Skip to content
Home » என் உயிரின் ஜனனம் நீயடி 1

என் உயிரின் ஜனனம் நீயடி 1

ஜனனம் 1

பொழுது புலராத அந்த அதிகாலை வேளையில் வியர்க்க விறுவிறுக்க அந்த வீட்டில் உள்ள வேலைகளை செய்ய துவங்கியிருந்தாள் அவள்.ஜனனி அழகிலும் அறிவிலும் குறைவில்லாதவள். காண்போரை மறுமுறை பார்க்க தூண்டும் பேரழகு.

இருப்பத்தி இரண்டு வயது பாவையவள் .இருபது வயதிலேயே திருமணம் முடிந்து கணவனை இழந்த விதவை.ராசி இல்லாதவள் அதிர்ஷ்டம் கெட்டவள் இது தான் அவளின் அடையாளம்.பிறந்ததில் இருந்து இதுவரை ஒரு முறை கூட இன்பத்தை அனுபவிக்காதவள். அழுகை மட்டுமே தன் வாழ்வின் சொந்தம் என்று நினைத்து எதற்காக யாருக்காக வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்பவள்…

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அந்த வீட்டில் உள்ள அனைவர்க்கும் தேவையானதை செய்து கொடுக்கும் சம்பளம் இல்லாத வேலைக்காரி.அது தெரியாதவரின் வீடும் அல்ல. தன் தந்தையின் உடன் பிறந்த தமக்கையின் வீடுதான்.அவளின் தாய் அம்பிகா பிரசவத்தின் போது இவளை பெற்றெடுத்து விட்டு, இறந்துவிட, அவளின் தந்தையும் அவள் தாயின் நினைவிலே குடித்து குடித்து அவளின் மூன்றாம் வயதில் உயிர் துறந்தார். அவள் தந்தை சிவராமன் அவளுக்கு என்று எழுதி வைத்த வீடு, அவள் தாயின் நகைகள் மட்டுமே அவளின் உடைமைகள் என்றாக அதற்காகவே சிவகாமி தம்பி மகளை வளர்க்கிறேன் என்று கூறி தன் குடும்பத்தோடு அங்கு வந்தவர் சொந்த வீட்டிலேயே அவளை வேலைக்காரியாக்கி விட்டார்.

அவளால் தான் தன் அண்ணனும் அண்ணியும் இறந்தார்கள் என்று அவளின் மனதில் பதிய வைப்பதற்காக அவளை ராசி இல்லாதவள், அதிர்ஷ்டம் கெட்டவள் என்று கூற அதுவே அவளின் மனதிலும் பதிந்து விட்டது.அப்போது தான் எழுந்து வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த சிவகாமி, சமையலறையில் காலை உணவுக்காக தயார் செய்துகொண்டிருந்தவளிடம் “ஏய் ஜனனி டீ போட்டு கொண்டு வாடி, ஆள் வந்து உக்காந்துருக்காங்க டீ குடுக்கணுங்கர எண்ணம் இல்லாம காலங்காத்தால கனவு கண்டுக்கிட்டு இருக்கியா ” என்று சத்தம் போட்டார்.

அந்த நேரம் அங்கு வந்த தனிஷா “வேற என்னம்மா அவ செத்து போன புருஷன பத்தி தான் கனவு கண்டுக்கிட்டு இருப்பா”என்று கூறி சிரிக்க,அந்த காலை வேளையிலே அவளை காயப்படுத்த தொடங்கி விட்டனர் தாயும் மகளும்.சிவகாமிக்கு ஒரு மகள் ஒரு மகன். மகள் தனிஷா மேக்கப் பைத்தியம், ஜனனியை விட நிறம் குறைவு, அவளை விட அனைத்திலுமே கீழ் தான். இதனாலே அவளின் மேல் பொறாமை கொண்டு அவளை மட்டம் தட்டி காயப்படுத்தி மகிழ்வது தான் இவளின் பிரதான வேலை.சிவகாமியின் மகன் ஹரிஷ் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டே வேலை செய்கிறான்.இருவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்தவள் அவர்களிடம் நீட்ட, அவளின் முகமோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் நிர்மலமாய் காணப்பட்டது.

சிவகாமி “இன்னிக்கு தனிஷாவை பொண்ணு பாக்க வீட்டுக்கு ஆளுங்க எல்லாரும் வர்றாங்க, அதுக்குள்ள நான் சொல்ற எல்லாத்தையும் செஞ்சு வச்சுட்டு கிளம்பி கோவிலுக்கு போய் அவளுக்கு இந்த வரன் அமைஞ்சு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு வா”, என்றுஅவள் கோவிலுக்கு சென்று என்ன வேண்டுவது என்பதை கூட அவர் தான் தீர்மானித்தார்.தனிஷா, “நாங்க சொல்லும்போது வந்தா போதும் இங்க வந்து உன் அதிஷ்டம் கெட்ட மொகரைய காட்டிக்கிட்டு நிக்காத, எனக்கு நடக்கற நல்லது கூட உன்ன பார்த்ததும் ஓடி போய்டும்”என்று கூறி மேலும் அவளை காயப்படுத்தியவர்கள் அவள் செய்ய வேண்டிய வேலைகளை கூற, தலையாட்டிக்கொண்டு சமையலறைக்கு சென்றாள்.

இங்கு நடந்த அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த சிவகாமியின் கணவர் செல்வத்திற்கு அவர்களை ஆளுக்கு நாலு அறை அறைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் அதை செயல் படுத்த தைரியமில்லாத கோழை. அவரால் ஜனனிக்கு சீக்கிரம் விடிவு காலத்தை கொடு இறைவா என்று வேண்டிக்கொள்ள மட்டுமே முடிந்தது.அது கடவுளின் காதில் கேட்டதோ என்னவோ அதை செயலாக்க ஒருவனை விரைவில் அனுப்பி வைக்க திட்டமிட்டார்.அவர்கள் கூறிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள், மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு சந்தன நிற காட்டன் புடவை கட்டி நெற்றியில் சிறு கீற்றாய் திருநீர் இட்டுகிளம்பினாள் ஜனனி.

அதிலே அவள் பளிச்சென்று மின்ன, அவளை பார்த்த தனிஷாவுக்கு பார்லர் சென்று முழுதாய் பல ஆயிரங்களை செலவு செய்தும் அவளின் முகத்தை விட தான் குறைவாக இருப்பதாய் தோன்ற அவளிடம் “இப்படி மினிக்கிகிட்டு போய் யார் கிடைப்பாங்கன்னு அலையாத வெளியே போய், கோவிலுக்கு போனோமா வந்தமான்னு இருக்கனும் புரியுதா?”அவளின் ஒவ்வொரு செயலையும் குறை கூறி காயப்படுத்தினாள் பெண்ணவளை.

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தவள் அப்போது தான் சுதந்திர காற்றை சுவாசிப்பதை உணர்ந்தாள். எப்போதும் போல் இங்கிருந்து எங்காவது சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்ற, மறு நிமிடமே இத்தனை நாட்களாய் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களை விட்டு செல்வதா, இதற்கு மேல் தன் வாழ்வில் என்ன இருக்கிறது, எதற்காக வாழவேண்டும் இருக்கும் வரை அவர்களுக்காவது உதவியாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, கண்களில் வழிந்த நீரை துடைத்தவள் கோவிலுக்கு நடந்தே சென்றாள்.

தான் எப்போதும் செல்லும் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல , மன நிறைவாக கடவுளை தரிசித்தவளுக்கு அவளுக்கு என்று எதுவும் வேண்ட தோன்றவில்லை.

சிறிது நேரம் அங்கு அமரலாம் என்று நினைத்தவள் அங்கிருந்த பிரகாரத்தில் அமர்ந்து கண்களை மூடி கொள்ள, தன் நிலையை எண்ணி கண்ணீர் தானாய் வழிந்தது.கண்களை மூடிக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்தவளின் கோலம் கண்டு, தூரத்தில் இருந்து அவளை பார்த்திருந்தவனின் மனமோ ரத்தகண்ணீர் வடித்தது.

தன்னவளின் கோலம் கண்டு, அவளை தேற்ற எண்ணியவன் நிலையோ அதை விட மோசமாக இருந்தது. மூன்று வருடங்கள் கழித்து அவளை காண்கிறான் அதுவும் விதவை கோலத்தில், துடித்துப்போனான் அவன்.முழுதாக ஒருமணி நேரம் கோவிலில் அமர்ந்திருந்து விட்டு தாமதமாவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பியவள் வழக்கம் போல் நடந்து சென்றாள். நடந்து செல்வது அவளுக்கு இதமாக தோன்றினாலும் அவளிடம் பேருந்தில் செல்ல கூட பணமில்லை என்பது தான் உண்மை.

அவள் வீட்டிற்குள் நுழையும் போது தாயும் மகளும் மிகவும் மகிழ்வுடன் பேசி சிரித்து கொண்டிருந்தனர், அதுவே அவளுக்கு உணர்த்தியது திருமணம் முடிவானதை.நேராக அவள் உள்ளே வர, அவளை கண்ட சிவகாமி, “சீக்கிரமா போய் சமையல் கட்டை சுத்தம் பண்ணு, போ உனக்கு இங்க இருக்க கோவிலுக்கு போயிட்டு வர இவ்ளோ நேரமா, போய் வேலையை பாரு, கல்யாணம் முடிவாகிடுச்சு. இன்னும் பத்து நாள்ள கல்யாணம் மாப்பிள்ளை கல்யாணம் முடிஞ்ச கையோட தனிஷாவ கூட்டிட்டு வெளிநாடு போயிருவாரு” என்ற தகவலையும் சேர்த்தே கூற, இன்னும் பத்து நாட்களில் தனக்கு சிறிது நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தவாறே வேலைகளை பார்க்க சென்றாள் ஜனனி.

தாயும் மகளும் அமர்ந்து மொபைல் பார்த்து சிரித்து கொண்டிருக்க, காலிங் பெல் ஓசை கேட்டது. தனிஷா “ஏய் தரித்திரமே காது கேக்குதா இல்லையா வந்து கதவை திற”என்று சத்தம் போட, கிட்சனை சுத்தம் செய்து கொண்டிருந்தவள் கைகளை கழுவிக்கொண்டு ஹாலில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்த தாயையும் மகளையும் பார்த்துக்கொண்டே சென்று கதவை திறந்தவளின் முகமோ ஒரு நிமிடம் மின்னி மறு நொடியே அது பொய்யோ என்னும் வகையில் அவனுக்கு வழி விட்டு முன் சென்றாள்.

சிவகாமி “யார் வந்துருக்காங்க” என்று கேட்க, அவளின் பின் வந்து நின்றவனை கண்டு தனிஷா ஓடி சென்று “அண்ணா, எப்படி இருக்கீங்க, நீங்க மட்டுமா வந்திங்க பெரியம்மா அக்கா எல்லாத்தையும் கூட்டிட்டு வந்துருக்கலாம் தானே, ரொம்ப நாள் ஆச்சு”என்று பேசி கொண்டே சென்றவளிடம் அவள் கேள்விக்கு பதில் கூறியவன் அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தவளை பார்த்து யாரும் அறியாமல் கண்களை சிமிட்டினான்.

தனிஷா “ஏய் போடி போய் அண்ணாக்கு காபி எடுத்துட்டு ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வா, போ”என்று அவளை விரட்டினாள் .

சிவகாமி “இனியா வா வந்து உக்காரு அக்கா எப்டி இருக்காங்க” என்று பேச்சு கொடுக்க, அவருக்கு பதில் கூறியவனின் பார்வை சமையல் அறையையே சுற்றி வந்தது.அவனுக்கு காபி எடுத்து வந்தவள் அவனுக்கு சாப்பிடவும் கொண்டு வந்து வைத்து விட்டு உள்ளே செல்ல, அவளின் வேலைக்காரி தோற்றம் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.அந்த நாள் முழுவதும் அவன் பார்த்ததில் அவள் அந்த குடும்பத்திற்கு அவள் முழுநேர வேலைக்காரியாகி விட்டாள் என்பது தெளிவாக புரிந்தது.

அவன் அவளுக்கு சப்போர்ட் செய்து எதுவும் பேசவும் இல்லை அவர்கள் பேசுவதை தடுக்கவும் இல்லை.அவள் வாய் திறந்து எதுவும் பேசாமல் இருக்க, அவளின் மனமோ ஊமையாக அழுதது அது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.அவள் இப்படிதான் என்று அவனுக்கு பலவருடங்கள் முன்பே அறிந்திருந்தான் தானே.

இரவு அனைவரும் உறங்க சென்று பலமணி நேரம் கடந்தும் சமையலறையில் ஏதோ உருட்டி கொண்டிருந்தவளை காண செல்ல, அவளோ அழுக்கு உடையில் வியர்த்து வடிய, தூக்கம் கண்களை கட்ட கண்களை தேய்த்து கொண்டு அனைத்தையும் எடுத்து அடுக்கிகொண்டிருந்தாள்.அவளுக்கு யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்ற, திரும்பியவள் பார்த்தது என்னவோ கைகளை கட்டி கொண்டு சுவற்றில் சாய்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்த அன்பினியனைத்தான்…

-to be continue.

hi friends

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 mark -11

பெயர் சொல்லி எழுதுகின்றேன்.

10 thoughts on “என் உயிரின் ஜனனம் நீயடி 1”

 1. CRVS2797

  இவங்க எல்லாம் மனுசங்களா, இல்லை மிருகங்களா…? ஏன் தான் இப்படி இருக்காங்களோ…?
  போகட்டும் இனியனாவது அவளுக்கு ஆதரவையும், அன்பையும் கொடுக்கட்டும்.

 2. Avatar

  இப்படியும் மனிதர்கள்!!!. இவ என்னைக்கு வாயை திறந்து பேச போறாளோ???… அருமையான ஆரம்பம்!!..

 3. Avatar

  இவங்க மனுஷங்களா அவ வீட்டுல இருந்து கிட்டு கஷ்டப்படுத்தறாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *