Skip to content
Home » என் உயிரின் ஜனனம் நீயடி 11to 13

என் உயிரின் ஜனனம் நீயடி 11to 13

ஜனனம் 11 அப்போது இனியனின் அலைபேசிக்கு தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் அவர்கள் நெடுநாளாக தேடிய அந்தக் கைதி இருக்குமிடம் கூறப்பட்டு விட்டு அமைதியாக வைத்திருந்தது மறுமுனை. இனியன் அறைக்குள் சென்றவன் துப்பாக்கியை எடுத்து வைத்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஸ்டேஷனில் ஒரு முக்கியமான வேலை என்று கிளம்பியவன் போனை வைத்து விட்டு சென்றது தான் பரிதாபம்.அவன் சென்று அரைமணி நேரம் கடந்திருக்க,இனியனின் போன் உள்ளே அடித்து கொண்டு இருந்தது. சத்தம் கேட்ட ஜனனி, வந்து போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க,”சார் நான் பிரதாப் பேசறேன்( இனியனுக்கு கீழ் வேலை பார்க்கும் சப் இன்ஸ்பெக்டர்) அவன் அந்த ரவுடி உங்களை கொலை பண்ண வெறியோட காத்திருக்கான்.அவனே ஒரு ஆள ரெடி பண்ணி உங்களுக்கு போன் பண்ணி அவனை பத்தி தகவல் சொல்லி உங்களை அங்க தனியா வர வைக்க பிளான் பண்ணிருக்கான். நீங்க இப்போ கிளம்பி ஸ்டேஷன் க்கு வாங்க சார். அவன் ஒரு பெரிய கேங்கோட மலைக்கோவில் பக்கத்துல இருக்க மாந்தோப்புல இருக்கிறதா தகவல் வந்துச்சு, தனியா அங்க போக வேணாம்”என்று கூற…அதில் பயந்து போனவள் நடுக்கத்துடன் “ஹெலோ நான் அவரோட மனைவி பேசறேன். இப்போதான் ஒரு கால் வந்துச்சு அர்ஜ்ன்ட் சொல்லி கிளம்பி போனார் அண்ணா. யார் அந்த ரவுடி அவருக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினை, எனக்கு பயமா இருக்கு. எந்த இடம்னு சொல்லுங்க நான் போறேன். அவர் கிளம்பி போன வேகத்துக்கு நீங்க சொல்லறதை பார்த்தா அங்க தான் போயிருக்கணும்”என்று கூறியவளின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்தவன்,”மேடம் நீங்க பயப்படாதீங்க, இதோ நாங்க எல்லாரும் அங்க தான் போறோம். இனியன் சாருக்கு ஒன்னும் ஆகாது டென்ஷன் ஆகாதீங்க”என்றவன் வேகமாக தன் படைகளை திரட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வேகமாக சென்றான்.ஜனனி இனியனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பயத்தில் பிரதாப் சொன்ன இடத்திற்கு விசாரித்து செல்ல, அங்கு அவள் கண்டதென்னவோ இனியன் ஒருவனை போட்டு அடித்து கொண்டு இருந்ததும் பின்னிருந்து இருவர் அவனை கத்தி, அருவாள் ஆகியவற்றால் தாக்க வருவதும் தான், இனியன் இருக்குமிடத்திற்கு வந்தவள் இனியனை அந்த இடத்தில் இருந்து தள்ளி விட்டவளின் கழுத்திலும் நெஞ்சிலும் இறங்கியது ஆழமான வெட்டுக்கள். அந்த இடத்தில் ஜனனியை எதிர்பாராமல் திகைத்து போனவன் ஜனனியை பார்க்க கழுத்தில் அரிவாளிலும் நெஞ்சில் கத்தியில் குத்துப்பட்டு அங்கேயே மடங்கி சரிந்திருந்தாள்.கடைசியில் அவளுக்கு ஜனனி என்று இனியன் கத்தியது மட்டுமே கேட்க, அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தவள் சுய நினைவை இழந்து விழுந்திருந்தாள்.பிரதாப் தலைமையில் வந்த காவல்படை அந்த ரௌடிகள் அனைவரையும் வளைத்து பிடித்திருந்தனர். பிரதாப் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்தான்.இனியன் “ஜனனி”என்று கத்திக்கொண்டே அழுகையுடன் ஓடிச்சென்று அவளை மடி தாங்கியவன்,”நீ எதுக்குடி இங்க வந்த,ஏண்டி இப்படி பண்ண, உனக்கெதும் ஆகாது ஜனனிமா” என்று அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழுதவனை, கண்ட பிரதாப் அவன் அருகில் வத்தவன் “சார் ஆம்புலன்ஸ் வந்துருச்சு, மேடம தூக்குங்க”என்று அவளை வண்டியில் ஏத்தி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.இனியன் தன் கைகளை பார்க்க அதில் இருந்த ரத்தத்தை கண்டவன், கண்களில் கண்ணீர் நிற்காமல் சொரிந்து கொண்டிருந்தது.பிரதாப் அவனும் வருந்திக்கொண்டு தான் இருந்தான். தான் அவளிடம் அனைத்தையும் கூறியதை நினைத்து தலையில் அடித்து கொண்டவன் இனியனிடம் சென்று,”சாரி சார் எல்லாம் என்னால தான். நான் உங்களுக்கு கால் பண்ணேன் மேம் தான் அட்டென்ட் பண்ணாங்க, நான் அவங்க லைன் ல இருந்தது தெரியாம எல்லாத்தையும் சொல்லிட்டேன்”என்று கூறி வருத்தப்பட…அதைக்கேட்டவன் அவனை குறைசொல்ல விரும்பாமல் அவனின் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று இருக்கையில் அமர்ந்தவன் மனமோ “உனக்கெதும் ஆகாது ஜனனி, நான் ஆகவும் விட மாட்டேன்”என்று ஜபம் போல் உச்சரித்து கொண்டிருந்தது.அப்போது வீட்டில் இருந்து தகவல் கேள்விப்பட்டு அனைவரும் வந்திருக்க, ஈஸ்வரணும் கவிதாவும் கூட வந்திருந்தனர்.அன்னபூரணி உள்ளே வந்ததும் இனியனின் சட்டையில் இருந்த ரத்தத்தை கண்டு பயந்து போனவள்,”இனியா அய்யோ என்னடா இவ்ளோ ரத்தம், எங்க அடிபட்டுருக்கு”என்று நெஞ்சில் அடித்து கொண்டு கதற…அனைவருமே அவனின் உடையில் இருந்த ரத்தத்தை கண்டு பதறி போயினர்.அவர்களுக்கு தெரிந்தவரை இனியனுக்கு அடிபட்டது என்று தான் அவர்கள் இங்கே வந்திருக்க, யாருக்குமே ஜனனியின் நியாபகம் வரவில்லை.இனியன் “எனக்கு ஒன்னும் இல்லமா, ஜனனிக்கு தான்… என்னால என்னை காப்பாத்த போய் அவ மாட்டிக்கிட்டா”என்று கூறுவதிற்குள் துக்கம் தொண்டையை அடைக்க பேசமுடியாமல் தடுமாறிப்போனான்.பிரதாப் தான் போன் அடித்ததில் இருந்தது அங்கு நடந்த அனைத்தையும் கூற, அன்னபூரணி மகனுக்காக ஒருத்தி சாகவே துணிந்து இருக்கிறாள் என்று அவளின் மேலும் பாசம் பெருக, அவளுக்காக முதன்முறையாக துடித்தார்.அறிவழகன், புகழினி, தமிழ் சாரு என அனைவருமே அவளுக்காக வேண்டிக்கொள்ள…ஈஸ்வரன் இனியனிடம் வந்தவன் “மாப்பிளை ஒண்ணும் இல்லையா, தங்கச்சிக்கு எதும் ஆகாது, நல்லபடியா உன்கிட்ட வந்து சேரும் பாரு, கவலைப்படாம இரு”என்று கூற…கவிதா “நல்லவேளை உனக்கு எதுவும் ஆகல, அந்த ரசிகெட்டவளால அவ ராசி கடைசியா அவளுக்கே வினையா முடிஞ்சுருச்சு”என்று அந்த நிலையில் கூட நாக்கில் நரம்பில்லாமல் பேச…அன்னபூரணி முதற்கொண்டு அவளை அற்பப்புழுவை போல பார்க்க, ஈஸ்வரன் விட்ட அறையில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து விட்டாள்.அப்போது ஜனனி இருந்த அறையில் இருந்து டாக்டர்கள் குறுக்கும் மறுக்கும் சென்று கொண்டு இருக்க இனியனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவள் மூளையில் பதிந்து விட, அவளின் நினைவுகள் அவளிடம் இருந்து சிறிது சிறிதாய் விடைபெற்று கொண்டிருந்தது, சுவாசமும் சீராக இல்லை.அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர் ” அவங்களுக்கு காயம் ஆழமா விழுந்துருக்கு சார். அதுக்கு நாங்க டிரீட்மென்ட் குடுத்துருக்கோம் ஆனாலும் அவங்க கொஞ்சம் கொஞ்சமா சுயநினைவை இழந்துட்டு இருக்காங்க, சுவாசமும் சீரா இல்லை. எங்களால முடிஞ்ச ஹன்ட்ரேட் பர்சண்ட் நாங்க முயற்ச்சி பண்ணிட்டோம். நீங்க போய் அவங்க கிட்ட பேசுங்க நீங்க நல்லாருக்கீங்க… அவங்களுக்கு இங்க ஒரு குடும்பமே இருக்கு அப்புறம் அவங்க வயித்துல இந்த உலகத்துக்கு வர ஒரு உயிர் துடிச்சுகிட்டு இருக்குனு அவங்களுக்கு புரிய வையுங்க” என்று கூறியவரை அதிர்ச்சியுடன் பார்த்தான்.மருத்துவர் “சாரி சார், இத சொல்ல வேண்டிய தருணம் இது இல்லை. ஆனா அது தான் உண்மை அவங்க ப்ரெக்நன்ட் ஆஹ் இருகாங்க, அவங்க தெரிஞ்சோ தெரியாமலோ வயித்துல கைவச்சு பேபிக்கு எதும் ஆகாம காப்பாத்திருக்காங்க”என்றவர் சென்று விட்டார்.அன்னபூரணியும் அறிவழகனும் தங்கள் குடும்பத்தின் முதல் வாரிசு உருவானதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை தங்கள் மகனின் உயிரான மருமகளை நினைத்து வருந்துவதா என்று உயிர் துடிக்க நின்றிருந்தனர். இனியன் அழுது வீங்கிய கண்களுடனும் சட்டையில் அவனவளின் ரத்தம் தோய்ந்திருக்க, கதவை திறந்து கொண்டு நுழைய, அங்கு பிடிங்கி போட்ட கொடி போல் வாடி வதங்கி, சலனம் இல்லாமல் முகத்தில் சுவாச கருவிகளுடன் கழுத்தில் கட்டுடன் படுத்திருந்தவளை கண்டவனுக்கு உயிரை உருவுவது போல் வலிக்க, ஒரே எட்டில் கட்டிலை அடைந்தவன் தன் ஏழு வருட காதலையும் மொத்தமாக தேக்கி “ஜனனி”என்றழைக்க,அவளிடம் எந்த மாற்றமும் இல்லை.அவளின் அருகில் சென்றவன் “ப்ளீஸ் டி ஏண்டி இப்படி பண்ண , திரும்ப என்கிட்ட வந்துரு ஜனனி மா. நிச்சயம் நீ இல்லாம என்னால வாழ முடியாது. அப்புறம் நீ காப்பாத்துன இந்த உயிருக்கு எந்த அர்த்தமும் இல்லாம போய்டும். உன் அன்பு கிட்ட திரும்பி வந்துருடா, உனக்கே தெரியும் நீ இல்லாம என்னால வாழ முடியாது.உனக்கு தெரியுமா நம்ம ரெண்டு பேரும் அம்மா அப்பா ஆகிட்டோம், உனக்குள்ள ஒரு உயிர் இருக்கு அவ நம்ம காதலோட அடையாளம் அந்த உயிருக்காகவாச்சும் என் கிட்ட திரும்பி வந்துருடா. இனி மேல் நான் உன்னை இழக்க மாட்டேன் பத்திரமா பாத்துப்பேன் ப்ளீஸ்” என்று கதற, அவனின் கதறலில் அங்கிருந்த செவிலிக்கே கண்ணீர் வர, ஆனால் அவள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தாள்.இனியன் “நீ வரமாட்ட இல்லை. அப்போ நான் வரேன்.நீயும் பாப்பாவும் இல்லாத இந்த உலகத்துல நான் மட்டும் வாழ்ந்து என்ன பண்ண போறேன் நானும் வரேன்.சாவு கூட நம்ம ரெண்டு பேரையும் மறுபடியும் பிரிக்க கூடாது” என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த கத்திரியை எடுத்து தன் கழுத்தில் இறக்கியிருந்தான்.ஜனனம் 12 ஜனனியின் முகத்தைப் பார்த்து சோகமாக பேசிக் கொண்டிருந்தவனை பார்த்து கொண்டிருந்த செவிலியர் திடிரென கடைசியாக அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து அவனை பார்க்க அதற்குள் கையை எடுத்து தன் கழுத்தின் அருகில் கொண்டு சென்று இருந்தான். வெளியே கண்ணாடி தடுப்பின் வழியே அவன் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவரும் மகனின் செயலில் அதிர்ந்து போய் கதவை திறந்து கொண்டு ஓடி வர,அதற்குள் செவிலியர் “சார் அங்க பாருங்க மேடம் கைவிரல்கள் அசையுது “என்று கத்தி அவனை திசை திருப்ப அதற்குள் கத்தரியை கழுத்தில் லேசாக கழுத்தில் இறக்கி இருந்தான். லேசாக பட்டாலும் அதில் இருந்து ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியே வர, அவன் அதை கண்டுகொள்ளாமல் ஜனனியை பார்த்து கொண்டிருந்தான். செவிலியர் ஓடிச்சென்று மருத்துவர்களை அழைத்து வர, அவனின் அருகில் வந்த ஈஸ்வரன் “ஏன்டா மாப்பிள்ளை எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? ஏற்கனவே தங்கச்சி நிலைமை மோசமா இருக்கு. அதுக்குள்ள நீயும் எங்கள சேர்ந்து ஏன் இவ்வளவு கஷ்டப் படுத்துற? உனக்கு எது ஆயிடுச்சின்னா தங்கச்சி கண்முழிச்சு உன்ன கேட்கும் போது அவளுக்கு என்ன பதில் சொல்றது? எதுக்காக இப்படி முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கிற?” என்று அவனை கடிந்து கொண்டான்.அன்னபூரணி அவன் கழுத்தில் வழிந்த ரத்தத்தை பதறி போய் கதறி அழ…மருத்துவர் “என்ன இனியன் எதுக்காக இப்படி ஒரு முடிவெடுத்தீங்க? வாங்க வந்து பர்ஸ்ட் எய்ட் பண்ணிக்கோங்க”…தலையாட்டி மறுத்தவன் ஜனனியை பார்க்க, அவளின் கைவிரல்கள் அசைய, அவளின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.மருத்துவர் “அவங்க இப்போ கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகுறாங்க, இப்போ ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாங்க, நீங்க வாங்க” என்று அவனை அழைக்க…அவர் கூறியதை கேட்டவனின் விழிகள் மூடி திறக்க, கண்ணீர் வழிய அதே இடத்தில் அமந்துவிட்டான்.அவனை அவளிடம் இருந்து நகர்த்த முடியாது என்று அங்கேயே அவனுக்கான முதலுதவி செய்து காயம் சிறிது ஆழமாக பட்டிருக்க, அவனின் காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டு விட, அவனோ அவளை விட்டு சிறிதும் அசைய வில்லை.அதற்குள் மருத்துவமனை முழுவதும் இனியன் ஜனனியின் காதல் கதை அந்த செவிலியர் மூலம் பரவி இருந்தது.இனியனின் வீட்டில் அனைவர்க்கும் அவனின் இந்த செயலில் அதிர்ச்சியே… எப்போதும் முரட்டுதனமாக சுத்துபவன் காவல் பணியில் சேர்ந்ததும் இன்னும் இறுகி போனான். இதில் அவனுக்கு ஜனனி மேலான காதல் கதை தெரிந்ததில் அதிர்ச்சி என்றால் அவளின் அவன் மீதான நேசம் அவளுக்காக அவன் சாக முடிவெடுத்தது என்று பேரதிர்ச்சியில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து போனது.ஜனனி மேலும் மூன்றுமணி நேரம் இனியனை துடிக்க வைத்து, கண்விழித்தவள் கண்டது அவளின் அருகில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்த இனியனை தான்.அவள் முதலில் பார்த்ததும் அவளுக்கு தட்டுபட்டது என்னவோ அவனின் கழுத்தில் இருந்த கட்டு தான். அதை கண்டு பதறி போய் எழுந்தவளை தாங்கி பிடித்து அவளை அமரவைத்தவன் அவளின் பார்வை போன இடத்தை வைத்து, தன் காயத்தை கண்டு துடிக்கிறாள் என்று புரிந்து கொண்டவன், ஒரு சிறு விலகலுடனே “எனக்கு ஒண்ணும் இல்லை. இது சின்ன கீறல் தான்”என்றவன் எழுந்து நிற்க…அப்போது அனைவரும் உள்ளே வர,அறிவழகன் “உடம்புக்கு இப்போ எப்படி மா இருக்கு, நல்லாருக்கா”என்று விசாரிக்க அவருக்கு தலையாட்டியவள், அக்கா அண்ணி என அருகில் வந்த சாரு, தமிழ், புகழினி ஆகியோரிடம் பேசிகொண்டிருக்க…அவளருகில் வந்த அன்னபூரணி “ஆத்தா மகராசி என் குலம் காக்க வந்த தேவதை. உன்னை இவ்ளோ நாளா நான் புரிஞ்சுக்காம தப்பு பண்ணிட்டேன். ராசா மாறி இருக்க என் புள்ளைக்கு உன்னை மாறி ஒருத்தியான்னு சிவகாமி சொன்னத கேட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டு உன்னை கொடுமைப்படுத்திட்டேன் மா என்ன மன்னிச்சிருத்தா, என் புள்ளைக்காக உன் உசுர கூட மதிக்காம அவனை காப்பாத்த நீ இப்படி அடிபட்டு வந்துருக்கியே” என்று கையெடுத்து கும்பிட்டு அழுதார்.ஈஸ்வரன் “அட விட்டு தள்ளுங்க அத்தை, போனது போகட்டும் நல்லது நடந்துருக்கு அதை பேசுங்க, அப்புறம் இவன் பண்ண முட்டாள் தனத்தை சொல்லுங்க ஜனனி கையாள நாலு அரை விழட்டும். அத விட்டுட்டு போனத பத்தி பேசிகிட்டு” என்று கூறியவனை புரியாமல் ஜனனி விழித்தாள்.ஈஸ்வரன் ஜனனியிடம் இனியன் செய்யவிருந்த முட்டாள் தனத்தை பற்றி கூற, ஜனனி அவனை அழுகையுடன் நோக்க…அந்த நேரம் உள்ளே வந்த செவிலியர், “என்னமா இது ஐசியூ இத்தனை பேர், ஒருத்தர் மட்டுமே கூட இருங்க, டாக்டர் வந்தா திட்டுவாங்க”என்றவள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு ஜனனியிடம் வந்தவள் “எனக்கு உன்ன பார்த்தா பொறாமையா இருக்குமா, இந்த மாறி ஒருத்தனுக்காக நீ சாக துணிஞ்சதுல தப்பே இல்லை”என்றவள் வெளியே சென்று விட்டாள்.ஜனனி இனியனை முறைக்க,”எதுக்குடி என்ன முறைக்குற, கொலவெறில இருக்கேன் நான். பெரிய தியாகியா நீ, என்ன வெட்ட வந்தா நான் சாகறேன் இல்லை எப்படியோ தப்பிக்குறேன் அதுக்காக என்ன தள்ளி விட்டு நீ அதை வாங்குவியா? உன்னை அப்டி ரத்த வெள்ளத்துல பாக்க உயிரே போய்டுச்சு”என்றவன் மேற்கொண்டு வார்த்தை வராமல் துடிக்க, அவளை மெதுவாக அணைத்து கொண்டான்.அவள் அவனின் கழுத்து காயத்தை தொட்டு பார்த்தவள் கண்கலங்க அவனே “என்னோட உயிரே நீ தான், நீ இல்லாம மறுபடியும் என்னால ஒரு பிரிவை நிச்சயம் தாங்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் மட்டுமே தனியா அதான் உங்களோட வந்துரலாம்னு இப்படி பண்ணிட்டேன். ஆனா கடைசியா நம்ம காதல் நம்மள சேர்த்துருச்சு” என்று அவளின் முகத்தோடு முகம் வைத்து கூற…அவன் கூறியது புரியாமல் விழித்தவள் “ரெண்டு பேரும் யாரு”என்று கேட்க…அவளை பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன் “நார்மலா இத பார்த்தா இந்த விசயத்தை நீ தான் என்கிட்ட சொல்லிருக்கணும். ஆனா நம்ம எப்போவும் ஸ்பெஷல் தான்” என்றவன் அவளின் கண்ணோடு பார்த்தவன் “நீ அம்மாவாக போற, நம்ம ரெண்டு பேரும் பேரெண்ட்ஸ் ஆகிட்டோம். உன்னை மாறியே ஒரு குட்டி பிரின்சஸ்”என்று அவன் கூறிக்கொண்டே சென்றவன் அவளின் மணிவயிற்றில் கை வைக்க, அவளும் அந்த உணர்வை அனுபவித்தாள்.பின் மருத்துவமனையில் இருந்த பத்து நாளும் அவளை தாயாய் தாரமாய் நெஞ்சில் தாங்கினான்.ஜனனம் 13அடுத்தடுத்து வந்த நாட்களில் அன்னபூரணி காலை அவளுக்கு பத்திய உணவாக சமைத்து எடுத்து வந்து ஊட்டிவிட்டு, அவளின் தேவைகளை நிறைவேற்றி அவளுக்கு இந்த பத்து நாட்களில் மறு தாயாய் மாறினார்.இனியன் அவளை விட்டு எங்கும் நகரவில்லை. கண் இமை போல் காத்தான்.பத்து நாட்கள் கடந்திருக்க, ஜனனிக்கு அன்று டிஸ்சார்ஜ், அவளை அழைத்து கொண்டு போக அன்னபூரணி, கவிதாவை தவிர அனைவரும் வந்திருக்க ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஷை முடித்து கொண்டு கிளம்பினர்.வீடு வந்ததும் அனைவரும் இறங்கி உள்ளே வர, அன்னபூரணி ஆரத்தி தட்டுடன் வெளியே வந்தார். இனியன், ஜனனி இருவரையுயும் அருகருகே நிற்க வைத்து ஆலம் சுற்றியவர் இருவருக்கும் பொட்டு வைத்து திருஷ்டி கழித்தவர்,புகழினியின் கையில் தட்டை கொடுத்து வெளியில் கொட்டி விட்டு வர சொன்னவர் ஜனனியின் அருகில் வந்து “இதெல்லாம் கல்யாணம் ஆனா அன்னிக்கே செஞ்சுருக்கணும்,அப்போ என் தலைக்குள்ள சாத்தான் ஓதிய வேதம் என்னை ஆட்டிப்படைச்சதால எதுவும் செய்ய முடியல, இப்போ புத்தி தெளிஞ்சிருக்கு” என்று வருத்தமாக கூற…ஈஸ்வரன் “போனத விட்டு தள்ளுங்க அத்தை, நீங்க இப்போவாச்சும் ஜனனியை புரிஞ்சுக்கிட்டீங்களே அதுவரை சந்தோசம். என் வீட்டுல ஒண்ணு இருக்கே கூடிய சீக்கிரமா அதுக்கும் புத்தி வந்து எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும். சரி வாங்க வெளியே நின்னு பேசிகிட்டு உள்ளே போகலாம்” என்று அழைத்தவன் முன்னே செல்ல…அன்னபூரணி ஜனனியிடம்,”வலது கால் வச்சு உள்ளே வாடா” என்று அழைக்க…தமிழரசி “எங்க அம்மா எப்போவும் எல்லாத்தையும் லேட்டா பண்ணாலும் லேட்டேஸ்டா செய்வாங்க ரெண்டு மாசம் முன்னாடி செய்ய வேண்டியதை இப்போ செய்றாங்க” என்று அன்னையை வார, அவரோ அவளின் காதை பிடித்து திருகியவர் “போய் அண்ணிக்கு ஜூஸ் போட்டு வச்சிருக்கேன் அத எடுத்துட்டு வந்து குடு போ… இனிமேல் ஆச்சு படிக்கணும் அது இதுனு ஓபி அடிக்காம வீட்டு வேலையை கத்துக்கோ” என்று அவளை அதட்டி சமையலறைக்கு அனுப்பினார்.ஜனனி நெடுநேரம் வண்டியில் உட்கார்ந்து வந்ததால் சிறிது நேரம் படுத்தால் தேவலாம் என்று தோன்ற, அவளின் முகத்தை கண்ட அன்னபூரணி மகனிடம், “இனியா அவளை கொஞ்சம் நேரம் உள்ள கூட்டிட்டு போய் படுக்க வை, ரெஸ்ட் எடுக்கட்டும், சாப்பிடும்போது அவளை எழுப்பிக்கலாம்” என்று கூறியவருக்கு தலையாட்டி விட்டு, அவளை கைத்தாங்கலாய் அறைக்குள் அழைத்து வர, அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்தியவன் அவளை கையில் எந்திகொண்டான் கட்டிலில் வாகாய் மெதுவாக படுக்க வைத்தவன் அவனும் கண்மூடி அவளின் அருகில் படுத்து அவளை தொந்தரவு செய்யாமல் அணைத்தப்படியே அவனும் உறங்கி விட்டான்.அவன் உறங்கும் வரை கண்மூடி இருந்தவள் இமை திறந்து தன்னை அணைத்தவாறு உறங்கியவனை கண்ணெடுக்காமல் பார்த்தவள்,அவன் தன்மீது கொண்டுள்ள காதலுக்கு தான் செய்தது சரி என்று தோன்ற, அவனை பார்த்தவாறே கண்களை மூடி உறங்க தொடங்கினாள்.ஜனனிக்கு மசக்கை வேறு படுத்தி எடுக்க, அன்னபூரணி தான் தாயிக்கு தாயாய் அவளை தாங்கினாள். இனியன் அவள் கால் தரையில் படாமல் தாங்கினான். ஜனனிக்கு அவளின் காயங்கள் ஆறியிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வர தொடங்கியிருந்தாள்.ஜனனிக்கு அப்போது நான்காம் மாதம் தொடங்கி இருந்தது. வீட்டில் அனைவரின் கவனமும் அவளின் மேல், அவளை தனியே விடாமல் யாரேனும் ஒருவர் அவளுடன் இருக்க தொடங்கினர்.அன்று வெள்ளிக்கிழமை அனைவரும் அவரவர் பணிக்கு கிளம்பியிருக்க, அன்னபூரணி மட்டுமே உடன் இருக்க பக்கத்து வீட்டு பெண் வந்து அவரை கோவிலுக்கு அழைக்க, அவர் வரவில்லை என்று கூற ஜனனி அவரை நான் இருந்து கொள்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தாள்.அந்த சமயத்தில் இனியன் வீட்டுக்கு வர, அன்னபூரணியும் இனியன் இருக்கும் தைரியத்தில் மகிழ்வுடன் கோவிலுக்கு செல்ல…இனியன் அவளின் அருகில் அமர்ந்து அவளையே பார்த்திருக்க, “என்னாச்சு அன்பு ஏன் அப்டி பார்க்கிற? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்று கூச்சத்தில் நெளிந்தாள்.இனியன் “சத்தியமா தெரில காலைல இருந்தே மனசு ரொம்ப பாரமா இருக்கு. உன்னை பாக்கணும் போல இருந்ததால தான் எல்லா வேலையையும் விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டேன். நீ என் பக்கத்துலயே இரு, என்ன விட்டு போயிடாத”என்று கூற…ஜனனி “நான் எங்க போவேன் உன்னை விட்டு, என்ன உயிரா நினைக்கற உன்னையும், எனக்கு யாரும் இல்லைங்கற நினைப்பு வரக்கூடாது ன்னு என்னையவே சுத்தி சுத்தி வர இந்த குடும்பத்த விட்டும் நான் எங்க போக போறேன்” என்று கேட்டவளுக்கு தெரியவில்லை இன்று தான் இங்கிருப்பது கடைசி நாள் என்று…அப்போது இனியனுக்கு அவசரமான வேலை இருப்பதாக தகவல் வர, இனியன் மறுக்க ஜனனி அவனை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள். தான் திரும்பி வரும்பொழுது அவள் அங்கு இருக்க மாட்டாள் என்று தெரிந்திருந்தால் போயிருக்க மாட்டானோ என்னவோ…அன்னபூரணி இனியன் இருக்கும் தைரியத்தில் சுவாமி தரிசனம் முடித்து, பொறுமையாக வந்தவள் இனியன் இருப்பான் அதனால் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி, பிரசாதத்தை பூஜை அறையில் வைத்து விட்டு, கோவிலுக்கு நடந்து சென்று வந்த களைப்பில் உறங்கி விட்டார்.அறிவழகன் நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்தவர் அறைக்கு வர, அவர் அன்னபூரணியை எழுப்ப நேரத்தை பார்த்து தன்னையே கடிந்து கொண்டவர் வேகமாக எழுந்து ஜனனிக்கு பசிக்கும் என்று அவளுக்கு முதலில் ஜூஸ் போட்டு வந்து அறையின் வெளியே நின்று ‘இனியா, இனியா’ என்றழைக்க… பதில் வராமல் இருக்க அறையின் கதவை தட்டினார் அப்போதும் கதவு திறக்காமல் இருக்க…அப்போது அவரின் பின் கேட்டது இனியனின் குரல் “என்னாச்சு மா, எதுக்கு இவ்ளோ வேகமா கதவை தட்டுறீங்க? கூப்பிட்டா அவளே வந்துருப்பா, நீங்க கதவை உடைச்சுருவீங்க போல ” என்று கூறியவாரு அவளின் அருகே வந்து நின்றவனின் உடையை கண்டவள் “நீ இவ்ளோ நேரம் உள்ள இல்லையா? என்று கேட்க…அவரின் கேள்வியில் பதறிப்போன்னவன் “ஏன் மா என்னாச்சு? எதுக்கு இவ்ளோ கோவம்” என்று கேட்க…அன்னபூரணி “நீ இருக்கேன்னு நெனச்சு, நான் வந்ததும் ரூமுக்கு போய் தூங்கிட்டேன். இப்போ உங்க அப்பா வந்து எழுப்பி தான் எழுந்தேன். இவளுக்கு பசிக்கும்னு ஜூஸ் போட்டு வந்து எவ்ளோ நேரம் சத்தம் போடறேன், கதவை திறக்கலை” என்று கூற…அன்னையின் கூற்றில் அதிர்ந்து போனவன், வேகமாக கதவை தட்ட போக அதுவோ திறந்து கொள்ள உள்ளே சென்றவனை ஆள் இல்லாத கட்டிலும் அதிலிருந்த கடிதமும் தான் அவனை வரவேற்றது.கைகள் நடுங்க அந்த கடிதத்தை எடுத்தவன் அதை படிக்க, பாதிக்கு மேல் படிக்க முடியாதவன் பொத்தென்று கீழே அமர, அன்னபூரணிக்கு ஏதோ தவறாய் தோன்ற, தன் கணவரை சத்தம் போட்டு அழைக்க உள்ளே வந்த அறிவழகனுக்கு இடி விழுந்தது, போல் அமர்ந்திருக்கும் மகனையும் அவனின் கையில் இருந்த கடிதத்தையும் கண்டவர் வேகமாக அந்த கடிதத்தை படித்தவரிடம் “என்ன ஆச்சு என்னங்க சொல்லுங்க, அதுல என்னை இருக்கு மருமகள் எங்க போனா?”என்று கேட்க…அவரோ “எல்லாம் முடிஞ்சுருச்சு பூரணி, அவ்ளோ தான் நமக்கு கிடைச்ச வைரத்தை நம்ம தொலைச்சிட்டோம் தேடினாலும் இனி கைக்கு வராது”என்று கூறியவர் வெளியே சென்று விட…அன்னபூரணி வாயில் கைவைத்து அழுது தீர்த்தார்.இனியன் உயிர் இருந்தும் இல்லாத உடலாய் அந்த கடிதத்தில் ஆயிரம் முறை படித்திருப்பான், கண்ணில் கண்ணீர் வழியே அமர்ந்திருந்தான். கத்தியில்லாமல் ரத்தமில்லாமல் இதயத்தை யாரோ உருவுவது போன்ற வலியை அனுபவித்தான்.ஜனனி எங்கே? கடிதத்தில் என்ன இருந்தது?…சில வருடங்களுக்கு பிறகு…

13 thoughts on “என் உயிரின் ஜனனம் நீயடி 11to 13”

  1. Kalidevi

    Ena achi janani ku ena nadanthuchi nalla thana iruntha ethuku pona enga pona ippadi ellarum pasama irukum pothu ethukaga poita iniyana vitu

  2. CRVS 2797

    ஐய்யய்யே…! சேர்றது பிரியறது இதே வேலையாப் போச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *