Skip to content
Home » என் உயிரின் ஜனனம் நீயடி 3

என் உயிரின் ஜனனம் நீயடி 3

3 ஜனனம்

இருவரும் அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே, சிவகாமியின் மூலம் இனியனின் குடும்பத்திற்கு சேதி தெரிந்திருக்க,இனியனின் தந்தை அறிவழகன் மகனின் செயலை மெச்சிக்கொள்ள, அன்னபூரணி ஒரு ஆட்டம் ஆடி தீர்த்திருந்தார்.இனியனின் தந்தை அறிவழகன் ஓய்வுபெற்ற ஆசிரியர், அன்னபூரணி அதிரடியான, அன்பான குடும்ப தலைவி.

இனியனுக்கு ஒரு அக்கா. இரண்டு தங்கைகள். அக்காவிற்கு திருமணமாகி உள்ளுரூரிலேயே வசிக்க, கணவர் வேலைக்கு சென்றதும் தாய் வீட்டுக்கு வருபவள் மாலை தான் அவளின் இல்லம் செல்வாள். இனியனின் முதல் தங்கை தமிழரசி கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருக்க, கடைசி தங்கை புகழினி பள்ளிபடிப்பின் இறுதியில் இருந்தாள்.சிவகாமி அன்னபூரணி க்கு போன் செய்து ஜனனி தான் இனியனை மயக்கி திருமணம் செய்துகொண்டதாகவும், அவளை பற்றி இல்லாத மோசமான விசயங்களையும் கூற, ஏற்கனவே அன்னபூரணிக்கும் சிவராமனுக்கும் ஆகாது.

ஜனனியின் தாய் அம்பிகாவை சிவராமன் காதலித்து திருமணம் சேர்த்து கொண்டது பிடிக்காமல் அவரிடம் சண்டையிட, அவரோ தனக்கு யாரும் தேவையில்லை மனைவி மட்டுமே போதும் என்று தமக்கைகளின் உறவை முறித்து கொண்டார்.அம்பிகாவும் சிவராமனும் இறந்த போதும் கடந்த காலத்தின் கசடால் அவர்களின் இறப்பிற்கு கூட செல்லவில்லை.

சிவகாமி அண்ணனின் காரியத்திற்கு சென்றவர் ஜனனியை பார்த்துக்கொள்கிறேன் என்று அவளின் வீட்டில் தங்கி அனைத்தையும் அபகரித்துக்கொண்டு அவளையும் வேலைக்காரியாக்கியவர். ஜனனியை பற்றி தன் தமக்கையிடம் அவளின் சிறுவயதில் இருந்தே அவளை தவறான பெண்ணாகவே காண்பித்தாள்.ஜனனியின் முதல் திருமணத்தில் கூட அவளை மிகவும் கேவலமான பெண்ணாக சித்தரிக்க, ஏற்கனவே அவளை பிடிக்காத அன்னபூரணி திருமணத்தில் கூட கலந்துகொள்ள வில்லை.

அன்னபூரணி “அந்த கேடுகெட்டவளுக்கு என் புள்ள கேக்குதா வரட்டும் பேசிக்கிறேன் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா என் மகனையே வளைச்சி போட்டுட்டா” என்று ஆக்ரோசமாக கத்தினார்.

அறிவழகன் “இப்போ என்னாச்சு இனியன் ஜனனிய கல்யாணம் பண்ணிக்கிட்டான். அது நல்ல விசயம் தானே அதுக்கு எதுக்காக இப்படி குதிக்கிற, அந்த பொண்ணு வாழ்க்கை அவ்ளோ தாணு நினச்சேன். எப்படியோ இனியன் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கான்” என்று மகனை நினைத்து பெருமிதம் கொண்டார்.

அன்னபூரணி “இவளுக்கு ஊர் உலகத்துல யாருமே கிடைக்கலையா அன்னிக்கு இவ ஆத்தாக்காரி எங்கண்ணன மயக்கி எங்க குடும்பத்தையே பிரிச்சா, இப்போ அவ மக என் குடும்பத்தை கெடுக்க வந்துட்டா”என்று கத்திய தாயை கண்டு, இனியனின் தங்கைகள் இருவரும் அஞ்சி நிற்க, அப்போது தன் விசயம் கேள்வி பட்ட இனியனின் அக்கா கவிதா ஓடிவந்தாள்.

கவிதா அன்னையிடம் வந்தவள்,”என்னமா சித்தி என்னவெல்லாமோ சொல்ராங்க அந்த ஜனனிய தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு உண்மையா” என்று கேட்க…

அவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் சத்தம் கேட்க, அன்னபூரணி கொண்டையை அள்ளி முடிந்து கொண்டவர் வேகமாக வெளியே வர இனியனும் ஜனனியும் வண்டியிலுருந்து இறங்குவதற்கும் சரியாக இருந்தது.இனியன் ஜனனியின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வாசலுக்கு வர, “அங்கேயே நில்லுடி, வீட்டுக்குள்ள வந்த நடக்கறதே வேற, ஏண்டி ஊர்ல எத்தனை ஆம்பளைங்க இருக்காங்க, உனக்கும் உன் ஆத்தாளுக்கும் என் குடும்பம் தான் கண்ணுக்கு தெரியுமா, மரியாதையா கழுத்துல இருக்கறத கழட்டி வீசிட்டு ஓடி போயிரு”என்று ஆங்காரமாக கத்தினார்.

அந்த கிராமத்தில் சிறு சத்தம் கேட்டாலே அங்கு உள்ள அனைவருமே கூடிவிடுவர். அன்னபூரணியின் வெண்கல குரலில் ஊரே கூடி விட்டது.

ஜனனிக்கு அன்னபூரணியின் வார்த்தைகளில் அழுகையே வந்துவிட, இனியன் அவளின் கைவிரல்களை மேலும் இறுக்கியவன்,”போதும் அம்மா இனி நீங்க அவளைப்பத்தி ஏதாச்சும் ஒரு வார்த்தை பேசுனா கூட நல்லாருக்காது பாத்துக்கோங்க,அவ என் பொண்டாட்டி. பேசறதுக்கு முன்னாடி அதை மனசுல வச்சு பேசுங்க”என்று திடமான குரலில் பேசினான்.

அவன் கூறியதில் அதிர்ந்து போன அன்னப்பூரணி “நீ கண்டதையும் கூட்டிட்டு வந்து பொண்டாட்டின்னு சொல்லுவ, அதுக்காக நான் இந்த அசிங்கத்தை ஏத்துகிட்டு இந்த வீட்டு மருமகனு சொல்லி ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கணுமா? என்னால முடியாது”என்று அவனுக்கும் மேல் கத்தினார்.

கவிதா,”ஏன்டா உனக்கு கல்யாணம் பண்ண ஊர்ல வேற பொண்ணே கிடைக்கல, இந்த ராசி இல்லாதவளை போய் கட்டிக்கிட்ட இவ பெத்தவங்க கட்டுனவன்னு எல்லாத்தையும் முழுங்குனவ கடைசியா உன்ன தொத்திக்கிட்டாளா?”என்று ஜனனியை மேலும் நோகடிக்க.

..இனியன் “அக்கான்னு உனக்கு மரியாதை கொடுக்கிறேன். இல்லை இந்த வார்த்தையை வேற யாராச்சும் என் முன்னாடி சொல்லிருந்தா நடக்கறதே வேற, மரியாதை வேணும்னா வாய மூடிக்கிட்டு இருக்கனும்”என்று அவளை கைநீட்டி மிரட்ட, இதுவரை தன்னிடம் கோவமாக கூட பேசாதவன் இன்று அவனின் அவதாரத்தில் பயந்து நடுங்கித் தான் போனாள்.

அன்னபூரணி “டேய் இப்போ எதுக்காக அவள திட்டுற அவ உண்மையைத்தான் சொல்ற, இவ வேண்டாம்டா நம்ம குடும்பத்துக்கு”என்று கோவமாக ஆரம்பித்தவர் தன்மையாக பேசினார்.

இனியன் “நீங்க என்ன சொன்னாலும் என் முடிவு மாறாது அம்மா.இனி இவ தான் என் வாழ்க்கை, எல்லாமே .இதை நீங்க ஏத்துகிட்டு தான் ஆகணும்”என்று உறுதியாய் ஒலித்தது இனியனின் குரல்.அவர்கள் மாறிமாறி பேசிக்கொள்ள, ஜனனி தன்னால் அவனுக்கு தொல்லை என்று நினைத்தவள்,”ப்ளீஸ் என்னால யாரும் சண்டை போட்டுக்காதிங்க நான் போயிடுறேன்” என்று திக்கி திணறி கூறியவள் அங்கிருந்து இரண்டு எட்டு எடுத்து வைக்க,இனியன் “என்ன விட்டு நீ போகணும்னு நெனச்ச அது நான் செத்ததுக்கு அப்புறம் தான், இப்போ நீ இங்க இருந்து போகணும்னு நெனச்சன்னா அப்போ நான் இப்போவே”அவன் கூறி முடிப்பதற்குள் அன்பு என்று அவனை தாவி அணைத்திருந்தாள் அவள்.

இனியனின் வார்த்தைகளில் குடும்பமே அதிர்ந்து போனது.அவனில் இருந்து பிரிந்த ஜனனி “என்னால தான் உங்களுக்கு இவ்ளோ பிரச்னை. ப்ளீஸ் அன்பு நான் போயிறேன் என்ன விட்ரு” என்று கூறி அழ…இனியன் “எங்கடி போவ என்ன விட்டு,ஒரு தடவை உன்ன இழந்துட்டு இந்த பத்துமாசமா நான் தவிச்சது எனக்கு தான் தெரியும். விடமாட்டேன் செத்தாலும் கூடவே கூட்டிட்டு தான் போவேன்”என்று அவளின் முகத்தை பிடித்து கூற…இதுவரை காவலனாக, முரடனாக மட்டுமே பார்த்தவனை இப்படி மனைவியிடம் காதல் மொழி பேசும் கணவனாக பார்ப்பது அனைவருக்குமே புதிதாக இருந்தது.

அன்னபூரணிக்கோ தன் மகன் இவளை இந்தளவு காதலிக்கிறனா? என்று மலைப்பாக இருந்தது.

அறிவழகன் “தமிழ் போய் ஆரத்தி எடுத்துட்டு வா” என்று கூற…அவளோ தாயை பார்க்க, அறிவழகனோ “நான் சொல்றேன்ல போய் எடுத்துட்டு வா “கண்டிப்புடன் கூற அவள் சென்று ஆரத்தி எடுத்து வந்தாள்.கவிதா “முதல் தடவை முறையா கட்டிக்கிட்டு வரவங்களுக்கு தன் இந்த சடங்கு செய்வாங்க, இப்படி புருஷன் செத்து ஒரு வருஷம் கூட ஆகாம இன்னொருத்தன கட்டிக்கிட்ட இவளுக்கு இதெல்லாம் தேவையா?” என்று கேட்க…அந்த ஊரில் அனைவர்க்கும் ஜனனியை பற்றி முன்பே தெரியும் என்பதால், அவளுக்கு அனைவரும் தன்னை பார்ப்பதாகவே தோன்ற, கவிதா பேசியதில் கண்களில் கண்ணீர் வழிய, தலைகுனிந்தாள்.

ஆரத்தி எடுத்து வந்தவள் தந்தையின் சப்போர்ட் இருக்கும் தைரியத்தில் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஆரத்தி எடுக்க, சில பக்கத்து வீட்டு பெண்களும் துணைக்கு வர, அனைவரும் சேர்ந்து ஜனனிக்கும் இனியனுக்கும் சடங்குகள் செய்து அவர்களை உள்ளே அழைத்து வந்தனர்.அப்போது இனியனுக்கு மேலிடத்தில் இருந்து தகவல் வர, அவனோ ஜனனியை பார்த்து கொள்ள கூறி, இரு தங்கைகளிடமும் கூறிவிட்டு சென்றான்.அவன் திரும்பும் போது அவளின் நிலை என்னவாக இருக்கும்…

தொடரும்.

6 thoughts on “என் உயிரின் ஜனனம் நீயடி 3”

  1. CRVS2797

    அட.. லூசே..! இவன் என்ன புருசன் அப்ப…! தாலி கட்டி வீட்டுக்கு கூட்டி வந்தவுடனே கிளம்பி போயிட்டா யாரு இங்குள்ள நிலைமையை சமாளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *