Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 22

என் சுவாசம் உன் வாசமாய் – 22

அத்தியாயம் – 22

அவள் பேசுவதைக் கேட்டு அதிர்ந்த தண்டபாணி, “என்ன பேசுற கயல்? நீ இருக்குற நிலமையில உன்னை விட்டு என்னால எப்படிப் போக முடியும்? முதல்ல நாம இங்க இருந்து வேற ஊருக்குப் போகலாம், கிளம்பு. டாக்டரைப் பார்த்து நான் பேசிட்டேன். எப்படியாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போகனும்” என்று அவன் கூற,

அவனைப் புரியாத் பார்வை பார்த்தாள் கயல்.

“நியூஸ்ல நாம மூணு பேரும் செத்துட்டதா நினைச்சு சொல்லிட்டாங்க. ஆனா இப்போ நெருப்புலாம் அணைச்சு இருப்பாங்க. நாம சாகலைனு தெரிய வந்துடும்… அப்போ அந்த ரெளடி கும்பல் இங்க இருக்குற ஹாஸ்பிடல்ல தேடுவாங்க. அப்புறம் பாட்டிக்கு, நமக்கு எல்லாம் ஆபத்துதான்” என்று கூற அப்போது தான் அதைப் பற்றி யோசித்தாள் கயல்.

“அய்யோ அண்ணா… அப்போ உங்களுக்கும் என்னால ஆபத்தா?” என்று அவள் அதிர்ந்து அழ,

“எனக்கு எந்த ஆபத்தும் இல்ல… என்னை அவங்க பார்க்கலை. பார்த்து இருந்தா, யாரு என்னானு விசாரிச்சு இருப்பாங்க. ஆனா, என்னைப் பார்க்காததால அவங்க என்னைத் தேட மாட்டாங்க. ஆனா, உன்னையும் பாட்டியையும் தேடுவாங்கடா… அப்புறம் நீ போராடினதுக்கும் நான் போராடினதுக்கும் அர்த்தமே இல்லாமல் போயிடும்” என்று கூற, சிறிது யோசித்தவள் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு,

“சரி, இனி நான் பார்த்துக்கறேன், நீங்க கிளம்புங்க… நான் பாட்டியைக் கூட்டிட்டு எங்கனா போய்க்குவேன். நீங்க போங்க, இங்க இருந்து” என்று கூறினாள். தன்னைத் துரத்துவதிலேயே இருக்கும் அவள்மேல் கோபமாக வந்தது தண்டபாணிக்கு. ஆனால், அவள் தன்னைப் பாதுகாக்கவே அவ்வாறு பேசுகிறாள் என்று உணர்ந்தவன் அமைதியாக அவளிடம் பேசினான்.

“கயல்… நீ என்னை அனுப்புறதுக்கு என்ன முயற்சி பண்ணாலும் உன்னை விட்டுப் போகவே மாட்டேன். அதை மட்டும் நல்லா உன் மனசுல பதிய வெச்சுக்க… நான் உயிரோட இருக்குறவரை உங்கூட தான் இருப்பேன். அப்படி நான் போகணும்னு நீ நினைச்சா சொல்லு, நான் இஷானுக்கும் இந்தருக்கும் தகவல் சொல்லி வர வெச்சுட்டுதான் போவேன். என்னால உன்னை இப்படியே விட்டுட்டு எல்லாம் போக முடியாது. இதுக்கு ஓகேனா சொல்லு, அவனுங்கள ஃபோன் பண்ணி வரவைக்கிறேன்… இல்லனா, நான் போகமாட்டேன். உனக்கு எது வசதியோ அப்படிச் செய்?” என்று கூற அவள் என்ன சொல்கிறாள் என இஷானும் கவனிக்க அவசரமாகத் தண்டபாணியைத் தடுத்தாள் கயல்.

“இல்ல இல்ல… அவங்க ரெண்டு பேரையும் விட்டு நான் ரொம்ப தூரம் போயிடனும். இல்லனா அந்த ஆளு அவங்களையும் சேர்த்து அழிச்சுடுவான்… எனக்கு அவங்க சகவாசமே வேணாம். நான் எங்கேயோ கண் காணாத இடத்துக்குப் போயிடுறேன். எனக்கு என் பாட்டி நல்ல படியா பிழைச்சால் போதும்… அவங்களோடயே என் வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டுப் போய்க்குவேன்…” என்று குரல் கமறக் கூறியவளை வருத்தமாய் பார்த்தான் தண்டபாணி. அவளது பேச்சைக் கேட்டு மெளனமாய் உடைந்து போனான் இஷான்.

இருந்தும் அவளது நல்வாழ்வையும் பார்க்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு அங்கு டீவியில் ஒளிபரப்பான நியூஸ் கவனத்தை ஈர்த்தது.

‘சென்னை அருகே படப்பையைச் சேர்ந்த இராஜமாணிக்கம் என்பவர் சொந்தப் பிரச்சினை காரணமாக அவரது சொந்த மகனின் ஆட்களாலேயே வெட்டிக் கொலை. அவரது மனைவியையும் மகளையும் கொல்ல வந்தவர்களைத் தடுத்து ஒருவர் வீட்டினுள் இழுத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்தானது… விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் துரிதமாகச் செயல்பட்டுத் தீயை அணைத்தனர். உள்ளிருந்த மூவரும் காணவில்லை, அவர்களின் உடல் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அருகில் இருந்த பொதுமக்களும் கூறினர். இதைப்பற்றி அவர்களைத் தாக்க வந்த ரெளடிகளிடம் விசாரணை நடத்தி வருகிறது போலீஸ் தனிப்படை. சிலிண்டர் வெடித்ததில் அவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர் அதனால் அவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர்.

இராஜமாணிக்கத்தின் மகன் சென்னையின் பிரபல ரெளடி ஈஸ்வரன் தான் என்பதும் பகை வெறியில் தந்தை தாய் மகளை அழிக்கத் துணிந்துள்ளார் என்பதும் உறுதியானது. மேலும், அவர்களைக் காக்க வந்த அந்த இளைஞன் யாரெனத் தெரியாததால் அவர்கள் மூவருக்கும் என்ன ஆனது எனத் தெரியவில்லை’ 

என்ற நியூஸ் கேட்டதும் பதறியவன் தண்டபாணியை எப்படியாவது துரிதமாகச் செயல்பட்டு கயலையும், அவளது பாட்டியையும் காப்பாற்ற வேண்டும் என எண்ணியவன் எட்டிப் பார்க்க,

கயல் அழுதபடி அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்க எதேச்சையாக நிமிர்ந்த தண்டபாணி இஷானைப் பார்த்து அதிர அவனை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தவன் டீவியைப் பார்க்குமாறு சைகை செய்ய, திரும்பி டீவியைப் பார்த்தவனுக்கு பக்கென்று ஆனது. மேலும் பயந்தவன் இஷானைப் பார்க்க,

“ப்ளீஸ், அவளை ஏதாவது செஞ்சு உடனே அழைச்சிட்டுப் போடா” என்று சைகையில் கெஞ்ச “நான் பார்த்துக்கறேன்” என்பது போல் கண்ணசைத்தவன்,

“இரு கயல், நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்” என்றுவிட்டு நேராக இஷானிடம் வந்தான்.

“நீ ஏன்டா இங்க வந்த?” என்று இரகசியம் போல பேச, 

“நீங்க சீக்கிரம் கிளம்பனும்னு தான் சொல்ல வந்தேன்டா… நியூஸ்ல உங்க மூணு பேரைப் பத்தி தகவல் கிடைக்கலைனு சொல்றாங்க. அதனால நீங்க உயிரோட இருக்குற விஷயம் அந்த ஆளுக்குத் தெரிய வர்றதுக்கு முன்ன உங்களைக் கிளம்பச் சொல்லத்தான் வந்தேன்டா… அதுவும் இல்லாம உன்னைக் கான்டாக்ட் பண்ணவும் முடியல. அதான் இந்த ஃபோன் எடுத்துட்டு வந்தேன். அதையும் கொடுக்கத்தான் வந்தேன். எப்படியாவது சீக்கிரம் அவளைக் கூட்டிட்டுக் கிளம்புடா…” என்றுவிட்டு அவனிடம் மொபைலை நீட்டினான்.

“டேய், என் ஃபோன் உடைஞ்சுடுச்சுனு கயலுக்குத் தெரியும்டா… அதனால, ஃபோனைப் பார்த்தா அவளுக்குச் சந்தேகம் வந்துடும்டா… வேணாம், நான் அவளைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டு எப்படியாவது உன்னைக் கான்டாக்ட் பண்றேன். அங்க போயிட்டு ஃபோனை ரிப்பேர் பண்ணிக்கிறேன்” என்று கூற, அவன் சொல்வது சரியாகினும் மனம் கேளாமல்,

“சரிடா… அப்போ நான் நீங்க கிளம்ப வண்டியை டிரைவரோட ரெடி பண்றேன். நீங்க அவரோட வண்டியில போங்க, நீங்க பத்திரமா போய் சேர்ந்துட்டா அவரு எனக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்துடுவாரு. அப்புறம், நான் டாக்டர்கிட்டப் பேசிட்டேன். நம்மளோட own riskல தான் கூட்டிட்டுப் போக முடியும். பாட்டியோட ஹெல்த் ரொம்ப மோசமா இருக்குனு சொல்லிட்டாங்க… நான் கம்ப்ளீட் மெடிக்கல் அரேன்ஜ்மென்ட்ஸ் செஞ்சுட்டேன். டாக்டர்கிட்ட நீயாப் பேசினதா அவங்க வந்து சொல்லுவாங்க. நான் தான் இதெல்லாம் செஞ்சேன்னு வெளியே வராது சரியா… நீங்க உடனே கிளம்புங்கடா… நான் இந்த நியூஸ் சேனலை கான்டாக்ட் பண்ணி ஏதாவது செய்யப் பார்க்கிறேன்” என்றுவிட்டு அவனிடம் ஒரு பர்தாவை நீட்டினான்.

“இது கயலை யாருக்கும் தெரியாமல் இருக்க… அண்ட் இது அந்த டிரைவரோட பிக்” என்று ஃபோட்டோவைக் காட்டினான். “போ… அவளுக்குச் சந்தேகம் வந்திடப் போகுது” என்று விட்டு மாஸ்க் அணிந்து கொண்டான்.

அவனை அணைத்துக் கொண்ட தண்டபாணி, 

“சரிடா, நான் கயல்கிட்டப் போறேன். ஆனா இந்தர்…” என்று கேட்க,

“நான் முடிவு பண்ணது தான்… நீ தைரியமா கிளம்பு” என்று கூற, அவன் கொடுத்த மொபைலை அவனிடமே நீட்டினான்.

அதை வாங்கிக் கொண்ட இஷான் பெருமூச்சை விட்டு “பத்திரம்டா” என்று விட்டுத் திரும்பி நின்று கொண்டான். அவனிடமிருந்து சென்ற தண்டபாணி எதிரில் மருத்துவர் கயலிடம் பேச வர அவசரமாக அவளிடம் ஓடினான்.

“மிஸ் கயல்விழி… உங்க பாட்டியை டிஸ்சார்ஜ் செய்ய எல்லா ப்ரொசீஜர்ஸும் ஓவர். எங்களோட ஒரு வைத்தியர் உங்ககூட வருவாரு… நீங்க உடனே கிளம்பலாம்” என்று கூற மலங்க மலங்க விழித்தாள் அவள்.

“டா..டாக்டர்… எ..என்ன சொல்றீங்க? என் பாட்டி?” என்று கூற அதற்குள் அவளது அருகில் வந்த தண்டபாணி,

“கயலு, நாம உடனே கிளம்பனும்… வா வா…” என்று கூற டாக்டரையும் தண்டபாணியையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“அண்ணா… எங்கே?” என்று கேட்க,

“சார், நீங்க அவங்ககிட்டச் சொல்லலையா?” என்றார் வைத்தியர்.

“நா..நான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க… ஒரு அஞ்சு நிமிஷம், நாங்க கிளம்பிடுவோம் டாக்டர்… தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெஃல்ப் டாக்டர்” என்று கூற,

“ஓகே… டேக் கேர்” என்று  கயலிடம் கூறிவிட்டு அவர் சென்றார்.

“கயல்மா, நாம உடனே கிளம்பனும்மா…” என்று கூற,

“என்ன பேசுறீங்க நீங்க? என் பாட்டி எப்படி இருக்காங்க, என்ன ஏதுனு கூட எனக்குச் சரியாத் தெரியலை… இதுல எங்க கிளம்பச் சொல்றீங்க? அவங்க பாட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணிட்டோம்னு சொல்றாங்க. அப்போ பாட்டிக்கு என்ன?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அவளுக்கு டீவியைக் கண் காட்டினான். நியூஸைப் பார்த்து அதிர்ந்தவள் தண்டபாணியைப் பார்க்க,

“வா கயல், டைமில்ல… நீங்க உயிரோட இருக்குற விஷயம் கன்ஃபார்ம் ஆகுறதுக்குள்ள நாம வேற இடத்துக்குப் போயாகனும். பாட்டியை எமர்ஜென்சியா கூட்டிட்டுப் போக ரெடி பண்ணிட்டேன்… நீ இந்த பர்தாவைப் போட்டுக்க. அப்போதான் யாராலயும் ஈஸியா அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. ப்ளீஸ், என் பேச்சைக் கேளு வா… டைமில்ல” என்று கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *