Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 21

என் சுவாசம் உன் வாசமாய் – 21

அத்தியாயம் -21

கேஸைத் திறந்து விட்டுக் கொண்டு இருக்கும்போதே கயலிடம் பாட்டியை வெளியே கூட்டிப் போகச் சொன்னான். அவளும் அழுதபடியே அவளது பேகை எடுத்துக் கொண்டு மரகதத்தை அழைத்துச் சென்றாள். கதவு உடைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. பாதி நடந்த மரகதம் முடியாமல் திணறிக் கீழே விழப் போக அவரைத் தாங்கியவள்,

“பாட்டி… பாட்டி… அண்ணா…” என்று அழ அவளது குரல் கேட்ட தண்டபாணி கிட்சனுக்குள் ஓடித் தீப்பெட்டியை எடுக்க, கதவின் தாழ்ப்பாள் கழல ஆரம்பித்தது. கயல் அருகில் ஓடியவன் அவளை முன்னே போகச் சொல்லிவிட்டு மரகதத்தைத் தூக்கியவன் வெளியே வந்து அவரை விட்டுத் தீக்குச்சியைக் கொளுத்தி வீட்டுக்குள் வீசினான். அடுத்தநொடி அந்த இடமே வெடித்துச் சிதறியது. கதவை உடைத்துக் கொண்டு இருந்தவர்களும் தூக்கி எறியப்பட்டனர். அதுவரை அங்கு நடந்த அத்தனை அனர்த்தங்களையும் வேடிக்கை பார்த்த மக்கள் தீப்பற்றி எறியவும் ஆளுக்கொரு புறம் ஓடினர். தீயை அணைக்க முற்பட்டனர். தீயோ வேகமாகப் பரவியது. யாராலும் அங்கு நெருங்க முடியவில்லை .அப்போது தான் வந்து சேர்ந்தனர் போலீஸார். அதனால், உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் தரப்பட்டது.

அப்போது தான் அங்கிருந்த ஒரு ஆள் வேறுபக்கம் கதவு இருக்கிறது அதைத் திறந்தால் உள்ளே இருப்பவர்களைப் பாதுகாக்கலாம் என்று கூற உடனே அந்த அடியாள் அந்தப் பக்கம் ஓடத் தீயணைப்பு வீரர்களும் ஓடினர். மரகதத்தின் கையிலிருந்து விழுந்த பையை எடுத்த போலீஸார் அதைப் பார்க்க நகையும், பணமும் பத்திரங்களும் இருக்க, அதை யாருடையது என விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

கயல் ஒருபுறம் விழ, தண்டபாணி அங்கிருந்த கல்லில் இடிபட்டு தலையில் ரத்தம் வழிய விழுந்தான். மரகதத்தால் மூச்சு விட முடியவில்லை. அவர் திணற, விழுந்த இருவரும் எழுந்து பாட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கிருந்த ஆட்டோக்காரர் வெடித்ததைப் பார்த்து ஓடிவர இவர்களைப் பார்த்து பயந்து போனார்.

ஆனால், அவர்களுக்கு உதவி தேவை என்பதை உணர்ந்து தனது ஆட்டோவை எடுத்து வந்து, “அம்மா, சீக்கிரம் ஏறுங்க… அவங்களால முடியல” என்று கூற அவரைக் கையெடுத்துக் கும்பிட்ட கயல்,

“ரொம்ப நன்றி அண்ணா” என்று அழுதபடி கூறியவளைப் பார்த்தவர்,

“நானும் மனுஷன் தான்மா… வாம்மா சீக்கிரம்” என்றுவிட்டு மரகதத்தை ஆட்டோவில் ஏற்ற முயல அவரால் ஒற்றை ஆளாய் தூக்க முடியவில்லை.

அதற்குள் தடுமாறி எழுந்த தண்டபாணியும் ஓடிவந்து உதவ மரகதத்தை ஆட்டோவில் ஏற்றிய பின் இருவரும் ஏற ஆட்டோ அவசரமாகச் சென்றது.

அந்தப் பக்கம் ஓடிவந்த அந்த அடியாள் பார்த்தது, கதவு சுவர் எல்லாம் உடைத்துக் கொண்டு தீ பற்றி எரிவதை தான்… அதனால், அவன் அந்த பிஸினஸ் மேனுக்கு ஃபோன் செய்து அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டான். தீயணைப்பு வீரர்கள் பெரும்பாடுபட்டு ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தன் வலியையும் பொருட்படுத்தாமல் கயலையும் அவளது பாட்டியையும் பாதுகாப்பதே தன் கடமை என்று எண்ணியவன் தன் மொபைலை எடுக்க அது டிஸ்பிளே உடைந்திருந்தது. உடனே ஆட்டோக்காரரின் ஃபோனை வாங்கி இஷானுக்கு அழைக்கப் போக அவனைத் தடுத்து விட்டாள் கயல். மரகதமும் மூச்சு ரொம்பத் திணற அதற்குள் அங்கு ஒரு சித்த வைத்திய சாலை இருக்க அதற்குள் ஆட்டோ போனது.

“ஏன்மா? அவன் உதவி செய்வான்மா” என்றான்.

“இல்லணா… யாருக்கும் தெரிய வேணாம். என்னால யாருக்கும் எந்தக் கஷ்டமும் வேண்டாம். அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் வேணாம். அதுதான் எல்லாருக்கும் நல்லது. என் பேச்சு மீறி நீங்க சொல்லி அவர் வந்தா நான் எங்கேயாவது போய்டுவேன்…” என்று அழுதவள் ஆட்டோ வைத்திய சாலையில் நிற்க உடனடியாகத் தன் பாட்டியைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

முதலில் அவர்களும் கத்திக் குத்துக் காயம் பட்டு இருப்பதைப் பார்த்து போலீஸுக்குச் சொல்ல எண்ணியவர்களை அவர்கள் காலைப் பிடித்துக் கெஞ்சி, அவள் தன் பாட்டி உயிரைக் காப்பாற்றுமாறும், தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதையும் கூற அவர்கள் மனமிறங்கி முதலில் மரகதத்தைக் கவனித்தனர்.

தண்டபாணியின் கையைப் பற்றிய மரகதம், “எ..என் பேத்தி ப…பத்திரம்பா” என்று கூறக் கதறி அழுதாள் கயல் அதைப் பார்த்து.

“நான் பார்த்துக்கறேன் பாட்டி…” என்று கூற அதைக் கேட்டவர் மயங்கிப் போனார். உடனே அவருக்கு சிகிச்சை ஆரம்பித்தது. தண்டபாணிக்கும் தலை மற்றும் மற்ற இடங்களில் பட்ட காயத்திற்கு மூலிகை மருந்து வைத்துச் சிகிச்சை செய்யப்பட்டது.

கயலுக்கு மருந்து போட வர அவள் மறுத்து விட்டாள். தன் பாட்டி சரியாகாமல் தனக்கு வைத்தியம் எதுவும் வேண்டாம் என்று விட்டு அங்கேயே நின்றாள். தண்டபாணி முதலுதவி அறையில் இருந்ததால் அவனிடம் வந்த ஆட்டோக்காரரிடம் ஃபோனைக் கொடுக்க எடுத்தவன் ஏதோ யோசித்தவனாய் இஷானுக்கு அடித்தான் எண்களை.

எதிர்முனையில் எடுத்தவனிடம், எல்லாம் கூற இதயம் நின்று துடித்தது இஷானுக்கு.

கூடவே கயலுக்கு இருக்கும் ஆபத்தைக் கூற சிறிது யோசித்தவன், உடனே ப்ளான் செய்து தண்டபாணியிடம் பேசியவன் கிளம்ப எத்தனிக்கும் முன் அவனைத் தடுத்தான் தண்டபாணி.

“நீ வரவேணாம் இஷா… நானே பார்த்துக்குறேன்” என்று கூற அதிர்ந்தவன்,

“ஏன்டா, எதுக்குடா வேணாம் சொல்ற?”

“இல்லடா, நான் அப்போவே உன்னை ஹெல்ப்க்கு கூப்பிடலாம்னு நினைச்சு ஃபோன் பண்ணப் போனேன். வேணாம்னு கயல் தடுத்துட்டா… கேட்டதுக்கு உனக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் வேணாம்னு சொல்லிட்டாடா” என்று கூற அப்படியே திகைத்து நின்றான் இஷான்.

“ஹலோ.. ஹலோ… இஷா..” என்று அதற்குள் தண்டபாணி அழைக்க,

“அவளாடா சொன்னா? நான் வேணாம்னு சொல்லிட்டாளா?” என்று வருத்தமாய் கேட்க,

“ஆமாடா… அவ சொல்றதும் சரிதானேடா… நீயும் எடுத்த முடிவுப்படி அவளுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லாம இருக்கிறது நல்லதுதான். விடுடா, நான் பார்த்துக்கிறேன்…” என்று கூற,

பெருமூச்சு விட்டவன், “எல்லாம் சரிதான்டா. ஆனா, இப்போ அவ இருக்குற நிலையில அவளுக்கு ஆறுதல் சொல்லவாச்சும் நான் வரலாம்ல” என்று கேட்க,

“இல்லடா வேணாம்… அவள நான் பார்த்துக்கிறேன். நீ வந்தா அவ சொன்ன மாதிரி எங்கனா போய்ட்டானா எங்கனு தேடி கண்டு பிடிக்க முடியும்? எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு” என்று கேட்க, மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவன் செய்ய வேண்டியதைச் சொன்னான்.

அதையெல்லாம் கேட்டுக் கொண்டவன், “சரிடா… அப்படியே செய்யலாம். ஆனா, இங்கேயே வெச்சு ட்ரீட்மெண்ட் பார்க்கலாம்ல, ஏன் அங்க போகணும்?” என்று கேட்க,

“அவங்க உயிரோட இல்லனு நெனைச்சுட்டு இருக்காங்க எல்லாம். ஆனா அங்க செக் செஞ்சு அவங்க உயிரோட இருக்காங்கனு தெரிஞ்சா இங்கலாம் தேடுவாங்கடா… அப்புறம் அவளக் காப்பாத்துறது கஷ்டம் அதான்” என்று கூற..அவனுக்கும் இதுவே சரியெனப்பட,

சரியென முடிவு செய்தவன், இஷான் சொன்னபடி கயலுக்கு இதெல்லாம் இஷானின் வேலை என்று தெரியாத அளவிற்குச் செய்யத் துவங்கினான்.

ஆட்டோக்காரரிடம் பேசி யார் கேட்டாலும் தங்களைப் பற்றிச் சொல்லிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு அவருக்குக் காசு கொடுக்க அவரோ,

“பார்த்தா என் புள்ள மாதிரி இருக்குங்க சார், அந்தப் பொண்ணு. அந்தப் புள்ள அழுத அழுகை உயிரே போய்டுச்சுங்க சார்… அவங்கள பத்தி நான் யாருக்கும் சொல்ல மாட்டேன். காசுலாம் வேணாம் சார். எனக்கும் மனசுனு ஒண்ணு இருக்கு… அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க” என்றுவிட்டுக் கிளம்பினார்.

அன்றைய நாள் அவள் உள்மனம் அடித்துக் கொண்டது, அதன்படி எத்தனை அனர்த்தங்கள் நிகழ்ந்து விட்டது. எவ்வளவு பெரிய இழப்பு, வலி… கதறி அழவும் வழியின்றி, ஆறுதல் சொல்லவும் ஆளின்றித் தோள் சாயத் தோழனின்றி ஓடி ஓடி அலைந்து காய்ந்த சருகாய் மாறியிருந்தாள். ஒரே நாளில் அவளது வாழ்க்கை, பெற்ற தகப்பனாலேயே புயலில் தள்ளிப் புரட்டிப் போடப்பட்டது.

இப்படிப்பட்ட தகப்பனுக்கு மகளாய் பிறந்தோமே, அந்தப் பாவத்தை எப்படித் துடைக்கப் போகிறோம் என்று கலங்கினாள்.

தந்தையாய் தாங்கிய தாத்தாவின் உயிரைக் காக்கவும் முடியாமல், அவரது பேத்தியாய் அவருக்கு இறுதிக் கடமையை ஆற்றவும் முடியாத பாவியாகிப் போன தனது நிலையை எண்ணி அவளது இதயம் ரத்தம் வடித்தது. 

இழப்பைச் சொல்லி அழுது ஆறுதல் தேடவும் வழியில்லை. தாயாய் அரவணைத்த பாட்டியின் உயிரும் மீளுமா தெரியாமல், இனித் தனக்கென யாருமே இல்லையே என நொந்தவள் கண்களில் கண்ணீரும் வற்றிப்போய் இருந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க தண்டபாணிக்கே மனம் வெந்து போனது.

அவளது அருகில் சென்று நின்றவன், அவளது தோளில் கைவைத்து ஆறுதலாய் அழுத்தியவன், “நான் இருக்கேன்டா… ஏன்டா கலங்குற? அண்ணானு என்னைச் சொல்லி இருக்க. அண்ணனா நான் எப்பவும் உன்கூட இருப்பேன்டா” என்று கூற அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவள்,

“வேணாம்ணா… நா..நான் என்னைப் பார்த்துக்கறேன். நீங்க இது வரைக்கும் பண்ண உதவியே பெருசு. அந்த நன்றியை நான் எப்பவும் மறக்க மாட்டேன். போதும், அப்பாங்கிற பேர்ல ஒரு அரக்கனுக்கு, நான் பாசம் வெச்சவங்களை எல்லாம் பலி கொடுத்தது போதும்… உங்களுக்கும் ஏதாவது ஒண்ணுனா என்னால தாங்க முடியாதுண்ணே… நீ..நீங்க போங்க, ப்ளீஸ்” என்று கூற அவளை அதிர்ந்து பார்த்தான் தண்டபாணி.

அவன் சொன்ன தகவல்களைச் சரியாகச் செய்கிறானா எனப் பார்க்க வந்த இஷானும் ஒளிந்து நின்று இவள் பேசுவதைக் கேட்டவன் அதிர்ந்து அங்கேயே நின்று விட்டான்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *