Skip to content
Home » எனை நீங்காதிரு 6

எனை நீங்காதிரு 6

எனக்கு முன்பாகவே வந்திருந்து அவன் காத்திருந்ததைப் பார்த்ததும் குற்றவுணர்வாகிப் போனது எனக்கு. பேசி வைத்திருந்த நேரத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தாமதமாகத் தான் வந்திருந்தேன் நான்.

உணவகத்தின் வாசலில் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு வேடிக்கைப் பாத்திருந்தவனை நோக்கி நான் கை அசைக்க, என்னைப் பார்த்ததும் சட்டெனப் பைக்கிலிருந்து இறங்கி எழுந்து நின்றவனாய் கை அசைத்தான்.

“சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றவாறு தான் அவனை நோக்கிச் சென்றேன்.

பரவாயில்லை என்றவன் நான் ஊருக்கு எடுத்து செல்வதற்காகக் கைகளில் எடுத்து வந்திருந்த பெரிய பையைப் பார்த்து, “என்ன இவ்ளோ பெரிய மூட்டை! துணியைத் துவைக்க எடுத்துட்டு போறீங்களா?” இயல்பாய் எனது கையில் இருந்து அவனது கையில் வாங்கிக் கொண்டவாறு உணவகத்தை நோக்கி நடந்தான்.

எனது பாரத்தை இயல்பாய் அவன் வாங்கிக் கொண்டு நடந்தது என்னைக் கவர்ந்தது.

இருவரும் மென்னகையுடன் பேசியவாறு நடந்து சென்று, எதிரெதிரே இருவர் அமரும் வகையில் அமைக்கப்பெற்ற மேஜையில் சென்று அமர்ந்து கொண்டோம்.

“அப்புறம்? என்ன சாப்பிடலாம்? நீங்க வெஜ் ஆர் நான் வெஜ்” எனக் கேட்டவனைப் பார்த்து, “நான் வெஜ் தான். ஆனால் எது வாங்கினாலும் முழுசா என்னால சாப்பிட முடியாது. நீங்க ஷேர் பண்ணிப்பீங்க தானே” என்றவளாய் எனக்குப் பிடித்ததெல்லாம் ஆர்டர் செய்தேன்.

சில நிமிடங்கள் அவனது நேர்காணலைப் பற்றியும் பணி நியமனக் கடிதம் பற்றியும் பேசிக் கொண்டிருந்த நாங்கள் உணவு வந்தததும் உண்ணத் தொடங்கினோம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே! ஷேர் செய்யனும்னு தோணுச்சுனா சொல்லுங்க” என நான் பீடிகையுடன் ஆரம்பிக்க,

“கேளுங்க! ஏன் இவ்ளோ தயக்கம்” என்றவனாய் எனது தட்டில் வைத்திருந்த சப்பாத்திக்கு சிக்கன் கிரேவியைப் பரிமாறி விட்டு அவனது தட்டினில் வைத்துக் கொண்டான்.

மனத்திற்கு மிகவும் பிடித்தமானவர்களின் அசைவுகளைக் கூட மனம் ரசிக்கும் தான் ஆயினும் அவர்களின் செயல்களும் ரசிக்கச் செய்தால் மனம் எத்தனையாய் பூரிப்படையும். அப்படித் தான் இவ்வாறான சின்னச் சின்னச் செய்கையினால் என்னை ஈர்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

அவனது செயல்களை உள்வாங்கியவாறே, “எனக்கான வாழ்க்கைனு ஒன்னை நான் வாழவே முடியாதா?” என்று கூறிவிட்டு அவனைப் பார்த்தேன்.

சட்டெனத் தட்டிலிருந்த பார்வையை நிமிர்த்தியவனாய் வியப்பில் விரிந்த விழிகளுடன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.

“என்ன தெரியும்?” புரியாது நான் கேட்க,

“இல்ல இது நான் தினமும் என் மனசுக்குள்ள நினைச்சி ஏங்கிட்டு இருக்க வார்த்தைகள். இதெப்படி உங்களுக்குத் தெரியும்?” எனக் கேட்டான்.

“அன்னிக்கு என்கிட்ட ஃபோன்ல பேசும் போது சொன்னீங்க விஷ்வா! மறந்துட்டீங்களா?” என்றேன்.

“ஓ இந்தளவுக்கா புலம்பி வச்சேன் அன்னிக்கு?” என்றவனாய் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

மெல்ல சிரித்தவளாய், “ஓ அன்னிக்கு பேசினதே மறந்தாச்சா? ஒரு வேளை டிரிங் பண்ணிட்டு பேசுனீங்களா என்ன?” என விளையாட்டாக நான் கேட்க,

“அய்யோ இல்லங்க. டிரிங்கிங் பழக்கம்லாம் எனக்கு இல்லை” என்றான்.

நம்பாத பார்வை நான் பார்த்து வைக்க,

“சத்தியமாங்க” என்று அவனது தலையில் கை வைத்தான்.

“அச்சோ இதுக்கு ஏன் உங்க மேலயே சத்தியம் செய்றீங்க?” என்று பதறியவளாய் கையை எடுத்து விட்டேன்.

“எங்க அப்பா இறந்ததுக்கு அந்தக் குடியும் ஒரு காரணம். நான் இப்படிப் புலம்புறதுக்கும் எங்க அப்பாவோட குடி ஒரு காரணம். அதனால அதெல்லாம் என் வாழ்நாள்ல நான் தொட மாட்டேன் சக்தி” என்றான்.

“சரி நீங்க என்ன கேட்க வந்தீங்க? சொல்லுங்க!” எனக் கேட்டான்.

“இல்ல அந்த வார்த்தைகளைக் கேட்டப்ப இந்த வேலைப் பிரச்சனையைத் தாண்டி உங்க மனசுல வேறே ஏதோ வலி இருக்கோனு தோணுச்சு. அதான் கேட்க வந்தேன்”

“ஆமா இருக்கு சக்தி” என்று பெருமூச்சு விட்டவனாய்,

“என் வயசு என்னனு தெரியுமா சக்தி?” எனக் கேட்டான்.

துளியும் யோசிக்காது உடனே, “இருபத்து எட்டு” என்றுவிட்டு அய்யய்யோ என மனத்திற்குள் அலறியவளாய் உடனே நாக்கை கடித்துக் கொண்டேன்.

கண்கள் மின்ன புருவம் உயர்த்தியவனாய் எனது செய்கைகளைக் குமிழ்ச்சிரிப்புடன் பார்த்தவன், “இவ்ளோ சரியா உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.

‘அய்யோ நினைச்ச மாதிரியே கேட்குறானே! நாம இரண்டு பேரும் லவ் செஞ்சிடுவோம்னு பயந்து என் ஃப்ரண்ட் இதை என்கிட்ட சொன்னாள்னா இவன்கிட்ட சொல்ல முடியும்’ என மனத்தோடு பேசியவளாய்,

“சும்மா கெஸ் செஞ்சேன் விஷ்வா. சரியா சொல்லிட்டேனா?” எனக் கேட்டேன்.

நம்பிட்டேன் என்பது போல் என்னைப் பார்த்தவன், “இந்த வயசுல எனக்கு இருபது லட்சம் கடன் இருக்குனு சொன்னா நம்புவீங்களா?” எனக் கேட்டான்.

“வாட்” என அதிர்ந்தே விட்டேன்.

“சென்னைல சொந்து வீடு எதுவும் லோன்ல வாங்கியிருக்கீங்களா என்ன?” எனக் கேட்டேன்‌ நான்.

“ம்ப்ச் இல்லைங்க. இது நான் காலேஜ் முடிக்கும் போதே எங்கப்பா வச்சிருந்த கடன். அதுக்கு வட்டி கட்டாம, வட்டி குட்டி போட்டு இவ்ளோ வந்து நிக்குது” என்றவன் மேலும் தொடர்ந்தவனாய்,

“எங்களோடது சின்ன கிராமம் சக்தி. மொத்தமே அங்க அம்பது வீடு கிட்ட தான் இருக்கும். அங்க பெரிய பணக்காரங்கனு இரண்டு மூனு குடும்பம் தான் இருக்காங்க. மத்தவங்கலாம் விவசாயம், சின்ன வியாபாரம்னு செஞ்சிட்டு அன்றாடம் வரவு செலவுக்குனு பணம் சம்பாதிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கிறவங்க தான். எல்லாருக்குமே சொந்தமா கொஞ்சம் நிலம் வீடுனு இருக்கும். அந்தப் பணக்கார ஆளுங்ககிட்ட அந்த நிலம் வீட்டை வச்சி தான் பணம் வேணும்னா வட்டிக்கு வாங்குவாங்க. நான் எங்க அப்பா அம்மாக்கு கஷ்டம் கொடுக்க கூடாதுனு கஷ்டப்பட்டு ப்ளஸ் டூல நல்லா படிச்சி ஸ்காலர்ஷிப் வாங்கி கடனே இல்லாம காலேஜ் சேர்ந்தேன். ஆனா எங்கப்பா என்ன செஞ்சாங்க தெரியுமா? அவரோட தங்கச்சி பாசம்னால, அவங்க கேட்குறாங்கனு தங்கச்சி மகனுக்குக் கையெழுத்து போட்டுப் பணம் வாங்கிக் கொடுத்தாங்க. அவன் வெளியூர்ல பிஸ்னஸ் செய்றேன்னு போய்ட்டு நஷ்டமாகி வெளிநாட்டு வேலைக்குப் போய்ட்டான். மூனு வருஷத்துல அடைக்கிறதா சொன்ன கடனும் வட்டியும் குட்டிப்போட்டு எங்க நிலத்தை எடுத்துக்கிட்டாங்க. மீதி பணம் அவங்களுக்குக் கொடுக்கனும். அதுக்கு பிறகும் வட்டியே கட்டலை. அந்த வெளிநாட்டுல இருக்கிற அத்தை பையன் எங்களுக்குப் பணமே அனுப்புறதில்லை. அத்தை தனியாளாக அவனை வளர்த்தாங்க. அங்க அவனும் கஷ்டப்படுறான்னு எங்க அத்தை ஒப்பாரி வைக்க, யாரு இதை அடைக்கிறதுனு சண்டை வந்து அவங்க இறந்து போனது தான் மிச்சம். நான் காலேஜ் படிச்சி முடிச்சி பிஸ்னஸ் செய்யலாம்னு நினைக்கும் போது தான் அவங்க இறந்தாங்க. அதுக்குப் பிறகு நிலம் கை விட்டுப் போனதும் நான் உடனே வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. எங்கே நாங்க பணம் கேட்டுடுவோமோனு அத்தை இறந்ததுக்குக் கூட அவன் வரலை. நீங்களே காரியம்லாம் செஞ்சிடுங்கனு போன் வச்சவன் தான். அடுத்து அவன் நம்பர் ரீச்சபிள் இல்லை. அந்த பணத்தை எப்படி அடைக்கலாம்னு யோசிக்கிறதுக்குள்ள எங்கப்பா அடுத்து அஞ்சு லட்சத்திற்குக் கடன் வாங்கி ஆடு மாடு வாங்கிப் போட, அடுத்த ஒரு வருஷத்துல ஏதோ நோய் பரவி அதுகலாம் செத்து போச்சு. இப்ப ஒரு மாடு தான் மிச்சமா இருக்கு. ஏற்கனவே குடிக்கிற அப்பா, இந்த பிரச்சனைலாம் சமாளிக்க முடியாம அதிகமா குடிக்க ஆரம்பிச்சி உடம்பு முடியாம இறந்தே போய்ட்டாங்க” கண்களில் வலியும் வேதனையுமாக கூறியவன் பெருமூச்சு விட்டவனாய் தன்னை சமன் செய்து கொண்டான்.

“சொல்லு சக்தி, இதுல என் தப்பு என்ன இருக்கு? ஆனா இந்தக் கடன்லாம் இப்ப நான் தான் அடைக்கனும்னு கடன் கொடுத்தவங்கலாம் அப்பாவை அடக்கம் செஞ்ச மறுநாள் என்கிட்ட வந்து சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க. எங்கே நான் அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்துடுவேனோ அவங்க கடன்லாம் அடைக்காம போய்டுவேனோனு பயந்து அப்பாவோட கடனுக்கு மகன் தான் பொறுப்புனு எழுதி மறுநாளே என்கிட்ட சண்டை போட்டு கையெழுத்து வாங்கிட்டு போய்ட்டாங்க. இப்ப நான் இருபது லட்சத்திற்கு கடன்காரன். இனி என்னோட சம்பாத்தியம் முழுக்க இதுலயே போய்டும் அப்புறம் எனக்கான வாழ்க்கைனு என்ன இருக்கு சக்தி”

“எங்க ஊருல குடிசையா இருந்தாலும் எனக்குனு ஒரு சொந்த வீடு எனக்குப் பிடிச்ச தொழில் செஞ்சிட்டு பொண்டாட்டி பிள்ளைங்களோட வாழனும்னு தான் எனக்கு ஆசை சக்தி! வேற வழியே இல்லாம தான் கிடைச்ச ஐடி வேலைக்குப் போனேன். இப்ப ஆயுசுக்கும் இந்த ஐடி வேலையை விட்டு போகவே முடியாதோனு இதுவும் கூடச் சேர்ந்து மனசு எப்பவும் பாரமாவே இருக்கு சக்தி! அந்த விரக்தில தான் எனக்கான வாழ்க்கைனு ஒன்னை நான் வாழவே முடியாதானு சொன்னேன்” என்று நிறுத்தினான்.

என்னுடைய வாழ்க்கை முறையை நினைத்துப் பார்த்தேன்.

திருப்பூரில் சொந்த ஆடை ஃபேக்டரி வைத்துப் பாரம்பரியாகத் தொழில் புரியும் தந்தை! தாயும் செல்வ செழிப்புடன் பிறந்து வளர்ந்தவர் தான். தானும் அதே போன்று இன்று வரை செல்வ செழிப்புடன் தானே வாழ்ந்து வருகிறோம். பணம் இல்லை என்ற சொல்லை காதில் கேட்டதே இல்லையே இது வரை.

தனது வாழ்வின் நிலையிலிருந்து முற்றிலும் வேறான வலியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவன் என்று புரிந்தது எனக்கு.

“இப்ப தான் சிங்கப்பூர் போறீங்களே! இதெல்லாம் சீக்கிரம் அடைச்சிடலாம்” நம்பிக்கையாய் நான் உரைக்க,

“எங்க சக்தி! வெளில எல்லாருக்கும் ஐடில வேலைனா என்னமோ நாம மாசத்துக்கு லட்ச கணக்குல சம்பளம் வாங்குறோம்னு நினைப்பு! ஆனா மாசம் முப்பதாயிரம் எட்டவே அஞ்சு வருஷம் ஆகும்னு வெளில யாருக்குமே புரியுறது இல்லை. இப்ப சிங்கப்பூர் வேலைக்குப் போனாலும் ஒரு வருஷம் தான் அந்தப் பிராஜ்கட் கொடுத்திருக்காங்க. அதுக்குள்ள மாசாமாசம் வட்டியோட கொஞ்சம் முதலும் சேர்த்து கட்டினா ஒரு மூனு லட்சம் வரைக்கும் தான் அடைக்க முடியும் சக்தி. ஆயுசுக்கும் அந்த வட்டிக்காரனுக்கு இப்படிப் பணத்தைக் கட்டிட்டு இருக்கிறதுக்குப் பதிலா சொந்தமா பிஸ்ன்ஸ் செஞ்சி பெரிய லாபம் வந்துட்டா மொத்தமா அடைச்சிடலாமேனு இருக்கு. அதுக்கும் நான் தனியா சேர்த்து வைக்கனும்ல. சிங்கப்பூர்ல இருந்து வரும் போது பிஸ்னஸ்க்குக் கொஞ்சமா பணம் சேர்த்து வச்சிட்டு வந்து பிஸ்னஸ் ஸ்டார்ட் செய்யனும்னு தான் பிளான்ல இருக்கேன் சக்தி” என்றான்.

“சரி விடுங்க. கஷ்டப்படாம கிடைக்கிறது நிலைச்சி நிக்காதுனு சொல்லுவாங்களே. அதுக்காகத் தான் இந்தக் கஷ்டம்னு நினைச்சிக்கோங்க” என்றேன்.

இருவரும் அடுத்து அவரவர் குடும்பத்தினர் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, “ஆமா உங்க கல்யாணம் எப்ப சக்தி? நித்யா சொன்னாங்களே உங்களுக்கு நிச்சயம் ஆகிடுச்சுனு” எனக் கேட்டான்.

“இல்லை! அந்தச் சம்பந்தம் செட் ஆகலை” என்று மட்டும் கூறினேன்.

“ஓ சாரிங்க” என்றவனின் கண்களில் சட்டென ஓர் ஒளி வந்து மின்னி மறைந்ததோ? இல்லை எனக்கு தான் அப்படி தோன்றியதோ என்று எனக்கு தெரியவில்லை.

உணவிற்கான கட்டண இரசீது வர, அவன் தனது பர்சை திறக்கும் முன், எனது கார்டை அதில் வைத்து கார்ட் பேமெண்ட் எனக் கூறி வெயிட்டரிடம் கொடுத்து விட்டேன்.

பதறியவனாய், “நீங்க ஏன் கொடுக்கிறீங்க சக்தி? இது என்னோட ட்ரீட் தானே” எனக் கேட்டான்.

“இல்லை!” என நான் ஏதோ வரும் முன்,

“என்னோட கதையைக் கேட்டுட்டு சாப்பாடு வாங்கித் தர கூடக் காசில்லாதவன்னு நினைச்சிட்டீங்களா?” சாந்தமான முகத்துடன் கேட்டிருந்தாலும் அவன் குரலில் இருந்த கடுமையில், இது அவனது தன்மானத்தைச் சீண்டுகிறது என்று புரிந்தவளாய், “அய்யோ அப்படி இல்லை” என்றேன்.

நான் உணவிற்குக் கட்டிய பணத்திற்கு எனக்கு உடனே கூகுள் பேவில் பணம் அனுப்பியிருந்தான் அவன்.

“ஹப்ப்பாஆஆ உடனே அனுப்பனுமா.. அப்புறமா அனுப்பினா தான் என்ன?” நானும் சற்று அழுத்தமாகவே கேட்க,

“இல்லை சக்தி! எந்தவிதமான உறவுக்கிடையில பணம் வந்தாலும் அது அந்த உறவை குலைச்சிடும். எனக்கு உங்க நட்பு ஆயுசுக்கும் தொடரனும்” என்றான்.

கண்களில் கனிவுடன் அவனை நான் பார்த்திருக்க, “வாங்க போகலாம்! பஸ்ஸூக்கு நேரமாகிடுச்சுல” என்றவனாய் எனது பையைத் தூக்கிக் கொண்டான்.

என்னுடன் பேசியவாறே பேருந்து நிறுத்தம் வரை வந்து எனது இருக்கையில் என்னை அமர வைத்தவன், எனக்கு முன்னே பின்னே அமர்ந்திருப்பவர்களை நோட்டம் விட்டு எனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டவனாய், “பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. போனதும் எனக்கு மெசேஜ் செய்யுங்க. சப்போஸ் இடையில எதாவது பிரச்சனை வந்தாலும் உடனே மெசேஜ் செய்யுங்க” என்று கூறியவனாய் பேருந்து கிளம்பும் வரை உடன் இருந்து பேருந்து கிள்மபியதும் கை அசைத்து விடைப்பெற்றான்.

அவனுடனான இந்த நிமிடங்கள் நீளாதா என மனம் ஏங்கியது.

அடுத்த ஒரு வாரத்தில் அவன் சிங்கப்பூர்க்குப் பயணப்பட, தூரதேசத்தில் இருப்பவனுக்குத் தனிமை வெறுமை அளித்துவிடக் கூடாதே என அன்றாடம் பேசத் தொடங்கினேன் நான். அவனுக்கும் எனக்குமான நட்பின் நெருக்கம் காதலாய் உருமாறத் தொடங்கியிருந்த நாள்கள் அவை.

5 thoughts on “எனை நீங்காதிரு 6”

  1. CRVS2797

    கா தலாய் தொடங்கியிருந்த நேரமதுன்னா…. அப்ப இவங்க காதல் ஜெயிக்கலையோ…???

  2. Dina Nila

    இல்ல அதுக்கு முன்னாடி வரைக்கும் அது நட்பாய் இருந்துச்சுனு சொல்ல வந்திருக்கேன் 😀😀😀😀 மிக்க நன்றி சிஸ் ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *