Skip to content
Home » எனை நீங்காதிரு 5

எனை நீங்காதிரு 5


அவனது தந்தையின் இறப்புச் செய்தியைக் கேட்டு அனுப்பிய குறுஞ்செய்திக்கு அவனது பதிலை எதிர்பார்த்து ஏமாந்து போயிருந்தது நெஞ்சம்.

அது வரை மெசெஞ்ஜரை சுத்தமாய்க் கண்டுகொள்ளாது இருந்த நான், அதன் நோட்டிபிகேஷனை உயிர்ப்பித்து அன்றாடம் ஏதேனும் பதில் வந்திருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினேன்.

இது எனக்கு நானே சூனியம் வைத்துக் கொண்ட கதை தான். ஒரு மாதம் அவனிடம் பேசாது இருந்தவள் அப்படியே அச்செய்தியையும் கடந்து போயிருக்கலாம். ஆனால் நான் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, இன்னும் பதில் அனுப்பவில்லையே என்ன நிலையில் இருக்கிறானோ என்று கவலைப்பட்டுக் கொண்டு மேலும் எனது மனத்தில் அவன் மீதான எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நன்றாகவே இடியுரைத்தது எனது மனசாட்சி.

ஆயினும் நன்றி என்ற ஒரு வார்த்தையாவது அவனிடம் இருந்து வந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தவளாய் அவனது குறுஞ்செய்திக்காகக் காத்திருந்தேன். நித்யாவிடம் அவனைப் பற்றி மேலும் கேட்க தைரியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு மாதமான நிலையில் இனி அவனிடம் இருந்து பதிலேதும் வராது என்று திண்ணமாய் நம்பிக் கொண்டிருந்த வேளையில், இரவு பத்து மணியளவில் என்னிடம் பேச வேண்டுமென அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்ததும், ஏனோ தாயின் மடி தேடி அலையும் கன்றாய் அவன் தவித்திருக்கிறான் என்று என் மனம் பரிதவிக்க, “எப்ப வேணும்னாலும் பேசலாம். ஐம் தேர் ஃபார் யூ ஆல்வேஸ் (நான் எப்பவும் இருக்கிறேன் உனக்காக)” என்று பைத்தியக்காரியைப் போல் அனுப்பி வைத்திருந்தேன்.

அனுப்பி விட்டு அழிக்க முற்படுவதற்குள், அதனைப் பார்த்து விட்டிருந்தான் அவன்.

“உன் ஃபோன் நம்பர்?” என்று அவன் கேட்க, உடனே அனுப்பியிருந்தேன்.


ஐம் தேர் ஃபார் யூ ஆல்வேஸ்!

நிராதரவாய் நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்கின்ற எனக்கு அவளின் இவ்வாரத்தைகள் எனது வலிக்கு மயிலிறகு வருடலாய் உணரச் செய்ய, கண்களில் பொங்கிய நீருடன் அவளின் கைப்பேசி எண்ணை கேட்டிருந்தேன்.

அவள் கைப்பேசி எண்ணை அளித்த நொடி அவளை அழைத்திருந்தேன் நான்.

படபடவென அடித்துக் கொண்ட இதயத்துடிப்புடன் அவள் இணைப்பை ஏற்கக் காத்திருந்தேன்.

இணைப்பையேற்று ஹலோ என அவள் கூறிய மறுநொடி, “சக்தி” என்றேன்.

“சொல்லுங்க விஷ்வா! ஆர் யூ ஓகே நௌ? வீட்டுல அம்மா எப்படி இருக்காங்க?” எனக் கேட்டாள்‌.

கண்களைக் கட்டிய நீரை உள்ளிழுத்துச் செருமியவனாய், “ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ஏதோ இருக்கேன் சக்தி” என்னையும் மீறி குரல் உடைந்து தழுதழுத்தது.

“அப்பா உங்க கூடவே இருப்பாரு விஷ்வா”

அவளின் ஆறுதல் மொழி என்னை உடைய செய்ய,

“இல்ல! அப்பா…” என ஏதோ கூற வந்தவனின் தொண்டை அடைத்துக் கண்களில் கண்ணீர் பெருக அழுதிருந்தேன்.

சற்று நேரத்திற்கு என்னுடைய விம்மல் ஒலியே கைப்பேசியை நிறைத்திருக்க, “ப்ளீஸ் காம் டவுன் விஷ்வா! நீங்க இப்படி அழுதா உங்கப்பா ஃபீல் செய்வாரு தானே. அழாதீங்க” சற்று கரகரத்த குரலில் அவள் கூறியவை எதுவும் என்னைத் தீண்டவில்லை.

“ஏன் எனக்கு இந்த நிலைமை சக்தி! எனக்கான வாழ்க்கைனு ஒன்னை நான் வாழவே முடியாதா?” அழுதவாறு புலம்பியிருந்தேன்.

“இதுவும் கடந்து போகும் விஷ்வா” என்றாள்.

மூக்கை உறிஞ்சியவாறு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு என்னைச் சமன்படுத்தியவனாய், “சாரி” என்றேன்.

“எதுக்குச் சாரி! உங்க இயல்போட என்கிட்ட இருங்க விஷ்வா. இப்படி எல்லார்கிட்டயும் எல்லாராலயும் அழுதிட முடியாது விஷ்வா. உங்க வாழ்க்கைல அப்படி ஒரு இடத்தை எனக்குக் கொடுத்திருக்கீங்கனு சந்தோஷப்படுறதை விட இப்படிக் கஷ்டப்படுறீங்களேனு எனக்கு வருத்தமாகத் தான் இருக்கு” என்றாள் அவள்.

எனக்காக என் வலியைக் கண்டு மனங்கலங்குகிறாள் என் மனங்கவர்ந்தவள்.
நிஜமாவே மனப்பாரம் நீங்கி லேசாய் உணர்ந்தேன்.

“பிராஜ்க்ட்ல ரிலீஸ் செஞ்சிட்டாங்க சக்தி! ஒரு மாசத்துல பிராஜக்ட் கிடைக்கலைனா வேலையை விட்டு தூக்கிடுவாங்கனு ஹெச் ஆர் சொல்றாங்க. வீட்டுல வேற எக்கச்சக்க கடன் சக்தி! எல்லாமே சேர்ந்து என்ன செய்யப் போறேன்னு யோசிச்சாலே மண்டை வலிக்குது. எங்கேயாவது ஓடிப் போய்டலாமானு இருக்கு”

“பிரச்சனையைக் கண்டு ஓடனும்னு நினைச்சா ஓடிட்டே தான் இருக்கனும் விஷ்வா. எதையும் பார்த்துக்கலாம். கண்டிப்பாக நல்லது நடக்கும்னு நம்புங்க. பிராஜக்ட் தானே இல்லை. ஒரு மாசம் டைம் இருக்கே. அதுக்குள்ள வர்ற ஆப்பர்சூனிட்டிலாம் மிஸ் செய்யாம அட்டெண்ட் செய்யுங்க. முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை விஷ்வா”

நிஜமாவே அவளின் வார்த்தைகள் ஒருவிதமான ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்தது எனக்கு.

“தேங்க்ஸ் சக்தி” என்றேன் நான்.

“இப்பவும் அதே தான் சொல்றேன். ஒரு தோழியாக ஐம் தேர் ஃபார் யூ ஆல்வேஸ். ஆல் த பெஸ்ட்! இந்த ஒரு மாசத்துல சக்தி எனக்குப் பிராஜக்ட் கிடைச்சிருச்சுனு சந்தோஷமா வந்து சொல்வீங்க பாருங்க” சற்று துள்ளலுடன் உற்சாகமூட்டும் குரலில் அவள் உரைக்க,

அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்ளச் சிரித்தவாறே, “நம்புறேன். சக்தியின் வார்த்தை பலிக்கும்னு நம்புறேன். அப்படி நடக்கலைனாலும் அடுத்து என்ன செய்யனு யோசிக்கிறேன்” என்றேன்.

“சூப்பர். இப்படியே பாசிட்டிவிட்டியோட நிம்மதியா தூங்குங்க. குட் நைட்” என்றவளுக்கு நானும் குட் நைட் உரைத்தவாறு படுத்துக் கொண்டேன்.

பேசிய சில நிமிடங்களிலேயே எனது மனத்தடைகளை உடைத்து ஊக்கமூட்டியிருந்த சக்தியின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் பெருகியது எனக்கு.

அடுத்து வந்த நாட்களில் அவளிடம் பேச வேண்டுமென்ற எண்ணம் வரும் பொழுதெல்லாம் பிராஜக்ட் கிடைத்து விட்டது என்கின்ற நற்செய்தியுடன் தான் அவளிடம் பேச வேண்டுமென்று மனத்தோடு சூளுரைத்தவனாய் முன்னகர்ந்து சென்றிருந்தேன்.

கைப்பேசி எண்ணை அனுப்பியதும் அழைப்பான் என்று எதிர்பார்த்தேன் தான் ஆயினும் அழுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

அவனின் விம்மல் ஒலியில் என் கண்களில் நீர் தேங்கியது.

தட்டிக் கொடுத்து ஆறுதல் உரைக்கும் ஒரு தோளைத் தான் தேடுகிறது அவனது மனது என்று புரிந்தது எனக்கு.

அவனுக்கேற்ற ஆறுதலை உரைத்து விட்டுப் படுத்த போது, பார்க்க பெரிய ஆளாக இருந்தும் உள்ளுக்குள் குழந்தை அவன் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

“எனக்கான வாழ்க்கைனு ஒன்னை நான் வாழவே முடியாதா?”

அவனின் இந்த வார்த்தைகள் எனது மனத்தைக் குடைந்தன. தந்தையின் இறப்பை விட வேறொன்று அவனது மனத்தை வருத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

அடுத்து வந்த நாட்களில் என்னை அவன் தொடர்பு கொள்ளவே இல்லை‌. ஒரு பெண்ணின் கைப்பேசி எண் கிடைத்து விட்டால், அதிலும் தோழி என்று உரைத்து விட்டால் எத்தனையாய் கடலைப் போடுவார்கள் இந்த ஆண்கள் என்று கேள்விப்பட்டும், அவ்வாறான ஆண்களைப் பணியிடத்தில் பார்த்தும் இருந்த எனக்கு அவனது இந்தச் செயல் அவன் மீதான நல்லெண்ணத்தைக் கூட்டியது.

இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் அவனது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

இணைப்பை ஏற்றதும், “சொல்லுங்க விஷ்வா” என்றேன்.

“பிராஜக்ட் கிடைச்சிருச்சு சக்தி!” உற்சாகமான குரலில் மிகுந்த மகிழ்வுடன் உரைத்திருந்தான் அவன்.

“சூப்பர் விஷ்வா” அவனது உற்சாகம் எனக்கும் தொற்றிக் கொள்ள, உற்சாகக் குரலில் உரைத்திருந்தேன் நான்.

“அதுவும் எங்கே கிடைச்சிருக்கு தெரியுமா?”

“எங்கே?”

“சிங்கப்பூர்ல! இன்னும் ஒரு வாரத்துல சிங்கப்பூர் போறேன்” என்றான் அவன்.

“ஓ சூப்பர்! ஆன்சைட் பிராஜக்ட்டா செம்ம! சோ ஹேப்பி ஃபார் யூ விஷ்வா” மிகுந்த மகிழ்வுடன் உரைத்திருந்தேன் நான்.

“நீங்க அன்னிக்கு பேசினதுல கிடைச்ச பூஸ்ட்ல செஞ்ச பிரிப்பரேஷன் தான் இந்தப் பிராஜக்ட் கிடைக்கவே காரணம் சக்தி! உங்களுக்கு எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது”

“அப்படிலாம் இல்லை! உங்க முயற்சிக்கு கிடைச்ச பலன் அது”

“நான் உங்களுக்கு ட்ரீட் தரனும்னு நினைக்கிறேன். நான் சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி நாம மீட் பண்ணலாமா?” எனக் கேட்டான்.

“நான் இந்த வீக்கெண்ட் ஊருக்கு போறேனே! முடியாதே” என்றேன்.

“அப்ப வீக் டேல ஆபிஸ் முடிஞ்சதும் டின்னர் பிளான் செய்யலாமே” எனக் கேட்டான்.

“சரி வெள்ளிக்கிழமை நைட் கோயம்பேடு வர்றீங்களா? அப்படியே பேசிட்டு ஒன்னா சாப்பிட்டுட்டுப் பஸ் ஏற சரியா இருக்கும்” என்றேன்.

சரி எனக் கூறி இணைப்பைத் துண்டித்தான்.

மனத்திற்குள் ஒரு மாதிரி பூரிப்பாய் உணர்ந்தேன்.

இப்பொழுதே மனம் அவனைக் காணச் செல்லும் அன்று என்ன உடை உடுத்த வேண்டுமெனச் சிந்திக்கத் தொடங்கியது. அந்த நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன் நான்.


வெள்ளிக் கிழமை காலையிலிருந்தே மாலை அவளைக் காணும் நேரத்திற்காக மணித்துளிக்களைக் கணக்கிடத் தொடங்கினேன்.

நேரமே செல்லாது தேங்கி நிற்பது போன்ற மாயத் தோற்றத்தை உணர்ந்தேன்.

போகாத நேரத்தை நெட்டித் தள்ளி போக வைக்க முற்பட்டேன்.

என்னிடம் இருந்த உடுப்புகளிலேயே சற்று நல்ல ஆடையைத் தேர்ந்தெடுந்து உடுத்தினேன்.

தலை முடிக்கு ஜெல் தடவி, முகத்திற்கு லேசாய் சந்தனத்தைப் பவுடர் போல் பூசி, நெற்றியில் கீற்றாய் சந்தனத்தை வைத்து விட்டு, என்றைக்கும் அடிக்காத அந்த வாசனை திரவியங்களை எல்லாம் தேடி எடுத்து பூசிக் கொண்டு அவள் கூறியிருந்த அந்த உணவகத்தை நோக்கி நண்பனது வண்டியை ஓட்டிச் சென்றேன்.

வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் பூரிப்பு நிலை எனக்கு! அதீத மகிழ்வின் பொலிவு முகத்தில் மிளிர அந்த இடத்தை அடைந்தேன்.

அவள் வர சொன்னதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்தை அடைந்திருந்தேன்.

அவள் வந்ததும் உள்ளே செல்லலாமென வண்டியை நிறுத்தி விட்டு அதிலேயே அமர்ந்தவனாய்க் காத்திருந்தேன்.

7 thoughts on “எனை நீங்காதிரு 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *