான அவனுடைய அக்கறை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் அந்தக் காதலும் ஆசையும்? அன்று சண்டையிட்டு பல மாதங்களான பிறகு இன்று வரை கொஞ்சலான தொடுதல் பார்வை செய்கை என எதுவுமே அவனிடம் இல்லை. ஒரு விலகலுடனேயே தானே என்னிடம் பேசுகிறான். அவன் மீது நான் வைத்திருக்கும் காதல் அவனுக்குப் புரியவே இல்லையா? இல்லை அவனுக்கு என் மீது காதல் இல்லையா? நினைக்கும் போதே நெஞ்சில் பாரமேறி கண்களில் நீர் சூழ, ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

இன்னொரு பக்கம் அப்பாவும் அம்மாவும் இன்று எங்களைக் கண்டதும் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவார்களோ என்று பதட்டமாகவும் இருந்தது. வாழ்வில் முன்னேறி வெற்றி பெற்ற பின்பே அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமென வைத்திருந்த வைராக்கியத்தை உடைத்து தான் அவரைக் காணச் செல்கிறோம். ஏதேனும் அவமதித்துப் பேசிடுவாறோ என்ற பயம் இருந்தது எனக்கு.

பலவிதமான யோசனைகளுக்கு இடையே அந்த வீட்டை வந்தடைந்திருந்தோம்.

வாசல் அழைப்பு மணியை ஒலிக்க விட்டு பதட்டத்தோடு காத்திருந்தேன். குழந்தை விஷ்வாவின் கைகளில் விளையாடியவாறு இருந்தான். நான் நிமிர்ந்து விஷ்வாவைப் பார்த்தேன். ஒரு கையால் என்னைத் தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான். நான் இருக்கிறேன் என்பதான அணைப்பாய் இருந்தது.

கதவு திறக்கப்பட்டதும் அம்மாவின் கண்களில் அதிர்ச்சி!

கண்களில் தேங்கிய நீருடன் அம்மா என்றழைத்தவாறு நான் நின்றிருக்க, “சக்தி” என்றவராய் எனது கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“எப்படிடி இருக்க? எங்களை எல்லாம் மறந்துட்ட தானே” எனும் போதே அவரின் குரல் தழுதழுத்தது.

“இல்ல மா! தினமும் உங்களை நினைப்பேன்” என்றேன்.

எனது கையைப் பிடித்து உள்ளே இழுத்தவர், “வாங்க” என்று விஷ்வாவைப் பார்த்து உரைத்தார். பின் அவன் கைகளில் தவழ்ந்த குழந்தையைக் கவனித்தவராய், “உன் குழந்தையா சக்தி? குழந்தை பிறந்ததைக் கூட ஏன்டி சொல்லலை” என்றவாறு குழந்தையைக் கை நீட்டி அழைக்க, அவன் விஷ்வாவின் சட்டையைப் பிடித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“குழந்தைக்கு எங்களை அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்த்து வச்சிருக்கல” என்றவாறு ஆதங்கத்துடன் என்னை முறைத்தவர்,

“நீங்க உட்காருங்க தம்பி” என்று விஷ்வாவை அமர வைத்து விட்டு, “வா அப்பாவை வந்து பாரு” என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.

நான் முகப்பறையில் அமர்ந்திருந்த விஷ்வாவையும் குழந்தையையும் பார்த்தவாறு தயங்கி நிற்க, “நீ போ” என்று வாயடைத்து தலையசைத்தவனாய் அம்மா காண்பித்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் விஷ்வா.

எனது கையைப் பிடித்தவாறு படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றார் அம்மா.

நல்ல உறக்கத்தில் இருந்தார் அப்பா.

“ஏங்க யாரு வந்திருக்கானு பாருங்க” என்ற அம்மாவின் குரலில் அத்தனை பூரிப்பும் மகிழ்வும்.

“இப்ப தான்‌ மாத்திரை போட்டு படுத்தாங்க” என்றவராய் மீண்டுமாய் அவரை எழுப்ப, கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார்.

எனது பார்வை முழுவதும் அவரைத் தான் தழுவியிருந்தன.

“அப்பா” என்று மெல்ல அழைத்தேன்.

என்னைக் கண்டதும் அவரது பார்வையில் முதலில் அதிர்ச்சியும் மகிழ்வும் அதன் பின்பு நெற்றி சுருங்க முகமும் சுருங்கிப் போனது.

“நம்மளை வேண்டாம்னு உதறிட்டு போனவ இப்ப எதுக்கு வந்திருக்காளாம்?” என்றவராய் முகத்தைத் திருப்பிக் கொண்டார் அப்பா.

கண்கள் கண்ணீரைப் பொழிய, “அப்பா” என அவரை அணைத்து அழுதிருந்தேன் நான். அவரின் கண்களும் கண்ணீரைப் பொழிந்தன.

“நான் எப்படிலாம் வளர்த்த பொண்ணு! இப்ப இப்படி இளைச்சி கருத்து போய் வயசுக்கு மீறின முதிர்ச்சியோட ஆளே அடையாளம் தெரியாம வந்து நிக்கிறியே” என்றவராய் குலுங்கி அழுதார். அப்பாவின் கதறலில் அம்மாவும் அழுதிருந்தார்.

“அழாதீங்கப்பா!” என்று அவரின் நெஞ்சை தடவி விட்டேன் நான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவராய், “இப்ப மட்டும் எங்க ஞாபகம் உனக்கு எப்படி வந்துச்சு? ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுனு உன்னைத் துரத்தி விட்டுட்டானா அவன்! அப்பவே சொன்னேன் அவன் வேண்டாம்னு இப்ப ஒன்னும் கெட்டுப் போய்டலை. அவனை விட்டுட்டு வந்துடு! வேறொரு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேன் நான். எப்படிச் சலவை கல்லு மாதிரி இருந்த பொண்ணை இப்படி ஆக்கி வச்சிருக்கானே! ரொம்பக் கஷ்டப்படுத்திட்டானா?” என்று அவர் பாட்டிற்குப் பேசிக் கொண்டே போக,

அவனை விட்டு வந்துவிடு என்ற அவரின் வார்தையிலேயை அவரை விட்டு விலகி நின்றிருந்தேன் நான்‌.

“ஏங்க என்னங்க பேசுறீங்க? மாப்பிள்ளை வெளியே தான் உட்கார்ந்திருக்காரு?” என்று அம்மா தடுத்து பேச,

“யாருடி மாப்பிள்ளை? நம்ம ஜாதிக்கும் அந்தஸ்துக்கும் ஒத்து வராத அவனைப் போய் மாப்பிள்ளைனு சொல்லிட்டு இருக்க?” ஆங்காரமாய் அவர் பேசும் போதே இருமல் வந்துவிட, அவருக்குத் தண்ணீரைப் பருக அளித்தவராய் நெஞ்சை நீவி விட்டார் அம்மா.

“என் பொண்ணு! எப்படி இருந்த என் பொண்ணு! அவன் வேண்டாம்மா உனக்கு” இருமலுக்கிடையில் உரைத்திருந்தார் அவர்.

கண்ணீருடன் அப்பாவைத் தான் பார்த்திருந்தேன் நான்.

“குழந்தை பெத்த பொண்ணு எப்படிப்பா அதே மாதிரி இருப்பேன்” எனக் கேட்டேன்.

“குழந்தையா?” கண்கள் விரிய என்னைப் பார்த்தார் அப்பா. அப்பாவை பார்த்து ஆமெனத் தலையசைத்தார் அம்மா.

“விஷ்வாவுக்கு மதிப்பில்லாத இடத்துல நான் இருக்க மாட்டேன்ப்பா! அவன் ஒன்னும் மோகம் முப்பது நாளுனு என்னை விட்டுட்டு போறவன் இல்லப்பா! மத்த புருஷன் பொண்டாட்டி மாதிரி எங்களுக்குள்ளயும் சண்டையும் பிரச்சனைகளும் இருக்கு தான்ப்பா! ஆனா என்னிக்குமே பிரிஞ்சிடனும்னு இரண்டு பேருமே நினைச்சதில்லைப்பா! ஏன்னா நாங்க பிரிஞ்சி வாழுற வாழ்க்கை தான்ப்பா எங்களுக்கு நரகம். அப்படியான வாழ்க்கை தானே உங்க பொண்ணுக்கு நீங்க தர நினைக்கிறீங்கப்பா” அழுதவாறு பேசிவிட்டு சற்று நிதானித்தவளாய்,

“உங்களுக்கு உடம்பு முடியலைனு கேள்விப்பட்டு மனசு பொருக்காம தான் பார்க்க வந்தேன்ப்பா. உங்க இரண்டு பேரையும் பார்த்ததுல ரொம்பச் சந்தோஷம்! உடம்பை பார்த்துக்கோங்க‌. நான் கிளம்புறேன்” என்றவாறு அவரின் பதிலுக்காகக் கூடக் காத்திருக்காது விறுவிறுவென வெளியே வந்து விட்டேன்.

“சக்தி! சக்தி” என அழைத்தவாறு பின்னேயே வந்தார் அம்மா.

முகம் இறுக நின்றிருந்தான் விஷ்வா.

எத்தனை அவமானமாய் உணர்ந்திருப்பான் அவன். அழுகையில் நெஞ்சம் விம்மி அடங்கியது எனக்கு.

அம்மாவைக் கண்டு கொள்ளாது, “வா விஷ்வா! போகலாம்” அவனது கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவளாய் விறுவிறுவெனத் தெருவில் நடந்திருந்தேன்.

எனது கண்களில் கண்ணீர் நில்லாது வழிய, தோளில் கையைப் போட்டு அணைத்தவாறு நடந்தான் விஷ்வா.

அங்கிருந்த ஆட்டோவில் ஏறச் செய்தவன், பெண் பார்க்கும் படலமாய் என்னை முதலில் சந்தித்த அந்தக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் விஷ்வா.

அங்குச் சென்று சுற்றுப் பிரகாரத்தில் இருந்த சிமெண்ட் மேஜையில் கண்களைத் துடைத்தவளாய் அப்படியே அமர்ந்து விட்டேன் நான்.

குழந்தையை சற்று நிழலான இடத்தில் சின்ன மெத்தை விரித்து படுக்க வைத்தவன் என்னருகில் வந்து அமர்ந்தான்.

“சாரி சக்தி” என்றான் விஷ்வா.

என் அப்பா அவனைப் பேசியதற்கு நான் தானே மன்னிப்பு கேட்க வேண்டும்‌. அவன் ஏன் கேட்கிறானெனப் புரியாது நிமிர்ந்து பார்த்தேன் அவனை.

எனை நீங்காதிரு 23

கன்னியாகுமரியில் இருந்து வந்திருந்த அந்த இரவில் சக்தியிடம் அப்படிக் கடுமையாக பேச வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்திருக்கவில்லை.

ஏனோ கடனைப் பற்றி பேசினாலே சந்தியமுகியாய் மாறி விடுகிறேன் நான். அதனால் எனக்குள் ஏற்பட்ட காயமும் பாதிப்பும் அதிகம் என்பதால் அவ்வாறு ஆகிவிடுகிறேனா என்று தெரியவில்லை. என்னை மீறி தான் அவ்வாறு சக்தியிடம் பேசியிருந்தேன். ஆனால் அதன் பின்பு அவள் அழுதவாறே உறங்கியதும் மனம் கனமாகிப் போனது எனக்கு.

கடை வைத்து நன்றாக சம்பாதித்து கடன் எல்லாம் அடைத்த பிறகே சக்தியிடம் இயல்பான கணவனாய் நடந்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்திருந்தேன். நன்றாக பேசிப் பழகி விட்டு மீண்டுமாய் அவளின் வாயிலிருந்து ஏதேனும் வார்த்தை வந்தால் வாழ்நாளுக்கும் என் நெஞ்சை அறுத்து அவளுடன் ஒட்டுதல் இல்லாது ஆக்கி விடும் என்று பயந்தே ஒதுங்கி இருந்தேன் நான்.

அழுதவாறே உறங்கியவளை எழுப்பி ஆறுதல் மொழியவும் விரும்பாதவனாய், என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழுது எனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான் குழந்தை.

அவன் அந்நேரம் எதற்காக அழுகிறான் என்று கூட ஆராயாமல் நேராக பாலுக்காக அழுகின்றான் என்று கூறி அவளை எழுப்பி அவளிடம் கொடுத்திருந்தேன். எப்படி அவளை சமாதானம் செய்யவெனப் புரியாது சமையலறையில் நடந்த போது தான் பாலைக் கண்டேன். அவளுக்கு இரவு நேரத்தில் பசிக்கும் என்று அம்மா முன்பு கூறியிருந்தது நினைவிற்கு வர, அவளுக்காக நானே பால் ஆற்றிக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தவனாய் அவளிடம் கொடுத்தேன். நிச்சயமாக எனது செய்கையின் பொருளை உணர்ந்து சமாதானம் ஆகிவிடுவாள் என்று நம்பினேன். அவ்வாறே அவள் குடித்து விட்டு நிம்மதியாக உறங்கியதை கண்டதும் தான் எனக்கு நிம்மதியானது.

மறுநாள் அவளையும் பிள்ளையையும் கிளப்பிக் கொண்டு கிளம்புவதே போதும் போதும் என்றானது எனக்கு. ஒரு பிள்ளையை வளர்ப்பது என்பது எத்தனை பெரிய பொறுப்பு! அப்பொறுப்பில் கூட பங்கெடுக்க முடியாமல் அனைத்திலும் சக்தியை தனித்து விட்டு கஷ்டப்படுத்துகிறேனோ என்று சிந்தித்தவாறு தான் அவளுடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்திருந்தேன்.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் நானும் அவளுமாய் எங்களின் காதலைப் பற்றி பேச அவளின் வீட்டை நோக்கி சென்ற பயணம் நினைவிற்கு வந்தது. எங்களைச் சுற்றி நிறைய பிரச்சனைகள் இருந்தன அப்பொழுதும். ஆனால் இருவரின் மனத்திலும் நிரம்பியிருந்த காதல் அந்தப் பிரச்சனைகளை எல்லாம் பொருட்டாகவே மதியாது மகிழ்வாக அதையெல்லாம் கடக்கச் செய்திருந்தது. அச்சமயம் எங்களின் நெஞ்சம் முழுவதும் நிரம்பியிருந்த காதல் எங்களை அப்பயணத்தை ரசிக்கச் செய்திருந்தது. ஆனால் இப்பொழுது? இப்பொழுது எங்களுக்குள் அந்தக் காதல் இல்லையா? கேள்வி எழவும் திரும்பி அவளை நான் பார்க்க, பேருந்தின் ஜன்னலை பார்த்தவாறு முகத்தை திருப்பியிருந்தாள் அவள்‌.

எங்களின் காதலுக்காக சம்பாதிக்கிறோம், வாழ்வில் வெற்றிப் பெற்று காண்பிக்கிறோம் என்று கூறி ஓடியோடி உழைத்து இப்பொழுது அந்தக் காதலையே தொலைத்து விட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ? எண்ணும் போதே நெஞ்சம் கனத்துப் போனது எனக்கு.

சக்தியின் விட்டுக் கொடுத்தலிலும் அக்கறையிலும் காதல் தெரியவில்லையா உனக்கு என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது. ஆனால் அந்தக் காதலை பகிரவிடாது பகிர்ந்து கொள்ளாது ஏதேதோ காரணம் சொல்லித் தொலைத்துக் கொண்டிருப்பது நான் தான் என்று குற்றம் சாட்டியது மனசாட்சி.

இதுவரையான எனது நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்தவனாய் இனி நான் என்ன செய்ய வேண்டுமென எப்படி இருக்க வேண்டுமென முடிவெடுத்தவனாய் தான் திருப்பூரில் இறங்கியிருந்தேன்.

சக்தியின் வீட்டை நெருங்க நெருங்க அவள் பதட்டமாய் உணர்கிறாள் என்று புரிந்தது. அவளைத் தோளோடு அணைத்து நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை அளித்தேன். அவளின் அம்மா என்னை முகப்பறையில் அமர சொன்னதும் ஒருவிதத்தில் நல்லது தான் என்று தோன்றியது. அவளின் அப்பா எனக்கு முன் சக்தியைப் பார்த்து இயல்பான பிறகு என்னைப் பார்ப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சக்தியின் அப்பா அறையினுள்ளே பேசியது நன்றாகவே கேட்டது எனக்கு. எதிர்பார்த்தது தான். என்னை மதிக்க மாட்டார் என்று யூகித்திருந்தேன். எங்களை ஏற்றுக்கொள்ளாது சண்டையிடுவார் என்று அனுமானித்திருந்தேன். ஆனால் வசந்தனைக் கண்டு அடங்கி போவார்கள் என்று நம்பினேன். அவருக்கு பேரன் பிறந்திருப்பதையே தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்த படி பேசிவிட்டார். அங்கிருந்து சென்று விடலாமா என்று கூட தோன்றியது எனக்கு. சக்திக்காக பொறுத்திருந்தேன்.

ஆனால் நான் எதிர்பாராதது சக்தி எனக்காகப் பேசியது தான்.

“புருஷன் பொண்டாட்டி மாதிரி எங்களுக்குள்ளயும் சண்டையும் பிரச்சனைகளும் இருக்கு தான்! ஆனா என்னிக்குமே பிரிஞ்சிடனும்னு இரண்டு பேருமே நினைச்சதில்லை! ஏன்னா நாங்க பிரிஞ்சி வாழுற வாழ்க்கை தான்ப்பா எங்களுக்கு நரகம்”

எத்தனை நம்பிக்கையாக அவளை நான் பிரிய நினைத்ததே இல்லை என்று உரைக்கிறாள். ஆனால் நான் சம்பாத்தியத்திற்காக அவளை பிரிந்து, அவளே அழைத்தும் கூட போகாது தவிக்க விட்டு தானே கன்னியாகுமரியில் இருந்தேன். என்னை விட்டு பிரிந்து வாழும் நரகமான வாழ்வை தானே அவளுக்கு இது வரை அளித்திருக்கிறேன். அப்பொழுது முடிவெடுத்தேன் எத்தனை கோடி பணம் வந்தாலும் இனி ஆயுளுக்கும் அவளைத் தனித்திருக்க விட்டுடக் கூடாது என்று சபதமெடுத்துக் கொண்டேன்.

நிரம்பவே மனம் நொந்து போயிருந்தாள் சக்தி. அவளைத் தேற்றும் பொருட்டு நாங்கள் முன்பு சந்தித்திருந்த அக்கோவிலுக்கே அவளை அழைத்துச் சென்றேன்.

மதிய வேளை என்பதால் கோயிலில் ஆட்களின் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.

கோவிலின் உள்ளே கருவறையின் சுற்றுப் பிரகாரத்தில் குழந்தையை நிழலில் படுக்க வைத்து விட்டு, குழந்தை எனது பார்வையில் படும்படி இருந்த சிமெண்ட் மேஜையில் சக்தியுடன் அமர்ந்து கொண்டேன்.

“சாரி சக்தி”

என்னுடைய மன்னிப்பிற்கு புரியாத பார்வைப் பார்த்து வைத்தாள் சக்தி.

“உங்கப்பா சொன்ன மாதிரி நான் உன்னைக் கஷ்டப்படுத்திட்டு தானே இருக்கேன்” என்றேன்.

“ஆமா இப்பவாவது புரிஞ்சா சந்தோஷம் தான்” என்றவளாய் கடுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“என்ன சக்தி! இப்படிச் சொல்ற?” அவள் ஆமாம் எனக் கூறுவாளென நான் எதிர்பார்க்கவே இல்லை.

“வேற எப்படிடா சொல்ல சொல்ற? எங்கப்பாகிட்ட போய், ‘ஆமா நீங்க சொல்றது சரி தான்ப்பா, என் புருஷன் என்னை ஒதுக்கி வச்சி கஷ்டப்படுத்திட்டு தான் இருக்கான்னா சொல்ல முடியும்!” அத்தனை கடுப்பும் ஆதங்கமும் அவள் குரலில்.

“சாரி சக்தி! சத்தியமா இனி உன்னை விட்டு ஒதுங்கி இருக்க மாட்டேன். கோடி ரூபா சம்பாத்தியம் வரும்னு சொன்னாலும் உன்னை தனியா விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்” அவளின் கைகளைப் பற்றியவாறு நான் கூற, கைகளைத் தட்டி விட்டவளாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளின் தாடையைப் பிடித்து என்னைப் பார்க்க வைத்தவனாய், “சத்தியமா சக்தி! இங்கே இருக்க சாமி மேல சத்தியம்” என்றேன்.

“எனக்கு நீயும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்னு எங்கேயாவது போய்டலாம் போல இருக்கு விஷ்வா” அவளின் குரல் தழுதழுத்தது‌.

அவளின் அருகே சென்று நின்றவனாய், தலையை வருடி, “சாரிடா லட்டுக்குட்டி” என்றவாறு அவளின் தலையை எனது வயிற்றோடு அழுத்திக் கொடுக்க, எனது இடையைக் கட்டிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“போதும்ப்பா அழுதது” அவளின் முகத்தை நிமிர்த்தி கண்களைத் துடைத்து விட்டேன்.

அழுகையின் விசும்பலுடன், “எவ்ளோ ஏங்கி போனேன் தெரியுமா! இப்படி பாசமா பரிவா ஒரு வார்த்தை உன் வாய்லருந்து வராதானு எவ்ளோ நாள் அழுதிருக்கேன் தெரியுமா! இனி இப்படிலாம் என்னிக்கும் தள்ளி இருந்துடாதடா! மனசு வலிச்சு வலிச்சு மரத்து போச்சு விஷ்வா!” என்றவளாய் கூறியவளின் வார்த்தையிலும் அழுகையிலும் எனது கண்களில் கண்ணீர் தேங்கியது.

“இல்லடா லட்டுக்குட்டி! சத்தியமா உன்னையும் குழந்தையும் விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். என் ஆயுளுக்கும் உங்க கூட தான் இருப்பேன். இது இங்க இருக்க சாமி மேல சத்தியம்!” அவளின் உள்ளங்கையில் சத்தியம் செய்திருந்தேன் நான்.

“அப்பா இனி நம்மளை எப்பவுமே ஏத்துக்கவே மாட்டாங்களா?” ஏக்கம் நிரம்பிய பார்வையுடன் என்னைக் கேட்டிருந்தாள் அவள்.

“ஏத்துப்பாங்க சக்தி! என்னைப் பத்தி யோசிக்காம அடிக்கடி நீயும் பையனும் உங்கப்பாவை வந்து பார்த்து தங்கியிருந்துட்டு வாங்க. கொஞ்சம் கொஞ்சமா பேரன் மேல இருக்க பாசத்துல ஏத்துப்பாங்க” என்றேன்.

“அதெல்லாம் முடியாது. உன்னை ஏதாவது பேசினா என்னால அங்கே இருக்க முடியாதுடா” என்றாள்.

“இல்ல சக்தி! அவங்களுக்கு நீ ஒரே பொண்ணு. அவங்களோட வயசான காலத்துல நீயும் நானும் தானே அவங்களுக்கு உதவியா இருக்கனும். அவங்களுக்காக நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்து போவோம்” என்றேன்.

“ஹ்ம்ம் சரி இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வரலாம். வரதுக்கு முன்னாடி அம்மாக்கு போன் செஞ்சிட்டு வரலாம். அம்மா நமக்கு சப்போர்ட்டிவ்வா தானே இருக்காங்க. அவங்களை வச்சி அப்பாவை சமாதானம் செய்வோம். அதுக்கும் மேல நம்ம பையனைப் பார்த்தா சமாதானம் ஆகிடுவாங்கனு தான் நினைக்கிறேன்” என்றாள்.

இருவரும் மனம் விட்டுப் பேசிய பிறகு தெளிந்திருந்தோம்.

வசந்தன் முழித்து அழவும், சக்தி அவனுக்கு பசியாற்றினாள். அதன் பின்பு அங்கிருந்து கிளம்பலாம் என்று நினைத்த போது சக்தியின் தாய் வந்து சக்தியைச் சமாதானம் செய்து பேசினார். அந்த ஆட்டோக்காரரிடம் எங்களை எங்கே இறக்கி விட்டார் என்று கேட்டறிந்து கொண்டு வந்ததாக உரைத்தார்.

தாயைக் கண்டதும் மேலும் நிம்மதி அடைந்தவளாய் சற்று சாந்தமானாள் சக்தி.

அன்றிரவு நெடுநாள்களுக்கு பிறகு விஷ்வசக்தியாய் உருகிக் கரைந்திருந்தோம். அடுத்து வந்த நாள்களில் எல்லாம் ஊனாய் உயிராய் ஒன்றுக்குள் ஒன்றாய் நாங்கள் கலந்திருக்க, அதன் பலனாய் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் கருவுற்றிருந்தாள் சக்தி.

மகள் கருவுற்ற செய்தி அறிந்து, அவளின் வயிறு வளர வளர, கொஞ்சம் கொஞ்சமாக தனது கோபத்தை தளர்த்த தொடங்கினார் சக்தியின் அப்பா. எங்களை ஏற்றுக் கொள்ள பழகினார்.

மீண்டும் நான் தொடங்கிய தொழிலில் நல்ல முன்னேற்றம் அடையவும், கொஞ்சம் கொஞ்சமாக கடன்களை கொடுக்கத் தொடங்கி இருந்தோம்.

முதல் குழந்தை கருவுற்ற போது சக்தியும் நானும் தவறவிட்ட தருணங்களை இப்பொழுது ஒன்றாக இணைந்து தவறாது செயல்படுத்தினோம்.

மாதாந்திர செக்அப், ஸ்கேன் முதல் குழந்தையின் அசைவு வரை அவளுடன் இருந்து மகிழ்வுடன் அந்நாள்களை ரசித்து மனப்பெட்டகத்தில் சேமித்துக் கொண்டோம்.

மேலும் தொழில் வளர்ச்சி அடைந்து, நிறைய லாபத்தை அள்ளித்தர, எங்களது இரண்டாம் குழந்தையாக சக்தியின் வடிவமாக பெண் குழந்தை பிறந்த அந்த மாதத்தில் எங்களது கடன் மொத்ததையும் அடைத்திருந்தோம்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

வளர்ப்பிறையாய் வளரத் தொடங்கியிருந்தது எங்கள் வாழ்க்கை‌.

6 thoughts on “எனை நீங்காதிரு 22 & 23 (Final Episode)”

 1. Avatar

  துன்பம் வரும்பொழுது மலைப்போல வந்தாலும், போகும்பொழுது பனிப்போல்
  விலகிடுச்சே. சூப்பர்ப் கதை..!

  1. Dina Nila

   ஆமாம் வாழ்க்கையில் எதிர்பார்க்காதது தானே நடக்கும். மிக்க நன்றி சிஸ் ❤️

 2. Avatar

  Inba thunbam irandilum onraga payanithu vazhum vazhvin payanathil ini iruvarm kudumbathinarudan vaazha nal vazhthukkal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *